Thursday, August 16, 2007

தல புராணம் - 2

Image and video hosting by TinyPic

படத்தில் இருப்பது St. Mary’s Cathedral - புனித மரியன்னைப் பேராலயம்.இதற்குப் பின்னால் வலது பக்கத்தில் நான் படித்த துவக்கப் பள்ளி - ஒன்றிலிருந்து ஐந்து வரை. இடது பக்கம் உயர்நிலைப்பள்ளி - I Form to VI Form வரை. அப்போதெல்லாம் உயர்நிலைப் பள்ளியின் ஆறு வகுப்புகளும் Forms என்றே அழைக்கப் படும். VI Form - தான் S.S.L.C.அதாவது, பள்ளியிறுதி வகுப்பு. ஒன்றிலிருந்து பதினொன்றுவரை படித்துவிட்டு அதற்குப் பிறகு school campus-க்கு bye..bye சொல்லிட்டு போறதுதான் எல்லோருக்குமே வழக்கம். ஆனால் என் வாழ்க்கையில அந்த கேம்பஸ் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. என்னை நானே அந்த campus kid என்று சொல்லிக்கொள்வேன் பெருமையாக, சந்தோஷமாக.


நாங்கள் அப்போது இருந்த வீடு இந்தக் கோவிலில் இருந்து ஏறத்தாழ ஒன்று அல்லது ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. தெற்குவாசல் போஸ்ட் ஆபிஸ் அருகில் ஒரு ஒட்டுக்குடித்தன வீடு - அதைப் பற்றி பின்பு ‘சொந்தக்கதை’யில் எழுதுவதாக எண்ணம். நான் S.S.L.C. வகுப்புக்கு வந்த வயதில் வீட்டில் ‘ஜனத்தொகை’ அதிகமாயிடுச்சு. இருந்து படிக்க வசதி மிகக் குறைவு. இது ஒரு நல்ல ‘சாக்காகப்’ போய்விட்டது எனக்கு. காலையில் கோவிலுக்குப் போய்ட்டு ஒரு ஒன்று, ஒன்றரை மணி நேரம் பள்ளியிலேயே இருந்து ‘படித்து’விட்டு, அது போலவே மாலை ஆறு ஏழு மணிக்கெல்லாம் மறுபடி கேம்பஸ் வந்து ஒன்பதுவரை மறுபடியும் ‘படித்து’விட்டு வர வீட்டில் அனுமதி உண்டு.


வசதிக் குறைவினால் வீட்டிலிருந்து படிக்க முடியாத கிறித்துவ மாணவர்கள் பலருக்கும் ஒரு தனி அறை பள்ளியில் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பத்து பதினைந்து மாணவர்கள் சேருவோம். அறைக் கதவுகளை மூடி, கொசுவுக்காக காய்ந்த சருகுகளைப் போட்டு எரித்து, கொசுவை விரட்டி (?!) பிறகு கதவைத் திறந்துவிட்டு புகைய விரட்டி…இந்த தயாரிப்புகள் எல்லாம் முடிவதற்குத் தான் நேரம் சரியாக இருக்கும். கண்காணிப்பென்று எதுவும் இருக்காது. ஆகவே, எல்லாம் அவுத்துவிட்ட கண்ணுக்குட்டிகள்தான். எங்க ஒழுங்கா படிச்சோம் - அப்படி படிச்சிருந்தாதான்… (பொறுத்துக்கொள்ளணும் - அநேகமா இந்த வரியை அடிக்கடி ‘ரீப்பீட்டே’ போட வேண்டியதிருக்கும்!)


பள்ளிப்படிப்புக் காலத்தில் மேற்சொன்னவைகள் நடந்தேறின. கல்லூரி நாளில் முதலில் கேம்பஸில் கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தேன் - வெராண்டா அப்படி இப்டியென்று. அதைப்பார்த்த ஃபாதர் ஒருவர் நீ யார், என்ன பண்ணுகிறாய் என்று பல குறுக்குக் கேள்விகள் கேட்டு அடுத்த நாள் என்னை வந்து பார் என்றார். அதே போல் போய் பார்த்தேன். கொஞ்சம் சீரியசான சாமி அவர் என்பது தெரியும். என்னை மாதிரி வேறு யாராவது அறை தேவைப்படுபவர்கள் உண்டா என்றார். இருக்கிறார்கள்; ஆனால் வசதி இங்கும் இல்லாததால் வருவதில்லை என்றேன். வசதி கொடுத்தால்… என்றார். இன்னும் மாணவர்கள் வருவார்கள் என்றேன். சரி, பொறுப்பாகப் பார்த்துகொள் என்று ஒரு தனி அறை கொடுத்தார்.


ம்.. ம்.. அறையா அது! அப்போ உள்ள எங்க ‘ஸ்டாண்டர்டுக்கு’ அது ராஜ மாளிகை. வீட்டில் மின்விசிறியே கிடையாது. சேரில் உட்கார்ந்து காலை டேபிள் மேல்போட்டுக் கொண்டு வீட்டில் ‘படிக்க’ முடியுமா? இல்ல, படிக்க வசதிதான் இருந்ததா? இப்படியாக சேர், மேசை,ஃபேன் என்று என் ‘ரேஞ்சே’ ஏறி / மாறிப் போச்சு. புத்தகங்களை வைத்துப் போக ஒரு சின்ன cup board வேறு. அட்டகாசம்தான் போங்கள். அதனால்தான் நம்ம அட்டகாசம் ஆரம்பித்தது.


அந்த ‘அட்டகாசம்’ பற்றி சொல்வதற்குள் வேறொரு விதயம் சொல்லணுமே. இந்த சிகரெட், பீடி குடிக்கிறவங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் கேளுங்கள்; சிகரெட் வாசனைஎன்பார்கள். அவர்களைத் தவிர மற்ற ஆட்களைக் கேளுங்கள்; அவர்கள் எல்லோரும் நாற்றம் என்பார்கள். இது எப்படின்னு கேட்டா ‘மனசுதான் காரணம்’ என்பீர்கள். சரி, போகுது..ஆனா என்னன மாதிரி ஆட்களுக்கு ஏன், எப்படி ரொம்ப சின்ன வயசிலேயே அந்த ‘வாசனை’ பிடிச்சுப் போகுது? genetically ஏதோ இருக்கணும். (பத்மாகிட்டதான் கேட்கணும்) அதிலயும் அம்மாவோட வழியில் தாத்தா மட்டும்தான் புகை பிடிச்சவர். என்ன கணக்கோ, என்ன மாயமோ, இல்ல என்ன ஜீன்ஸோ தெரியலை. ஆனா சின்ன வயசில இருந்தே அந்த வாசனை ரொம்ப பிடிச்சதென்னவோ உண்மை. அந்தக் காலத்தில சினிமா அரங்குகளில் எல்லாம் சிகரெட் பிடிக்கத் தடையேதும் இல்லை. ஆகவே தியேட்டர்களுக்கு உள்ளே போனதும் ‘நல்ல′ மனுஷங்களுக்கு மூச்சு முட்டும்; நம்ம கேசுகள் அப்பதான் மூச்ச நல்லா உள்ள இழுப்போம்.

(தடை வந்த பின், மதுரை தங்கம் தியேட்டருக்குள் புகை பிடிக்கிறவங்களைப் பிடிக்க போலீஸ் வந்தால் ஸ்க்ரீன் பக்கத்தில் ரெட் லைட் எரியும். அப்படி ஒரு நாள் எரிஞ்சப்போ, சிகரெட் குடிச்சிக்கிட்டு இருந்த நாங்கள் (நானும், நண்பன் ஆல்பர்ட்டும்) வெளியே வந்த அந்த அகஅஅஅஅல வெராண்டாவில்-தியேட்டர் அவ்வளவு பெரிசு - நின்னுகுடிச்சது, வேறு ஆளே கிடைக்காததால் என்னைக் கூப்பிட்ட சப்-இன்ஸ்பெக்டர் சைக்கிளில் வர, நானும் நண்பன் ஆல்பர்ட்டும் நம்ம ஜாவாவில் பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் போனது, அவரிடம் நாம ஒரே இங்கிலிபீஸில் பேசினது, கடைசியில் அவர் தனது ஒரிஜினல் இங்கிலிபீஸில், ‘ i leave you for your English-ன்னு சொல்ல, திரும்பி தியேட்டருக்கு வந்து மீதி சினிமாவை சிகரெட் பிடித்துக்கொண்டே பார்த்தது ஒரு தனிக்கதை. இப்ப எதுக்கு அது?)


எப்ப சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன், அப்புறம் முத முதல்ல ‘திருட்டு தம்’ அடிச்ச கதை, இதையெல்லாம் அப்புறமா சொல்றேன், சரியா? இப்ப விதயத்திற்கு வருவோம்.


இப்படி எக்கச் சக்கமான சுதந்திரம் கிடச்சது அப்பப்போ ‘தம்’ அடிக்கிறதுக்கு வசதியா போச்சு. பிள்ள படிக்க போயிருக்குன்னு வீட்ல நினச்சுக்குவாங்க. இங்க வேற வேலை நடக்கும்; அதுவும் எங்கே நடக்கும் தெரியுமா? ஹும்…Royal Palace-ல தான். புரியலையா…அடுத்த ‘தல புராண’ பதிவில பாத்துக்கங்க…

4 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...

St. Mary’s Cathedral இன்றும் கீழ வெளிவீதிக்கு அழகு சேர்க்கும் அருமையான ஆலயம்......எத்தனையோ நோயாளிகளை இலவசமாகவும், குறைந்த செலவிலும் குணப்படுத்தும் மிஷின் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம்...மிக நல்லமுறையில் நடந்து வந்த நிர்வாகம்.....இன்று எப்படியோ தெரியவில்லை.....

Narayanaswamy G said...

நிர்வாகம்.....நல்ல கேள்வி.....யாரு என்னனு கேக்காதீக..... அங்கே இருந்த ஃபாதருக்கு காசு குடுத்து நிறைய ஆர்டர் பிடிச்சிருக்கேன். மதுரைல இருந்தப்போ!

வல்லிசிம்ஹன் said...

I am seeing this Cathedral after so many years Dharumi.
thank you. En thambi Sethupathi paLLiyil padiththaan.
periya thambi appothu Madura College.
thank you for bringing up good memories.

Geetha Sambasivam said...

கமென்ட் மாடரேஷன் பண்ணினது பொதுவாவா? இல்லை அவங்க அவங்க எழுதறதுக்கு வர கமென்டை அவங்க அவங்க மாடரேட் பண்ணணுமா?
எல்லாரையும் மொக்கை போட வச்சிட்டு இந்த "ராஆஆஅம்" எங்கே போனாரு? ஊருக்கா? :P