Sunday, November 11, 2007

சிலேட்டுக்குச்சி கிடைக்காமல் அழுதேன்.

அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில் இருந்தாலும் 2 வது படிக்கும்போது வகுப்பு மாற்றிக் கொண்டதால் "பி" வகுப்புக்குப் போய் விட்டேன். நான் ஃபெயில் ஆகிவிட்டேன் என்று "பி"யில் மாற்றி விட்டார்கள் என என்னைச் சக நண்பிகள் கேலி செய்து என்னை அழ வைப்பார்கள் எனச் சொல்லுவார்கள். 2-ம் வகுப்பு "ஏ"பிரிவின் ஆசிரியை பேரு சமாதானம் டீச்சர், அவங்க, ரொம்பச் சின்னப் பொண்ணு, ஒண்ணும் விவரம் தெரியலை, அதுக்குள்ளே பள்ளிக்கு வந்துட்டாளேன்னு சொல்லுவாங்களாம். என்றாலும் எனக்கு என்னமோ அந்த டீச்சரைப் பிடிக்காது. மூணாம் வகுப்பிலே இருந்தவர் ஆசிரியர், பெயர் சுந்தர வாத்தியார். அவருக்கு என்னமோ என்னைப் பார்த்தாலே கோபம் வரும். அதுக்கு ஏற்றாப் போல் நானும் அநேகமாய்ப் பள்ளிக்குத் தாமதமாய் வந்து சேருவேன். அப்பாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். பட்டாசுப் பங்குகள் போடுவது போல் அப்பா அப்போது எழுதுவதற்கு உபயோகிக்கப் பட்ட சிலேட்டுக்குச்சியையும் பங்கு போட்டுத் தான் தருவார். முதல் வகுப்பில் படிக்கும்போது அவ்வளவாய் ஒண்ணும் புரியாததால் கொடுக்கிறதை வாங்கி வருவேன்.

அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்த பெண்கள், பையன்கள் கலர்குச்சியை வைத்துக் கொண்டு கலர் கலராய் எழுத முயல, மற்ற சிலர் கெட்டியான செங்கல் குச்சியையும் மாக்குச்சியையும் வைத்துக் கொண்டு எழுத, நான் கறுப்புக் குச்சியால் எழுதுவேன். எழுத்து என்னமோ வந்தது என்றாலும், கூடவே அழுகையும். கலர், கலராய் எழுதாட்டாலும் குறைந்த பட்சம் செங்கல் குச்சியாலாவது எழுதணும்னு ஆசையா இருக்கும், ஆனால் அப்பாவிடம் அது நடக்காது. ஒரு குச்சியை மூன்று பாகம் ஆக்குவார் அப்பா. ஒரு பாகம் எனக்கு, ஒரு பாகம் அண்ணாவுக்கு, ஒரு பாகம் குழந்ததயான என் தம்பிக்கு என. தம்பியின் பாகம் அவரிடம் போக, பெரிய வகுப்பு வந்திருந்த அண்ணாவுக்கோ குச்சியின் உபயோகம் அவ்வளவாய் இல்லாததால் கவலைப்படாமல் பென்சில் எடுத்துக் கொண்டு போக, நான் முழுக்குச்சிக்கு அழுவேன். கடைசியில் எதுவும் நடக்காமல், அதே குச்சியை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன் தாமதாமாய். இல்லாவிட்டால் பள்ளி நாளையில் இருந்து கிடையாது என்பதே அப்பாவின் கடைசி ஆயுதம். அது என்னமோ கணக்கு என்னைப் பயமுறுத்தினாலும் பள்ளிக்குச் செல்வதை நான் விட மாட்டேன். வீட்டை விடப் பள்ளியே எனக்குச் சொர்க்கமாய் இருந்ததோ என்னமோ!!!

இவ்வாறு தாமதமாய் வந்த என்னை ஒருநாள் ஆசிரியர் மிகவும் மிரட்ட நான் பயந்து அலற, அவர் என்னைப் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போகக் கூடாது எனச் சொல்லி, அங்கேயே வைத்துப் பூட்ட, பயந்த நான் அங்கேயே இயற்கை உபாதையைக் கழித்து விட்டு, மயக்கம் போட்டு விழ, பின் வந்த நாட்களில் மூன்று மாதம் பள்ளிக்குப் போக முடியாமல் ஜூரம் வந்து படுத்தேன். முக்கியப் பாடங்களை என் சிநேகிதியின் நோட்டை வாங்கி அம்மா எழுதி வைப்பார். மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார், என்றாலும் என்னைக் காணும்போதே அவர் கூப்பிட்டுத் திட்டி அனுப்புவார். இது ஆரம்பப் பள்ளி நாட்களில் ஆசிரியர் மூலம் நான் முதன் முதல் உணர்ந்த ஒரு கசப்பான அனுபவம். என்றாலும் அதே பள்ளியில் நான் தொடர்ந்து படித்தேன், பின்னர் வந்த நாட்களில் குறிப்பிடத் தக்க மதிப்பெண்களும் பெற்றேன். இதற்கு நடுவில் வீட்டில் இருந்த மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது வீட்டில் ஆனந்தவிகடன் மட்டும் வாங்குவார்கள். என்றாலும் அப்பாவின் பள்ளி நூலகத்தில் இல்லாத புத்தகங்களே கிடையாது. அங்கிருந்து புத்தகம் எடுத்து வரும் அப்பாவைக் கேட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

அதற்கு முன்னால் நான் படிச்சது, என்றால் ஆனந்தவிகடனில் சித்திரத் தொடராக வந்த "டாக்டர் கீதா" என்ற கதையும், துப்பறியும் சாம்புவும் தான். டாக்டர் கீதா தொடரில் சுபாஷ்சந்திரபோஸின், வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் இருக்கும்,இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பற்றிய கதை அது. எங்க வீட்டிலும் தாயம் விளையாடினால் கூட சுபாஷின் "டெல்லி சலோ" என்ற வாக்கியத்தை வைத்து விளையாடிச் செங் கோட்டையைப் பிடிக்கும் விளையாட்டே அதிகம் விரும்பி விளையாடப் படும். தாத்தா வழியில் (அம்மாவின் சித்தப்பா, பலமுறை சுதந்திரத்துக்குச் சிறை சென்றார், கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை) அப்பாவும் காந்தியின் பக்தர், ஆகவே வீட்டில் எப்போதும் ராட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும், அண்ணாவும் தக்ளியில் நூல் நூற்றுக் கொடுக்க, அப்பாவோ, அம்மாவோ கைராட்டையில் "சிட்டம்" போட்டு கதர் நூல் சிட்டம் தயாரித்து, கதர்க்கடையில் கொண்டு கொடுப்பார்கள். அந்தச் சிட்டத்தின் விலைக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் கதர் வேஷ்டி தான் அப்பா கட்டிக் கொள்ளுவார். அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.

நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், படிப்பை சுதந்திரப் போராட்டம் காரணமாய் விட்ட அப்பா, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்தபின்னர்தான் திருமணம் என்றும் இருந்து, அதன் பின்னரே திருமணமும் செய்து கொண்டார். காந்தி இறந்த தினம் முழுதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காந்திக்காக ஒரு முறை மட்டுமே உணவு கொண்டு விரதம் இருந்திருக்கிறார். அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆகும் வரை இது தொடர்ந்தது. எனக்குத் தெரிந்து என்னோட பதினைந்து வயசு மட்டும் வீட்டில் கைராட்டை சுழன்றிருக்கிறது. என் அம்மாவுக்கு முடியாமல் போய் கைராட்டையில் உட்கார்ந்து நூற்க முடியாத காரணத்தாலும், (நிஜலிங்கப்பா பீரியட்?) காங்கிரஸும் முதல் முறையாக உடைந்ததும், அப்பாவும் கதரை விட்டார். அந்தக் கைராட்டையை விற்கும்போது என்னுடைய அம்மா அழுதது இன்னும் என் நினைவில் மங்காத சித்திரமாய் இருக்கிறது.

22 Comments:

ஜீவி said...

//அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும்.//
நான் பெரும்பாலும் செங்கல் அல்லது கலர் தான்.

மொத்தையாய்,பளிச்சென்று தெரிந்தாலும் அழிக்கும் போது சிரமமாய் இருக்கும் என்று தனியே ஒரு டப்பாவில் ஈரத்துணி போட்டு எடுத்துச்செல்வேன்.

பெரும்பாலும் எல்லா வீடுகளிலும்,அதுஎன்னவோ உடைத்துத்தான் தந்திருக்கிறார்கள். கடைசியில் குச்சி தீர்ந்து புழுக்கையாய் ஆகும் பொழுது 'ச்சீ'போன்னு தூக்கி எறிந்து விடுவேன்.

பிற்காலத்தில் "எழுதுகோல் தெய்வம்; அந்த எழுத்தும் தெய்வம்"என்்று பாரதி சொல்லிப ்புரிந்ததும், மனசில் மரியாதை மிகவும் கூடிப்போனது.

ஜீவி said...

//அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.//

அப்படியா?..நூல் நிலையத்தில், நூல் வாங்கி திரு.வை.சங்கரனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.

cheena (சீனா) said...

கீதா - குச்சி முழுசா எந்த அப்பா அம்மாவும் கொடுத்ததா சரித்திரமே இல்ல. அஞ்சாம் கிலாஸ் வரைக்கும் சிலேட்டையும் குச்சியையும் நம்பியே ஒட்டினோமே !! அக்கால மகிழ்ச்சி இப்போதுள்ள மழலைகளுக்குக் கிடைக்காது. பென்சில் - பேனா - கிரேயான்ஸ் - ஸ்கெட்ச் பென் - நோட்ட்டு - ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

I really enjoyed reading this post.So many wonderful memories for you. Thank you for sharing your memories.

Radha

இலவசக்கொத்தனார் said...

குச்சின்னா என்ன? :)))

(கீதாம்மா சும்மா டமாஸு, நாங்களும் முழு குச்சிக்கு அழுதுருக்கோமில்ல!!)

துளசி கோபால் said...

தக்(கா)ளின்னு கடையில் கேட்டு, கடைக்காரர் என்னை மார்கெட்டுக்கு அனுப்புனது தனிக்கதை:-))))

ஆமா.....இப்ப தக்கிளி கிடைக்குதா?

ஆரம்பம் அருமையா இருக்குங்க கீதா.

துளசி கோபால் said...

நாங்க பலப்பமுன்னு சொல்வோம்:-)))

பாச மலர் / Paasa Malar said...

சின்ன வகுப்பில் குச்சி எழ்த் மட்டுமில்லாமல் உடைத்துத் தின்னவும் பயன்படுத்தி அடி வாங்கியது நினைவுக்கு வருகிறது...ரொம்ப அனுபவிக்குமுன்னெ பென்சில் வந்துவிட்டது...மலரும் நினைவுகள் கிளறி விட்டது உங்கள் பதிவு...(நானும் நம்ம ஊர்தான்)

Geetha Sambasivam said...

ரொம்ப நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன். ஜீவி ஐயா, உங்கள் பகிர்வுகளுக்கு என் நன்றி. அந்தக் காலத்தில் எல்லாப் பெற்றோரும் இப்படித்தான் போலிருக்கு!!!! :D
ஆம், பலமுறை திரு ராமமூர்த்தி, வண்டியை நிறுத்தி விசாரித்துவிட்டுப் போவார். உண்மையிலேயே பெரிய மனிதர்!!!!!

Geetha Sambasivam said...

@சீனா, நீங்களும் நம்மளை மாதிரித் தானா? ஹிஹிஹி, உங்களைத் "தாத்தா"னு சொல்லணும்போலிருக்கே??? அங்கே ஒரு பட்டிமன்றமே நடக்குது? :))))))))

வாங்க ராதா, இந்த வலைப்பக்கம் அனானியோட கமெண்ட்ஸை அனுமதிக்குது, அதான், உங்க கருத்துக்கு நன்றி.

Geetha Sambasivam said...

இ.கொ. குச்சினா அடிக்கிற குச்சி தான், நீங்க வாங்கினீங்களே படிக்கும்போது உங்க டீச்சர் கிட்டே!!! :P :P

@துளசி, ஆரம்பமா? சரியாப் போச்சு, போங்க, 2 அல்லது 3 எழுதியாச்சுங்கோவ், நீங்க ரொம்ப லேட்!!!!!!! ம்ம்ம்ம் சென்னையில் "பல்பம்"னு சொல்லுவாங்க, ஆனால் நீங்க வத்தலக்குண்டு ஆச்சே? அங்கே கூடவா??? ம்ம்ம்ம்????

வாங்க, வாங்க பாசமலர், உங்க பதிவுக்கெல்லாம் வந்து பார்ப்பேன், நீங்க வந்து கருத்துச் சொன்னதுக்கு ரொம்ப நன்றி. அதென்னங்க, எல்லா அப்பா, அம்மாவும் எழுதக் கூட முழுக்குச்சி தராமல் இப்படி கஞ்சூஸா இருந்திருக்காங்க?????

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. அந்த வாத்தியார் ரொம்ப தான் உங்களை கொடுமைபடுத்தியிருக்கிறார் போல. இந்த ஊருல எல்லாம் வாத்தியார் அப்படி நடந்துக்கிட்டா கம்பி எண்ண வேண்டியது தான். அம்மா அப்பாவே அப்படி நடந்து கொள்ள முடியாது.

நான் ரெண்டாப்பு வரை குச்சி தான் பயன்படுத்தினேன். அதற்குப் பின்னர் அஞ்சாப்பு வரை பென்சில். மேல்நிலைப்பள்ளி சென்ற பின் தான் பேனா (மை பேனா) வாங்கிக் கொடுத்தார்கள். பேனாவில் எழுதத் தொடங்கியவுடன் பெரிய ஆள் ஆன மாதிரி உணர்ந்தது நன்கு நினைவில் இருக்கிறது. இப்ப என் பொண்ணு பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னாடியே சாக்பீஸ், பென்சில், பேனா, ஸ்கெட்ச் என்று எல்லாமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள். அதுவும் விதவிதமான வண்ணங்களில்.

கணினியை நான் தொட்டது கல்லூரி வந்த பின் தான். அவள் இப்போதே கணினியில் யூ ட்யூப், கேம்ஸ் என்று விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

காலமாற்றம்! அவளிடம் உங்கள் கதையையும் என் கதையையும் சொன்னால் நம்பப் போவதில்லை என்று நினைக்கிறேன். :-)

பாச மலர் / Paasa Malar said...

கீதா,

மதுரைப் பதிவர் குழுமத்தில் சேரும் முறை தெரிவிக்கும்படி சீனா சாருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்..நீங்களும் உதவுங்களேன்..

Geetha Sambasivam said...

பாசமலர், ராமிடம் சொல்லி இருக்கேன், உங்க மின்னஞ்சல் தெரியாததால் தொடர்பு கொள்ள முடியலை, அவர் தேவையானது செய்வார். நல்வரவு, வாழ்த்துக்கள்.

@குமரன், ஆசிரியர் கொடுமை என்பது இங்கே இப்போதும் உள்ளதே? என்ன செய்வது?

SALAI JAYARAMAN said...

குச்சியுடன் ஆரம்பிச்சீங்க, சிலேட்டை விட்டுட்டீங்களே. ஆதிமூலம் பிள்ளை அக்ரஹார ஸ்கூல் கிட்ட செட்டியார் கடை நாராயணனை கண்டிப்பா நினைவு கூறணும். குழந்தைகளுக்கு புதுச்சட்டம் போட்ட கறுப்பு
சிலேட்டை ஆசை காட்டி தினம் உடைக்க விட்ட வியாபார உத்திதான் அந்தக் கால அம்மா அப்பாமார்களுக்கு யுத்தம் செய்யக் கிடைக்கும் துருப்பு சப்ஜெக்ட். நாராயணணன ஒரு பிடி பிடிக்காத அப்பாமார்கள் மிகக் குறைவு.

பிள்ளைகளும் நிதம் ஒரு சிலேட்டை உடைத்து, வீட்டிலே அழுது அடம்பிடித்து அடி வாங்கி புது சிலேட்டுக்கு அடி போடறது. புது சிலேட்டு வாங்கித்தரும் நேரம் பார்த்து அக்கா வில்லியா வந்து போட்டி போட்டு தனக்கும் புது சிலேட்டுக்கு அடி போட்டு பின் அடி வாங்குவது நல்ல சீன். கல் சிலேட்டுபோய் அட்டையால செய்த புது சிலேட்டு வந்தது. அதுக்கு பள்ளிப் பிள்ளைகள் மத்தியிலே பாப்புலாரிட்டி குறைவு. ஏன்னா உடைக்க முடியாதே.

சுடுகாட்டுப் பக்கம் போய் ஊமத்தங்காய் பறித்து வந்து கரி சேர்த்து அறைத்து சிலேட்டிலே போட்டுகாயவைத்து, ஒரு புது கறுப்பு நிறத்தில் மாக்குச்சி வைத்து எழுதும் போது பளிச்சினு தெரியுமே. ஆகா என்ன ஒரு பூரிப்பு. கிடைக்குமா அந்தப் பொற்காலம்.

நவீன யுக குழந்தைகள் இதையெல்லாம் தொலைத்து விட்டு மூட்டை புத்தகப்பையோடே ஆட்டோவிலும், கால் டாக்ஸியிலும் ஸ்கூலுக்குச் சென்று மாலை விளையாட்டை மூட்டை கட்டிவிட்டு படிப்பு டான்ஸ், டியூஷன், என காலத்தை தொலைத்து வரும் இன்றைய குழந்தைகளின் புது உலகம், நேயத்தை இழந்து, சுயநலத்தில் ஊறி, போட்டிகளால் ஸ்வீகரிகக்கப்பட்டு இந்த மாறுதலுக்கு நாம் தானே காரணம். எளிமையும் அன்பையும் கற்றுத்தர மறந்தோம்.

அப்பாவின் 150 ரூபாய் சம்பளத்தில் 7 பேர் சாப்பிட்டு, ஒண்டுக் குடித்தனத்தில் 22 குடியிருப்புகளில் ஒன்றாக வேடிக்கை, விளையாட்டு, கதை, 40 பைசா டிக்கட்டில் எம்.ஜி.ஆர், சிவாஜி படம். ரசிகர் மன்ற போட்டிகள். எங்கு திரும்பினும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் தான்.

பெரிய குடும்பத்தில் பிறப்பதற்கு குடுப்பினை வேண்டும். கல் சட்டி சாதத்திற்கு போட்டி போட்டு பத்தியும்
பத்தாமலும் அம்மா தரும் பழைய சாதத்திற்கு நல்லெண்ணையும் கடுகு தாளித்தலும் பண்ணி பழைய
கீரையை வைத்து போட்டி போட்டு சாப்பிட்டதில் மிகவும் புஷ்டியாகத் தானே வளர்ந்தோம். ஒரு நோயுண்டா, டாக்டருண்டா. 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காத அமுதமாச்சே.

எலி வளையைப் போல் ஒரு தனி வளை கட்டிக்கொண்டு சுயநலத்தால் சொந்த பந்தங்களை தவிர்த்து,
உறவுகளே அற்ற வேலைக்குப் போன அம்மாவும் அப்பாவும் திரும்பி வீட்டிற்கு வருவதை ஏக்கங்கொண்டு
எதிர்நோக்கி இருக்கும் இக்கால குழந்தைகள் உண்மையில் மிகவும் துரதிருஷ்டசாலிகள்தான். இதிலும்
நகர்ப்புற வாழ் குழந்தைகள் பாடு இன்னும் திண்டாட்டம்தான்.

இத்துடன் போதும். தனியாக ஒரு பதிவு போட வேண்டிய விஷயத்தை இங்கே இப்படி போட்டு உங்களை
பிளேடு போட்டதற்கு மன்னிக்கவும்.


my mail ID :
1) salaisjr@yahoo.co.in
2) salaisjr@gmail.com
3) salaisjr@sancharnet.in

தங்கள் மதுரைப் பதிவில் எனக்கு அழைப்பு தந்தமைக்கு நன்றி. எப்படி பதிவு செய்யவேண்டும். பிளாக்குகளை
அழகுற அமைப்பதற்கு என்ன செய்யவேண்டும். பதில் எழுதுவது சுலபமாக உள்ளது ஏனெனில் நோட் பேடில் டைப்படித்து வைத்துக் கொண்டு அதை அப்படியே "Leave your Comments" பேஸ்ட் செய்வது எளிமையாக உள்ளது. ஆனால் அதையே பிளாக்குகளில் அமைத்தால் இடப் பற்றாகுறை காரணமாக எழுத்துக்கள் பாதி தெரிந்தும் தெரியாமலும் இருக்கிறது. இதுவரை மூன்று முறை முயற்சி செய்து விட்டேன்.

நீண்டநாட்களுக்குப் பிறகு இவ்வாறு தமிழில் எழுதுவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. சொந்தங்களுக்கு இடையே கூட ஆங்கில மோகம் அதிகமாக இருப்பதால், தற்காலத்தில் கடிதங்களுக்கு வேலையே இல்லை. ஆனால் முகம் தெரியாத நண்பர்களுடன் தமிழ் மூலம் எழுத்தில் தொடர்பு கொள்ளவது மிகவும் மகிழ்வைத்தருகிறது.

அனைத்து மதுரை நண்பர்களையும் உடன் தொடர்பு கொள்ள ஆவலாய் உள்ளேன். அனைவரது மெயில்
முகவரி தரவேண்டும்.

நன்றியுடன். சாலை ஜெயராமன்,

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
நாங்க பலப்பமுன்னு சொல்வோம்:-)))
//

டீச்சர்...நாங்களும் அப்படியே!

//மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார்//

தலைவி, அப்பவே இன்ப்ளுயன்ஸ் எல்லாம் யூஸ் பண்ணிருக்காங்க டோய்!
விளையும் பயிர் (குச்சி) முளையிலே தெரியும்! :-)))

தருமி said...

ம்ஹூம்... நீங்கல்லாம் "B" செக்ஷன் தானா...? ப்..ப்பூ ..
நாங்கல்லாம் 'ஒண்ணாப்புல' இருந்து S.S.L.C. வரைக்கும் "A" செக்ஷன் தெரியுமில்ல.. காலரைத் தூக்கி விட்டுக்கவுமில்ல ...

Unknown said...

ம்ம்ம்...நீங்களும் பி செக்சனா?? எனக்கும் அந்த மாதிரி ஒரு நினைப்பு (ஏ தான் பெருசுன்னு) ரொம்ப நாளா இருந்துச்சு!

எங்களோட பள்ளியில, குச்சி திங்கும் ஒரு கூட்டமே இருந்துச்சு! சரி, குச்சி பத்தி சொன்னீங்க. சிலேட்ட அழிக்க நாங்கல்லாம், கோவை இலை வச்சு தேச்சுருக்கோமில்ல :) ஒரு 'கோவல' கட்டு அஞ்சு காசு வெல!! செல பேரு எச்சி துப்பி அழிப்பாங்க...யீ.....வ் யக்கி :)

/அப்பாவின் 150 ரூபாய் சம்பளத்தில் 7 பேர் சாப்பிட்டு, ஒண்டுக் குடித்தனத்தில் 22 குடியிருப்புகளில் ஒன்றாக வேடிக்கை, விளையாட்டு, கதை, 40 பைசா டிக்கட்டில் எம்.ஜி.ஆர், சிவாஜி படம். ரசிகர் மன்ற போட்டிகள். எங்கு திரும்பினும் சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷம் தான்.

பெரிய குடும்பத்தில் பிறப்பதற்கு குடுப்பினை வேண்டும். கல் சட்டி சாதத்திற்கு போட்டி போட்டு பத்தியும்
பத்தாமலும் அம்மா தரும் பழைய சாதத்திற்கு நல்லெண்ணையும் கடுகு தாளித்தலும் பண்ணி பழைய
கீரையை வைத்து போட்டி போட்டு சாப்பிட்டதில் மிகவும் புஷ்டியாகத் தானே வளர்ந்தோம். ஒரு நோயுண்டா, டாக்டருண்டா. 5 ஸ்டார் ஹோட்டலிலும் கிடைக்காத அமுதமாச்சே.

எலி வளையைப் போல் ஒரு தனி வளை கட்டிக்கொண்டு சுயநலத்தால் சொந்த பந்தங்களை தவிர்த்து,
உறவுகளே அற்ற வேலைக்குப் போன அம்மாவும் அப்பாவும் திரும்பி வீட்டிற்கு வருவதை ஏக்கங்கொண்டு
எதிர்நோக்கி இருக்கும் இக்கால குழந்தைகள் உண்மையில் மிகவும் துரதிருஷ்டசாலிகள்தான். இதிலும்
நகர்ப்புற வாழ் குழந்தைகள் பாடு இன்னும் திண்டாட்டம்தான்.
/

திரு. சாலை ஜெயராமன் --- சத்தியமான வார்த்தைகள்!

pudugaithendral said...

குச்சி மத்திரமா ஞாபகம் வருது,

கலர் குச்சி, கல்லு குச்சி, மாவு குச்சி.

கல்லு சிலேட்டு, எனாமல் சிலேட்டு.

ஒவ்வொரு வருஷமும் அதிக மதிப்பெண்களுக்காக பள்ளிக்கூடத்திலேயே கல்லு சிலேட்டு பரிசாக கிடைத்ததால், எனமால் சிலேட்டு கிடைக்காமலே போனது.
அதற்காக 5ஆம் வகுப்பு முடியும் வரை நானும் அழுதிருக்கிறேன்

பழைய ஞாபகங்களை கிள்றிவிட்டது.

Anonymous said...

கீதாம்மா,
பலப்ப விவகாரம் எழுதிய அதே நீங்களா சாலை ஜெயராமனின் பகிர்வுகளுக்கு பதில் எழுதியது.அபாரம்.நதியின் பெயர்தான் வேறு,வேறு,எல்லாமே கடல் தேடிதான் ஓடுகிறது.மிக அழகாக சொல்லி விட்ட£ர்கள்.அதில் தங்களின் விரிவான வாசிப்பு அநுபவமும் வெளித் தெரிந்தது.
மதுரக்காரய்ங்க கொள்ளைப்பேர் வந்துட்டய்ங்க.நானு,வடக்கு வெளி வீதிங்க.
அன்புடன்,
சீனிவாசன்.

manjoorraja said...

இனிய பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீர்கள். நான் நிறைய சிலேட்டுகள் உடைத்திருக்கிறேன். அதே போல சட்டையால் எழுதியதை அழித்து அழித்து எப்பொழுதும் அழுக்கு சட்டையாக இருக்கும்.

அது ஒரு இனிய சுவையான மலரும் நினைவுகள்.

நன்றி.

Unknown said...

அருமையான சுகமான நினைவுகள்.