Friday, September 7, 2007

தல புராணம் ... 3

Image and video hosting by TinyPic

genetical-ஆக (?) அந்த புகை மேல இருந்த ஆர்வம் காரணமாக சின்ன வயசில இருந்தே ஒரு ஈர்ப்பு. கொஞ்சம் வளர்ந்ததும் ஊருக்குப் போகும்போதெல்லாம் திருட்டு தம்… அப்படியே போனது, காலேஜ் வந்தப்போ தொடர்ந்தது. ஊர்ல புளியந்தோப்புதான்; ஆனா மதுரையில ‘திருமலை நாயக்கர் மகால்’தான். நம்ம காம்பஸ்ல இருந்து ரொம்பப் பக்கத்திலதான் - ஒரு 100 மீட்டர்தான். இந்த மகாலுக்கும், மரியன்னை கோயிலுக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்ததாகவும், கடைசி நாயக்க மன்னர் யாருக்கும் தெரியாமல் கிறித்துவரானாரென்றும் ‘கட்டுக் கதை’ ஒன்று உண்டு. ஆனா நாங்க (நானும், ஆல்பர்ட்டும்) அந்த சுரங்கப் பாதையில் போறதில்லை; ராஜ பாட்டையில்தான்! அந்த நாட்களில் மகால் ஒரு - least cared toursit spot -ஆக இருந்தது. வெளவ்வாலும், புறாக்களும்தான் அப்போ அங்க ‘ராஜ பரிபாலனம்’ நடத்திக்கிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகு, மதுரை கோர்ட் வந்தது. எங்களோட ராஜாங்கத்தை கோ.மு., கோ.பி. அப்டின்னு பிரிக்கலாம்.; கோர்ட் வர்ரதுக்கு முந்தி, கோர்ட் வந்த பிறகுன்னு.
கோ.மு.வில பகல்ல மகாலைச் சுத்தி உள்ள வெற்றிடங்களில் பசங்க நிறைய ஃபுட்பால் விளையாடிக்கிட்டு இருப்பாங்க. ‘ரிப்பீட்டு’ சொல்றேன்; நிஜமா சொல்றேன்; வழக்கமா சத்தியம் பண்றதில்லை; இல்லன்னா சத்தியமாகூட சொல்லுவேன் - ஒரு நாள்கூட ஒரு ஆள்கூட யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்த்ததில்லை; கிட்டி விளையாடிக்கிட்டு இருப்பார்கள். குண்டு, கோலி, பம்பரம், பட்டம், சடுகுடு என்னும் கபடி மற்ற எல்லாமே உண்டு. பாவம், இந்தக் காலத்துப் பசங்க - அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். நீங்கள்ளாம் யாருப்பா; ஸ்டெஃப்பிய பாத்து ஜொள்ளு விட்டாலும், விளையாடணும்னா கிரிக்கெட்தானே - (இளவஞ்சி, நான் ஒண்ணும் உங்கள சொல்லலை!) இன்னும் பொம்பளப் பசங்க கிரிக்கெட்டும் பிரபலமாச்சுன்னா கேக்கவே வேணாம். ஆனா, அடுத்த generation-க்கு அப்படித்தான் - உங்க பசங்க ‘கிர்க்கெட்டிணிகள்’ (அதாங்க, கிர்க்கெட் வீரிகள்!) படம் போட்ட ஸ்கூல் நோட்புக், சட்டை போட்டுக்குவாங்க; உங்க கூடவே உங்க கையைப் பிடிச்சிக்கிட்டு வந்துகிட்டு இருக்க பிள்ளங்க திடீரென உங்க கையை விட்டுட்டு பெளலிங் போடறது மாதிரியோ, பேட் பண்றது மாதிரியோ ஒரு நிமிஷம் பண்ணிட்டு, அடுத்த நிமிஷம் சாதாரணமா உங்க கையப் பிடிக்கும்போது ‘ஆஹா, நம்ம பிள்ளைக்கு என்னமோ ஆச்சு; நாளைக்கே மந்திரிக்கணும்’ அப்டின்னு நினப்பீங்களே - சுருக்கமா சொல்லணும்னா நீங்க இப்ப ‘அலையறது’ மாதிரி அலையும்போதுதான் உங்களுக்கெல்லாம் உறைக்கும். அதுவரைக்கும் உங்க காதுல ஒண்ணுமே விழாது - howzzzaaaat !!!-அப்டிங்கிறது தவிர. சரி..சரி நம்ம விதயதிற்கு வருவோம்.


இந்த கோ.மு. பீரீயட்ல எங்க safe place எதுன்னா, மகாலுக்கு மேல போய் - அப்பல்லாம் டிக்கெட் கிடையாது எங்கள மாதிரி ஆளுகளுக்கு; வெளியூர் பார்ட்டிகிட்ட கொஞ்சம் எதுனாச்சும் மாடிப்படி கிட்ட நிக்கிறவர் கறந்துடுவார் - நாங்கல்லாம் யாரு, ரெகுலர் பார்ட்டிகள்ல. அங்க திருடன் கன்னம் வச்சு உடும்பை வச்சு ராசா சயன அறையில இறங்கி, ராணி கழுத்து மாலையை லவட்னதுன்னு - எல்லாம் ராசா வச்ச போட்டினாலதான் - ஒரு இடம் சொல்லுவாங்களே அதுதான் நம்ம ஸ்பாட். உக்காந்து பத்த வச்சிட்ட பிறகு, நின்னுக்கிட்டே இழுத்து புகை விட, யாரேனும் தெரிஞ்ச மூஞ்சி வர்ரது மாதிரி இருந்தா காலுக்கடியில் சிகரெட்டப் போட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் வந்துருவம்ல. அதுக்கு வசதியான இடம் அதுதான். இப்படி எத்தனை நாள் போய்ட்டு வந்திருப்போம்; ஆன ஒரு நாள் கூட இந்தச் சுவத்தில நிறைய பேருக அவங்க பேரையெல்லாம் கிறுக்கியிருக்காங்களே நாமும்தான் கிறுக்குவுமேன்னு நினச்சதுகூட கிடையாதுங்க. (ராமனாதன் கவனிக்கிறீங்களா?)
கோ.பி.-ல நாங்களும் இப்ப கொஞ்சம் தெளிஞ்சுட்டோம். காம்பஸ் பயம் இன்னும் இருந்திச்சு - என்னதான் இருந்தாலும் அது நம்ம ஏரியா இல்லையா? ஆனா கோர்ட் இப்ப ரொம்ப பிசியான இடமா ஆயிடுச்சி. நிறைய கருப்புக் கோட்டுகள்; ஆட்கள். மகாலுக்கு உள்ளயே ஒரு சிகரெட், டீக்கடை வந்திருச்சி. உள்ளேன்னா, மகால் மெயின் வாசலுக்கு வடது பக்கம் ஒரு சின்ன வாசல்; அதை ஒட்டி அந்தக் கடை. எங்கள மாதிரி திருட்டு தம் கேசுகள்; சீனியர்கள் கண்ணில் படாமல் இருப்பதற்காக ஓரங்கட்டும் குட்டி வக்கீல்கள் - இவர்களுக்கென்று ஒதுக்குப்புறமாக ஒரு ஸ்மோக்கிங் கார்னர் உண்டு. அங்க உக்காந்து சிகரெட் பிடிக்க தைரியம் வந்தபோது கல்லூரி இளங்கலை மூன்றாமாண்டுக்கு வந்தாச்சு.
இப்பவும் மகாலைத் தாண்டிப் போகும்போது திரும்பிப் பார்க்காமல், போக முடிவதில்லை. சில நாட்கள் சாயங்காலம் அங்கே போய் ‘இழுத்திட்டு’ அதற்குப் பிறகு வெளியில் உள்ள பார்க்கில் படுத்துக்கொண்டு, ஒரு செளராஷ்ட்ர அம்மா கொண்டுவரும் ‘உன்னா உடித்’ (அவித்த பாசிப்பயறு + எதோ ஒரு பொடி தூவித் தருவார்கள்) பத்து பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டால்…ம்..ஹும்…அது அந்தக் காலம்.
அப்படி நம்ம காம்ப்ஸ் லைஃப்ல இந்தப் பழக்கம் வந்திரிச்சினா, இன்னொரு பழக்கமும் தொத்திக்கிரீச்சி. அது நல்ல பழக்கமா…இல்ல, கெட்ட பழக்கமா? - அத நீங்கதான் சொல்லணும்.

14 Comments:

ஜாலிஜம்பர் said...

மகாலின் முகப்பு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளது.

//அட, அது எல்லாமே நீங்கதானே - அந்த விளையாட்டுகளை விளையாடி என்ன, பார்த்துகூட இருக்க மாட்டீர்கள். //

நான் ஒரு அதிர்ஷ்டசாலி தான்.எங்க அப்பாவுடன் சென்று சில கால்பந்து போட்டிகளை ரேஸ்கோர்சில் பார்த்திருக்கிறேன்.அந்த ஆரவாரமும்,துடிதுடிப்பும் இன்னும் நினைவில் இருக்கிறது.

மதுரையம்பதி said...

அப்போ மஹால்ல அந்த சுவத்தில உங்க பேரு இருக்கே, வேற யாராவது எழுதிட்டாங்களாய்யா?

கடப்பாரை said...

உங்களுக்கு அபார ஞாபகசக்தி தலைவரே.......

95 வயசுலயும் இப்படி ஒரு ஞாபகம்......

சோப்பர்!!!!

cheena (சீனா) said...

தருமியும் நானும் ஒரே காலத்தில் மதுரையில் இருந்திருக்கிறோம் என நினைக்கிறேன். கிரிக்கட் தெரியாத காலத்தில் ( 1963-1967) கிட்டிப்புள், கோலி, குண்டு, பம்பரம், பட்டம், கவடிக்கவடிக்கவ்டி, என விளையாண்டது நினைவில் வருகிறது.

தருமி said...

ஜாஜா,
என்ன இது நானும் உங்க அப்பாவும் ஒரே டேஸ்ட் உள்ள ஆளுங்களா .. கால்பந்து பந்தயங்களுக்குப் போனதும், அங்கு 'ஜோதியோடு ஐக்கியமாவதும்' .. அடேயப்பா .. என்ன மகிழ்ச்சியான அனுபவங்கள்.

தருமி said...

மதுரையம்பதி,

நீங்களே போய் என் பெயரை பொறித்துவிட்டு இப்ப போய் இப்படி கேட்டா எப்படி?

:)

தருமி said...

கடப்பாரை,
என் பாதி வயசுக்காரர் நீங்கள். அதனால உங்க நினைவாற்றலில் பாதியாவது இருக்காதா?

தருமி said...

நன்றி சீனா .

G.Ragavan said...

உன்னா உடித்த உண்ணும் உடித்துன்னு நடத்தியிருக்கீங்க :)

அது பாசிப்பயறு இல்லையாம். உழுந்தாம். சரியான்னு கேட்டுச் சொல்லுங்க.

அதெல்லாம் சரி... திருமலை நாக்கர் மகாலை யாரு இடிச்சாங்க. வெள்ளைக்காரங்களா?

மகால்ல ஒளியொலி காட்சி நடத்துறாங்களாமே. அதுல என்ன காட்டுறாங்க?

வவ்வால் said...

தருமி,

//வெளவ்வாலும், புறாக்களும்தான் அப்போ அங்க ‘ராஜ பரிபாலனம்’ நடத்திக்கிட்டு இருந்தாங்க.//

வவ்வால்னா என்னிக்குமே ராஜ பரிபாலனம் தான் :-))

எனக்கு சொந்தமான இடத்தை இப்படி நீங்க எல்லாம் போய் நாசம் பண்ணி இருக்கிங்களே, இப்போ கோர்ட் வேறவா.... கேஸ் போட்டா திரும்ப மகாலை எனக்கே தருவாங்களா, நல்ல வழக்குறைஞரா சொல்லுங்க.... கேஸ் போட்டு மூன்றுல ஒண்ணு பார்த்துடலாம்!

தல புராணம்னு சொன்னிங்க ஆனா "தல" பத்தி எதுவுமே சொல்லலையே, எப்போல இருந்து அஜித் ரசிகர் ஆனிங்க :-))

//அதெல்லாம் சரி... திருமலை நாக்கர் மகாலை யாரு இடிச்சாங்க. வெள்ளைக்காரங்களா?//

இராகவன்,

அதை இடிச்சது வெள்ளைக்காரங்க இல்லை... திருமலை நாயக்கரோட பேரன் சொக்க நாத நாயக்கர்னு நினைக்கிறேன், அங்கே இடிச்சு , அந்த தேக்கு மரத்த வைத்தே திருச்சில புதுசா ஒன்றை கட்டினாராம். மிச்சம் மகாலை தருமி மாதிரி யாரோ தம் அடிக்கப்போனவங்க அணைக்காம போட்ட சிகரெட்ல பத்தி எரிஞ்சு போச்சாம்.இப்போ இருப்பது 3 இல் ஒரு பாகம் தான்னு கேள்விப்பட்டேன். முழு விவரமும் மதுரக்காரர் கிட்டேவே கேளுங்க!

Sridhar Venkat said...

அந்த ஒளி ஒலி காட்சி மிகவும் நன்றாக இருக்கும். இரவுதான் காட்சி நடக்கும். அது வரை சாதாரண கட்டிடமாக இருந்தது அந்த ஒளியும், ஒலியும் கலந்து நம்மை நாயக்கரின் காலத்திற்கே கொண்டு செல்லும். 'பாரா உஷார்! பாரா உஷார்!' என்று மாடம் முழுவதும் இரவு பாராவின் குரல் ஒலிக்க அதற்கேற்றவாறு ஒளி மாறி மாறி செல்ல... நல்ல கற்பனை.

இந்த மாதிரி ஒரு காட்சி வேறு எங்கும் நான் பார்த்ததுமில்லை. இதையும் கூட சிறிய வயதில் ஒரு முறை பார்த்ததுதான்.

பம்பாய் படத்தில் மகாலை பார்த்தபொழுது, இப்படி குப்பையும் கூளமுமா இருந்தத இவ்வளவு அழகா காமிச்சிருக்காங்களேன்னு ஆச்சர்யமா இருந்தது. ஆனா... என்ன அந்த படபிடிப்பு நடக்கும் பொழுது இன்னும் நிறைய குப்பைகளை போட்டிருப்ப்பாங்க.

மதுரை கல்லூரியில் படிக்கும் பொழுது தினமும் 'கூடைபந்து' விளையாடிவிட்டு (அட ஆமாங்க. கிரிக்கெட் எல்லாம் விகாஸா பசங்கதான் ஆடுவாங்க. பேட், கிளவுஸ் எல்லாம் வாங்கி நாம எங்க விளையாடறது)) சுப்ரமணியபுரம் போகும் வழியில் அந்த பாலத்தின் கீழே ஒரு வயதானவர் வைத்திருக்கும் ஒரு சின்ன பெட்டிகடையில் 'ஒரு பில்டர் கோல்ட் பிளேக்'ன்னு வாங்கி, சுத்தி முத்தி பாத்திட்டே பத்த வைக்கிறது :-)) நிறைய நாட்களில் 'தாத்தா... நாளைக்கு தர்றேன்'னு சொன்னா... 'அதுக்கு என்ன தம்பி... மொள்ள கொடுங்கன்னு' பாசமா சொல்லுவார். அந்த வயதிலும் சுறுசுறுப்பாக துறுதுறுன்னு இருப்பார்.

கிரிக்கெட் விடாம பாத்தாலும் என்னமோ ஆடுவதற்கு அவ்வளவு சுவாரசியமாக இருந்ததில்லை. மதிய 12 மணி வெயிலிலும் கூட கூடைப்பந்து விளையாடும் ஆர்வம் கிரிக்கெட்டில் ஏனோ இல்லை. அது ஒரு மேல்தட்டு விளையாட்டாகவே எனக்கு தோன்றியது. இப்ப நிறைய மாறிடுச்சி போல.

தருமி said...

ஜிரா,
நாக்குக்கு சுவை மறந்து போச்சு; மனசுக்கு மட்டும்தான் நினைவிருக்கு. அதனால 'உன்னா உடித்'தின் வரலாறும் இன்ன பிறவும் தெரியவில்லை!

அதில பாருங்க .. இப்படி உறவு வச்சிருந்த மஹாலில் ஒலி ஒளி காட்சி நடந்திக்கிட்டு இருந்தப்போ பார்க்கணும்னு நினச்சிக்கிட்டே இருந்து பார்க்கவேயில்லை. இப்போ மராமத்து வேலைக்காக நிறுத்தி வைத்திருப்பதாகக் கேள்வி.

தருமி said...

வவ்வால்,
//வவ்வால்னா என்னிக்குமே ராஜ பரிபாலனம் தான் :-))//

நெஜமாவே உங்க பரிபாலனமதான்னு தெரியுது. அதனாலதான் இம்புட்டு விவரங்களை புட்டு புட்டு வச்சிருக்கீங்க... அதுசரி, //திருச்சில புதுசா ஒன்றை கட்டினாராம்// - அப்டின்னா திருச்சில 'சின்ன மஹால்" அப்டின்னு ஒண்ணு இருக்கா?

தருமி said...

வெங்கட்,
//'கூடைபந்து' விளையாடிவிட்டு ..//

அப்போ, நல்ல உயர்ந்த மனிதரா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்; சரியா?

//இப்ப நிறைய மாறிடுச்சி போல//

என்ன, ரொம்ப வயசானவர் மாதிரி சொல்றீங்க!

//இந்த மாதிரி ஒரு காட்சி வேறு எங்கும் நான் பார்த்ததுமில்லை.//

நான் தில்லி செங்கோட்டையில் தில்லியின் வரலாறு பார்த்தேன். நீங்க சொன்ன பராக்.. பராக் மாதிரி ஒற்றன் ஒருவன் வரும் குதிரையின் குளம்படி ஒலி நம் பின்னாலிருந்து அப்படியே முன்னால் வந்ததைக் கேட்டு வாயைப் பிளந்தேன். அது 73-ல்!