Saturday, October 13, 2007

மதுரையில் கொலு பாருங்க!

ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.

அண்ணாவும், தம்பி பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு கேட்கலை. அந்தளவுக்கு மறதி.

அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.

அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?

39 Comments:

cheena (சீனா) said...

அய்யோ அய்யோ ( பயப்படாதேங்ஹ - ஆச்சரியப்ப்டும் போது சொல்ற அய்யோ இது.

பழைய நினைவுகள் கொலு சுண்டல் பாட்டு அலங்காரம் - தோல் கிளப்பி இருக்கீங்க

கல்பனா தியேட்டர்லே கலாட்டா கல்யாணம் பார்த்தது நினைவுக்கு வருது - மொத நா - மொத ஷோ - அய்யோ ஜெ யும் சிவாஜியும் சும்மா சிக்குன்னு இருப்பாங்க - நகைச்சுவைப் படம்

நானும் சின்ன வயசு கொலு பத்தி எழுதி இருக்கேன்

http://cheenakay.blogspot.com

பாருங்களேன்

cheena (சீனா) said...

நிறைய எழுத்துப் பிழைகள் - திருத்த முடியுமா ?? பின்னூட்டங்களைத் திருத்தும் வசதி இருக்கிறதா என்ன ??

வடுவூர் குமார் said...

நானும் போயிருக்கேன் ஆனால் சுண்டல் வாங்க தான் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள். :-))

Geetha Sambasivam said...

சீனா, தலை எழுத்து, உங்க பின்னூட்டம் படிக்கிறப்போ உங்க தமிழ் டீச்சரைக் கொலை செய்யணும்னு வெறி வருதே ஏன்? :P

வடுவூர், அதெல்லாம் நான் நம்புவேன், சுண்டலுக்குத் தான் போயிருப்பீங்க! :)

Geetha Sambasivam said...

பின்னூட்டம் என்ன, பதிவையே திருத்தலாம், கொஞ்சம் இம்பொசிஷன் கொடுக்கிறேன் எழுதுங்க முதல்லே. அ, ஆ, ஃ வரையும், க,ங, ச எல்லாமும் ஒரு ஆயிரம் முறை எழுதிப் பழகுங்க! :P

Geetha Sambasivam said...

ஒண்ணையும் காணோமே, போய் அலைஞ்சது தான் மிச்சம், சீனா! :P

இராம்/Raam said...

தலைவலி,

கொசுவத்தி சுத்தலா??? நல்லாயிருக்கு... படிச்சா ஊருக்கு போகனுமின்னு நினைப்பு வருது...... :)

இராம்/Raam said...

// cheena (சீனா) said...

நிறைய எழுத்துப் பிழைகள் - திருத்த முடியுமா ?? பின்னூட்டங்களைத் திருத்தும் வசதி இருக்கிறதா என்ன ??//

ஐயா,


அந்த வசதி இல்லை... விருப்பப்பட்டால் உங்களுடைய பின்னூட்டத்தை நீக்கி விட்டு பிழை திருத்தி மீண்டும் இடுவதுதான் ஒரே வழி.... :)

cheena (சீனா) said...

கீதா, என் தமிழ் ஆசிரியர் பாவம் - எனது தமிழறிவும் மற்றவர்க்குச் சற்றும் குறைந்ததல்ல - சளைத்ததல்ல - தட்டச்சின் காரணமாக எழுத்துப் பிழைகள் - திருத்தும் முன்னரே பதிவாகி விட்டது - அதற்காக கொலை வெறி கொள்ள வேண்டாம்.
http://cheenakay.blogspot.com/2007/08/1.html

கடைசிப் பத்தி பார்க்க வில்லையா - அவசரக் குடுக்கை

cheena (சீனா) said...

நண்பர் ராமின் தகவலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி

செல்லி said...

உங்க இந்தப் பதிவைப் பாத்தவுடன எனக்கும் பழைய நவராத்திரி ஞாபகம் வந்திருச்சு!
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நான் என்னவோ கொலு படங்கள் வரப் போகிறதோனு நினைச்சேன்.
ஆனாலும் ஃபில்ம் சுருள் நல்லாவே ஓடியிருக்கு.
சும்மா சொல்லக் கூடாது:))
கீதா அபாரமான நினைவாற்றல்.
அருமையாப் பதிஞ்சு இருக்கீங்க.

தருமி said...

சீனா தப்பு பண்ணினா அவருக்கு இம்பொசிஷன் கொடுங்க; பாவம், அவரு டீச்சரம்மாவை ஏன் திட்டுறீங்க...எல்லாம் ஒரு "ஜாதி"ப் பற்றுதான். :)

cheena (சீனா) said...

நன்றி தருமி - ஜாதிப் பற்று கொண்டு ஆசிரிய வர்க்கத்தைக் பாராட்டியதற்கு .

Geetha Sambasivam said...

தருமியின் "ஜாதிப்பற்றை" வன்மையாகக் கண்டிப்பதோடு, சீனாவுக்குக் கொடுத்த இம்பொசிஷனை அவர் எழுதி முடிக்க வேண்டும் எனவும் ஆணை இடுகிறேன்! :P

cheena (சீனா) said...

கீதா - என்னுடைய பின்னூட்டம் படிக்கும் போது "தலை எழுத்து" எனச் சலித்துக் கொண்டீர்கள் - அது என் மனதை சற்றே ( அதிகமாகவே) புண் படுத்தியது. ஏனெனில் இது வரை சில பதிவுகளும், பல பின்னூட்டங்களும் எழுதி இருக்கிறேன். நிச்சயமாகக் கூற முடியும் - இந்தப் பதிவின் முதல் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்குமே எழுத்துப்பிழை வந்ததில்லை. ஏனெனில் நான் கற்ற விதம், வளர்ந்த விதம் அது மாதிரி. முதல் பின்னூட்டம் எழுதிய அடுத்த மூன்று மணித்துளிகளில் எழுதிய அடுத்த பின்னூட்டத்தில் பிழை பற்றி எழுதி இருக்கிறேன். என்ன செய்வது ??? என் தலை எழுத்து மற்றவர்களிடம் திட்டு வாங்க வேண்டும் என்று

Geetha Sambasivam said...

சரி, சரி, இனிமேல் சொல்லலை, பொதுவா எல்லாரையும் சொல்ற மாதிரி உங்களையும் சொல்லக் கூடாதுனு புரிஞ்சுடுச்சு! :( ஆனால் ஒரு ஜாலியாகத் தான் சொன்னேன். :P போட்டதில் புரிஞ்சிருக்கும்னு எதிர்பார்த்தேன்.

தருமி said...

சீனா,கீதா

ரெண்டு பேரும் இப்ப நல்ல பிள்ளைங்க மாதிரி 'பழம்'சொல்லிக்குங்க... ம்ம்..ம்.. ஒண், டூ, த்ரீ சொல்லுவேன் .. ரெண்டு பேரும் ஒண்ணா ஈன்னு சிரிக்கணும்; சரியா..

இப்படிக்கு
சட்டாம்பிள்ளை

ramachandranusha(உஷா) said...

கீதா, மதுரை கொலு போட்டோ என்று ஆவலுடன் வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே :-(
மதுரக்காரங்களா, படம் இருந்தா போடுங்கப்பூ!
சீனா சார், சும்மா நட்பின் அடிப்படையில் வம்புக்கு சொல்வது. இதையெல்லாம் சீரியசாய் எடுத்துக்காம ஜோதியில் ஐக்கியம் ஆகுங்க. உங்க பதிவு இந்த நிமிஷம் பார்த்தேன். மலரும் நினைவுகளாய் நிறைய போட்டு இருக்கீறீர்கள். நிதானமாய்
படிச்சிட்டு, கமெண்ட் அடிக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு//

இங்க தான் தலவி மேல எனக்கு டவுட்டு!
வரவு-செலவு கணக்கா? வரவு தெரியும்! அதான் யார் யார் வீட்டு சுண்டல்-னு உங்க அசாத்திய ஞாபகத்தைக் சொல்லீட்டீங்களே!

சரி, அது என்னா செலவு?
தம்பி ராம்! நீங்க கூடவா தலைவியைக் கணக்கு கேட்பது இல்லை? :-)

cheena (சீனா) said...

கீதா - பழம் விட்டுட்டேன் - சட்டாம்புள்ளே கோச்சுக்குவாரு இல்லேன்னா.

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

32 இருக்கா சட்டாம்புள்ளே ??

கீதா பழம் வுடுங்க

அதென்ன :p கீதா - எனக்குப் புரிலே - நான் இவ்வுலகுக்குப் புதுசு

உஷா - ஐய்க்கியமாயிடரேன் - நான் ரெடி - மத்தவங்க ரெடியா ??

Unknown said...

அந்த நாள் ஞாபகமா கொணாந்திட்டீங்களே... தாழம்பூவிலியும் சரி, தலைப் பின்னல்லியே வச்சு தைக்கிற பூ, வாழைப்பட்டையில வைச்சுத்தைக்கிறதுன்னு எல்லா பூ-வ(லி)யும் தாங்கியிருக்கு என் தல (தல யாரு!). ஆசையா கொலு அலங்காரம் செய்து கொள்(ல்)வேன்.

சுண்டல் கரக்டா அப்பா கிட்ட குடுத்துடணும் (அப்பா எல்லார் வீட்டு சுண்டல் டேஸ்ட் செய்து கமண்ட் அடிப்பாரு!!) - இப்போ என்னான்னா, வூட்டுக்காரர் கிட்ட கொடுக்க வேண்டியிருக்கே! அதுக்காகவே, சாப்பிடாம உக்காந்துட்டுருக்கும் (மரியாதை, வேற என்ன!) ...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... (ஞாபகம், சுண்டல் எல்லாத்துக்குமா ஒரு ஹ்ம்!)

Geetha Sambasivam said...

பழம் எல்லாம் ரெண்டு நாள் கொலுவுக்குக் கொடுத்ததிலே செலவாயிடுச்சு, தருமி சார், தவிர, இது என்ன, சும்ம்ம்ம்மாஆ ஒரு விளம்பரத்துக்குத் தானே? :P :P

Geetha Sambasivam said...

வேலை மெனக்கெட்டுக் கமெண்டுக்குப் பதில் கொடுத்தேன், அது என்னமோ வரவே இல்லை. பக்கம் திறந்தாலே எர்ரர்னு வருது! :P

உஷா, படம் எல்லாம் அப்போ எடுக்கலை. காமிராவே அப்போ கிடையாது. எங்க மூணு பேரையும், டவுன்ஹால் ரோட்டில் இருந்த "கிருஷ்ணா" ஸ்டுடியோ காரர் படம் எடுத்து வச்சிருக்கார். அதை வேணாப் போடறேன், என் அண்ணா கிட்டே பத்திரமா இருந்தா.

Geetha Sambasivam said...

கண்ணன், செலவுன்னா அம்மா பெரியப்பா வீட்டுக்கும் மற்ற சொந்தக்காரர் வீடுகளுக்குக் கொடுத்து அனுப்புவதை நாங்க "வழிப்பறி" செய்யாமல் கொடுத்தோமான்னு அப்பா கண்காணிப்பார். :))))))

கெக்கேபிக்குணி, ரொம்பநாள் கழிச்சு வந்திருக்கீங்க, தாழம்பூவும் வச்சுப் பின்னிட்டிருக்கேன். நினைவு படுத்தினதுக்கு நன்றி. நீங்க கொலு வைக்கலியா?

சீனா :Pன்னா smiley icon emoticon அடையாளத்தில் போய்ப் பாருங்க! -ஹிஹிஹி

Unknown said...

கொலு வைத்தாச்சு! தினம் சுண்டல்னு போயிட்டிருக்கே!

cheena (சீனா) said...

//கீதா சாம்பசிவம் said...
வேலை மெனக்கெட்டுக் கமெண்டுக்குப் பதில் கொடுத்தேன், அது என்னமோ வரவே இல்லை. பக்கம் திறந்தாலே எர்ரர்னு வருது! :P//


அதென்னங்க கீதா - யாரோட கமெண்டுக்குப் பதில் கொடுத்தீங்க ?? எது வரலே ?? ஏன் ?? என்னோட கமெண்டா ?? இல்லே என்னோட வலைப்பூவா ??

Geetha Sambasivam said...

mmmm, அதெல்லாம் இன்னும் யாரோட வலைப்பக்கத்துக்கும் போக ஆரம்பிக்கலை, நீங்க சொன்னதுக்காக உங்க கொலு பதிவு மட்டும் பார்த்தேன். இந்த "மதுரைமாநகர்" வலைப்பக்கத்திலே எனக்குக் கமெண்ட் கொடுத்தவங்களுக்கு மூன்று முறை பதில் கொடுத்தும் எர்ரர் தான் வந்துட்டிருந்தது. அப்புறம் சலிச்சுப் போய் கமெண்ட் வரலைனு சொல்லிட்டுக் கொடுத்தது எல்லாம் வந்திருக்கு! இங்கேயுமா எனக்கு இப்படி நடக்கணும்? ம்ம்ம் எல்லாம் நேரம்! இன்னிக்கும் இதே கமெண்டை இரண்டாவது முறையாக் கொடுக்கிறேன். வருதா, பார்க்கணும். :((((

Geetha Sambasivam said...

ஆஹா, வந்திடுச்சு!

Geetha Sambasivam said...

என்னோட பதிவுக்கு நானே கமெண்ட் கொடுத்து ஹிட்ரேட் ஏத்திக்க வேண்டி இருக்கு! :)))))

cheena (சீனா) said...

பலே பலே இப்படி ஒரு வசதி இருக்கா ஹிட் ரேட் ஏத்துறத்துக்கு.
தெரியாமப் போசே !!!

நானானி said...

சீனா!
எஆனும் ஆஹா..மதுரை கோவில் கொலு பத்தியாக்கும்னு நெனச்சேன்.
அந்தக் காலத்தில் எங்கள் தெருவில் சிறுவர்கள் எல்லாம் கும்பலாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று 'கொலு இருக்கா..?' என்று கூவுவார்கள். வேறு எதற்கு, கொலு பார்த்துவிட்டு பாட்டுப் பாடுவதற்கா? அல்ல அல்ல சுண்டலுக்குத்தான்.
உங்கள் பதிவில்..வரவு செலவு, பகிர்ந்துண்ணல் நல்லாருக்கு.

Geetha Sambasivam said...

நல்லா இருக்கே நானானி, எழுதினது நான், கமெண்ட் சீனாவுக்கா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., சுண்டலுக்கு இப்போவும் பசங்க வராங்க இந்தப் பக்கங்களில், அங்கே இல்லை போல் இருக்கு! :))))))

cheena (சீனா) said...

நண்பர் நானானி ஏதோ அவசரத்திலே என் பேரப் போட்டுட்டார். பாவம் - அதுக்குப் போய் திட்றீங்களே ! அவர் கிட்ட சொல்லி திருத்தம் போடச் சொல்லிடுறேன். ஆம அடுத்த பதிவு எப்போங்க ?? கொலு வெல்லாம் முடிஞ்சு போச்சே ?? எழுதுங்க - நாங்க பின்னூட்டமிடணும் இல்லே - கை துறு துறுங்குது

Geetha Sambasivam said...

hihihi,வி.வி.சி. நானானி மகளிர் அணி! அது தெரிஞ்சுக்குங்க முதலில்! அப்புறமாய்ப் பதிவு போடறேன், பின்னூட்டத்தில் தாளிக்கலாம். :P

cheena (சீனா) said...

//வி.வி.சி. நானானி மகளிர் அணி//

புரிலே - விளக்கம் தேவை - புதியவன் நான். புரிய சில காலம் ஆகும்.

Geetha Sambasivam said...

"வி.வி.சி." தனியாக் கொடுத்திருக்கணும், மறந்துட்டேன். இதுக்குத் தனி அகராதியே இருக்கு. :)))))))))))

நான் சொல்ல வந்தது "நானானி" சார் இல்லை. மகளிர் அணியைச் சேர்ந்தவர்னு சொன்னேன். ஹிஹிஹி. நான் இப்போ அ.வ.சி.

வி.வி.சி. =விழுந்து விழுந்து சிரித்தேன்.
அ.வ.சி.= அசடு வழியச் சிரிக்கிறேன்.
க்ர்ர்ர் இப்போ நிஜமாவே அ.வ.சி. தான் இதை எல்லாம் சபையிலே வச்சுச் சொல்ல வேண்டி வந்துடுச்சே? :P

cheena (சீனா) said...

அ.வ.சி

நானானி உங்க ஆளா !! பாத்துக்குறேன் இனிமே !!
எனி வே தகவலுக்கு நன்றி.

ஆமா இந்த ஸ்மைலீஸ் பிசினெஸ் கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது தானெ ! கொறைஞ்சா போய்டுவீங்க ( வேற என்ன வேலை உங்களுக்கு அத விட)

SALAI JAYARAMAN said...

அது என்னமோ 70 களில் நம் அனைவரின் வாழ்க்கையும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. அதுவும் அக்ரஹாரத்து வாழ்க்கை வரம்பு மீறாத ஒன்று. ஏறத்தாழ ஒரே மாதிரியான வாழ்க்கை முறை என்பதை தற்போது அறியும் போது மிக ஆச்சரியப்பட வைக்கிறது.

எங்கள் வீட்டிலும் ஆஸ்தான பெண் உதவியாளர் உண்டு. வன்னிச்சி என்று பெயர். என்னை எடுத்து வளர்த்தவர்கள். மிகவும் அன்பான ஏழை விதவை. அன்பைத்தவிர அந்த அம்மாவிற்கு ஏதும் தெரியாது. எங்கள் வீட்டு அனைத்து வேலைகளிலும், நன்மை தீமைகளிலும் பங்கு எடுத்துக் கொண்டு எங்களுடனே மரண பரியந்தம் வாழ்ந்தவர்கள். என் திருமணத்தைப் பார்த்தபின் தான் மரிப்பேன் என்று அடிக்கடி சொல்லி வைத்ததுபோல் 1986ல் என் திருமணத்திற்கு வந்து சென்னையில் என் மனைவியோடு புதுக் குடித்தனம் வரை இருந்தார்கள். எங்களுடனே இருந்து பின் 1988ல் என் முதல் பெண் பிறக்கும் வரை உதவி செய்து மறைந்தார்கள். அன்பின் உறைவிடம் அந்தப் பெண்மணி.

25 வருடங்களாக கருப்பையா என்ற சலவைத் தொழிலாளிதான் எங்கள் மொத்த தெருவுக்கும். காசு பணமெல்லாம் கிடையாது. பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளமாட்டார். குடும்பத்தில் ஒருவராகத்தான் கடைசி வரை இருந்தார். அவர் மறைந்ததும் என் துணிமணிகளை இன்று வரை நான் சலவைக்கு கொடுத்ததில்லை.

பால்காரி செவிடி, நாவிதர் நாராயணன், நெய்க் கருப்பாயி, அரிசிக்கார பாப்பம்மாள் எத்தனை விதமான அன்பு மனிதர்கள். இதில் பால்காரி செவிடி என்ற காரணப் பெயருடைய வீரம்மாள் என்ற பெண்மணி மிகவும் வித்தியாசமானவர். 1/4 lt. பாலுக்கு செம்மண்ணால் சுவற்றில் கோடு போட்டு வைப்பார்கள். காலை மாலைக் கணக்கிற்கு இரண்டு கோடு இருக்கும். நாங்கள் சிறு பிள்ளைகள் எங்களுக்கு பிடிக்காத வீட்டுக் கோடில்
ஒன்றிரண்டு நாங்களே கூட போட்டுவிடுவோம். ஆனால் செவிடி நன்றாக ஞாபகம் வைத்திருப்பார்கள். மூன்று கோடு அல்லது நான்கு கோடு போட்டிருந்தால் மனக்கணக்காகவே அதை நிராகரிப்பார்கள். பின் எங்கள்
குட்டுவெளிப்படும். பிறகென்ன சண்டைதான்.

கொலுவைப் பத்தி எழுதினதும் எதிர் சேவையைப் போல் என் கொலு சேவை அதான் ஒவ்வொரு ஆத்துக்கா
சுண்டல் வாங்கப் போறது பத்தித்தான். கொலுன்னாலும் எல்லாராத்துக் கொலுவும் ஒண்ணா இருக்காது. ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால் ஏழ்மையைப் பரிகசிக்கும் குணம் யாருக்கும் கிடையாது.

எங்கள் கொலுப்படை சாத்வீகப் படை. அதிரடி கிடையாது. எங்கள் தெருவில் மூன்று பகுதி. எங்கள் படையில் பெண் வீரர்களும் உண்டு. எச்சுமி, லதா, பிச்சம்மா இவாள்ளாம் பெண் பிரிகேடியர்ஸ். எங்களுக்குள் எழுதப்படாத சட்டங்கள் உண்டு. எங்கள் கூட்டத்துக்கு தனி மரியாதை. எல்லாராத்திலேயும் எங்களுக்கு கொலுக் கதவுகள் திறந்தே
இருக்கும். ஏன்னா எங்களில் அரசைவைப் பாடகிகள் உண்டு. நாங்களும் ரொம்ப சமத்து. மொத்தம் 10, 12 பேர் இருப்போம். அனைவரும் எங்கெங்கோ இருக்கிறோம். தொடர்பே இல்லை.

இதில் வக்கீல் PSR ஆத்துக் கொலு ரொம்ப விசேஷம். கொலுக்கு ஒரு மாசத்திற்கு முன்பே அவா வீடு களை
கட்டிடும். பரணிலேர்ந்து பொம்மையெல்லாம் எடுத்து, உடைந்த பொம்மைக்கெல்லாம் மரியாதை செய்து
அவைகளை நல்லடக்கம் பண்ணிடுவோம். போர்க்கால அடிப்படையில் ராணுவ உதவிக்கு எங்கள் குழுக்களின் ஆண் பிரிகேடியர்ஸ் ஆத்து, ராமகிட்டு (அதான் இராமகிருஷ்ணன் தான் மருவி ராமக்கிட்டு வாயிட்டான்)
முன்னாடியே போய் மாமிக்கு உதவியாய் படிகட்டி, விளக்கு மாட்டி, பித்தளை விளக்கையெல்லாம் புளிபோட்டு தேய்த்து மாமியை அசத்திடுவோம். எங்களுக்கு ஒன்பது நாளும் ஸ்பெஷல் பாக்கெட்டில் சுண்டல் உண்டு.

ஏரியா விட்டு ஏரியா போறதில்லை. அங்கே எதிரி நாட்டு பிரிகேடியர்ஸ் வட்டங்கட்டி பெண் பிரிகேடியர்ஸ்
கேலிக்கு ஆளாக்கப் படுவார்கள். 8ம் கிளாஸ் வந்தபோது கொலு போவது நின்றது. பெண் பிரிகேடியர்ஸ்
பெரியமனுஷி ஆயிட்டாள்னு நியூஸ். என்ன அதே அச்சுப்பிச்சு கொண்டை, பாவாடை சட்டை என்ன பெரிய
மனுஷி ன்னு அப்பாவித்தனமாய் ஆண் பிரிகேடியர்ஸ் டிஸ்கஷன். பெரியவளாயிட்டான்னா நாங்கள்லாம்
திடீரென்று எல்லாரும் 5 அடி 6 அடி உயரமாயிருப்பான்னு நினைச்சோம். பக்கத்தாத்து மாமா வந்து டேய்
தத்துப்பித்துக்களா அவாளோடலாம் இனிமே சேரப்பிடாதுன்னு சொன்னார். எச்சுமி, லதா எங்களோட விளையாடறதையும் நிறுத்திட்டா. ரொம்பப் பெரிய மனுஷின்னு நினைப்பு. இன்னிக்கு எல்லாரும்
பாட்டியாயிருப்பா.

இன்று 6 வது படிக்கும் பையனுக்கூட காதல், கல்யாணம், உறவு, பிரசவம் ன்னா என்னன்னு தெரிகின்றது. இது
நல்லதா கெட்டதா? ஒண்ணும் புரியலே. இதில் பள்ளிகளில் செக்ஸ் கல்வி வேறு வேண்டுமென்று அறிவு
ஜீவிகள் மெனக்கிடுகிறார்கள். ரசனை கெட்ட தலை முறை உருவாகிவிட்டது. எத்தனை பெண்
பிள்ளைகளுடன் இருந்திருக்கிறோம். ஒரு காதல் உண்டா? ஓடிப் போனதுண்டா? நல்ல கலாச்சாரத்துடன்
வளர்க்கப் பட்ட காலம் அது. அறிவிலும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. இதோ மிடில் ஏஜில் கம்யூட்டர் கற்றுக் கொண்டோமே. நல்ல பணியில் உள்ளோமே. அன்று நிறைவாய் இருந்தோம். குறைவான வருமானம் இருந்தது. இன்று நல்ல வருமானம், விருந்தோபலற்ற, கலாச்சார சீர்கேடடைந்த ஒருசமுதாயம் உருவாகி வருகிறது. சீக்கிரம் விழித்தால் நலம்,

நம் காலம் அது ஒரு கனாக் காலம்.

"அந்த நாள் போனதம்மா, ஆனந்தம் போனதம்மா, இந்த நாள் அது போல இனிவருமா" என்ற பாடல் வரிகள்தான்
காதில் கேட்கிறது.

பதிவுக்கு பதில் ரொம்ம தாமதந்தான். இருந்தாலும் மன்னிக்கவும். பழைய நினைவுகளை அசை போடுவது
அலாதி சுகமே. வாய்ப்புக்கு நன்றி.