Friday, November 30, 2007

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு - முடிவுரை


நா ன் ஒட்டு மொத்த மருதை மாவட்டத்திற்கோ அல்லது மருதவாழ் மக்களுக்கோ representative அல்லது அதிகாரபூர்வ spokesperson கிடையாது.மீனாட்சி கோவில் குறித்தான வரலாற்றை ஆய்வு செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நியமித்த ஒரு ஆய்வு அறிஞரும் கிடையாது. உலகில் பல விசயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம் சில நேரங்களில் அவற்றிற்கு எதிவினையாற்றுகிறோம் அல்லது அது பற்றி மேலும் ஆராய முயற்சி செய்கிறோம்.எதை விமர்சிக்கிறோம் அல்லது எதை கேள்வி கேட்கிறோம் என்பது , அந்த செய்தி அல்லது நிகழ்வு , நம்முள் எற்படுத்தும் தாக்கத்தை பொருத்து இருக்கும். அது ஒருவருக்கொருவர் மாறுபடும். பெண்ணின் கைப்பை கீழே விழுந்தால் எடுத்துக் கொடுக்க வரும் அதே ஆண்கள்தான் அவள் நிர்வாணமாக உதவி கேட்டு கதறும்போது வேடிக்கை பார்கிறார்கள்.

நிகழ்காலத்தில் உள்ள மக்களால் பதியப்பட்டுக் கொண்டு இருக்கும் விக்கிப்பீடியா சொல்லும் தகவலை நம்பாதவர்கள், அவர்கள் பிறக்காத ஒரு காலத்தில் எழுதப்பட்ட புனைவுகளையும்,புராணங்களையும் அப்படியே உண்மை என்றும் அவற்றின் வழியாக சொல்லப்படும் வரலாற்றை நம்பவும் செய்கிறார்கள். புராணங்கள் அல்லது புனைவுகள் எல்லாம் வரலாறு அல்ல. அதுபோல் பெரும்பான்மையினர் பேசுவதும் வரலாறு அல்ல. இது குறித்து நமது வலைப்பதிவுகளிலே பல முறை நிரூபிக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை மேற்கோள் காட்டலாம். ஆனால், அது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.

பொன்னியின் செல்வன் என்பது ஒரு கதை/புனைவு இலக்கியம். நாம் வாழ்ந்த இதே காலத்தில் ஒரு கதையெழுதி எழுதிய கதை இது. சோழர் வரலாற்றை அறிய வேண்டும் என்பவனுக்கு இந்தக் கதை ஒரு தூண்டுகோலாக இருக்காலாம். ஆனால், இந்தக் கதையின் வழித்தடத்தில் மட்டும் வரலாற்றைத் தேடுவது அல்லது கட்டமைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் மற்றும் வரலாற்றுத் துரோகம்.புராணங்களில் அல்லது புனைவுகளில் வரலாற்றின் குறிப்புகள் ,கட்டிடத்தில் உள்ள செங்கற்களை ஒட்டவைக்கும் சுண்ணாம்பைப்போல (அல்லது சிமெண்ட் போல)காணப்படும். அதை பகுத்து அறிவது அல்லது எப்படி உள்வாங்குவது என்பது அவரவரின் நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விசயம்.

பழைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு வந்த புராணங்கள்,இலக்கியங்கள் போன்ற புனைவுகள் போல இந்த நூற்றாண்டில் அசைக்கமுடியாத ஒரு இடத்தில் இருப்பது சினிமா. நாம் வாழும் இந்த காலகட்டத்தில் சினிமாவில் என்ன பதிவு செய்யப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.நமக்கு அடுத்து வரும் புதிய தலைமுறை (3000 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொழுது போகாத போது 2000 -2007 -ல் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்த்து..."நம் முன்னோர்கள் காதலிக்கும் போது பக்கத்தில் பத்து இருவது ஆட்களை கூட்டிவைத்துக் கொண்டு் மரத்தைச் சுற்றியும், ரோட்டிலும் ஆடித்தான் காதல் செய்தார்கள். அப்படித்தான் டைரக்டர் சங்கர் படத்தில் சொல்லியிருக்கார்" என்று மேற்கோள் காட்டக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நாம் இருக்க மாட்டோம்.

இதை வாசிக்கும் அனைவருக்கும் நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன். இன்று உள்ள விக்கிப்பீடியாவை நம்பாதவர்கள், பக்தி என்ற பெயரில் பழைய புராணங்களை அப்படியே வரிக்குவரி எப்படி நம்புகிறார்களோ , அதே போல் நாளய தலைமுறை ,இன்று சினிமாவில் உள்ள கற்பனைகளை உண்மை என்று நம்ப வாய்ப்பு இருக்கிறது. இது புரிந்தால், நீங்கள் நம்பும் புராணங்களில் இருந்தும் , புனைவுகளில் இருந்தும் உள்ள வளமான வர்ணனைகளையும், கற்பனைகளையும் பிரித்தெடுக்க முடியும்.

சங்ககால வரலாறுகளை, இதுதான் வரலாறு என்று தேதிவாரியாக யாராலும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த காலத்திற்குள் நுழைய, நம்மிடம் இருப்பவை புராணங்களும்,சமயக் கதைகளும் ,செவி வழிக் கதைகளும், எப்போதாவது கண்டெடுக்கப்படும் கல்வெட்டுக்களுமே. இதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாறு அப்பட்டமான வரலாறாக பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக , வரலாறே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் முட்டாளாகவில்லை என்றே நினைக்கிறேன்.என்னதான புராணங்கள்,கதைகள்,இலக்கியங்கள் வாசித்தாலும் அவற்றை சீர்தூக்கி , ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இல்லையென்றால் கடந்த கால வரலாறுகள் நாம் வாழும் இந்தக் காலத்திலும் சரிபார்க்கப்படாமல் , அப்படியே அடுத்த தலைமுறைக்கும் சென்றுவிடும்.

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் புதைந்து இருக்கும் சரித்திர உண்மைகள் இன்னும் நமக்கு புராணங்களின் வாயிலாகவே அறியப்பட்டு வருகிறது. புராணங்களை "பக்தி" என்னும் கண்ணாடி வழியாகப் பார்ப்பவர்களுக்கு, மீனாட்சி தெய்வப்பிறவியாக , யாக குண்டத்தில் தோன்றியவளாக ,மூன்று முலைகளுடன் இருந்தவளாக ,இமயம் முதல் குமரி வரை ஆணடவளாகவே தெரிவாள். மேலும் அவர்களுக்கு இதுபோன்ற போன்ற விசயங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவை.

இதுதான் இறுதி இறைவேதம் என்று சொன்னபின்னால், அதை வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு சமயத்தடை வந்துவிடும். அதுபோல , சொன்னது எல்லாம் உண்மை என்று நம்பிவிட்டால், வரலாற்றை ஆராய வாய்ப்பே இல்லை.குழப்பமாக அல்லது தெய்வதன்மை வாய்ந்த , நம்பிக்கை சார்ந்த மீனாட்சி புராணக்கதைகளை , ஓரளவிற்காவது அறியப்பட்ட/நிரூபிக்கப்பட்ட சேர,சோழ வரலாறுகளுடன இணைக்காமல் இருப்பது பக்தர்கள் வரலாற்றிற்குச் செய்யும் பெரிய நன்மை.மீனாட்சி சிலையின் காலத்தை ( கார்பன் டேட்டிங்) அறிவியல் பூர்வமாக கணித்தாலே, புராணங்கள் சொல்லும் காலத்திற்கும், மீனாட்சி வடிவமைக்கப்பட்ட காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை அல்லது வேற்றுமைகளை அறிய வாய்ப்பு உள்ளது. தெய்வத்தின் சிலையை சோதிப்பதா? என்று பக்தர்கள் தவறாக என்னைப் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அல்லது ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தலாம்.

மீனாட்சி கோவிலின் தற்போதைய வடிவம் ஒரே நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்டதில்லை. அதன் பழைய வடிவங்கள் நமக்கு புராணங்களில் விவரணையாக ஆங்காங்கே சொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் உண்மை இன்னும் அறிவியல்பூர்வமாக ஆராயப்படவில்லை.அல்லது எனக்கு மட்டும் புரியவில்லை. ஒரு பெயிண்டர் எழுதிவைத்த தவறான தகவல் என்று என்னால் இதைக்கடந்து போக முடியவில்லை. இங்கே பினூட்டமிட்ட நண்பர்களும் பக்தி வழியில் அதையே நம்புகிறார்கள்.

மீனாட்சி வாழ்ந்த காலத்தில் இருந்த இந்தியாவின் புவியியல் எல்லைகள் இப்போது இருக்கும் இமயம்-குமரியாக இருந்திருக்கவே முடியாது என்பது எனது திடமான எண்ணம்.சுமைதாங்கிக் கல்லாக இருந்த ஒரு பட்டியக்கல் ஒன்று, சென்ற தலைமுறையில் ஊர் தேவதையாகவும், இன்று பார்வதியுடன் இணைத்து கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதையும் அறிவேன். நாளைய தலைமுறை இதை இன்னும் விரிவு படுத்தி புதிய கதைகளைச் சேர்த்தாலும் சேர்க்கும். ஆனால் , உண்மையைச் சொல்ல அந்த இரகசியம் அறிந்த கிழவிகள் இருக்க மாட்டார்கள்.புராணக்கதைகளை ஒரு கடந்த காலத்தை பார்க்க உதவும் ஒரு ஜன்னலாக மட்டுமே கொண்டு, இன்றைய அறிவியல் நுட்பங்களின் உதவியுடன் மீனாட்சியின் காலமும், வரலாறும் கணிக்கப்பட்டு சரியாக எழுதப்படவேண்டும். அதுவே அடுத்து வரும் மதுரைத் தலைமுறையினருக்கு நாம் வழங்கும் பரிசு.

ஒரு அழகிய பெண்ணை இன்னொரு பெண் பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணை அவளின் கணவன் பார்க்கும் பார்வைக்கும், அவளின் தந்தை பார்க்கும் பார்வைக்கும், அவளின் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும், ரோட்டில் போகும் ஒரு ரோமியோ பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணின் மருத்துவர் பார்க்கும் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் ஒரே ஆள்தான். ஆனால், அவள் ஒவ்வொருவரிடமும் ஒரு புதிய முற்றிலும் வேறான தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்.

அனைத்துப் பார்வைகளும் ஒன்று அல்ல. அதுபோல் ஒன்று மட்டுமே உண்மையும் அல்ல.நாம் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தும், நமது கடந்தகால அனுபவங்களைப் பொறுத்தும் , நாம் பார்க்கும் பார்வைக்கோணம் மாறுபடும்.


  • எனது கோணத்தில் மீனாட்சி என்பவள் வரலாற்றின் பக்கங்களில் நம்மைப்போல் ஒரு மனுசியாக இடத்தை நிரப்பியவள்.
  • அவளின்பால் ஈர்க்கப்பட பலர் அல்லது நலம் விரும்பிகள் அல்லது சுற்றம் சொந்தம்,அவளுக்கு ஒரு இடத்தை பட்டியக்கல்லாக ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.
  • பிற்காலத்தில் அவள் பல புனைவுகளுடனும், கிளைக்கதைகளுடனும் தெய்வமாக்கப்பட்டு, இன்று கேள்வி கேட்கமுடியாத புனிதத்தை அடைந்து இருக்கலாம்.
  • இவள் நிச்சயம் நாம் அறிந்து வைத்துள்ள எந்த சேர, சோழர்களுடனும் போரிடவில்லை. இமயமும் குமரியும் அவளது ஆட்சி எல்லைகளாக இருத்திருக்கவும் இல்லை.

நான் சொல்வதுதான் இறுதி என்று சொன்னால், இது பழையபடி "இதுதான் இறுதி இறைவேதம்" என்ற முற்றை அடைந்து , அதற்குமேல் வளர்த்தெடுக்க முடியாத ஒன்றாக போய்விடும்.நான் சொல்பவைகள், இன்று எனது 36 வயதில் இருக்கும் புரிதல்கள். ஒருகாலத்தில் மீனாட்சியின்பால் அதிக காதல் கொண்டவன் நான். அதிகாலைத் தரிசனத்தில் அவளின் சாய்ந்த கொண்டையிலும், ஒய்யாராமாக சாய்ந்து நிற்கும் பேரழகிலும் என்னை மறந்தவன். ஒரு ஆணாக அவளை கடவுள் என்பதையும் மீறி என் சிறுவயதில் மெய்மறந்து இரசித்து உள்ளேன்.

அவை எல்லாம் ஒரு சிறுவயது பையன் பக்கத்துவீட்டு அக்காதான் உலகின் பேரழகி என்று எண்ணும் காலகட்டங்கள். மீனாட்சியின் மூக்குத்தியழகில் சொக்கிப்போன அனுபவமும் உண்டு. இராதை, ஆண்டாள் போன்ற சாதரணர்கள் ஆண் தெய்வங்களைக் கண்டு மெய்மறந்து புலம்பியது போல , நம் புராணங்களில் எந்தப் பெண் தெய்வத்தையும் சாதாரண மனிதர்கள் இரசித்துப் புலம்பிய வரலாறு இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை. ஆண் தெய்வங்களுக்கு பெண் இரசிகைகளை அனுமதித்து ஆர்ப்பாரிக்கும் நாம் , பெண் தெய்வங்களுக்கு ஆண் இரசிகர்களை அனுமதிப்பது இல்லை. இதையெல்லாம் இங்கே விரிவாகப் பேசினால் பதிவின் நோக்கம் திசைமாறிப் போய்விடும்.

நான் சொல்லவருவது , இந்த மதுர மீனாட்சி என் சிறுவயதுக் காலங்களில் என்னால் இரசிக்கப்பட்ட/போற்றப்பட்ட/துதிக்கப்பட்ட ஒருவளாகவே இருந்தாள்.அந்த காலகட்டத்தில் நான் அப்படி இருந்ததும் உண்மை. இன்று அவளின் வரலாற்றை கேள்விக்கு உட்படுத்துவதும் உண்மை. நாளை, நான் இதே மீனாட்சியை வேறுவிதமாக, முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கலாம்.

யாரும் யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டாலும், மதுரை மீனாட்சியின் வரலாறு குறித்தான மாறுபட்ட கோணங்கள் இருக்கிறது, என்றாவது சிலர் புரிந்துகொள்ள எனது கேள்விகள் உதவி இருக்கலாம். அல்லது ஒன்றுக்கும் உதவாத ஒன்றாகவும் இருந்து இருக்கலாம். மாறுபட்ட விளக்கங்கள் இருப்பதால் இன்னும் உண்மை தேட வேண்டிய நிலையிலேயே உள்ளது அல்லது எனக்கு புரியாமல் உள்ளது.

புராணங்களை நான் வரலாற்றை அறிய உதவும் ஒரு ஜன்னலாகவே பார்க்கிறேன். அதுவே வரலாறு அல்ல. மேலும் அதீத பக்தியால், அதுதான் வரலாறு என்று இந்த blogspot காலத்திலும் நண்பர்களை நம்பவைத்துக் கொண்டு இருப்பது அவர்களின் பக்தியன்றி வேறு எதுவும் இல்லை என்றும் எனக்குப் புரிகிறது.

பொன்னியின் செல்வன் குந்தவை நாளை கடவுளாக்கப்பட்டு அது பற்றிய விவாதங்கள் வந்தாலும் வரலாம். யுகங்கள் மாறினாலும் இவைகள் தொடரும் என்றே நினைக்கிறேன்.

கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி!

ஆரம்பித்து வைத்த கேள்விக்கு முடிவுரையை கொடுத்துவிட்டேன். விரும்புபவர்கள் மேலும் தேடிக் கொள்ளலாம். எனது தேடுதல் தொடரும் ,அது இங்கே பகிரப்படாவிட்டாலும்... !


முந்தைய விரிவான கருத்துப்பரிமாற்றங்களைக் காண...
மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி
http://pathivu.madurainagar.com/2007/11/blog-post_28.htmlPicture Courtesy:
digitalmadurai.com

Thursday, November 29, 2007

மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி

ரலாறு என்பது எழுதுபவனின் பார்வையில் சொல்லப்படும் ஒரு கடந்தகால நிகழ்வு.வரலாறு என்று சொல்லும்போதே, அது அதைப் படிப்பவனின் காலத்துக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் என்றாகிவிடுகிறது. இப்படி, வரலாறு என்பது அதை வாசிப்பவனின் காலத்திற்கு முந்தைய சம்பவங்கள் என்று சொல்லும்போதே, அது குறித்த நம்பகத்தன்மை மற்றும் ஐயப்பாடுகளும் வந்துவிடும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் எந்த ஒரு சுயமரியாதை உள்ள மனிதனும் "எங்க ஏரியா உள்ள வராதே" என்ற தொனியில், இந்து (யார் இந்துக்கள் என்பது என்னளவில் இன்னும் புரியாத ஒன்று . அது இங்கே விளக்கப்படப்போவது இல்லை) அல்லாதோர் உள்ளே வரக்கூடாது என்று சொல்லும் அறிவிப்புப் பலகையை கண்டு வேதனைப்படவே செய்வான். கடவுளர்களை ஒரு மதத்திற்குள் கட்டிப்போடும்போதே அந்த மதம் சொல்லும் கடவுள் நாடு/இன/மத எல்லையுடைய சாதாரணமானவர்கள் என்று புரிந்துவிடும். சிவனுக்கு முருகன் என்று ஒரு பிள்ளையாண்டான் இருக்கிறார் என்பதை இந்தியாவின் வட மாநிலத்தவர்கள் கண்டுகொள்வது இல்லை. முருகனும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

கண்ணே தெரியாதவனுக்கு அல்லாப்பிச்சையும் , பிச்சைப்பெருமாளும்,மாத்தேயுப் பிச்சையும் ஒரே நிறத்தவர்கள்தான். நாமும் அதுபோல வாழப் பழகவேண்டுமோ?

மதம்/கடவுள் நம்பிக்கைகளைத்தாண்டி, இந்தக் கோவில் ஒரு அருமையான கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்குச் சான்று. எந்த ஒரு நம்பிக்கையாளராக இருந்தாலும், தனது நாட்டில் (அ) தனது ஊரில் உள்ள ஒரு பொக்கிசத்தைக் காணக்கூடாது என்று சில கோமாளிகள் சொல்லும்போது வருத்தப்படவே செய்வான். தாஜ்மகால் பற்றி எண்ணற்ற conspiracy theory கள் இருந்தாலும், அதை நாட்டின் ஒரு கலைப் பொக்கிசமாகவே நான் கருதுகிறேன். அதைப் பார்க்க சில மதக் கட்டுப்பாடுகள் விதித்தால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

மீனாட்சி என்பவளை ஒரு அரசியாகத்தான் கோவில் வரலாறே சொல்கிறது. ஒரு அரசியின் கோவிலுக்கு வருபவர்களை இந்து என்று எப்படி அளக்கிறார்கள் என்று தெரியாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் எந்த மதத்தில் வருவான்?

சமீபத்தில் மீனாட்சி கோவிலுக்கு சென்ற போது மீனாட்சி சன்னிதியின் அர்த்த மண்டபத்தின் (கருவறையச் சுற்றி உள்ள வெளிப்பிரகாரம்) சுவர்களில் மீனாட்சியின் பல பருவங்கள் சுவற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு , அதற்குக்கீழே பெயிண்டில் விளக்கம் கொடுத்து இருப்பார்கள். அதில் ஒன்றுதான் எனது இந்தக் கட்டுரையின் காரணம்.

மீனாட்சி "சேர,சோழர்களை வென்று இமயம் முதல் குமரிவரை ஆட்சி புரிந்தாள்" என்றவாறு எழுதப்பட்டு இருந்தது. இதை யாரும் சீரியசாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. அவரவர் அவருக்கு உள்ள மனுக்களை எப்படி மீனாட்சியிடம் கொடுத்து சிபாரிசு வாங்கலாம் என்ற பரபரப்பில் இருந்தனர்.


எனது கேள்விகள்.

1.மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்த அதே காலத்தில் வாழ்ந்த சேர மற்றும் சோழ மன்னர்கள் யார்?

2.அந்த மன்னர்களை மீனாட்சி போர் புரிந்து வெற்றி பெற்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது உண்டா?(சும்மா தெருவோரம் புளியமரத்தில் இருக்கும் பாம்பிடம், பரமசிவன் பல்விளக்கும் போது சொன்னார் ..என்ற ரீதியில் ஆதரங்கள் வேண்டாம். அவை கோவில் சுவற்றிலேயே உள்ளது)

3.வடக்கே மீனாட்சி வென்ற மன்னர்கள் யார்? எத்தனை நாட்கள் போர் புரிந்தார்? பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்புகள்?

4.எத்தனை காலம் மீனாட்சி இமயம் முதல் குமரை வரை நாட்டை ஆண்டார்?

5.மதுரையில் இருந்து ஆளப்பட்ட இந்தியா குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஏதேனும்?

வரலாறு தெரிந்தவர்கள் சொல்லும் பதிலுக்கு இப்போதே நன்றி !!

**********

கோவிலில் பார்த்த சில கொடுமைகள்:
1. கோலம் போடுகிறேன் பேர்வழி என்று பெயிண்டால் எல்லா இடங்களி்லும் கோடுகளைப் போட்டு , வரலாற்றின் பக்கங்களில் பிழையை எழுதியுள்ளது.

2.சும்மா தேமே என்று இருக்கும் தூண்களுக்கு பித்தளைத் தகடுகளைப் போட்டு (அர்த்த மண்டபம்) வரலாற்றை சிறைசெய்து இருப்பது.

3.ஆங்காங்கே நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்சிற்பங்களை துளையிட்டு கம்பி கேட்டுகள் /தடுப்புகள் (Iron gates) போட்டு இருப்பது.

பார்த்த நல்ல விசயம்:

கற்பூரங்களுக்கு தடைவிதித்து எண்ணெய் விளக்குகளை அனுமதித்தது. புகையின் அளவு கொஞ்சமேனும் குறைய வாய்ப்பு உள்ளது.


Picture Courtesy:
www.wayfaring.info

Sunday, November 11, 2007

சிலேட்டுக்குச்சி கிடைக்காமல் அழுதேன்.

அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில் இருந்தாலும் 2 வது படிக்கும்போது வகுப்பு மாற்றிக் கொண்டதால் "பி" வகுப்புக்குப் போய் விட்டேன். நான் ஃபெயில் ஆகிவிட்டேன் என்று "பி"யில் மாற்றி விட்டார்கள் என என்னைச் சக நண்பிகள் கேலி செய்து என்னை அழ வைப்பார்கள் எனச் சொல்லுவார்கள். 2-ம் வகுப்பு "ஏ"பிரிவின் ஆசிரியை பேரு சமாதானம் டீச்சர், அவங்க, ரொம்பச் சின்னப் பொண்ணு, ஒண்ணும் விவரம் தெரியலை, அதுக்குள்ளே பள்ளிக்கு வந்துட்டாளேன்னு சொல்லுவாங்களாம். என்றாலும் எனக்கு என்னமோ அந்த டீச்சரைப் பிடிக்காது. மூணாம் வகுப்பிலே இருந்தவர் ஆசிரியர், பெயர் சுந்தர வாத்தியார். அவருக்கு என்னமோ என்னைப் பார்த்தாலே கோபம் வரும். அதுக்கு ஏற்றாப் போல் நானும் அநேகமாய்ப் பள்ளிக்குத் தாமதமாய் வந்து சேருவேன். அப்பாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். பட்டாசுப் பங்குகள் போடுவது போல் அப்பா அப்போது எழுதுவதற்கு உபயோகிக்கப் பட்ட சிலேட்டுக்குச்சியையும் பங்கு போட்டுத் தான் தருவார். முதல் வகுப்பில் படிக்கும்போது அவ்வளவாய் ஒண்ணும் புரியாததால் கொடுக்கிறதை வாங்கி வருவேன்.

அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்த பெண்கள், பையன்கள் கலர்குச்சியை வைத்துக் கொண்டு கலர் கலராய் எழுத முயல, மற்ற சிலர் கெட்டியான செங்கல் குச்சியையும் மாக்குச்சியையும் வைத்துக் கொண்டு எழுத, நான் கறுப்புக் குச்சியால் எழுதுவேன். எழுத்து என்னமோ வந்தது என்றாலும், கூடவே அழுகையும். கலர், கலராய் எழுதாட்டாலும் குறைந்த பட்சம் செங்கல் குச்சியாலாவது எழுதணும்னு ஆசையா இருக்கும், ஆனால் அப்பாவிடம் அது நடக்காது. ஒரு குச்சியை மூன்று பாகம் ஆக்குவார் அப்பா. ஒரு பாகம் எனக்கு, ஒரு பாகம் அண்ணாவுக்கு, ஒரு பாகம் குழந்ததயான என் தம்பிக்கு என. தம்பியின் பாகம் அவரிடம் போக, பெரிய வகுப்பு வந்திருந்த அண்ணாவுக்கோ குச்சியின் உபயோகம் அவ்வளவாய் இல்லாததால் கவலைப்படாமல் பென்சில் எடுத்துக் கொண்டு போக, நான் முழுக்குச்சிக்கு அழுவேன். கடைசியில் எதுவும் நடக்காமல், அதே குச்சியை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன் தாமதாமாய். இல்லாவிட்டால் பள்ளி நாளையில் இருந்து கிடையாது என்பதே அப்பாவின் கடைசி ஆயுதம். அது என்னமோ கணக்கு என்னைப் பயமுறுத்தினாலும் பள்ளிக்குச் செல்வதை நான் விட மாட்டேன். வீட்டை விடப் பள்ளியே எனக்குச் சொர்க்கமாய் இருந்ததோ என்னமோ!!!

இவ்வாறு தாமதமாய் வந்த என்னை ஒருநாள் ஆசிரியர் மிகவும் மிரட்ட நான் பயந்து அலற, அவர் என்னைப் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போகக் கூடாது எனச் சொல்லி, அங்கேயே வைத்துப் பூட்ட, பயந்த நான் அங்கேயே இயற்கை உபாதையைக் கழித்து விட்டு, மயக்கம் போட்டு விழ, பின் வந்த நாட்களில் மூன்று மாதம் பள்ளிக்குப் போக முடியாமல் ஜூரம் வந்து படுத்தேன். முக்கியப் பாடங்களை என் சிநேகிதியின் நோட்டை வாங்கி அம்மா எழுதி வைப்பார். மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார், என்றாலும் என்னைக் காணும்போதே அவர் கூப்பிட்டுத் திட்டி அனுப்புவார். இது ஆரம்பப் பள்ளி நாட்களில் ஆசிரியர் மூலம் நான் முதன் முதல் உணர்ந்த ஒரு கசப்பான அனுபவம். என்றாலும் அதே பள்ளியில் நான் தொடர்ந்து படித்தேன், பின்னர் வந்த நாட்களில் குறிப்பிடத் தக்க மதிப்பெண்களும் பெற்றேன். இதற்கு நடுவில் வீட்டில் இருந்த மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது வீட்டில் ஆனந்தவிகடன் மட்டும் வாங்குவார்கள். என்றாலும் அப்பாவின் பள்ளி நூலகத்தில் இல்லாத புத்தகங்களே கிடையாது. அங்கிருந்து புத்தகம் எடுத்து வரும் அப்பாவைக் கேட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

அதற்கு முன்னால் நான் படிச்சது, என்றால் ஆனந்தவிகடனில் சித்திரத் தொடராக வந்த "டாக்டர் கீதா" என்ற கதையும், துப்பறியும் சாம்புவும் தான். டாக்டர் கீதா தொடரில் சுபாஷ்சந்திரபோஸின், வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் இருக்கும்,இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பற்றிய கதை அது. எங்க வீட்டிலும் தாயம் விளையாடினால் கூட சுபாஷின் "டெல்லி சலோ" என்ற வாக்கியத்தை வைத்து விளையாடிச் செங் கோட்டையைப் பிடிக்கும் விளையாட்டே அதிகம் விரும்பி விளையாடப் படும். தாத்தா வழியில் (அம்மாவின் சித்தப்பா, பலமுறை சுதந்திரத்துக்குச் சிறை சென்றார், கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை) அப்பாவும் காந்தியின் பக்தர், ஆகவே வீட்டில் எப்போதும் ராட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும், அண்ணாவும் தக்ளியில் நூல் நூற்றுக் கொடுக்க, அப்பாவோ, அம்மாவோ கைராட்டையில் "சிட்டம்" போட்டு கதர் நூல் சிட்டம் தயாரித்து, கதர்க்கடையில் கொண்டு கொடுப்பார்கள். அந்தச் சிட்டத்தின் விலைக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் கதர் வேஷ்டி தான் அப்பா கட்டிக் கொள்ளுவார். அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.

நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், படிப்பை சுதந்திரப் போராட்டம் காரணமாய் விட்ட அப்பா, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்தபின்னர்தான் திருமணம் என்றும் இருந்து, அதன் பின்னரே திருமணமும் செய்து கொண்டார். காந்தி இறந்த தினம் முழுதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காந்திக்காக ஒரு முறை மட்டுமே உணவு கொண்டு விரதம் இருந்திருக்கிறார். அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆகும் வரை இது தொடர்ந்தது. எனக்குத் தெரிந்து என்னோட பதினைந்து வயசு மட்டும் வீட்டில் கைராட்டை சுழன்றிருக்கிறது. என் அம்மாவுக்கு முடியாமல் போய் கைராட்டையில் உட்கார்ந்து நூற்க முடியாத காரணத்தாலும், (நிஜலிங்கப்பா பீரியட்?) காங்கிரஸும் முதல் முறையாக உடைந்ததும், அப்பாவும் கதரை விட்டார். அந்தக் கைராட்டையை விற்கும்போது என்னுடைய அம்மா அழுதது இன்னும் என் நினைவில் மங்காத சித்திரமாய் இருக்கிறது.

Wednesday, November 7, 2007

மலரும் தீபத்திருவிழா நினைவுகள்

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.

எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம். அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம்.

அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லல. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.

அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம்.

பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது.

நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை. இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.

எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.

ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும்.

தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.

வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம். ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.

மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று.

அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.

தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.

மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.

மதுரையிலே தீபாவளி கொண்டாடினேன்!சின்ன வயசுத் தீபாவளினு எனக்கு நினைப்பு இருக்கிறது "கழுதை அக்ரஹார"த்தில் நாங்க கொண்டாடியது தான். அப்போ தம்பிக்கு ஒரு வயசு ஆயிடுச்சுனு நினைக்கிறேன். இருந்தாலும் குழந்தைதானே! அவனைத் தவிர 7 அல்லது 8 வயசு ஆகி இருக்கும் என்னோட அண்ணா தான் வீட்டில் ஆண் குழந்தை! ஆனாலும் அண்ணாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு பட்டாசுகள், வெடிகளில். அப்போது எல்லாம் என் அம்மாவின் சித்தப்பா மேலாவணி மூலவீதியில் வச்சிருந்த மருந்துக் கடையில் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனையும் உண்டுனு நினைக்கிறேன். எது எப்படியோ தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் இருந்து எங்களுக்குப் பட்டாசுகள் ஒரு கேஸ் என்று சொல்லுவார்கள் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டி நிறைய வரும். தம்பியும் குழந்தை, அண்ணாவும் பயந்த சுபாவம், பின்னே யார் வெடிக்கிறது? என் அப்பாவைப் பொறுத்த மட்டில் நான் பெண் குழந்தை என்பதால் "இது எல்லாம் ஆம்பளைங்க சமாசாரம்! நீயெல்லாம் வராதே!" என்று கடுமையாகச் சொல்லிடுவார். அப்படியும் விடேன், தொடேன், என்று பட்டாசுகள் பங்கு பிரிப்பதில் என்னுடைய பங்கைக் கண்டிப்பாய்க் கேட்டு வாங்கிக் கொண்டு என்னுடைய உரிமையை நிர்ணயம் செய்து கொள்வேன், அப்பாவின் திட்டுக்களோடும் தான்! பட்டாசுக்களை அப்பா 4 பங்காய்ப் பிரிப்பார். எனக்கு ஒன்று, அண்ணாவுக்கு ஒன்று, வெடிக்கவே முடியாத குழந்தையான தம்பிக்கு ஒன்று, தனக்கு ஒன்று எனப் பிரித்துக் கொடுப்பார்.

இரவு சாப்பிட்டதும் பட்டாசுப் பெட்டியை வைத்துக் கொண்டு பாகப் பிரிவினைக்கு உட்கார்ந்தால், கம்பி மத்தாப்புக்களைத் தவிர, வேறு ஒன்றும் எனக்கு வராது. "கத்தி" சண்டை போட்டுத் தரைச் சக்கரம், விஷ்ணுச்சக்கரம், புஸ்வாணம் போன்றவைகளை வாங்கிக் கொள்ளுவேன். அண்ணாவோடதும் அண்ணாவுக்காக நானே வெடித்துக் காட்டுவேன், என்பது தனிக்கதை! (எங்கேயானும் அண்ணா பொண்ணு இதைப் படிச்சுட்டு அவங்க அப்பா கிட்டே போட்டுக் கொடுத்துடப் போறா! அடுத்த தெரு தான் அண்ணா வீடு! :))))) தீபாவளித் துணிகள் வாங்கறது இன்னொரு காவியம்! முதலில் அப்பா நவராத்திரியில் இருந்தே, ஒவ்வொரு கடையில் அந்த வருஷம் என்ன புதியதாய் வரப் போகுது என்ற மார்க்கெட் நிலவரத்தை ஆராய்ந்து, அது தன்னோட பட்ஜெட்டுக்குள்ளே வருதானு பார்த்துட்டு, அது முடியாதுங்கறதைக் கண்டு பிடிச்சு, பட்ஜெட்டுக்குள்ள வரதை வாங்க நாங்க போய்க் கடைசியில் அப்பாவுக்கு மட்டும் திருப்தியாகவும் எங்களுக்கு எல்லாம் மனக் குறையுடனும் துணிகள் வாங்கிக் கொள்ளுவோம். அதுக்கு அப்புறம் டெய்லர். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் "கருகப்பிலைக்காரச் சந்து" பக்கம் கடை போட்டிருந்த "சின்னி கிருஷ்ணன்" என்பவர் தான் எங்கள் வீட்டுக் குடும்ப டெய்லர்! வீட்டுக்கே வருவார். அப்பாவிடம் கொஞ்ச நாள் படிச்சார். அந்த விசுவாசம்!

அவர் வந்து துணிகளை வாங்கிப் போகும்போதே ஏதோ உலகத்திலேயே நாங்க தான் உசத்தியாத் துணி எடுத்திருக்கிறாப்போலயும், அதைத் தான் இந்த வருஷ புது டிசைனில் தைக்கப் போவதாயும் ஒரு பிரமையை உண்டாக்கிவிட்டே வாங்கிப் போவார். எங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் போயிடும். கூடவே இருக்கவே இருக்கு, பட்சண வகைகளும், வெடி வெடிக்கிற குதூகலமும். அப்பாகிட்டே சண்டை போட்டு நான் வாங்கி வச்சிருக்கும் வெடி வகைகளில் பெரிய வெடிகள் எல்லாம் எப்படியோ காணாமல் போயிடும். ரொம்பக் கத்தினால் என்ன செய்யறதுனு என் வாயை அடைக்கறதுக்காக ஓலை வெடியை மட்டும் விட்டு வச்சிருப்பார் அப்பா. புத்தாடை அணிந்து பட்சணங்கள் சாப்பிட்டாலும், வெடிகள் காணாமல் போன விந்தை அந்த வயதில் புரியாமலேயே, மனம் நிறையக் கலக்கத்துடனும், கவலையுடனும் (பின்னே, வெடி காணாமல் போனதுக்கு அப்பாவுக்குப் பதில் சொல்லணுமே?) அப்பா எப்போ மத்த வெடிகளைப் பத்திக் கேட்டுடுவாரோ என்ற பயத்துடனேயே தீபாவளிக் காலை ஓடிப் போய், பின்னர் பட்சண விநியோகங்கள் ஆரம்பிக்கும்.

நாங்கள் தான் எல்லார் வீடுகளுக்கும் எடுத்துப் போவோம். அப்பாவிடம் ஹிந்தி படிச்ச "தங்கம்" தியேட்டர் சொந்தக் காரர் ஆன திரு கண்ணாயிரத்தில் இருந்து, கெல்லட் ஸ்கூல் பக்கம் குடி இருந்த கிறித்துவ நண்பர் (இவரும் அப்பாவிடம் ஹிந்தி படிச்சார்) வரை எல்லார் வீடுகளுக்கும் போவோம். அவங்க வீட்டிலே இருந்து எங்களுக்குக் கிறிஸ்துமஸ் பலகாரங்களும், புது வருஷப் பலகாரங்களும் வந்திருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு எனத் தனியாக ஆளை வைச்சுப் பலகாரங்கள் செய்து அனுப்புவார்கள். திரு கண்ணாயிரம் வீட்டுக்குப் போனால் அவர் அந்த வருஷம் புதுசாய் வந்திருக்கும் வெடிகளின் பார்சல் கொடுப்பார். அப்படி அறிமுகம் ஆனது தான் பாம்பு வெடி மாத்திரைகள். அதை எப்படி வெடிக்கறதுனு தெரியாம முழிச்சதும், தற்செயலாகக் கம்பி மத்தாப்புப் பொறியோ, சாட்டைப் பொறியோ பட்டு அது கிளம்பி வர ஆரம்பிச்சதும் முதலில் பயந்து, பின் தெளிந்து அதை இம்முறையில் தான் வெடிக்கணும் என்று புரிந்ததும் தனிக்கதை! இது எல்லாம் குழந்தையாக இருந்த வரை! சற்றே விவரம் தெரிந்து உயர் கல்விக்காகப் பெரிய பள்ளி போக ஆரம்பிச்சதும் வேறு மாதிரி. மூன்றே நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதில் வீட்டுப் பாடங்களை அவசரம், அவசரமாய் முடிச்சுக்கணும், வீட்டில் அம்மாவுக்கு உதவி, பின் எல்லார் வீட்டுக்கும் போகவேண்டியது என்று தீபாவளி ஒரே ஓட்டம் தான். பின்னர் வந்த நாட்களிலும்!

நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்~

Saturday, November 3, 2007

மனதில் தோன்றிய எண்ணங்கள்

வணக்கம் நன்பர்களே !!
இவ்வலைப்பூவில் அன்பர்கள் யாருமே பதிவிடவில்லை. அவரவர்கள் வலைப்பூவிலே தான் இடுகிறார்கள். இதை ஆரம்பித்ததன் நோக்கம் நிறைவேற வில்லை. ஏன் ? தெரியவில்லை. பிதாமகர்கள் கவனிப்பார்களா !!

எதோ என்னுடைய ஒரு பதிவினை மீள்பதிவு செய்கிறேன். புதுப் பதிவு போட முயற்சி செய்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------
உன்னையே நீ அறிந்து கொள் !
உன்னால் முடியும் தம்பி !!
நம்மால் முடியாதது என்று ஒன்று உண்டா என்ன ??
அகந்தையா ?
நம்முடைய பலம் என்ன ?
நம்முடைய பலவீனம் என்ன ?

பலவீனத்தை பலமாக மாற்றுவது எப்படி ?
குடும்பம்-அலுவலகம்-சமுதாயம்-சந்திக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?எததனை விதமான எண்ணங்கள் கொண்டவர்கள் ?
மாற்றுக் கருத்தை சந்திக்க மன வலிமை வேண்டும் !
மாற்றுக் கருத்தை சந்திக்க மறுக்காதே !
ஆய்ந்து பார்த்து முரண்படு !
நல்ல கருத்தெனில் நழுவாமல் ஏற்றுக்கொள் !
ஏற்கத் தக்கதல்ல எனில் தள்ளிப் போடு !
காலம் மாறினால் கருத்துகள் மாறும் !
காய் கனியாகும் ! அல்லது வெம்பிப் போகும் !
சுய சோதனை செய் ! சத்திய சோதனை செய் !
செய்வது எல்லாம் பயன் தரும் செயல்கள் தானா ?
நட்ட விதைகள் அனைத்தும் முளைப்பதில்லை !
அதனால் நடாமலேயே இருக்கலாமா ?
முயற்சிகள் தவறலாம் ! முயல்வது தவறலாமா ?
விரும்பியது கிடைக்க வில்லை ! கிடைத்ததை விரும்பலாமா ?
வேண்டியது வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை !
மற்ற நேரத்தில் கிடைத்தால் மறுக்கலாமா ?? வெறுக்கலாமா ?
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !
பலனில்லாத கடமை செய்யத்தான் வேண்டுமா ?
எல்லாக் கடமைகளுக்கும் பலன் உண்டு !
நேரிடையாக மற்றும் மறை முகமாக !
நாம் இன்று மரம் நட்டால் நாளை மற்றொருவன் அனுபவிப்பான் !அதனால் மரம் நடாமலேயே இருக்கலாமா ?
நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மால் விளைந்ததா ?
யார் நட்ட மரத்தில் யார் பழம் சாப்பிடுவது ?
நடுவதற்கே பிறந்தவர்கள் பலர் !அனுபவிப்பதற்கே பிறந்தவர்கள் சிலர் !விழுக்காடு வித்தியாசம் பார்ப்பது அழகல்ல !
நட்டுக்கொண்டே இருப்போம் !அனுபவித்துக் கொண்டே இருப்போம் !மனம் மகிழ, பிறர் மகிழ வேண்டும் !
ஒவ்வோர் அரிசியிலும் பெயர் எழுதப் பட்டிருக்கிறதாம் !
தேட வேண்டும் ! அதுவாக வாராது !
-----------------------------------------------------------------


மனதில் எழுந்த எண்ணங்களை கிறுக்கி விட்டேன்.
தொடர்புடைய எண்ணங்களா ??
தொடர்பில்லாத எண்ணங்களா ??

தெரிய வில்லை !!!!!

சுற்றிச் சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும் !

-----------------------------------------------------------------