Sunday, May 25, 2008

வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர்

நண்பர் குமரன் அரிய புகைப்படங்களைத் தந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வைகைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது ஒலித்த பாடல். இசையோடு கேட்டால் இன்பமோ இன்பம். படியுங்கள் - பாடிப்பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------
ஐயிரண்டு அவதாரம் அவணியில்
எடுத்த அழகரவர் ஆடிவருவார் !
அரிதாரம் பூசிவரும் அன்பர்களின்
கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார் !

நான்மாடக் கூடலிலே திருமணமாம் !
நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !
அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !
அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !

வாராறு வாராறு மலையை விட்டு
வாராறு வாராறு அழகரவர் வாராறு !

தங்கையவள் திருமணத்தை
தமையனவர் நடத்திவைக்க
தங்கக்குதிரையிலே வாராறு !
அடவாராறு அழகரவர் !

சித்திரையில் வைகறையில்
வைகைநதி பொன்கரையில்
பொற்பாதம் நனைக்க வாராறு !
தீவினைகள் அத்தனையும்
தீர்த்துவைக்க அழகரவர்
தீர்த்தங்கள் கொண்டு வாராறு !

சீனா .... (Cheena)
----------------------
இணைப்பு : http://www.youtube.com/watch?v=F4EW1GOqlqA
07.06.2008
சீனா .... (Cheena)
----------------------

Saturday, May 24, 2008

வைகையில் வந்திறங்கும் வள்ளல்

பச்சை பட்டு உடுத்திக் கொண்டு பவளமால் வந்தான்
பசுமையாக மண்விளங்கிப் பயன் கொடுக்க வந்தான்
இச்சையுடன் எழில் மிகுந்த ஈசன் அவன் வந்தான்
எழிலார்ந்த பரியேறி இன்பமாக வந்தான்


பச்சைப் பட்டு உடுத்திக் கொண்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் எழில் மிகு காட்சியை திரு. ஆர். கணேசன் இங்கே நிழற்படங்களாகத் தந்துள்ளார். அடியவர்கள் ஐயன் மேல் நீர் பீய்ச்சி அடிக்கும் அன்புக்காட்சியையும் காணலாம். படங்களை அனுப்பிய மதுமிதா அக்காவிற்கு நன்றிகள்.





Sunday, May 18, 2008

மதுரையின் முப்பெரும் கோவில்கள்

மதுரை என்றவுடனேயே வடநாட்டாருக்கும் நினைவில் நிற்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் பறவைப்பார்வையில் இருக்கும் இந்த நிழற்படத்தை இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். அண்மையில் மதுமிதா அக்கா இந்தப் படத்தை இந்தப் பதிவில் இடுவதற்காக அனுப்பியிருக்கிறார். இந்தப் படம் அமரர் கிரிஸ்டோபர் அவர்களால் சுரிப்பறனையில் (Helicoptor) இருந்து எடுக்கப்பட்டது. படத்தில் தெரியும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் திருக்கோவில் குடமுழுக்கன்று எடுக்கப்பட்டப் படம் போல் இருக்கிறது.


தமிழில் முதன்முதலில் முழுக்க முழுக்க இறைவனைப் பற்றிப் பாடப்பெற்ற சமயநூலான திருமுருகாற்றுப்படையில் முதலில் போற்றப்படும் படைவீடாகிய திருப்பரங்குன்றத்தின் முகப்புத் தோற்றத்தை இங்கே காணலாம்.



சங்கப்பாடல்களில் (குறிப்பாக பரிபாடல், சிலப்பதிகாரம்) திருமாலவன் குன்றம் என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் போற்றப்படும் அழகர்கோவிலின் முகப்புத் தோற்றத்தை இந்தப் படத்தில் காணலாம்.



திருப்பரங்குன்றம், அழகர் கோவில் படங்கள் எடுத்தவர் திரு.கணேசன். இந்த மூன்று படங்களையும் அனுப்பிய மதுமிதா அக்காவிற்கு நன்றிகள்.

Sunday, May 11, 2008

பரிபாடல் போற்றும் வைகை

சங்க கால இலக்கியங்களில் பல புலவர்கள் பாடித் தொகுத்த தொகுப்புகளுக்கு தொகைகள் என்று பெயர். அப்படிப்பட்ட தொகைகள் எட்டு இருக்கின்றன - அவற்றிற்கு எட்டுத் தொகை என்று பெயர். அந்த எட்டுத்தொகை நூற்களுள் ஐந்தாவது நூல் பரிபாடல். பதிமூன்று புலவர்களால் பாடப்பெற்றிருக்கும் இந்தப் பாடல்கள் நான்கு பொருட்களைப் பற்றி பாடுகின்றன.

1. செவ்வேளாகிய முருகன் (8 பாடல்கள்)
2. மாயோனாகிய திருமால் (7 பாடல்கள்)
3. கூடல்பதியாம் மதுரை (6 பாடல்கள்)
4. தமிழர்கள் பொற்கொடியாம் வைகை (11 பாடல்கள்)

இவற்றில் வைகையைப் பாடும் பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பாடல்களின் மூலம் வையையில் நடந்த நீர்விளையாட்டுகளையும் வையையை ஒட்டி நடந்த பண்பாட்டு நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடல்களைப் படிக்கும் ஆர்வம் இருப்பவர்கள் தயங்காமல் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் இருக்கும் உரையுடன் கூடிய பரிபாடல் நூலைப் படிக்கலாம். அன்றைக்கு வைகை எந்த நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் உய்த்து அறியலாம்.

இன்றைய வைகையின் நீர்வரத்து வான் கொடுக்கும் கொடையென்பது நமக்குத் தெரியும். அப்படி ஒரு முறை மழையின் கொடையால் வைகையில் நீர் வரத்து இருந்த நேரத்தில் திரு. ஆர். கணேசன் அவர்கள் எடுத்த நான்கு படங்களை இங்கே இடுகிறேன். இந்தப் படங்களை அனுப்பிய மதுமிதா அக்காவிற்கும் ஆர். கணேசனுக்கும் நன்றிகள்.