Wednesday, August 29, 2007

எங்க தாத்தா இடம்தாங்க, நம்புங்க! :D

கழுதை அக்கிரஹாரத்துக்கு முன்னால் நாங்க காக்காத் தோப்புத் தெருவில் கொஞ்ச நாட்கள் (நாட்கள்னு தான் அம்மா சொல்லுவாங்க) இருந்தப்போ என்னோட அண்ணா சூரியநாரயாண சாஸ்திரி பள்ளியில் படித்துக் கொண்டிருந்திருக்கிறார். பள்ளி இடைவேளையில் நான் (அப்போக் குழந்தையாக இருந்தேன்) அண்ணாவுடன் பள்ளிக்குப் போகணும்னு அடம் பிடித்துப் பின்னாலேயே ஓடுவேன் என்றும், சிலநாட்கள் அண்ணா வேறே வழி இல்லாமல் என்னையும் அழைத்துப் போவார் என்றும், பின் ஆசிரியர் பார்த்துத் திட்டி வீட்டுக்குக் கொண்டு விடச் சொல்லுவார் என்றும் அம்மா ரொம்பப் பெருமையாகச் சொல்லுவாங்க, (ஹிஹி, என்னைத் தான்). இதனால் எல்லாம் நான் என்னமோ ரொம்பப் பெரிய படிப்பாளினு நினைச்சோ என்னமோ அப்பா 4 வயசு முடியும் முன்னேயே பள்ளியில் சேர்ததோடு அல்லாமல் பிடிவாதமாய் முதல் வகுப்பிலும் உட்கார்ந்தேன். என்றாலும், காலையில் பள்ளிக்குப் போக குறைந்த பட்சமாய் 7 மணிக்குள்ளாவது எழுந்திருக்கணும். ஆனால் நான் எழுந்திருக்க மாட்டேன். 3 மாசக் குழந்தையான தம்பி அம்மா கிட்டே இருக்கும் போது நாம் மட்டும் அம்மாவை விட்டுட்டுப் போக வேண்டி இருக்கேனு துக்கம் தொண்டையை அடைக்கும். அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டு இருப்பேன். (அம்மா சொன்னது தான்) சிலநாட்கள் நேரம் ஆகிவிடும் என்பதால் அண்ணா கிளம்பிப் போய்விடுவார். அப்புறமாய் அப்பா என்னைக் கொண்டு விட்டு விட்டுத் தான் தன் பள்ளிக்குப் போவார். கிட்டத் தட்டத் "தரதர"னு இழுத்துட்டுப் போவார்னே சொல்லலாம். அப்பா ரொம்பவே கோபக் காரர். பொதுவாய் மதுரைக் காரங்களே கோபத்துக்குப் பிரசித்தினு சொன்னாலும், அப்பாவின் கோபம் அலாதியானது. கண்டிப்பும் ரொம்பவே அதிகம்.

முதல் வகுப்பு டீச்சரும் சரி, அவங்க அக்காவான 2-ம் வகுப்பு டீச்சரும் சரி, ரொம்பவே நல்லவங்களாய்த் தான் இருந்திருக்காங்க. என்றாலும் அது எல்லாம் புரிகிற வயசு நமக்கு இல்லையே? அதுவும் 2-ம் வகுப்பு டிச்சர் கொஞ்சம் ஆஜானுபாகுவா வேறே இருப்பாங்களா? பயம் அதிகமா இருக்கும். அந்தப் பள்ளி மானேஜ்மென்ட் கமிட்டியில் இருந்த பெரியப்பா கிட்டே சொல்லி வேறே செக்க்ஷனுக்கு மாத்திக் கொண்டேன். ஆனால் அதன் பலன் 3-ம் வகுப்பிலே நல்லாத் தெரிந்தது. சுத்தமாய் 3-ம் வகுப்பு ஆசிரியருக்கு என்னைப் பிடிக்கலை. எனக்கும் அவரைப் பிடிக்கலை. என்னோட நினைவுகள் இங்கே தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பிக்குது. இதில் இருந்து தான் எனக்கு என் பள்ளி நினைவுகள் மற்றவர் சொல்லாமலே நானே புரிந்து கொள்ள ஆரம்பித்தது. நான் அதிகம் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்ததும் இந்த வகுப்பில் இருந்து தான்.

மேல ஆவணி மூல வீதியில் இருந்து வடக்கு ஆவணி மூல வீதியில் இருந்த் பள்ளிக்குப் போகும் வரை தெரு பூராவும் உறவின் முறையும், நண்பர்களும் விசாரிப்பு இருக்கும். என் அம்மாவின் சித்தப்பாவின் மருந்துக்கடை தாண்டிச் சற்று தூரத்தில் தெருவின் இடது பக்கமாய் என்னோட பெரியப்பா வீடு இருந்தது. தனி வீடு. பெரியப்பா சொந்தமாய் குதிரை வண்டி கோர்ட்டுக்குப் போக வைத்திருந்தார் என நினைக்கிறேன். பெரியப்பா வீடு எங்களுக்கு அந்த வயதில் ஒரு சொர்க்கம். அதுக்குப் பின்னர் தாத்தா வீடு. இப்போ எஸ்.எஸ்.காலனி என்று அழைக்கப் படும் சோமசுந்தரம் காலனியும் அதன் சுற்றுப்புறங்களும் உண்மையிலேயே என்னோட தத்தாவுக்கும் அவர் தம்பிக்கும் உடமையான இடம். இன்று பல கோடி மதிப்பில் இருக்கும் அந்த இடம் 60 களிலேயே பல லட்சங்களுக்கு மதிப்பு இருந்ததாய் சொல்லப் பட்டிருக்கிறது என்றாலும் தாத்தாவுக்கும் அவர் தம்பிக்கும் கிடைத்தது என்னமோ சில ஆயிரங்கள் தான். தாத்தாவின் சித்தப்பா அந்த இடத்தைத் தாத்தாவும், அவர் தம்பியும் மைனராக இருந்தபோது கையகப் பற்றி விற்று விட, அதற்குக் கேஸ் போட்ட தத்தா, கிட்டத் தட்ட தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவு செய்து 63-ல் வெற்றி பெறார் என்றாலும் நிலம் அதற்குள் பல கைகள் மாறி விட்டது. மீட்கும் சக்தி யாரிடமும் இல்லை. ஒரு இனிய நினைவாகப் போய் விட்டது. சில விஷயங்கள் சொல்லலாமா வேணாமானு தெரியலையே? :))))))) அதில் இதுவும் ஒண்ணு.

7 Comments:

சாலிசம்பர் said...

பரிதிமாற்கலைஞர் என்று அழைக்கப்பட்ட சூரியநாராயண சாஸ்திரி அவர்களும் காக்காதோப்பு தெருவில் வசித்ததாக ஞாபகம்.தங்கள் அண்ணன் தான் அவரா?

Geetha Sambasivam said...

@jolly jumber,
grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

MAHA said...

//அண்ணாவுடன் பள்ளிக்குப் போகணும்னு அடம் பிடித்துப் பின்னாலேயே ஓடுவேன் என்றும், சிலநாட்கள் அண்ணா வேறே வழி இல்லாமல் என்னையும் அழைத்துப் போவார் என்றும், பின் ஆசிரியர் பார்த்துத் திட்டி வீட்டுக்குக் கொண்டு விடச் சொல்லுவார் என்றும் அம்மா ரொம்பப் பெருமையாகச் சொல்லுவாங்க, (ஹிஹி, என்னைத் தான்).///

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா

MAHA said...

//இதனால் எல்லாம் நான் என்னமோ ரொம்பப் பெரிய படிப்பாளினு நினைச்சோ என்னமோ அப்பா 4 வயசு முடியும் முன்னேயே பள்ளியில் சேர்ததோடு //

அட அது அப்படி இல்லை...வீட்ல நீங்க பண்ற தொல்லை தாங்க முடியாம சேர்த்துருப்பாங்க..

Geetha Sambasivam said...

வாங்க, வாங்க, வலை உலகிற்குப் புதுசுனு நம்பமுடியலையே? எப்படி இருந்தாலும் நல்வரவு, வந்ததுமே போட்டுத் தாக்கிட்டீங்க! இதுக்கெல்லாம் ஒண்ணும் ப்ராக்டிஸே வேணாமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மெளலி (மதுரையம்பதி) said...

எல்லாத்தையும் சொல்லுங்க கீதா மேடம்....இப்ப யாரும் உங்க மேல கேஸ் போட மாட்டாங்க... :-)

லதா said...

//அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டு இருப்பேன். //

அப்போதே ஆரம்பித்தது விட்டீர்களா ?
:-)