Tuesday, August 7, 2007

7, கழுதை அக்கிரஹாரம், மதுரை!

என்னோட அப்பாவுக்கு மதுரையில் இருந்து 2 மணி நேர தூரத்தில் உள்ள மேல் மங்கலம் தான் சொந்த ஊர் என்றாலும், பெரியப்பா, அப்பாவின் மூத்த அண்ணா, அப்பாவைவிட 23 வயது பெரிய அண்ணா, வக்கீல் தொழில் செய்தது மதுரை மேல ஆவணி மூல வீதி, என்னோட தாத்தா, அம்மாவின் அப்பாவும், பெரியப்பாவும் தோழர்கள். தாத்தாவும் வக்கீல் தான். அவரோட பூர்வீகம் ராமநாதபுரம், மாவட்டம், பரமக்குடிக்கு அருகே உள்ள சிற்றூர் புதுக்கோட்டை என்றாலும் அவரும் மதுரையில் தான் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் இருந்தார் எனச் சொல்லுவார்கள். அந்தப் பழக்கத்தில் தான் என்னோட அப்பா, அம்மாவைப் பெண் கேட்டு தாத்தாவிடம் போயிருக்கிறார். அப்பாவுக்கு வேலை இல்லாத காரணத்தாலும், அம்மாவுக்கு முன் ஒரு பெண் இருந்த காரணத்தாலும், அம்மாவுக்குப் பின்னர் 2 பெண்களும் இருந்தனர் என்பதாலும், தாத்தா உடனேயே கல்யாணத்துக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

அப்பா பல வேலை பார்த்தார். எங்கள் குடும்பத்திலேயே பெரியப்பா தவிர வேறு யாருமே கல்லூரிப் படிப்பை முடித்ததில்லை. அப்பா நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாய் சுதந்திரப் போராட்ட சத்தியாகிரகிகளுக்கு உதவி வந்தார். "வெள்ளையனே வெளியேறு" என்று காந்தி சொன்னதைத் தன்னைக் கல்லூரியை விட்டு வெளியேறச் சொன்னதாய் நினைத்துக் கொண்டவர். பாதியில் கல்லூரிப் படிப்பை விட்டு விட்டார். பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குப் போய் வந்தார். கராச்சி, லாஹூர், காசி போன்ற இடங்களுக்குப் போய்க் காசியில் கலாசாலையில் ஹிந்தியில் பண்டிட் பட்டம் வாங்கி வந்தார். பாதுகாப்புத் துறையின் டெப்போவில் வேலைக்குச் சேர புனே போய் விட்டுக் குளிர் ஒத்துக் கொள்ளலை என்று திரும்பி விட்டார். பின்னர் மதுரை மில் என்று பல வேலைகள். சுதந்திரம் அடையும் வரை கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம் என்று அந்தக் கால கட்டத்து வாலிபர்கள் போல் சபதம் செய்துவிட்டுப் பின்னர் தான் திருமணம் செய்து கொண்டார். மேற்குறிப்பிட்ட வேலைகள் எல்லாம் திருமணத்துக்குப் பின்னர் அவர் பார்த்தவை என்று அம்மா சொல்லுவார்கள். ஆகவே நாங்கள் அதிகம் இருந்தது என்னோட அம்மாவின் அம்மா வீட்டில் தான். அப்பா ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்ததால் என் தம்பி பிறக்கும் வரை என்னோட அம்மா குடித்தனமே தனியாய் வைக்கவில்லை. பெரியப்பா வீட்டிலும், தாய் வீட்டிலுமே எங்களை வைத்துக் கொண்டு இருப்பார். வந்து வந்து போகும் அப்பாவை நானும் என்னோட அண்ணாவும் "மாமா" என்றே கூப்பிடுவோம். என் தம்பி பிறக்கும் வரை இப்படியே தொடர்ந்தது. அப்போது அப்பா, அம்மா திருமணம் ஆகிக் கிட்டத் தட்ட 8 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆகவே தாத்தா தன்னோட செல்வாக்கை உபயோகிட்து அப்பாவுக்கு மதுரை "சேதுபதி உயர்நிலைப் பள்ளி"யில் ஹிந்தி ஆசிரியர் வேலை வாங்கிக் கொடுத்தார். அப்போது ஹிந்தியில் பள்ளி இறுதிப் பரிட்சைக்கும் பாஸ் மார்க் எடுக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருக்கிறது. அப்போது தான் அப்பா அங்கே வேலையில் சேர்ந்தார். அம்மாவும் தனிக்குடித்தனமாக வந்தாள், முதல் முதலாய்க் கழுதை அக்ரஹாரத்துக்கு. அங்கே தான் உடனேயே என்னையும் பள்ளியில் சேர்த்தார்கள். இப்படியாக மதுரை வாழ்வின் நினைவு தொடங்குகிறது. கொஞ்சம், கொஞ்சமாய்.

என்னோட நினைவுகள் பற்றி மட்டுமே வரும் இந்தக் கட்டுரைத் தொடரில் பல்வேறு சம்பவங்களும், நிகழ்வுகளும், மறக்க முடியாத சம்பவங்களும் இடம் பெறலாம்.

3 Comments:

தருமி said...

நிச்சயமா மதுரக்காரங்களுக்கு அந்த நாள் மதுரையைக் காண்பிப்பீர்களென நினைக்கிறேன்.

நன்றாகவே ஆரம்பித்துள்ளீர்கள்.

குமரன் (Kumaran) said...

நினைவுகளைத் தொடர்ந்து சொல்லி வாங்க கீதா அம்மா. மதுரை எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறவே மாறாது என்று நண்பர்கள் சொல்லிக் கொள்வோம். ஆனால் சிறு சிறு மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. என்ன என்ன என்பது உங்களை மாதிரி பழைய நினைவுகளைச் சொல்லும் போது தெரியும். :-)

Anonymous said...

i have a long association with maduraias i studied there

also when i visit now i cannt believe the changes .muniyandi koil behind ss colony has lost all its paddy fields and filled with houses. i felt terribly sad about that.it used to be a lovely site to see the temple amidst greenery.
mrs. geetha sambasivam ,also your comment about addressing your father as mam,i was very surpride...coz in my house because we had cousins much older than i am iendedup calling my fahter mama and then my sister followed ..