அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
என்னுடைய சிறு வயது ( 1963-66 - வயது : 13-16) தீபாவளியை, தமிழ்ச்சங்கம் வளர்ந்த தன்னிகரில்லா மதுரையில், கொண்டாடிய மலரும் நினைவுகளை வலை உலக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தீபாவளி என்பது சிறுவர்களுக்கு மகிழ்வைத் தரும் ஒரு விழா. அன்றைய தினம் அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை உடுத்தி, சர வெடிகள் வெடித்து, பலகாரங்கள் உண்டு, கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுது, இன்பமாக இருக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும்.
எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, தமயன், தம்பியர், தங்கையர் எனப் பலரும் கூடி வாழ்ந்த ஒரு பெரிய குடும்பம். தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.எங்கள் அப்பா எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, மலை போல் குவிந்திருக்கும் புத்தாடைகளுக்கு, மஞ்சள் வைத்து, பூசை செய்து, பலகாரங்கள் படைத்து, இறை வணக்கம் செய்துவிட்டு ஒவ்வொருவராக கூப்பிட்டு புத்தாடைகள் கொடுப்பார்கள். காலில் விழுந்து வணங்கி பெருமையுடன், பொறுமையாக பெற்றுக் கொள்வோம். அவைகளை அணிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயார் ஆவோம். அப்பாவும் புத்தாடை அணிந்து, ஒரு பெரிய சரவெடியினைக் கொளுத்தி, வெடித்து கொண்டாட்டங்களை அடையாள பூர்வமாக ஆரம்பித்து வைப்பார்கள். பின் நாங்கள் அனைவரும் வெடிகளை வெடிப்போம். காலை ஆறு மணி வரை, முடிந்த வரை வெடிப்போம். பின் அனைவரும் அமர்ந்து பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டு, கோவிலுக்குச் செல்ல தயாராவோம்.
அப்பா அனைவரையும் அழைத்துக் கொண்டு ( தாயார், தாத்தா, பாட்டி நீங்கலாக) புதூரிலிருந்து சிம்மக்கல் வரை பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். பழைய சொக்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிறகு மீனாட்சி அம்மன் கோவில் செல்வோம். அங்கு, விபூதிப் பிள்ளையாரை வழிபட்டுவிட்டு, முக்குறுணிப் பிள்ளளயாருக்கு துண்டு சார்த்தி, வழி பட்டு, அம்மன் சன்னதி சென்று அர்ச்சனை செய்வோம். இப்போதிருக்கும் கூட்டமெல்லாம் அப்போது இல்லல. அனவரின் சார்பிலும், அப்பா கம்பீரமாக, அர்ச்சனை சுவாமி பெயருக்கே செய்யச் சொல்வார்கள். பிற்காலத்தில் தான் தெரிந்தது அத்தனை பேரின் பெயர்களும் நட்சத்திரங்களும் நினைவில் வைத்துக் கொள்வதின் சிரமம் கருதித்தான் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்தோம் என்பது. ஆனால் அந்தப் பழக்கம், என் குடும்பம் அளவான குடும்பமாக இருப்பினும், இன்னும் தொடர்கிறது.
அடுத்து சுவாமி சன்னதி. வெளியில் வந்து சனீஸ்வரர், அனுமார், காலைத் தூக்கி ஆனந்த நடனம் புரியும் சிவ பெருமான், அன்னை உமையவள் அனைவரையும் வழி பட்டு திரும்புவோம். நடனம் புரியும் இறைத் தம்பதிகளின் மேல் வெண்ணை சாத்துவது என்பது எல்லோருக்கும் பிடித்த ஒன்று. சிலைகளின் உயரத்திற்கும் எங்கள் உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. வெண்ணையைத் தூக்கி சிலைகளின் மீது எறிவோம். அது எங்கு வேண்டுமானாலும் இலக்கின்றி பறந்து சென்று அமர்ந்து கொள்ளும். இன்று வரை சரியாக சிலைகளின் மீது எறிந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வெண்ணை சாத்தும் பழக்கம் நிறுத்தப் பட்டு, நெய் விளக்கு ஏற்றும் பழக்கம் கடைப் பிடிக்கப் படுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் வாங்கி அனைவரும் தலைக்கு கொஞ்சமாக உண்டு மகிழ்வோம்.
பின் அங்கிருந்து கிளம்பி நகரத் திரை அரங்கு ஒன்றில் காலைக் காட்சி (10 மணிக் காட்சி) அனைவரும் பார்த்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்புவோம். முன்பதிவு என்பதெல்லாம் இல்லாத காலமது.
நினைவில் நிற்கும் திரை அரங்குகள் தங்கம் (மிகப் பெரிய அரங்கு), ரீகல் ( பகலினில் நூலகம் - இரவினில் திரை அரங்கம்), இம்பீரியல், கல்பனா, சிந்தாமணி, செண்ட்ரல், நியூ சினிமா, பரமேஸ்வரி முதலானவை. இதில் பரமேஸ்வரியில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரை இடப்படும். தீபாவளி அன்று திரைப் படம் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளுக்கு நீடித்தது.
எங்கள் அனைவருக்கும் புத்தாடை எடுப்பது என்பது ஒரு பெரிய நிகழ்வு. அப்பா, அம்மா, தமயன், நான், நால்வர் தான் செல்வோம். அக்கால ஜவுளிக் கடை - அல்ல - கடலில் ( ஹாஜிமூசா) தான் பெரும்பாலும் துணி எடுப்போம். ஆண்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி, சட்டைக்கும், அரை ட்ராயருக்கும் துணி எடுப்போம். பனியன் மற்றும் உள்ளாடைகள், பெண்களுக்கு சேலை, பாவாடை, தாவணி, மற்றும் உள்ளாடைகள் ஆகியவை வாங்குவோம்.
ஒரு மாத காலம் முன்பாகவே துணி வாங்கும் படலம் தொடங்கும். கடையில் இருந்து வீட்டிற்கு வருவதற்கு முன்னாலேயே, கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். தைத்து வந்த பிறகு தான் மற்றவர்கள் பார்க்க முடியும்.
தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.
வெடிகளும் இனிப்புப் பலகாரங்களும் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னரே அப்பா வாங்கி வருவார்கள். என்ன வாங்கி வந்தார்கள் என்பது பரம ரகசியம். தீவாவளிக்கு முந்தைய இரவு அனைவருக்கும் சமமாக வெடிகள் பிரித்துக் கொடுக்கப் படும். அவ்வெடிகளைப் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ரகசியமாக பத்திரமாக பாதுகாப்போம். ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கொள்ளை அடிப்பதும், சண்டை போடுவதும், களவு போனதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொள்வதும், பின் சமாதான உடன்படிக்கை செய்வதும் நினைக்க நினைக்க இன்பம். ஒருவரை ஒருவர் நம்ப மாட்டோம். கணக்குத் தெரியாது. யார் தீபாவளி யன்று வெடி வெடித்தாலும் அனைவருமே அவ்வெடி தன்னுடைய பங்கிலிருந்து தான் திருடப்பட்டது என்று மனப்பூர்வமாக நம்புவோம். உடனே அடி தடி சண்டை தான். பெரியவர்கள் குறுக்கிட்டு இரண்டு போடு போட்டு இருவருமே அழத் தொடங்கி அவரவர்களுக்குப் பிடித்த பெரியவர்களிடம் சென்று ஆறுதல் பெற்று, அவர்களின் பங்கிலிருந்து (???), நிவாரணம் பெற்று மகிழ்ந்ததும் அக்காலமே.
மறு நாள் அனைவருமே அம்மஞ்சள் மாறாத புத்தாடைகளை பெருமையுடன் அணிந்து, ராஜ நடை போட்டு பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று.
அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.
தீபாவளி அன்று வீட்டிற்கு வரும் உறவினர்களில் பெரியவர்கள் அனைவரின் காலிலும் விழுந்து கும்பிட்டு, ஆசிகள் பெற்று, அத்துடன் காசுகளும் பெற்றதும் உண்டு. காசுக்காகவே சும்மா சும்மா காலில் விழுவோம். பரிசுகளோ ஆசிகளோ பெரியவர்களிடம் பெறும் போது காலில் விழுந்து வணங்கும் நல்ல பழக்கம் இன்றும் தொடர்கிறது.
மலரும் நினைவுகளாக அசை போட்ட நிகழ்வுகள், திரும்ப இளமைப் பிராயத்திற்குச் செல்லும் வசதி இல்லையே என நினைக்கத் தூண்டுகிறது.
Wednesday, November 7, 2007
மலரும் தீபத்திருவிழா நினைவுகள்
Posted by cheena (சீனா) at 11/07/2007 10:57:00 PM
Labels: மலரும் நினைவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
49 Comments:
சோதனை ஒட்டம்
மாமா உங்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் சீனா சார்
தீபாவளி வாழ்த்துக்கள் சீனா சார்
நல்ல பதிவு....நன்றி.
தவிர, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
குட்டிகளா - நிலா மற்றும் பவன் - நன்றி - வாழ்த்துகள்
இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்.
//கோரிப்பாளையத்தில் கோல்டன் தையலகத்தில் தைக்கக் கொடுத்து விடுவோம். //
இதுவும் அடுத்து நீங்கள் சொல்லியிருப்பது வாசித்ததும் 'வானத்தைப் போல' படக் காட்சி நினைவுக்கு வந்தது :)
ஓலை வெடி நினைவில் இருக்கிறதா மிஸ்டர் சீனா?
தீபாவளிக்கு ஆறு படங்கள் வந்தது என்றால் அடுத்தடுத்து மூன்று நாட்களில் ஆறு படங்களையும் பார்த்து முடித்த அனுபவமெல்லாம் உண்டு.
அதெல்லாம் ஒரு காலம்!
பீம்சிங்கின் 'ப' வரிசைப் படம் போல ஒரு படம் கூட இப்பொழுது கிடையாதே:-(((((((007@gmail.com
ஹும்....அதெல்லாம் அந்தக்காலம்.....
இப்பப்பாருங்க புதுத்துணி எடுக்கணுமான்னே யோசனையா இருக்கு.
உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
ஓலை வெடி நினைவில் இருக்கிறதா மிஸ்டர் சீனா?
தீபாவளிக்கு ஆறு படங்கள் வந்தது என்றால் அடுத்தடுத்து மூன்று நாட்களில் ஆறு படங்களையும் பார்த்து முடித்த அனுபவமெல்லாம் உண்டு.
அதெல்லாம் ஒரு காலம்!
பீம்சிங்கின் 'ப' வரிசைப் படம் போல ஒரு படம் கூட இப்பொழுது கிடையாதே:-(((((((007@gmail.com
தாத்தா பெரிய ஆளு தான் மூனு நாள் ஆறு படமா...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் சீனா ஐயா. நீங்கள் சொல்லியிருக்கும் மலரும் நினைவுகளில் பெரும்பான்மை என் மலரும் நினைவுகளிலும் இருக்கின்றன. அதனால் அமெரிக்காவில் இருக்கும் இந்த நேரத்தில் அவற்றை நினைத்து மகிழ உங்களின் இந்த இடுகை வழி செய்துவிட்டது. நன்றிகள்.
எங்கள் வீட்டிலும் நான் சிறுவனாக இருந்த போது பாட்டி, பெரியப்பா குடும்பம், சித்தப்பாக்கள் குடும்பங்கள் என்று எல்லோரும் ஒரே வீட்டில் தான் வசித்தோம். அங்கு தொடங்கி துணி எடுத்தல், தைக்கக் கொடுத்தல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், பட்டாசு வெடிகளை எல்லாக் குழந்தைகளுக்கும் பங்கு போட்டுக் கொடுத்தல், புதுத் துணி உடுத்துதல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல், ஆசிகளுடன் தீபாவளிக் காசும் பெறுதல், கோவில்களுக்குச் செல்லுதல், நெருங்கிய உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லுதல், மறு நாள் பள்ளிக்கு அதே புத்தாடையை அணிந்து சென்று நண்பர்களிடம் காட்டி மகிழுதல் என்று எல்லாமும் எங்கள் வீட்டிலும் நடந்தது. சினிமா மட்டும் சிறுவயதில் சென்றதில்லை.
மிகச் சிறியவனாக இருந்த போது என் பங்கில் இருந்த பட்டாசு வெடிகளை வெடிக்கப் பயந்து வெடிக்காமல் இருந்துவிட்டு கடைசியில் சில காகிதங்களை இட்டு வீட்டு வாசலில் தீ மூட்டி எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போது என் பங்கு பட்டாசு வெடிகளைத் தூக்கி வந்து அந்தத் தீயில் எறிந்து எல்லோரிடமும் திட்டு வாங்கி ஆனால் அதே நேரத்தில் எல்லாமும் ஒரே நேரத்தில் வெடிக்கவும் ஒளி வீசவும் செய்வதைக் கண்டு மகிழ்ந்து என்று அந்த நிகழ்ச்சி மிக மிக நன்றாக நினைவிருக்கிறது. :-)
பாரதீய இளவரசன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
தருமி, நாம் எழுதும் அனைத்துமே ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான எண்ணங்களை, நிகழ்வுகளைத் தூண்டி விடுகின்றன.
எந்த ஒரு செய்தியையோ/நிகழ்வினையோ தன்னுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வுடனோ/செய்தியுடனோ ஒப்பு நோக்கி மனம் மகிழ்வது மனித இயல்பு. வருகைக்கு நன்றி
அருமை நண்பர் சுப்பையா அவர்களே !!
வருகைக்கு நன்றி
ஓலை வெடி மாத்திரமா - கேப்பு போட்டு அடிக்கும் நட்டு நினைவில் இல்லையா ? தொடர்ந்து படம் பார்த்து மனம் மகிழ்ந்த காலங்கள் இப்போது இல்லை. தினம் ஒரு படமென 10 நாள் படம் பார்த்து நாட்குறிப்பில் விமர்சனம் எழுதி - வீட்டில் உள்ள அத்தனை கண்டிப்புகளையும் மீறி - மகிழ்ந்தது அக்காலம். பீம்சிங்கின் "ப" வரிசை - அடடா - எத்தனை படங்கள்
பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, பாசமலர், பாவை விளக்கு என எத்தனை படங்கள்.
நடிகர் திலகம், மெல்லிசை மன்னர்கள், கவியரசு, டி எம் எஸ்,பீம்சிங் கூட்டணி கொடி கட்டிப் பறந்த காலமது.
துளசி,
வயது ஆக ஆக, காலங்கள் மாற மாற, பழக்கங்களும் மாறும் சூழ்நிலை உண்டாகிறது. மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது.
ம்ம்ம்
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள் - கோபாலுக்கும், ஜீக்க்கேக்கும் சொல்லுங்கள்
குட்டி பவன், தாத்தாக்கள் நாங்கள் எல்லாம் உங்களைப் போன்ற மழலைகளை விடக் கொடுத்து வைத்தவர்கள் கொட்டமடிப்பதில். இப்போதிருக்கும் கட்டுப்பாடு அப்போது இல்லை. சுதந்திரப் பறவைகள்.
வாழ்க வளமுடன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டெல்பின்
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்
குமரன்
தருமியின் மறுமொழிக்கு என்னுடைய மறு மொழி இதோ :
//
தருமி, நாம் எழுதும் அனைத்துமே ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான எண்ணங்களை, நிகழ்வுகளைத் தூண்டி விடுகின்றன.
எந்த ஒரு செய்தியையோ/நிகழ்வினையோ தன்னுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வுடனோ/செய்தியுடனோ ஒப்பு நோக்கி மனம் மகிழ்வது மனித இயல்பு. வருகைக்கு நன்றி //
இது தங்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன். ஒரு பெரிய மறு மொழியாக, சிறு சிறு செய்திகளயும் உன்னிப்பாகப் படித்து ரசித்து மகிழ்ந்து கருத்து சொல்வது என்பது எல்லோராலும் முடியாது. நேரமின்மை காரணம். ஆனால் நுனிப்புல் மேயாமல் பொறுமையுடன் படித்ததற்கு நன்றி.
அயலகத்தில் இருப்பினும் தொடர்ந்து இங்கு பங்களிப்பது மகிழ்வைத் தருகிறது.
//எந்த ஒரு செய்தியையோ/நிகழ்வினையோ தன்னுடன் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வுடனோ/செய்தியுடனோ ஒப்பு நோக்கி மனம் மகிழ்வது //
உண்மைதான் - மனம் மகிழ்ந்துகொண்டுதான் இருக்கிறது தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றிய செய்திகளை காணும் போதும்,கேட்கும்போதும்!
தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்.....!
வித்யா கலைவாணி யின் கருத்து :
//சாரோட மலரும் நினைவுகள் அந்தக் காலம் நமக்கு கொடுத்து வைக்கலையேனு ஏங்கத் தோனுது. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வித்யா.
இக்கரைக்கு அக்கரை பச்சை. இக்காலக் குழந்தைகளுக்கு உள்ள வசதி வாய்ப்புகள் எங்களுக்கு அக்காலத்தில் இல்லையே என ஏங்கியது உண்டு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன். இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.
கோவி கண்ணணின் கருத்து :
//
சீனா ஐயா,
உங்கள் அனுபவம் இனிமையாக இருக்கிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். கூடவே என் தந்தையுடன் கொண்டாடிய நினைவையும் எழுப்பிவிட்டது.
உங்களுக்கும் உங்கள் இல்லத்தினருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள். //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி கண்ணன். இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.
சீனா சார்!
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்! நண்பர் குமரன் குறிப்பிட்டிருக்கிற மாதிரி, சினிமாப் படம் பார்த்ததைத் தவிர்த்து உங்களது மலரும் நினைவுகள் அத்தனையும் எங்கள் வீட்டிலும் டிட்டோ.
பெரிய இழப்பு, நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கூட்டுக்குடும்ப வாழ்க்கைதான்..ம்..தேவையின் அடிப்படையில், மறுபடிபடியும் அப்படிப்பட்ட அந்த சேர்ந்து வாழும் வாழ்க்கை வரும் என்று நினைக்கிறேன். வர, பிரார்த்திப்போம்.
அப்புறம், 'பாவை விளக்கு' மட்டும் 'ப' வரிசைப்படமே தவிர,பீம்சிங் படம் அல்ல. அப்படித்தான் நினைவு.
நான் இப்பொழுது அமெரிக்காவில் இருப்பதால், எங்களுகெலாம் நாளை காலை தான் தீபாவளி. சரியான குளிர் காற்று வீசுகிறது. தீபாவளி ஆச்சே?..அதெல்லாம் பார்த்தா, முடியுமா?
நினைவுகளைக் கிளறியதற்கு, மிக்க நன்றி, சார்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவி.
நாளை தீபத்திருநாளை மகிழ்வுடன் கொண்டாடுங்கள். வாழ்த்துகள். பாவை விளக்கு இல்லை எனச் சொன்னேன். எனது மறு பாதி ரைமிங்கா போடுங்க - யாராச்சும் கண்டு பிடிக்கட்டும் எனச் சொன்னார். அதன் விளைவு - ஞாபக மறதி இருவருக்குமே. என் செய்வது. தேவையின் அடிப்படையில் கூட்டுக் குடும்பங்கள் உருவானால் நன்றாகத் தானிருக்கும்.
@சீனா, அதுக்குள்ளே போஸ்ட் போட்டு இத்தனை கமெண்டும் வந்துடுச்சா? தீபாவளி வாழ்த்துக்கள் சார், உங்களுக்கும், உங்க குடும்பத்துக்கும், நல்ல நினைவோட்டம். பல நினைவுகளைக் கிளறுகிறது. நன்றி..
ஆகா கீதா - வாழ்க்கையிலே மொதமொதலா ஒரு உருப்படியான மறு மொழி - நன்றி
அப்புறம் சொல்லுங்க - தீவுளி எப்டி இருக்கு ?
வாழ்த்துக்கள் சீனா.
ஹிஹிஹிஹி சீனா, நீங்களும் "பெனாத்தல்"க்கு சிஷ்யர் போலிருக்கு, அவரும் நம்ம பின்னூட்டத்தை இப்படித் தான் சொல்லுவார், கூடவே புரியலைனும்! :P :P
கீதா - நான் புரியலேன்னு சொல்லலீயே - பினாத்தல் மறுமொழிகளைப் படிச்சிட்டு சொல்றேன் - நான் அவருக்கு சிஷ்யனான்னு
சீனா வாழ்த்துக்கள்!
நல்ல பதிவு
இங்கு தீபாவளி வர்றதும் தெரியாது போறது தெரியாம இருக்கு. ஏனென்றா அண்டைக்கு வேலைக்குபோகவேணும்லையா....ம்ஹு... அதை எங்கை நினைக்க?
சீனா சார்!
சொன்னபடி, மறக்கமுடியாத மதுரை நினைவுகளை எழுதி விட்டேன். வந்து பார்த்து தங்கள்் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்.
ஜீவி
சீனா ஐயா,
//பள்ளிக்குச் சென்று நண்பர்களுக்குக் காண்பித்து, ஒப்பு நோக்கி, உயர்வு தாழ்வு கண்டு, மகிழ்ந்தது தற்கால மழலையர் முதல் இளஞர் வரை இழந்த ஒன்று.//
பொறாமை கொள்ள வைக்கும் பதிவு. உங்கள் அனுபவங்கள் அத்தனையும் எனக்கும் உண்டு, ரொம்ப பெரிய குடும்பம் எல்லாம் இல்லை, மற்றபடி எல்லாமே அதே அதே. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி செல்லி
ஜீவி, என்னை சார் என அழைக்க வேண்டாம். சீனா Just சீனா - போதுமே
தங்களின் அருமையான மல்ரும் நினைவுகளைப் படித்தென் - பின்னூட்டமிட்டேன்.
மறுபடி வருகிறேன். நன்றி
சதங்கா, வருக்கைக்கும் மறு மொழிக்கும் நன்றி. மலரும் னினைவுகள் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நினப்பதற்கு நேரம் வேண்டும்.அவ்வளவு தான்.
ஈழத்தில் நாங்களும் தீபாவளியை மிக மகிழ்வாக வரவேற்றோம். தற்போது ஈழத்தில் விமானங்கள் குண்டு வீசி வெடியொலி எழுப்புவதால், குழந்தைகள் பதுங்கு குழிகளில்தான் தீபாவளியைக் கொண்டாட முடிகிறது.
உங்கள் நினைவுகள் மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் உருவாக்கிவிட்டது.
ஒரு ஈழத் தமிழன்
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஈழத் தமிழன் - சீக்க்கிரமே தீபாவளி மகிழ்வாக கொண்டாட வாழ்த்துகள்
/தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்./
I loved this. How innocent times it must had been?
Rumya
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரும்யா
உங்க பெஸ்ட் கண்ணா பெஸ்ட் பதிவைப் பார்த்து இங்கே வந்தே. மலரும் நினைவுகளோ. :-)
//தீபாவளி அன்று மட்டும் தான் அத்துணிகள் அவரவர்க்குச் சொந்தம். பிறகு எந்தத் துணி யாருடையது என்று யாருக்குமெ தெரியாது. பொதுவாக அனைத்துமே ஒரே அளவில் தான் இருக்கும். யார் வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் போட்டுக் கொள்ளலாம்.
//
என் தோழியின் தந்தை சொன்ன கதையும் இதே. சுவாரசியமாக அவர் சொன்ன கதைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்தது இவ்வாசகம். :-) நன்றிங்க சீனா.
//அக்காலத்தில், விழாக்களின் கொண்டாட்டங்கள், அதனால் விளையும் மகிழ்ச்சிகள், குதூகலமாக, கூட்டமாக திரைப் படம் பார்த்தது, ஒன்றாக உண்டது, ஒன்றாக விளையாடியது, ஒன்றாக உறங்கியது, அனைத்துமே இக்காலத்தின் கட்டாயத்தில் இழந்த நட்டங்கள்.//
ஆமா சார். இப்போதேல்லாம் பண்டிகைகள் எல்லாம் நாட்காட்டியில் வந்துவிட்டனவே என்பதற்காகத்தான் கொண்டாடப்படுகின்றன. அதுவும் சின்னத்திரையில்தான் கொண்டாடுகிறார்கள்..
ரூபஸ், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - கால மாற்றங்களினால் பல வற்றை நாம் பெற்றிருக்கிறோம் / இழந்திருக்கிறோம்.
நன்றி காட்டாறு - இது எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வு தான்.
ஆகா. படிக்கலைன்னு நினைச்சேன். படிச்சிருக்கேன். நீங்க எழுதி நான் மறுமொழி இடாதது இன்னும் ஏதாவது இருந்தா சொல்லிடுங்க ஐயா. :-)
குமரன், நீங்க படிக்காதது எதுவும் இருக்கா என்ன்ன ?? உங்க சப்போர்ர்ட்டிவ் ரோல் எனக்கு ரொம்ப பிடிக்கும். யாராச்சும் மறு மொழிலே எனக்கு வருத்தம் வர மாடிரி எழுதிட்டா உடனேஎ சப்போர்ட் பண்ணி ஒரு மறு மொழி போட்டுடுவீங்களே - மிக்க நன்றி
சீனா, குமரன்
(//யாராச்சும் மறு மொழிலே எனக்கு வருத்தம் வர மாடிரி எழுதிட்டா உடனேஎ சப்போர்ட் பண்ணி ஒரு மறு மொழி போட்டுடுவீங்களே//)
ஓ! உங்களுக்குள்ள இப்படி ஒரு understanding இருக்கா? எனக்குத்தான் அப்படியெல்லாம் குமரன் பண்றதேயில்லை :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!
தருமி ஐயா. வேற ஒன்னுமில்லை. நாம எல்லாம் யாராவது எழுதுனது வருத்தம் தருதுன்னா உடனே நேரடியா அதைச் சொல்லிடறோம் இல்லை. சீனா ஐயா அப்படி நேரடியா சொல்லாம நாசூக்கா சொல்லியிருப்பாரு. அப்ப நான் போய் அதை நேரடியா சொல்லி ஏம்ப்பா இப்படி எல்லாம் எழுதுறீங்கன்னு கேப்பேன். அம்புட்டுத் தான்.
இத்தனைக்கும் ஒரே ஒரு தடவை தான் அப்படி நடந்ததா எனக்கு நினைவு. ஐயா எனக்கு உடனே சப்போர்ட்டிங்க் ரோலே குடுத்துட்டாரு. :-)
தருமி, குமரன் செய்யும் உதவி பற்றிச் சொன்னேன் - அவ்வளவுதான். உடன்படிக்கை, ஒப்பந்தம் எல்லாம் ஒன்றும் இல்லை. இது வரை 3 முறை உதவியதாக நினைவு. நான் மனம் வருந்தும் படி இது வரை யாரும் பெரிதாக ஒன்றும் மறு மொழி எழுத வில்லை.
Post a Comment