Monday, January 21, 2008

இதற்குப் போய் வெட்கப்படலாமா?

ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. முன் அறிமுகம் இல்லாததால் வழக்கமான குசலம் விசாரிப்பில் பேச ஆரம்பித்தோம். பெயர்,இருக்கும் நாடு, இப்படிப் போனது பேச்சு. சொந்த ஊர் சென்னை என்றார்கள் அந்தப் பெண்.

சற்று நேரம் கழித்துக் கடைக்குப் போயிருந்த என் கணவரும், அந்தப் பெண்ணின் கணவரும் வந்தனர். "இவர்களும் மதுரைப் பக்கந்தான்.." என்றார் கணவர். நான் சரி,அந்தப் பெண் தன் ஊரைத்தான் சென்னை என்று சொன்னார் போல என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் பெண்ணின் கணவர், "எங்க ஊர் சேலம். என் மனைவி ஊர்தான் மதுரைக்குப் பக்கத்தில் மேலூர்..சென்னையில் செட்டிலாகப் போகிறோம்" என்று பேச்சுவாக்கில் சொன்னதும் அந்தப் பெண் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே.

அப்படி ஒரு அவமான உணர்வு அவர் முகத்தில். கணவர் தகவல் மாற்றிச் சொன்னதாலா, அல்லது ஊர் மேலூர் என்பதலா...புரியத்தான் இல்லை.

எனக்குப் பழக்கமான இன்னுமொரு குடும்பம். அவர்களும் சென்னை என்றுதான் கூறினார்கள் முதலில். பின் அவருடைய அப்பா, அம்மாவைச் சந்தித்த போது அவர்கள் சொந்த ஊர் கோவில்பட்டி என்று தெரிய வந்தது. அவர்கள் சென்னையில் வீடு இருத்ததால், எதிர்காலத்தில் சென்னைவாசியாகும் எண்ணமிருந்ததால் இப்படிக் கூறியிருக்கலாம்.

இன்னுமொருவர், தகப்பனார் வேலை நிமித்தம் திருச்சியில் பள்ளியிறுதி வரை படித்து விட்டு, கல்லூரிப் படிப்பைத் தொடரும் நேரத்தில் சென்னைக்கு வந்தவருக்கும் சென்னைதான் சொந்த ஊராகிவிட்டது.

இன்னும் இது போல் சில அனுபவங்கள்... சொந்த ஊரைச் சென்னை அல்லது ஏதாவது ஒரு பெரு நகரம் என்று சொல்லும்போது இருக்கும் மகிழ்ச்சி அசல் சொந்த ஊர் பெயரைப் பொறுத்தவரை அவமானம் ஆகிவிடுகிறது .அதிலும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம்.

இதற்கு விதிவிலக்காய் இருப்பவர்களும் பலருண்டு.

ஏன் இப்படி? கிராமம் என்பதில் என்ன அவமான உணர்வு? சென்னை அல்லது
பெருநகரம் என்பதில் அப்படியென்ன பெருமை? வாழ வைத்த ஊராக இருக்கட்டும், அல்லது குடிபெயரப் போகும் ஊராக இருக்கட்டும்..பெருமைப் படுவதில் தவறில்லை. அதற்காகப் பிறந்த ஊர்ப் பெயரைச் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?

சென்னையைச் சொந்த ஊராகக் கொண்டாடும் எத்தனை பேர் அங்கே பல தலைமுறைகளாய் வாழ்ந்து வருகிறார்கள்?

அதிலும் வெளிநாட்டு இந்தியர் பலர் வீடு வாங்குவது, வருங்காலத்தில் குடி போகப் போவது எல்லாம் சென்னை போன்ற பெரு நகரங்களில்தான். இது அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றது. அதற்காகச் சொந்த ஊரை மறக்க வேண்டுமா? இவர்களே இப்படி என்றால் குழந்தைகளை என்ன சொல்வது?

குடியுரிமை பெற்ற வெளிநாட்டு இந்தியர்கள் தம் சொந்த நாடு என்று வசிக்கும் நாட்டைச் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

யாதும் ஊர்தான்...என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் சொந்த ஊர்தானே!
வேறு எங்கோ செட்டில் ஆனாலும் ஊர் பெயரை மறக்கலாமா? இல்லை அதைச் சொல்லத்தான் வெட்கப்படலாமா?

Friday, January 18, 2008

திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்

முன் குறிப்பு:
யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றுவதோ அல்லது கேள்வி கேட்பதோ எனது நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் என்ற பொது இடத்தின் வரலாற்றைக் கேள்வி கேட்கவே நான் முயற்சி செய்கிறேன். அந்த பொது இடத்தின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் உங்களை எதிர்வினையாற்ற வைக்கலாம். நாம் அனைவரும், ஒரு பொது இடத்தின் வரலாற்றை பேச முனைகிறோம். அதைத்தாண்டி எந்தவிதமான உரையாடலுக்குள்ளேயும் நான் போகப்போவது இல்லை. அப்படியே எங்காவது நான் திசைமாறி வேறுவிசயங்களுக்குள் என்றால் அதை தெரியப்படுத்தவும் நீக்கிவிடுகிறேன்.

நேரடியாக 1,2,3...என்று கேள்விகளையும் ,பதிலையும் மட்டும் எழுதுவோம். இது கேள்விகள் கிளைபரப்பாமல் எடுத்துக் கொண்ட பொருளில் மட்டும் உரையாட வசதியாய் இருக்கும்.

******
கீதா,
நீங்கள் எத்தனை முறை திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய் இருப்பீர்கள் என்று தெரியாது. அதில் எத்தனைமுறைகள் அதன் வரலாற்றை அர்ச்சகரிடம் கேட்டு இருப்பீர்கள் என்றும் தெரியாது. குறைந்தபட்சம் இந்த முறை நீங்கள் கேட்க முயற்சித்து உள்ளீர்கள். இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கும் பல புதிய கோணங்கள் தெரியவரலாம்.

இனி கேள்வி/பதில்/விளக்கங்கள்....


எனது கேள்வி:
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

உங்கள் பதில்:
1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.

எனது விளக்கம்:
நீங்கள் எடுத்த எடுப்பிலேயே இது ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். இதற்கு மேல் என சொல்வது?

ஒரு கோவில் என்றால் அதில் ஒரு மூலவர் இருப்பார். அவர் இருக்கும் இடம் கருவறை என்று சொல்லப்படும். பார்க்க வந்தவர், கல்யாணத்திற்கு வந்தவர்,கோபுரம் கட்ட காசு கொடுத்தவர் யாராக இருந்தாலும் மூலவர் அந்தஸ்தில் சிலை வைக்க மாட்டார்கள். வந்தவர்கள் போனவர்களுக்கு கருவறைகு வெளியில் சிலைகள் இருக்கலாம். (ஒரு உதாரணம்: மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் : பெயரிலும் இருவரும் அறியப்படுகிறார்கள். இருவருக்கும் தனித்தனி கருவறை உண்டு. கல்யாணத்திற்கு வந்தவர் போனவர் எல்லாம் இங்கும் உண்டு.)

திருப்பரங்குன்றம் 5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் இடம். மாம்பழம்,பலா,வாழை,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் உள்ள ஒரு கடையை பழக்கடை என்றுதான் சொல்ல வேண்டும். அதை 'பலா'க்கடை என்றுதான் சொல்வேன் என்றால். அது உங்கள் விருப்பம்.

எனது கேள்வி:
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

உங்கள் பதில்:
2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.

எனது விளக்கம்:
5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் ஒரு இடம் முருகனுக்கு மட்டுமான ஒரு கோவிலாக கட்டமைக்கப்பட்டது எப்படி? இந்த தலம் முருகனுக்கானது மட்டும் அல்ல, 5 பேருக்கும் உரியது. கருவறை அமைப்பே அதற்கு சாட்சி.

தற்போது முருகன் கோவிலாக (மத்தவர்கள் எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்) அறியப்படும் இந்த இடத்திற்கு வேறு கோணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பட்சத்திலேயே அதற்கான தேடல் தொடங்கும். மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை என்று நம்பும் போது அர்ச்சகர் என்ன , தேங்காய் விற்கும் கடைக்காரன் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்கள்.

பக்கவாட்டு குறிப்பு:
கேள்விகள் 1 , 2 ற்கான பதில்கள் உங்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துவிட்டது. உங்களிடம் மேற்கொண்டு இந்த 1,2 சம்பந்தமாக உரையாடுவது உங்களின் நம்பிக்கைகளை நான் நேரடியாக கேள்வி கேட்கும் சூழலில் கொண்டுவிடும். நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் மட்டுமே 1,2 ல் தொடர விருப்பம்.

எனது கேள்வி:
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

உங்கள் பதில்:
3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன்.

எனது விளக்கம்:
நீங்கள் சொல்லிய காரணங்களை பல முறை படித்துப்பார்த்தேன்.கீழே உள்ள காரணங்களால்தான்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சரியா? தவறு என்றால் திருத்தவும்.

1.படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன்
படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும்.

2.மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே.

3.முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும்,குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?

மேலதிகக் கேள்விகள்:
1.போர் சம்பந்தமான காரணத்தினால் இது முதல் படைவீடாடக ( படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின்) அறியப்படுகிறது என்றால், இங்கே நடந்த போர், மற்ற 5 இடங்களில் நடந்த போருக்கு எல்லாம் முந்தைய ஒன்று. சரியா?

ஆறு இடங்களில்லும் நடந்த போர்களில் முருகன் எதிர் கொண்ட எதிரிகளின் பெயர் ,இடம் ,காலம் பட்டியல் உள்ளதா? அப்படி இருந்தால், முதன் முதலில் நடந்த போரின் போது முருகன் தன் படைகளோடு தங்கி இருந்த இடம் ஆதலால் இது முதல் படைவீடு என்று சொல்லலாம்.

2.சூரனை வதம் செய்யும் முன்னரே பிரணவப் பொருள் சமாச்சாரம் திருப்பரங்குன்றத்திற்கு வந்துவிட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் படைவீடு என்ற விளக்கமும், இது முதல் போரில் தங்கியிருந்த இடம் என்ற விளக்கம் ஒத்துவராது. //ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?// கதாகலாட்சேபம் பாணியில் நீங்களே "அல்லவா" என்று கேட்டுக் கொண்டால் "அல்ல" என்றுதான் நான் சொல்ல முடியும்.

3.இடையில் "மூலாதார" கணக்கு வேறு சொல்கிறீர்கள். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம்.

  • எந்த வகையில் திருப்பரங்குன்றம் மூலாதாரத்தை குறிக்கிறது?
  • மூலாதாரம் என்றால் என்ன?
  • மூலாதாரத்திற்கு ஏன் திருப்பரங்குன்றம் பொருத்தமானது?
ஆறுபடை வீடுகளின் வரிசை ...

(அ) திருவிளையாடல் படி வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஆ) போர் புரிந்த காலங்களில் முருகனின் படைகள் தங்கியிருந்த கால வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது
(உ) எப்படி வேண்டுமானாலுமா?

நீங்கள் இப்படித்தான் என்று சொல்லி அந்த வரிசையில் ஆறு படைவீடுகளையும் ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தினால் நல்லது. உ.ம்: நீங்கள் போர் வரிசை என்று சொன்னால், இந்த இடத்தில், இந்த வருடத்தில் இந்த பெயர் கொண்ட அசுரனுடன் முருகன் போர் புரிந்தார்? என்று ஆறு வீடுகளையும் வரிசைப் படுத்தலாம்.

அடிக்குறிப்பு:
நீங்கள் 3 வது கேள்விக்கான பதிலையும் உங்களின் நம்பிக்கைகளில் பேரில் வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் பதில் சொல்லவிரும்பினால் நான் ஜகா வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சித்திரைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரும் முழிப்பீர்களேயானால் பார்க்க எங்களின் பழைய பதிவுகளை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - கீதா
http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_09.html

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_10.html

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html

Monday, January 14, 2008

மாட்டுப் பொங்கல் நினைவுகள்

மார்கழி மாதக் கடைசி வாரத்திலேயே பொங்கல் ஏற்பாடுகள் வீட்டில் களை கட்டத் துவங்கும்.
பொங்கலுக்கு என்னவோ முக்கியத்துவம் குறைவுதான்..மாடுகள் வீட்டில் இருந்ததால். எங்கள் வீட்டிலும் ஒரு காலத்தில் மாடுகள் இருந்தன.மைக்கண்ணி (கண்ணைச் சுற்றிக் கறுப்புப் பட்டைகள்..அதனால் இந்தப் பெயர்), மீனா,மைகண்ணியின் மகள்தான் மீனா..அப்புறம் அதன் வழி வந்த வாரிசுகள்.வீட்டிலிருப்போர் இஷ்டப்படிக் கன்றுக்குட்டிகளுக்குப் பெயர்கள் மாறும்..(காமராஜ்,சிவாஜி).

மாட்டுக் கொட்டாய் சற்றுத் தள்ளியிருக்கும். எனவே புதிதாகக் கன்றுக்குட்டி பிறக்கும் போது பால் குடி நேரம் தவிரப் பாதுகாப்புக்காக வீட்டுத் திண்ணையில் பார்வையில் படும்படிக் கட்டி வைப்பார்கள். பாவம் எங்களிடம் மாட்டிக்கொள்ளும்..மான் குட்டியைப் போல் பிரவுன் நிறத்தில் காணப்படும் ஜூனியர் மீனா..இதற்கு ஸ்ரீதேவி,(நான் வைத்த பெயர்) சரோஜா தேவி(சித்தப்பா) என்று இரண்டு பெயர்கள்.. மண்ணைத் தின்னக் கூடாது என்பதால் வாய்க்கூடு போட்டிருப்பார்கள்.

அவற்றைப் பார்த்துக் கொள்ளும் உதவியாளர்களும் உண்டு. தினசரி வந்து போவார்கள். கோப்பி தான் தாயார் பெயர். அவர்கள் மகன்கள் ஆத்தாங்கரை, அழகர்..மருமக்கள் சீனியம்மா,(சீனி என்று கூப்பிடுவோம்) மற்றும் மருதாயி. நீள நீளமாய் வளர்ந்த புற்கள் சீமைப் புல் என்று பெயர், தினம் காலை கொண்டு வருவார் கூழு மாமா. பால் கறக்கும் வேலை செய்பவரும் அவரே. இது தவிர வைக்கோல், புண்ணாக்கு என்று உணவு வகைகள். தினமும் காலை 10 மணியளவில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பும் மைக்கண்ணி குடும்பம். மேய்ச்சல் பொறுப்பும் கூழு மாமாவுக்குத்தான்.

லிட்டர் லிட்டராய்ப் பால் கறக்கும் மாடுகள். வீட்டுத் தேவை போக விற்பனைக்கு. பால் விற்றுச் சிறுவாடு சேர்த்து வைக்கும் அப்பத்தா. அவர்கள் இடுப்பில் தொங்கும் சுருக்குப் பைக்காய் அவர்களை ஐஸ் வைத்துப் பேசிக் காசு பிடுங்க நாங்கள் ஒரு கூட்டம்.

மாட்டுப் பொங்கல் அன்று கொட்டாய் சுத்தம் செய்து சாணி தெளித்து முடித்த பின் அந்த ஈரம் கூடக் காயும் முன் கோலம் போட அவசரம்..அந்த வயதில் கோல இழைகள் அப்படியும் இப்படியும் கோணிக் கொண்டு இருக்கும் என்பதால் வீட்டு வாசலில் கோலம் போட அனுமதியில்லை. கோலம் போடக் கற்றுக் கொண்டதே மாட்டுக் கொட்டாயில்..மாட்டுப் பொங்கலில்தான்.

சின்னச் சின்னதாய்க் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்கையில் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாய்ப் பொங்கல் பொருட்கள் கொட்டாய்க்குக் கொண்டு வருவார்கள் அப்பத்தா.."எதயாவது ஒழுங்கா எடுத்து வைக்கிறாளுகளா.." என்று அவ்வப்போது வசவு முனகல்கள் மருமகள்களுக்காய். இரும்பு அடுப்பில் அரிசி மாவை வரிசை வரிசையாய் ஒழுக விட்டுப் போடும் மாக்கோலம், பொங்கல் வைக்கும் இடத்தில் கட்டம் கட்டிச் செம்மண் கோலம், கரும்புத் துண்டுகளில் மாலை, கட்சி வண்ணப் பெயிண்ட் பூசிய மாட்டுக் கொம்புகள் (இதற்கென்று ஓவ்வொரு கட்சியும் அவர்கள் கொடி வண்ணப் பெயிண்ட் அடிப்பார்கள்..வீட்டில் தாத்தாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அதற்கொரு சண்டை..பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது ஜனதா கட்சி வண்ணங்கள் தான் எங்கள் மாட்டுக் கொம்புகளை அலங்கரிக்கும்), கொம்பைச் சுற்றிக் கட்டப்பட்ட புதுத் துண்டு இப்படியாய் ஏற்பாடுகள் களைகட்டும்.

பாவம், மைக்கண்ணி குடும்பம் காலையிலிருந்து பொங்கல் சாப்பிடும் வரை பட்டினிதான். பிற்பகல் மூன்று மணியளவில் நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் பானை அடுப்பில் ஏறும். பால் கலந்த தண்ணீர் பொங்குகையில் அரிசி போடுவார்கள். குலவை கொட்டச் சொல்வார்கள். பொங்கல் தயாராகும் நேரம் கூழு மாமா வருவார். சிறு துண்டுகளாகப் பிரித்து வைத்த வாழை இலைகளில் ஒரு கரண்டிப் பொங்கல் வைத்துப் பூஜை முடிந்த பின் அனைவருக்கும் கொடுப்பார்கள் . பின் எல்லோரும் ஒரு பாத்திரத்தில் கை விட்டுக் கழுவ வேண்டும். அந்தப் பாத்திரத்தில் மாங்குலையைத் தொட்டு எடுத்த நீர்த்துளிகளை எல்லா இடங்களிலும் தெளித்து "பொங்கலோ பொங்கல்" என்று கூழு மாமாவைப் பின் தொடர்ந்து நாங்களும் கூக்குரலிடுவோம்.

பின் மாடுகளை ஒரு 5 நிமிடம் சிறு உலா கூட்டி கொண்டு போவார் கூழு மாமா. அவை திரும்பி வருவதற்குள் சாணியைப் பரப்பி நடுவில் குழியிட்டு அதில் நெருப்புத் துண்டங்களை வைத்துக் குறுக்கே ஓர் உலக்கையை வைப்பார்கள். அதைத் தாண்டித்தான் அவை
வர வேண்டும். திருஷ்டி கழியுமாம்.

இன்று நினைத்தாலும் பசுமையாய் மனதை வருடும் நினைவுகள். பொங்கலை விட அதிகம் ரசித்து அனுபவித்தது மாட்டுப் பொங்கல்தான். அனைவருக்கும் பொங்கல், புத்தாண்டு, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.

Thursday, January 10, 2008

கொஞ்சம் இனிமை - கொஞ்சம் பொறாமை

மதுரை திருநகரில் ஆறாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள "அமலா பெத்தண்ணல் மாண்டிசோரிப் பள்ளி"யில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் ஆறாவது முதல் பள்ளியிறுதி வரை மூன்றாம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள "சீதாலட்சுமி பெண்கள் மேல் நிலைப்பள்ளி"யில் படித்தேன். ஒவ்வொரு முறை ஊர் செல்லும் போதும், இப்பள்ளிகளையும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பார்க்க நேரிடும்.

அப்போதெல்லாம் இனம் புரியாத ஓர் இனிமை கலந்த பொறாமை. அவை பலவிதச் சூழல்களில் மாறி நிற்கும் பள்ளிகள் இப்போது.என்றாலும் அந்தப் பகுதிகளைக் கடக்கும் போது இழுத்துப் பிடித்தாலும் பின்னோக்கிச் செல்லும் மனம். பாவாடை, தாவணிக் காலங்கள் போய் சுடிதார் சீருடையாகிய காலம் இப்போது. பள்ளிப் பேருந்திலேயே திருப்பரங்குன்றத்திலிருந்து சென்ற காரணத்தால் அமலா பள்ளிக் காலங்களில் வெளியுலகம் சுற்ற வாய்ப்புகள் அவ்வளவாக இருந்ததில்லை. காலையில் முதல் ட்ரிப்பிலும், மாலையில் இரண்டாம் ட்ரிப்பிலும் சென்ற துரதிர்ஷ்டம் திருப்பரங்குன்றச் சிறுவர் சிறுமியர்க்கு.

இரண்டாவது ட்ரிப் பிள்ளைகள் வரும் வரை மரத்தடியில் இருப்போம். சில சமயம் தரையில் சிதறிக் கிடக்கும் வேப்பங்கோட்டை, வேப்பம்பழம் சேகரிக்கச் சொல்வார்கள். உள்ளங்கையை மடக்கிக் கொண்டு, வேப்பங்கொட்டையை நடுவிரல் மேல் வைத்து, அடித்து
உடைத்துக் கையை மூன்று முறை சுற்றி ஏதோ விளையாட்டு விளையாடிய ஞாபகம். விரல் மேல்சிறு தீற்றலாய்க் கோடிடும் ரத்தம் பார்க்கையில் பயம் கலந்த ஒரு மகிழ்ச்சி.
வேப்பம்பழங்களைச் சுவைத்துத் தின்ற ருசி இன்னும் நினைவில் உள்ளது. அப்பழக்கம்
அதிகமாகி, ஸ்கர்ட்டில் இருக்கும் பாக்கெட்டில் அவற்றைச் சேகரித்து வீட்டிற்கும் கொண்டு வந்து தின்று, அடிக்கடி கண்வலி வந்து, வீட்டார் காரணமறிந்து கொடுத்த உதைகள் மறக்க முடியுமா என்ன?

உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைச் சேகரித்து வைத்து ஜோடி சேர்த்து விளையாடும் ஆட்டம் ஒன்று அடிக்கடி விளையாடுவோம். பூக்களடர்ந்த பிளாஸ்டிக் கூடைகள்தான் புத்தக மூட்டைகள் அப்போது. கண்ணாடி வளையல்களுக்குப் பண்டமாற்றாய்ப் பூக்களை பிளேடால் வெட்டித் தோழியிடம் கொடுத்து, பின் வீட்டார் எனக்குத் தெரியாமலேயே பள்ளியில் அதைப்
புகார் செய்ய, ஒரு இனிய காலை நேரப் ப்ரார்த்தனை நேரத்தில் கூடியிருந்த பள்ளிச் சிறார்கள் அனைவர் முன்னிலையிலும் என் பெயரும், தோழி R.M.சாந்தி பெயரும் விளிக்கப்பட, ஏதோ பரிசு என்று பெருமிதப் பார்வை பார்த்துக் கொண்டு போய்ப் பிரம்படி வாங்கியழுத கதையை மறக்க முடியுமா?

சீதாலட்சுமி பள்ளிக்கு டவுன் பஸ்ஸில் போனதால் வெளியுலகம் கொஞ்சம் அறிமுகம். என் அதிர்ஷ்டம், இந்தப் பள்ளித் தோழிகளின் தொடர்பு இன்று வரை இருப்பதுதான். திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் என் தாத்தா தேங்காய், பழக்கடை வைத்திருந்தார். எல்லா
வார, மாதப் பத்திரிகைகளும் விற்பனை செய்ததால் அனைத்துத் தொடர்களையும் சீக்கிரமே சுடச்சுடப் படிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரீதியில் படித்த சுஜாதாவின் தொடர்களின் அந்த வாரத்திய அத்தியாயக் கதையைக் கேட்பதற்கு ஒரு கூட்டமே பள்ளியில் காத்திருக்கும். கமல்-ரஜினி, ஸ்ரீதேவி-ஸ்ரீப்ரியா,ரத்தி, எஸ்.பி.பி.-யேசுதாஸ் என்று கட்சிகளாய்ப் பிரிந்து மாங்கு மாங்கென்று சண்டை போட்ட காலங்கள் அவை.

இன்றும் அப்பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்கும் போது இனிமை கொஞ்சம், பொறாமை கொஞ்சம் எழத்தான் செய்கிறது. ஒரு காலத்தில் ஆண்டு அனுபவித்த இடங்களில் இன்று உரிமையில்லாதது போன்ற ஓர் எண்ணம். அப்பிள்ளைகள் எங்கள் இடங்களை ஆக்கிரமித்துக்
கொண்டது போல் ஒரு மாயை..எங்கள் வகுப்பாசிரியர்களில் சிலர் இறந்து போனதாகக் கேள்வி. சிலர் ஓய்வு பெற, சிலர் பதவி உயர்வு பெற...காலம் வேகமாக ஓடுகிறது. தோழிகளைச் சந்திக்கும் போது,அவர்களின் அம்மாக்களை நினைவுகூறும் முகங்கள், உடலமைப்பு...என் தோழிகளும் என்னைப் பார்த்து இதையே சொல்ல..வயதாகிவிட்டது என்று சொல்லிச் சிரித்து...மலர்கின்றன நினைவுகள்.

Wednesday, January 9, 2008

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்


(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?"

(நானானி said...
முதல் படைவீடு எங்கள் திருச்செந்தூர் அல்லவா? விளக்கம் தேவை.
செந்தில்முருகன் 'நாந்தேன் ஃபஸ்ட்' என்கிறார்.
டேப்பர் என்றால் 'அல்பம்' என்றும் கொள்ளலாமா?
திருப்பரங்குன்றத்தில் நீங்கள் சிரித்தது...இல்லையில்லை சொன்னது அருமை.

முருகனுக்கு உரிய படை வீடுகள் என்பது ஆறு ஆகும். படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும். முருகன் தேவசேனாதிபதி அல்லவா? ஆகவே அவன் தங்கி இருந்து அருள் புரியும் இடங்கள் எல்லாம் படை வீடு என அழைக்கப் படுகிறது. இதில் இன்னொரு தத்துவமும் அடங்கி உள்ளது. மனிதனின் உடலின் உள்ளே இருக்கும் ஆறு ஆதாரங்களும் ஆறு படை வீடுகள் ஆகும். மனிதன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், தன் பஞ்ச இந்திரியங்களோடு ஏதாவது ஒரு வகையில் போராடத் தான் வேண்டி உள்ளது. அவற்றை அடக்க வேண்டி வந்ததே யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பதாகும். இவற்றைத் தன் வசப் படுத்தியே மனிதன் தன் வாழ்நாளின் பூர்ணத்துவத்தைப் பெற முடியும். பொருள் பெற்ற ஒருவன், தன்னை விட வறியவன் ஒருவனைக் கண்டு இன்னாரிடம் சென்றால் பொருள் பெறலாம் என்று "ஆற்று"ப் படுத்துவதை, இங்கே "ஆற்றுப் படுத்துதல்" என்பது வழிகாட்டுதல் என்னும் பொருளில் வருகிறது. ஆற்றுப் படை என்பது இறைவனிடம் இந்த முறையில் சென்றால் அவன் அருள் கிடைக்கும் என்று வழி நடத்தியதையே குறிக்கும்.

இங்கே முருகனின் ஆறுமுகங்களும் ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாகும். இவற்றைப் பற்றி அதிகம் விவரித்தால் பதிவின் நோக்கமே மாறி விடும். ஆகையால் விவரம் தனியாக என்னுடைய சொந்தப் பதிவில் எழுதுகிறேன் நேரம் வரும்போது. அந்த ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். இங்கே நானானி, திருச்செந்தூர் தான் முதல் படை வீடு என்கிறார். இல்லை, இன்னும் சிலர் முதன் முதல் பழநியில் தான் அமர்ந்தார், அதனால் அதுதான் என்றும் சொல்லலாம், அதுவும் இல்லை. திருப்பரங்குன்றம் என்னும் தென்பரங்குன்றமே முதல் படை வீடு. இங்கே மலை உச்சியில் காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் உள்ளது. நக்கீரரின் உருவச்சிலையையும் பார்க்கலாம், அங்கே நின்ற கோலத்தில். இந்தக் கோயிலும் சரி, அதன் புராதனமும் சரி கிறிஸ்துவுக்கு முன்னர் கடைச்சங்க காலத்திலேயே இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. கீழ்க்கண்ட சங்கப் பாடல் ஆன பரிபாடலின் வரிகள் அதை உறுதி செய்யும் விதமாயும் உள்ளது.

"யாம் இரப்பது பொன்னும், பொருளும், போகமும் அல்ல. நின்பால் அருளும் அன்பும், அறனும் மூன்றும் உருள் இணர்க்கடம்பின் ஒலி தாரோயே" என்று திருப்பரங்குன்றத்து இறைவனை வேண்டுகிறார் புலவர் கடுவன் இளவெயினனார். கோயில் பழமை வாய்ந்தது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. சாதாரணமாய்க் குடவரைக் கோயில்கள் பல்லவர் காலத்தில் தான் ஆரம்பிக்கப் பட்டது என்பதை மறுக்கும் விதமாய் இந்தக் கோயில் பாண்டியர் காலத்திலேயே எழுப்பப் பட்டுள்ளது.

மற்ற ஐந்த ஆற்றுப்படைகள் ஆவன

திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
திருஆவினன்குடி - மணி பூரகம்
திரு ஏரகம்(சுவாமி மலை)- அநாகதம்
பழமுதிர்ச்சோலை - விசுத்தி
குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை

இவைதான் திருப்பரங்குன்றம் பற்றிய நான் அறிந்த வரையில் உள்ள தகவல்கள், பல புத்தகங்கள், மற்றும் கூகிளில் இது சம்மந்தமாய் எழுதிய பல தளங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட தகவல்களே கிடைக்கின்றன. ஆகையால் தலபுராணங்கள் ஒரு முறையும் திருத்தப் படவில்லை. திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே. முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும், குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?

1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.

2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.

3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன். ஆனால் பலூன் மாமாவுக்கு இன்னும் சந்தேகம் இருக்கலாம். அவர் பதில் பார்த்து மற்றவை! படங்கள் அப்லோட் ஆகவில்லை! அதனால் போட முடியவில்லை, மறுபடி முயற்சி செய்கிறேன். :(


படம் திரு ஜீவாவின் பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. நன்றி ஜீவாவுக்கு!

மருத # 2. (மதுரை)

மதுரையில் கடந்த 2006ஆம் ஆண்டில் கோர்ட் உத்தரவின் பேரில் பல அனுமதி பெறாத இடங்கள் இடிக்கப்பட்டன, பல கட்சி கொடிகம்பங்களும், மன்றங்களும், வைரம் பாய்ந்த பல மரங்களும், கோவில்களும் தப்பவில்லை. அனுமதி பெறாத இருபது அடி உயர கோபுரங்களை கொண்ட கோவில்களும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. பல ரோட்டு கோவில்கள் உள்தெருவில் தஞ்சம் புகுந்தது. பல கடைகள் தயவில்லாமல் குப்பகள் ஆகப்பட்டன.

அச்சமயத்தில் மதுரை அரசமரமும் இதில் ஒன்றாகி விடுமோ என்று பயந்த பல பக்தர்கள் அவ்வாலயம் காக்க வேண்டும் என்று அவனையே வணங்கி வந்தனர். தற்போது காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோவில் தவிர மற்ற சிறிய, பெரிய கோவில்களனைத்தும் நடவடிக்கை மூலம் மறை(ற)ந்து போயின.



பல பள்ளி மாணவர்களின் இஷ்ட தெய்வமான இந்த விநாயகரின் ஆலயத்தில் சிவராத்திரி சமயத்தில் நடக்கும் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. திருமுருக. கிருபானந்தவாரியர் அவர்களின் சொற்பொழிவுகள் இவ்வாலயத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் டி.எம்.எஸ். போன்ற புகழ் பெற்ற பாடகர்களும், தமிழ், சௌராஷ்டிரா நாடகங்களும், அரங்கேறி வந்துள்ளது. பல கச்சேரிகளும், பட்டிமன்றங்களும், பல இசை வல்லுனர்கள் இங்கே வந்து இசைத்து அரசமரம் கணேச பெருமானின் அருள் பெற்றுள்ளனர், மேலும் திரு. தா.கு.சுப்ரமணியன், திரு. ராஜா போன்ற பேச்சாளர்கள் பலவிதமான தலைப்புகளில் எண்ணற்ற சொற்பொழிகளை ஆற்றியுள்ளனர். ஏ.ஜி.எஸ். ராம்பாபு போன்ற பல அரசியல் பிரபலங்கள் பலரும் இக்கோவிலில் வந்து வணங்கி வழிபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில் இங்கே மண்ணால் செய்து வணங்கப்படும் விநாயகர் இராமேஸ்வரம் கடலில் சென்று கரைக்கப்படுவது மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

அப்பேற்பட்ட மிகவும் வலிமைவாய்ந்த, புகழ்பெற்ற இக்கோவிலின் படம் சில நட்களுக்கு முன் இணையத்தில் கிடைத்தது. ஒரு பொங்கல் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிருந்தது.





சாதிமத பேதமில்லாமல் பல சமூக மக்கள் சென்று வழிபடும் மற்றுமொரு கோவில். மதுரை பேச்சியம்மன் கோவில் பல வேற்றுமதத்தவர்களும் இங்கே வந்து அம்மனை வேண்டி தொட்டில் கட்டுகின்றனர்.





இங்கே கட்டப்பட்ட தொட்டில் வீட்டிலும் விரைவில் ஆடுகிறது என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். மேலும் ஆண்குழந்தை வரம் வேண்டுவது இக்கோவிலின் முக்கியம்சமாகும். ஆடி மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாட்களிலும் இக்கோவிலில் கூட்டம் கூடுகிறது. நானும் கடந்த 1997-98ல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளேன்.

நாயக மன்னர் காலத்தில் பல கோவில்கள் உருவாகப்பட்டன, இன்று அவர்களது பெயர்களை சொல்லும் சான்றுகளாக நிமிர்ந்து நிற்க்கின்றன. அப்பேற்பட்ட கோவில்களுள் ஒன்று ஹயகிரீவர் கோவில். மதுரை கூடலழகர் கோவிலருகில் இருக்கும் இக்கோவில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் இக்கோவில் சிறிதானாலும் இதன் கீர்த்தி பெரிது. மஹாவிஷ்ணுவின் முதல் வடிவம், முதல் அவதாரமாக கருதப்படும் ஹயகிரீவர் தான் திருபதி ஏழுமலையானுக்கு அங்கே இடமளித்தவர் என்று ஸ்ரீநிவாச ஸ்தல புராணம் சொல்கிறது மேலும் அங்கே முதலில் அவருக்குதான் பூஜை வகைகள் செய்யப்படுகின்றன.

மதுரை தெப்பக்குளம். கடந்த 1990-1995 தெப்பகுளம் பகுதியில் இருக்கும் தியாகராஜ நன்முறை மேல்நிலை பள்ளியில் உயர்-பள்ளி படிப்பை படித்து வந்த போது காலையில் நடைபெறும் தெப்போற்ச்சவம் கண்டாலும் இரவில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளத்தையும், நடைபெறும் தெப்போற்ச்சவத்தையும் காண்பதுண்டு. இப்படத்தை கண்டபோது இது போன்ற பழைய நினைவுகள் கண்கள் முன் நிழலாடின.




நான் விளையாடி திரிந்த மதுரை, இது தான் என் எல்லை என்றிருந்த என்னை, உயர் பள்ளி படித்த சமயத்தில் என்னை முக்தீஸ்வரரின் மடியில் கொண்டு சென்றாள், அதுவும் மதுரை எல்லையில் தான் என்றாலும் இந்த எல்லையில் அல்ல, வேலையில் அமர்ந்ததும் முதலில் இந்த (படத்தில் உள்ள்) எல்லையில் தான்.

பிறகு நானிருப்பது தற்சமயம் இருப்பது தில்லி என்று பலருக்கும் தெரிந்த விஷயம்.

இதோ வெளிவீதீயை எல்லைகளாக உள்ளடக்கிய படம்





இப்படம் கடந்த டிசம்பரில் கிடைத்தது இதில் இருந்து தான் மீனாக்ஷி அம்மன் கோவிலை தனியாக எடுத்து பதித்திருந்தேன். இப்போது முழு படத்தையும் இங்கே பதிக்கிறேன். மதுரையின் சுற்றுலாஇடங்களில் சில முக்கிய இடங்களை இங்கே இப்படத்தில் பார்க்கலாம்.

1. மீனாக்ஷி அம்மன் கோவிலை மையமாக கொண்டு வடிவமக்கப்பட்ட மதுரை மாநகர்.
2. வெளி வீதீயை எல்லையாக கொண்ட படமாக இது உள்ளது. மேலும்,
a) திருமலை நாயகர் மஹால்,
b) மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள
மதுரை சென்ட்ரல் காய்கறி மார்கெட்
ஆவில் பூங்கா
c) தெற்காவணி மூலவீதியில் உள்ள மதுரை ஆதினம்
d) பிற கோவிலகளான ஜடாமுனீஸ்வரர் கோவில்
e) கூடல் அழகர் கோவில்
f) தெற்க்கு கிருஷ்ணன் கோவில்
g) வடக்கு கிருஷ்ணன் கோவில்
h) தென் திருவால சுவாமி கோவில்
i) டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடல் அழகர் கோவிலின் தெப்பக்குளம் (தற்சமயம் இதில் மழைநீர் தேக்கிவருகிறார்கள்)
j) தெற்கு மாசிவீதியில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற மசூதி,
k) வெளிவீதியில் உள்ள (+) சிலுவைவடிவில் அமைய பெற்ற புனித மரியன்னை தேவாலயம் (St. Mary’s Church).
3. படத்தில் இடப்பக்கம் உள்ள ரயில் தண்டவாளங்கள்.
4. ‘டி.வி.எஸ்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம். “TVS” என்று பொறித்திருப்பதும் படத்தில் தெளிவாக இருக்கிறது.
5. தெற்க்கு வெளிவீதியில் உள்ள காவலர் வீட்டு வளாகம்.
6. மேலும் உங்களின் விருப்பமான இடங்களும், மற்ற இடங்களும் இப்படத்தில் காண்டு கொள்ளலாம்.

Highlights of the Satellite photo,

1) Shows the Temple as Center
2) Shows the other major temples and places in Madurai within the area of Veli street like
a) Thirumalai Nayakar Mahal,
b) Central Market Avin Park Near to the Meenakshi temple
c) Madurai Adhinam in South Avani Moola street.
d) Other Temples also like Jadamuneeshwara temple
e) Koodal Azhagar Temple
f) South Krishnan Temple(South Masi Street)
g) North Krishnan Temple (North Masi Street)
h) Then Thiruvalavay temple
i) Koodalazhagar temple’s Teepakkulam in Townhall road
j) Masque in South Masi Street
k) Church in South Veli Street (in + “Cross” shaped building in right corner)

3) Rail way line in left
4) TVS work shop in bottom left with ‘TVS’ name in the top of the building.
5) Police quarters in South Veli Street
6) You can also spot your place or any other place in the picture.




மேலும் ஒரு படம் 1794 (1974 அல்ல)ல் தீட்டப்பட்ட ஒரு படம் வடபகுதியில் இருந்து தென் பகுதியை காணும் சமயத்தில் எப்படி தெரிந்தது என்று காட்டும் ஒரு அருமையான படம் மீனாக்ஷி அம்மன் கோவில் ஒரு புரமும், நாயகர் மஹால் மறுபுரமுமாக வைகையில் யானையும் ஒட்டகங்களும் கொண்டு கடக்கும் வியாபாரிகள், என்று இருநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த படம், உங்கள் பார்வைக்கு.





மர நிழலில் இளைப்பாறும் வழிப்போக்கர்கள், மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு உயர்ந்த கோபுரங்கள் மேலும் மூன்று சிறிய கோபுரங்கள், திருமலை மன்னரின் அரண்மனை(மஹால்), சாரை சாரையாய் காட்டு வழியில் குதிரைகளுடனும், ஒட்டகங்களுடனும் ந(க)டக்கும் வியாபாரிகள், வீரர்கள். தரையை தொட ஆவலாய் இருக்கும் ஆல விழுதுகள். தூ...ரத்தில் மதுரையை சுற்றி வளைக்க துடிக்கும் மலைகள் என 1858ல் வரையப்பட்ட இந்த படம், மிகவும் அழகாக இருந்தது.

காணகிடைக்காத படங்கள் உங்கள் பார்வைக்கு.

மருத தொடர் இத்துடன் நிறைவடைகிறது.

படத்தை சொடுக்கினால் பெரிதாகும். தங்களது கணினியில் சேமித்து வைத்து அதை மேலும் ‘ஜூம்’ செய்தால் ஓரளவுக்கு தெளிவாக காணாலம்.

Tuesday, January 8, 2008

மருத # 1. (மதுரை)

மருத.

இது ஒரு மீள்பதிவு. இதை கொஞ்சம் விஜய் பட பெயர் பாணியில் சொல்லி பாருங்க. பிறகே பதிவை தொடரவும். அப்போது தான் இப்பதிவின் சுவாரசியம், இதிலிருக்கும் படங்களை பார்க்கும் போது ஒரு தனி கிக் நமக்கு வரும்.




















மதுரை சென்ட்ரல் மார்கெட்டில் உள்ள பூ மார்கெட், காய்கறி மார்கெட், தெருவில் ஓடும் மாட்டு வண்டி.


அடுத்த பதிவில் கீழவாசலுக்கு அடுத்திருக்கும் அரசமரம் பிள்ளயார் கோவிலும், கூடலழகர் கோவிலருகில் இருக்கும் ஹயகிரீவர் கோவிலும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளம் மற்றும் வடக்கு வெளிவீதிக்கு அடுத்திருக்கும் பேச்சியம்மன் கோவில் படங்கள்.

Friday, January 4, 2008

இது ந‌ல்லதா? கெட்ட‌தா?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

புத்தாண்டு என்பது சில நல்ல தொடக்கங்களுக்கு அடிக்கோலிட வேண்டுமென்பது பொதுவான நோக்கம். வரும் ஆண்டில் நல்ல நிகழ்வுகள் அதிகம் வேண்டி விரும்புவது மக்களின் இயல்பு..இதில் தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு இன்னும் பல புத்தாண்டுகள்..உலகம் முழுவதும் பல்வேறு கால கட்டங்களில் அவரவர் சூழலுக்கேற்ப, நம்பிக்கைகளுக்கேற்பக் கொண்டாடப் படுகின்றன.

குடும்பத்துடன் ஒன்றாயிணைந்து கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, பட்டாசு வெடித்துக் கொண்டு, கேளிக்கைகளில் கலந்து கொண்டு, வழிபாட்டில் கலந்து கொண்டு....இப்படிக் கொண்டாட்டங்கள் பலவிதம்...


இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் மதுரைவாசி என்ற முறையில் மனதை நெருடிய சில விஷயங்கள்....


1. மும்பை சம்பவம்...

இது வெளியே வந்த செய்தி..இன்னும் வராத‌ செய்திகள் இது போல் எத்தனையோ..மதுரை விடுதி ஒன்றிலும் இது போல கேளிக்கைகளில் தம்பதியர் கலந்து கொண்டு கலக்கிய(?!) செய்தித்தாள் புகைப்படங்கள் மதுரை எங்கோ போகிறது என்று வயிற்றில் புளியைக் கரைத்தது.

2. மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக வந்த கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், பக்தர்களுக்கு உதவும் பொருட்டு(?????) பிற்பகலில் நடை சாத்தப்படாமல் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இனிவரும் கால‌ங்களில் பக்த்ர்களின் தேவைகளுக்காக 24 மணி நேரச் சேவைகள் தொட‌ங்குவர்களோ? மரபுகள் மீறும் புதுமைகள் செய்வார்களோ? விசேட நாட்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இச்சலுகை தொடருமா? தொடர்ந்தால் அவர்களும் பயன் பெறலாம்..சிறப்புக் காட்சிக்குச் சிறப்புக்கட்டணம் என்று நிர்வாகமும் வசூல் சாதனை செய்யலாம்.


3.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமிருக்கும் என்று தெரிந்திருந்தும் தரிசனத்துக்காக விசேட ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் ச‌ரிவரச் செய்யாததால் பணம் கொடுத்த பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நிலை..

வசூல் என்பது வருடமெல்லாம் தொடர வேண்டும் ...என்பதற்காகவோ?
இதில் யாரை நொந்து கொள்வது? நிர்வாகத்தையா? சிறப்பு தரிசனம் தேடிக் காசும் காலமும் விரயம் செய்த பக்தர்களையா?

இது ந‌ல்ல‌தா? கெட்ட‌தா?

(பி.கு: மதுரை சென்றதில் குறையும் நிறையும்....

குறை: அனுராதா அவர்க‌ளைச் சந்திக்க‌ முடியாம‌ல்லை போன‌து...உற‌வின‌ர்க‌ள் வ‌ருகையால் அவ‌ர்கள் என‌க்காக‌ ஒதுக்கிய‌ நேர‌த்தில் அவ்ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ இய‌லாம‌ல்போன‌து. தொலைபேசியில் ம‌ட்டுமே உரையாட‌ முடிந்த‌து.

திட்டமிட்ட‌ப‌டி ம‌துரை ந‌க‌ரின் புகைப்பட‌ங்க‌ள் எடுக்க‌ முடியாம‌ல் போனது.


நிறை: திரு.&திரும‌தி. சீனா அவ‌ர்க‌ள் எங்க‌ள் இல்ல‌த்துக்கு வ‌ந்து சந்தித்த‌து.)