Wednesday, September 26, 2007

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதி

சரி இன்னைக்காவது நாம மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளப் போகலாம். கீழே இருக்கறப் படம் ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படம். ஆனா அருமையான படம். இது வடக்காடி வீதியினைக் காட்டும் புகைப்படம்.

புகைப்படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன் அன்னை அங்கயற்கண்ணியின் வரலாறு சுருக்கமாக.

மதுரையை ஆண்ட மலயத்துவஜ பாண்டியன் தனக்கு வாரிசு வேண்டுமென்பதற்காக வளர்த்த வேள்வித்தீயில் தோன்றியவள் அன்னை அங்கயற்கண்ணி. உமையன்னையின் அம்சம். அழகிய மீனைப் போன்றக் கண்களைக் கொண்டிருந்ததாலும் மீன் எப்படி தன் கண்பார்வையாலேயே தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ அது போல் தன் அடியவர்களைப் பாதுகாப்பவள் என்பதாலும் இவளுக்கு அங்கயற்கண்ணி (அம்+கயல்+கண்ணி - அழகிய மீனைப் போன்ற கண்கள் உடையவள்), மீனாக்ஷி (மீன் + அக்ஷி - அக்ஷம் என்றால் வடமொழியில் கண்) என்ற பெயர்கள் அமைந்தன. பெற்றவர் வைத்தப் பெயர் தடாதகைப் பிராட்டியார்.

அன்னை வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியபோது அவளுக்கு மூன்று கொங்கைகள் இருந்தன. அதனைக் கண்டு பெற்றோரான மலையத்துவசனும் காஞ்சனமாலையும் வருந்த, தகுந்த மணவாளனை இந்தப் பெண் காணும் போது இயற்கைக்கு மாறாக இருக்கும் மூன்றாவது கொங்கை மறையும் என்று வானமகள் சொல் சொன்னது.

அன்னையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரச மகளுக்குரிய எல்லாக் கலைகளையும் அரசமகனுக்குரிய கலைகளையும் கற்றுத் தேறினாள். அன்னை தகுந்த வயதுக்கு வருமுன்னரே பாண்டியன் காலமாக அன்னையை மதுரைக்கு அரசியாக முடிசூட்டினர்.

அரசியான பின் அவளும் அரசர்களுக்குரிய முறைப்படி எல்லா திசையிலும் சென்று பகையரசர்களை வென்று வாகை சூட விரும்பி திக்விஜயம் மேற்கொண்டாள். எல்லாத் திசைகளிலும் உள்ள அரசர்களை வென்று வடதிசையில் கயிலைக்குச் சென்று எல்லா சிவகணங்களையும் வெல்கிறாள். அன்னையின் வீரத்தைக் கண்டு சிவபெருமானே போருக்கு எழுந்தருளுகிறார். அன்னையை ஐயன் கண்டதும் அன்னையின் மூன்றாவது கொங்கை மறைகிறது. அதனைக் கண்ட அன்னை இவரே தனக்கு மணாளன் என்று உணர்ந்து பெண்ணரசிக்குரிய நாணத்தால் தலை குனிகிறாள். ஐயன் தான் மதுரைக்கு எழுந்தருளி அவளை மணப்பதாக உறுதி கூறுகிறார். அதன் படி மதுரைக்கு எழுந்தருளி அன்னையை மணந்து சுந்தரப்பாண்டியனாக வேப்பம்பூ மாலை சூடி மதுரை அரசனாக மூடி சூட்டிக் கொள்கிறார். பின்னர் அன்னைக்கும் ஐயனுக்கும் முருகப் பெருமானின் அம்சமாக உக்கிரப் பாண்டியன் தோன்ற அவனுக்குத் தகுந்த வயது வந்ததும் அரசனாக முடிசூட்டி அன்னையும் ஐயனும் மதுரை நகரில் கோயில் கொள்கின்றனர். அது தொடங்கி வாழையடி வாழையாக பாண்டிய அரசர்கள் அன்னை மீனாட்சியின் பிரதிநிதியாக மதுரையை ஆண்டு வந்தனர். அன்னை இன்றும் மதுரை நகருக்கு அரசியாய் விளங்குவதால் மதுரை வாழ் மக்கள் அனைவரும், அவர் சைவரோ வைணவரோ, யாராயிருந்தாலும் அன்னையின் அருளை நாடி நாள்தோறும் அன்னையின் கோயிலுக்கு வந்து சென்ற வண்ணமே இருக்கிறார்கள்.

மதுரையைக் கோயில் மாநகர் என்று கூறுவார்கள். திட்டமிட்டுக் கட்டிய பழைய நகரங்களில் ஒன்று மதுரை. கோயிலை மையமாக வைத்து திருவீதிகள் நான்கு புறமும் அமைந்திருக்கின்றன. கோவிலின் வெளித் திருச்சுற்றாக இருக்கும் ஆடி வீதி, அதனைச் சுற்றி சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி எனத் தெருக்கள் நீள் சதுரமாக கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. மதுரையில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். அன்னையும் ஐயனும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவீதியில் வலம் வருவர். எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.



இந்தப் புகைப்படத்தில் இருப்பது வடக்கு ஆடி வீதி. கோயிலுக்குள்ளேயே இருக்கிறது இந்த திருவீதி. இந்தப் படத்தைப் பார்க்கும் போது பல நினைவுகள் பொங்கி வருகின்றன. முதலில் எதிரே தூரத்தில் நான்கு தூண்கள் மட்டும் தெரிகிற திருக்கல்யாண மண்டபம். ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவிழாவில் அன்னைக்கும் அப்பனுக்கும் திருக்கல்யாணம் இந்த மண்டபத்தில் தான் நடக்கிறது. அது மட்டும் அன்றி கோவிலில் நடக்கும் எல்லா வித சொற்பொழிவுகளும், இசை நிகழ்ச்சிகளும் இந்த மண்டபத்தில் தான் நடைபெறும். இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன. பல முறை அவரின் சொற்பொழிவுகளை இந்த மண்டபத்தில் கேட்டிருக்கிறேன். அது மட்டும் அன்றி மற்ற பலருடைய சொற்பொழிவுகளும் இசைக் கச்சேரிகளும் கேட்டு ரசித்தது இந்த மண்டபத்தில் தான்.

அதற்கடுத்து நினைவிற்கு வருவது திருக்குறள் சபை. வலப்பக்கம் தெரியும் பெரிய கோபுரத்தின் முன்பு ஒரு சின்ன மஞ்சள் நிறக் கட்டடம் தெரிகிறதே. மதில் சுவரை ஒட்டிய கட்டிடம் அன்று. கோபுரத்திற்கு முன் புறம் உள்ளது. இந்த சிறு மண்டபத்தில் திருவள்ளுவர் சிலை இருக்கும். அதற்கு முன் தினந்தோறும் திருக்குறள் சொற்பொழிவு நடைபெறும். கேட்டு இன்புறும் வாய்ப்பு சில முறை கிட்டியுள்ளது.

அடுத்து நினைவிற்கு வருவது இசைத் தூண்கள். இந்தப் படத்தில் அவை தெரியவில்லை. ஆனால் அருமையான தூண்கள் அவை. அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன். மதுரையில் வாழும் பலருக்கே தெரியாத வியப்பான விஷயம் இது.

அடுத்து நினைவிற்கு வருவது இந்தப் படத்தில் தெரியும் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் பிள்ளையார். வாராவாரம் அதிகாலை 5 மணிக்கு இவர் திருமுன்பிருந்து தொடங்கி இறைவன் திருப்பெயர்களைப் பாடிக் கொண்டு கோவிலை வலம் வரும் சாயி பஜன் குழுவினருடன் பலமுறை கோவிலை வலம் வந்தது நினைவிற்கு வருகிறது.

அடுத்து நினைவிற்கு வருவது இடப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தெரியும் பதினாறு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் தான் முறுக்கு, சுண்டல் போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு முறை கோவிலுக்கு வரும் போதும் இவர்களிடம் வாங்கித் தின்ற தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் தமிழமுதைப் போல் என்றும் நினைவில் தித்திப்பவை. :)

இவை எல்லாவற்றையும் விட இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்து அந்த நீல நிற மேகக் கூட்டங்கள் தான். என்ன அருமையான படம் இது. அந்த மேகக் கூட்டங்கள் தான் இந்தப் படத்தின் அழகுக்கு அழகூட்டுகிறது என்று எண்ணுகிறேன். இந்தப் படத்தை எடுத்தவரும் அதனை அனுப்பியவர்களும் நூறாண்டு காலம் நலமாய் வாழட்டும்!

***

இது ஒரு மீள்பதிவு.

32 Comments:

வடுவூர் குமார் said...

மதுரை நகருக்குள் நுழைவது போல் உள்ளது உங்கள் பதிவு.இதே படம் வாரம் ஒரு ஆலயம் என்னும் வலைப்பதிவில் பார்த்த போது "அட்டகாசமாக இருக்கே!" என்று நினைத்தேன் ஆனால் மதுரை என்று தெரியாது.இப்போது தெரிந்துகொண்டேன்.

துளசி கோபால் said...

ஒவ்வொருமுறை போகும்போதும் முழுசாச் சுத்திப்பார்க்க முடியறதில்லை.

ஒரு வாரமாவது தினமும்போய் பகுதிபகுதியாப் பார்க்கணும்.
வாய்க்குமான்னு தெரியலை(-:

படமும் பதிவும் அருமை

துளசி கோபால் said...

ஒவ்வொருமுறை போகும்போதும் முழுசாச் சுத்திப்பார்க்க முடியறதில்லை.

ஒரு வாரமாவது தினமும்போய் பகுதிபகுதியாப் பார்க்கணும்.
வாய்க்குமான்னு தெரியலை(-:

படமும் பதிவும் அருமை

cheena (சீனா) said...

கல்லூரிக் காளைகளின் இனிய மாலைப் பொழுதினைப் போக்குவதற்கு மதுரை மாநகரத்தின் கடற்கரை இது தான் - தெற்கு கோபுர வாசலில் உள்ள அல்வா கடையில் அல்வா வாங்கிக் கொண்டு மாலை 6 மணி முதல் 9 மணி வர அரட்டை அரங்கம் நடத்திய இனிய நாட்கள் திரும்புமா ???

இலவசக்கொத்தனார் said...

//அந்தத் தூண்களில் வெவ்வேறு இடத்தில் தட்டும் போது வெவ்வேறு இசை வெளிப்படும். இது போன்ற இசைத் தூண்களை திருமாலிருஞ்சோலையான அழகர் கோவிலிலும் நாச்சியார் திருமாளிகையாகிய வில்லிபுத்தூரிலும் கண்டிருக்கிறேன்.//

எங்க பக்கமும், நெல்லையப்பர் கோயிலு, கிருஷ்ணாபுரம் கோயிலுன்னு எல்லா இடத்திலும் இந்த மாதிரி தூணுங்க இருக்குல்லாடே...

Yogi said...

நான் மதுரையில் இரண்டு வருடங்கள் தங்கிப் படித்தபோது வாராவாரம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். அப்பொழுது நான் சுற்றிப் பார்த்த இடங்களையெல்லாம் திரும்பவும் நீங்கள் எனக்கு சுற்றிக் காட்டுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நல்லபதிவு. பாராட்டுக்கள்.

தருமி said...

//எந்த மாதத்தில் எந்த வீதியில் வலம் வருவார்களோ, அந்த வீதிக்கு அந்த மாதத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள்.//
தெரியாத விவரத்தின் இதுவும் ஒன்று.

அப்படியே ஒவ்வொரு கோயிலாக போய் வருவோமா - உங்கள் மூலமாக?

குமரன் (Kumaran) said...

பாராட்டிற்கு நன்றி வடுவூர் குமார். ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுனது இந்த இடுகை. மீள்பதிவு செய்திருக்கிறேன். அப்ப எல்லாம் நல்லா எழுதிக்கிட்டு இருந்தேன் போல. :-)

எனக்கும் இந்தப் படம் ரொம்ப ரொம்ப பிடிச்சுப் போச்சு.

குமரன் (Kumaran) said...

ஆமாம் துளசி அக்கா. எங்க அம்மன் கோவிலை முழுசா சுத்திப் பாக்கணும்னா ரொம்ப நேரம் ஆகும். சின்ன வயசுல தனியா கோவிலுக்குப் போனா திரும்பி வர நேரமாகி வீட்டுல இருந்து தேடிக்கிட்டு வந்துருவாங்க. :-)

அப்படி ஒரு வாரம் கோவிலுக்குன்னே ஒதுக்கி வச்சு தினமும் போய் பகுதி பகுதியா பாக்குறப்ப சொல்லுங்க. நம்ம மக்கள் எந்த எந்தப் பகுதியை எப்ப எப்ப பாக்கலாம்ன்னு சொல்லுவாங்க.

பாராட்டுக்கு நன்றி அக்கா.

குமரன் (Kumaran) said...

இரண்டு முறை பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி துளசி அக்கா.

(என்ன சொல்றீங்க? ரெண்டு பதில் பின்னூட்டம் போடறது பி.க.தனமா? போங்கப்பா....)

Geetha Sambasivam said...

@சீனா, தெற்கு கோபுர வாசலிலே "அல்வாக்கடை" ஏதுங்க? புதுசா ஏதும் வந்திருக்கா?
எனக்குத் தெரிஞ்சு மேலக்கோபுரத்திற்கு எதிரே தான் "நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை" உள்ளது, அவங்களோட கிளை, கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ளது. ம்ம்ம்ம்ம்ம்ம்? சொக்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கோ ஒரு வேளை?

வெற்றி said...

குமரன்,
அருமையான பதிவு. இதுவரை தமிழகம் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமையும் போது பார்க்க/தரிசிக்க வேண்டிய இடங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் ஒன்று என்பது எனது நீண்ட நாள் ஆசை.

பல விருதுகள் பெற்ற Scotland நாட்டின் எழுத்தாளரான William Dalrymple அவர்கள் 6 வருடங்களுக்கு மேலாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் தங்கி அந் நாடுகளைப் பற்றி THE AGE OF KALI [கலியுகம்] எனும் புத்தகத்தில் எழுதியுள்ளார். அப் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் [chapter] முழுக்க மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பற்றியே எழுதியுள்ளார். அவர் அப் புத்தகத்தில் சொன்ன சில வரிகள் கீழே:

"The temple at Madurai is contemporary with those of ancient Greece and Egypt, yet while the gods of Thebes and the Parthenon have been dead and forgotten for millennia, the gods and temples of Tamils are now more revered than ever..."

இப்பிடி அவர் மதுரையைப் பற்றி பல தகவல்களை அப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரை அன்னையின் தரிசனம் எப்போது கிடைக்கிறது என்று பார்ப்போம்...

குமரன் (Kumaran) said...

கல்லூரிக்காளையர்க்கு மட்டுமா சீனா ஐயா. பள்ளிப்பசங்களுக்கும் அப்படித் தானே. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து மதுரையை விட்டு இம்புட்டு தூரம் வர்ற வரைக்கும் மாலைப்பொழுதினை நண்பர்களுடன் போக்குவதற்கு எப்போதும் தேர்ந்தெடுத்த இடம் கோவில் ஆடி வீதி தானே.

கீதாம்மா கேட்ட கேள்வி தான் எனக்கும் வந்தது. தெற்கு கோபுர வாசல்ல அல்வாக்கடை எங்கே இருக்கு? எனக்குத் தெரிஞ்சு ஆஞ்சனேயர் கோவில் இருக்கு. அம்புட்டுத் தான். வடக்கு வாசல்ல வேண்டுமானா ஒரு சின்ன பொரிகடலை கடை இருக்கும் (கோபுரத்துக்குள்ளேயே). அங்க காரக்கடலை நெறைய தடவை வாங்கித் தின்னிருக்கேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாடே கொத்ஸ். எங்க ஊரைப் பத்திச் சொல்றப்ப எங்கூரு பக்கத்துல இருக்கிற இடங்களைப் பத்தித் தானே சொல்ல முடியும்? நெல்லையப்பர் கோவிலுக்கும் போனதில்லை; கிருஷ்ணாபுரம் கோவிலுக்கும் போனதில்லை. ஆனால் படமெல்லாம் பாத்திருக்கேன். சிற்பமெல்லாம் அருமையா இருக்குமே.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி பொன்வண்டு. தொடர்ந்து எங்க ஊருக்காரங்க இந்தப் பதிவுல எழுதுறதை எல்லாம் படிச்சு பாருங்க. எங்க ஊருக்குத் திரும்பவும் உங்களை கூட்டிக்கிட்டு போயிருவாங்க.

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. மீனாட்சி அம்மன் கோவில் சுத்தி வர்றதுக்கே ரொம்ப நாளாகுன்னு நெனைக்கிறேன். அடுத்த கோவிலுக்குப் போறப்ப உங்ககிட்ட தான் படமெல்லாம் புடிச்சுத் தரச் சொல்லணும். செய்வீங்களா? நினைவுக்கு இப்ப வர்ற கோவிலுங்க - சிடி சினிமா எதுக்க இருக்கிற தென் திருவாலவாய சுவாமி கோவில், கூடல் அழகர் கோவில், நன்மை தருவார் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், மதனகோபாலசுவாமி கோவில், தெற்கு கோபுர வாசலுக்கு எதுக்க இருக்கிற ஆஞ்சனேயர் கோவில், அப்புறம் வடக்கு மாசி வீதி பக்கமா வரலாம். என்ன சொல்றீங்க?

தெற்குவாசல் மசூதி, செயின்ட் மேரீஸ் சர்ச் பத்தி எல்லாம் கூட எழுதலாம். யாராவது நம்மூருகாரங்க எழுத இருக்காங்களா?

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. இந்த இடுகையை முதல்ல என் 'கூடல்' பதிவுல போட்டப்ப நீங்க புதுசாத் தெரிஞ்சுக்கிட்ட தகவலை வச்சி ஒரு நல்ல உரையாடல் நடந்தது. முடிஞ்சா அந்தப் பின்னூட்டங்களையும் பாருங்க.

Anonymous said...

I had lived in chokkappa naicken street for 15 years and there is no alve kadai on that street.

Yogi said...

// எனக்குத் தெரிஞ்சு மேலக்கோபுரத்திற்கு எதிரே தான் "நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை" உள்ளது, அவங்களோட கிளை, கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ளது. ம்ம்ம்ம்ம்ம்ம்? சொக்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கோ ஒரு வேளை? //

டவுன்ஹால் ரோடு தொடக்கத்தில் (தங்கரீகல் திரையரங்கின் எதிரில்) இருக்கும் திருநெல்வேலி அல்வாக்கடை மிகவும் பிரபலம். 5 ரூபாய்க்கு இலை நிறையத் தருவார்கள்.

Geetha Sambasivam said...

@பொன்வண்டு, நான் சொல்றது கோவிலுக்கு எதிரே இருப்பதைப் பற்றி மட்டும் தான், டவுன் ஹால் ரோடுக் கடையில் வறுபயறு கூட ரொம்பவே நல்லா இருக்கும்! அவ்வளவு தூரம் எதுக்கு வரணும்னு தான் மேலக் கோபுரம் எதிரேயே வாங்கச் சொன்னேன்! :P

cheena (சீனா) said...

கீதா சாம்பசிவம் - குமரன் - பொன் வண்டு - வணக்கம்

ஞாபக மறதி யாக தெற்குக் கோபுர வாசல் என எழுதி விட்டேன். அது மேலக் கோபுர வாசல் தான் - அங்கு தான் ஆண்டாண்டு காலமாக அல்வாக் கடை உள்ளது. நான் அல்வா சாப்பிட்ட காலம் - 1967 ஏப்ரலில் இருந்து 1972 மார்ச் வரை - ஏறத்தாழ 35 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்பா மருதைக் காரங்க கிட்டே தப்பா எதையும் சொல்லி விட முடியாது - டின்னு கட்டிடுவாங்க - ஒரு முறைக்கு இரு முறையாக சரி பார்க்கணும்.

இனி பின்னூட்டம் கூட ரொம்ப ஜாக்கிரதையா போடுரேன். இன்னும் என்னுடைய பங்களிப்பு இங்கே ஆரம்பமாக வில்லை. பயமாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா, புதுமண்டபத்துக்குப் பின்னாடி அந்த மொட்டை கோபுரம், எழுகடல் தெரு பக்கத்துல இருக்குற அல்வாக்கடை பேரு என்ன? ரெண்டு கடை பக்கத்துல பக்கத்துல இருக்குமே அது.

குமரன் (Kumaran) said...

விரைவில் உங்களுக்கு மதுரை சென்று அம்மையைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும் வெற்றி. ஸ்காட்லாண்ட் எழுத்தாளர் சொன்னது சரி தான். பண்டைய நாள் முதல் அன்னை மீனாட்சியின் அருளாட்சி என்றும் போல் இனிதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மதுரை நகரில்.

மெளலி (மதுரையம்பதி) said...

இன்றுதான் பார்த்தேன் இந்தப் பதிவினை.

மொட்டை கோபுரத்தானுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு, உள்ளே நுழைந்தால் கிடைக்கும் திருப்தி வேறுதான்.

தரிசனமெல்லாம் முடிந்து இதே கோபுர வழியாக வெளிவந்து வடக்குச் சித்திரையும்-மேலசித்திரை வீதியும் இணையும் இடத்தில் இருக்கும் உணவு விடுதியில் ஒரு கட்டு கட்டலாம். முன்பு அவ்வளவு டேஸ்டாக இருக்கும். இப்போது எப்படியோ தெரியாது.


கும்ரன் நீங்க சொன்ன லிஸ்டில் ஆதி சொக்கநாதர், சிம்மக்கல் விநாயகர், பேச்சியம்மன் எல்லாம் விடுபட்டுள்ளது போல தெரிகிறதே.

நாகப்பட்டினம் நெய்மிட்டாய்காரர்கள் என் தாய்வழி உறவினர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்....தற்போது எந்த தொடர்புகளும் இல்லை.

கீதாம்மா, சொக்கப்பநாயக்கன் தெருவில் 60வருடங்களுக்கும் மேலான வெண்ணை-நெய் விற்கும் கடைதான் உண்டு. :-)

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. நான் பொறந்த வருடம் 1972 மாதம் மார்ச். அது வரைக்கும் மதுரையில இருந்து அல்வாவும் சாப்புட்டு ஆடிவீதி காற்றையும் அனுபவிச்சிருக்கீங்க. நீங்க 35 வருடத்துக்கப்புறம் இம்புட்டு நினைவா சொல்றதைப் பாத்தா வியப்பா தான் இருக்கு. எனக்கெல்லாம் போன வாரம் நடந்ததும் பாத்ததுமே மறந்து போகுது. இன்னும் சொல்லணும்னா முந்தா நேத்து பின்னூட்டத்துல சொன்ன கருத்தையே மறந்து போறேன். :-)

நீங்க தாராளமா பயப்படாம இடுகைகளும் பின்னூட்டங்களும் போடுங்க. கீதாம்மா எல்லாரையும் கொஞ்சம் ஓட்டுவாங்க. என்னை மாதிரி கண்டுக்காம இருந்துட்டா அப்புறம் ஓட்டுறதை நிறுத்திக்குவாங்க. சரியா? :-)

குமரன் (Kumaran) said...

மௌலி. அதான் வடக்கு மாசி வீதி கோவிலெல்லாம் அப்புறம் எழுதலாம்ன்னு சொன்னேனே. ஆனா அது உங்க ஏரியா போல இருக்கே. உங்க ஏரியாக்குள்ள நான் எப்படி வர்றது? நீங்களே எழுதுங்க. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த மண்டபத்தில் சொற்பொழிவு ஆற்றும் போது தான் வாரியார் சுவாமிகளின் அருளாசியும் பாராட்டுக்களும் அடியேனுக்கு கிடைத்தன//

தனிப்பதிவு ப்ளீஸ்!

குமரன்
நீங்க சொன்னாப்பல அந்த நீல மேகங்கள் - ஆனா அதோடு சேர்ந்த அந்த வான வெளிச்சம்! ரெண்டுமே சேர்ந்து வேள்வி, புகை எஃபெக்ட கொடுக்கறது என்னவோ உண்மை!

cheena (சீனா) said...

குமரன் : கீதாவுக்கெல்லாம் பயப்படலே !! வயசானதுலெ கொஞ்சம் ஞாபக மறதி - வேறொண்ணுமில்லெ - எழுதறேன் -நினைவுகளை எழுதறேன் - நிச்சயமா எழுதறேன். நன்றி

என்னுடைய வலைப்பூவைப் பாருங்களேன் :
http://cheenakay.blogspot.com

குமரன் (Kumaran) said...

இரவிசங்கர். ஏற்கனவே அந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்லியிருக்கிறேன். கூடலில் இந்த இடுகையைப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2005/12/100.html

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. நீங்க அசை போட்டு அனுபவித்து எழுதியதை எல்லாம் பிரதி எடுத்து வைத்திருக்கிறேன். சுவாரசியமான பலருடைய இடுகைகளை இப்படி பிரதி எடுத்து வைத்துப் படிப்பது வழக்கம். படித்துவிட்டுச் சொல்கிறேன்.

தருமி said...

குமரன்,
நீங்க சொல்றது மாதிரி "கூட்டுப் பதிவு" - எழுத்து நீங்களும், படங்கள் நானுமாய் - போட நான் ரெடி!

அந்தப் பழைய பின்னூட்ட உரையாடலுக்கு 'தொடுப்பு' கொடுத்திருங்களேன். பார்க்கணும்னு ஆசை ஆசையா இருக்கு

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. கூட்டு இடுகைகளுக்கு ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள்.

'இது ஒரு மீள்பதிவு' இந்த இடுகையில் சொல்லியிருக்கிறேன் பாருங்கள். அதில் மீள்பதிவு என்ற சொல்லிலேயே பழைய இடுகைக்குத் தொடுப்பு இருக்கிறது. அங்கே சென்று பின்னூட்டங்களைப் பாருங்கள்.