Monday, October 15, 2012
என்ன நாஞ்சொல்றது?!!!
Posted by ஸ்ரீதர்ரங்கராஜ் at 10/15/2012 10:00:00 AM 10 comments
Wednesday, October 3, 2012
மதுரை வைகை ஆறு- சில மலரும் நினைவுகள்
கரைபுரண்ட ஆற்று வெள்ளத்தை எல்லாராலும் சந்தோஷமா பார்க்க முடியுமான்னு தெரில..ஆனால்,எங்க ஊரு வைகையில் எப்பவாது நடக்கும் இந்த அதிசயத்தை கொஞ்சம் மிரட்சியுடன்,நிறையவே லயிச்சு பார்க்கத்தான் எனக்கு ஆசை..
நான் சிறுவயதில் பார்த்த வைகை ஆறே வேறு.....
இப்போது ,,,என் அழகு வைகை உருக்குலைந்து...மணல் திருட்டு,சமூக விரோத செயல்களில் சிக்குண்டு ரொம்பவே பரிதாபமாய் வாடி தான் இருக்கு..:-(((
வைகை கரையோரம் அம்மா வீடு..என் சிறுவயது நிகழ்வுகளில் பெரும்பாலும் வைகையும் என்னுடன் கூடவே இருந்தது. சில அனுபவங்களை இப்ப நினைச்சால் கூட ரொம்பவே சிரிப்பு வரும். :-)))
"பாட்டியின்
குட நீரை விட-என்
பிடி நீர்
தந்ததாம்!!
கொள்ளை அழகு!!
என் பார்வையில்
கரையோரப்
பிள்ளையார்!!! :)))"
அப்புறம்,என் 8 வயதில் தெருவில் கிடந்த அழுக்கு குட்டி நாயை வீட்டில் எடுத்து வந்து சீராட்டி(?) பாராட்டி(?!#@) வளர்த்த என்னிடம் இருந்து பிரித்து வைகை ஆற்றில் கொண்டு விட்ட என் குட்டி தம்பியையும்,வைகையே உன்னையும் அப்போது ஏனோ பிடிக்க வில்லை...பிடிக்க வில்லை...பிடிக்கவில்லை...:-(((
"ஆற்றின்
சுடுமணலில்
அழுதுகொண்டே
நான்!-என்
நாய்க்குட்டி
தேடி.......!
என் விழிநீர் பட்டு
உன்
சலசலக்கும்
நீரோடை கூட
அமைதியானது!-நீயோ
என் புன்னகை
தேடி..........!"
வைகை மணலில் விளையாட செல்லும்போது நான் மண்ணில் கைகளால் குவித்த மண் கோவில்களும்(?!),வீடுகளும்(@#?!) மறுநாள் வந்து பார்த்தும்,கலையாமல் இருந்த போதும்....
மாலை நேரத்தில், தாத்தாவுடன் கைகோர்த்து வைகை மணலில் காலாற நடக்கும்போது தட்டுப்படும் சிப்பிகளை கைநிறைய சேர்க்கும்போதும்....
வைகையே...உன்னை..ரொம்ப பிடிக்கும்..பிடிக்கும்...பிடிக்கும்....:-))))))
வைகையே..!!இப்போ எல்லாம் உனக்கு என்ன ஆச்சு? முழுக்க நீர் எல்லாம் வற்றி போயி ஏன் உருமாறி திரிகிறாய்..??சித்திரை திருவிழாவுக்கு மட்டுமே பொலிவுருகிறாய்..அப்புறம் மீண்டும் ஓட்டுக்குள் பதுங்கி கொள்கிறாய்...என்னை கொல்கிராய்??!!
அந்தி சாயும்
அழகான தருணத்தில்
என் குழந்தையுடன்
உனைதேடி வருவேன்!!
அவனிடம்
சிறிது காண்பித்து விடு-நீ
பூட்டி வைத்த
என் சின்னஞ்சிறு
காலடித் தடங்களை...!!!!!!
Posted by ஆனந்தி.. at 10/03/2012 09:23:00 AM 5 comments
Friday, September 21, 2012
பாப்கார்ன் நிரம்பிய காகிதக் குவளை
ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப
கலைசார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்தேறும். யுனெஸ்கோ கூரியர் காலம் துவங்கி ராதுகா பதிப்பகத்தின் மொழி பெயர்ப்புகள் ருஷ்ய இலக்கியத்தின் காலம் எனில் பிரஞ்சு இலக்கிய காலமொன்றும் லத்தீன் அமெரிக்க காலமும் செவ்வியல் நவசெவ்வியல் புரட்சியும் பின்னவீனத்துவ பாய்ச்சலும் ஜப்பானிய முராகமி காலமும் அறிந்ததே. ஒவ்வொரு காலம் சிறுகதைகள் ,நாவல்கள்,பாடல்கள் மற்றும் திரைப் படங்கள் இம்மாற்றங்களை செரித்தே வளர்ந்திருக்கின்றன.
ஆனால் ....
இன்றைக்கு கவிதைகளின் உள்ளீடு மற்றும் ஆன்மா குறித்துப் பேசுவோமாயின் விழுமியங்கள் பெரும் கேள்விக்குரியன. சொல்கொத்திகளின் அமைப்பியல் எச்சங்களை க-வி-தை என்று எழுத்துக் கூட்டி வாசித்துக் கொள்கிறோம்.யூமாவின் பிரதிகள் மனுஷ்ய புத்திரனின் குரலில் பேச முயற்சிக்கின்றன. ழாக் ப்ரெவரோ ,ப்ரக்டோ ஜான் க்ளீவ்லேண்டோ, அல்லிகிரட்டியோ மொழிபெயர்ப்புக்கும் தன் சொந்த கவிதைக்கும் அதிக வேறுபாடுகளில்லாமல் எழுதுவது குறித்து கிஞ்சித்தும் குற்றவுணர்வில்லை என்பது நாம் எதிர்நாயகர்களின் காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது .சாயல்களின் சாயல்கள்,பிரதியிலிருந்து பிறக்கும் பிரதிகள்.
தமிழின் சென்ற இரு வருடங்கள் நாவல் பரப்பில் நிகழ்ந்தவை குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகளை ஷகீராவின் குரலில் பாடச் சொல்லி கேட்பது அல்லது யதார்த்தவாதத்தின் மீப்பெரும் கண்ணீர்த்துளியை உறைய வைத்து தேனடை முலாம் பூசி விற்பது அல்லது ஹைதர் அலியின் கோழிக்குஞ்சுகளுக்கு செல்லப் பெயர் வைப்பதுடன் புனைவுச்சம் எய்துவது.மிக முயன்று பத்து ’உலகப் படம்’ பார்த்து ஒரு சிறுகதைத் தொகுப்பு தேற்றுவது .விதிவிலக்குகள் நிலைக்கின்றன எப்போதும் போல் .
திரைப்படங்கள் ஆம் திரைப்படங்கள் அடைந்திருக்கும் இடம் மிகவும் துயர் படர்ந்தது.தீவிர இலக்கியத்திற்கும் திரைப் படங்களுக்கும் உள்ள தொடர்பு நுட்பமானது. .சிவப்பு மல்லியும் ,சோறும்,வீடும் வந்த மனிதா மனிதா காலத்தில்தான் வானம்பாடிகள் தங்கள் நெம்புகோல் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள் .இன்னொரு புறம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் காலவெளிச் சேர்க்கையாய் கவிதைகளில் கடலுக்கு அடியில் சிப்பிகளை நகர்த்திக் கொண்டிருந்தார்கள் அல்லது லோலிதாக்கள் அபிதாக்களாய் ஜேஜே என நாவல்களில் உதைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.பின்நவீனத்துவம் என்பதை வடிவம் என்று ’தப்பர்த்தம் பண்ணிக்’ கொண்டு எண்களைத் தலைப்பாக்கி நாவல் எழுதிய காலத்தையும் கடந்தோம்தானே .ப்ளாஷ் பேக் போகட்டும் செர்பியன் டோனில் இருந்து உங்கள் திரை 7டி டிஜிட்டலுக்கு மாறட்டும் ,இன்றைக்கு வருவோம்
சமீபமாய் கொண்டாடப்படும் ஆகாசத்திண்டெ நிறம்,பர்ஃபி போன்ற திரைப்படங்கள்.(நந்தலாலா பாடிய முகமூடியை எல்லாம் பட்டியலில் தயவு செய்து சேர்க்காதீர்கள் ) கிம்கிடுக்கும் டால்ஸ்டாயின் அறமும் திருந்திய குமாரனின் கதையும் கலந்தால் ஆகாசத்திண்டே நிறம் கிடைத்து விடுகிறது . சார்லி சாப்ளினின் அட்வெஞ்சர்-சிட்டி லைட்ஸ் ,நோட்புக் படத்திலிருந்து சில காட்சிகள் ,சிங்கிங் இன் தெ ரெய்ன் ,பஸ்டர் கீட்டன் காப்ஸ்,மெலனா,கோஷிஷ் -ஹிந்தி ,கிகிஜிரோ,மிஸ்டர் பீன் ,ஜாக்கிச் சான்,அமேலி-ல் இருந்து இசை கொஞ்சம் ..போதும் பர்ஃபி தயார்.இந்த கலவைகள் சுவாரஸ்யமாய் இருக்கத்தான் இருக்கின்றன என்றபோதும் எத்தகைய வறட்சி இது .
சென்ற வருடம் அதிகம் கவனிக்கப்பட்ட கவிதைத் தொகுப்புகள் பெரிதும் மையம் அற்ற கவிதைகளைக் கொண்டவை .தமிழ்ப்படம்,மது பானக் கடை போன்ற திரைப் படங்கள் இத்தகைய வகைமைக்குள் அடங்குவன என வரையறுத்துக் கொண்டு பேசிப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.உலகமயமாக்கலின் காலத்திற்கு முன்பே திணை திரிந்த நிலங்களுடன் வாழப் பழகி விட்டோம்.இன்று வேறோர் பொதுத் திணை காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது
உதவியவை: தான்க்வீட் ஒளிக் கோர்ப்புகள்
Posted by நேசமித்ரன் at 9/21/2012 03:59:00 AM 8 comments
Labels: இலக்கியம், கவிதை, சினிமா, நேசமித்ரன், விமர்சனம்
Thursday, September 13, 2012
கீழக்குயில்குடி - சமணர் படுகை
மேலே உள்ள படத்தில் உள்ளதுதான் செட்டிப் புடவு என்றழைக்கப்படும் சமணர் படுக்கை.குகையின் உள்ளே இருவர் தங்கக் கூடிய அளவுக்கு இடம்,கசிந்து வரும் சுனை நீர்(திகம்பரர்கள் சுனை நீர் மட்டுமே அருந்துவார்களாம்) என கடும் கோடையில் கூட அவ்விடம் குளிர்ச்சியுடன் இருக்குமெனப் புரிந்தது.குகையின் மேற்புறத்தில் சில சிற்பங்கள் சமண வேதங்களின் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் வகையில் சில புடைப்புச் சிற்பங்கள். வெளியில் தீர்த்தங்கரரின் சிலை. 1200 வருடப் பழமையைப் பார்க்கையில் பிரமிப்பு அடங்குவதில்லை.வெளியிலும் உள்ளேயும் இருக்கும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளில் உள்ளது. திருக்காட்டான் பள்ளியில் (அருப்புக்கோட்டை அருகில்) அமைந்திருந்த பள்ளியின் மாணவர்களும் ஸ்ரீவல்லபன் என்பவரும் சேர்ந்து அமைத்துக் கொடுத்த படுகை என்கிறது கல்வெட்டு.
உள்ளே காணப்படும் புடைப்புச் சிற்பங்களில் வரிசைக்கிரமமாக பத்மாவதி,மூன்று தீர்த்தங்கரர்கள் மற்றும் அம்பிகாவின் சிற்பங்கள்.இதில் பத்மாவதியின் சிற்பம் சிங்கத்தின் மீதமர்ந்து எதிரில் உள்ள யானையின் மீதுள்ள அரக்கனுடன் போரிடுவது போல் வடிக்கப்பட்டுள்ளது.யானை என்பது ஆசீவகர்களுக்கான குறியீடாக இருக்கலாம் என்கிறார் திரு.சாந்தலிங்கம்.பிறகு அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு அடுத்து உள்ள குன்றில் ஏறினால் அங்கும் புடைப்புச் சிற்பங்களும் சுனையும். மீண்டும் கல்வெட்டுகள். அற்புதமான அனுபவம்.
மேலும் சில படங்கள்...
Posted by ஸ்ரீதர்ரங்கராஜ் at 9/13/2012 11:32:00 AM 6 comments
Labels: கீழக்குயில்குடி, சமணப் படுகை, சமணர், சமணர் மலை, மதுரை, ஸ்ரீ
Wednesday, September 12, 2012
மதுரை மாநகரில் பதின்வயது
டாப்படிக்கிறதுனு ஒரு சமாசாரம் இருக்கு!
இருக்கறதுலயே நல்ல ஜன நடமாட்டம் இருக்கற ஒரு தெரு முக்கு!
அந்த முக்குல வந்து சேருற தெருவுல இருக்கற, ஒம்போதாப்புல இருந்து பன்னென்டாப்பு ப்டிக்கிற பசங்க!!
ரெண்டு சைக்கிள்!!
தெருவுல பார்க் பண்ணிருக்கற டூவீலர் சீட்!!
என்ன பேசுறோம், என்ன செய்யப்போறோம், நமக்கு என்ன பிரச்சனை இருக்கு, பாஸ் ஆவோமா ஃபெயில் ஆவொமானு எந்த கவலையும் இல்லாம சரளாக்களையும், வனஜாக்களையும் சைட் அடிக்கிற சுகம் இருக்கே.....
பரம சுகம்!!!
Posted by Narayanaswamy G at 9/12/2012 10:07:00 AM 1 comments
Labels: நாராயணசாமி
கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால்
நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும்
பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச்
சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத 5
கொற்கைக்கிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக்
கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து
வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்றப்பதியைச்
சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே
நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் 10
அளவரிய ஆதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக்
களப்ரனென்னும் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின்
படுகடன்முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வௌிப்பட்டு
விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக் 15
கோவும் குறும்பும் பாவுடன் முறுக்கிச்
செங்கோ லோச்சி வெண்குடை நீழற்
றங்கொலி நிறைந்த தரணி மங்கையைப்
பிறர்பா லுரிமை திறவிதின் நீக்கித்
தன்பா லுரிமை நன்கன மமைத்த- 20
மானம் பேர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த
கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன்
மற்றவற்கு மகனாகி மகீதலம் பொதுநீக்கி
மலர் மங்கையொடு மணனயர்ந்த 25
அற்றமிலடர் வேற்றானை யாதிராச னவனிசூளாமணி
எத்திறத்து மிகலழிக்கும் மத்தயானை மாறவர்மன்; மற்றவர்க்கு
மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து
விக்ரமத்தின் வௌிப்பட்டு விலங்கல்வெல்பொறி வேந்தர்வேந்தன்
சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன்வானவன் செங்கோற்சேந்தன் 30
ஸ்வஸ்திஸரீ
அமிர்தகிரணன் அன்வயத்தில் ஆகண்டலனது அழிவகல
சமர்முகத் தசுரகணந் தலையழியச் சிலைகுனித்து
வடவரையது வலாரசூளிகை மணிக்கெண்டைப் பொறிசூட்டியுந்
தென்வரைமிசைக் கும்போத்வனது தீந்தமிழிற் செவிகழுவியும்
ஹரிஹயன தாரம்பூண்டும் அர்தாசன மாவனோடேறியும் 5
சுரிவளையவன் றிருமுடிமிசைத் தூணிபலபடத் தோளேச்சியும்
ஓதமீள வேலெறிந்து மோராயிரங் கிரதுச்செய்தும்
பூதகணம் பணியாணடும் புவனதலம் பொதுநீக்கியும்
யானையாயிர மையமிட்டும் அபரிமிதமதி செயங்கள்செய்து
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்- 10
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகிப்
பகைப்பூபர் தலைபணிப்பப் பரமேசுரன் வௌிப்பட்டு
அரிகேசரி அசமசமன் அலங்கிய விக்ரமன் அகாலகாலலெனத்chinnamanur
ஸ்வஸ்திஸரீ
திருமகள் செயமகள் திருப்புயத் திருப்ப
இருநிலத் தொருகுடை நிற்பப் போர்வலி
செம்பியர் சினப்புலி ஒதுங்க அம்புயர்
மேருவில் கயல்விளை யாடப் பார்மிசை
மந்த... ... ... ... ... ... மாற்றி - 5
நாற்றிசை மன்னவர் திறைமுறை அளப்ப
மன்னவ . . . . . . . . .ந் தருளும்
மாமுதல் மதிக்குலம் விளக்கிய கோமுதல்
கோச்சடைய பன்மரான உடையார் சீ வல்லப
தேவர்க்கு யாண்டு ஆறாவது. . . .
நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் 5
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் 20
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்.
இமயக் குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒருநிலைப் பொய்கையோடு ஒக்கும்--- நின் குன்றின் 15
அருவி தாழ் மாலைச் சுனை.
முதல்வ! நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்.
குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ,
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப, 20
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்! கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ, 30
காலொடு மயங்கிய கலிழ் கடலென,
மால் கடல் குடிக்கும் மழைக் குரலென,
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென,
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் --நின்
குன்றம் குமுறிய உரை. 35
Posted by Geetha Sambasivam at 9/12/2012 09:55:00 AM 0 comments
Labels: கீதா சாம்பசிவம்
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு
Posted by தருமி at 9/12/2012 09:02:00 AM 2 comments
Labels: தருமி, நிழல்படங்கள், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்