Sunday, April 5, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி! 4

திருநடனம் முடிந்ததும் விருந்துக்கு அனைவரும் சென்றனர். அனைவரும் உண்டபின்னரும், உணவுப் பொருட்களும், சமைத்த உணவும் மீந்து போகவே பிராட்டி ஈசனிடம் சென்று முறையிட்டார். ஈசனும் அன்னைக்குத் தன் திருவிளையாடல்களில் ஒன்றைக் காட்டி அருளவேண்டி, அருகே இருந்த குண்டோதரன் என்னும் சிவகணம் ஒருவனைப் பார்த்து, அவனுக்கு உணவளிக்குமாறு பிராட்டியிடம் சொல்ல, பிராட்டி இவன் ஒருவனால் அவ்வளவு உணவையும் உண்ண முடியுமா எனத் திகைக்க ஈசன் குறுநகை புரிந்தார். பிராட்டி கொஞ்சம் யோசனையுடனேயே குண்டோதரனை அழைத்துச் செல்ல அன்ன வகைகள், காய், கனிவகைகள், பால், தயிர் வகைகள் போன்ற அனைத்தையும் உண்டும் பசி தீரவில்லை எனச் சொல்ல, பிராட்டியார் பின்னர் தானியங்கள், காய்கள் போன்ற உணவு வகைகளைக் கொடுத்தும் பசி அடங்காமல் குண்டோதரன் தவிக்க, இறைவனிடம் சென்று முறையிட்டார்.

குண்டோதரன் வயிற்றில் இவ்வண்ணம் வடவைத் தீயை மூட்டிய இறைவனிடமே குண்டோதரன் நேரில் சென்று சொல்ல, தடாதகையைப் பார்த்து நகைத்த ஈசன், சற்றே யோக தியானத்தில் ஆழ்ந்து, அங்கே ஒரு மூலையில் நான்கு பெரிய அன்னக் குழிகளை உண்டாக்க, அவற்றில் தயிரன்னம் நிறைந்திருக்கக் கண்டனர் அனைவரும். குண்டோதரன் அவற்றை உண்ணப் பசியாறினான். பின்னர் தாகத்தினால் வருந்தி, நகரில் உள்ள குளங்கள், நீர்நிலைகள், ஓடைகள், கிணறுகள் ஆகிய எல்லாவற்றின் நீரையும் அருந்தியும் தாகம் அடங்காமல் தவிக்கவே, ஈசன் தன் சடாமுடியின் கங்கையை மதுரையின் ஒரு பக்கம் நதியாக ஓடி வரும்படி ஆணையிட, கங்கையும் வையையாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றாள் மதுரையில். குண்டோதரனும் அந்த நீரைக் குடித்துத் தாகம் தணிந்தான். வையையின் வெள்ளப் பெருக்கைப் பரிபாடல் இவ்வாறு சுட்டுகின்றது.


நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5

மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை,
மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
தாயிற்றே தண் அம் புனல். 10

பின்னர் பிராட்டியைப் பார்த்து ஈசன் நகைக்க, தன் தவற்றை உணர்ந்த அம்மையும் நாணித் தலை குனிந்தாள். தன் பிறந்த வீட்டின் பெருமையைப் போற்றும் விதமாய்த் தான் நடந்து கொண்டதையே ஈசன் மறைமுகமாய்ச் சுட்டினார் எனப் புரிந்து கொண்ட அன்னை, பின்னர் ஈசனோடு இனிதே வாழ்ந்தார். இதையே திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் கூறுகையில்,

"சடை மறைத்துக் கதிர் மகுடம் தரிந்து
நறுங்கொன்றையந்தார் தணந்து வேப்பந்
தொடை முடித்து விட நாகக் கலனகற்றி மாணிக்கச்
சுடர்ப்பூண் ஏந்தி விடை நிறுத்திக் கயல் எடுத்து
வழுதி மருமகனாகி மீன நோக்கின் மடவரலை
மணந்துலகம் முழுதாண்ட சுந்தரனை வணக்கம் செய்வாம்!"

இவ்விதம் சோமசுந்தரர் ஆகி ஈசன் நன்னாளில் முடிசூட்டிக் கொண்டு அரசாளுகின்றார். பாண்டிய நாட்டு அரசர்கள் அனைவருமே சுந்தரரிடம் மாறாத பக்தி பூண்டே இருந்து வந்திருக்கின்றனர். அரசர்கள் பலரும் ஈசனின் மாறாத திருவிளையாடல்களில் திளைத்திருக்கின்றனர். விக்கிரமபாண்டியன் என்பவனின் மகன் ராஜசிம்ம பாண்டியன், சோழ மன்னன் கரிகாலன் பரதம் தெரிந்தவன், என்பதால் தன்னைக் கேலி செய்வதை உணர்ந்து தானும் பரதம் பயின்றான். தீவிரப் பயிற்சியில் அவனுக்கு உடல்வலி ஏற்பட, ஈசன் சந்நிதியில் நடராஜரைக் கண்டு மனம் உருகினான். தான் பயிற்சி செய்யும்போது இவ்வளவு கஷ்டமாய் இருக்க, நடராஜர் தினம் தினம் ஆடுகின்றாரே? ஆடிக் கொண்டே இருக்கின்றாரே? அவருக்கு எவ்வளவு வலி எடுக்கும்? அதுவும் தூக்கிய திருவடியைக் கீழேயே இறக்கவில்லையே என எண்ணி ஏங்கினான்.

நடராஜர் சந்நிதிக்கு வந்து ஈசனை நோக்கித் துதித்து, "ஐயனே, தாங்கள் நின்ற திருவடியை எடுத்து வீசி, தூக்கிய திருவடியைக் கீழே ஊன்றி, அடியேன் காணும்படிக்குக் கால் மாறி ஆடவேண்டும். இல்லையே அடியேன் என்னை மாய்த்துக் கொள்வேன்," எனச் சூளுரைக்க, அவன் அன்புக்குக் கட்டுப்பட்டு, ஈசனும் வலப் பாதத்தை எடுத்து வீசி, இடப் பாதத்தை ஊன்றிக் கால்மாறி ஆடிக் காட்டினார். மன்னனும் மகிழ்ந்தான். அந்தக் காட்சியைப் பரஞ்சோதி முனிவர்,
"பெரியாய் சரணம்! சிறியாய் சரணம்!
கரியாகிய அங்கணனே சரணம்!
அரியாய் எளியாய் அடிமாறி நடம்
புரிவாய் சரணம்! புனிதா சரணம்!

நதியாடிய செஞ்சடையாய்! நகைவெண்
மதியாய்! மதியா தவர்தம் மதியிற்
பதியாய்! பதினெண் கணமும் பரவுந்
துதியாய்! சரணம்! சுடரே! சரணம்!

பழையாய்! பதியாய் சரணம்! பணிலக்
குழையாய் சரணம்! கொடுவெண் மழுவாள்
உழையாய் சரணம்! உருகா தவர்பால்
விழையாய் சரணம்! விகிர்தா சரணம்!'
என்றெல்லாம் பாண்டியன் போற்றித் துதித்ததாய்ப் பாடுகின்றார். அரசனின் விருப்பத்திற்கேற்ப இன்றளவும் நடராஜர் கால் மாறி ஆடிய திருக்கோலத்திலேயே வெள்ளியம்பலம் ஆகிய மதுரை மாநகரில் காட்சி அளிக்கின்றார்.

3 Comments:

rmsundaram said...

good postings

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பரிபாடலை அப்படியே கொடுத்தால் எப்படி கீதாம்மா? விளக்கம் ப்ளீஸ்! :)

//இடப் பாதத்தை ஊன்றிக் கால்மாறி ஆடிக் காட்டினார்//

பரதநாட்டியத்தில் இப்போ பலரும் கால் தூக்கி நடராஜர் போஸில் ஆடறாங்களே! அது எந்த ஸ்டைல்? வழக்கமான ஸ்டைலா? இல்லை கால் மாறி ஆடிய மருத ஸ்டைலா?

அடியேனின் இந்தச் சந்தேகத்தை நீங்க தான் தருமியாய் இருந்து தீர்த்து வைக்கணும்-ன்னு வேண்டிக் கேட்டுக்கறேன்! ஆயிரம் பொன் பரிசை அம்பியோ, மெளலி அண்ணாவோ ஆளுக்கு ஐநூறா கொடுப்பாங்க! :)

கீதா சாம்பசிவம் said...

வாங்க சுந்தரம், கணக்கு வாத்தியாருக்குத் தமிழிலும் ருசி இருப்பது மகிழ்ச்சியாய் இருக்கு. நன்றி

வாங்க கேஆரெஸ், உங்களுக்குப் புரியலைனா அப்புறம் யாருக்குப் புரியும்? வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.