Monday, January 21, 2008

இதற்குப் போய் வெட்கப்படலாமா?

ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. முன் அறிமுகம் இல்லாததால் வழக்கமான குசலம் விசாரிப்பில் பேச ஆரம்பித்தோம். பெயர்,இருக்கும் நாடு, இப்படிப் போனது பேச்சு. சொந்த ஊர் சென்னை என்றார்கள் அந்தப் பெண்.

சற்று நேரம் கழித்துக் கடைக்குப் போயிருந்த என் கணவரும், அந்தப் பெண்ணின் கணவரும் வந்தனர். "இவர்களும் மதுரைப் பக்கந்தான்.." என்றார் கணவர். நான் சரி,அந்தப் பெண் தன் ஊரைத்தான் சென்னை என்று சொன்னார் போல என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் பெண்ணின் கணவர், "எங்க ஊர் சேலம். என் மனைவி ஊர்தான் மதுரைக்குப் பக்கத்தில் மேலூர்..சென்னையில் செட்டிலாகப் போகிறோம்" என்று பேச்சுவாக்கில் சொன்னதும் அந்தப் பெண் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே.

அப்படி ஒரு அவமான உணர்வு அவர் முகத்தில். கணவர் தகவல் மாற்றிச் சொன்னதாலா, அல்லது ஊர் மேலூர் என்பதலா...புரியத்தான் இல்லை.

எனக்குப் பழக்கமான இன்னுமொரு குடும்பம். அவர்களும் சென்னை என்றுதான் கூறினார்கள் முதலில். பின் அவருடைய அப்பா, அம்மாவைச் சந்தித்த போது அவர்கள் சொந்த ஊர் கோவில்பட்டி என்று தெரிய வந்தது. அவர்கள் சென்னையில் வீடு இருத்ததால், எதிர்காலத்தில் சென்னைவாசியாகும் எண்ணமிருந்ததால் இப்படிக் கூறியிருக்கலாம்.

இன்னுமொருவர், தகப்பனார் வேலை நிமித்தம் திருச்சியில் பள்ளியிறுதி வரை படித்து விட்டு, கல்லூரிப் படிப்பைத் தொடரும் நேரத்தில் சென்னைக்கு வந்தவருக்கும் சென்னைதான் சொந்த ஊராகிவிட்டது.

இன்னும் இது போல் சில அனுபவங்கள்... சொந்த ஊரைச் சென்னை அல்லது ஏதாவது ஒரு பெரு நகரம் என்று சொல்லும்போது இருக்கும் மகிழ்ச்சி அசல் சொந்த ஊர் பெயரைப் பொறுத்தவரை அவமானம் ஆகிவிடுகிறது .அதிலும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம்.

இதற்கு விதிவிலக்காய் இருப்பவர்களும் பலருண்டு.

ஏன் இப்படி? கிராமம் என்பதில் என்ன அவமான உணர்வு? சென்னை அல்லது
பெருநகரம் என்பதில் அப்படியென்ன பெருமை? வாழ வைத்த ஊராக இருக்கட்டும், அல்லது குடிபெயரப் போகும் ஊராக இருக்கட்டும்..பெருமைப் படுவதில் தவறில்லை. அதற்காகப் பிறந்த ஊர்ப் பெயரைச் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?

சென்னையைச் சொந்த ஊராகக் கொண்டாடும் எத்தனை பேர் அங்கே பல தலைமுறைகளாய் வாழ்ந்து வருகிறார்கள்?

அதிலும் வெளிநாட்டு இந்தியர் பலர் வீடு வாங்குவது, வருங்காலத்தில் குடி போகப் போவது எல்லாம் சென்னை போன்ற பெரு நகரங்களில்தான். இது அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றது. அதற்காகச் சொந்த ஊரை மறக்க வேண்டுமா? இவர்களே இப்படி என்றால் குழந்தைகளை என்ன சொல்வது?

குடியுரிமை பெற்ற வெளிநாட்டு இந்தியர்கள் தம் சொந்த நாடு என்று வசிக்கும் நாட்டைச் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.

யாதும் ஊர்தான்...என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் சொந்த ஊர்தானே!
வேறு எங்கோ செட்டில் ஆனாலும் ஊர் பெயரை மறக்கலாமா? இல்லை அதைச் சொல்லத்தான் வெட்கப்படலாமா?

39 Comments:

Anonymous said...

நம்மள எங்கே கொண்டுபோய் விட்டாலும், நாம சொல்லாமலேயே டபக்குனு நீ மதுரக்காந்தானேன்னு சொல்லீர்றாய்ங்க....

நாங்களும் சான்ஸ் கெடச்சா, நான் மதுரக்காரன் தெரியும்லன்னு படங்காட்டீருவோம்.

பிறந்த ஊர் தொப்புள்கொடி மாதிரிடான்னு எங்க அம்மாச்சி சொல்லும்...அது மெய்யான மெய்...

சின்னப் பையன் said...

மிகவும் சரி.

நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். என்னை சொந்த ஊர் கேட்பவர்கள், சென்னை என்றவுடன், சென்னை யாருக்கும் சொந்த ஊர் இல்லை. உன் அப்பா எந்த ஊர் என்பார்கள்.

உடனே நான் கேட்பது - நீங்கள் என் ஊர் கேட்டீர்களா அல்லது என் அப்பா ஊர் கேட்டீர்களா..

உதாரணத்திற்கு என் பெயர் கேட்டால், என் பெயர்தானே சொல்லவேண்டும்... அதை விட்டு என் அப்பா பேர் சொல்ல முடியுமா?

இன்றும் கூட "திருவல்லிக்கேணி" ( நான் பிறந்து 25 ஆண்டுகள் வாழ்ந்த இடம்) என்றவுடனே, அப்படியே உணர்ச்சி வசப்பட்டு விடுவேன்....

நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//////இன்னும் இது போல் சில அனுபவங்கள்... சொந்த ஊரைச் சென்னை அல்லது ஏதாவது ஒரு பெரு நகரம் என்று சொல்லும்போது இருக்கும் மகிழ்ச்சி அசல் சொந்த ஊர் பெயரைப் பொறுத்தவரை அவமானம் ஆகிவிடுகிறது .அதிலும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம்.///////////

குறுகிய சிந்தனை இருப்பவர்கள் வேண்டுமானால் இப்படி சொல்லிக் கொள்வதில் பேருமை கொள்ளலாம்...
உண்மையில் பிறந்த ஊர் என்பது பிறந்ததிலிருந்து சேகரித்த நம் அனுபவங்களின் தொகுப்பு..அதைச் சொல்ல எதற்கு வெட்கப்படவேண்டும்?

நீங்கள் சொன்ன உதாரணத்தில் சென்னையில் பிறந்த ஒருவர் 20 வருடங்கள் சிங்கப்பூரில் வாழ்ந்துவிட்டால் தன் ஊர் சிங்கப்பூர் என்றா பெருமையுடன் சொல்வார்கள்?
உண்மையில் அதில் பெருமைப்பட ஏதுமில்லை..

pudugaithendral said...

ஆமாம் நீங்கள் சொல்வது சரி. சிலர் தங்கள் சொந்த ஊரைப் பற்றி சொல்ல வெட்கப்படுவார்கள். எங்கள் ஊரைக் குறித்து (வரலாற்றில் தவறாக அர்த்தம் செய்து கொண்டனால் வந்த பெயர்.)இருக்கும் பெயருக்கு எல்லாம் வெட்கப் படாமல் சொந்த ஊரு புதுகை என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன்.

வரலாற்றில் சரியாக சொல்லப்படாததால், மருது சகோதரர்களைக் காட்டிக் கொடுத்த ஊர் என்று கிண்டலாக சொல்வார்கள். உண்மை அதுவல்ல என்பது வரலாற்றர்கள் அறிவார்கள்.

குமரன் (Kumaran) said...

பாசமலர்.

நீங்க சொன்ன மாதிரி சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் என் அனுபவம் வேறு மாதிரி இருக்கிறது. அமெரிக்காவில் வாழ்ந்த இந்த பத்து வருடங்களில் பார்த்த பழகிய தமிழர்கள் யாருமே சொந்த ஊரைச் சொல்லத் தயங்கியதில்லை. சில நேரம் மதுரை பக்கத்துல, கோயம்புத்தூர் பக்கத்துல, திருநெல்வேலி பக்கத்துல என்று முதலில் சொல்வார்கள். அப்புறம் எந்த ஊர்ன்னு மீண்டும் கேட்டால் சொந்த ஊரைச் சொல்லுவார்கள். பெரும்பாலும் அந்த ஊர் எனக்குத் தெரியாத ஊராகத் தான் இருக்கும். அதனால் தான் அவர்கள் முதலில் 'பக்கத்துல' என்று சொல்லியிருக்கிறார்கள். நான் மதுரை என்று சொன்ன உடன் பல பேர் 'ப்ராப்பர் மதுரையேவா?' என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நீங்கள் சொன்னவர்களைப் போல் பல பேரைப் பார்த்திருப்பார்கள் போல. அதனால் தான் நான் மதுரை பக்கத்தில் ஏதோ ஒரு ஊரில் பிறந்துவிட்டு பெருமைக்காக மதுரை என்று சொல்கிறேன் என்று நினைத்துவிட்டார்கள்.

சில நேரம் வேறு மாநிலக்காரர்கள் கேட்கும் போது தமிழ்நாடு என்றும் சொல்வதுண்டு; மதுரை என்றும் சொல்வதுண்டு. பெரும்பாலும் மதுரை என்று சொல்லிவிட்டு அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த அளவில் இந்திய வரைபடத்தில் மதுரை எங்கே இருக்கும் என்று மனத்தில் தேடுவதை அவர்கள் கண்களில் காண்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. :-) அப்போது அவர்கள் கண்கள் ஒரு சில நொடிகள் அப்படியே மிதக்கும். :-)

பாச மலர் / Paasa Malar said...

சொக்கா,

அது!

சின்னப் பையன்,

சரிதான் நீங்கள் சொல்வது. ஆனாலும் அப்பா பெயரைச் சொல்லும் போது பெருமையாக வேண்டாம், சாதாரணமாகச் சொல்வதுதானே சரி..வெட்கப்பட வேண்டிய அவசியமில்லையே..

25 வருட வாழ்க்கைக்கு இப்படி உணர்வது நியாயம்..2 மாத வாழ்க்கைக்கே பீலா விடுபவர்கள்தான் பதிவின் இலக்கு..

அறிவன்,

முற்றிலும் சரி..பெருமைப்படுவோர் சதவிகிதம் குறைவேதான் என்றாலும் இருக்கிறார்களே அப்படி..

புதுகை,

வரலாற்றில் நல்ல குறிப்புகளும் உங்கள் ஊரைப் பற்றி இருக்குமல்லவா?

குமரன்,

வேறு நாட்டாரிடம் இந்தியா என்றும், வேறு மாநிலத்தாரிடம் தமிழ்நாடு என்றும்சொல்கிறோம்..தமிழ்
நாட்டுக்குள்ளே சிலர் எப்படிச் சொல்கிறார்கள்..

நீங்கள் சொல்வது போல் மதுரை பக்கத்துல என்று அடையாள நோக்கமாய்ச் சொல்வது உண்டு..நான் குறிப்பிடுவது அவர்களையல்ல..

cheena (சீனா) said...

உணமை மலர், பலரும் சொந்த ஊர் கிராமமாக இருந்தால் சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறார்கள். என்ன செய்வது.

Aruna said...

வெளி மாநிலத்திலிருந்தால் தமிழ் நாடு என்றும்,வெளிநாட்டில் இருந்தால் இந்தியா என்றும் சொல்லும்போது கண்கள் மின்னத்தான் செய்யும்....பக்கத்தில என்று சொல்வதற்கு வெட்கத்தை விட இவர்களுக்கு என் ஊர் பெயர் தெரிந்து இருக்குமா என்ற தவிப்பு கூடக் காரணமாயிருக்கலாம் பாச மலர்!
அன்புடன் அருணா

குசும்பன் said...

என்னை சென்னையில் இருக்கும் பொழுது சொந்த ஊர் எது என்று கேட்டால் படிச்ச ஊர் தஞ்சையை சொல்வது வழக்கம், அல்லது திருவாரூர் பக்கம் என்பேன் அந்த பக்கத்து ஆட்களாக இருந்தால் ஊர் பேரை கரெக்டாக சொல்வேன். சிறு கிராமம் தெரியாது என்பதாலே ஒழிய வேறு கிராமம் என்றால் அவமானம் அப்படி என்று எல்லாம் இல்லை, தஞ்சையில் படிக்கும் பொழுது யாரும் கேட்டால் சொந்த ஊர் பேரை சொல்லுவேன்.

இப்பொழுது துபாயில் இருக்கும் பொழுது யாரும் கேட்டால் சென்னை அல்லது தஞ்சை என்பேன்! பின் அந்த பக்கம் தான் அவர்கள் என்றால் விளக்கமாக சொல்வேன்.

மங்கை said...

சொந்த ஊரை சொல்லும் போது ஏற்படும் திருப்தி வேறெதிலும் கிடைப்பதில்லை...

நான் பேசினாலும் கோயமுத்தூர் காரின்னு தெரிஞ்சுறும்..:-))

G.Ragavan said...

சொந்த ஊரச் சொல்றதுல எதுக்கு வெக்கம். தாராளமாச் சொல்லனும்.

ஆனா எங்க சொல்றோம்னும் இருக்கு. வெளிமாநிலம்னா தமிழ்நாடும்போம். வெளிநாடுன்னா இந்தியாம்போம். தமிழ்நாடுக்குள்ளைன்ன பக்கத்துல உள்ள பெரிய ஊரச் சொல்வோம். அந்தப் பெரிய ஊருன்னா உள்ள ஊரச் சொல்வோம்.

Anonymous said...

நான் பிறந்த ஊர் xxxxxxx, அது மதுரைக்கருகில் உள்ள கிராமம்/சிறு நகரம் என்றுச் சொல்லலாமே.

என் ஊரை அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை தானே.

எல்லோருமே அறிந்திருக்கும் சென்னையில் தான் அனைவரும் பிறக்க வேண்டும் என்றால், தமிழகம் என்ன ஆவது..

Geetha Sambasivam said...

எங்கே போனாலும் புகுந்த வீட்டுக் கிராமத்தையும் (அதெல்லாம் பதிவிலே கூட வந்திருக்கே), பிறந்த வீட்டுக் கிராமத்தையுமே சொல்லிப் பழக்கம் நமக்கு, இப்படியும் இருக்காங்கனு உங்க மூலம் தான் புரியுது! :( இதில் என்ன வெட்கம்? அவமானம்?
"பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே!"

manjoorraja said...

அதான் என் பெயருடன் ஊரையும் ஒட்டியிருக்கேன்.

மஞ்சூர்

பாச மலர் / Paasa Malar said...

சீனா சார்,
அதுதான் ஏன் என்று புரியவில்லை

அருணா,

அப்படி இல்லாத சிலர்தான் நான் குறிப்பிடுபவர்கள்..

குசும்பன், ராகவன்,

அடையாள நிமித்தம் என்பது சரிதான்..நீங்கள் சொல்வது ஒரு கோணம்

பாச மலர் / Paasa Malar said...

அனானி,

பெருநகர்ம் பேரைச் சொல்லட்டும்..கூடவே பிறந்த ஊரையும் மறக்காமலிருந்தாலே போதும்..

கீதா,

ஆம் கீதா..இப்படிப்பட்ட சிலரைச் சந்தித்ததால்தான் இந்தப் பதிவு..

பாச மலர் / Paasa Malar said...

மங்கை,

சில அடையாளங்கள் தரும் சிறு மகிழ்வு உணர்வுகள்..அருமைதான்

கருப்பன் (A) Sundar said...

ஒரு சமயம் நான் என் கல்லூரி நண்பன் வீட்டிலிருந்தேன், அப்போது அவனது பள்ளிப்பருவ நண்பன் வந்தான் இருவரும் அறிமுகம் செய்து கொண்டபின். நீ எந்த ஊர் என்று கேட்டான் நான் மதுரைக்கு பக்கத்தில்... என்றேன்... "மதுரைக்கு பக்கத்தில் எங்கே" என்றான் அவன். நான் சோழவந்தான் என்றேன் (பட்டனத்திலிருப்பவனுக்கு சோழவந்தானெல்லாம் தெரியவா போகிறது என்று நினைத்தேன்). அவன் விடாப்பிடியாக சோழவந்தானில் எங்கே என்று கேட்டான். "சோழவந்தானுக்கு பக்கத்தில் விக்கிரமங்கலம்" என்றேன். அவன் சிறு புண்ணகையினூடே "விக்கிரமங்கலத்தில் எங்கே?" என்றான். எனக்கு எரிச்சல்வந்தது... என்னடா இவன் இப்படி படுத்துகிறான் என்று. இருந்தாலும் புதியவன் என்பதால் "நடுவூர்" என்றேன் எரிச்சலுடன்.

நடுவூரில் "சிவப்பாயி" தெரியுமா என்றான். அதிர்ச்சியில் என் இருதய துடிப்பு ஒரு வினாடி நின்றேவிட்டது. "அது எனது சின்ன அப்பத்தா" என்றேன் ஆச்சர்யம் விலகாமல். நான் அவரது மகன் பிள்ளை பேரன்தான் என்றான்... அட அவன் என் அண்ணன்....!!! நான் பெரும்பாலும் விடுதியில் தங்கி படித்ததனால் எனக்கு நிறைய சொந்தக்காரர்களை தெரியாது.

அன்றிலிருந்து யாராவது உன் ஊர் என்ன என்றால் "நடுவூர்" என்றே ஆரம்பித்துவிடுவேன் ;-)

பாச மலர் / Paasa Malar said...

மஞ்சூர் ராசா,

நன்று..ஊரின் மீது நீங்கள் கொண்ட பற்று..

பாச மலர் / Paasa Malar said...
This comment has been removed by the author.
சுரேகா.. said...

சொந்த ஊரை பட்டுன்னு சொல்றதுதாங்க சரி!

ஜீவி said...

பிறந்த ஊரும், பிறந்த வீடும், துள்ளித்திரிந்த பருவமும், மனசோடு சம்பந்தப்பட்ட விஷயமாகி, வளர்ந்து ஆளாகிய பின்னும் சென்று அந்த இடத்தைப் பார்க்கத்தூண்டி மகிழ்ச்சி ஊட்டுபவை. அதைச் சொல்வதில் எந்தத் தயக்கம்? சொல்லப் போனால் பெருமை தான். நான் தமிழகத்தில் பல ஊர்களில் வசித்ததால், புது நண்பர்கள் கிடைக்கும் பொழுது அவர்கள் ஊரைப் பற்றி விசாரித்து,படித்த அல்லது பார்த்த அந்த ஊரின் சிறப்புகளைச் சொன்னால், அவர்கள் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

கருப்பன், சுரேகா, ஜீவி சார்,

கருத்துக்கு நன்றி

Unknown said...

நான் சொல்ற ரெண்டு ஊருமே... விஷயம் தெரிஞ்சவங்களுக்கு கொஞ்சம் பயமாத்தான் இருக்கும் :)
அந்த ரெண்டு ஊர் : மன்னார்குடி மற்றும் பரவாக்கோட்டை. நான் தஞ்சாவூருல பொறந்த்ததுனாலேதான் என் ஐடி தஞ்சாவூரான்ன்னு வச்சுகிட்டேன். சொந்த ஊர் சொல்றதுல என்ன அவமானம்? வெட்கம்?

குசும்பன் மற்றும் குமரன் சொலவ்துபோல் ஒரு கோணம் இருந்தாலும், சொந்த ஊர் தெரிய வரும்போது ஏன் முகம் மாறவேண்டும்? இது, நாகரீகப் போலித்தனம்.

Divya said...

பாச மலர்,
சிந்திக்க வைக்கும் பதிவு!

சொந்த ஊர் கிராமமாக இருக்குமாயின், நாகரிகம் கருதி அதனை சொல்ல தயங்கும் பலரை இங்கு சந்தித்திருக்கிறேன்.

அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலர், தாங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை சக இந்தியர்களிடம் கூறுவதற்கு தயங்கும் போது......சொந்த ஊர் கிராமம் என்றால் சொல்லிவிடுவார்களா என்ன?

அருமையான பதிவு பாச மலர்!

பாச மலர் / Paasa Malar said...

தஞ்சாவூரான்,

ஆம்..இது ஒரு வகைப் போலித்தனம்தான்..

திவ்யா,

//அயல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலர், தாங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை சக இந்தியர்களிடம் கூறுவதற்கு தயங்கும் போது......சொந்த ஊர் கிராமம் என்றால் சொல்லிவிடுவார்களா என்ன?//

இது வேற இருக்கா?

சிவமுருகன் said...

எல்லாருக்கும் உள்ள ஒரு தேவையில்லாத கூச்சம் பற்றி சொல்லிருக்கீங்க. நான் தில்லிவிட்டு வந்தாலும் அப்பப்போ அது நம்ம ஊரு என்று சொல்லிக்கொள்வேன்.

ஆனா பாருங்க நம்ம சொந்த கொண்டாற இந்த ஊரூ நம்ம ஊரா? கொஞ்சம் யோசிச்சி பாருங்க.

குமரன் இந்த பீன்னூட்டத்த பார்த்தா ஏன் பூடகமாக பேசுரீங்கன்னுகேப்பாரு! :)

இருந்தாலும் யோசிச்சி பாருங்க! :-).

பாச மலர் / Paasa Malar said...

//நான் தில்லிவிட்டு வந்தாலும் அப்பப்போ அது நம்ம ஊரு என்று சொல்லிக்கொள்வேன்//

இது சரிதான்..கொஞ்ச நாள் இருந்தாலும், கொஞ்ச காலம் இருந்தாலும் அந்தப் புதிய ஊருடனும்/நாட்டுடனும் நமக்கு ஒரு பற்று வருவது உண்மைதான்..

//ஆனா பாருங்க நம்ம சொந்த கொண்டாற இந்த ஊரூ நம்ம ஊரா? கொஞ்சம் யோசிச்சி பாருங்க.//

//குமரன் இந்த பீன்னூட்டத்த பார்த்தா ஏன் பூடகமாக பேசுரீங்கன்னுகேப்பாரு! :)
இருந்தாலும் யோசிச்சி பாருங்க!//

எந்த ஊரைப் பற்றி(மதுரை/தில்லி)..எந்தக் கோணத்தில் சொல்கிறீர்கள் என்று சரியாகப் புரியவில்லை..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இதற்கு விதிவிலக்காய் இருப்பவர்களும் பலருண்டு//


நானும் இந்த விதிவிலக்கில் சேர்ந்துகொள்கிறேன்.

இன்னொரு விடயம். நம் தமிழர்களையோ அல்லது தமிழ்நாட்டு மக்களையோ கண்டால் சரியான இடத்தைச் சொல்லலாம்/வேண்டும், பந்தா கூடாது. பந்தா தமிழர்களின் முகவரியை அழித்துக்கொண்டு இருக்கிறது.

வேற்று இனத்தவர்களிடமோ/வெளிநாட்டுக்காரர்களிடமோ பெரிய பெரிய நகரத்தைச் சொன்னால் தான் அவர்களுக்குத் தெரியும்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//இன்னும் இது போல் சில அனுபவங்கள்... சொந்த ஊரைச் சென்னை அல்லது ஏதாவது ஒரு பெரு நகரம் என்று சொல்லும்போது இருக்கும் மகிழ்ச்சி அசல் சொந்த ஊர் பெயரைப் பொறுத்தவரை அவமானம் ஆகிவிடுகிறது .அதிலும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம்.

இதற்கு விதிவிலக்காய் இருப்பவர்களும் பலருண்டு.//

நானும் இந்த விதிவிலக்கில் சேர்ந்துகொள்கிறேன்.

இன்னொரு விடயம். நம் தமிழர்களையோ அல்லது தமிழ்நாட்டு மக்களையோ கண்டால் சரியான இடத்தைச் சொல்லலாம்/வேண்டும், பந்தா கூடாது. பந்தா தமிழர்களின் முகவரியை அழித்துக்கொண்டு இருக்கிறது.

வேற்று இனத்தவர்களிடமோ/வெளிநாட்டுக்காரர்களிடமோ பெரிய பெரிய நகரத்தைச் சொன்னால் தான் அவர்களுக்குத் தெரியும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

பாச மலர் / Paasa Malar said...

நன்றி ஜோதிபாரதி..விதிவிலக்காய் அநேகர் இருப்பது கண்டு மகிழ்ச்சியே..

அடையாள நிமித்தம் மாற்றிக் கூறுவது என்பது வேறு..இது வேறு விதம்..

என் அனுபவத்தில் நான் கண்ட சிலரைப்ப் பற்றி இங்கே கூறியிருக்கிறேன்.

Anonymous said...

//மதுரைகாரர்கள்//
மதுரைக்காரர்கள்

//உள்ளூர் செய்திகள்//
உள்ளூர்ச் செய்திகள்

//வகை//
வகைகள்

தமிழ் வளர்த்த மதுரை ;)

பாச மலர் / Paasa Malar said...

அனானி,

நன்றி..பிழைகள் திருத்திவிட்டோம்..

Unknown said...

எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்

எழுதுவோரைத் தூண்டிக்கொண்டே இருக்கிறீர்கள்

தமிழன்னையின் முத்த முத்திரை உங்கள் முகத்தில் இருக்க வேண்டுமே!

malaysiangroup said...

அய்யா,நான் பிறந்தது மஞ்சூர்,கைக்குழந்தையாக இருக்கும்போதே மதுரைக்கு வந்து விட்டோம்,மஞ்சூர் எப்படி இருக்கும்னு கூட தெரியாது இன்னைக்கு வரைக்கும்...பாசமலர் பதிவை படிச்சதிலிருந்து குழம்பிவிட்டேன்....நான் இவ்லோ நாள் மதுரைக்காரன்னு நினைச்சுட்டு இருந்தேன்...!!!,யாராவது கொஞ்சம் விள்க்கம் கொடுங்கப்பா...நா மதுரைக்காரனா ??? இல்ல மஞ்சூர்காரனா ???

துளசி கோபால் said...

கேக்கறவங்களைப் பொறுத்துத்தான் எந்த ஊர்னு சொல்லவேண்டி இருக்கு.

வட இந்தியர்களுக்கு நாங்கள் மத்ராஸி.

வெள்ளைக்காரருக்கு நாங்கள் இண்டியன்ஸ்.

நம்ம தமிழ்க்காரர்களுக்கு?

எங்க மாமியார் வீடு போடிநாயகனூர்ன்னு சொல்லிட்டு , என்னோட ஊர் னு ஒண்ணும் தனியா இல்லை. நாடோடின்னு சொல்லிக்குவேன்.

சொந்த ஊர்னு சொன்னால் பிறந்து வளர்ந்த ஊர் என்ர கணக்கில் நான் பிறந்தது மட்டும் கரூர். வளர்ந்தது 10 வயசுவரை மதுரை மாவட்டம் .

இப்பத்துக் கணக்குலே 26 வருசமா அயல்நாடு. அதிலும் 20 வருசம் இங்கே கிறைஸ்ட்சர்ச்,நியூஸி.

நான் எது என் ஊர்னு இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன்.

பாச மலர் / Paasa Malar said...

malaysiangroup,

//நா மதுரைக்காரனா ??? இல்ல மஞ்சூர்காரனா ???//

என்னைப் பொறுத்தவரை நீங்க நம்ம ஊர்தான்..உங்களுக்கும் அந்த எண்ணம்தானே..

மஞ்சூர்னு சொல்றீங்களே..மறக்காமல்...
அது!!!
(ச்சின்னப்பயன் பின்னூட்டம் படித்துப் பார்க்கவும்..உங்களைப்போல்தான்)

பாச மலர் / Paasa Malar said...

துளசி மேடம்,

//கேக்கறவங்களைப் பொறுத்துத்தான் எந்த ஊர்னு சொல்லவேண்டி இருக்கு.//

இது அடையாள நிமித்தம்..

//சொந்த ஊர்னு சொன்னால் பிறந்து வளர்ந்த ஊர் என்ர கணக்கில் நான் பிறந்தது மட்டும் கரூர். வளர்ந்தது 10 வயசுவரை மதுரை மாவட்டம் .//

பெருமையா ஏதோ ஒரு பெருநகரம் பேரைச் சொல்லாமல் பல ஊர்களின் பெயர்களைக் கூறுகிறீர்களே..சென்னை, பெங்களூரு, மும்பை அப்படின்னு சொன்னால்தானுங்களே மரியாதை..?

//நான் எது என் ஊர்னு இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன்//

ஒரு வேளை பெருநகரத்தில் செட்டில் ஆனாலும் இத்தனை ஊர்களையும் மறக்காமல் இருப்பீர்கள்தானே..

பெருநகரம் என்றாலே ஏதோ தலையில் கொம்பு முளைத்ததைப் போல் பேசுபவர்கள்தான் இந்தப் பதிவின் நாயகர்கள்..

aanazagan said...

எந்த ஊர் நமக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் தங்குவதற்கு வீடும் கொடுத்து பணம் சம்பாதிக்க உதவுகிறதோ அந்த ஊரையே சொந்த ஊர் என்று சொல்வதில் தப்பில்லை என்றே நினைக்கிறேன்.