Monday, January 14, 2008

மாட்டுப் பொங்கல் நினைவுகள்

மார்கழி மாதக் கடைசி வாரத்திலேயே பொங்கல் ஏற்பாடுகள் வீட்டில் களை கட்டத் துவங்கும்.
பொங்கலுக்கு என்னவோ முக்கியத்துவம் குறைவுதான்..மாடுகள் வீட்டில் இருந்ததால். எங்கள் வீட்டிலும் ஒரு காலத்தில் மாடுகள் இருந்தன.மைக்கண்ணி (கண்ணைச் சுற்றிக் கறுப்புப் பட்டைகள்..அதனால் இந்தப் பெயர்), மீனா,மைகண்ணியின் மகள்தான் மீனா..அப்புறம் அதன் வழி வந்த வாரிசுகள்.வீட்டிலிருப்போர் இஷ்டப்படிக் கன்றுக்குட்டிகளுக்குப் பெயர்கள் மாறும்..(காமராஜ்,சிவாஜி).

மாட்டுக் கொட்டாய் சற்றுத் தள்ளியிருக்கும். எனவே புதிதாகக் கன்றுக்குட்டி பிறக்கும் போது பால் குடி நேரம் தவிரப் பாதுகாப்புக்காக வீட்டுத் திண்ணையில் பார்வையில் படும்படிக் கட்டி வைப்பார்கள். பாவம் எங்களிடம் மாட்டிக்கொள்ளும்..மான் குட்டியைப் போல் பிரவுன் நிறத்தில் காணப்படும் ஜூனியர் மீனா..இதற்கு ஸ்ரீதேவி,(நான் வைத்த பெயர்) சரோஜா தேவி(சித்தப்பா) என்று இரண்டு பெயர்கள்.. மண்ணைத் தின்னக் கூடாது என்பதால் வாய்க்கூடு போட்டிருப்பார்கள்.

அவற்றைப் பார்த்துக் கொள்ளும் உதவியாளர்களும் உண்டு. தினசரி வந்து போவார்கள். கோப்பி தான் தாயார் பெயர். அவர்கள் மகன்கள் ஆத்தாங்கரை, அழகர்..மருமக்கள் சீனியம்மா,(சீனி என்று கூப்பிடுவோம்) மற்றும் மருதாயி. நீள நீளமாய் வளர்ந்த புற்கள் சீமைப் புல் என்று பெயர், தினம் காலை கொண்டு வருவார் கூழு மாமா. பால் கறக்கும் வேலை செய்பவரும் அவரே. இது தவிர வைக்கோல், புண்ணாக்கு என்று உணவு வகைகள். தினமும் காலை 10 மணியளவில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பும் மைக்கண்ணி குடும்பம். மேய்ச்சல் பொறுப்பும் கூழு மாமாவுக்குத்தான்.

லிட்டர் லிட்டராய்ப் பால் கறக்கும் மாடுகள். வீட்டுத் தேவை போக விற்பனைக்கு. பால் விற்றுச் சிறுவாடு சேர்த்து வைக்கும் அப்பத்தா. அவர்கள் இடுப்பில் தொங்கும் சுருக்குப் பைக்காய் அவர்களை ஐஸ் வைத்துப் பேசிக் காசு பிடுங்க நாங்கள் ஒரு கூட்டம்.

மாட்டுப் பொங்கல் அன்று கொட்டாய் சுத்தம் செய்து சாணி தெளித்து முடித்த பின் அந்த ஈரம் கூடக் காயும் முன் கோலம் போட அவசரம்..அந்த வயதில் கோல இழைகள் அப்படியும் இப்படியும் கோணிக் கொண்டு இருக்கும் என்பதால் வீட்டு வாசலில் கோலம் போட அனுமதியில்லை. கோலம் போடக் கற்றுக் கொண்டதே மாட்டுக் கொட்டாயில்..மாட்டுப் பொங்கலில்தான்.

சின்னச் சின்னதாய்க் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்கையில் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாய்ப் பொங்கல் பொருட்கள் கொட்டாய்க்குக் கொண்டு வருவார்கள் அப்பத்தா.."எதயாவது ஒழுங்கா எடுத்து வைக்கிறாளுகளா.." என்று அவ்வப்போது வசவு முனகல்கள் மருமகள்களுக்காய். இரும்பு அடுப்பில் அரிசி மாவை வரிசை வரிசையாய் ஒழுக விட்டுப் போடும் மாக்கோலம், பொங்கல் வைக்கும் இடத்தில் கட்டம் கட்டிச் செம்மண் கோலம், கரும்புத் துண்டுகளில் மாலை, கட்சி வண்ணப் பெயிண்ட் பூசிய மாட்டுக் கொம்புகள் (இதற்கென்று ஓவ்வொரு கட்சியும் அவர்கள் கொடி வண்ணப் பெயிண்ட் அடிப்பார்கள்..வீட்டில் தாத்தாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அதற்கொரு சண்டை..பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது ஜனதா கட்சி வண்ணங்கள் தான் எங்கள் மாட்டுக் கொம்புகளை அலங்கரிக்கும்), கொம்பைச் சுற்றிக் கட்டப்பட்ட புதுத் துண்டு இப்படியாய் ஏற்பாடுகள் களைகட்டும்.

பாவம், மைக்கண்ணி குடும்பம் காலையிலிருந்து பொங்கல் சாப்பிடும் வரை பட்டினிதான். பிற்பகல் மூன்று மணியளவில் நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் பானை அடுப்பில் ஏறும். பால் கலந்த தண்ணீர் பொங்குகையில் அரிசி போடுவார்கள். குலவை கொட்டச் சொல்வார்கள். பொங்கல் தயாராகும் நேரம் கூழு மாமா வருவார். சிறு துண்டுகளாகப் பிரித்து வைத்த வாழை இலைகளில் ஒரு கரண்டிப் பொங்கல் வைத்துப் பூஜை முடிந்த பின் அனைவருக்கும் கொடுப்பார்கள் . பின் எல்லோரும் ஒரு பாத்திரத்தில் கை விட்டுக் கழுவ வேண்டும். அந்தப் பாத்திரத்தில் மாங்குலையைத் தொட்டு எடுத்த நீர்த்துளிகளை எல்லா இடங்களிலும் தெளித்து "பொங்கலோ பொங்கல்" என்று கூழு மாமாவைப் பின் தொடர்ந்து நாங்களும் கூக்குரலிடுவோம்.

பின் மாடுகளை ஒரு 5 நிமிடம் சிறு உலா கூட்டி கொண்டு போவார் கூழு மாமா. அவை திரும்பி வருவதற்குள் சாணியைப் பரப்பி நடுவில் குழியிட்டு அதில் நெருப்புத் துண்டங்களை வைத்துக் குறுக்கே ஓர் உலக்கையை வைப்பார்கள். அதைத் தாண்டித்தான் அவை
வர வேண்டும். திருஷ்டி கழியுமாம்.

இன்று நினைத்தாலும் பசுமையாய் மனதை வருடும் நினைவுகள். பொங்கலை விட அதிகம் ரசித்து அனுபவித்தது மாட்டுப் பொங்கல்தான். அனைவருக்கும் பொங்கல், புத்தாண்டு, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.

6 Comments:

அறிவன் /#11802717200764379909/ said...

அது என்னங்க மாட்டுப் பொங்கல் பத்தி மட்டும் ஸ்பெஷலா எழுதி இருக்கீங்க?
(உள்குத்து எதுவும் இல்லைலைலைலைலைலை.......)

பாச மலர் said...

ஒரு உள்குத்தும் இல்லீங்க..பொங்கல் பத்தி என் பெட்டகம் பதிவுல போட்டதால இங்கே போடலை.

அதுவும் பொங்கலை விட நான் எப்பவும் ரசித்தது மா.பொ தான்..

cheena (சீனா) said...

பாசமலர் - அருமை - இளமைக்கால மலரும் நினைவுகள் - மாட்டுப்பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சிகரமான நாட்கள். ரசித்தேன். நன்று. வாழ்த்துகள்.

சுந்தரவடிவேல் said...

நல்ல இடுகை.

ஜீவி said...

வீட்டுப் பிராணிகள் எல்லாமே வீட்டு குடும்ப உறுப்பினர்கள் தாம். குழந்தைகளுக்கு சொக்காய் போட்டு அழகு பார்க்கிற மாதிரி,
அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அழகு பார்க்கிறோம். நம் சந்தோஷத்திற்காக அவை வர்ணம் தீட்டிக்கொள்ளும் அழகே அழகு!
மைக்கண்ணியின் குடும்ப அறிமுகம் அற்புதம்!
எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.
நிரம்பவும் ரசித்தேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மனிதர்களின் பேரை விட மாடுகளின் பேர் சூப்பர் !!