Monday, December 31, 2007

ஆறுபடை வீட்டில் திருப்பரங்குன்றம் முதல் படையானது ஏன்?

சென்ற வாரம் மாலையில் திருப்பரங்குன்றத்திற்குப் போக நேரிட்டது. நல்ல கூட்டம், சிறப்புக் கட்டணத் தரிசனத்துக்கே இருந்தது. சிறப்புத் தரிசனத்துக்குத் தான் சென்றோம். அங்கே தரிசனம் செய்யப்போகும் முன்னர் முதலில் அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்த பின்னரே முருகன் ஆலயத்திற்குச் செல்வது மரபு. ஆனால் நேரமின்மையால்,
முருகன் ஆலயத்திற்கே முதலில் சென்றோம். சிறப்புத் தரிசனச் சீட்டு வாங்கிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஒரு அம்மன் சன்னதி, பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டது உள்ளது, எனினும் கூட்ட மிகுதியால் தரிசனம் செய்ய முடியவில்லை. பின்பு ஐந்து தெய்வங்களும் சேர்ந்து அருள் பாலிக்கும் இடம் வந்து, சிவலிங்கத் திருமேனி தரிசனம் முடிந்து கற்பக
விநாயகர் தரிசனம் செய்தோம். விநாயகருக்கும், சிவனுக்கும் சேர்த்து ஒரு அர்ச்சகர் இருந்தார். இரு சன்னதிகளிலும் தனித் தனியே தீப ஆராதனை செய்து வழிபடச் செய்தார். ,மிகச் சிறிய வயதினர் தான் என்றாலும் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன். ஏன் ஐந்து பேரும் ஒன்றாக வந்திருக்கிறார்கள் என.

முருகனுக்குத் திருமணம் என்றால் அம்மை, அப்பன் இல்லாமலா? ஆகவே ஐயன், தன் மூத்த மகன் விநாயகனுடனும், விஷ்ணுவுடனும், மஹிஷாசுர வதம் முடிந்த நிலையில் இருந்த அன்னையை அவசரம், அவசரமாய் இழுத்துக் கொண்டும் வந்திருக்கிறான்.
விஷ்ணு மாமன் அல்லவா? மேலும் முருகப் பெருமான் சன்னதியில், திருமணம் நடத்தி வைக்கும் பிரம்மா, நாரதர், சூரிய, சந்திரர், இந்திரன் என அனைவரையும் தனித்தனியாகச் சொல்லிக் காட்டி தீப ஆராதனை செய்தார். முருகனுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரே குருக்கள் , அம்பிகைக்குத் தனியாக ஒரு குருக்கள் என இருந்தனர். எல்லா சன்னதியிலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப,அத்தனைக் கூட்டத்திலும் அர்ச்சனைகள் செய்து தரப்பட்டது.

"அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டுநேரே முருகனுக்குப் போய்விடும்.
"முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை."

மேலே உள்ளது பலூன் மாமாவின் திருப்பரங்குன்றம் பற்றிய வர்ணனை! ஆனால் அர்ச்சகர்கள் கேட்டுக் கொண்டே அர்ச்சனைகள் செய்தனர். முருகன் என்ற ஒரு காரக்டருக்கு மட்டுமே விழா எடுப்பதாயும் சொல்லி இருக்கிறார் பலூன் மாமா. உண்மைதான், கல்யாணத்தில் கல்யாணப் பையன் தான் ஹீரோ, மற்றவர் எல்லாம் ஜீரோதானே?
எந்த அர்ச்சகரும் எந்த பக்தரையும் "டேப்பர்" எனப் பார்க்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் எங்கள் பயணத்திலேயே இந்தச் சன்னதியிலும், பழனியிலும் மட்டுமே தரிசனம் நன்கு செய்ய முடிந்தது. இது தான் உண்மை! மற்றக் கேள்விகளுக்கான பதில் தொடர்கிறது.

"பலூன் மாமாவின்கேள்வி ஒன்று: ஐந்து காரக்டருக்கான ஒரு பொதுக்கோவில் எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?"

முதலில் இது ஐந்து பேருக்கான கோவிலே இல்லை. எனக்குத் தெரிந்தவரை, இதைத் தென்பரங்குன்றம் எனச் சொல்லுவார்கள். பரம் என்பது எல்லையற்ற அந்தப் பரம்பொருளான சிவனைக் குறிக்கும். இங்கே மலையே லிங்க வடிவில் உள்ளது. மேலும் தென்னாட்டில் உள்ளது. ஆகவே இதன் பெயர் தென்பரங்குன்றம் என ஆயிற்று. திரு என்பது அடைமொழி, சிறப்பாகச் சொல்லுவதற்குப் பயன்படுத்தப் பட்டு பின்னாட்களில் திருப்பரங்குன்றம் என்பது நிலைத்திருக்கலாம். சிவனடியார்கள், தென் கைலை மலை எனவும் இதைச் சிறப்பித்து இருப்பதாய்ச் சொல்கின்றனர். மலையின் உச்சியிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. லிங்கவடிவில் காட்சி அளிக்கும் இம்மலையில் சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது.

குருபக்தியின்றி ஞானம் பெற முடியாது. அன்னை மடியில் அமர்ந்து சோமாஸ்கந்தனாய் முருகன் அருள் பாலித்திருந்த வேளையில், பிரணவ மந்திர உபதேசத்தை அன்னைக்கு, இறைவன் உபதேசிப்பதைக் கேட்க நேர்ந்தது. நடந்தது தற்செயலான ஒன்று என்றாலும், ஆறுமுகனே பிரணவ மந்திரத்தை அறியாதவன் அல்ல என்றாலும், சிவனும், தானும் ஒன்றே என்பதை உணர்ந்திருந்தாலும், எதுவும் முறையின்றி நடக்கக் கூடாது எனத் தன் குற்றத்திற்குப் பரிகாரம் தேடி இங்கே வந்து தவம் செய்த முருகனுக்கு, அம்மனும் அப்பனும் காட்சி கொடுக்கின்றனர். ஐயனைப் "பரங்கிநாதர்" எனவும், அம்மையை "ஆவுடை நாயகி" எனவும் அழைக்கின்றனர். அந்த ஆலயம் தான் தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என அழைக்கப் படுகிறது, என்றும், முதலில் அங்கே போய்த் தரிசனம் முடித்து விட்டே பின்னர் முருகன் ஆலயம் செல்லவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

மற்றக் கேள்விகளுக்குப் பதில் தொடரும். தகவல்கள் கோயிலில் மட்டுமின்றி கூகிள் தேடலிலும் தேடி உறுதி செய்து கொண்டேன்.

Friday, December 28, 2007

பலூன் மாமாவின் கேள்விகளுக்குப் பதில், சில நாட்களில்!

"இங்கே...

(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை
(D) கற்பகவிநாயகர்
(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.

அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.


கேள்விகள்:


(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?"


மேலே குறிப்பிட்டவை பலூன்மாமாவின் திருப்பரங்குன்றம் பற்றிய சந்தேகங்கள். இந்த வாரம் திடீரென நேரிட்ட மதுரைப் பயணத்தில் திருப்பரங்குன்றம் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது என்னுள்ளும் எழுந்த இந்த சந்தேகங்களுக்குப் பதில் கிடைத்தது. சீக்கிரம் விரிவாய்ப் பதில் எழுதுகிறேன். ஒரு வாரம் ஊரில் இல்லாததால் முதலில் வீடு ஒழுங்கு செய்தலுக்கு முதல் கவனிப்புத் தேவை. ஆகவே சற்று அவகாசம் கிடைத்ததும் பதிவிடுகிறேன். நன்றி.

Saturday, December 15, 2007

மதுரை அழைக்கிறது...

மதுரை மாநகரம் பகுதியில் இருக்கும் பதிவுகள் அனைத்தையும் இன்றுதான் முழுமையாகப் படித்து முடித்தேன். நம் ஊர் என்றாலும் இதுவரை அறிந்திராத செய்திகள்தான் எத்தனை!
மலரும் நினனவுகள், தலபுராணம் என்று பகுதிகள் அனனத்தும் மீண்டும் நம் ஊர்ப்பக்கம் போய் வரச் செய்தன..இதைப் படித்ததும் கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் ஆதங்கம் எல்லாமே எழுந்தது மனதில்...இத்தனை பேர் நம் ஊர்க்காரர்கள் இருக்கிறார்களேயென்ற திருப்தி, நம் கல்லூரியில் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி, ஊரைப் பற்றிக் கொஞ்சம் புரிதல், சில புதிய கேள்விகள் எழுப்பிய சிந்தனை, இன்னும் நிறையப் பதிவுகள் பலரிடமிருந்து வர வேண்டுமே என்ற ஆதங்கம்..எல்லாம் எழுந்தது.

சமீபத்தில் படித்த செய்தி..மதுரையிலிருந்து கன்னியாகுமரி, கொடைக்கானல், இராமேஸ்வரம் முதலிய இடங்களுக்கு ஹெலிகாப்டர் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இன்னும் 2 தினங்களில் மதுரை மண்ணிற்கு விடுமுறைக்காக 2 வாரம் வரப் போகிறேன்..இந்த முறை இன்னும் நமக்குத் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்ற புது உணர்வுடன்..

இந்தக் குழுவில் இணையும் முன்னே என்னுடைய பதிவில் இடப்பட்ட 2 பகுதிகளை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

Tuesday, November 13, 2007
மாறி வரும் மதுரை மாநகர் - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்..மகேந்திரவர்மன் என்ற நபர் அனுப்பியது அது..எப்படியோ யாஹூ குழுமத்தில் எனக்கும் வந்து சேர்ந்தது..அதில் படித்த செய்திகள் மற்றும் சமீபத்தில் ஊருக்கு நான் சென்ற போது கண்டவை கேட்டவையே இந்தப் பதிவுக்குக் காரணம்..

மதுரை ஒன்றுதான் மாறி வரும் உலகில் மாறாத நகரம் என்று என் கணவர் உட்பட அநேகர் கூறியதுண்டு..(என் கணவருக்கும் என்னைப் போல் மதுரைதான் சொந்த ஊர் என்பது வேறு விஷயம்)..அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய நேரம் இப்போதுதான் கைகூடியுள்ளது..மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி அடுக்கடுக்காகத் தாமரை இதழ்களைப் போல அடுக்கி வைக்கப்பட்ட தெருக்கள்...நிறைய மாறாதிருந்த அந்தப் பகுதியில் கடந்த வருடம் முதல் தடாலடி மாற்றங்கள்...பிரம்மாண்ட கட்டடங்களை முதலில் அறிமுகம் செய்த பெருமை பல நகைக்கடைகளையே சாரும்...எத்தனையோ காரணங்கள் கூறியதுண்டு...கோவில் கோபுரத்தை விட உயர்வான கட்டடங்களைக் கட்டக்கூடாது என்பதுதான் காரணம் என்று சிலரும்...ஆழமாக அஸ்திவாரம் தோண்டுவதால் பாதாளக் கழிவு நீர்க் குழாய்கள் பாதிக்கப்படும் என்று சிலரும் பலவாறாகக் காரணங்கள் கூறினர்...அடுக்கு மாடிக் கட்டடங்கள் இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கட்டடங்கள் பல்கிப் பெருகி வருகின்றன என்பது மதுரைவாசிகளை மகிழவைக்கும் உண்மையாகும்..

இன்னும் ஏற்படவிருக்கும் மாற்றங்களும், துறைகளும்:

1.ரியல் எஸ்டேட் துறையில் அபரிமித வளர்ச்சி...போட்டா போட்டி..தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் வரப்போவதற்கான அறிவிப்பின் எதிரொலி..நாளுக்கு நாள் நிலத்தின் மதிப்பு உயருவதால் உடனே விற்பதற்கு யோசிக்கும் உரிமையாளர்கள்..

2. விரிவாக்கப்படும் விமான நிலையம் கூடிய சீக்கிரம் பன்னாட்டு விமான நிலையமாகப் போகிறது..

3. அங்கங்கே முளைக்கும் townships..பல தரப்பட்ட நவீன வசதிகளுடன்...

4.பல பகுதிகளில் அமையவிருக்கும் தொழிற்பேட்டைகள்

5. சென்னை மற்றும் கேரளா சார்ந்த பிரபல நகைக்கடைகளின் கிளைகள்

6. மதுரையின் பழம்பெரும் திரையரங்குகள் பல பிரபல் துணிக்கடைகளின் கிளைகளாக மாற உள்ளன.

7. மதுரையில் கால்பதிக்கவிருக்கும் அநேக தகவல் தொழில் நுட்ப மையங்கள் மற்றும் பூங்காக்கள்

8. உருவாகப் போகும் 3 மற்றும் 5 நட்சத்திர விடுதிகள்

9. பெருகி வரும் இலகுரக மற்றும் கனரக பிரபல மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள்

10.வரவிருக்கும் திரையரங்குகளுடன் கூடிய Multiplex கட்டடங்கள்

11.சுற்றிலும் கட்டுமானத்தில் இருக்கும் நான்கு வழிப் பாதையில் தேசிய நெடுஞ்சாலைகள்..

இன்னும் இன்னும் அநேக துறைகளில் மாறி வருகிறது மதுரை மாநகர்..

மதுரை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் என்ற தகுதிக்குத் தயாராகிவிட்டது என்று கட்டியங்கூறும் சில தகவல்கள் அடுத்த பகுதியில்...

Posted by பாச மலர் at 4:14 AM 4 comments

Labels: மதுரை

Saturday, November 17, 2007
மாறி வரும் மதுரை மாநகர் - 2


மதுரையின் சிறப்புகள் பல அனைவரும் அறிந்ததே...தென் தமிழ்நாட்டின் தலைநகரம், தூங்கா நகரம், கிழக்குப் பகுதியின் ஏதென்ஸ், கோவில் நகரம் என்ற பல சிறப்புப் பெயர்களைப் பெற்ற நகரம்.


இரண்டாவது தலைநகரம் என்பது தேவையில்லை என்று தற்சமயம் வாதிட்டாலும், நிர்வாக சவுகரியங்களுக்காகவும், செயலாக்கத் திட்டங்களை விரிவு மற்றும் விரைவு படுத்துவதற்காகவும் என்று பல காரணங்களுக்காக இன்னொரு தலைமையகம் தேவை என்ற நிலை குறுகிய காலகட்டத்துக்குள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் ஏராளமாய் உள்ளன. அந்த நிலை ஏற்படும்போது மதுரை நகரின் பெயர் முன்னிலை வகிக்கும்.


இராமர் சேது முனையல், உள்மாநில, வெளிமாநில அளவில் அநேகப் பெரு நகரங்களை இலகுவாகச் சென்று சேரும் வண்ணம் புவியியல் அமைப்பு மற்றும் போதுமான போக்குவரத்து வசதிகள்,(இதனால்தானே அரசியல் முதல் சினிமா வரை அனைத்து மாநாடுகளுக்கும் மதுரை தமுக்கம் மைதானம் களமாகிறது..) கூப்பிடு தூரத்தில் கவின்மிகு சுற்றுலா மையங்கள்,வழிபாட்டுத் தலங்கள், தரமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உயர்நீதிமன்றக் கிளை, விரைவில் அமையவிருக்கும் மண்டலக் கடவுச் சீட்டு அலுவலகம்..சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவரின் தேவைகளும் பூர்த்தியாக்கும் விலைவாசி நிலவரம், இன்னும் இன்னும்...


முத்தாய்ப்பாக ஒரு செய்தி...JNNURM - Jawaharlal Nehru National Urban Renewal Mission மதுரைக்கு அளிக்கவிருக்கும் பல ஆயிரம் கோடிகள் ...


மதுரைவாசி என்பதால் மட்டுமல்ல நியாயமான பல காரணங்களுக்காகவும் மதுரை மாநகர் இரண்டாவது தலைநகரமாகும் நன்னாளை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்..

- மலர்.

Posted by பாச மலர் at 4:17 AM 9 comments

Labels: மதுரை

Tuesday, December 11, 2007

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்

நான் சென்ற பதிவில் சொன்னது போல் 'திருப்பரங்குன்றம்' என்ற இடத்தில் உள்ள குன்று, பல வரலாற்றுச் சம்பவக்களுக்கு மவுனச் சாட்சியாய் இருக்கும் ஒரு இடம். ஒரு சிறந்த ஆய்வுக் குழுவால் மட்டுமே அதன் இரகசியங்களை வெளிக்கொணரமுடியும்.

வரலாற்றில் இதுதான் உண்மை என்று யாராலும் வரையறுக்க முடியாது. எந்த தகவல் உண்மைக்கு மிக அருகில் இருக்கலாம் என்று வேண்டுமானால் பேசலாமே தவிர, இதுதான் உண்மை என்று சொல்லவே முடியாது. நாளை தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கண்டறியப்படும் ஒரு கல்வெட்டு , இதுவரை நாம் நம்பிவந்த எல்லாத் தகவல்களையும் புரட்டிபோடும் ஒரு புதிய ஆதாரத்தை வைத்து இருக்கலாம், யார் கண்டார்?

வரலாறும் , அறிவியலும் இன்றைக்கு உள்ள நிலையில் சில உண்மைகளைச் சொல்லும். நாளையே வேறு ஒரு ஆராய்ச்சி, முற்றிலும் புதிய ஒரு கருத்தைச் சொன்னால , அதையும் ஏற்றுக்கொண்டுவிடும். "இதுதான் இறுதி" என்று சொல்லாமல், தகவல்களைப் பதிவதே உண்மையான அறிவியல்.

வரலாறும் அப்படியே , இன்று அறியப்படாமல் இருக்கும் சில உண்மைகள்,நாளை கண்டறியப்படலாம். இன்று காணக்கிடைக்காத வரலாறு சம்பந்தமான தகவல்கள், வருங்காலத்தில் சாத்தியமாகலாம்.அப்போது புதிய தவல்கள் கிடைக்கும்.புராணங்களும் புனிதப் புத்தகங்களும் அப்படி அல்ல. அவை கேள்விக்கு அப்பாற்பட்டவைகள். "நம்பிக்கை", "நம்பு" என்ற கட்டளைக்குள் வருபவை. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி கேட்ப்பவர்களுக்கு அங்கே இடம் இல்லை. முகம்மதின் இருப்பை கேள்வி கேட்பவன் ஒரு முஸ்லிமாக இருக்கமுடியாது. மதம் சார்ந்த புராணங்கள், நம்பிக்கை என்ற ஒரு சாவி இருந்தால் மட்டுமே நம்மை ஏற்றுக் கொள்ளும். கேள்விகள் கேட்கும் பட்சத்தில் கதவுகள் அடைக்கப்படும்.

கேள்வியைக் கேட்டவன் அவன் நினைக்கும் பதில்களைப் பகிரவேண்டும் அல்லது எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிவிக்க வேண்டும். நான் எழுப்பிய கேள்விகளுக்கான விடைகளை எனது பார்வையில் சொல்கிறேன். இங்கே சொல்லப்போகும் பதில்கள் யாவும் எனது சாதாரணப் பார்வையில் தோன்றிய தனிப்பட்ட எனது கருத்துகளே தவிர எந்த ஆராய்ச்சியின் முடிவும் அல்ல. அது போல் ஒட்டுமொதத மதுரைப்பதிவர்களின் சார்பானதும் அல்ல.


(1) 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதே கோவில் கல்கத்தாவில் இருந்திருந்தால் "திருப்பரங்குன்றக் காளி" கோவிலாக அடையாளப்படுத்தப்பட்டு , துர்க்கை முக்கியமான தெய்வமாகக் கொண்டாடப்பட்டு , மற்றவர்கள் இரண்டாம் கட்ட தெய்வங்களாக கட்டமைக்கப்பட்டு இருப்பார்கள்.

இதே கோவில், காசி போன்ற இடங்களில் இருந்திருந்தால் அர்த்த கிரீஸ்வரர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பார்.

ஆந்திராவில் இருந்திருந்தால் பவளக்கனிவாய் ,அருள் கொடுக்க முதல் வரிசைக்கு வந்து இருப்பார்.

பல தெய்வ உருவங்கள் சமமாக உள்ள கோவில்கள், அது இருக்கும் இடம் பொருத்து நேயர் விருப்பம் போல் எதோ ஒரு தெய்வம் மட்டும் முன்னிலைப்படுத்தப்படும். எது, எங்கு, விலைபோகிறதோ அதுவே முன்னிலைப்படுத்தப்படும். இது சந்தைப்படுத்தலின் உத்தியே தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லை.

பல்வேறு காரணங்களால் முருகன் தமிழ்க்கடவுளாக அறியப்படும் தமிழகத்தில், அவனே முதற் பொருளாய் இருப்பதில் வியப்பில்லை.

முருகன் விலை போவான் என்றானவுடன், அவன் சார்ந்த கதைகளும், காவியங்களும் அதிகமாக இடம் பிடித்துவிட்டது. மீனாட்சி- சொக்க்கநாதர் ஆலயத்திலும் இந்த சந்தைப்படுத்தல் உத்தியைக் காணலாம். இந்தியா அளவில் சிவபெருமான் என்னதான் பெரிய கடவுளாக இருந்தாலும், மதுரை மண் வாசம் கதைகளுக்குச் சொந்தக்காரியான மீனாட்சியே முக்கிய இடம் வகிக்கிறாள்.
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

என்னிடம் இதற்கான துல்லியமான விடையில்லை. ஆனால், எனது புரிதல்களின் அடிப்படையில் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

மதுரையில் சமணம் அழிந்து சைவ,வைணவ சித்தாந்தங்கள் தலையெடுக்கும் போது முருகனின் கதைகள் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம். சமணத்தை அழிக்கும் நோக்கில் இடைவிடாது கதைகள் புனையப்பட்டு இருக்கலாம்.13ம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தில் அல்லது 12 ஆம் நூற்றாண்டுகளின் கடைசிக்காலங்களில் புராணங்கள் திருத்தப்பட்டு இருக்கலாம்.

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

தமிழக வரலாற்றில் மதுரை என்பது மிகப்பழமையான நகரம். இக்கால அரசியலில், கட்சி ஆரம்பிப்பவர்கூட முதல் மாநாட்டை மதுரையில் தொடங்கவே ஆசைப்படுகிறார்கள். மேலும் தமிழ்ச் சங்கம் என்றால் அது மதுரை என்று ஆகிவிட்டது.

முருகன் தமிழக் கடவுளாக அறியப்படும்போது ,அவனின் முதல்வீடு மதுரையில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதன் பொருட்டே தனியான அறை ஏதும் இல்லாமல், ஒரே குன்றில் மற்ற தெய்வங்களுடன் இருந்தாலும், இந்த இடம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.

ஆன்மீக அரசியலில் நடந்துள்ள மிக நுண்ணியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன்.

அல்லது இந்த இடம் மற்ற முருகன் தலங்களுடன் ஒப்பிடும்போது பழமையான ஒன்றாக (கால அளவில்) இருக்கும் வேளையில் , முதல் வீடாக அடையாளம் காட்டப்பட்டு இருக்கலாம்.
விரிவான முந்தைய கருத்துப் பரிமாற்றத்தை வாசிக்க...
திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html


Picture Courtesy:
http://www.yogamalika.org/

Sunday, December 9, 2007

தலபுராணம் - 5

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் - எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 காலடி தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!


(காலேஜ் ஹவுஸ்)
படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ - ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு - நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி - நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் - யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…

Friday, December 7, 2007

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்

தி ருப்பரங்குன்றம்! தன்னுள் வரலாற்றின் காயங்களையும், எண்ணற்ற மக்களின் வேண்டுதல்களையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரு குன்று.இந்தக் குன்றைப் பற்றி பேசவேண்டும் என்றால் எந்தக் கோணத்தில் இருந்தும் பேசலாம். யாரும் தட்டையாக இதுதான் இதன் 'தல' புராணம் என்று ஒரு சில பக்கங்களில் சொல்லிவிட்டுப்போக முடியாது.சரித்திர/வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு புதையல் கிடங்கு என்பது எனது எண்ணம்.

பலருக்கும் இந்தக் குன்று முருகனின் ஆறுபடைவீடுகளில் முதல்வீடு என்ற வடிவத்தில்தான் அறிமுகமாயிருக்கும்.

குன்றைப்பற்றி கேள்விகள் கேட்க முனைந்தால் ...

  • மலையின் மேல் இருக்கும் சமணப்படுகை பற்றி...
  • மலையின் மேல் இருக்கும் சிக்கந்தர் தர்கா பற்றி...
  • மலையின் தென்புறமும் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைச் சிவன் கோவில் பற்றி (கி.பி 2 ஆம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை சமணர் கோவிலாக இருந்திருக்கிறது)
  • இபோது இருக்கும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும் ஒருகாலத்தில் சமணர்களின் குடைவரைக் கோவிலாக இருந்திருக்குமோ என்ற அய்யங்கள் பற்றி ... (சமணர் கோவிலாக இருந்ததை அழித்து அல்லது மறைத்து ,ஒட்டுமொத்தமாக இந்துத் தெய்வங்கள் அனைத்தையும் சுவற்சிற்பமாக செதுக்கிவிட்டார்களோ என்று சந்தேகம் , கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் வந்தது உண்டு.)

....என்று பல விசயங்களை ஆராயலாம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. மேற்சொன்னவை எல்லாம் ஆராய்ச்சிக்கான விசயங்கள். வரலாற்றின் பாதையில் கட்டுக்கதைகளை நீக்கிவிட்டு ஆராய வேண்டும்.

பக்த கோடிகள் மற்றும் வரலாற்றை அறிந்தவர்களுக்கான கேள்வி.

ஒவ்வொரு கோவிலிலும் கருவறை அல்லது மூலஸ்தானம் அல்லது சன்னிதி என்ற ஒரு தனிப்பட்ட அறை இருக்கும். இந்த அறையில்தான் அந்தக் கோவிலின் கதாநாயக கேரக்டர் இருக்கும். திருப்பரங்குன்றத்தில் அப்படி ஏதும் கிடையாது.

அநேக வீடுகளில் 5 தெய்வங்களின் ஒரே சட்டகத்தில் இருக்குமாறு ஒரு படம் இருக்கும். திருப்பரங்குன்றமும் அப்படியே. இது தனியொரு கேரக்டருக்கான கோவில் இல்லை.

(மேலே உள்ள படத்தில்,பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை அப்பிராணி பக்தர்களுக்கு.நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ள பாதை 10 ரூபாய் மொய் செய்பவர்களுக்கு. நீல வண்ணப்பாதையில் சென்றால்தான் (A) மற்றும் (E) கேரக்டர்களைப் பார்க்க முடியும்)

இங்கே...
(A) பவளக்கனிவாய் பெருமாள்
(B) முருகன்
(C) துர்க்கை

(D) கற்பகவிநாயகர்

(E) அர்த்தகிரீஸ்வரர் (சிவன்)
என்று 5 தெய்வ உருவங்கள் உண்டு.


யாருக்கும் தனியாக ரூம்கள் இல்லை. மேலே சொன்ன அனைவருக்கும் ஒரே அந்தஸ்து கொடுக்கப்பட்டே சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கும். அது அந்தக்காலம், அதாவது கோவில் சிற்பத்தை செதுக்கியவர்களின் காலத்தில்.

இப்போது முக்கியத்துவம் எல்லாம் முருகனுக்கே. அதுவும் (A) பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் (E) அர்த்தகிரீஸ்வரர் இருவரும் பக்தகோடிகளுக்கு நேரடிப்பார்வை அளித்துவிடாவண்ணம் அல்லது முருகனுக்கு மட்டுமேயான கூட்டத்தை ஒதுக்கி வழிவிடுவதற்காக (A) & (B) க்களை ஓரம் கட்டி இருப்பார்கள். அதற்கு சாட்சியாக இருப்பது (A) & (B) மறைத்து கட்டப்பட்டுள்ள சுவர்.மக்களை ஏமாற்றும் வண்ணம் இந்தச் சுவர் கற்களுக்கு இணையாண வண்ணம் பூசப்பட்டு இருக்கும். அதை அறிந்து கொள்ள ஆராய்ச்சிப்பார்வை எல்லாம் தேவை இல்லை. அருகில் இருந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டு நேரே முருகனுக்குப் போய்விடும். "முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை.


கேள்விகள்:

(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?


தகவலுக்காக:

திருப்பரங்குன்றம் - தலவரலாறு
http://sriramprasath.blogspot.com/2007/01/blog-post.html

திருமலையின் மதுரை சமணக்குகைகள் குறித்தான பதிவுகள்


மதுரை சமணக் குகைக் கோவில்கள் - ச. திருமலை
http://www.maraththadi.com/article.asp?id=2696

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2698

மதுரை சமணர் பள்ளிகள், குகைகள், சிற்பங்கள், குன்றுகள்-
தொடர்ச்சி... - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2699

மேலக்குயில்குடி சமணர் குன்று, குகை, திருப்பரங்குன்றம்
சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், சமணர் குகைக் கோவில் மற்றும் படுக்கைகள் - ச. திருமலை

http://www.maraththadi.com/article.asp?id=2708

**

கல்லில் ஊரும் காலம் -எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.tamiloviam.com/atcharam/page.asp?ID=17&fldrID=1

தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும் -மு. நளினி
http://www.varalaaru.com/Default.asp?articleid=416


Picture Courtesy:
www.madurawelcome.com
http://thiruparankundram.blogspot.com/2007/04/blog-post_06.html

Sunday, December 2, 2007

பிரிவும் சந்திப்பும்

அன்று பெரிய கார்த்திகை..திருப்பரங்குன்றமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரயில் நிலையம் அருகில் இருந்த அனுமார் கோவிலிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மாட்டிய கோபால் கோவிலின் வேலியோரம் இரை தேடிக் கொண்டிருந்த கோழிக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.தாய்க் கோழியும், மஞ்சள் வண்ணம், ரோஸ் வண்ணம் சாயம் பூசிய கோழிக்குஞ்சுகளும் பார்க்க அழகாயிருந்தன.'இவை எத்தனை காலம் இப்படிச் சேர்ந்திருக்கும், ஒரு நாள் பிரியத்தானே வேண்டும்' என்று நினைத்தார் கோபால்..மனிதனைப் போல இவையும் பிரிவுக்கு வருந்துமோ என்று யோசித்தார்..

வழக்கமாக காலை நேர நடைப்பயிற்சிக்கு மலையைச் சுற்றி வருவது அவர் வழக்கம்..கூடவே வரும் நடேசனும், ராசப்பாவும் அன்று வரவில்லை..நடேசனுக்கு உடம்பு சரியில்லை..ராசப்பா பெரிய பையனைப் பார்க்க சென்னைக்குப் போயிருக்கிறார். கோபாலுக்கும் 3 பையன்கள்..
மூத்தவன் அமெரிக்காவிலும், இரண்டாமவன் திருச்சியிலும் இருக்க, மனைவி, மூன்றாவது மகன்,
மருமகள் மற்றும் பேரன், பேத்தியுடன் வசித்துவந்தார். மகன் பேருந்து நிலையத்தருகில் சொந்தமாக ஒரு மருந்துக்கடைவைத்திருந்தான். சொந்த ஊரிலேயே கடைசிக் காலம் கழிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கொடுப்பினை பெற்றவர் கோபால்.

திருப்பரங்குன்றத்தைப் பற்றிய நிறைய விஷயங்கள் குறித்து எப்போதும் மற்றவர்களிடம் பெருமையாகப் பேசி வருவார் அவர். கம்பீரமான மலை, அதன் மேல் ஒருங்கே அமைந்த காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் தர்கா,(மதத்துக்காக மனிதன்தான் சண்டை போடுகிறான்..தெய்வங்கள் என்னவோ தோழமையோடுதான் இருக்கின்றன),புதிதாகப் போடப்பட்ட மலைப்பாதையில் கலந்து காணப்படும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள், எப்போதும் கலகல என இருக்கும் வீதிகள், எல்லா மாதமும் பண்டிகை, தேர்,சந்தனக்கூடு, தெருவெல்லாம் கல்யாண மண்டபம், எல்லா முகூர்த்தத்திலும் திருமணம், ஐயப்ப சீசனில் வெளியூர்க்கூட்டம், சினிமாப் படப்பிடிப்பு, வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக மேடை போட்டு அமர்க்களப்படும் பதினாறு கால் மண்டபம் என்று ஏதாவது ஒரு சாக்கில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் ஊர்.

அன்றும் அப்படித்தான் திருக்கார்த்திகைக் கூட்டம் - அந்தக் காலை நேரத்திலேயே மலை சுற்றி வருவோரின் கூட்டம் சற்று அதிகமாகஇருந்தது. மலைப்பாதை முழுவதும் திடீரென முளைத்த பல கடைகள்..கார்த்திகை மாதம் வந்ததும் நரிக்குறவர் கூட்டமும் வந்து விடும்.
அனுமார் கோவிலை ஒட்டிக் கூடாரம் போட்டு அங்கேயே தங்கிவிடுவார்கள் ஐயப்ப சீசன் முடியும் வரை. விதவிதமாக ஊசி,பாசிமணிகள், கொம்புகள், மிருக ரோமங்கள், நகங்கள் என்று அவர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் ஏராளம். சின்னஞ்சிறு லாபத்துக்காய் வியாபாரம் செய்து ஊர் ஊராய்ச் சுற்றித் திரியும் அவர்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது.

ரயில் நிலையத்துக்கு எதிர்த்தாற்போல் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அதன் அருகே நரிக்குறவர்கள் பலர் தரையில் துணி பரப்பிப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்க, குறத்திகள் இடுப்பில் சுமந்த குழந்தையுடன் கையில் பாசிகளை ஏந்தியவாறு
தெருவில் போவோர் வருவோரிடம் வியாபாரம் செய்வார்கள்.

திடீரென்று அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட எல்லோரும் அங்கே விரைந்தனர். கோபாலும் அங்கே போனார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தரையிலமர்ந்து ஓலமிட்டி அழுது கொண்டிருந்தாள். "அய்யோ ராசா! இப்டிக் கல்லத் தூக்கிப் போடுறியே.
நா என்ன செய்வேன்?" சுற்றிலும் கவலை தோய்ந்த முகத்துடன் குறவர் கூட்டம். குத்துக்காலிட்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்ஒரு நரிக்குறவ இளைஞன். அந்த அம்மா அவனது தாயாம். சின்ன வயதில் நாமக்கல்லில் காணாமற் போனவன் பல வருடம் கழித்துத்
தன் தாயைப்பார்த்திருக்கிறான் மலை சுற்ற வந்த இடத்தில்..அடையாளம் கண்டு கொண்டு பேசியிருக்கிறான். சிறுவயதில் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவன் அந்த இனத்திலேயே ஒரு பெண்ணை மணந்து குழந்தை குட்டியென்று அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டான்.

இப்போது அந்த அம்மா தன்னுடன் வரச் சொல்லி அவனையும், அவன் மனைவி, குழந்தைகளையும் கூப்பிடுகிறாள். அவன் மறுத்து விட்டான். அந்த அம்மாவுடன் வந்த ஒரு பெண் - மருமகள் போலும், அவளைச் சமாதானப் படுத்துகிறாள். அந்தக் குடும்பமும்
நாமக்கல்லை விட்டு வந்து தற்போது மதுரையில் வசிக்கிறார்கள்.தொலைபேசிச் செய்தி போய் அப்பா மற்றும் குடும்பத்தினரும் வந்து பேசுகின்றனர். குறவர் இன வழக்கப்படி எந்தக் குடும்பமும் பிரியக் கூடாது என்றாலும் இந்தச் சூழலில் எதுவும் பேசாமல் அந்த
நரிக்குறவர்களும் மெளனம் காத்திருந்தனர். என்றாலும் அந்த இளைஞன் சமாதானமாகவில்லை. கூடியிருந்தோரும் செய்வதறியாது நின்றார்கள்.

நீண்ட நேரம் போயும் அவன் சமாதானமாகவில்லை."புள்ள குட்டின்னு ஆய்ருச்சு சாமியோவ்...இவுகள விட்டுட்டு நா எங்க வாரது? அப்பப்ப வந்து ஒங்களப் பாக்குறேன்"னு சொல்லி முகவரி வாங்கிக் கொண்டு ஒரு வழியாகச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தான்.
அழுது கொண்டே சென்றனர் அவர்கள். "இந்தப் பிரிவும்,சந்திப்பும் வித்தியசமானது. பிரிவில் இதுவும் ஒரு ரகம்" என்றுஎண்ணமிட்டபடி கோபால் கனத்த மனத்துடன் வீடு நோக்கி நடக்கலனார்.

(பி.கு: இந்தச் சம்பவம் என் சிறிய வயதில் என் ஊரான திருப்பரங்குன்றத்தில் உண்மையிலேயே நடந்த சம்பவம்.கவிதை என்ற பெயரில் ஏதாவது எழுதியிருந்தாலும்..சிறுகதை எழுதுவது இதுதான் முதல் முறை..)

Friday, November 30, 2007

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு - முடிவுரை


நா ன் ஒட்டு மொத்த மருதை மாவட்டத்திற்கோ அல்லது மருதவாழ் மக்களுக்கோ representative அல்லது அதிகாரபூர்வ spokesperson கிடையாது.மீனாட்சி கோவில் குறித்தான வரலாற்றை ஆய்வு செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நியமித்த ஒரு ஆய்வு அறிஞரும் கிடையாது. உலகில் பல விசயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம் சில நேரங்களில் அவற்றிற்கு எதிவினையாற்றுகிறோம் அல்லது அது பற்றி மேலும் ஆராய முயற்சி செய்கிறோம்.எதை விமர்சிக்கிறோம் அல்லது எதை கேள்வி கேட்கிறோம் என்பது , அந்த செய்தி அல்லது நிகழ்வு , நம்முள் எற்படுத்தும் தாக்கத்தை பொருத்து இருக்கும். அது ஒருவருக்கொருவர் மாறுபடும். பெண்ணின் கைப்பை கீழே விழுந்தால் எடுத்துக் கொடுக்க வரும் அதே ஆண்கள்தான் அவள் நிர்வாணமாக உதவி கேட்டு கதறும்போது வேடிக்கை பார்கிறார்கள்.

நிகழ்காலத்தில் உள்ள மக்களால் பதியப்பட்டுக் கொண்டு இருக்கும் விக்கிப்பீடியா சொல்லும் தகவலை நம்பாதவர்கள், அவர்கள் பிறக்காத ஒரு காலத்தில் எழுதப்பட்ட புனைவுகளையும்,புராணங்களையும் அப்படியே உண்மை என்றும் அவற்றின் வழியாக சொல்லப்படும் வரலாற்றை நம்பவும் செய்கிறார்கள். புராணங்கள் அல்லது புனைவுகள் எல்லாம் வரலாறு அல்ல. அதுபோல் பெரும்பான்மையினர் பேசுவதும் வரலாறு அல்ல. இது குறித்து நமது வலைப்பதிவுகளிலே பல முறை நிரூபிக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை மேற்கோள் காட்டலாம். ஆனால், அது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.

பொன்னியின் செல்வன் என்பது ஒரு கதை/புனைவு இலக்கியம். நாம் வாழ்ந்த இதே காலத்தில் ஒரு கதையெழுதி எழுதிய கதை இது. சோழர் வரலாற்றை அறிய வேண்டும் என்பவனுக்கு இந்தக் கதை ஒரு தூண்டுகோலாக இருக்காலாம். ஆனால், இந்தக் கதையின் வழித்தடத்தில் மட்டும் வரலாற்றைத் தேடுவது அல்லது கட்டமைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் மற்றும் வரலாற்றுத் துரோகம்.புராணங்களில் அல்லது புனைவுகளில் வரலாற்றின் குறிப்புகள் ,கட்டிடத்தில் உள்ள செங்கற்களை ஒட்டவைக்கும் சுண்ணாம்பைப்போல (அல்லது சிமெண்ட் போல)காணப்படும். அதை பகுத்து அறிவது அல்லது எப்படி உள்வாங்குவது என்பது அவரவரின் நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விசயம்.

பழைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு வந்த புராணங்கள்,இலக்கியங்கள் போன்ற புனைவுகள் போல இந்த நூற்றாண்டில் அசைக்கமுடியாத ஒரு இடத்தில் இருப்பது சினிமா. நாம் வாழும் இந்த காலகட்டத்தில் சினிமாவில் என்ன பதிவு செய்யப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.நமக்கு அடுத்து வரும் புதிய தலைமுறை (3000 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொழுது போகாத போது 2000 -2007 -ல் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்த்து..."நம் முன்னோர்கள் காதலிக்கும் போது பக்கத்தில் பத்து இருவது ஆட்களை கூட்டிவைத்துக் கொண்டு் மரத்தைச் சுற்றியும், ரோட்டிலும் ஆடித்தான் காதல் செய்தார்கள். அப்படித்தான் டைரக்டர் சங்கர் படத்தில் சொல்லியிருக்கார்" என்று மேற்கோள் காட்டக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நாம் இருக்க மாட்டோம்.

இதை வாசிக்கும் அனைவருக்கும் நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன். இன்று உள்ள விக்கிப்பீடியாவை நம்பாதவர்கள், பக்தி என்ற பெயரில் பழைய புராணங்களை அப்படியே வரிக்குவரி எப்படி நம்புகிறார்களோ , அதே போல் நாளய தலைமுறை ,இன்று சினிமாவில் உள்ள கற்பனைகளை உண்மை என்று நம்ப வாய்ப்பு இருக்கிறது. இது புரிந்தால், நீங்கள் நம்பும் புராணங்களில் இருந்தும் , புனைவுகளில் இருந்தும் உள்ள வளமான வர்ணனைகளையும், கற்பனைகளையும் பிரித்தெடுக்க முடியும்.

சங்ககால வரலாறுகளை, இதுதான் வரலாறு என்று தேதிவாரியாக யாராலும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த காலத்திற்குள் நுழைய, நம்மிடம் இருப்பவை புராணங்களும்,சமயக் கதைகளும் ,செவி வழிக் கதைகளும், எப்போதாவது கண்டெடுக்கப்படும் கல்வெட்டுக்களுமே. இதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாறு அப்பட்டமான வரலாறாக பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக , வரலாறே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் முட்டாளாகவில்லை என்றே நினைக்கிறேன்.என்னதான புராணங்கள்,கதைகள்,இலக்கியங்கள் வாசித்தாலும் அவற்றை சீர்தூக்கி , ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இல்லையென்றால் கடந்த கால வரலாறுகள் நாம் வாழும் இந்தக் காலத்திலும் சரிபார்க்கப்படாமல் , அப்படியே அடுத்த தலைமுறைக்கும் சென்றுவிடும்.

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் புதைந்து இருக்கும் சரித்திர உண்மைகள் இன்னும் நமக்கு புராணங்களின் வாயிலாகவே அறியப்பட்டு வருகிறது. புராணங்களை "பக்தி" என்னும் கண்ணாடி வழியாகப் பார்ப்பவர்களுக்கு, மீனாட்சி தெய்வப்பிறவியாக , யாக குண்டத்தில் தோன்றியவளாக ,மூன்று முலைகளுடன் இருந்தவளாக ,இமயம் முதல் குமரி வரை ஆணடவளாகவே தெரிவாள். மேலும் அவர்களுக்கு இதுபோன்ற போன்ற விசயங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

இதுதான் இறுதி இறைவேதம் என்று சொன்னபின்னால், அதை வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு சமயத்தடை வந்துவிடும். அதுபோல , சொன்னது எல்லாம் உண்மை என்று நம்பிவிட்டால், வரலாற்றை ஆராய வாய்ப்பே இல்லை.குழப்பமாக அல்லது தெய்வதன்மை வாய்ந்த , நம்பிக்கை சார்ந்த மீனாட்சி புராணக்கதைகளை , ஓரளவிற்காவது அறியப்பட்ட/நிரூபிக்கப்பட்ட சேர,சோழ வரலாறுகளுடன இணைக்காமல் இருப்பது பக்தர்கள் வரலாற்றிற்குச் செய்யும் பெரிய நன்மை.மீனாட்சி சிலையின் காலத்தை ( கார்பன் டேட்டிங்) அறிவியல் பூர்வமாக கணித்தாலே, புராணங்கள் சொல்லும் காலத்திற்கும், மீனாட்சி வடிவமைக்கப்பட்ட காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை அல்லது வேற்றுமைகளை அறிய வாய்ப்பு உள்ளது. தெய்வத்தின் சிலையை சோதிப்பதா? என்று பக்தர்கள் தவறாக என்னைப் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அல்லது ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தலாம்.

மீனாட்சி கோவிலின் தற்போதைய வடிவம் ஒரே நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்டதில்லை. அதன் பழைய வடிவங்கள் நமக்கு புராணங்களில் விவரணையாக ஆங்காங்கே சொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் உண்மை இன்னும் அறிவியல்பூர்வமாக ஆராயப்படவில்லை.அல்லது எனக்கு மட்டும் புரியவில்லை. ஒரு பெயிண்டர் எழுதிவைத்த தவறான தகவல் என்று என்னால் இதைக்கடந்து போக முடியவில்லை. இங்கே பினூட்டமிட்ட நண்பர்களும் பக்தி வழியில் அதையே நம்புகிறார்கள்.

மீனாட்சி வாழ்ந்த காலத்தில் இருந்த இந்தியாவின் புவியியல் எல்லைகள் இப்போது இருக்கும் இமயம்-குமரியாக இருந்திருக்கவே முடியாது என்பது எனது திடமான எண்ணம்.சுமைதாங்கிக் கல்லாக இருந்த ஒரு பட்டியக்கல் ஒன்று, சென்ற தலைமுறையில் ஊர் தேவதையாகவும், இன்று பார்வதியுடன் இணைத்து கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதையும் அறிவேன். நாளைய தலைமுறை இதை இன்னும் விரிவு படுத்தி புதிய கதைகளைச் சேர்த்தாலும் சேர்க்கும். ஆனால் , உண்மையைச் சொல்ல அந்த இரகசியம் அறிந்த கிழவிகள் இருக்க மாட்டார்கள்.புராணக்கதைகளை ஒரு கடந்த காலத்தை பார்க்க உதவும் ஒரு ஜன்னலாக மட்டுமே கொண்டு, இன்றைய அறிவியல் நுட்பங்களின் உதவியுடன் மீனாட்சியின் காலமும், வரலாறும் கணிக்கப்பட்டு சரியாக எழுதப்படவேண்டும். அதுவே அடுத்து வரும் மதுரைத் தலைமுறையினருக்கு நாம் வழங்கும் பரிசு.

ஒரு அழகிய பெண்ணை இன்னொரு பெண் பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணை அவளின் கணவன் பார்க்கும் பார்வைக்கும், அவளின் தந்தை பார்க்கும் பார்வைக்கும், அவளின் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும், ரோட்டில் போகும் ஒரு ரோமியோ பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணின் மருத்துவர் பார்க்கும் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் ஒரே ஆள்தான். ஆனால், அவள் ஒவ்வொருவரிடமும் ஒரு புதிய முற்றிலும் வேறான தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்.

அனைத்துப் பார்வைகளும் ஒன்று அல்ல. அதுபோல் ஒன்று மட்டுமே உண்மையும் அல்ல.நாம் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தும், நமது கடந்தகால அனுபவங்களைப் பொறுத்தும் , நாம் பார்க்கும் பார்வைக்கோணம் மாறுபடும்.


  • எனது கோணத்தில் மீனாட்சி என்பவள் வரலாற்றின் பக்கங்களில் நம்மைப்போல் ஒரு மனுசியாக இடத்தை நிரப்பியவள்.
  • அவளின்பால் ஈர்க்கப்பட பலர் அல்லது நலம் விரும்பிகள் அல்லது சுற்றம் சொந்தம்,அவளுக்கு ஒரு இடத்தை பட்டியக்கல்லாக ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.
  • பிற்காலத்தில் அவள் பல புனைவுகளுடனும், கிளைக்கதைகளுடனும் தெய்வமாக்கப்பட்டு, இன்று கேள்வி கேட்கமுடியாத புனிதத்தை அடைந்து இருக்கலாம்.
  • இவள் நிச்சயம் நாம் அறிந்து வைத்துள்ள எந்த சேர, சோழர்களுடனும் போரிடவில்லை. இமயமும் குமரியும் அவளது ஆட்சி எல்லைகளாக இருத்திருக்கவும் இல்லை.

நான் சொல்வதுதான் இறுதி என்று சொன்னால், இது பழையபடி "இதுதான் இறுதி இறைவேதம்" என்ற முற்றை அடைந்து , அதற்குமேல் வளர்த்தெடுக்க முடியாத ஒன்றாக போய்விடும்.நான் சொல்பவைகள், இன்று எனது 36 வயதில் இருக்கும் புரிதல்கள். ஒருகாலத்தில் மீனாட்சியின்பால் அதிக காதல் கொண்டவன் நான். அதிகாலைத் தரிசனத்தில் அவளின் சாய்ந்த கொண்டையிலும், ஒய்யாராமாக சாய்ந்து நிற்கும் பேரழகிலும் என்னை மறந்தவன். ஒரு ஆணாக அவளை கடவுள் என்பதையும் மீறி என் சிறுவயதில் மெய்மறந்து இரசித்து உள்ளேன்.

அவை எல்லாம் ஒரு சிறுவயது பையன் பக்கத்துவீட்டு அக்காதான் உலகின் பேரழகி என்று எண்ணும் காலகட்டங்கள். மீனாட்சியின் மூக்குத்தியழகில் சொக்கிப்போன அனுபவமும் உண்டு. இராதை, ஆண்டாள் போன்ற சாதரணர்கள் ஆண் தெய்வங்களைக் கண்டு மெய்மறந்து புலம்பியது போல , நம் புராணங்களில் எந்தப் பெண் தெய்வத்தையும் சாதாரண மனிதர்கள் இரசித்துப் புலம்பிய வரலாறு இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை. ஆண் தெய்வங்களுக்கு பெண் இரசிகைகளை அனுமதித்து ஆர்ப்பாரிக்கும் நாம் , பெண் தெய்வங்களுக்கு ஆண் இரசிகர்களை அனுமதிப்பது இல்லை. இதையெல்லாம் இங்கே விரிவாகப் பேசினால் பதிவின் நோக்கம் திசைமாறிப் போய்விடும்.

நான் சொல்லவருவது , இந்த மதுர மீனாட்சி என் சிறுவயதுக் காலங்களில் என்னால் இரசிக்கப்பட்ட/போற்றப்பட்ட/துதிக்கப்பட்ட ஒருவளாகவே இருந்தாள்.அந்த காலகட்டத்தில் நான் அப்படி இருந்ததும் உண்மை. இன்று அவளின் வரலாற்றை கேள்விக்கு உட்படுத்துவதும் உண்மை. நாளை, நான் இதே மீனாட்சியை வேறுவிதமாக, முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கலாம்.

யாரும் யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டாலும், மதுரை மீனாட்சியின் வரலாறு குறித்தான மாறுபட்ட கோணங்கள் இருக்கிறது, என்றாவது சிலர் புரிந்துகொள்ள எனது கேள்விகள் உதவி இருக்கலாம். அல்லது ஒன்றுக்கும் உதவாத ஒன்றாகவும் இருந்து இருக்கலாம். மாறுபட்ட விளக்கங்கள் இருப்பதால் இன்னும் உண்மை தேட வேண்டிய நிலையிலேயே உள்ளது அல்லது எனக்கு புரியாமல் உள்ளது.

புராணங்களை நான் வரலாற்றை அறிய உதவும் ஒரு ஜன்னலாகவே பார்க்கிறேன். அதுவே வரலாறு அல்ல. மேலும் அதீத பக்தியால், அதுதான் வரலாறு என்று இந்த blogspot காலத்திலும் நண்பர்களை நம்பவைத்துக் கொண்டு இருப்பது அவர்களின் பக்தியன்றி வேறு எதுவும் இல்லை என்றும் எனக்குப் புரிகிறது.

பொன்னியின் செல்வன் குந்தவை நாளை கடவுளாக்கப்பட்டு அது பற்றிய விவாதங்கள் வந்தாலும் வரலாம். யுகங்கள் மாறினாலும் இவைகள் தொடரும் என்றே நினைக்கிறேன்.

கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி!

ஆரம்பித்து வைத்த கேள்விக்கு முடிவுரையை கொடுத்துவிட்டேன். விரும்புபவர்கள் மேலும் தேடிக் கொள்ளலாம். எனது தேடுதல் தொடரும் ,அது இங்கே பகிரப்படாவிட்டாலும்... !


முந்தைய விரிவான கருத்துப்பரிமாற்றங்களைக் காண...
மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி
http://pathivu.madurainagar.com/2007/11/blog-post_28.htmlPicture Courtesy:
digitalmadurai.com

Thursday, November 29, 2007

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி

ரலாறு என்பது எழுதுபவனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு கடந்தகால நிகழ்வு.வரலாறு என்று சொல்லும்போதே, அது அதைப் படிப்பவனின் காலத்துக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் என்றாகிவிடுகிறது. இப்படி, வரலாறு என்பது அதை வாசிப்பவனின் காலத்திற்கு முந்தைய சம்பவங்கள் என்று சொல்லும்போதே, அது குறித்த நம்பகத்தன்மை மற்றும் ஐயப்பாடுகளும் வந்துவிடும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் "எங்க ஏரியா உள்ள வராதே" என்ற தொனியில், இந்து (யார் இந்துக்கள் என்பது என்னளவில் இன்னும் புரியாத ஒன்று . அது இங்கே விளக்கப்படப்போவது இல்லை) அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் அறிவிப்புப் பலகையை கண்டு வேதனைப்படவே செய்வான். கடவுளர்களை ஒரு மதத்திற்குள் கட்டிப்போடும்போதே அந்த மதம் சொல்லும் கடவுள் நாடு/இன/மத எல்லையுடைய சாதாரணமானவர்கள் என்று புரிந்துவிடும். சிவனுக்கு முருகன் என்று ஒரு பிள்ளையாண்டான் இருக்கிறார் என்பதை இந்தியாவின் வட மாநிலத்தவர்கள் கண்டுகொள்வது இல்லை. முருகனும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

கண்ணே தெரியாதவனுக்கு அல்லாப்பிச்சையும் , பிச்சைப்பெருமாளும்,மாத்தேயுப் பிச்சையும் ஒரே நிறத்தவர்கள்தான். நாமும் அதுபோல வாழப் பழகவேண்டுமோ?

மதம்/கடவுள் நம்பிக்கைகளைத்தாண்டி, இந்தக் கோவில் ஒரு அருமையான கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்குச் சான்று. எந்த ஒரு நம்பிக்கையாளராக இருந்தாலும், தனது நாட்டில் (அ) தனது ஊரில் உள்ள ஒரு பொக்கிசத்தைக் காணக்கூடாது என்று சில கோமாளிகள் சொல்லும்போது வருத்தப்படவே செய்வான். தாஜ்மகால் பற்றி எண்ணற்ற conspiracy theory கள் இருந்தாலும், அதை நாட்டின் ஒரு கலைப் பொக்கிசமாகவே நான் கருதுகிறேன். அதைப் பார்க்க சில மதக் கட்டுப்பாடுகள் விதித்தால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

மீனாட்சி என்பவளை ஒரு அரசியாகத்தான் கோவில் வரலாறே சொல்கிறது. ஒரு அரசியின் கோவிலுக்கு வருபவர்களை இந்து என்று எப்படி அளக்கிறார்கள் என்று தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த மதத்தில் வருவான்?

சமீபத்தில் மீனாட்சி கோவிலுக்கு சென்ற போது மீனாட்சி சன்னிதியின் அர்த்த மண்டபத்தின் (கருவறையச் சுற்றி உள்ள வெளிப்பிரகாரம்) சுவர்களில் மீனாட்சியின் பல பருவங்கள் சுவற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு , அதற்குக்கீழே பெயிண்டில் விளக்கம் கொடுத்து இருப்பார்கள். அதில் ஒன்றுதான் எனது இந்தக் கட்டுரையின் காரணம்.

மீனாட்சி "சேர,சோழர்களை வென்று இமயம் முதல் குமரிவரை ஆட்சி புரிந்தாள்" என்றவாறு எழுதப்பட்டு இருந்தது. இதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரவர் அவருக்கு உள்ள மனுக்களை எப்படி மீனாட்சியிடம் கொடுத்து சிபாரிசு வாங்கலாம் என்ற பரபரப்பில் இருந்தனர்.


எனது கேள்விகள்.

1.மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்த அதே காலத்தில் வாழ்ந்த சேர மற்றும் சோழ மன்னர்கள் யார்?

2.அந்த மன்னர்களை மீனாட்சி போர் புரிந்து வெற்றி பெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது உண்டா?(சும்மா தெருவோரம் புளியமரத்தில் இருக்கும் பாம்பிடம், பரமசிவன் பல்விளக்கும் போது சொன்னார் ..என்ற ரீதியில் ஆதரங்கள் வேண்டாம். அவை கோவில் சுவற்றிலேயே உள்ளது)

3.வடக்கே மீனாட்சி வென்ற மன்னர்கள் யார்? எத்தனை நாட்கள் போர் புரிந்தார்? பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்புகள்?

4.எத்தனை காலம் மீனாட்சி இமயம் முதல் குமரை வரை நாட்டை ஆண்டார்?

5.மதுரையில் இருந்து ஆளப்பட்ட இந்தியா குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஏதேனும்?

வரலாறு தெரிந்தவர்கள் சொல்லும் பதிலுக்கு இப்போதே நன்றி !!

**********

கோவிலில் பார்த்த சில கொடுமைகள்:
1. கோலம் போடுகிறேன் பேர்வழி என்று பெயிண்டால் எல்லா இடங்களி்லும் கோடுகளைப் போட்டு , வரலாற்றின் பக்கங்களில் பிழையை எழுதியுள்ளது.

2.சும்மா தேமே என்று இருக்கும் தூண்களுக்கு பித்தளைத் தகடுகளைப் போட்டு (அர்த்த மண்டபம்) வரலாற்றை சிறைசெய்து இருப்பது.

3.ஆங்காங்கே நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்சிற்பங்களை துளையிட்டு கம்பி கேட்டுகள் /தடுப்புகள் (Iron gates) போட்டு இருப்பது.

பார்த்த நல்ல விசயம்:

கற்பூரங்களுக்கு தடைவிதித்து எண்ணெய் விளக்குகளை அனுமதித்தது. புகையின் அளவு கொஞ்சமேனும் குறைய வாய்ப்பு உள்ளது.


Picture Courtesy:
www.wayfaring.info

Sunday, November 11, 2007

சிலேட்டுக்குச்சி கிடைக்காமல் அழுதேன்.

அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில் இருந்தாலும் 2 வது படிக்கும்போது வகுப்பு மாற்றிக் கொண்டதால் "பி" வகுப்புக்குப் போய் விட்டேன். நான் ஃபெயில் ஆகிவிட்டேன் என்று "பி"யில் மாற்றி விட்டார்கள் என என்னைச் சக நண்பிகள் கேலி செய்து என்னை அழ வைப்பார்கள் எனச் சொல்லுவார்கள். 2-ம் வகுப்பு "ஏ"பிரிவின் ஆசிரியை பேரு சமாதானம் டீச்சர், அவங்க, ரொம்பச் சின்னப் பொண்ணு, ஒண்ணும் விவரம் தெரியலை, அதுக்குள்ளே பள்ளிக்கு வந்துட்டாளேன்னு சொல்லுவாங்களாம். என்றாலும் எனக்கு என்னமோ அந்த டீச்சரைப் பிடிக்காது. மூணாம் வகுப்பிலே இருந்தவர் ஆசிரியர், பெயர் சுந்தர வாத்தியார். அவருக்கு என்னமோ என்னைப் பார்த்தாலே கோபம் வரும். அதுக்கு ஏற்றாப் போல் நானும் அநேகமாய்ப் பள்ளிக்குத் தாமதமாய் வந்து சேருவேன். அப்பாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். பட்டாசுப் பங்குகள் போடுவது போல் அப்பா அப்போது எழுதுவதற்கு உபயோகிக்கப் பட்ட சிலேட்டுக்குச்சியையும் பங்கு போட்டுத் தான் தருவார். முதல் வகுப்பில் படிக்கும்போது அவ்வளவாய் ஒண்ணும் புரியாததால் கொடுக்கிறதை வாங்கி வருவேன்.

அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்த பெண்கள், பையன்கள் கலர்குச்சியை வைத்துக் கொண்டு கலர் கலராய் எழுத முயல, மற்ற சிலர் கெட்டியான செங்கல் குச்சியையும் மாக்குச்சியையும் வைத்துக் கொண்டு எழுத, நான் கறுப்புக் குச்சியால் எழுதுவேன். எழுத்து என்னமோ வந்தது என்றாலும், கூடவே அழுகையும். கலர், கலராய் எழுதாட்டாலும் குறைந்த பட்சம் செங்கல் குச்சியாலாவது எழுதணும்னு ஆசையா இருக்கும், ஆனால் அப்பாவிடம் அது நடக்காது. ஒரு குச்சியை மூன்று பாகம் ஆக்குவார் அப்பா. ஒரு பாகம் எனக்கு, ஒரு பாகம் அண்ணாவுக்கு, ஒரு பாகம் குழந்ததயான என் தம்பிக்கு என. தம்பியின் பாகம் அவரிடம் போக, பெரிய வகுப்பு வந்திருந்த அண்ணாவுக்கோ குச்சியின் உபயோகம் அவ்வளவாய் இல்லாததால் கவலைப்படாமல் பென்சில் எடுத்துக் கொண்டு போக, நான் முழுக்குச்சிக்கு அழுவேன். கடைசியில் எதுவும் நடக்காமல், அதே குச்சியை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன் தாமதாமாய். இல்லாவிட்டால் பள்ளி நாளையில் இருந்து கிடையாது என்பதே அப்பாவின் கடைசி ஆயுதம். அது என்னமோ கணக்கு என்னைப் பயமுறுத்தினாலும் பள்ளிக்குச் செல்வதை நான் விட மாட்டேன். வீட்டை விடப் பள்ளியே எனக்குச் சொர்க்கமாய் இருந்ததோ என்னமோ!!!

இவ்வாறு தாமதமாய் வந்த என்னை ஒருநாள் ஆசிரியர் மிகவும் மிரட்ட நான் பயந்து அலற, அவர் என்னைப் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போகக் கூடாது எனச் சொல்லி, அங்கேயே வைத்துப் பூட்ட, பயந்த நான் அங்கேயே இயற்கை உபாதையைக் கழித்து விட்டு, மயக்கம் போட்டு விழ, பின் வந்த நாட்களில் மூன்று மாதம் பள்ளிக்குப் போக முடியாமல் ஜூரம் வந்து படுத்தேன். முக்கியப் பாடங்களை என் சிநேகிதியின் நோட்டை வாங்கி அம்மா எழுதி வைப்பார். மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார், என்றாலும் என்னைக் காணும்போதே அவர் கூப்பிட்டுத் திட்டி அனுப்புவார். இது ஆரம்பப் பள்ளி நாட்களில் ஆசிரியர் மூலம் நான் முதன் முதல் உணர்ந்த ஒரு கசப்பான அனுபவம். என்றாலும் அதே பள்ளியில் நான் தொடர்ந்து படித்தேன், பின்னர் வந்த நாட்களில் குறிப்பிடத் தக்க மதிப்பெண்களும் பெற்றேன். இதற்கு நடுவில் வீட்டில் இருந்த மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது வீட்டில் ஆனந்தவிகடன் மட்டும் வாங்குவார்கள். என்றாலும் அப்பாவின் பள்ளி நூலகத்தில் இல்லாத புத்தகங்களே கிடையாது. அங்கிருந்து புத்தகம் எடுத்து வரும் அப்பாவைக் கேட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

அதற்கு முன்னால் நான் படிச்சது, என்றால் ஆனந்தவிகடனில் சித்திரத் தொடராக வந்த "டாக்டர் கீதா" என்ற கதையும், துப்பறியும் சாம்புவும் தான். டாக்டர் கீதா தொடரில் சுபாஷ்சந்திரபோஸின், வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் இருக்கும்,இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பற்றிய கதை அது. எங்க வீட்டிலும் தாயம் விளையாடினால் கூட சுபாஷின் "டெல்லி சலோ" என்ற வாக்கியத்தை வைத்து விளையாடிச் செங் கோட்டையைப் பிடிக்கும் விளையாட்டே அதிகம் விரும்பி விளையாடப் படும். தாத்தா வழியில் (அம்மாவின் சித்தப்பா, பலமுறை சுதந்திரத்துக்குச் சிறை சென்றார், கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை) அப்பாவும் காந்தியின் பக்தர், ஆகவே வீட்டில் எப்போதும் ராட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும், அண்ணாவும் தக்ளியில் நூல் நூற்றுக் கொடுக்க, அப்பாவோ, அம்மாவோ கைராட்டையில் "சிட்டம்" போட்டு கதர் நூல் சிட்டம் தயாரித்து, கதர்க்கடையில் கொண்டு கொடுப்பார்கள். அந்தச் சிட்டத்தின் விலைக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் கதர் வேஷ்டி தான் அப்பா கட்டிக் கொள்ளுவார். அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.

நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், படிப்பை சுதந்திரப் போராட்டம் காரணமாய் விட்ட அப்பா, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்தபின்னர்தான் திருமணம் என்றும் இருந்து, அதன் பின்னரே திருமணமும் செய்து கொண்டார். காந்தி இறந்த தினம் முழுதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காந்திக்காக ஒரு முறை மட்டுமே உணவு கொண்டு விரதம் இருந்திருக்கிறார். அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆகும் வரை இது தொடர்ந்தது. எனக்குத் தெரிந்து என்னோட பதினைந்து வயசு மட்டும் வீட்டில் கைராட்டை சுழன்றிருக்கிறது. என் அம்மாவுக்கு முடியாமல் போய் கைராட்டையில் உட்கார்ந்து நூற்க முடியாத காரணத்தாலும், (நிஜலிங்கப்பா பீரியட்?) காங்கிரஸும் முதல் முறையாக உடைந்ததும், அப்பாவும் கதரை விட்டார். அந்தக் கைராட்டையை விற்கும்போது என்னுடைய அம்மா அழுதது இன்னும் என் நினைவில் மங்காத சித்திரமாய் இருக்கிறது.

Wednesday, November 7, 2007

மலரும் தீபத்திருவிழா நினைவுகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம். அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம்.

அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லல. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.

அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம்.

பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது.

நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை. இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.

ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும்.

தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.

வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம். ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.

மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று.

அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.

தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.

மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.

மதுரையிலே தீபாவளி கொண்டாடினேன்!சின்ன வயசுத் தீபாவளினு எனக்கு நினைப்பு இருக்கிறது "கழுதை அக்ரஹார"த்தில் நாங்க கொண்டாடியது தான். அப்போ தம்பிக்கு ஒரு வயசு ஆயிடுச்சுனு நினைக்கிறேன். இருந்தாலும் குழந்தைதானே! அவனைத் தவிர 7 அல்லது 8 வயசு ஆகி இருக்கும் என்னோட அண்ணா தான் வீட்டில் ஆண் குழந்தை! ஆனாலும் அண்ணாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு பட்டாசுகள், வெடிகளில். அப்போது எல்லாம் என் அம்மாவின் சித்தப்பா மேலாவணி மூலவீதியில் வச்சிருந்த மருந்துக் கடையில் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனையும் உண்டுனு நினைக்கிறேன். எது எப்படியோ தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் இருந்து எங்களுக்குப் பட்டாசுகள் ஒரு கேஸ் என்று சொல்லுவார்கள் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டி நிறைய வரும். தம்பியும் குழந்தை, அண்ணாவும் பயந்த சுபாவம், பின்னே யார் வெடிக்கிறது? என் அப்பாவைப் பொறுத்த மட்டில் நான் பெண் குழந்தை என்பதால் "இது எல்லாம் ஆம்பளைங்க சமாசாரம்! நீயெல்லாம் வராதே!" என்று கடுமையாகச் சொல்லிடுவார். அப்படியும் விடேன், தொடேன், என்று பட்டாசுகள் பங்கு பிரிப்பதில் என்னுடைய பங்கைக் கண்டிப்பாய்க் கேட்டு வாங்கிக் கொண்டு என்னுடைய உரிமையை நிர்ணயம் செய்து கொள்வேன், அப்பாவின் திட்டுக்களோடும் தான்! பட்டாசுக்களை அப்பா 4 பங்காய்ப் பிரிப்பார். எனக்கு ஒன்று, அண்ணாவுக்கு ஒன்று, வெடிக்கவே முடியாத குழந்தையான தம்பிக்கு ஒன்று, தனக்கு ஒன்று எனப் பிரித்துக் கொடுப்பார்.

இரவு சாப்பிட்டதும் பட்டாசுப் பெட்டியை வைத்துக் கொண்டு பாகப் பிரிவினைக்கு உட்கார்ந்தால், கம்பி மத்தாப்புக்களைத் தவிர, வேறு ஒன்றும் எனக்கு வராது. "கத்தி" சண்டை போட்டுத் தரைச் சக்கரம், விஷ்ணுச்சக்கரம், புஸ்வாணம் போன்றவைகளை வாங்கிக் கொள்ளுவேன். அண்ணாவோடதும் அண்ணாவுக்காக நானே வெடித்துக் காட்டுவேன், என்பது தனிக்கதை! (எங்கேயானும் அண்ணா பொண்ணு இதைப் படிச்சுட்டு அவங்க அப்பா கிட்டே போட்டுக் கொடுத்துடப் போறா! அடுத்த தெரு தான் அண்ணா வீடு! :))))) தீபாவளித் துணிகள் வாங்கறது இன்னொரு காவியம்! முதலில் அப்பா நவராத்திரியில் இருந்தே, ஒவ்வொரு கடையில் அந்த வருஷம் என்ன புதியதாய் வரப் போகுது என்ற மார்க்கெட் நிலவரத்தை ஆராய்ந்து, அது தன்னோட பட்ஜெட்டுக்குள்ளே வருதானு பார்த்துட்டு, அது முடியாதுங்கறதைக் கண்டு பிடிச்சு, பட்ஜெட்டுக்குள்ள வரதை வாங்க நாங்க போய்க் கடைசியில் அப்பாவுக்கு மட்டும் திருப்தியாகவும் எங்களுக்கு எல்லாம் மனக் குறையுடனும் துணிகள் வாங்கிக் கொள்ளுவோம். அதுக்கு அப்புறம் டெய்லர். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் "கருகப்பிலைக்காரச் சந்து" பக்கம் கடை போட்டிருந்த "சின்னி கிருஷ்ணன்" என்பவர் தான் எங்கள் வீட்டுக் குடும்ப டெய்லர்! வீட்டுக்கே வருவார். அப்பாவிடம் கொஞ்ச நாள் படிச்சார். அந்த விசுவாசம்!

அவர் வந்து துணிகளை வாங்கிப் போகும்போதே ஏதோ உலகத்திலேயே நாங்க தான் உசத்தியாத் துணி எடுத்திருக்கிறாப்போலயும், அதைத் தான் இந்த வருஷ புது டிசைனில் தைக்கப் போவதாயும் ஒரு பிரமையை உண்டாக்கிவிட்டே வாங்கிப் போவார். எங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் போயிடும். கூடவே இருக்கவே இருக்கு, பட்சண வகைகளும், வெடி வெடிக்கிற குதூகலமும். அப்பாகிட்டே சண்டை போட்டு நான் வாங்கி வச்சிருக்கும் வெடி வகைகளில் பெரிய வெடிகள் எல்லாம் எப்படியோ காணாமல் போயிடும். ரொம்பக் கத்தினால் என்ன செய்யறதுனு என் வாயை அடைக்கறதுக்காக ஓலை வெடியை மட்டும் விட்டு வச்சிருப்பார் அப்பா. புத்தாடை அணிந்து பட்சணங்கள் சாப்பிட்டாலும், வெடிகள் காணாமல் போன விந்தை அந்த வயதில் புரியாமலேயே, மனம் நிறையக் கலக்கத்துடனும், கவலையுடனும் (பின்னே, வெடி காணாமல் போனதுக்கு அப்பாவுக்குப் பதில் சொல்லணுமே?) அப்பா எப்போ மத்த வெடிகளைப் பத்திக் கேட்டுடுவாரோ என்ற பயத்துடனேயே தீபாவளிக் காலை ஓடிப் போய், பின்னர் பட்சண விநியோகங்கள் ஆரம்பிக்கும்.

நாங்கள் தான் எல்லார் வீடுகளுக்கும் எடுத்துப் போவோம். அப்பாவிடம் ஹிந்தி படிச்ச "தங்கம்" தியேட்டர் சொந்தக் காரர் ஆன திரு கண்ணாயிரத்தில் இருந்து, கெல்லட் ஸ்கூல் பக்கம் குடி இருந்த கிறித்துவ நண்பர் (இவரும் அப்பாவிடம் ஹிந்தி படிச்சார்) வரை எல்லார் வீடுகளுக்கும் போவோம். அவங்க வீட்டிலே இருந்து எங்களுக்குக் கிறிஸ்துமஸ் பலகாரங்களும், புது வருஷப் பலகாரங்களும் வந்திருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு எனத் தனியாக ஆளை வைச்சுப் பலகாரங்கள் செய்து அனுப்புவார்கள். திரு கண்ணாயிரம் வீட்டுக்குப் போனால் அவர் அந்த வருஷம் புதுசாய் வந்திருக்கும் வெடிகளின் பார்சல் கொடுப்பார். அப்படி அறிமுகம் ஆனது தான் பாம்பு வெடி மாத்திரைகள். அதை எப்படி வெடிக்கறதுனு தெரியாம முழிச்சதும், தற்செயலாகக் கம்பி மத்தாப்புப் பொறியோ, சாட்டைப் பொறியோ பட்டு அது கிளம்பி வர ஆரம்பிச்சதும் முதலில் பயந்து, பின் தெளிந்து அதை இம்முறையில் தான் வெடிக்கணும் என்று புரிந்ததும் தனிக்கதை! இது எல்லாம் குழந்தையாக இருந்த வரை! சற்றே விவரம் தெரிந்து உயர் கல்விக்காகப் பெரிய பள்ளி போக ஆரம்பிச்சதும் வேறு மாதிரி. மூன்றே நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதில் வீட்டுப் பாடங்களை அவசரம், அவசரமாய் முடிச்சுக்கணும், வீட்டில் அம்மாவுக்கு உதவி, பின் எல்லார் வீட்டுக்கும் போகவேண்டியது என்று தீபாவளி ஒரே ஓட்டம் தான். பின்னர் வந்த நாட்களிலும்!

நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்~

Saturday, November 3, 2007

மனதில் தோன்றிய எண்ணங்கள்

வணக்கம் நன்பர்களே !!
இவ்வலைப்பூவில் அன்பர்கள் யாருமே பதிவிடவில்லை. அவரவர்கள் வலைப்பூவிலே தான் இடுகிறார்கள். இதை ஆரம்பித்ததன் நோக்கம் நிறைவேற வில்லை. ஏன் ? தெரியவில்லை. பிதாமகர்கள் கவனிப்பார்களா !!

எதோ என்னுடைய ஒரு பதிவினை மீள்பதிவு செய்கிறேன். புதுப் பதிவு போட முயற்சி செய்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------
உன்னையே நீ அறிந்து கொள் !
உன்னால் முடியும் தம்பி !!
நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ??
அகந்தையா ?
நம்முடைய பலம் என்ன ?
நம்முடைய பலவீனம் என்ன ?

பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி ?
குடும்பம்-அலுவலகம்-சமுதாயம்-சந்திக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?எததனை விதமான எண்ணங்கள் கொண்டவர்கள் ?
மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !
மாற்றுக் கருத்தை சந்திக்க மறுக்காதே !
ஆய்ந்து பார்த்து முரண்படு !
நல்ல கருத்தெனில் நழுவாமல் ஏற்றுக்கொள் !
ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !
காய் கனியாகும் ! அல்லது வெம்பிப் போகும் !
சுய சோதனை செய் ! சத்திய சோதனை செய் !
செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா ?
முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?
விரும்பியது கிடைக்க வில்லை ! கிடைத்ததை விரும்பலாமா ?
வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை !
மற்ற நேரத்தில் கிடைத்தால் மறுக்கலாமா ?? வெறுக்கலாமா ?
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !
பலனில்லாத கடமை செய்யத்தான் வேண்டுமா ?
எல்லாக் கடமைகளுக்கும் பலன் உண்டு !
நேரிடையாக மற்றும் மறை முகமாக !
நாம் இன்று மரம் நட்டால் நாளை மற்றொருவன் அனுபவிப்பான் !அதனால் மரம் நடாமலேயே இருக்கலாமா ?
நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மால் விளைந்ததா ?
யார் நட்ட மரத்தில் யார் பழம் சாப்பிடுவது ?
நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !விழுக்காடு வித்தியாசம் பார்ப்பது அழகல்ல !
நட்டுக்கொண்டே இருப்போம் !அனுபவித்துக் கொண்டே இருப்போம் !மனம் மகிழ, பிறர் மகிழ வேண்டும் !
ஒவ்வோர் அரிசியிலும் பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !
-----------------------------------------------------------------


மனதில் எழுந்த எண்ணங்களை கிறுக்கி விட்டேன்.
தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??

தெரிய வில்லை !!!!!

சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும் !

-----------------------------------------------------------------Saturday, October 13, 2007

மதுரையில் கொலு பாருங்க!

ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.

அண்ணாவும், தம்பி பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு கேட்கலை. அந்தளவுக்கு மறதி.

அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.

அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?

Sunday, October 7, 2007

தலபுராணம் - 4.

சொகுசான அறை; சின்ன நண்பர்கள் குழாம்; புதிதாக ஏற்படுத்திக்கொண்டிருந்த புகைப்பழக்கம் -வாழ்க்கை நல்லாவே போச்சு. ஒரு கெட்ட பழக்கம் பழகியாச்சு. அறுபதுகளில் ஆரம்பித்த அந்தப் பழக்கம் 1990 ஜனவரி 10 தேதி இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பழக்கம் சொன்னேனே - அது நல்ல பழக்கமா, இல்ல கெட்ட பழக்கமா? நீங்களே முடிவு பண்ணிக்கீங்க,, சரியா?

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல. இதுக்கெல்லாம் பிறகு ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ படிக்கக் கூட செய்வோம்!

பள்ளியிறுதி வரை வீட்டுக்குத் தெரியாமல் போனது ஒரே ஒரு சினிமா. எப்படியோ, தைரியமாய், காசெல்லாம் செட்டப் பண்ணி நண்பர்களின் வற்புறுத்தலிலும், சுயமாய் வளர்த்துக்கொண்ட தைரியத்திலும் (?) ஒரு பெரிய ரிஸ்க் எடுத்து பார்த்தது அந்த சினிமா. மற்றபடி சினிமா போனா வீட்டோடு; இல்ல ஊர்ல இருந்து விருந்தாட்கள் யாரும் வந்தால் ஒட்டிக்கிறது அவ்வளவுதான். இங்கிலீசு படம் எல்லாம் ஒண்ணிரண்டு - எல்லாம் சாமி படங்கள் -தப்பா எடுத்துக்காதீங்க, இப்ப சொல்ற ‘சாமி படங்கள்’ இல்ல. நிஜ சாமி.. Ten Commandments மூணுதடவை பாத்தேன். எப்டீங்கிறிங்களா? முதல்ல வீட்டோட; அதுக்குப் பிறகு இந்தப் படம் பார்க்கவே ஊரிலிருந்து வந்த உறவு மக்களோட - ஒரு guide மாதிரி வச்சுக்கங்களேன்! அதில என்னென்னா, பாத்த அத்தனை இங்கிலீசு படங்கள்ல வர்ர மூஞ்சு எல்லாம் ஒரே மாதிரிதான் தெரிஞ்சுது. முதல் சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல மறுபடியும் உயிரோடு வருவான்! ஏதோ, ‘Ten Commandments’ மட்டும் ஒரு ஆளு-Charlton Heston- தாடியோடவும், மொட்டைத்தலையோடு Yul Brynner வந்ததும் நல்லதாப் போச்சு.

காம்பஸுக்குப் போனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜராகி இருக்கவேண்டுமென ஸ்ட்ரிக்ட் ரூல். அதனால, இந்த சினிமாவுக்குப் போற எண்ணமே வந்ததில்லை. ஏதோ , ஒரு டீ குடிச்சமா, ஒரு தம் அடிச்சமான்னு இருந்தோம். அப்பதான் ரீகல் தியேட்டர் பற்றி மக்கள் விவரமா சொன்னாங்க. எப்படி no risk-ல இங்கிலீபீசு படம் பாக்க முடியும்னு தெரிஞ்சிச்சு.
ஊருக்கு ஊர் பிரிட்டீஷ்காரங்க டவுன் ஹால்னு ஒண்ணு கட்டிப் போட்டிருப்பாங்க போல. அது மாதிரி இது ஒரு ஹால்; எட்வர்டு ஹால்னு பேரு. மதுரை ரயில் நிலையம் விட்டு வெளியே வந்ததும் மெயின் ரோட்ல இருக்கு. இந்த தியேட்டருக்கு எதிர்த்தாற்போல கிழக்கே போற ரோடுதான் டவுன் ஹால் ரோடு; நேரே போனா மீனாட்சி அம்மன் கோவில்தான். இந்த தியேட்டரிலிருந்து பார்த்தாலே கோவிலின் மேற்குக் கோபுரம் தெரியும்.
(தியேட்டருக்கு எதிரேயுள்ள டவுன்ஹால் ரோடும்,முடிவில் தெரியும் மீனாட்சி அம்மன் கோவிலின்மேற்குக் கோபுரமும்.)

இந்த தியேட்டர்ல ஒரு விசேஷம் என்னன்னா, பகல் முழுவதும் இது ஒரு வாசகசாலை. சாயங்காலம் ஆறு மணிக்கு அதை மூடி, பென்ச்,ஸ்க்ரீன் அப்படி இப்படி ஒரு பத்து நிமிஷத்தில தியேட்டரா புது ஜென்மம எடுத்திடும். ஆறரை, ஆறே முக்கால் மணிக்கு மேலதான் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். ஏழு மணிக்கு அப்போதெல்லாம் சட்டமாக இருந்த அரசு நியூஸ் ரீல் போட்டு (ஆமா, இப்போவெல்லாம் அந்த அரசு செய்தித் தொகுப்பு எல்லாம் உண்டா? உண்டென்றால் அதை யார், எங்கே பார்க்கிறார்கள்?), அதுக்குப் பிறகு ஸ்லைடு, ட்ரைலர் எல்லாம் போட்டு முடிச்சி படம் போட எப்படியும் குறைந்தது ஏழேகாலாவது ஆகிவிடும். எவ்வளவு லேட்டானாலும் படம் எட்டே முக்காலுக்குள் முடிந்துவிடும். ஆக, வீட்டிலிருந்து ஆறே முக்கால், ஏழு மணிக்குப் புறப்பட்டால் கூட படம் பார்த்து விட்டு நல்ல பிள்ளையாய் ஒன்பது மணிக்கு முன்பே திரும்பிடலாம். வீட்ல மக்களுக்கு இந்த technicalities எல்லாம் தெரியாது; அதனால மாட்டிக்கிற பயம் இல்லாம போச்சு. சில சின்னச் சின்ன, ஆனா முக்கியமான precautions எடுக்கணும்: நம்ம பசங்ககிட்ட முதல்லேயே சொல்லிடணும்; இல்லன்னா சரியா அன்னைக்கிப் பாத்து வீட்டுக்குத் தேடி வந்திருவானுங்க; இரண்டாவது, திரும்பி வரும்போது கிழிச்ச அரை டிக்கெட்டை எடுத்து பத்திரமா வெளியே கடாசிட்டு வரணும். ஒரு tell tale signs -ம் இருக்கக் கூடாதல்லவா?இந்தத் தியேட்டருக்கென்றே சில culture உண்டு; மிகவும் ஆச்சரியமானவைகள். டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும்போதெல்லாம் அந்த ஆச்சரியங்கள் அநேகமாக நடக்கும். மிகச் சாதாரண ஆட்களாக இருப்பார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் ஹாலிவுட்டின் சரித்திரமே அதில் இருக்கும். எந்தப் படம் எந்தக் கம்பெனியால் எப்போது எடுக்கப் பட்டது; நடிக, நடிகைகள் பெயர்கள், டைரக்டர்கள் எல்லாமே அலசப்படும். பொய்க் கதைகளாக இருக்காது; நிஜமான தகவல்களாக இருக்கும் கிரிக்கெட் விசிறிகள் கெட்டார்கள் போங்க… என்ன, கிரிக்கெட் ரசிகப் பெருமக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் மழைக்குக் கூட விளையாட்டு மைதானங்களில் ஒதுங்கி இருக்க மாட்டார்கள். ஆனால் வாய் கிழியக் கிழிய technicalities பேசுவார்கள். இங்கே அப்படி இல்லை.. ரெகுலரா படம் பார்க்கிற கூட்டமே உண்டு. ஒன்றிரண்டு மாதங்கள் நீங்களும் ஆங்கிலப் படங்கள் பார்க்கப் போனீர்கள் என்றால் பல முகங்களை அடிக்கடி தொடர்ந்து பார்க்கலாம். அவர்களில் பலரும் நான் சொன்னது மாதிரி நடமாடும் ‘என்சைக்கிளோபீடியா’வாக இருப்பார்கள்.


இதைவிடவும் ஆச்சரியமான விதயம் ஒன்றுண்டு. நம்ம மக்களுக்கு, படித்தவன் படிக்காதவன் என்ற வேற்றுமையே இல்லாமல் ஒரு நோய் உண்டு; மூத்திரப் பை ரொம்ப வீக்; அங்கிங்கு என்னாதபடி எங்கெங்கும், எப்போதும், தம் கண்களை மூடிக்கொண்டு நம் கண்களையும், மூக்குகளையும் மூட வைப்பதில் மன்னர்கள்தான். ஸ்மார்ட்டாக உடுத்துக்கொண்டு ‘ஓரங்கட்டும்’ எத்தனை படித்த இளைஞர்களிடம் நானே சண்டை போட்டு, திட்டியிருக்கிறேன். நன்றாக செலவு செய்து கட்டிய மூத்திரப்பிரையாக இருந்தாலும் நம் தியேட்டர்களில் அவைகளின் உள்ளே செல்ல நல்ல மன உறுதி இருக்க வேண்டும் - இப்போதும் கூட. ஆனால், ரீகல் தியேட்டரில் பெரிய ஒரு சதுரம்; மேலே கூரை கிடையாது; நான்கு பக்கமும் சுவர்கள்; சுவர்களை ஒட்டி இரண்டு இன்ச் உயரத்தில் ஒரு சிமெண்ட் மேடை; அவ்வளவுதான். ஆனாலும், ஏன் என்று யாருக்கும் தெரியாது - இந்த தியேட்டருக்கு வருபவர்கள் எல்லோருமே ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்து, தன் வரிசைக்குக் காத்திருந்து சரியான இடத்தில் சரியாகப் போவது என்பது இதுவரை நான் எங்கும் கண்டதுமில்லை; கேட்டது கூட இல்லை. அதே போலவே எல்லா தியேட்டர்களில் மட்டுமல்ல எங்கெங்கு படிகள் இருக்கின்றனவோ அந்த படிகளின் மூலைகளைப் பார்த்ததும் இந்த வெற்றிலை போடும் ஆட்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை; என்ன instinct அல்லது reflex என்று தெரியாது - Pavlov-ன் நாய் மாதிரி - மூலைகளில் எச்சில் துப்பும் அந்த ‘இந்தியப் பண்பை’ ரீகலில் பார்க்கவே முடியாது.

தியேட்டரின் கீழ் பகுதியில் மூன்று வகுப்புகள், மேலே இரண்டு பகுதிகள். கீழே உள்ள மூன்று வகுப்புகளின் கட்டணம் எல்லாமே ஒரு ரூபாய்க்கும் குறைவே. 30, 60, 90 பைசா என்ற கணக்கில் டிக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். நம்ம ஸ்டாண்டர்டுக்கு எப்பவுமே இரண்டாம் வகுப்புதான். ஆனால் அதில் ஒரு தடவை ஒரு பிரச்சனை. இப்போ சன் டீ.வி.யில் வர்ர மாதிரி அப்போ நம்ம தியேட்டரில் ஸ்பெஷல் வாரங்கள் என்று வரும். ஒரு வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தவிர மீதி 6 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு படமாக போடுவார்கள்; ஒரே நடிகர் - ஜெர்ரி லூயிஸ், கிளார்க் கேபிள், நார்மன் விஸ்டம்,…- நடித்த படங்கள், ஒரே கம்பெனியின் படங்கள் - எம்.ஜி.எம்., கொலம்பியா, - என்று இருக்கும். முதல்லேயே ஒழுங்கா ப்ளான் செய்து எந்தெந்த படங்களைப் பார்ப்பது, அதற்குரிய பொருளாதாரப் பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது போன்ற திட்டங்களைத் தீட்டி - இறுதிப் பரிட்சைக்கு டைம் டேபிள் போடுவது போல் - ரெடியாக வேண்டும். அப்படி போட்டதில் ஒரு தடவை எக்ஸ்ட்ராவாக ஒரு படம் சேர்ந்து விட்டது. பொருளாதாரப் பிரச்சனை மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது. இருந்தாலும் போய்விடுவது என்று முடிவெடுத்து தியேட்டர் போனேன். 30 பைசா வரிசை தியேட்டருக்கு வரும் எல்லோரும் பார்க்க முடியும்; மற்ற இரு வகுப்புகளுக்கும் டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே இருக்கும். அந்த வரிசையில் நிற்கத் தயக்கம். நின்ற ஒருவரிடம் ஏதோ காரணம் சொல்லி டிக்கெட் எடுத்தாகிவிட்டது. உள்ளே விரைந்து போய் கடைசி வரிசையில் இடம் பிடித்து கையோடு கொண்டு போயிருந்த நோட்டை (ஆமா! பிள்ளை படிக்கப் போகிறது என்று அப்பதான் வீட்ல நினைப்பாங்க!) அந்த சீட்டில் வைத்து ரிசர்வ் செய்துவிட்டு வெளியே வந்து, லைட் எல்லாம் அணைத்த பிறகு உள்ளே போனேன். வேறு யாரும் நான் 30 பைசா டிக்கெட்டில் வந்திருப்பது தெரியக்கூடாது என்ற எண்ணம். ஏன்னா, அது ‘தரை டிக்கெட் லெவல்தான்’. அதற்குள் பக்கத்து சீட்டுக்காரர் என் நோட்டைத் திறந்து பார்த்து விட்டார் போலும். நான் போய் உட்கார்ந்ததும், ‘தம்பி, பெரிய கிளாஸ்ல படிக்கிறீங்க; எதுக்கு நீங்கல்லாம் இங்க வர்ரீங்க’ன்னு கேட்டார். அப்போ நான் முதுகலை முதலாண்டு. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை இனியும் நோகடிக்கக் கூடாதென்று முடிவு செய்து அதன் பிறகு அந்த வகுப்பிற்குப் போவதில்லை.

இன்னொரு unique matter என்னன்னா, இடைவேளையில் தியேட்டருக்கு வெளியே செல்ல அனுமதி உண்டு; ஒரு சிகரெட் அட்டையின் பின்பக்கம் ஒரு சீல். அதுதான் அவுட்பாஸ். எதிர்த்தாற்போல் இருந்த, இன்னும் இருக்கும் Zam-Zam டீக்கடையில் (the hottest tea i have ever had in my life) குடிச்சிட்டு வரலாம். சில பேர் முதல் பாதி சினிமாவை ஒரு நாளும், பின் பாதியை அடுத்த நாளும் - ஒரே படத்த இரண்டு instalments-ல் - பார்த்ததுண்டு. ஆனால் இது சில காலமே நடைமுறைப் படுத்தப் பட்டது.

இதில என் தப்பு ஒண்ணுமே இல்லீங்க; இப்படி திருட்டுத்தனமா பாத்த முதல் படம் நல்லா நினைவில் இருக்கிறது. Rank Organization’s ON THE BEAT என்ற Norman Wisdom நடித்த நகைச்சுவைப் படம். நான் போடும் ஒரு கணக்கு: Norman Wisdom + Jerry Lewis = நம்ம நாகேஷ். காதலிக்க நேரமில்லை படத்தில் கூட ‘செல்லப்பா’ தனது ‘ஓஹோ’ என்ற படக்கம்பெனியின் மேசை மேல் Jerry Lewis போட்டோ வைத்திருப்பார். Norman Wisdom ஹாலிவுட் ஆள் இல்லையென்பதால் அதிகமாக நமக்குத் தெரியாத நடிகர். ஆயினும் நாகேஷின் பல படங்களில் இவரது பாதிப்பு இருக்கும். A stitch in time என்ற படத்தின் கதை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் காமிக் ட்ராக்காக வரும். சரி, நம்ம கதைக்கு வருவோம். படம் பாத்துட்டு, வீட்டுக்குப் போய் அப்பாகூட உக்காந்து இரவுச் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது படத்தில் உள்ள ஒரு நல்ல காட்சி நினைவுக்கு வர, என்னையறியாமல் சிரித்து விட்டேன். அப்பா என்னவென்று கேட்க ஏதோ காலேஜ்..அது.. இது.. என்று அங்கே ஒரு ரீல் விட்டேன். அவ்வளவு பிடித்த படமே முதல் படமாக அமையாமல் இருந்திருந்தால் நான் அதற்குப் பிறகு இங்கிலீசு படம் பாக்கப் போயிருப்பேனா?


ரொம்ப வருடத்துக்கு இந்தப் பழக்கம் இருந்தது. வேலை பார்க்கும்போது நம்ம ஜாவாவில் போய் மெத்தைக்கு டிக்கெட் எடுத்து படம் பாக்கும்போதெல்லாம் 30 பைசாவில் சினிமா பார்த்த ‘ அந்த நாள் ஞாபகம்…’ வந்திரும். இப்போவெல்லாம் DVD வீட்டுக்கே வந்திடுதே! தியேட்டருக்கு அதிகமா போறதில்லையானாலும் இன்னும் அந்தப் பழக்கம் விடலை…ஏங்க! நீங்களே சொல்லுங்க; இது நல்ல பழக்கமா…இல்ல கெட்ட பழக்கமா…?

Tuesday, October 2, 2007

மலரும் நினைவுகள்

அன்பு நண்பர்களே !
வணக்கம்
இது வரை இங்கு இடப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்துப் படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். எனக்கும் ஒரு இடுகை இட வேண்டுமென்று நெடு நாள் ஆசை. ஆனால் இதுவரை பதியப்பட்டுள்ள இடுகைகளைக் காணும் போது எனது இடுகை தொடர்பில்லாமல் இருக்குமே என எண்ணித் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். ஆனால் ஒரு வார காலமாக யாருமே எழுதவில்லை. உடனே ஏதாவது எழுத வேண்டுமே என்று இப்போது எழுதிவிட்டேன். அவ்வளவு தான்
---------------------------------------------------------------------------

நான் தஞ்சையிலிருந்து Third form படித்து விட்டு மதுரைக்கு மாற்றலாகி (??) Nineth standard படிப்பதற்கு வந்து சேர்ந்தேன். 1963ம் ஆண்டு மதுரையில் அடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டு வரை மதுரையில் படித்தேன்.

கோசாகுளம் புதூர் எனப்படும் கே.புதூரில், 3, மாரியம்மன் கோயில் தெரு என்னும் முகவரியில் வசித்தோம். ஒரு சிறிய வீடு. முன் பக்கம் நல்ல திறந்த வெளி. மண் ரோடு. அமைதியான சூழ்நிலை. வீட்டின் முன்புறம் ஒரு வேப்ப மரம். அதனில் கட்டப்பட்டிருக்கும் கன்றுடன் கூடிய பசு. பின்புறம் ஒரு தோட்டம் எனச் சொல்லப்பட்ட வெற்றிடம். ஹைஜம்ப், லாங்ஜம்ப், சடுகுடு, கிட்டிப்புள், எனப் பல விளையாட்டுகள் விளையாடிய இடம்.

வீட்டின் முன்பக்க அறையில் ஒரு சிறு மளிகைக் கடை வைத்திருந்தோம். அது காய்கறிக் கடையோடு இணைந்த மளிகைக்கடை. வியாபாரம் நன்றாகவே நடந்தது. காலை 4 மணிக்கு நானும் என் தந்தையும் சைக்கிளில் சென்று மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருந்த சென்ட்ரல் மார்க்கெட்டில் இருந்து அனைத்துக் காய்கறிகளையும் மொத்த விலையில் வாங்கிக் கொண்டு வருவோம். கீழ மாசி வீதியிலும் வீதி முழுவதும் உள்ள தேங்காய்க் கடைகள், பழக்கடைகள், அனைத்திலும் கொள்முதல் செய்து, புதூர் வரும் போது காலை 6 மணி ஆகிவிடும். காலையிலேயே தினந்தினம் புதுசு புதுசா காய்கறிகள் வியாபாரம் களை கட்டும். ஏழு ஏழரைக்கெல்லாம் முடிச்சிட்டு மளிகைக் கடையில் உக்காந்தா எட்டரை வரைக்கும் இருப்பேன். அப்புறம் அவசர அவசரமா எல்லா வேலையும் முடிச்சிட்டு பள்ளி செல்லும் பாலகன் நானே - பள்ளிக்கூடம் போகனும்.

வீட்டிலே இருந்து நாங்க நண்பர்கள் புடை சூழ நடந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்தேதேதேதே தல்லாகுளம் பெருமாள் கோயில் அருகே இருக்கும் அமெரிக்கன் கல்லூரி உயர் நிலைப்பள்ளிக்குச் செல்வோம். பள்ளிக்குச் செல்லும் வழி இரண்டு உண்டு. புதூர் பஸ் ஸ்டாண்டில் அனைவரும் கூடி அரட்டை அடித்துவிட்டு அழகர் கோயில் மெயின் ரோட்டிலேயே நடந்து ஐடிஐ, ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட், தல்லாகுளம் என நடந்து செல்வதற்குள், வீடு, பள்ளி, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம், உலகம் என அத்தனை இடங்களைப் பற்றியும், நிகழ்வுகள் பற்றியும், பேசிப் பேசி, விவாதித்து, ஆமோதிக்கும் கட்சி, மறுக்கும் கட்சி எனப் பட்டி மன்றம் நடத்தி ( அதில் சில நண்பர்கள் பார்வையாளர்களே) - பள்ளி சென்ற நாட்கள் - இன்பமாகக் கவலையின்றி கழிந்த நாட்கள் - வாழ்க்கையின் சுவையான நாட்கள் - திரும்பக் கிடைக்காத நாட்கள் - அசை போட்டு ஆனந்திக்கும் நாட்கள். கவலைப் படுகின்ற சில நாட்களில் ஆறுதலுக்கு நட்பே கை கொடுக்கும். மேலும் பெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள இரட்டைப் பிள்ளளயாரிடம் சொல்லி விட்டால் கவலைகள் பறந்து போகும் - மறந்து போகும்.

பள்ளிக்குச் சென்ற மற்ற வழி - வீட்டிற்குப் பின்புறம் இருந்த பெரிய கம்மாக்கரை வழியா நடந்து போனது. கம்மாயிலே இடுப்பளவு தண்ணி இருந்த காலத்திலே குளிக்கிறோம்னு சொல்லி கூத்தடிச்ச காலங்கள் உண்டு. தண்ணிக்குள்ளே வந்து கோமணத்தே உருவிட்டுப் போய்டுவானுங்க! . காலைலே சுகமா கம்மாக் கரையிலே பசங்களோட அப்பிடியே வெளீயே போய்ட்டு கம்மாலெயெ காலைக் கழுவிட்டு வந்த சுகம் இப்போ பெரிய வீட்லே WC டாய்லெட்லே கிடைக்குறதா ??

தற்போதைய DRO காலனி, சர்வேயர் காலனி ன்னு கம்மா பூரா வீடுகளா மாறிடிச்சி. கம்மாக்கரையிலேயே நடந்து நத்தம் ரோட்டைப் பிடிச்சா - கலக்டர் பங்களா, ரிசர்வ் லைன், எஸ்பி பங்களா, பிடபுள்யூடி ஈஈ பங்களா, கெஸ்டவுசுன்னு பல பங்களாக்கள் கடந்து அவுட்போஸ்ட் வந்து மெயின் ரோட்லே ஜாயின் பண்ணுவோம்.

அப்பல்லாம் ஏதாவது அதிக ஆசைப்பட்டு வீட்லே கேட்டா, அப்பா வந்து "பெரிய சேஷய்யன்னு மனசிலே நினைப்பா" ன்னு திட்டுவாங்க. யாரந்த சேஷய்யன்னு ரொம்ப நாள் தெரியாம இருந்திச்சி. அப்புறம் தான் ஒரு நா அவர் தான் பெரிய, மதுர ஜில்லாக் கலெக்டர்னு தெரிஞ்சுது. (T.N.Seshan).

சில சமயம் பேச்சிலே சண்டை வந்து காய் விட்டுட்டு பசங்களெப் பிரிஞ்சு நாங்க ரெண்டு மூணு பேரு நத்தம் ரோட்லெந்து பிரிஞ்சு சொக்கிகுளம், பீபீகுளம், லேடி டோக் காலேஜ், ஓசிபிஎம் வழியா தல்லாகுளம் போவோம். சொக்கிகுளத்திலே வடமலையான் பங்களா, பிடிஆர் பங்களா, டிவிஎஸ் பங்களான்னு பெரீஈஈஈஈஈஈய வீடெல்லாம் வேடிக்கை பாத்துட்டே போவோம். பள்ளிக்கூடம் போனாப் போவோம் இல்லேன்னா தமுக்கம் மைதானம் சுவர் ஏறிக் குதிச்சுப் போய் சாயந்திரம் வரைக்கும் அங்கேயே இருப்போம். சாயந்திரம் அப்பிடியே வந்தோம்னா, பசங்க எல்லாம் காலைலேந்து காணோமேன்னு அலை பாஞ்சுகிட்டுருப்பானுங்க. அப்பிடி கெத்தா வந்து, சேந்து வீடு போவோம். திட்றவன் திட்டுவான். அழுவறவன் அழுவான். அப்புறம் பழம் விட்டுடுவோம்.

நண்பர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த - சிவானந்தம், பவானந்தம்,
நித்யானந்தம், பரமானந்தம் ஆகியோர் நல்ல நண்பர்கள். மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்திலும், மீன் வளத்துறையிலும், கனரா வங்கியிலுமாக பணிக்குச் சென்றவர்கள். நீண்ட காலமாக தொடர்பு விட்டுப் போய் விட்டது. மற்ற நண்பர்கள் மின்வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலுமாக பணிக்குச் சென்றார்கள்.

மூன்றாண்டு காலம் பள்ளி வாழ்க்கை இன்பமயமாகச் சென்றது. XIth standard வரை அங்கு படித்தேன். அக்காலக் கட்டத்தில் தான் பாண்டியன் ஹோட்டல் அஸ்திவாரம் போட்டு செங்கல் செங்கலாக உயர்ந்தது. அதற்கு முன்னால் சர்க்கியூட் ஹவுஸ் மட்டும் தான் இருந்தது.

பள்ளியில் தலைமையாசிரியராக அந்தக் காலத்தில் அமெரிக்கா சென்று வந்த திரு சுந்தர்ராஜ் இருந்தார். எங்களுக்கு ஆங்கிலப் பாடம் நடத்துவார். பொறுமையின் திலகம். கணித ஆசிரியராக திரு நரசிம்மன் ஒன்பதாம் வகுப்பிலே முழு ஆண்டுத்தேர்விலே 100 மதிப்பெண் கொடுத்து பத்தாம் வகுப்பினிலே அல்ஜீப்ரா கணிதம் எடுக்க வைத்து கணிதத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியவர். தமிழாசான்களாக, திரு நடராஜன், கோவிந்தன், அலங்காரம் என்னும் பெருமக்கள் கற்றுத்தந்த தமிழ்தான் இன்றைக்கும் சிறிதளவாவது தமிழ் பேச வைக்கிறது. திரு அலங்காரம் அவர்கள் நடத்திய ந-சூ (நன்னூல் சூத்திரம்) மறக்க முடியுமா - தமிழிலக்கணத்தை கரைத்துக் குடிக்க வைத்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞான ஆசிரியர் திரு ஜான்சன் சுவாமிப் பிள்ளை. பாடம் நடத்தும் பொழுது திடீரென "பள்ளிதனில் தூங்கியவன் கல்வி இழந்தான்" என்று கூறினாரென்றால் - எவனோ ஒரு மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று பொருள். சக மாணவர்கள் அக்கம் பக்கம் பார்த்து அவனை எழுப்பி விடுவர். ஆசிரியரோ கவலைப் படாமல் தொடர்ந்து பாடம் நடத்துவார். சமூக இயல் ஆசிரியர் திரு Eddie. உடற் பயிற்சி ஆசிரியர் திரு டெய்லர். ஹிந்தி ஆசிரியர் திரு சீனிவாசன்.

அக்கால கட்டத்தில் தான் இந்தி எதிர்ப்பு பலமாக இருந்த காலம். காளிமுத்து, சீனிவாசன் போன்றவர்கள் கல்லூரிகளில் படித்த காலம் - சட்ட எரிப்பு நடத்திய காலம். பக்தவக்சலம் முதல்வராகவும் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகவும் இருந்த காலம். இன்றும் இந்தி தெரியாமல் துயரப் படுவதற்கு வழி வகுத்த காலம். முதல் மந்திரியையும், பிரதம மந்திரியையும் எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் இன்றும் நினைவிலிருக்கின்றன.

தமுக்கம் மைதானம், அடுத்துள்ள பூங்கா, காந்தி மியூசியம், ரேஸ்கோர்ஸ் மைதானம் இவை தான் எங்களது பொழுதுபோக்கும் இடங்கள்.
முழங்கால் வரை நீண்ட டிரவ்சர்( வளர்ற புள்ளே - நல்லாத் தையுங்க) - காமராஜர் மாதிரி முழங்கை வரை தொள தொள சட்டை - ஒரு கையில் பை நிறைய புத்தகங்கள் - நோட்டுகள் - எப்போதும் கசியும் ஒரு பவுண்டன் பேனா - ஜாமெட்ரி பாக்ஸ் - இத்துடன் ஒரு பெரிய அலுமினிய / எவெர்சில்வர் தூக்குச் சட்டி. அதனுள் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், புளி சாதம் என வகை வகையாக தினத்துக்கொன்று என பலவகை சாதங்கள் - உடன் துவையல் ஊறுகாய் வெஞ்சனம் என - படிக்குற புள்ளே - பாவம்னு - அம்மா ஆசை ஆசையாக கட்டிக்குடுக்கும் மதிய சாப்பாடு - மறுபடி சிறு பையனாக மாறி பள்ளி செல்ல வேண்டும்.

பள்ளியின் அருகிலேயே தமுக்கம் மைதானத்தின் சுற்றுச் சுவர் இருந்தது. ஏறிக் குதித்து சாப்பிட அங்கு செல்வோம் - அனைத்து தூக்குச் சட்டிகளும் திறக்கப்பட்டு கூட்டாஞ்சோறு உண்ணுவோம். வெள்ளைச் சாமி உதயணன் என்ற வகுப்புத் தோழர்களுடன் அடித்த கூத்துகள் மறக்க முடியாதவை.

தொடர்கிறேன் அடுத்த இடுகையாக

அன்புடன் ..... சீனா