Sunday, August 5, 2007

திருமலை நாயக்கர் மகால்

இன்னைக்கு திருமலை நாயக்கர் மகால் பத்தி பார்க்கலாம். என்னமோ மதுரையில திருமலை நாயக்கர் கட்டின அரண்மனையை மகால்ன்னு தான் சொல்றாங்க. எந்த காலத்துல இந்த வழக்கம் வந்துச்சோ தெரியல. நானும் மகால்ன்னே சொல்றேன்.

இப்ப மதுரையில இருக்கிறது திருமலை நாயக்கர் கட்டுன மகால்ல ஒரு சிறு பகுதி தான். அந்தப் பகுதிக்கு 'சொர்க்க விலாசம்'ன்னு அவர் பேரு வச்சிருந்திருக்கார். அந்தக் காலத்துல மகால்ல மேலேயும் கீழேயும் எல்லா இடத்தையும் பாக்க விட்டுக்கிட்டு இருந்தாங்களாம். யாரோ ரெண்டு மூனு பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு இப்ப எல்லாம் மேலே விடறதில்லை. கீழேயும் சில பகுதிகளுக்கு மட்டும் தான் விடறாங்க. நான் பார்த்ததெல்லாம் இந்தப் பகுதிகளைத் தான். படத்துல இருக்கிறது அனுமதிக்கப் படும் பகுதிகள்ல ஒன்னு. தருமி ஐயா மகால் முழுக்கப் பார்த்திருக்கலாம்.
இந்தப் பகுதிகள்ல தான் தினமும் இரவு ஆங்கிலத்திலயும் தமிழ்லயும் ஒளியும் ஒலியும் காட்சிகள் நடக்குது. ரொம்ப நல்லா இருக்கும். கண்ணகி மதுரையை எரிக்கிற காட்சி வர்றப்ப கொலைநடுங்கும்.

இப்ப இருக்கிறது திருமலை மன்னர் கட்டுன அரண்மனையோட ஒரு பகுதின்னு சொன்னேன்ல. பிரிட்டிஷ் காலத்துல இந்த அரண்மனையோட சிதிலமான பகுதிகள் எங்கே எங்கே இருந்தது அப்படிங்கறதை நல்லா படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்துல இருக்கிற கண்காட்சியிலும் மகாலுக்குள்ள இருக்கிற கண்காட்சியிலும் அந்த ஓவியங்களைப் பாக்கலாம்.

செவிவழியா வந்த செய்தி. திருமலை மன்னர் கட்டுன மகால் வடக்குல தெற்கு மாசி வீதியையும், மேற்குல கூடல் அழகர் கோவிலையும், தெற்குல கிருதமாலா நதியையும் (இப்ப அது ஒரு சின்ன வாய்க்காலா ஆயிடுச்சு), கிழக்குல கீழ வெளி வீதியையும் எல்லைகளா கொண்டிருந்ததுன்னு சொல்லுவாங்க. எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல.

மதுரையில நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வாழறாங்கன்னு நெறைய பேருக்குத் தெரியும். மகால் பக்கத்துல தான் நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வசிக்கிறாங்க. அந்தப் பக்கம் வேற ஆளுங்களும் இருக்காங்க. அப்படி இருக்கிறவங்க முக்காவாசிப் பேருக்கு சௌராஷ்ட்ரா தெரிஞ்சுரும். மதுரைக் காரங்க தான் இத்தனை பேரு இருக்கீங்களே...உங்களுக்கு சௌராஷ்ட்ரா காரங்க ப்ரண்ட்ஸா இருக்காங்களா?

சௌராஷ்ட்ரா ஆளுங்க குஜராத்துல இருந்து புலம் பெயர்ந்து மெதுவா தெற்கு பக்கம் வர்றப்ப ரொம்ப நாள் ஆந்திராவுல இருந்திருக்காங்க. சௌராஷ்ட்ரா அளுங்களுக்கு இன்னொரு பேரு பட்டுநூல்காரர். நிறைய பேரு பட்டுநூல் நெசவாளிங்க. விஜயநகர சாம்ராஜ்யம் நல்லா இருக்கிறவரைக்கும் ஆந்திராவுல இருந்திருக்காங்க. அதனால அவங்க பேசற பாஷையில தெலுங்கு வார்த்தைகள் நிறைய உண்டு. விஜயநகரம் அழிவுக்கு வர்ற நேரத்துல அவங்க நெசவு செய்ற துணிகளோட மேன்மையைப் பார்த்துட்டு திருமலை நாயக்கர் மதுரைக்கு அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாராம். அதனால தான் அவங்க மதுரையில மகால் பக்கத்துல பெரும்பான்மையா இருக்காங்க. இப்ப மக்கள் தொகை பெருக்கத்தால மதுரை நகரை விட்டு சுத்துவட்டாரத்திலயும் நிறைய பேரு இருக்காங்க.

சரி. மகாலைப் பத்தி சொல்றேன்னு ஆரம்பிச்சு சௌராஷ்ட்ரா ஆளுங்களைப் பத்தி சொல்லிக்கிட்டுப் போறேன். அதனால இதோட நிறுத்திகிறேன்.

மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க.

ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க. திருமலை நாயக்கர் மகால்ல ஒரு சிறப்பு என்னான்னா மகால் கட்டினதுல இரும்பே எங்கேயும் பயன்படுத்தலைன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் மகாலோட மத்த பகுதிகள் எல்லாம் காணாமப் போனதுக்கு. ஒதுக்குப்புறமா யானைகளைக் கட்டி வச்ச பத்துத் தூண்கள் மட்டும் இன்னும் நல்லா நிலையா நிக்குது.

***

இந்த இடுகை ஒரு மீள்பதிவு. ஏற்கனவே எனது 'கூடல்' பதிவில் இட்டிருக்கிறேன். அந்த இடுகையை இங்கே காணலாம்.

10 Comments:

தருமி said...

குமரன்,
அந்த பத்துத் தூண்கள் நெசம்மா ஆனைகளைக் கட்டி வைக்கவா?
* பத்து யானைதான் இருந்திருக்குமா?
* யானை கட்ட இப்படி ஒசரமா எதுக்கு அம்மாம் பெரிய தூண்கள்?

மதுரையம்பதி said...

பெரியவர் தருமி சொல்வது போல, யானை கட்ட அம்பூட்டு உயரத்தூணா?...

ஆமா பத்துத்தூண் தெருவில் இருக்கும் மொத்த வியாபார ஜவுளிக்கடைகளுக்கு சென்றிருக்கிறீர்களா?...

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. இதே கேள்வியை முந்தி கூட கேட்டிருந்தீங்க. எனக்குத் தெரியலைங்கையா. யானையைக் கட்ட ஒரு சின்ன சங்கிலியும் தரையிலயோ சுவத்துலயோ பதிச்ச இரும்புக்கொக்கியும் போதும்ன்னு படிச்சிருக்கேன் ஐயா. அந்தச் சின்ன சங்கிலியைப் பாத்து அது தான் தன்னைக்கட்டிப் போட்டிருக்குன்னு ஏமாந்து தப்பிச்சுப் போக யானை முயற்சி பண்ணாதுன்னு படிச்சிருக்கேன்.

இவ்வளவு பெரிய தூண்கள் அரண்மனைப்பகுதிகளில் ஏதோ ஒன்றின் பகுதியாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. மற்ற பகுதிகள் அழிந்த பின்னும் இந்த பத்துத்தூண்கள் மட்டும் அழியாமல் நிற்பதும் வியப்பு. ஒரு வேளை கவுண்டமணி செஞ்சது போல் தூணுக்கு ஒரு சாமின்னு கதை கட்டிவிட்டாங்களோ? (ஏதோ ஒரு தூணுல சாமி இருந்ததைப் பார்த்திருக்கேன்). :-)

குமரன் (Kumaran) said...

எல்லாக் கடைகளுக்கும் போனதில்லை மௌலி ஐயா. ஒரு தடவை எங்க காலம் சென்ற தாத்தா உள்ளாடைகள் வாங்க அங்கே ஒரு கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். அப்ப போனது தான்.

TBCD said...

நெல் பேட்டை, தெற்கு வாசல், கோவில் சுற்றி உள்ள தெருக்கள் -பெரும்பாலும் அவர்கள் தான் இருக்கின்றார்கள்... பொதுவாக அமைதியானவர்கள்...மார்கழி ஆனா , கோவிந்த லட்ச கோவிந்தா அப்படின்னு சொம்ப தூக்கிட்டு வந்துடுவாங்க..அப்பறம் நம்மள சாப்பிடக் கூப்பிடுவாங்க..இனிமையான மனிதர்கள்...
//*மகால் பக்கத்துல தான் நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வசிக்கிறாங்க*//

குமரன் (Kumaran) said...

TBCD,

அது மார்கழி இல்லீங்க. புரட்டாசி. ஒவ்வொரு சனிக்கிழமையும் நிறைய பேரு நாமத்தைப் போட்டுக்கிட்டு சொம்பைத் தூக்கிக்கிட்டு கோவிந்த லட்சம் கோவிந்தான்னு ஒரு நாலு வீட்டு வாசலுக்காவது போவாங்க; அப்படி வாங்கிட்டு வந்த அரிசியையும் சேர்த்து ஏதாவது ஒரு புரட்டாசி சனிக்கிழமை 'கோவிந்தா சாப்பாடு' போடுவாங்க. தெருவுல இருக்குற எல்லா குழந்தைகளையும் அந்த சாப்பாட்டுக்கு கூப்புடுவாங்க. என்னையும் சின்ன வயசுல கூப்பிட்டுருக்காங்க. :-)

G.Ragavan said...

மதுரைல ஒரு வருசம் இருந்திருக்கேன். டி.ஆர்.ஓ காலனீல. ஆனா சின்ன வயசு. அப்பல்லாம் இதெல்லாம் தெரியாது.

திருமலை நாயக்கர் மகாலில் இப்பொழுது இருப்பது ஐந்தில் ஒரு பங்கு கூட இருக்காதாம். வெள்ளைக்காரன் எடுத்த சர்வே அப்படித்தான் சொல்கிறது. ஒரு வாசல் கோயில் வாசல் அருகில் இருக்குமாம். அப்படியே அரண்மனையில் இருந்து வெளியே வந்து சாலையைத் தாண்டி கோயிலுக்குள் போய் விடலாம்.

நாயக்கர் வரலாறும் கொஞ்சம் விறுவிறுப்பாகத்தான் இருக்கும். இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் அது முதலியார்-நாயக்கர் ஆட்சித் தொடக்கம். கிருஷ்ணதேவராயரைப் பற்றிப் படிக்கும் பொழுது தெரிந்த விஷயம் இது. விசுவநாத நாயக்கர் + அரியநாத முதலியார் கூட்டணி (அரசர்+அமைச்சர்) சிறப்பாக இருந்ததாகக் கேள்வி. திருமலையரசருக்குப் பிறகு புகழ்பெற்ற அரசர்கள் வரவில்லை. இல்லையில்லை..மங்கம்மாளுக்குப் பிறகு. மங்கம்மாளைச் சிறையில் அடைத்துப் பேரன் அரசனாகிறான் என்று நினைக்கிறேன். ஆனால் அவனோடு தொடங்கியதாம் அழிவுப்பாதை..இன்றைக்கும் மதுரையில் பாட்டிக்குச் சோறு போடாத பேரன்கள் இருந்தால் மங்கம்மா ஆவி பழி வாங்கீரும்னு மெரட்டுவாங்களாம்.

குமரன் (Kumaran) said...

இராணி மங்கம்மாள் சிறுவனான பேரனுக்குப் பிரதியாகத் தானே ஆட்சி செய்ததாகப் படித்திருக்கிறேன். பேரன் பாட்டியை சிறையில் அடைத்துப் பின்னர் அரசனாகிறான் என்பது எனக்குப் புதிய செய்தி. மதுரை நாயக்க வம்சத்தின் கடைசி இராணி மீனாட்சியும் பிரபலம் தானே இராகவன். சந்தாசாகிப்பின் ஏமாற்றைத் தாங்கிக் கொள்ள முடியாமல் திருச்சிக் கோட்டையில் தற்கொலை செய்து கொண்டாரே. பாவம்.

Kumar J said...

oru thoon yevvalavu adi sutralavu ?

Kumar J said...

oru thoon yevvalavu adi sutralavu ?