Friday, February 15, 2008

தல புராணம்…6

சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு வழக்கம். அவ்வளவு தூரம் நடக்கச் சோம்பேறித்தனமான நாட்களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்னால் அப்போதிருந்த பாதைகளின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கிராதிகளின்மேல் உட்கார்ந்து கொண்டு…ம்..ம்ம்…என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்?


தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து….


…………..கோயிலின் உட்பக்கம்..

ரொம்பவே ஸ்பெஷலான நாட்களில், காலேஜ் ஹவுஸ் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் கடையில் சில ஸ்பெஷலான ஐட்டங்கள் இருக்கும்; பயந்திராதீங்க. அந்தக் கடையில் எல்லா magazines and newspapers கிடைக்கும். அவ்வப்போது வேறு வேறு பத்திரிக்கைகள், செய்தித்தாட்கள் வாங்குவதுண்டு. அதோடு, எல்லா foreign brand சிகரெட்டுகளும் கிடைக்கும் என்பது இன்னொரு விசேஷம். மறைந்து மறைந்து குடித்த நாட்களில் ஒரு பிராண்டும், அதற்குப் பின் வேறு ஒரு பிராண்டும் நமது ஃபேவரைட். அந்த முதல் ஃபேவரைட்: மார்க்கோபோலே-ன்னு ஒரு சிகரெட். வித்தியாசமா இருக்கும்; ப்ரெளண் கலர்; சப்பையா, ஓவல் வடிவில் இருக்கும்; வாசனை பயங்கர சாக்லெட் வாசனையா இருக்கும். எப்படியும் வருஷத்தில் இரண்டு மூன்று தடவை இந்த ஸ்பெஷல் சிகரெட். இதே மாதிரி - a poor man’s version of Marco Polo - Royal Yacht என்றொரு சிகரெட். அதே கலர்,வாசனை, சுவை…! இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போய் - அப்பல்லாம் பிளாட்பார்ம் டிக்கெட் உண்டா இல்லையா என்றே தெரியாது -ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்து, பயந்து, ரசிச்சி…..ம்..ம்ம்..அது ஒரு காலம்! பயம் போன பிறகு ஃபேவரைட் ப்ராண்ட் மார்ல்போரோ சிகரெட்தான்…ஆடிக்கொண்ணு அம்மாவாசைக் கொண்ணுன்னு…


அந்த சாயுங்கால ஊர்சுற்றல்களில் அந்தக் கோயில் கோபுரங்களைத் தாண்டும்போதெல்லாம் அதன் உச்சிக்குச் செல்ல நினைத்ததுண்டு; ஆனால், அது நிறைவேற ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாயிற்று.காமிரா-கிறுக்கு பிடித்த பிறகு அதன் உச்ச நிலையில் கோயிலின் உள்ளும் புறமும் எடுத்தபிறகு, தெற்குக் கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு உத்தரவு வாங்கி, நண்பன் ரவியோடு கோபுரத்தின் உச்சிக்குப் படம் எடுக்கச் சென்றோம். பொன்னியின் செல்வனை அந்த வயதில் படித்த அனைவருக்குமே இருக்கும் ஒரு சாகச உணர்வு. ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம். மேலே போனா கோபுரத்தின் உச்சியில் தெரியும் அந்த கலசங்களுக்கு நடுவில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரங்கள். கலசங்களுக்கு இரு புறமும் அந்தப் பெரிய பூத கணங்களின் முட்டைக் கண்களும், நீண்டு வளைந்த பற்களும்..அம்மாடியோவ்! அதுவும் dead close-up…!

………..தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து..


………….பறவைப் பார்வையில் மதுரை…

ரவியும், உடன் வந்த இன்னொரு நண்பனும் ரொம்ப சாதாரணமாக அதன் வழியே வெளியே சென்று, கோபுரத்தின் உச்சியின் மேல், வெளியே - open space-ல் - நின்றார்கள்.(top of the world ?) அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது. அட போங்கப்பா, நான் வெளியில் வரமாட்டேன்னு சொல்லிட்டு, இரண்டே இரண்டு படம் எடுத்தேன். ஒன்று அங்கிருந்து கோயிலின் உட்புறம் நோக்கி; இன்னொன்று கீழ் நோக்கி மதுரையை எடுத்தேன். (இங்கே இருக்கும் படங்கள்தான் அவைகள்). ரவி நிறைய எடுத்தான்.

பி.கு:
எங்களின் இந்த எபிசோட் முடிந்த சின்னாட்களில் இதே கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, மேலே ஏறி, வெளியே நின்று, குதித்து, கோயிலின் உட்புறம் கல் வேயப்பட்ட ஆடிவீதியில் விழுந்து ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்தக் கோபுரத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிந்தோம்.

Tuesday, February 5, 2008

மதுரை - 2012 கனவா? நனவா?

மதுரை இப்படி மாறுகிறது, அப்படி மாறுகிறது என்று மின்னஞ்சல் செய்திகள் அவ்வப்போது வந்து ஆர்வத்தை, ஆசையைக் கிளப்பிய வண்ணம் இருக்கும்.

இன்று இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு வலைப்பூ கண்ணில் பட்டது. அதில் மதுரையில் வரவிருக்கும் மொத்த மாற்றங்களும் அ முதல் ஃ வரை பட்டியலிடப்பட்டுள்ளன..அழகழகான புகைப்படங்களோடு..

http://www.maduraiby2012.blogspot.com/


என்னென்ன திட்டங்கள் இருப்பிலுள்ளன என்று இந்த வலைப்பூ காட்டும் பட்டியல் மதுரைவாசிகளை நிச்சயம் உற்சாகப்படுத்தும். அதே நேரத்தில், இது அத்தனையும் இவ்வளவு சீக்கிரம் சாத்தியமா என்றும் தோன்றுகிறது.

ஒருவேளை இந்த வலைப்பூவை ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இதுவரை பார்த்திராவிட்டால் இப்போது அவசியம் பார்க்கவும். சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன..(யப்பா..கண்ணைக் கட்டுதே...)

கனவோ நனவோ..50 சதவிகிதம் நடந்தால் கூட நம் பாக்கியமே..