Thursday, August 9, 2007

மதுரை-சில குறிப்புகள்

மதுரையிலிருந்து மேற்கே தேனி போகும் வழியில் முதலில் வரும் கிராமம் 'பிராட்டிபற்று'.இன்று அது விராட்டிபத்து ஆகிவிட்டது.அடுத்து வரும் சிற்றூர் 'அச்சன்பற்று'.இன்று அது அச்சம்பத்து ஆகியுள்ளது.பற்று என்பது வயலைக் குறிக்கும் பழைய சொல்.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை மையமாகக் கொண்டது மாமதுரை.இக்கிராமங்களுக்கு இறையிலி நிலங்களாக விடப்பட்ட கிராமங்களே பிராட்டிபற்றும்,அச்சன்பற்றும்.பெருமாட்டி,பிராட்டி எனத்திரியும்.அச்சன் - அத்தன் -தலைவன்.அது சிவபெருமானைக் குறிக்கும்.



மதுரைக்கு வடக்கே தெற்குத்தெரு,கீழத்தெரு,வடக்குத்தெரு,மேற்குத்தெரு என்ற கிராமங்கள் உள்ளன.அவை மீனாட்சி கோயிலில்,தேர்த்திருவிழாவின் போது திசைதோறும் தேரிழுப்பவர்களுக்கு மானியமளிக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள்.இவற்றோடு வைத்துச் சிந்தித்தால் பிராட்டிபற்று,அச்சன்பற்று என்பனவும் அக்கோயிலோடு தொடர்புடையவை என்பது உறுதிப்படும்.



மதுரையைச் சுற்றி முன்பு பெரியபெரிய கோட்டை வாயில்கள் இருந்திருக்க வேண்டும்."கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்,மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு" என வருந்திக்கொண்டே கண்ணகி சேரநாடு நோக்கி உண்ணாமல்,உறங்காமல் நடக்கத் தொடங்குகிறாள்.இன்றும் கீழவாசல்,மேலவாசல் என்ற பெயர்கள் நிலை பெற்றுள்ளன.அவ்வாறே தெற்குவாசலும்,வடக்குவாசலும் உள்ளன.வாயில் தான் வாசல் ஆகிவிட்டது.நெடுநல்வாடை "வென்றெழு கொடியொடு வேழம் சென்று புக ,குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்" என்று குன்றம் போன்று நெடிதோங்கிய வாயில் பற்றிக்கூறுகிறது.இதனால் மதுரைக்கு 'ஆலவாயில்' (மிகப்பெரிய வாயில்) எனப் பெயர் ஏற்பட்டது.பின்னர் அதற்குப் பல்வேறு பொருள் கொண்டு , புராணம் பாடி,அதன் புகழை வளர்த்தமையே அதன் பழைய சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது,இந்த இடங்களை அறிந்து,நான்கு வாயில்களை எழுப்பியிருந்தால் இளங்கோவடிகள் கூறிய வரலாற்றுச் சிறப்பைப் பலரும் நினைவுகூர்ந்து மகிழ்ந்திருப்பர்.இன்று நகர்ப்புறத்தே வாயில்கள் எழுப்பப்பட்டு வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

தமிழண்ணல் எழுதிய "வளர் தமிழ்-உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

4 Comments:

குமரன் (Kumaran) said...

ஜாலி ஜம்பர். தமிழண்ணல் எழுதிய நூலிலிருந்து என்று சொல்லி என் வியப்புடன் சேர்ந்த மகிழ்ச்சியைக் குறைத்துவிட்டீர்களே?! :-( ஆகா. அருமையாக எழுதியிருக்கிறார் - இது போல் இலக்கியச் சுவையுடன் நிறைய ஜாலி ஜம்பரிடமிருந்து எதிர்பார்க்கலாம் போலிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே படித்து வந்தேன். கடைசியில் இது ஒரு நூலிலிருந்து என்று போட்டு காற்று போன பலூன் ஆக்கிவிட்டீர்கள். சரி - அந்த நூலிலிருந்து இன்னும் மதுரை பற்றி இன்னும் என்ன என்ன இருக்கிறதோ அதனை எல்லாம் எடுத்துப் போடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். :-)

விராட்டிபத்து, அச்சன்பத்து பெயர்களைக் கேள்விபட்டிருக்கிறேன். அவை பிராட்டிபற்று, அச்சன்பற்று தான் என்பதை நன்கு நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். நான்கு வீதிகளிலும் தேரிழுக்கும் பக்தர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட ஊர்கள் அந்தத் தெருக்களின் பெயர்களுடனேயே இருந்தன என்பதும் புதிய செய்தி. இந்த ஊர்ப்பெயர்களை நான் கேள்விபட்டதில்லை. இந்த மானியங்கள் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால் திருமலை நாயக்கர் காலத்தில் தான் மாசி மாதத்தில் நடந்து வந்த பெருந்திருவிழாவை தேரிழுக்க ஆள் வேண்டும் என்று சித்திரையில் நடந்த அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு இணைந்து வரும்படி மாற்றி அமைத்தார். அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு மாட வீதியிலும் (ஆடி வீதி, ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, மாசி வீதி போன்றவை) அந்தந்த மாதத்தில் அம்மனும் அத்தனும் உலா வருகிறார்கள். மாசி வீதிகளில் மட்டும் சித்திரையில் வருகிறார்கள் - இது மாசி மாதத்தில் நடந்த திருவிழாவின் மிச்சம். :-)

சாலிசம்பர் said...

குமரன்,என்ன செய்ய?சொந்தச்சரக்கு இல்லாவிட்டால் பெரியவர்களிடம் கடன் வாங்கிக்கொள்ள வேண்டியது தான்.அது உங்களுக்குப் பிடித்தும் போய் விட்டது,இனிமேல் தைரியமாக சுடலாம்.:-))

//திருமலை நாயக்கர் காலத்தில் தான் மாசி மாதத்தில் நடந்து வந்த பெருந்திருவிழாவை தேரிழுக்க ஆள் வேண்டும் என்று சித்திரையில் நடந்த அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவோடு இணைந்து வரும்படி மாற்றி அமைத்தார். அம்மன் கோவிலைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு மாட வீதியிலும் (ஆடி வீதி, ஆவணி மூல வீதி, சித்திரை வீதி, மாசி வீதி போன்றவை) அந்தந்த மாதத்தில் அம்மனும் அத்தனும் உலா வருகிறார்கள். மாசி வீதிகளில் மட்டும் சித்திரையில் வருகிறார்கள் - இது மாசி மாதத்தில் நடந்த திருவிழாவின் மிச்சம். :-) //

எத்தனை நூற்றாண்டு பாரம்பரியமிக்கவை இந்த விழாக்கள் என்பதை நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

//விராட்டிபத்து, அச்சன்பத்து //

மதுரை பல்கலைக்கழகம் செல்லும் வழியில் இந்த ஊர்கள் இருக்கின்றன.

அதிலும் விராட்டிப்பத்தில் மஞ்சள் காமாலைக்கு ஒரு பத்து போடுவார்கள். சட்டென் காமாலை இறங்கிவிடுமாம்.

cheena (சீனா) said...

விராட்டிப்பத்து அச்சன்பத்து - பசுமையான நினைவுகள் இனிமையாக அசை போட வைக்கின்றன. நாகமலை புதுக்கோட்டையில் உள்ள N.M.S.S.V.N
கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்த காலத்தில் (1966 - 1967) சைக்கிளில் இந்த ஊர்களின் வழியாகத்தான் செல்வோம். அந்தக் காலத்தில் அடித்த கொட்டங்கள் - அடடா - திரும்ப அந்தக் காலம் வருமா ??