Wednesday, November 7, 2007

மதுரையிலே தீபாவளி கொண்டாடினேன்!சின்ன வயசுத் தீபாவளினு எனக்கு நினைப்பு இருக்கிறது "கழுதை அக்ரஹார"த்தில் நாங்க கொண்டாடியது தான். அப்போ தம்பிக்கு ஒரு வயசு ஆயிடுச்சுனு நினைக்கிறேன். இருந்தாலும் குழந்தைதானே! அவனைத் தவிர 7 அல்லது 8 வயசு ஆகி இருக்கும் என்னோட அண்ணா தான் வீட்டில் ஆண் குழந்தை! ஆனாலும் அண்ணாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு பட்டாசுகள், வெடிகளில். அப்போது எல்லாம் என் அம்மாவின் சித்தப்பா மேலாவணி மூலவீதியில் வச்சிருந்த மருந்துக் கடையில் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனையும் உண்டுனு நினைக்கிறேன். எது எப்படியோ தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் இருந்து எங்களுக்குப் பட்டாசுகள் ஒரு கேஸ் என்று சொல்லுவார்கள் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டி நிறைய வரும். தம்பியும் குழந்தை, அண்ணாவும் பயந்த சுபாவம், பின்னே யார் வெடிக்கிறது? என் அப்பாவைப் பொறுத்த மட்டில் நான் பெண் குழந்தை என்பதால் "இது எல்லாம் ஆம்பளைங்க சமாசாரம்! நீயெல்லாம் வராதே!" என்று கடுமையாகச் சொல்லிடுவார். அப்படியும் விடேன், தொடேன், என்று பட்டாசுகள் பங்கு பிரிப்பதில் என்னுடைய பங்கைக் கண்டிப்பாய்க் கேட்டு வாங்கிக் கொண்டு என்னுடைய உரிமையை நிர்ணயம் செய்து கொள்வேன், அப்பாவின் திட்டுக்களோடும் தான்! பட்டாசுக்களை அப்பா 4 பங்காய்ப் பிரிப்பார். எனக்கு ஒன்று, அண்ணாவுக்கு ஒன்று, வெடிக்கவே முடியாத குழந்தையான தம்பிக்கு ஒன்று, தனக்கு ஒன்று எனப் பிரித்துக் கொடுப்பார்.

இரவு சாப்பிட்டதும் பட்டாசுப் பெட்டியை வைத்துக் கொண்டு பாகப் பிரிவினைக்கு உட்கார்ந்தால், கம்பி மத்தாப்புக்களைத் தவிர, வேறு ஒன்றும் எனக்கு வராது. "கத்தி" சண்டை போட்டுத் தரைச் சக்கரம், விஷ்ணுச்சக்கரம், புஸ்வாணம் போன்றவைகளை வாங்கிக் கொள்ளுவேன். அண்ணாவோடதும் அண்ணாவுக்காக நானே வெடித்துக் காட்டுவேன், என்பது தனிக்கதை! (எங்கேயானும் அண்ணா பொண்ணு இதைப் படிச்சுட்டு அவங்க அப்பா கிட்டே போட்டுக் கொடுத்துடப் போறா! அடுத்த தெரு தான் அண்ணா வீடு! :))))) தீபாவளித் துணிகள் வாங்கறது இன்னொரு காவியம்! முதலில் அப்பா நவராத்திரியில் இருந்தே, ஒவ்வொரு கடையில் அந்த வருஷம் என்ன புதியதாய் வரப் போகுது என்ற மார்க்கெட் நிலவரத்தை ஆராய்ந்து, அது தன்னோட பட்ஜெட்டுக்குள்ளே வருதானு பார்த்துட்டு, அது முடியாதுங்கறதைக் கண்டு பிடிச்சு, பட்ஜெட்டுக்குள்ள வரதை வாங்க நாங்க போய்க் கடைசியில் அப்பாவுக்கு மட்டும் திருப்தியாகவும் எங்களுக்கு எல்லாம் மனக் குறையுடனும் துணிகள் வாங்கிக் கொள்ளுவோம். அதுக்கு அப்புறம் டெய்லர். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் "கருகப்பிலைக்காரச் சந்து" பக்கம் கடை போட்டிருந்த "சின்னி கிருஷ்ணன்" என்பவர் தான் எங்கள் வீட்டுக் குடும்ப டெய்லர்! வீட்டுக்கே வருவார். அப்பாவிடம் கொஞ்ச நாள் படிச்சார். அந்த விசுவாசம்!

அவர் வந்து துணிகளை வாங்கிப் போகும்போதே ஏதோ உலகத்திலேயே நாங்க தான் உசத்தியாத் துணி எடுத்திருக்கிறாப்போலயும், அதைத் தான் இந்த வருஷ புது டிசைனில் தைக்கப் போவதாயும் ஒரு பிரமையை உண்டாக்கிவிட்டே வாங்கிப் போவார். எங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் போயிடும். கூடவே இருக்கவே இருக்கு, பட்சண வகைகளும், வெடி வெடிக்கிற குதூகலமும். அப்பாகிட்டே சண்டை போட்டு நான் வாங்கி வச்சிருக்கும் வெடி வகைகளில் பெரிய வெடிகள் எல்லாம் எப்படியோ காணாமல் போயிடும். ரொம்பக் கத்தினால் என்ன செய்யறதுனு என் வாயை அடைக்கறதுக்காக ஓலை வெடியை மட்டும் விட்டு வச்சிருப்பார் அப்பா. புத்தாடை அணிந்து பட்சணங்கள் சாப்பிட்டாலும், வெடிகள் காணாமல் போன விந்தை அந்த வயதில் புரியாமலேயே, மனம் நிறையக் கலக்கத்துடனும், கவலையுடனும் (பின்னே, வெடி காணாமல் போனதுக்கு அப்பாவுக்குப் பதில் சொல்லணுமே?) அப்பா எப்போ மத்த வெடிகளைப் பத்திக் கேட்டுடுவாரோ என்ற பயத்துடனேயே தீபாவளிக் காலை ஓடிப் போய், பின்னர் பட்சண விநியோகங்கள் ஆரம்பிக்கும்.

நாங்கள் தான் எல்லார் வீடுகளுக்கும் எடுத்துப் போவோம். அப்பாவிடம் ஹிந்தி படிச்ச "தங்கம்" தியேட்டர் சொந்தக் காரர் ஆன திரு கண்ணாயிரத்தில் இருந்து, கெல்லட் ஸ்கூல் பக்கம் குடி இருந்த கிறித்துவ நண்பர் (இவரும் அப்பாவிடம் ஹிந்தி படிச்சார்) வரை எல்லார் வீடுகளுக்கும் போவோம். அவங்க வீட்டிலே இருந்து எங்களுக்குக் கிறிஸ்துமஸ் பலகாரங்களும், புது வருஷப் பலகாரங்களும் வந்திருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு எனத் தனியாக ஆளை வைச்சுப் பலகாரங்கள் செய்து அனுப்புவார்கள். திரு கண்ணாயிரம் வீட்டுக்குப் போனால் அவர் அந்த வருஷம் புதுசாய் வந்திருக்கும் வெடிகளின் பார்சல் கொடுப்பார். அப்படி அறிமுகம் ஆனது தான் பாம்பு வெடி மாத்திரைகள். அதை எப்படி வெடிக்கறதுனு தெரியாம முழிச்சதும், தற்செயலாகக் கம்பி மத்தாப்புப் பொறியோ, சாட்டைப் பொறியோ பட்டு அது கிளம்பி வர ஆரம்பிச்சதும் முதலில் பயந்து, பின் தெளிந்து அதை இம்முறையில் தான் வெடிக்கணும் என்று புரிந்ததும் தனிக்கதை! இது எல்லாம் குழந்தையாக இருந்த வரை! சற்றே விவரம் தெரிந்து உயர் கல்விக்காகப் பெரிய பள்ளி போக ஆரம்பிச்சதும் வேறு மாதிரி. மூன்றே நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதில் வீட்டுப் பாடங்களை அவசரம், அவசரமாய் முடிச்சுக்கணும், வீட்டில் அம்மாவுக்கு உதவி, பின் எல்லார் வீட்டுக்கும் போகவேண்டியது என்று தீபாவளி ஒரே ஓட்டம் தான். பின்னர் வந்த நாட்களிலும்!

நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்~

12 Comments:

இலவசக்கொத்தனார் said...

சின்ன வயசு சொல்லியாச்சு, கொஞ்சம் வளர்ந்து சொல்லியாச்சு. அப்புறமா? :))

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Baby Pavan said...

பாட்டிக்கும், மருத மாமா, அத்தை அனைவருக்கும் எங்க சங்கத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்!....

cheena (சீனா) said...

சிறு வயது தீபாவளி என்பது ஒரு இனிய அனுபவம் தான். தீபாவளி வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

பவன் குட்டி - உனக்கும் உன் சங்க உறுப்பினர்களுக்கும் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

வாங்க, இ.கொ. சின்ன வயசும் சரி, கொஞ்சம் வளர்ந்தும் சரி, கொஞ்சமே கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். முழுசும் சொல்லை! :))))))))
அப்புறமாக் கேட்டால் அந்தக் கதை எல்லாம் பிரமிப்பா இருக்கும்! :)))))

Geetha Sambasivam said...

@பேபி பவன், "பாட்டி" யாருனு சொல்லவே இல்லையே? அத்தை நானா? ஹிஹிஹி, நன்னி, நன்னி, நன்னி! :P :P
உங்க வீட்டுக்கு வந்து பார்த்தால் என்னங்க இது ஒரே "பீட்டர்" மயமா இருக்கு, புரியாமல் ஏதோ எழுதறீங்க? நீங்க பிறந்து படிச்சீங்களா? படிச்சுட்டுப் பிறந்தீங்களா? குழப்பமா இருக்கே!
தேடிக் கண்டு பிடிச்சு இங்கே வந்து வாழ்த்தினதுக்கு நன்றி. ம்ம்ம்ம் வந்ததுமே சங்கமா? :P

Geetha Sambasivam said...

சீனா சார், "பவன்" குட்டியா? சரியாப் போச்சு போங்க, படம் காட்டறாருங்க! ஏமாந்துடப் போறீங்க நீங்க! :)))))))

ஜீவி said...

//கொஞ்சமே கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். முழுசும் சொல்லை! :))))))))
அப்புறமாக் கேட்டால் அந்தக் கதை எல்லாம் பிரமிப்பா இருக்கும்! :)))))//

ஏன் குறை?.. முழுசும் சொல்லுங்கள்.

கேட்க (படிக்க) காத்திருக்கோம்.

மனம் மகிழ்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

தருமி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

//தங்கம்" தியேட்டர் சொந்தக் காரர் ஆன திரு கண்ணாயிரத்தில் இருந்து..//

திரு. கண்ணாயிரம் சென்ட்ரல் தியேட்டர் உரிமையாளரில்லையா..?

Geetha Sambasivam said...

வாங்க ஜீவி, சிலதைத் தான் சொல்ல முடியும், இல்லையா? சிலது மறக்கடிக்கப் படணும்! :)))))))

@தருமி சார், செண்ட்ரல் தியேட்டருக்கும் அவர் பாகஸ்தர், தங்கம் தியேட்டருக்கு முழு உரிமைனு நினைவு.

Geetha Sambasivam said...

@தருமி, எப்படியோ இரண்டு தியேட்டர்களிலும் வரும் படங்களுக்கு எங்களுக்கு இலவசப் பாஸ் வரும்! :)))))))))))))

cheena (சீனா) said...

ஓஒ ஓசி சினிமாவா - அது சரி