Wednesday, August 29, 2007

எங்க தாத்தா இடம்தாங்க, நம்புங்க! :D

கழுதை அக்கிரஹாரத்துக்கு முன்னால் நாங்க காக்காத் தோப்புத் தெருவில் கொஞ்ச நாட்கள் (நாட்கள்னு தான் அம்மா சொல்லுவாங்க) இருந்தப்போ என்னோட அண்ணா சூரியநாரயாண சாஸ்திரி பள்ளியில் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். பள்ளி இடைவேளையில் நான் (அப்போக் குழந்தையாக இருந்தேன்) அண்ணாவுடன் பள்ளிக்குப் போகணும்னு அடம் பிடித்துப் பின்னாலேயே ஓடுவேன் என்றும், சிலநாட்கள் அண்ணா வேறே வழி இல்லாமல் என்னையும் அழைத்துப் போவார் என்றும், பின் ஆசிரியர் பார்த்துத் திட்டி வீட்டுக்குக் கொண்டு விடச் சொல்லுவார் என்றும் அம்மா ரொம்பப் பெருமையாகச் சொல்லுவாங்க, (ஹிஹி, என்னைத் தான்). இதனால் எல்லாம் நான் என்னமோ ரொம்பப் பெரிய படிப்பாளினு நினைச்சோ என்னமோ அப்பா 4 வயசு முடியும் முன்னேயே பள்ளியில் சேர்ததோடு அல்லாமல் பிடிவாதமாய் முதல் வகுப்பிலும் உட்கார்ந்தேன். என்றாலும், காலையில் பள்ளிக்குப் போக குறைந்த பட்சமாய் 7 மணிக்குள்ளாவது எழுந்திருக்கணும். ஆனால் நான் எழுந்திருக்க மாட்டேன். 3 மாசக் குழந்தையான தம்பி அம்மா கிட்டே இருக்கும் போது நாம் மட்டும் அம்மாவை விட்டுட்டுப் போக வேண்டி இருக்கேனு துக்கம் தொண்டையை அடைக்கும். அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டு இருப்பேன். (அம்மா சொன்னது தான்) சிலநாட்கள் நேரம் ஆகிவிடும் என்பதால் அண்ணா கிளம்பிப் போய்விடுவார். அப்புறமாய் அப்பா என்னைக் கொண்டு விட்டு விட்டுத் தான் தன் பள்ளிக்குப் போவார். கிட்டத் தட்டத் "தரதர"னு இழுத்துட்டுப் போவார்னே சொல்லலாம். அப்பா ரொம்பவே கோபக் காரர். பொதுவாய் மதுரைக் காரங்களே கோபத்துக்குப் பிரசித்தினு சொன்னாலும், அப்பாவின் கோபம் அலாதியானது. கண்டிப்பும் ரொம்பவே அதிகம்.

முதல் வகுப்பு டீச்சரும் சரி, அவங்க அக்காவான 2-ம் வகுப்பு டீச்சரும் சரி, ரொம்பவே நல்லவங்களாய்த் தான் இருந்திருக்காங்க. என்றாலும் அது எல்லாம் புரிகிற வயசு நமக்கு இல்லையே? அதுவும் 2-ம் வகுப்பு டிச்சர் கொஞ்சம் ஆஜானுபாகுவா வேறே இருப்பாங்களா? பயம் அதிகமா இருக்கும். அந்தப் பள்ளி மானேஜ்மென்ட் கமிட்டியில் இருந்த பெரியப்பா கிட்டே சொல்லி வேறே செக்க்ஷனுக்கு மாத்திக் கொண்டேன். ஆனால் அதன் பலன் 3-ம் வகுப்பிலே நல்லாத் தெரிந்தது. சுத்தமாய் 3-ம் வகுப்பு ஆசிரியருக்கு என்னைப் பிடிக்கலை. எனக்கும் அவரைப் பிடிக்கலை. என்னோட நினைவுகள் இங்கே தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பிக்குது. இதில் இருந்து தான் எனக்கு என் பள்ளி நினைவுகள் மற்றவர் சொல்லாமலே நானே புரிந்து கொள்ள ஆரம்பித்தது. நான் அதிகம் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததும் இந்த வகுப்பில் இருந்து தான்.

மேல ஆவணி மூல வீதியில் இருந்து வடக்கு ஆவணி மூல வீதியில் இருந்த் பள்ளிக்குப் போகும் வரை தெரு பூராவும் உறவின் முறையும், நண்பர்களும் விசாரிப்பு இருக்கும். என் அம்மாவின் சித்தப்பாவின் மருந்துக்கடை தாண்டிச் சற்று தூரத்தில் தெருவின் இடது பக்கமாய் என்னோட பெரியப்பா வீடு இருந்தது. தனி வீடு. பெரியப்பா சொந்தமாய் குதிரை வண்டி கோர்ட்டுக்குப் போக வைத்திருந்தார் என நினைக்கிறேன். பெரியப்பா வீடு எங்களுக்கு அந்த வயதில் ஒரு சொர்க்கம். அதுக்குப் பின்னர் தாத்தா வீடு. இப்போ எஸ்.எஸ்.காலனி என்று அழைக்கப் படும் சோமசுந்தரம் காலனியும் அதன் சுற்றுப்புறங்களும் உண்மையிலேயே என்னோட தத்தாவுக்கும் அவர் தம்பிக்கும் உடமையான இடம். இன்று பல கோடி மதிப்பில் இருக்கும் அந்த இடம் 60 களிலேயே பல லட்சங்களுக்கு மதிப்பு இருந்ததாய் சொல்லப் பட்டிருக்கிறது என்றாலும் தாத்தாவுக்கும் அவர் தம்பிக்கும் கிடைத்தது என்னமோ சில ஆயிரங்கள் தான். தாத்தாவின் சித்தப்பா அந்த இடத்தைத் தாத்தாவும், அவர் தம்பியும் மைனராக இருந்தபோது கையகப் பற்றி விற்று விட, அதற்குக் கேஸ் போட்ட தத்தா, கிட்டத் தட்ட தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவு செய்து 63-ல் வெற்றி பெறார் என்றாலும் நிலம் அதற்குள் பல கைகள் மாறி விட்டது. மீட்கும் சக்தி யாரிடமும் இல்லை. ஒரு இனிய நினைவாகப் போய் விட்டது. சில விஷயங்கள் சொல்லலாமா வேணாமானு தெரியலையே? :))))))) அதில் இதுவும் ஒண்ணு.

Sunday, August 19, 2007

கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து.....

கழுதை அக்கிரஹாரம் மட்டும் என் நினைவில் இருந்தாலும், அதற்கு முன்னர் காக்காத் தோப்புத் தெருவில் சில மாதங்களும், லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் சில நாட்களும் இருந்ததாய் அம்மா சொல்லுவார். நான் முதன் முதல் பள்ளி சேர்ந்ததே ஒரு விந்தைதான். வயசு ஆகவில்லை என அம்மா, தாத்தா(அம்மாவின் அப்பா), பெரியப்பா எல்லாரும் சொல்ல, அப்பாவோ கூட வயசு கொடுத்துச் சேர்த்து விடுவதில் பிடிவாதமாய் இருந்தார். வேறு வழி தெரியாமலோ என்னமோ என் பெரியப்பா மானேஜ்மென்ட் கமிட்டி அங்கத்தினராக இருந்த பள்ளியில் என்னை அவருடைய செல்வாக்கை உபயோகித்துச் சேர்த்து விட்டிருக்கிறார். அந்தப் பள்ளியில் தான் என்னுடைய சொந்த அண்ணனும் படித்துக் கொண்டிருந்தார். நான் பிடிவாதமாய் முதல் வகுப்பில்தான் உட்காருவேன் என்று சொன்னதாலும், என் பெரியப்பா பெண் (என்னோட அக்கா) அங்கே முதல் வகுப்பில் இருந்தாள், அவளுடன் தான் படிப்பேன் என்று ரொம்ப அழுதேன் என்பதாலும் வேறு வழியில்லாமல் என்னை முதல் வகுப்பில் உட்கார்த்தி வைத்திருக்கின்றனர். என்றாலும் அந்த வகுப்பை விட்டு நான் போக மறுத்திருக்கிறேன். வீட்டில் அம்மா சொல்லிக் கொடுக்கப் பாடங்கள் ஆரம்பித்தது. என்றாலும் அப்போதில் இருந்தே கணக்கு என்றால் எனக்கு எட்டிக் காயாகத் தான் இருந்தது. இருந்தாலும் பாஸ் மார்க்கை விட அதிகமாகவே 70,80 வாங்கிக் கொண்டு இருந்தேன். ஆசிரியை முதல் மூன்று வகுப்பிலும் எனக்குச் சற்றும் ஒத்துப் போகாதவர்களாக இருந்தனர். ஆனால் முதல் வகுப்பு ஆசிரியை மிகவும் சாதுவான பெண்மணியாய்த் தான் இருந்தார் எனச் சொல்வார்கள். அவரின் சகோதரியே 2-ம் வகுப்பில் ஆசிரியை.

அப்போ நினைச்சுப்பேன் அக்கா, அண்ணா என்றால் பெரிய வகுப்பு பாடம் எடுக்கச் சொல்வாங்க போலிருக்கு என்று. எல்லாவற்றையும் விட வடக்காவணி மூல வீதியில் இருந்த பள்ளிக்கு நானும் என் அண்ணாவும் கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து தினமும் போக வேண்டும். அண்ணா என் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல நான் கூடவே போவேன். கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து திண்டுக்கல் ரோடு வந்து, ராஜா பார்லி பக்கத்தில், அனுமந்தராயன் கோவில் தெருவில் திரும்பி, மேலக் கோபுர வாசலில் அப்போது இருந்த ஃபண்ட் ஆஃபீஸ் எதிரே தெருவைக் கடந்து மேல ஆவணி மூல வீதியில் நுழைவோம். அங்கே நுழையும் போது வலது பக்க மூலையில் ஒரு பட்சணக் கடை இருந்தது. அது தாண்டிக் கொஞ்ச தூரத்தில் கண்ணுசாமி ஐயர் என்பவர் வீட்டிற்கு அருகே என் அம்மாவின் சித்தப்பா வைத்திருந்த மருந்துக் கடை இருக்கும். அதற்கு எதிரே ஒரு பிள்ளையார் கோவில். அது திறந்தே நான் பிள்ளையார் சதுர்த்திக்குக் கூடப் பார்த்தது இல்லை. எப்போவாவது திறக்கும். அந்தப் பிள்ளையார் கோவில் வாசலிலேயே என் மாமாக்க்கள் எல்லாம் தங்கள் சிநேகிதர்களுடன் நின்று பேசிக் கொண்டிருபார்கள். எதிரே கடையில் என்னுடைய சின்னத் தாத்தா உட்கார்ந்திருப்பார். சுதந்திரப் போராட்ட வீரர். மிகவும் உழைத்தவர். கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவரிடம் வேலைக்கு இருந்தவர் பின்னாளில் மதுரை மேயர் ஆனார்.

Thursday, August 16, 2007

தல புராணம் - 2

Image and video hosting by TinyPic

படத்தில் இருப்பது St. Mary’s Cathedral - புனித மரியன்னைப் பேராலயம்.இதற்குப் பின்னால் வலது பக்கத்தில் நான் படித்த துவக்கப் பள்ளி - ஒன்றிலிருந்து ஐந்து வரை. இடது பக்கம் உயர்நிலைப்பள்ளி - I Form to VI Form வரை. அப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளியின் ஆறு வகுப்புகளும் Forms என்றே அழைக்கப் படும். VI Form - தான் S.S.L.C.அதாவது, பள்ளியிறுதி வகுப்பு. ஒன்றிலிருந்து பதினொன்றுவரை படித்துவிட்டு அதற்குப் பிறகு school campus-க்கு bye..bye சொல்லிட்டு போறதுதான் எல்லோருக்குமே வழக்கம். ஆனால் என் வாழ்க்கையில அந்த கேம்பஸ் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. என்னை நானே அந்த campus kid என்று சொல்லிக்கொள்வேன் பெருமையாக, சந்தோஷமாக.


நாங்கள் அப்போது இருந்த வீடு இந்தக் கோவிலில் இருந்து ஏறத்தாழ ஒன்று அல்லது ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. தெற்குவாசல் போஸ்ட் ஆபிஸ் அருகில் ஒரு ஒட்டுக்குடித்தன வீடு - அதைப் பற்றி பின்பு ‘சொந்தக்கதை’யில் எழுதுவதாக எண்ணம். நான் S.S.L.C. வகுப்புக்கு வந்த வயதில் வீட்டில் ‘ஜனத்தொகை’ அதிகமாயிடுச்சு. இருந்து படிக்க வசதி மிகக் குறைவு. இது ஒரு நல்ல ‘சாக்காகப்’ போய்விட்டது எனக்கு. காலையில் கோவிலுக்குப் போய்ட்டு ஒரு ஒன்று, ஒன்றரை மணி நேரம் பள்ளியிலேயே இருந்து ‘படித்து’விட்டு, அது போலவே மாலை ஆறு ஏழு மணிக்கெல்லாம் மறுபடி கேம்பஸ் வந்து ஒன்பதுவரை மறுபடியும் ‘படித்து’விட்டு வர வீட்டில் அனுமதி உண்டு.


வசதிக் குறைவினால் வீட்டிலிருந்து படிக்க முடியாத கிறித்துவ மாணவர்கள் பலருக்கும் ஒரு தனி அறை பள்ளியில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பத்து பதினைந்து மாணவர்கள் சேருவோம். அறைக் கதவுகளை மூடி, கொசுவுக்காக காய்ந்த சருகுகளைப் போட்டு எரித்து, கொசுவை விரட்டி (?!) பிறகு கதவைத் திறந்துவிட்டு புகைய விரட்டி…இந்த தயாரிப்புகள் எல்லாம் முடிவதற்குத் தான் நேரம் சரியாக இருக்கும். கண்காணிப்பென்று எதுவும் இருக்காது. ஆகவே, எல்லாம் அவுத்துவிட்ட கண்ணுக்குட்டிகள்தான். எங்க ஒழுங்கா படிச்சோம் - அப்படி படிச்சிருந்தாதான்… (பொறுத்துக்கொள்ளணும் - அநேகமா இந்த வரியை அடிக்கடி ‘ரீப்பீட்டே’ போட வேண்டியதிருக்கும்!)


பள்ளிப்படிப்புக் காலத்தில் மேற்சொன்னவைகள் நடந்தேறின. கல்லூரி நாளில் முதலில் கேம்பஸில் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன் - வெராண்டா அப்படி இப்டியென்று. அதைப்பார்த்த ஃபாதர் ஒருவர் நீ யார், என்ன பண்ணுகிறாய் என்று பல குறுக்குக் கேள்விகள் கேட்டு அடுத்த நாள் என்னை வந்து பார் என்றார். அதே போல் போய் பார்த்தேன். கொஞ்சம் சீரியசான சாமி அவர் என்பது தெரியும். என்னை மாதிரி வேறு யாராவது அறை தேவைப்படுபவர்கள் உண்டா என்றார். இருக்கிறார்கள்; ஆனால் வசதி இங்கும் இல்லாததால் வருவதில்லை என்றேன். வசதி கொடுத்தால்… என்றார். இன்னும் மாணவர்கள் வருவார்கள் என்றேன். சரி, பொறுப்பாகப் பார்த்துகொள் என்று ஒரு தனி அறை கொடுத்தார்.


ம்.. ம்.. அறையா அது! அப்போ உள்ள எங்க ‘ஸ்டாண்டர்டுக்கு’ அது ராஜ மாளிகை. வீட்டில் மின்விசிறியே கிடையாது. சேரில் உட்கார்ந்து காலை டேபிள் மேல்போட்டுக் கொண்டு வீட்டில் ‘படிக்க’ முடியுமா? இல்ல, படிக்க வசதிதான் இருந்ததா? இப்படியாக சேர், மேசை,ஃபேன் என்று என் ‘ரேஞ்சே’ ஏறி / மாறிப் போச்சு. புத்தகங்களை வைத்துப் போக ஒரு சின்ன cup board வேறு. அட்டகாசம்தான் போங்கள். அதனால்தான் நம்ம அட்டகாசம் ஆரம்பித்தது.


அந்த ‘அட்டகாசம்’ பற்றி சொல்வதற்குள் வேறொரு விதயம் சொல்லணுமே. இந்த சிகரெட், பீடி குடிக்கிறவங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் கேளுங்கள்; சிகரெட் வாசனைஎன்பார்கள். அவர்களைத் தவிர மற்ற ஆட்களைக் கேளுங்கள்; அவர்கள் எல்லோரும் நாற்றம் என்பார்கள். இது எப்படின்னு கேட்டா ‘மனசுதான் காரணம்’ என்பீர்கள். சரி, போகுது..ஆனா என்னன மாதிரி ஆட்களுக்கு ஏன், எப்படி ரொம்ப சின்ன வயசிலேயே அந்த ‘வாசனை’ பிடிச்சுப் போகுது? genetically ஏதோ இருக்கணும். (பத்மாகிட்டதான் கேட்கணும்) அதிலயும் அம்மாவோட வழியில் தாத்தா மட்டும்தான் புகை பிடிச்சவர். என்ன கணக்கோ, என்ன மாயமோ, இல்ல என்ன ஜீன்ஸோ தெரியலை. ஆனா சின்ன வயசில இருந்தே அந்த வாசனை ரொம்ப பிடிச்சதென்னவோ உண்மை. அந்தக் காலத்தில சினிமா அரங்குகளில் எல்லாம் சிகரெட் பிடிக்கத் தடையேதும் இல்லை. ஆகவே தியேட்டர்களுக்கு உள்ளே போனதும் ‘நல்ல′ மனுஷங்களுக்கு மூச்சு முட்டும்; நம்ம கேசுகள் அப்பதான் மூச்ச நல்லா உள்ள இழுப்போம்.

(தடை வந்த பின், மதுரை தங்கம் தியேட்டருக்குள் புகை பிடிக்கிறவங்களைப் பிடிக்க போலீஸ் வந்தால் ஸ்க்ரீன் பக்கத்தில் ரெட் லைட் எரியும். அப்படி ஒரு நாள் எரிஞ்சப்போ, சிகரெட் குடிச்சிக்கிட்டு இருந்த நாங்கள் (நானும், நண்பன் ஆல்பர்ட்டும்) வெளியே வந்த அந்த அகஅஅஅஅல வெராண்டாவில்-தியேட்டர் அவ்வளவு பெரிசு - நின்னுகுடிச்சது, வேறு ஆளே கிடைக்காததால் என்னைக் கூப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் சைக்கிளில் வர, நானும் நண்பன் ஆல்பர்ட்டும் நம்ம ஜாவாவில் பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போனது, அவரிடம் நாம ஒரே இங்கிலிபீஸில் பேசினது, கடைசியில் அவர் தனது ஒரிஜினல் இங்கிலிபீஸில், ‘ i leave you for your English-ன்னு சொல்ல, திரும்பி தியேட்டருக்கு வந்து மீதி சினிமாவை சிகரெட் பிடித்துக்கொண்டே பார்த்தது ஒரு தனிக்கதை. இப்ப எதுக்கு அது?)


எப்ப சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன், அப்புறம் முத முதல்ல ‘திருட்டு தம்’ அடிச்ச கதை, இதையெல்லாம் அப்புறமா சொல்றேன், சரியா? இப்ப விதயத்திற்கு வருவோம்.


இப்படி எக்கச் சக்கமான சுதந்திரம் கிடச்சது அப்பப்போ ‘தம்’ அடிக்கிறதுக்கு வசதியா போச்சு. பிள்ள படிக்க போயிருக்குன்னு வீட்ல நினச்சுக்குவாங்க. இங்க வேற வேலை நடக்கும்; அதுவும் எங்கே நடக்கும் தெரியுமா? ஹும்…Royal Palace-ல தான். புரியலையா…அடுத்த ‘தல புராண’ பதிவில பாத்துக்கங்க…

Wednesday, August 15, 2007

மீனாட்சி ஆட்சி செய்யும் ஹூஸ்டன்!



1970-களில் ஆரம்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் ஹூஸ்டன் மீனாக்ஷி கோவில், ஒவ்வொரு பாகமாக மெதுவாகத் தான் கட்டப் பட்டிருக்கிறது. 1977-ல் மீனாட்சி அம்மன் கோவில் கழகம் ஏற்பட்டு, 78-ல் இப்போது கோவில் இருக்கும் இடத்தை வாங்கி முதலில் பிள்ளையார் கோவில் கட்டி இருக்கின்றனர். 1992-ல் தான் கோவில் முழுதும் கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது. முதலில் பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் இப்போதும் பிள்ளையார் இருக்கிறார், என்றாலும் அங்கே இப்போது பக்தர்கள் வீட்டு விசேஷங்கள், (கல்யாணம், சீமந்தம், காது குத்து போன்றவை), பஜனைகளும், சில சமயம் சிறிய அளவிலான கச்சேரிகளும் நடை பெறுகிறது. கோவிலுக்கு எனத் தனியாக ஏற்பட்டுள்ள ஆடிட்டோரியம் சமீப காலத்தில் தான் கட்டி முடிக்கப் பட்டது.

இந்த 5 ஏக்கர் பரப்பிலான இடத்தில் கோவில் கட்டத் தீர்மானித்து அதற்காக முதன் முதல் திட்டம் போட்டவர் திரு ரஞ்சித் பானர்ஜி, என்னும் ஹூஸ்டன் கலாசாலைப் பேராசிரியர் ஆவார். திரு கணபதி ஸ்தபதி இருமுறை ஹூஸ்டனுக்கு நேரேயே வந்தும், மற்றும் திரு முத்தையா ஸ்தபதியின் மேற்பார்வையிலும், மதுரை மீனாட்சி கோவிலின் மறு பதிப்புப் போல் கட்டப் பட்ட இந்தக் கோவிலின் கழகம் மூலமாய்ப் பல நற்பணிகள் செய்யப் படுகிறது. வேதக் கலாசாரத்தை நிலை நிறுத்தும் வண்ணம் வகுப்புக்களும், தேவாரம், திருவாசகம், தமிழ் கற்றுக்கொடுப்பது போன்றவையும், அன்னதானங்களும் நடைபெறுகிறது. தேர்ந்தெடுத்த பண்டிதர்களை வரவழைத்து, உலக நன்மைக்காக ஹோமங்கள், யக்ஞங்கள் செய்யப் படுகின்றன. மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் முக்கிய அதிபதியாக இருந்தாலும், இங்கே விஷ்ணுவுக்கும் இடம் உண்டு. தற்சமயம் கர்நாடகத்தில் இருந்து வந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் விஷ்ணுவிற்கும், பத்மாவதித் தாயாருக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றது. மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் 2 வருஷம் முன் வரை மதுரையில் இருந்தே பட்டர் வந்து வழிபாடுகள் செய்து வந்தார். தற்சமயம் நிலவரம் தெரியவில்லை. பொதுவாக அமெரிக்கக் கோவில்களில் இருக்கும் மஹாவிஷ்ணு சிலாரூபம், நின்ற கோலத்தில் திருமலை வேங்கடநாதனின் பெயர் தாங்கியே காணப்படுகின்றனர். விஷ்ணு சன்னதி இல்லாத சிவன் கோவிலோ, சிவன் சன்னதி இல்லாத விஷ்ணு கோவிலோ பார்ப்பது அரிது.

தென்னிந்தியர்களால் நிர்வகிக்கப் படும் இத்தகைய கோவில்களில் பெரும்பாலும் திருப்பதி பல்கலைக் கழக வேதப் பாடசாலையில் படித்தவர்களோ அல்லது மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்களோதான் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். மாறாக மீனாட்சி கோவிலில் பட்டர் ஒருவர் இருந்தார். தற்சமயம் அவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. :( என்றாலும் பல அமெரிக்க நாட்டுக் காரர்களும் இந்தக் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில் பஞ்சாங்கம், காலன்டர் போன்றவை பக்தர்களுக்குச் சகாய விலையில் கிடைக்கிறது. மிகப் பெரிய நூலகமும் உள்ளது. புத்தகங்கள் வாடகைக்குக் கிடைக்கும். அங்கேயே காய்கறிகளும் குறித்த நேரத்தில் போனால் வாங்கலாம். திரைப்பட ஒலி, ஒளிக் காசெட்டுகள், டிவிடிகள், சிடிக்கள் போன்றவையும் வாடகைக்குக் கிடைப்பதோடு அல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அனைத்துத் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கிடைக்கிறதும் ஒரு முக்கிய விசேஷம் ஆகும். "பாரதி கலை மன்றம்' என்ற பெயரில் உள்ள மன்றம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகத் தென்னிந்தியர்களுக்குப் பலவிதங்களில் சேவை செய்து வருகிறது. முக்கியப் பண்டிகை நாட்களில் பட்டி மன்றங்கள், தோசைத் திருவிழா, ஆடை, அணிகலன்கள் விற்பனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கச்சேரிகள், இலக்கியச் சொற்பொழிவுகள் கலைமன்றமும், மீனாட்சி கோவில் கழகமும் சேர்ந்து நடத்துகிறது. சீதோஷ்ண நிலையிலும் சென்னையை ஒத்தே இருப்பதால் ஹூஸ்டன் தமிழர்களுக்குத் தாய்நாட்டை விட்டுப் பிரிந்த ஏக்கம் தோன்றாது.
உணவு விடுதிகள் பெரும்பாலும் சைவமாக இருந்தாலும், சில ஒன்றிரண்டு பஞ்சாபி மற்றும் வட இந்திய உணவு விடுதிகள் அசைவமும் அளிக்கிறது.

Saturday, August 11, 2007

மதுரையிலேயே பெரிய வீடு - 1

மதுரை என்ற உடன் மனதில் நினைவிலாடுவது 2 விஷயங்கள்.ஒன்று மீனாட்சி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ. இன்றும் மதுரையிலிருந்துதான் உலகுக்கெலாம் மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதுபோலவே சக்தி பீடங்களில் மதுரை முக்கிய இடம்வகிக்கிறது, சக்தி வழிபாட்டில் மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர்.


இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவதுஇந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்துகுஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.


சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாட்சி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்குஎதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட டுப்ளிகேட் லிங்கம் இன்றும் காட்சிக்கு உள்ளது.


குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.


விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தைபூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவரை விமானங்கள், இந்திர விமானம்என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.



ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சன்னதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கிறது. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை, கிருதமால் நதிகள். இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்ரமிப்புக்களுக்கிடையே, வெறும் கழிவுநீர்க்கால்வாயாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக்குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரையாதினத்தில் வழிபாட்டில் உள்ளது.
மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.

Thursday, August 9, 2007

தல புராணம் - 1

தல புராணம் அப்டிங்கிற தலைப்பில எங்க ஊரு மதுரையென்னும் ‘பெரிய கிராமத்தில′ உள்ள எனக்குத் தெரிஞ்ச சில இடங்களைப் பத்தி எழுத ஆசை. அதில் இது முதல்…

Image and video hosting by TinyPic

இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது இது ஒருகாலத்தில் மதுரையின் மையமாக,V.V.I.P.கள் யார் வந்தாலும் தங்கற ஹோட்டல் இதுதான்னு சொன்னா நம்பமுடியுதா? மதுரை மேல மாசி வீதியில் இருக்கிற இந்த இடத்த நான் சின்ன பையனாக இருந்தப்போ பாத்திருக்கேன். ஜே..ஜேன்னு இருக்கும். அந்தக் காலத்தில் ரோட்டில ரொம்ப ஒண்ணும் கார்கள் போய்ட்டு வந்திட்டு இருக்காது. ஆனா நான் பாத்த நேரங்களில் எல்லாம் இந்தக் கட்டிடம் முன்னால நிறைய கார்கள் எப்போதும் நிக்கும். ஆட்கள் நிறைய அந்த லாட்ஜ் முன்னால நின்னாங்கன்னா யாரோ நடிக, நடிகையர்கள் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாம். ‘மாடர்ன் லாட்ஜ்’ன்னு பேரு. எல்லா அரசியல் தலைவர்கள், மற்ற முக்கிய புள்ளிகள் வந்தால் இங்கேதான் தங்குவாங்க.

இந்த லாட்ஜ் எங்க இருக்குன்னு இப்ப தமிழ்நாட்ல இருக்கிற எல்லாருக்கும் ஈசியா அடையாளம் சொல்லிடலாம். ரெண்டு மூணு வருசத்துக்கு முந்தி சுப்பிரமணி சாமி தலையிட்டு அடிதடி நடத்தி, பூட்டியிருந்த ஒரு இட்லிகடையை உடச்சி எல்லாம் திறந்தாரே - ‘முருகன் இட்லிக் கடை’ , ஒரு இன்டர்நேஷனல் லெவல்லுக்கு கொண்டு போக முயற்சி செய்து, ஸ்டேட் லெவலோட முடிஞ்சிதே - அந்தக் கடை ஏறக்குறைய இதற்கு எதிர்த்தாற்போல் இருக்குது.அந்தக் காலத்தில தலைவர் காமராஜர் வரும்போது இங்க தங்கினாலும், இந்த லாட்ஜில் இரவு சாப்பிடுவதை விடவும், இதிலிருந்து ஒரு 100 மீட்டர் கூட இருக்காது ஒரு பத்துக்கு பத்து கடை ஒண்ணு இருக்கும். செளராஷ்ட்ர குடும்பம் நடத்தின இட்லி கடை ஒண்ணு உண்டு. கடையில் மேஜை, நாற்காலி அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. எல்லாம் தரையில உக்காந்துதான் சாப்பிடணும்; அநேகமா எல்லாரும் பார்சல் வாங்கிட்டு போறவங்களாதான் இருக்கும். இட்லிக்கு சட்னி, சாம்பார், பொடி அது இதுன்னு என்னென்னமோ இருக்கும். இட்லியைப் பொறுத்தவரை இட்லி, எண்ணெய் இட்லி, நெய் இட்லி அப்டின்னு அந்த இட்லிகளுக்கு மேல ஊத்திக்கிற விஷயங்கள் மாறி தரத்தை உயர்த்தும். இந்தக் கடையில் இருந்துதான் காமராஜருக்கு இட்லி போகும்னு சொல்லுவாங்க. மல்லி(கை)ப்பூ இட்லின்னே பேரு.

எப்படி இருந்த இடம் இப்படி ஆகிப்போச்சுன்னு பாத்தீங்களா? இந்த லாட்ஜின் மவுசு போனபிறகு இன்னொரு லாட்ஜ் வந்திச்சி..ஆனா இந்த அளவு பெயர் இல்லை; அதுக்குப் பிறகு வந்ததுதான் ‘பாண்டியன் ஹோட்டல்’. இப்போ அப்படி நிறைய ஸ்டார் அந்தஸ்துல வந்திருச்சி…

மதுரை-சில குறிப்புகள்

மதுரையிலிருந்து மேற்கே தேனி போகும் வழியில் முதலில் வரும் கிராமம் 'பிராட்டிபற்று'.இன்று அது விராட்டிபத்து ஆகிவிட்டது.அடுத்து வரும் சிற்றூர் 'அச்சன்பற்று'.இன்று அது அச்சம்பத்து ஆகியுள்ளது.பற்று என்பது வயலைக் குறிக்கும் பழைய சொல்.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை மையமாகக் கொண்டது மாமதுரை.இக்கிராமங்களுக்கு இறையிலி நிலங்களாக விடப்பட்ட கிராமங்களே பிராட்டிபற்றும்,அச்சன்பற்றும்.பெருமாட்டி,பிராட்டி எனத்திரியும்.அச்சன் - அத்தன் -தலைவன்.அது சிவபெருமானைக் குறிக்கும்.



மதுரைக்கு வடக்கே தெற்குத்தெரு,கீழத்தெரு,வடக்குத்தெரு,மேற்குத்தெரு என்ற கிராமங்கள் உள்ளன.அவை மீனாட்சி கோயிலில்,தேர்த்திருவிழாவின் போது திசைதோறும் தேரிழுப்பவர்களுக்கு மானியமளிக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள்.இவற்றோடு வைத்துச் சிந்தித்தால் பிராட்டிபற்று,அச்சன்பற்று என்பனவும் அக்கோயிலோடு தொடர்புடையவை என்பது உறுதிப்படும்.



மதுரையைச் சுற்றி முன்பு பெரியபெரிய கோட்டை வாயில்கள் இருந்திருக்க வேண்டும்."கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்,மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு" என வருந்திக்கொண்டே கண்ணகி சேரநாடு நோக்கி உண்ணாமல்,உறங்காமல் நடக்கத் தொடங்குகிறாள்.இன்றும் கீழவாசல்,மேலவாசல் என்ற பெயர்கள் நிலை பெற்றுள்ளன.அவ்வாறே தெற்குவாசலும்,வடக்குவாசலும் உள்ளன.வாயில் தான் வாசல் ஆகிவிட்டது.நெடுநல்வாடை "வென்றெழு கொடியொடு வேழம் சென்று புக ,குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்" என்று குன்றம் போன்று நெடிதோங்கிய வாயில் பற்றிக்கூறுகிறது.இதனால் மதுரைக்கு 'ஆலவாயில்' (மிகப்பெரிய வாயில்) எனப் பெயர் ஏற்பட்டது.பின்னர் அதற்குப் பல்வேறு பொருள் கொண்டு , புராணம் பாடி,அதன் புகழை வளர்த்தமையே அதன் பழைய சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது,இந்த இடங்களை அறிந்து,நான்கு வாயில்களை எழுப்பியிருந்தால் இளங்கோவடிகள் கூறிய வரலாற்றுச் சிறப்பைப் பலரும் நினைவுகூர்ந்து மகிழ்ந்திருப்பர்.இன்று நகர்ப்புறத்தே வாயில்கள் எழுப்பப்பட்டு வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

தமிழண்ணல் எழுதிய "வளர் தமிழ்-உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 7, 2007

மதுரக்காரன் நானே

பாத்துக்கோங்கா..

நானும் மதுரை தான்..மதுரை தான்....


பெங்களுர்- மதுரை K.P.N பஸ்

டிக்கெட் வச்சிருக்கேன் பார்துக்கோங்க


அப்படின்னு சொல்லுற நிலமைக்கு வந்துடக்கூடாதுன்னு அவசரமா இந்த பதிவு....

நான் மதுரையைச் சேர்ந்தவன் அப்படின்னு சொல்லனுமின்னா..அதுக்கும் எனக்கு உள்ள தொடர்ப சொல்லனும்...

எதையும்..விஸ்வலா சொன்னா டக்குன்னு ஒட்டிக்குன்னு...எங்க தெரு ஒச்சா கிழவி சொல்லி இருக்கு..

மதுரை ஊரின் அழகை உங்க கண் கொன்டு பார்த்தாலும் நல்லாத்தான் இருக்கும்...ஏன் சொல்ல வரேன்னா..இது காக்கைகும் தன் குஞ்சு பொன் குஞ்சு வகை இல்ல...மதுரை..சரித்திப்புகழ் பெற்ற இடம்..ஆனா சரித்திரத்தில் இடம் பெறாம்ல் போனவை..பல...

நான் அவசரமாய் வந்து திரும்பும் காலங்களில் தான் நிதானித்து கவனிக்க பல விசயங்கள் இருப்பதைப் பார்தேன்... அப்படி பார்த்த சில காட்சிகளை அவசரமாய் பதிந்து வைத்தேன்...




இது நம்ம மாரியம்மன் தெப்பக்குளம்...

இன்னைக்கு நானெல்லாம் ஒரு இஞ்சினியர் அப்படின்னு பேருக்கு பின்னாடி போடுறேன்னா ( யாரு அது ..? என்னாத்த கிழிச்ச..அத வச்சின்னு கேக்கிறது..)

அதுக்கு இந்த குளமும் ஒரு காரனம்.....(றும்...றும்....கொசுவத்தி சுத்துது..)

1995, மே மாசம், +2 முடிவுகள் எல்லாம் வெளி ஆகி விட்டது...

புரோபசன்ல துறைக்கு போகும் முடிவுகள் வந்தாகி விட்டது...மருத்துவர் ஆவான் மகன் என்று எதிர்பார்த்திருந்த அம்மாவின் கனவை சுத்தமாக மொத்தமாக உடைத்து...இஞ்சினியராது ஆவான் என்று மாறி இருந்த நேரம்

எனது மதிப்பென்னுக்கு... ஆர்.இ.சி, அன்னா பல்கலை கழகமும் போட்டி போட்டுக் கொன்டு..........போ வெளியே என்றது...

அப்பா மெதுவாக, தியாகராஜர் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரா கல்லூரி எல்லாத்துலேயும்.. வின்னப்பபாரம் வாங்கி வரச்சொன்னார்...

நான் வாங்கி இருந்த அழகு மதிப்பென்னுக்கு தியாகராஜர் கல்லூரி மட்டுமே இயற்பியல் துறையில் இடம் தந்தது...(அதுல தான் இருக்கிறதுலே கம்மி...என்னா கனக்குல் குடுத்தாங்க அப்படின்னு..இன்னவரைக்கும் தெரியல்ல..)

அப்பா... நீ காலேஜ்க்கு போய் வா, வீட்டுல சோம்பேரியா இருக்காதே .. இஞ்சினியரிங்க கிடைக்கிற வரைக்கும் அப்படின்னு சொல்லி... சேர்த்து விட்டார்..

சரி...அப்பா தான் சொல்லுறாரே...அப்படின்னு போனேன்...

முதல் நாளே அப்பா சுதியா மாத்தி பாடினார்...

இம்புருவ்மென்ட் எழுதினா என்னா ? அப்படின்னு...

எனக்கு முதல்ல இருந்தே...கப்பல் இஞ்சினியர் ஆகனும் அப்படின்னு ஆசை...

ஆனா திரும்ப +2 வா. ?.அப்படின்னு பேக் அடிச்சேன்....

ஆனா நம்ம நேரா சொன்னா நம்ம மார்க்குக்கு டின் கட்டுவாங்க அப்படின்னு..யோசிச்சு கிட்டே வந்தேன்...

முதல்..நாள்...வகுப்பு போச்சு...மதியம்..சாப்பாடு சாப்பிட....நம்ம தெப்பக்குளம் தான் இருக்கே...(மதுரை அல்லாதவர்களுக்கு...கல்லூரிக்கு நேர் எதிர் தான் இந்த குளம்..) அப்ப தன்னி இல்ல.

அங்க போய் சாப்பிட்டு...ஒரு தூக்கம்...

அடடா என்னா ஒரு இடம்..மதியான்ம் கட்டு...

இது இப்படியே...தொடர்ந்தது...15 நாளுக்கு...

அப்பாவிற்கு சந்தேகம் வந்து..விசாரித்தில்..உன்மை

வெளிவந்து...நான்...கிடைத்து கல்லூரியில படித்தது....பட்டம்
வாங்கினேன்..

நான் இந்த படிப்பை படிக்க இந்த குளமும் ஒரு வகையில் ஒர் காரனம்

இது எனக்கும் குளத்திற்கும் உள்ள தொடர்பு...

இப்போ சரித்திரதிற்கு போவோம்...

-இது வைகை ஆற்றின் கரையிலே அமைந்து உள்ளது

-இது மதுரை மீனாட்சி அம்மன் கோவில கட்ட மண் எடுக்க தோன்டப்பட்டது

-மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுனி பிள்ளையார் இங்கு கண்டு எடுக்கப்பட்டதாக கேள்வி..

-இந்த குளம் வைகை ஆற்றில் தன்னீர் நிறைந்தால் , தானே நிறையும் வன்னம் வடிகால் வைத்து கட்டப்பட்ட்து...ஆனால் இன்று..அந்த வடிகால்கள், நில ஆக்கிரமப்பில் பழுது பட்டுள்ளது..

-இந்த கோவிலின் எதிரில் உள்ள சிவன் கோவிலில் வருடத்தில் இரன்டு தினத்தில் மட்டும் சூரிய ஒளி விழ்ம்மாறு கட்டப்பட்டுள்ளது..(சிவனுக்கு உகந்த)

-இப்பொழுதும், எப்பொழதும் மதுரை மக்களுக்கு உள்ள ஒரே பீச், காதல்ர் கூடம் எல்லாமே..-இது பக்கத்திலேயே ஆடவர், பென்டிர், பள்ளிகள் இருப்பதால், காதல்ர்கள் கூடுமிடமாகவும் இருக்கின்றது..


இது போல என் வாழ்வில் பல திருப்பங்களை மதுரை அள்ளி தந்து இருக்கின்றது....அவைகளை வரும் தினங்களில் பார்க்கலாம்.... -இன்னும் அறுப்பேன்..

7, கழுதை அக்கிரஹாரம், மதுரை!

என்னோட அப்பாவுக்கு மதுரையில் இருந்து 2 மணி நேர தூரத்தில் உள்ள மேல் மங்கலம் தான் சொந்த ஊர் என்றாலும், பெரியப்பா, அப்பாவின் மூத்த அண்ணா, அப்பாவைவிட 23 வயது பெரிய அண்ணா, வக்கீல் தொழில் செய்தது மதுரை மேல ஆவணி மூல வீதி, என்னோட தாத்தா, அம்மாவின் அப்பாவும், பெரியப்பாவும் தோழர்கள். தாத்தாவும் வக்கீல் தான். அவரோட பூர்வீகம் ராமநாதபுரம், மாவட்டம், பரமக்குடிக்கு அருகே உள்ள சிற்றூர் புதுக்கோட்டை என்றாலும் அவரும் மதுரையில் தான் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் இருந்தார் எனச் சொல்லுவார்கள். அந்தப் பழக்கத்தில் தான் என்னோட அப்பா, அம்மாவைப் பெண் கேட்டு தாத்தாவிடம் போயிருக்கிறார். அப்பாவுக்கு வேலை இல்லாத காரணத்தாலும், அம்மாவுக்கு முன் ஒரு பெண் இருந்த காரணத்தாலும், அம்மாவுக்குப் பின்னர் 2 பெண்களும் இருந்தனர் என்பதாலும், தாத்தா உடனேயே கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

அப்பா பல வேலை பார்த்தார். எங்கள் குடும்பத்திலேயே பெரியப்பா தவிர வேறு யாருமே கல்லூரிப் படிப்பை முடித்ததில்லை. அப்பா நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாய் சுதந்திரப் போராட்ட சத்தியாகிரகிகளுக்கு உதவி வந்தார். "வெள்ளையனே வெளியேறு" என்று காந்தி சொன்னதைத் தன்னைக் கல்லூரியை விட்டு வெளியேறச் சொன்னதாய் நினைத்துக் கொண்டவர். பாதியில் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டார். பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குப் போய் வந்தார். கராச்சி, லாஹூர், காசி போன்ற இடங்களுக்குப் போய்க் காசியில் கலாசாலையில் ஹிந்தியில் பண்டிட் பட்டம் வாங்கி வந்தார். பாதுகாப்புத் துறையின் டெப்போவில் வேலைக்குச் சேர புனே போய் விட்டுக் குளிர் ஒத்துக் கொள்ளலை என்று திரும்பி விட்டார். பின்னர் மதுரை மில் என்று பல வேலைகள். சுதந்திரம் அடையும் வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம் என்று அந்தக் கால கட்டத்து வாலிபர்கள் போல் சபதம் செய்துவிட்டுப் பின்னர் தான் திருமணம் செய்து கொண்டார். மேற்குறிப்பிட்ட வேலைகள் எல்லாம் திருமணத்துக்குப் பின்னர் அவர் பார்த்தவை என்று அம்மா சொல்லுவார்கள். ஆகவே நாங்கள் அதிகம் இருந்தது என்னோட அம்மாவின் அம்மா வீட்டில் தான். அப்பா ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்ததால் என் தம்பி பிறக்கும் வரை என்னோட அம்மா குடித்தனமே தனியாய் வைக்கவில்லை. பெரியப்பா வீட்டிலும், தாய் வீட்டிலுமே எங்களை வைத்துக் கொண்டு இருப்பார். வந்து வந்து போகும் அப்பாவை நானும் என்னோட அண்ணாவும் "மாமா" என்றே கூப்பிடுவோம். என் தம்பி பிறக்கும் வரை இப்படியே தொடர்ந்தது. அப்போது அப்பா, அம்மா திருமணம் ஆகிக் கிட்டத் தட்ட 8 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆகவே தாத்தா தன்னோட செல்வாக்கை உபயோகிட்து அப்பாவுக்கு மதுரை "சேதுபதி உயர்நிலைப் பள்ளி"யில் ஹிந்தி ஆசிரியர் வேலை வாங்கிக் கொடுத்தார். அப்போது ஹிந்தியில் பள்ளி இறுதிப் பரிட்சைக்கும் பாஸ் மார்க் எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருக்கிறது. அப்போது தான் அப்பா அங்கே வேலையில் சேர்ந்தார். அம்மாவும் தனிக்குடித்தனமாக வந்தாள், முதல் முதலாய்க் கழுதை அக்ரஹாரத்துக்கு. அங்கே தான் உடனேயே என்னையும் பள்ளியில் சேர்த்தார்கள். இப்படியாக மதுரை வாழ்வின் நினைவு தொடங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாய்.

என்னோட நினைவுகள் பற்றி மட்டுமே வரும் இந்தக் கட்டுரைத் தொடரில் பல்வேறு சம்பவங்களும், நிகழ்வுகளும், மறக்க முடியாத சம்பவங்களும் இடம் பெறலாம்.

Sunday, August 5, 2007

திருமலை நாயக்கர் மகால்

இன்னைக்கு திருமலை நாயக்கர் மகால் பத்தி பார்க்கலாம். என்னமோ மதுரையில திருமலை நாயக்கர் கட்டின அரண்மனையை மகால்ன்னு தான் சொல்றாங்க. எந்த காலத்துல இந்த வழக்கம் வந்துச்சோ தெரியல. நானும் மகால்ன்னே சொல்றேன்.

இப்ப மதுரையில இருக்கிறது திருமலை நாயக்கர் கட்டுன மகால்ல ஒரு சிறு பகுதி தான். அந்தப் பகுதிக்கு 'சொர்க்க விலாசம்'ன்னு அவர் பேரு வச்சிருந்திருக்கார். அந்தக் காலத்துல மகால்ல மேலேயும் கீழேயும் எல்லா இடத்தையும் பாக்க விட்டுக்கிட்டு இருந்தாங்களாம். யாரோ ரெண்டு மூனு பேர் தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு இப்ப எல்லாம் மேலே விடறதில்லை. கீழேயும் சில பகுதிகளுக்கு மட்டும் தான் விடறாங்க. நான் பார்த்ததெல்லாம் இந்தப் பகுதிகளைத் தான். படத்துல இருக்கிறது அனுமதிக்கப் படும் பகுதிகள்ல ஒன்னு. தருமி ஐயா மகால் முழுக்கப் பார்த்திருக்கலாம்.




இந்தப் பகுதிகள்ல தான் தினமும் இரவு ஆங்கிலத்திலயும் தமிழ்லயும் ஒளியும் ஒலியும் காட்சிகள் நடக்குது. ரொம்ப நல்லா இருக்கும். கண்ணகி மதுரையை எரிக்கிற காட்சி வர்றப்ப கொலைநடுங்கும்.

இப்ப இருக்கிறது திருமலை மன்னர் கட்டுன அரண்மனையோட ஒரு பகுதின்னு சொன்னேன்ல. பிரிட்டிஷ் காலத்துல இந்த அரண்மனையோட சிதிலமான பகுதிகள் எங்கே எங்கே இருந்தது அப்படிங்கறதை நல்லா படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்துல இருக்கிற கண்காட்சியிலும் மகாலுக்குள்ள இருக்கிற கண்காட்சியிலும் அந்த ஓவியங்களைப் பாக்கலாம்.

செவிவழியா வந்த செய்தி. திருமலை மன்னர் கட்டுன மகால் வடக்குல தெற்கு மாசி வீதியையும், மேற்குல கூடல் அழகர் கோவிலையும், தெற்குல கிருதமாலா நதியையும் (இப்ப அது ஒரு சின்ன வாய்க்காலா ஆயிடுச்சு), கிழக்குல கீழ வெளி வீதியையும் எல்லைகளா கொண்டிருந்ததுன்னு சொல்லுவாங்க. எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல.

மதுரையில நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வாழறாங்கன்னு நெறைய பேருக்குத் தெரியும். மகால் பக்கத்துல தான் நிறைய சௌராஷ்ட்ரா காரங்க வசிக்கிறாங்க. அந்தப் பக்கம் வேற ஆளுங்களும் இருக்காங்க. அப்படி இருக்கிறவங்க முக்காவாசிப் பேருக்கு சௌராஷ்ட்ரா தெரிஞ்சுரும். மதுரைக் காரங்க தான் இத்தனை பேரு இருக்கீங்களே...உங்களுக்கு சௌராஷ்ட்ரா காரங்க ப்ரண்ட்ஸா இருக்காங்களா?

சௌராஷ்ட்ரா ஆளுங்க குஜராத்துல இருந்து புலம் பெயர்ந்து மெதுவா தெற்கு பக்கம் வர்றப்ப ரொம்ப நாள் ஆந்திராவுல இருந்திருக்காங்க. சௌராஷ்ட்ரா அளுங்களுக்கு இன்னொரு பேரு பட்டுநூல்காரர். நிறைய பேரு பட்டுநூல் நெசவாளிங்க. விஜயநகர சாம்ராஜ்யம் நல்லா இருக்கிறவரைக்கும் ஆந்திராவுல இருந்திருக்காங்க. அதனால அவங்க பேசற பாஷையில தெலுங்கு வார்த்தைகள் நிறைய உண்டு. விஜயநகரம் அழிவுக்கு வர்ற நேரத்துல அவங்க நெசவு செய்ற துணிகளோட மேன்மையைப் பார்த்துட்டு திருமலை நாயக்கர் மதுரைக்கு அவங்களைக் கூட்டிக்கிட்டு வந்தாராம். அதனால தான் அவங்க மதுரையில மகால் பக்கத்துல பெரும்பான்மையா இருக்காங்க. இப்ப மக்கள் தொகை பெருக்கத்தால மதுரை நகரை விட்டு சுத்துவட்டாரத்திலயும் நிறைய பேரு இருக்காங்க.

சரி. மகாலைப் பத்தி சொல்றேன்னு ஆரம்பிச்சு சௌராஷ்ட்ரா ஆளுங்களைப் பத்தி சொல்லிக்கிட்டுப் போறேன். அதனால இதோட நிறுத்திகிறேன்.

மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க.

ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க. திருமலை நாயக்கர் மகால்ல ஒரு சிறப்பு என்னான்னா மகால் கட்டினதுல இரும்பே எங்கேயும் பயன்படுத்தலைன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் மகாலோட மத்த பகுதிகள் எல்லாம் காணாமப் போனதுக்கு. ஒதுக்குப்புறமா யானைகளைக் கட்டி வச்ச பத்துத் தூண்கள் மட்டும் இன்னும் நல்லா நிலையா நிக்குது.

***

இந்த இடுகை ஒரு மீள்பதிவு. ஏற்கனவே எனது 'கூடல்' பதிவில் இட்டிருக்கிறேன். அந்த இடுகையை இங்கே காணலாம்.

Wednesday, August 1, 2007

மலயத்துவசன் பெற்ற மாமணியே!

குமரன் மீனாட்சி கோவில் கோபுரப் படங்களைப் போட்டதுமே அன்னை மீனாட்சியின் நினைப்பு அதிகம் ஆகி விட்டது. தினமும் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தவள் நான், மதுரையில் இருக்கும்போதெல்லாம். எல்லா ஊரிலும் பொதுவாக ஸ்வாமி பெயரில் தான் கோவிலைக் குறிப்பிடுவார்கள். காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பர நாதர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவிடை மருதூர் மகாலிங்கஸ்வாமி, திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயம் என. ஆனால் மதுரையிலும், காஞ்சியிலும் மட்டும் அம்மன் பெயராலேயெ கோயில் இருக்கிறது. காஞ்சியில் காமாட்சி அம்மன் கோவில் இருந்தாலும் சிவன் சன்னிதி அங்கே கிடையாது. தனியாகத் தான் இருக்கிறாள் காமாட்சி. ஆனால் மதுரையிலோ அம்மன் சன்னிதி மட்டுமின்றி ஸ்வாமி சன்னதியும் உள்ளது, என்றாலும் கோவிலைக் குறிப்பிடும்போது மட்டும் அனைவரும் "மீனாட்சி கோவில்" என்றே குறிப்பிடுவார்கள். இத்தனைக்கும் சித்திரையில் முடி சூட்டப் படும் மீனாட்சி அரசாள்வது என்னமோ ஆவணி வரை தான். ஆவணி மூல உற்சவத்தின் போது சுந்தரேஸ்வரருக்குப் பட்டம் கட்டியானதும், பொறுப்புக்களை ஒப்படைத்துவிடுவாள் மீனாட்சி.

ஆனாலும் அவளுக்குத் தான் முக்கியத்துவம். மற்றக் கோவில்களில் இல்லாத வேறே ஒரு விஷயமும் இந்தக் கோவிலில் உண்டு. அது என்னவென்றால் காலசந்திபூஜை, நைவேத்தியம் போன்றவை எல்லாம் முதலில் மீனாட்சிக்குத் தான். பின்னர் தான் சுந்தரேஸ்வரருக்கு. உலகையே தன் மீன் போன்ற கண்களால் காத்து ரட்சிக்க வந்தவள், அந்தப் பிரணவத்துக்கே ஆதாரமானவள் யோக சாஸ்திரங்களில் உச்ச நிலையானவள் இவளே. இவள் குடிகொண்டிருப்பதால் தான் மதுரைக்கே முக்கியத்துவம் ஏற்பட்டது. ஜீவனும், பிரம்மமும் சேரும் ஐக்கிய ஸ்தானம் இவள் கோயில் கொண்டிருக்கும் இந்த மதுரையே. இப்படிப் பட்டவளுக்கு முக்கியத்துவம கொடுக்காமல் என்ன செய்வது?

அவளுடைய கண்ணழகில் மயங்கி, அதன் அழகில் வெட்கம் அடைந்தே கோவிலின் பொற்றாமரைக் குளத்தில் மீன்களே வாசம் செய்வதில்லை. கண்களைக் கொட்டாமல் விழித்துத் தன் கருணா கடாட்சத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாலேயே இந்த ஊருக்கு, அவளின் மதுரமான கண் கடாட்சம் இருப்பதால் "மதுரை" என்ற பெயர் ஏற்பட்டது எனவும் சொல்லலாம். தாய் மீனானது எவ்வாறு தன் கண்களால் பார்த்துப் பார்த்தேக் குஞ்சும் பொரித்து, தன் குஞ்சுகளை வளர்த்தும் ஆளாக்குவது போல் தன் கருணா கடாட்சப் பார்வையாலேயே மீனாட்சியும் மதுரை மக்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கடாட்சம் புரிகிறாள் அன்னையின் அருள் பொங்கும்..

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

அண்மையில் எனக்கு மின்னஞ்சலில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் பல பாகங்கள் அருமையான படங்களாய் வந்தன. ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது பல நினைவுகள் வந்தன. ஒவ்வொன்றாய் இங்கே பதிக்கலாம் என்று தோன்றியதால் இந்தத் தொடர்.


மேலே உள்ள படம் அண்மையில் எடுக்கப் பட்டது போலும். மின்விளக்குகளால் அன்னை மீனாக்ஷியின் திருக்கோயில் கோபுரங்கள் அலங்கரிக்கப்பட்ட காட்சி இது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் கோவில் கோபுரங்களில் இரண்டு மூன்று தெரியும். அந்தக் காலத்தில் வண்ண மின் விளக்குகளால் இப்படி ஜெகத்ஜோதியாய்க் காட்சியளிக்காது கோபுரங்கள். முதலில் சித்திரைத் திருவிழா நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் கோபுரங்களையும் விமானங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் வந்தது. இப்போது எப்போதும் விளக்குக்களுடன் மதுரை நகரின் எந்தப் பகுதியில் இருந்து பார்த்தாலும் கோவில் கோபுரங்கள் தெரியும் படி செய்து விட்டார்கள்.

மதுரை மாநகரில் எழுதப்படாத சட்டம் ஒன்று உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதும் அந்த மரபு பின்பற்றப் படுகிறதா என்று தெரியவில்லை. நகரின் எல்லைக்குள் எந்தக் கட்டிடமும் மீனாக்ஷி அம்மன் கோவிலின் கோபுரங்களின் உயரத்துக்கு மேலான உயரத்துடன் இருக்கக் கூடாது என்பது தான் அந்த எழுதப் படாத சட்டம். எனக்குத் தெரிந்து மதுரை நகருக்குள் உள்ள ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள் எதுவும் கோபுரங்களை விட உயர்ந்தவை அல்ல என்று தான் நினைக்கிறேன். தெற்கு மாசி வீதியில் நிறைய உயர்ந்த உயர்ந்த கட்டிடங்கள் வந்துவிட்டன. ஆனாலும் இன்று கூட வீட்டு மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தால் கோவில் கோபுரங்கள் தெரிகின்றன.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.