Thursday, April 2, 2009

மதுரை நகர் ஆளும் மீனாட்சி!`

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என
ஆனை கட்டிப் போரடித்த அழகாய தென்மதுரை

எனச் சொன்ன மதுரை இப்போது இல்லை. இப்போ மதுரையிலே தண்ணீர் கஷ்டம். மதுரையின் தெருக்கள் சாதாரண வாகனப் போக்குவரத்தையே தாங்கவில்லை. நகரத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் நகரின் பல முக்கிய அடையாளச் சின்னங்கள் அழிக்கப் பட்டுவிட்டன. இன்றைய மதுரை ஒரு நவநாகரீகப் பெண்ணாக மாறி விட்டாள். என்றாலும் நாகரீக உடை அணிந்தாலும் பாரம்பரியப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கும் பெண்ணைப்போல் இன்றும் மதுரையில் சித்திரைத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது.

வைவஸ்வத மனுவாகச் சொல்லப் படும் பாண்டிய அரசனுக்காக ஈசன் மச்சாவதாரத்தை எடுத்தார் எனச் சொல்லப் படுவதுண்டு. சத்தியவிரதன் என்னும் பாண்டியமன்னன் ஸ்ரீமந்நாராயணனிடம் பக்தி கொண்டு நீர் தவிர வேறு எதுவும் அருந்தாமல் கடும் தவம் இயற்றி வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் ஓடிய நதி கிருதமால் நதி எனப் பெயரில் ஓடியது. அந்த நதியில் இறங்கி மாலை நேரத்துக் கடமைகளைச் செய்து கொண்டிருந்த மன்னன் கையில் ஒரு மீன் குஞ்சு கிடைக்க, அதை மீண்டும் நீரிலேயே விட்டான் மன்னன்.

ஸத்ய வ்ரதஸ்ய த்ரமிலாதிபர்த்து:
நதீஜலே தர்ப்பயதஸ் ததாநீம்:
கராஞ்சளெள் ஸஞ்ஜ்வலிதா க்ருதி:
த்வமதுர்ஸ்யதா” கஸ்சந பால மீந:” (நாராயணீயம்)

மீனோ மன்னனிடம் தான் சின்னக் குஞ்சாக இருப்பதால் மற்றப் பெரிய மீன்கள் தன்னைத் தின்றுவிடும் என்பதால் தன்னைக் காக்குமாறு சொல்ல மன்னன் அதை எடுத்துத் தம் கமண்டலத்தினுள் வைத்துக் கொள்ள மீன் உள்ளே பெரியதாய் வளர்ந்து விட்டது. மன்னன் அதை எடுத்துப் பெரிய பாத்திரத்தில் போட அங்கேயும் இடம் போதவில்லை மீனுக்கு. பின்னர் குளம், மடு எனப் போட எல்லாவற்றிலும் வளர்ந்து பெரியதாய் இருந்த மீனை ரதத்தில் ஏற்றிக் கொண்டோ, கையாலோ எடுக்க முடியாது எனக்கண்ட மன்னன் தன் யோக சக்தியால் அந்த மீனை சமுத்திரத்தில் விட மீன் பேசுகின்றது.

மன்னன் நீ யார் என அதைக் கேட்க, நீர் சதா துதிக்கும் ஸ்ரீஹரி நான் தான். இன்னும் ஏழு தினங்களில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியப் போகின்றது. அப்போது பெரிய படகு ஒன்றை நான் அனுப்புவேன். முக்கிய தானியங்கள், மூலிகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீ அப்படகில் ஏறிக் கொள். உன்னுடன் சப்த ரிஷிகளும் ஏறிக் கொள்ளுவார்கள். கடலில் அந்தப் படகு பயமின்றி தானே பயணிக்கும். பின்னர் அப்படகு ஒரு பெரிய திமிங்கிலம் போன்ற தோற்றத்துடன் இருக்கும் என்னிடம் வந்து சேரும். வாசுகியாகிய பாம்பைக் கயிறாய்க் கொண்டு நீ அப்படகை என் தந்தத்தில் கட்டிவிடு. பிரளயம் முடியும் வரையிலும் நீ என்னால் பாதுகாக்கப் படுவாய் அந்தப் படகிலேயே.” என்று சொல்கின்றது. ஒரு வாரம் பிரளயத்திற்காக மன்னன் காத்திருக்க வேண்டி அந்தக் கடற்கரை மணலிலேயே தர்ப்பைப் புல்லைப் பரப்பி விஷ்ணுவைத் தியானம் செய்து கொண்டிருந்தார்.

“ப்ராப்தே த்வதுக்தேஹேநி வாரி தாரா
பரிப்லுதே பூமிதலே முநீந்த்ரா:!
ஸப்தர்சிஹிபி: ஸார்த்தம் அபார வாரிணி
உத்கூர்ணமாந: ஸரணம் யயெள த்வாம்!!”(நாராயணீயம்)

குறிப்பிட்ட காலம் வந்ததும் தாரையாக மழை பொழிய ஆரம்பித்தது. ஊழிக்கால மழை என்பது என்னவென அறிந்த மன்னன் பரம்பொருள் அனுப்பும் தோணிக்காகக் காத்திருந்தான். பூமியானது பிரளயத்தில் சுழன்று சுழன்று மறையும் நேரத்தில் பூமாதேவி உம் கட்டளையின் பேரில் ஒரு தோணியாக மாறி சப்தரிஷிகளையும், சத்யவிரதனையும் ஏற்றிக் கொண்டாள். பிரளயத்தின் வேகத்தைத் தாங்க மாட்டாமால் ஆடி, அலைக்கழிந்த அந்தத் தோணியில் இருப்பவர்களைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரளய நீரில் இருந்து ஒரு பெரிய திமிங்கில வடிவ மீனாய்த் தோன்ற, அவரின் கட்டளைப் படியே அந்த மீனின் உயர்ந்த கொம்பில் தோணியாகிய பூமியைக் கட்டினார்கள். கல்பத்தின் முடிவில் ஸப்தரிஷிகள் முன்போலவே ஸ்தாபிக்கப் பட்டனர். ஸத்யவ்ரதன் அடுத்த மன்வந்தரத்தின் மனுவானான். வைவஸ்வத மனுவானான். ஆரம்பத்தில் வடக்கே சூரிய வம்சத்தினரும் தென்னாட்டில் சந்திர வம்சத்தினருமே ஆண்டு வந்ததாய்ச் சொல்கின்றனர். சேரர் முதலிலும் பின்னர் சோழர்களும் பாண்டியர்களில் இருந்தே பிரிந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் சோழர்கள் தங்களை சூரிய குலத்தினர் எனச் சொல்லிக்கொள்கின்றனர். இது பற்றிய உறுதியான சான்றுகள் தெரியவில்லை. பாண்டியர்கள் இந்த வைவஸ்வத மனுவின் வழி வந்தவர்கள் எனச் சொல்லப் பட்டார்கள். அரசனுக்காக மஹாவிஷ்ணுவே மீனாக அவதாரம் எடுத்து வந்து குலத்தையும் காப்பாற்றியதாலேயே பாண்டிய நாட்டுச் சின்னமும் மீனாகச் சொல்லப் படுகின்றது எனவும் தெரிய வருகின்றது. இந்தப் பாண்டியர்கள் ராமாயண காலத்திலேயும் இருந்ததாய் வால்மீகி தன் ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றார். மஹாபாரத காலத்திலேயும் இருந்திருக்கின்றனர். அனைவரும் பேதங்கள் இன்றி சிவனையும், விஷ்ணுவையும் சமமாகவே வணங்கி வந்திருக்கின்றனர். இவர்களுக்கு இந்திரனால் ஆசீர்வதிக்கப் பட்ட மணிமுடியும், ரத்தினஹாரமும் பரம்பரைச் சொத்தாக இருந்து வந்திருக்கின்றது. பாண்டிய அரசர்கள் அனைவரும் இந்திரனால் அளிக்கப் பட்ட ரத்தின ஹாரமும், மணிமுடியுமே கொண்டு தம் முடிசுட்டுவிழாவை நடத்திக் கொள்வார்கள்.

மதுரையிலே இப்போக் கும்பாபிஷேஹம் அமர்க்களப் படுது. அதோட மீனாட்சி திருக்கல்யாணமும் வந்துட்டு இருக்கு. எல்லாத்தையும் சேர்த்து வச்சு இந்தப் பதிவுகள். விழியன் வேறே மதுரைக்காரங்க எல்லாம் சும்மா இருக்கீங்களேனு உசுப்பி விட்டுட்டுப் போயிட்டார். சும்மா இருக்க முடியுமா? முன்னே எப்போதோ எழுதி வச்சது, இப்போப் போடலாம்னு ஒரு எண்ணம்.

16 Comments:

விழியன் said...

மதுரைக்கு இந்நேரம் செல்லமுடியலன்னு வருத்தமா இருக்கு.

மிக்க நன்றி கீதா மேடம்,நான் கேட்டதற்கு இணங்க பதிவிட்டமைக்கு..

வல்லிசிம்ஹன் said...

இவ்வளவு செய்தி இருக்கா மதுரையைப் பற்றி.
மனு காலத்திலிருந்து மதுரை இருக்கு என்று என்னால் நம்ப முடியும். இதைவிடப் பழைய நகரம் இருக்க முடியாது.
புதுசா ஜீன்ஸ் மாட்டிக் கொண்டாலும் நம் பெண் நம் பெண்தான்.

அவளை அசிங்கப் படுத்தாமல் பாதுகாப்போர்களோ:(

மதுரையம்பதி said...

கலக்கல் கீதாம்மா... மதுரையம்பதியிலும் கும்பாபிஷேக பதிவுகள் வருது...:)

குமரன் (Kumaran) said...

இந்த இடுகைக்கு நன்றி கீதாம்மா.

குமரன் (Kumaran) said...

புராணமும் மச்சாவதாரத்தில் பாண்டிய அரசனைத் தான் பேசுகின்றது; தமிழ் இலக்கியங்களும் 'கடல் கொண்ட பழந்தமிழகம்' பற்றி பேசுகிறது. புராணம் சொல்லும் பிரளயமும் குமரிக்கண்டத்தைக் கடல் கொண்ட செய்தியும் ஒரே நிகழ்வினைத் தான் பேசுகின்றதோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.

கல்வெட்டு said...

:-)))

கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்கய்யா

கொண்டாட்டங்களுக்கு என்றும் நான் எதிரானவன் அல்ல. காரணங்கள் எதுவாக இருந்தாலும் விழாக்கால வாழ்த்துகள் அனைவருக்கும். நல்லாயிருங்க மக்கா

கீதா சாம்பசிவம் said...

@விழியன், நன்றி, பின்னூட்டத்துக்கு.

கீதா சாம்பசிவம் said...

@வல்லி, நான் எழுதி இருப்பது கொஞ்சம் தான், இன்னும் இருக்கு மதுரை பத்தி எழுத! அசிங்கப் படுத்தாமல் இருந்தால் அது பெருமையா இருக்கும்! :(((((((

கீதா சாம்பசிவம் said...

வாங்க மதுரையம்பதி, மதுரை மேட்டர்னதும் எங்கே இருந்தோ ஓடி வந்துட்டீங்களே? :P :P நன்றி, வரவுக்கும் கருத்துக்கும்.

கீதா சாம்பசிவம் said...

//புராணம் சொல்லும் பிரளயமும் குமரிக்கண்டத்தைக் கடல் கொண்ட செய்தியும் ஒரே நிகழ்வினைத் தான் பேசுகின்றதோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.//

வாங்க குமரன், கிட்டத் தட்ட நீங்க சொல்றது தான் நடந்திருக்கும்னு நானும் பலபுத்தகங்களையும் படிச்சதிலே இருந்து முடிவுக்கு வந்திருக்கேன். நன்றி.

கீதா சாம்பசிவம் said...

@கல்வெட்டு, வாங்க, வாங்க, ரொம்ப நாளாச்சு, ஊரைப் பத்தி எழுதினதும் தன்னாலே சந்தோஷம் வருது போல! :))))))) நன்றிங்கோ!

sury said...

எனது பேரன் இந்தக்கதை என்ன சொல்லு தாத்தா என என்னை உசுப்பிவிட,
நானும் கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமாக, உபன்யாசம் மாதிரி இந்தக்கதையைப்
படிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன். அதன் விளைவு தான் இது.
யூ ட்யூபிலே போட்டிருக்கேன். கொஞ்ச நேரத்திலே பார்க்கலாம்.

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃஃபோர்டு, ஸி.டி.
PS: in case you do not approve, I shall delete this in no time.

கீதா சாம்பசிவம் said...

தாராளமாய்ப் போடலாம், யூட்யூபில் கேட்கிறேன், சுட்டி கொடுங்க சூரி சார்! இந்தப் பின்னூட்டத்தை இப்போத் தான் பார்க்கிறேன். குழு உறுப்பினர்கள் மாடரேட் பண்ணி இருப்பாங்க! நன்றி, இங்கே வந்ததுக்கும், பின்னூட்டம் போட்டதுக்கும்.

dfds said...

You have mentioned that, in Valmiki Ramayan there is a note about Pandiyan kingdom. Atharku sandrugal unda?. Because Iam doing research on this particular thing.

dfds said...

Pandiyargalai patriya kuripu Valmiki Ramayanathil irupathaka sonnergal. Atharkana sandrugal iruka ?

dfds said...

You have mentioned that, in Valmiki Ramayan there is a note about Pandiyan kingdom. Atharku sandrugal unda?. Because Iam doing research on this particular thing.