Sunday, August 19, 2007

கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து.....

கழுதை அக்கிரஹாரம் மட்டும் என் நினைவில் இருந்தாலும், அதற்கு முன்னர் காக்காத் தோப்புத் தெருவில் சில மாதங்களும், லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் சில நாட்களும் இருந்ததாய் அம்மா சொல்லுவார். நான் முதன் முதல் பள்ளி சேர்ந்ததே ஒரு விந்தைதான். வயசு ஆகவில்லை என அம்மா, தாத்தா(அம்மாவின் அப்பா), பெரியப்பா எல்லாரும் சொல்ல, அப்பாவோ கூட வயசு கொடுத்துச் சேர்த்து விடுவதில் பிடிவாதமாய் இருந்தார். வேறு வழி தெரியாமலோ என்னமோ என் பெரியப்பா மானேஜ்மென்ட் கமிட்டி அங்கத்தினராக இருந்த பள்ளியில் என்னை அவருடைய செல்வாக்கை உபயோகித்துச் சேர்த்து விட்டிருக்கிறார். அந்தப் பள்ளியில் தான் என்னுடைய சொந்த அண்ணனும் படித்துக் கொண்டிருந்தார். நான் பிடிவாதமாய் முதல் வகுப்பில்தான் உட்காருவேன் என்று சொன்னதாலும், என் பெரியப்பா பெண் (என்னோட அக்கா) அங்கே முதல் வகுப்பில் இருந்தாள், அவளுடன் தான் படிப்பேன் என்று ரொம்ப அழுதேன் என்பதாலும் வேறு வழியில்லாமல் என்னை முதல் வகுப்பில் உட்கார்த்தி வைத்திருக்கின்றனர். என்றாலும் அந்த வகுப்பை விட்டு நான் போக மறுத்திருக்கிறேன். வீட்டில் அம்மா சொல்லிக் கொடுக்கப் பாடங்கள் ஆரம்பித்தது. என்றாலும் அப்போதில் இருந்தே கணக்கு என்றால் எனக்கு எட்டிக் காயாகத் தான் இருந்தது. இருந்தாலும் பாஸ் மார்க்கை விட அதிகமாகவே 70,80 வாங்கிக் கொண்டு இருந்தேன். ஆசிரியை முதல் மூன்று வகுப்பிலும் எனக்குச் சற்றும் ஒத்துப் போகாதவர்களாக இருந்தனர். ஆனால் முதல் வகுப்பு ஆசிரியை மிகவும் சாதுவான பெண்மணியாய்த் தான் இருந்தார் எனச் சொல்வார்கள். அவரின் சகோதரியே 2-ம் வகுப்பில் ஆசிரியை.

அப்போ நினைச்சுப்பேன் அக்கா, அண்ணா என்றால் பெரிய வகுப்பு பாடம் எடுக்கச் சொல்வாங்க போலிருக்கு என்று. எல்லாவற்றையும் விட வடக்காவணி மூல வீதியில் இருந்த பள்ளிக்கு நானும் என் அண்ணாவும் கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து தினமும் போக வேண்டும். அண்ணா என் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல நான் கூடவே போவேன். கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து திண்டுக்கல் ரோடு வந்து, ராஜா பார்லி பக்கத்தில், அனுமந்தராயன் கோவில் தெருவில் திரும்பி, மேலக் கோபுர வாசலில் அப்போது இருந்த ஃபண்ட் ஆஃபீஸ் எதிரே தெருவைக் கடந்து மேல ஆவணி மூல வீதியில் நுழைவோம். அங்கே நுழையும் போது வலது பக்க மூலையில் ஒரு பட்சணக் கடை இருந்தது. அது தாண்டிக் கொஞ்ச தூரத்தில் கண்ணுசாமி ஐயர் என்பவர் வீட்டிற்கு அருகே என் அம்மாவின் சித்தப்பா வைத்திருந்த மருந்துக் கடை இருக்கும். அதற்கு எதிரே ஒரு பிள்ளையார் கோவில். அது திறந்தே நான் பிள்ளையார் சதுர்த்திக்குக் கூடப் பார்த்தது இல்லை. எப்போவாவது திறக்கும். அந்தப் பிள்ளையார் கோவில் வாசலிலேயே என் மாமாக்க்கள் எல்லாம் தங்கள் சிநேகிதர்களுடன் நின்று பேசிக் கொண்டிருபார்கள். எதிரே கடையில் என்னுடைய சின்னத் தாத்தா உட்கார்ந்திருப்பார். சுதந்திரப் போராட்ட வீரர். மிகவும் உழைத்தவர். கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவரிடம் வேலைக்கு இருந்தவர் பின்னாளில் மதுரை மேயர் ஆனார்.

9 Comments:

சாலிசம்பர் said...

//ஆசிரியை முதல் மூன்று வகுப்பிலும் எனக்குச் சற்றும் ஒத்துப் போகாதவர்களாக இருந்தனர்.//

:)).அப்பவே சொல்லியிருந்தா மதுரை முத்து கிட்ட சொல்லி நாலு போடு போட்டிருக்கலாமில்ல.இவர் தானே நீங்கள் குறிப்பிட்ட மேயர்.

Geetha Sambasivam said...

:)))))))))))))

தருமி said...

//கழுதை அக்கிரஹாரத்தில் இருந்து திண்டுக்கல் ரோடு வந்து, ராஜா பார்லி பக்கத்தில், அனுமந்தராயன் கோவில் தெருவில் திரும்பி, மேலக் கோபுர வாசலில் அப்போது இருந்த ஃபண்ட் ஆஃபீஸ் எதிரே தெருவைக் கடந்து மேல ஆவணி மூல வீதியில் நுழைவோம். //

- இதுவரைக்கும் என்னவோ கையைப் பிடித்துக் கூட்டிக்கிட்டு போறது மாதிரி இருந்தது. அதுக்குப் பிறகு - கூட்டத்தில் காணாம போன குழந்தை மாதிரி ஆகிப் போச்சு !

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, தருமி சார், அந்த எஃபெக்ட் வரணும்னுதான் நினைச்சேன். வந்துடுச்சு இல்லை உங்களுக்கே! அப்புறம் நான் பள்ளிக்கு அநேகமாய்த் தாமதமாய்ப் போய் மாட்டிக்குவேன், அதனால் கொஞ்சம் தாமதம், பொறுங்க! :)))))))))))))))

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமா, மதுரைத் தெருக்கள்ள ஒரு ரவுண்ட் வந்தமாதிரி இருக்கு....

பராசரன் said...

மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் அல்லவோ இந்த மேதினியை மயங்கச் செய்த இசைக்குயில் பிறந்து வளர்ந்தது. மதுரைக்கு உள்ள எத்தனையோ பெருமைகளில் இதுவும் ஒன்று.

Geetha Sambasivam said...

"ம்ம்ம்ம்., மேலப் பட்டமார் தெருவிலேன்னு இல்லை கேள்விப் பட்டேன். ஆனால் இது பத்தி எனக்குச் சரியாத் தெரியலை. யாரானும் பெரியவங்க தான் (ஹிஹிஹி, நான் அவ்வளவு பெரியவள் இல்லை) சொல்லணும் பராசரன்.

லதா said...

//அது திறந்தே நான் பிள்ளையார் சதுர்த்திக்குக் கூடப் பார்த்தது இல்லை. எப்போவாவது திறக்கும்.//

//அந்தப் பிள்ளையார் கோவில் வாசலிலேயே என் மாமாக்க்கள் எல்லாம் தங்கள் சிநேகிதர்களுடன் நின்று பேசிக் கொண்டிரு"பார்கள்".//

இதனால்தான் அதுவா ? :-)

Anonymous said...

கீதா மேடம்,
ராஜா பார்லி டர்ன் எடுத்து கீழ அநுமந்தராயன் தெருவில்,கோமதி விலாசில் வெள்ளையப்பம் டாப்பா இருக்கும்.அப்புறம் டெல்லி வாலாவின் பூரி பாஜி.டெல்லி வாலாவிற்கு பக்கத்து கடையில் மசாலா பால்.அப்புறம் மேலாவணி வீதியில் ராணி பர்னிட்சருக்கு எதிரில் முருகானந்தத்தின் இட்லிக் கடை.மதுரையின் ஸ்பெஷலே உணவுதான்.ஆச்சு,எழுபதிகளின் கடைசி வருடங்களில் பொறியியல் படிக்க கிளம்பியவன்,இன்று வரை விருந்தாளி போலத்தான் வருகிரேன்,ஊருக்கு.அப்படி வருவது நம்ப மீனாட்சியை தரிசிக்க.தரிசித்த பின்பு எழுகடல் வீதியில் ரோட்டோரக் கடையில் பஜ்ஜி &ட£ சாப்பிட்டுகொண்டு பழைய நினைவுகளை அசை போடுவேன்.
தருமி சாருக்கு:டவுன் ஹால் ரோடு தாஜ் ஹோட்டல் எங்க மாதிரி பயந்து 'தம்' அடிப்பவர்களுக்கு நல்ல புகலிடம்.25 பைசாவில் ட£,25 பைசாவிற்கு ஜீக் பாக்ஸில் பாட்டு,இன்னொரு 25 பைசாவிற்கு ரெண்டு வில்ஸ் பிளேக்!மறக்க முடியலைங்க!
அன்புடன்
சீனிவாசன்