Wednesday, August 1, 2007

மலயத்துவசன் பெற்ற மாமணியே!

குமரன் மீனாட்சி கோவில் கோபுரப் படங்களைப் போட்டதுமே அன்னை மீனாட்சியின் நினைப்பு அதிகம் ஆகி விட்டது. தினமும் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தவள் நான், மதுரையில் இருக்கும்போதெல்லாம். எல்லா ஊரிலும் பொதுவாக ஸ்வாமி பெயரில் தான் கோவிலைக் குறிப்பிடுவார்கள். காசி விஸ்வநாதர், காஞ்சி ஏகாம்பர நாதர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவிடை மருதூர் மகாலிங்கஸ்வாமி, திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயம் என. ஆனால் மதுரையிலும், காஞ்சியிலும் மட்டும் அம்மன் பெயராலேயெ கோயில் இருக்கிறது. காஞ்சியில் காமாட்சி அம்மன் கோவில் இருந்தாலும் சிவன் சன்னிதி அங்கே கிடையாது. தனியாகத் தான் இருக்கிறாள் காமாட்சி. ஆனால் மதுரையிலோ அம்மன் சன்னிதி மட்டுமின்றி ஸ்வாமி சன்னதியும் உள்ளது, என்றாலும் கோவிலைக் குறிப்பிடும்போது மட்டும் அனைவரும் "மீனாட்சி கோவில்" என்றே குறிப்பிடுவார்கள். இத்தனைக்கும் சித்திரையில் முடி சூட்டப் படும் மீனாட்சி அரசாள்வது என்னமோ ஆவணி வரை தான். ஆவணி மூல உற்சவத்தின் போது சுந்தரேஸ்வரருக்குப் பட்டம் கட்டியானதும், பொறுப்புக்களை ஒப்படைத்துவிடுவாள் மீனாட்சி.

ஆனாலும் அவளுக்குத் தான் முக்கியத்துவம். மற்றக் கோவில்களில் இல்லாத வேறே ஒரு விஷயமும் இந்தக் கோவிலில் உண்டு. அது என்னவென்றால் காலசந்திபூஜை, நைவேத்தியம் போன்றவை எல்லாம் முதலில் மீனாட்சிக்குத் தான். பின்னர் தான் சுந்தரேஸ்வரருக்கு. உலகையே தன் மீன் போன்ற கண்களால் காத்து ரட்சிக்க வந்தவள், அந்தப் பிரணவத்துக்கே ஆதாரமானவள் யோக சாஸ்திரங்களில் உச்ச நிலையானவள் இவளே. இவள் குடிகொண்டிருப்பதால் தான் மதுரைக்கே முக்கியத்துவம் ஏற்பட்டது. ஜீவனும், பிரம்மமும் சேரும் ஐக்கிய ஸ்தானம் இவள் கோயில் கொண்டிருக்கும் இந்த மதுரையே. இப்படிப் பட்டவளுக்கு முக்கியத்துவம கொடுக்காமல் என்ன செய்வது?

அவளுடைய கண்ணழகில் மயங்கி, அதன் அழகில் வெட்கம் அடைந்தே கோவிலின் பொற்றாமரைக் குளத்தில் மீன்களே வாசம் செய்வதில்லை. கண்களைக் கொட்டாமல் விழித்துத் தன் கருணா கடாட்சத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாலேயே இந்த ஊருக்கு, அவளின் மதுரமான கண் கடாட்சம் இருப்பதால் "மதுரை" என்ற பெயர் ஏற்பட்டது எனவும் சொல்லலாம். தாய் மீனானது எவ்வாறு தன் கண்களால் பார்த்துப் பார்த்தேக் குஞ்சும் பொரித்து, தன் குஞ்சுகளை வளர்த்தும் ஆளாக்குவது போல் தன் கருணா கடாட்சப் பார்வையாலேயே மீனாட்சியும் மதுரை மக்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் கடாட்சம் புரிகிறாள் அன்னையின் அருள் பொங்கும்..

8 Comments:

மெளலி (மதுரையம்பதி) said...

மலையத்வஜன் மாதவமே, காஞ்சனமாலை புதல்வி, மகாராணி....

அலைமகள், கலைமகள் பணி செய் வாணி, அமுதனைய இனிய.....

பாபநாசம் சிவன் பாடல், கீரவாணின்னு நினைக்கிறேன்....

Anonymous said...

I was told that Swami goes to Ambal Sannathi and then they go to the Palliyarai in Madurai, but it is the other way around in all other temples. Is that right? Can somebody clarify?

குமரன் (Kumaran) said...

நம்ம ஊர் 'அம்மன்' கோவில் பற்றிய தகவல்களைச் சுருக்கமாகத் தெளிவாக இட்டமைக்கு நன்றி கீதாம்மா.

அனானிமஸ் ஐயா. எல்லாத் திருக்கோவில்களிலும் பள்ளியறை அம்மன் சன்னிதியில் தான் இருக்கும். எனக்குத் தெரிந்தவரை. அது போல் தான் மதுரையிலும் இருக்கிறது. இரவு பத்து மணி போல் கோவிலுக்குப் போனால் சுவாமி சன்னிதியிலிருந்து சுவாமி கிளம்பி அம்மன் சன்னிதிக்கு வந்து பள்ளியறை பூஜை நடப்பதைக் கண்டு அருள் பெறலாம்.

தருமி said...

ஐயா மதுரையம்பதி,
மதுரக்காரரா இருந்திக்கிட்டு இங்க வந்து போய்க்கிட்டு மட்டும் இருந்தா போதுமா? எப்ப ஜோதியில ஐக்கியமாகப் போறீங்க?

மெளலி (மதுரையம்பதி) said...

தருமி சார்....நீங்க சேத்துக்கிட்டா சேந்துக்க எனக்கு விருப்பமே....ஆனா ஒண்ணு, நீங்கதான் வாத்தியாராச்சே எனக்கு பதிவெழுதவும் சொல்லித்தர வேண்டும்...(அட டாப்பிக்காவது சொல்லுங்க சார்)

Geetha Sambasivam said...

மதுரைக்காரங்களுக்குத் "தலைப்பு"க்கா பஞ்சம்? உங்களுக்குத் தெரிஞ்ச அனுபவத்தை எழுதுங்க மெளலி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவளுடைய கண்ணழகில் மயங்கி, அதன் அழகில் வெட்கம் அடைந்தே கோவிலின் பொற்றாமரைக் குளத்தில் மீன்களே வாசம் செய்வதில்லை//

இது சூப்பரு கீதாம்மா!
இந்தக் குளத்துக்குப் பக்கத்திலே தானே விபூதிப் பிள்ளையாரு?

cheena (சீனா) said...

கல்லூரிக் காளைகளின் கடற்கரையே மீனாட்சி அம்மன் கோவில் தான். மேலக் கோபுர வாசலில் உள்ள அல்வாக் கடையில் அல்வா வாங்கிக்கொண்டு விபூதிப் பிள்ளையாரைத் தாண்டி ஆடி வீதியில் அமர்ந்து ஆற அமர கதை பேசிய காலங்கள் இனி வருமா என்ன ?