Wednesday, August 1, 2007

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

அண்மையில் எனக்கு மின்னஞ்சலில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் பல பாகங்கள் அருமையான படங்களாய் வந்தன. ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது பல நினைவுகள் வந்தன. ஒவ்வொன்றாய் இங்கே பதிக்கலாம் என்று தோன்றியதால் இந்தத் தொடர்.


மேலே உள்ள படம் அண்மையில் எடுக்கப் பட்டது போலும். மின்விளக்குகளால் அன்னை மீனாக்ஷியின் திருக்கோயில் கோபுரங்கள் அலங்கரிக்கப்பட்ட காட்சி இது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கோவில் கோபுரங்களில் இரண்டு மூன்று தெரியும். அந்தக் காலத்தில் வண்ண மின் விளக்குகளால் இப்படி ஜெகத்ஜோதியாய்க் காட்சியளிக்காது கோபுரங்கள். முதலில் சித்திரைத் திருவிழா நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் கோபுரங்களையும் விமானங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் வந்தது. இப்போது எப்போதும் விளக்குக்களுடன் மதுரை நகரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் கோவில் கோபுரங்கள் தெரியும் படி செய்து விட்டார்கள்.

மதுரை மாநகரில் எழுதப்படாத சட்டம் ஒன்று உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அந்த மரபு பின்பற்றப் படுகிறதா என்று தெரியவில்லை. நகரின் எல்லைக்குள் எந்தக் கட்டிடமும் மீனாக்ஷி அம்மன் கோவிலின் கோபுரங்களின் உயரத்துக்கு மேலான உயரத்துடன் இருக்கக் கூடாது என்பது தான் அந்த எழுதப் படாத சட்டம். எனக்குத் தெரிந்து மதுரை நகருக்குள் உள்ள ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் எதுவும் கோபுரங்களை விட உயர்ந்தவை அல்ல என்று தான் நினைக்கிறேன். தெற்கு மாசி வீதியில் நிறைய உயர்ந்த உயர்ந்த கட்டிடங்கள் வந்துவிட்டன. ஆனாலும் இன்று கூட வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தால் கோவில் கோபுரங்கள் தெரிகின்றன.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

12 Comments:

கீதா சாம்பசிவம் said...

காலைவேளையில் கிடைத்த கோபுர தரிசனம் கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாய் உள்ளது. நன்றிகள். ம்ம்ம்ம்ம்., முன்னால் நாங்க இருந்த வீட்டிலே இருந்து பார்த்தாலும் (மேல ஆவணி மூல வீதி) மேலக் கோபுரமும், வடக்குக் கோபுரமும் தொட்டு விடும் தூரம் தான். வீட்டுக்குப் பின்னால் தான் முன்னால் மதுரை சோமு இருந்தார்.

குமரன் (Kumaran) said...

கோவில் வெளிப்பிரகாரத்தைச் சுத்தி வரும் போது உங்க வீட்டுப்பக்கம் வந்திருப்பேன்னு நெனைக்கிறேன் கீதாம்மா. முக்காவாசி தெற்கு கோபுர வாசல் வழியாத் தான் கோவிலுக்குள்ள போயிருக்கேன்.

மதுரையம்பதி said...

அருமையான படங்கள்....இப்போதும் எனது குடும்ப நண்பர் வீட்டிலிருந்து (தெற்க்காவணி மூல வீதி) பார்த்து வணங்குவோம்....நன்றி குமரன்....

ஆமாம், இதென்ன புது ப்லொக்கா?

குமரன் (Kumaran) said...

ஆமாம் மௌலி ஐயா. புதுக் குழுப்பதிவு. நீங்களும் பதிவுகள் எழுத வரலாமே?! :-)

கடப்பாரை said...

குமரன்....அது எழுதப்படாத விதி இல்லை....கார்ப்பரேஷன் ரூல்.

It is one of the main reasons which makes the skyscrapers absent in Madurai.

மதுரையம்பதி said...

குமரன்....எனக்கு என்ன எழுதத்தெரியும் என்று எனக்கே தெரியவில்லை....ஆனால் உங்களைப் போல பலரும் சொல்லிவிட்டார்கள்....

எனக்குத் தெரிந்ததை எழுதலாம்....அதிலும் இந்த பிளாக்கைப் பார்த்தவுடன் அன்னையை பற்றி எழுதத் தோன்றியதென்னமோ உண்மை....

TBCD said...

அப்படியெல்லாம் யோசிக்காதிங்க...உள்ள வாங்க அப்பறம்..மக்களே..மேட்டர கையில குடுத்து எழுத வைப்பாங்க..ஸ்கூல் படிக்கும் போது லீவ் லெட்டர் எழுதி இருப்பீங்க...அது இங்க எழுதினாலே...போதும்...இங்க பெரியல தலைகளே அத தான் செய்யுறாங்க...

.ஆனா இது ஒரு அடிக்சன் மாதிரி..அத மட்டும் பார்த்க்கோங்க...

//*மதுரையம்பதி said...
குமரன்....எனக்கு என்ன எழுதத்தெரியும் என்று எனக்கே தெரியவில்லை....ஆனால் உங்களைப் போல பலரும் சொல்லிவிட்டார்கள்....*//

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன்....அது எழுதப்படாத விதி இல்லை....கார்ப்பரேஷன் ரூல்.
It is one of the main reasons which makes the skyscrapers absent in Madurai. //

ஆகா..இது மதுரை செய்த புண்ணியம்.

சென்னை, திருச்சி, குடந்தை, ஏன் திருவரங்கத்தில் கூட இது விதி இல்லை. வெறும் மரபு தான் என்பதால், பலரும் மீறத் தொடங்கி விட்டார்கள்! :-(

அழகான காட்சி, குமரன்!
ரயிலில் போகும் போது காணும் கோபுரக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சீட்டை விட்டு எழுந்து ரயிலின் கதவு அருகில் வந்து கோபுரம் கண்ணில் இருந்து மறையும் வரை ரசித்து விட்டுச் செல்வேன்! :-)

G.Ragavan said...

அழகான காட்சி. மதுரையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதி கடைபிடிக்கப்படவே வேண்டும். அது தொடரட்டும்.

எங்க ஊர்ல (கொளக்கட்டாங்குறிச்சீல) எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் உண்டு. சின்னக் கோயில்தான். அதுக்கு ஐயரோ பூசாரியோ கெடையாது. நாங்கள்ளாம் உள்ள போவோம். சாமி கும்புடுவோம். வீட்டுப் பெண்களும் உள்ள போவாங்க. வெளக்கேத்துவாங்க. பூப்போடுவாங்க. தாத்தா காலத்துல வீட்டக் கட்டும் போது அந்தக் கோயிலுக்கு மேலப் போகலை. பக்க்கத்துல இருந்த வீடுகள்ளாம் மாடி கெட்டிக்கிருச்சி. ஆனா இன்னைக்கும் எங்க வீடு அப்படியேத்தான் இருக்கு. இத்தனைக்கும் அந்தத் தெருவுல பெரிய வீடு வேற...

குமரன் (Kumaran) said...

உங்க ஊருக்கு எப்ப கடைசியா போனீங்க இராகவன்? தூத்துகுடி தான் சொந்த ஊருன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். எனக்கும் அப்படித் தான், குறிப்பாக காவிரிப் பாலத்தில் பேருந்து போகும் போது தெரியும் திருவரங்கக் கோபுரத்தைப் பார்ப்பது ரொம்பப்பிடிக்கும். மதுரையிலிருந்து சென்னைக்குப் போகும் போது அந்தக் காட்சியைப் பார்த்த பிறகே உறங்குவேன்; சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் போது சில வேளை தவிர்த்து எப்போதுமே அந்த நேரத்தில் எப்படியோ விழித்துக் கொண்டு கோபுர தரிசனம் பெற்றிருக்கிறேன். கோபுர தரிசனம் என்னும் போது இன்னொரு கோபுரமும் நினைவிற்கு வருகிறது. பழனிக்குச் செல்லும் போது சிறிது தூரத்திலேயே பழனி மலையும் கோவிலும் கோபுரமும் தென்படத்தொடங்குமே. அது ரொம்ப அருமையான பக்தி உணர்வைத் தூண்டுகின்ற காட்சி. சஷ்டி கவசம் தானாக மனத்தில் ஓடும் நேரம். :-)

மருத புல்லட் பாண்டி said...

எனக்கு இன்னும் பாலம் வரல