Wednesday, August 15, 2007

மீனாட்சி ஆட்சி செய்யும் ஹூஸ்டன்!1970-களில் ஆரம்பிக்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் ஹூஸ்டன் மீனாக்ஷி கோவில், ஒவ்வொரு பாகமாக மெதுவாகத் தான் கட்டப் பட்டிருக்கிறது. 1977-ல் மீனாட்சி அம்மன் கோவில் கழகம் ஏற்பட்டு, 78-ல் இப்போது கோவில் இருக்கும் இடத்தை வாங்கி முதலில் பிள்ளையார் கோவில் கட்டி இருக்கின்றனர். 1992-ல் தான் கோவில் முழுதும் கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது. முதலில் பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் இப்போதும் பிள்ளையார் இருக்கிறார், என்றாலும் அங்கே இப்போது பக்தர்கள் வீட்டு விசேஷங்கள், (கல்யாணம், சீமந்தம், காது குத்து போன்றவை), பஜனைகளும், சில சமயம் சிறிய அளவிலான கச்சேரிகளும் நடை பெறுகிறது. கோவிலுக்கு எனத் தனியாக ஏற்பட்டுள்ள ஆடிட்டோரியம் சமீப காலத்தில் தான் கட்டி முடிக்கப் பட்டது.

இந்த 5 ஏக்கர் பரப்பிலான இடத்தில் கோவில் கட்டத் தீர்மானித்து அதற்காக முதன் முதல் திட்டம் போட்டவர் திரு ரஞ்சித் பானர்ஜி, என்னும் ஹூஸ்டன் கலாசாலைப் பேராசிரியர் ஆவார். திரு கணபதி ஸ்தபதி இருமுறை ஹூஸ்டனுக்கு நேரேயே வந்தும், மற்றும் திரு முத்தையா ஸ்தபதியின் மேற்பார்வையிலும், மதுரை மீனாட்சி கோவிலின் மறு பதிப்புப் போல் கட்டப் பட்ட இந்தக் கோவிலின் கழகம் மூலமாய்ப் பல நற்பணிகள் செய்யப் படுகிறது. வேதக் கலாசாரத்தை நிலை நிறுத்தும் வண்ணம் வகுப்புக்களும், தேவாரம், திருவாசகம், தமிழ் கற்றுக்கொடுப்பது போன்றவையும், அன்னதானங்களும் நடைபெறுகிறது. தேர்ந்தெடுத்த பண்டிதர்களை வரவழைத்து, உலக நன்மைக்காக ஹோமங்கள், யக்ஞங்கள் செய்யப் படுகின்றன. மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் முக்கிய அதிபதியாக இருந்தாலும், இங்கே விஷ்ணுவுக்கும் இடம் உண்டு. தற்சமயம் கர்நாடகத்தில் இருந்து வந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரால் விஷ்ணுவிற்கும், பத்மாவதித் தாயாருக்கும் வழிபாடுகள் நடைபெறுகின்றது. மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் 2 வருஷம் முன் வரை மதுரையில் இருந்தே பட்டர் வந்து வழிபாடுகள் செய்து வந்தார். தற்சமயம் நிலவரம் தெரியவில்லை. பொதுவாக அமெரிக்கக் கோவில்களில் இருக்கும் மஹாவிஷ்ணு சிலாரூபம், நின்ற கோலத்தில் திருமலை வேங்கடநாதனின் பெயர் தாங்கியே காணப்படுகின்றனர். விஷ்ணு சன்னதி இல்லாத சிவன் கோவிலோ, சிவன் சன்னதி இல்லாத விஷ்ணு கோவிலோ பார்ப்பது அரிது.

தென்னிந்தியர்களால் நிர்வகிக்கப் படும் இத்தகைய கோவில்களில் பெரும்பாலும் திருப்பதி பல்கலைக் கழக வேதப் பாடசாலையில் படித்தவர்களோ அல்லது மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்களோதான் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். மாறாக மீனாட்சி கோவிலில் பட்டர் ஒருவர் இருந்தார். தற்சமயம் அவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. :( என்றாலும் பல அமெரிக்க நாட்டுக் காரர்களும் இந்தக் கோவிலுக்கு வருகின்றனர். கோவிலில் பஞ்சாங்கம், காலன்டர் போன்றவை பக்தர்களுக்குச் சகாய விலையில் கிடைக்கிறது. மிகப் பெரிய நூலகமும் உள்ளது. புத்தகங்கள் வாடகைக்குக் கிடைக்கும். அங்கேயே காய்கறிகளும் குறித்த நேரத்தில் போனால் வாங்கலாம். திரைப்பட ஒலி, ஒளிக் காசெட்டுகள், டிவிடிகள், சிடிக்கள் போன்றவையும் வாடகைக்குக் கிடைப்பதோடு அல்லாமல் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அனைத்துத் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கிடைக்கிறதும் ஒரு முக்கிய விசேஷம் ஆகும். "பாரதி கலை மன்றம்' என்ற பெயரில் உள்ள மன்றம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாகத் தென்னிந்தியர்களுக்குப் பலவிதங்களில் சேவை செய்து வருகிறது. முக்கியப் பண்டிகை நாட்களில் பட்டி மன்றங்கள், தோசைத் திருவிழா, ஆடை, அணிகலன்கள் விற்பனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கச்சேரிகள், இலக்கியச் சொற்பொழிவுகள் கலைமன்றமும், மீனாட்சி கோவில் கழகமும் சேர்ந்து நடத்துகிறது. சீதோஷ்ண நிலையிலும் சென்னையை ஒத்தே இருப்பதால் ஹூஸ்டன் தமிழர்களுக்குத் தாய்நாட்டை விட்டுப் பிரிந்த ஏக்கம் தோன்றாது.
உணவு விடுதிகள் பெரும்பாலும் சைவமாக இருந்தாலும், சில ஒன்றிரண்டு பஞ்சாபி மற்றும் வட இந்திய உணவு விடுதிகள் அசைவமும் அளிக்கிறது.

2 Comments:

Geetha Sambasivam said...

எத்தனை முறை முயன்றும் படம் சரியா வரலை, ராஆஆம், நீங்க தான் இதை சரி பண்ணணும்! :))))))

குமரன் (Kumaran) said...

மூன்று வருடங்களுக்கு முன்னால் ஹூஸ்டன் சென்ற போது இந்தக் கோவிலுக்குச் சென்றோம் கீதா அம்மா. அதிகாலையில் சென்ற போது மிக அமைதியாக மிக நன்றாக இருந்தது.