Friday, December 19, 2008

லகலகலக மதுரை லகலகலக

கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை மதுரைக்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது. மாறுதல்கள் கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது..கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்..இன்னும் சற்றுச் சூடு பிடிக்க வேண்டும் என்றாலும்..சிறு குழந்தை எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தாய்க்கு முக்கியம்தானே..

மதுரை.....

 • மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
 • கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
 • கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
 • கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.
 • பக்தி அதிகரித்துவிட்டதோ, பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரித்துவிட்டதோ...15 ரூபாய் வரிசையில் 2 மணி நேரம் நின்ற பின் தான் மீனாட்சி தரிசனம்..நடுநடுவில் வரிசையில் நமக்குப் பின் நின்றவர்கள் எப்படி நமக்கு முந்திப் போனார்கள் ..எப்போது..எப்படி அங்கே இருந்த காவலர்களையும் பணியாளர்களையும் 'கவனித்தார்கள்' என்பதே புரியாத புதிர்தான்.
 • தெரு வீதிகள் சென்னை தி.நகரை மிஞ்சும் வண்ணம் கலகலகல..
 • வாகனங்கள் அதிகரித்துவிட்டன..எனவே போக்குவரத்து நெரிசலும் அதிகம்தான்..முக்கியமான சந்திப்புகளில் விளக்குகள் இருந்தபோதும் போக்குவரத்துக் காவலரின் பணியும் தேவைப்படும் அளவுக்கு நெரிசல்தான்..
 • டிவிஎஸ் நகர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ரயில் போவதற்காக வண்டிகள் நிறுத்தப் படும்போது...போக்குவரத்து நெரிசலோ நெரிசல்...இவ்விரு இடங்களிலும் பாலங்கள் அவசியத் தேவையென்று உணரும் காலம் எப்போது வரும்? அதிலும் திருப்பரங்குன்றம் இரண்டு ரயில் கேட்டுகளுக்கு நடுவில் இருப்பதால் ஏதேனும் ஓர் அவசர காரியமென்றால் கூட உள்ளூர் வாசிகளுக்குப் படு சிரமம்தான்.
 • எஸ் எஸ் காலனி புறவழிச்சாலையில் நாயுடு ஹால் துணிக்கடை
 • மேலமாசிவீதியில் பழைய உடுப்பி இருந்த இடத்தில் வளர்ந்து வரும் போத்தீஸின் ஐந்து அடுக்குக் கட்டடம்..
 • இன்னும் பல கட்டட வேலைகள் மும்முரமாய் அனைத்துப் பிரதான சாலைகளிலும் நடந்தேறி வருகின்றன.
 • முனிச்சாலை தாண்டித் தெப்பக்குளம் போகும் இடத்தில் பழைய தினமணி அலுவலகம் இருந்த இடத்தில் வரப்போகிறது பல்லடுக்கு அங்காடி.
 • மதுரை திருமங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு அபரிமிதமான மாற்றங்கள்..மஹிந்திரா, ஃபோர்டு, டொயோட்டா, மிட்ஸுபிஷி வாகன விற்பனை மையங்கள் படு நவீனமாக..
 • தோப்பூர் அருகே இறுதிகட்டத்தை நெருங்கும் நான்கு வழிப்பாதை.
 • வளர்ந்து வரும் புதிய விமான நிலையக் கட்டடப் பணி..காத்திருப்பு அறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த விமான நிலைய விஸ்தரிப்புக் காட்சிகள் வியப்பூட்டின. வெளிநாட்டு விமான நிலைய அந்தஸ்து கூடிய விரைவில் கிட்டுவதற்கான சாத்தியங்களைப் பறைசாற்றின..அங்கே வைக்கப்பட்டிருந்த புதிய விமான நிலையத்தின் மாதிரி மலைக்க வைத்தது.
 • திரையரங்குகளில் பழைய காலம் போல் கூட்ட நெரிசல்கள் இல்லையென்பது..மதுரையில் ஓர் அதிசயம்தான்..

இன்னும் இன்னும் பல மாற்றங்கள் அதிசயிக்க வைத்தன..ஒவ்வொரு முறை மதுரை வரும்போதும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கத்தான் செய்கின்றன..

8 Comments:

தமிழ் பிரியன் said...

இரவுகளில் தூங்காமலேயே இருப்பதும் மதுரையின் சிறப்பாக இன்னும் தொடருதா?

பாச மலர் said...

இல்லியா பின்னே..அன்றும் இன்றும் என்றும் தூங்கா நகரம்தான்..

குமரன் (Kumaran) said...

பணியாளர்களையும் காவலர்களையும் நீங்கள் கவனிக்கும் முன்பு அவர்கள் உங்களைக் கவனித்து கண்டுகொண்டு அவர்களைக் கவனிக்கச் சொல்வார்கள். பழனியில் அந்த அனுபவம் கிடைத்திருக்குமே. மதுரையிலும் அது வந்துவிட்டது போல. :-) :-(

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து டி.வி.எஸ். நகர், திருப்பரங்குன்றம் ரெண்டு இடத்துலயும் இந்த நெரிசல் இருக்கத் தான் செய்யுது. பாலம் கட்டுறதா? அப்படின்னா என்ன? இருக்குற பாலத்தையாவது இடிஞ்சுறாம பாத்துக்குறாங்களேன்னு இருக்கு. :-) :-(

நீங்கள் பட்டியல் இட்டிருக்குறதை எல்லாம் பாத்தா 1 1/2 வருடத்துக்கு முன்னாடி பார்த்த மதுரைக்கும் இப்ப இருக்கற மதுரைக்கும் ரொம்ப வேறுபாடு இருக்கும் போல இருக்கே. இன்னும் அம்பது வருடமானாலும் மதுரை பெரிய கிராமமா தான் இருக்கும்ன்னு பத்து வருடத்துக்கு முன்னாடி நண்பர்கள்கிட்ட சொல்லுவேன். அது பொய்யாய் பழங்கதையாய் போகும் போலிருக்கு. நல்லதா நடந்தா சரி தான். :-)

கீதா சாம்பசிவம் said...

க்ர்ர்ர்ர்ர்இருங்க, இருங்க, தனிப் பதிவிலே சொல்லிக்கிறேன்! :P :P:P

பாச மலர் said...

குமரன்,

மீனாட்சி தரிசனம் என்பது கீதா பதிவில் சொல்லியிருப்பதுபோல் திருப்பதியையும் மிஞ்சிவிட்டதுதான்..ஆனால் இதற்கு ஒருவகையில் மக்கள்தான் காரணம் என்பது என் எண்ணம்...அனைத்து கோயில்களில் இந்த நிலைமைதான்..

கண்டிப்பாக சில மாற்றங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள்..

இந்த மாற்றங்கள் வந்தாலும் கூட இன்னமும் கிராமம்தான் என்று சொல்பவர்கள்தான் இன்னமும் இருக்கிறார்கள்..

பாச மலர் said...

கீதா,

நானும் அந்தப் பதிவு படித்து விட்டு வருகிறேன்..

பாச மலர் said...

//அது பொய்யாய் பழங்கதையாய் போகும் போலிருக்கு. நல்லதா நடந்தா சரி தான். :-)//

குமரன்,

குறிப்பாகத் மதுரை திருமங்கலம் சாலையில் போய்ப் பாருங்கள் ஒரு நடை..

Information said...

மிகவும் அருமை