Saturday, August 11, 2007

மதுரையிலேயே பெரிய வீடு - 1

மதுரை என்ற உடன் மனதில் நினைவிலாடுவது 2 விஷயங்கள்.ஒன்று மீனாட்சி, இன்னொன்று மதுரை மல்லிகை பூ. இன்றும் மதுரையிலிருந்துதான் உலகுக்கெலாம் மல்லிகை ஏற்றுமதியாகிறது. இதுபோலவே சக்தி பீடங்களில் மதுரை முக்கிய இடம்வகிக்கிறது, சக்தி வழிபாட்டில் மதுரைக்கு ராஜமாதங்கி சியாமளா பீடம் என்று பெயர்.


இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது, அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர்.மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவதுஇந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை/அதை காத்துகுஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருட்கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்.


சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள பல நூறு கோவில்களில் இதுவே முதன்மையானது. சுடலையாண்டி, ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவன், பாண்டிய ராஜ குமாரியை (மீனாட்சி) மணக்க வருகையில் அழகிய வடிவெடுத்து வந்தாராம். அந்த சுந்தர வடிவால் அவருக்கு சுந்தரன் என்றும், சொக்க வைக்கும் அழகால் சொக்கன் என்றும் பெயர். இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்குஎதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட டுப்ளிகேட் லிங்கம் இன்றும் காட்சிக்கு உள்ளது.


குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் ஸ்வயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.


விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தைபூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவரை விமானங்கள், இந்திர விமானம்என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகிறது.



ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சன்னதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கிறது. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை, கிருதமால் நதிகள். இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்ரமிப்புக்களுக்கிடையே, வெறும் கழிவுநீர்க்கால்வாயாக உள்ளது. பலநூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக்குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரையாதினத்தில் வழிபாட்டில் உள்ளது.
மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார். இந்தசன்னதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது.

11 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...

கோவில் பற்றிய இன்னும் சில தகவல்களை அடுத்த பதிவாக போடலாமென இருக்கிறேன்.

ஏதேனும் தவறுகள் இருப்பின் திருத்தங்கள் செய்யலாம்.

சாலிசம்பர் said...

ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடா?

(சும்மா விளையாட்டுக்கு)

மெளலி (மதுரையம்பதி) said...

//ஜாலிஜம்பர் said...
ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய வீடா?//

இல்லை ஜா.ஜ, நாமெல்லாம் அவங்க உறவினர்கள் இருக்கோமே?, நமக்கெல்லாம் சேத்துக் கட்டினதுதான் அந்த வீடு..... :-)

(திருவிளையாடல்ல வரும் வசனத்தை தலைப்பா வைக்கறதா நினைச்சு வெச்சேன், இப்படி கவுத்துட்டிங்களே தலைவா!)

TBCD said...

ஈசன் : உலகிலெப் பெரிய வீடு...
தருமி : அது எந்த வீடு...

சொல்லுங்க..சொல்லுங்க...
அழுத்திச் சொல்லுங்க...
மதுரக்காரங்க வீடு தான்
பெரிசுன்னு சொல்லுங்க...

சேவை தொடரட்டும்....

மெளலி (மதுரையம்பதி) said...

//சொல்லுங்க..சொல்லுங்க...
அழுத்திச் சொல்லுங்க...
மதுரக்காரங்க வீடு தான்
பெரிசுன்னு சொல்லுங்க...//

TBCD: வீடு மட்டுமா பெரிசு, மனது அதைவிட பெரிசய்யா!!!!!
நன்றி தலைவா!

குமரன் (Kumaran) said...

மௌலி. கோவிலைப்பற்றி கடகடன்னு நிறைய சொல்லிகிட்டே வந்துட்டீங்களே. :-) நல்ல தொகுப்பு.

TBCD said...

//*மதுரையம்பதி said...
TBCD: வீடு மட்டுமா பெரிசு, மனது அதைவிட பெரிசய்யா!!!!!
நன்றி தலைவா! *//

அத கண்ணுல காட்டுறதே இல்லியே...அப்பறம்..எப்படி தெரியும்..ஹி ஹி ஹி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி
சூப்பர் தொகுப்பு!

//மற்ற எல்லா இடங்களிலும் இடதுகாலைத் தூக்கி நனடமாடும் நடராஜர், இங்கு வலதுகாலைத் தூக்கிவைத்து நடனமாடுகிறார்//

ஏன்? யார் கேட்டு இப்பிடி-ன்னு சொல்லுங்களேன்? :-))

மெளலி (மதுரையம்பதி) said...

நன்றி கண்ணபிரான்.....நீங்கள் கேட்டதை எனது பதிவில் ஒரு பதிவாக இடுகிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் மதுரையம்பதி

நிறைவான பதிவு, அடுத்த முறை மதுரைப்பக்கம் வந்திட வேண்டியது தான்