நா ன் ஒட்டு மொத்த மருதை மாவட்டத்திற்கோ அல்லது மருதவாழ் மக்களுக்கோ representative அல்லது அதிகாரபூர்வ spokesperson கிடையாது.மீனாட்சி கோவில் குறித்தான வரலாற்றை ஆய்வு செய்ய, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நியமித்த ஒரு ஆய்வு அறிஞரும் கிடையாது. உலகில் பல விசயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம் சில நேரங்களில் அவற்றிற்கு எதிவினையாற்றுகிறோம் அல்லது அது பற்றி மேலும் ஆராய முயற்சி செய்கிறோம்.எதை விமர்சிக்கிறோம் அல்லது எதை கேள்வி கேட்கிறோம் என்பது , அந்த செய்தி அல்லது நிகழ்வு , நம்முள் எற்படுத்தும் தாக்கத்தை பொருத்து இருக்கும். அது ஒருவருக்கொருவர் மாறுபடும். பெண்ணின் கைப்பை கீழே விழுந்தால் எடுத்துக் கொடுக்க வரும் அதே ஆண்கள்தான் அவள் நிர்வாணமாக உதவி கேட்டு கதறும்போது வேடிக்கை பார்கிறார்கள்.
நிகழ்காலத்தில் உள்ள மக்களால் பதியப்பட்டுக் கொண்டு இருக்கும் விக்கிப்பீடியா சொல்லும் தகவலை நம்பாதவர்கள், அவர்கள் பிறக்காத ஒரு காலத்தில் எழுதப்பட்ட புனைவுகளையும்,புராணங்களையும் அப்படியே உண்மை என்றும் அவற்றின் வழியாக சொல்லப்படும் வரலாற்றை நம்பவும் செய்கிறார்கள். புராணங்கள் அல்லது புனைவுகள் எல்லாம் வரலாறு அல்ல. அதுபோல் பெரும்பான்மையினர் பேசுவதும் வரலாறு அல்ல. இது குறித்து நமது வலைப்பதிவுகளிலே பல முறை நிரூபிக்கப்பட்ட வரலாற்றின் கதைகளை மேற்கோள் காட்டலாம். ஆனால், அது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல.
பொன்னியின் செல்வன் என்பது ஒரு கதை/புனைவு இலக்கியம். நாம் வாழ்ந்த இதே காலத்தில் ஒரு கதையெழுதி எழுதிய கதை இது. சோழர் வரலாற்றை அறிய வேண்டும் என்பவனுக்கு இந்தக் கதை ஒரு தூண்டுகோலாக இருக்காலாம். ஆனால், இந்தக் கதையின் வழித்தடத்தில் மட்டும் வரலாற்றைத் தேடுவது அல்லது கட்டமைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல் மற்றும் வரலாற்றுத் துரோகம்.புராணங்களில் அல்லது புனைவுகளில் வரலாற்றின் குறிப்புகள் ,கட்டிடத்தில் உள்ள செங்கற்களை ஒட்டவைக்கும் சுண்ணாம்பைப்போல (அல்லது சிமெண்ட் போல)காணப்படும். அதை பகுத்து அறிவது அல்லது எப்படி உள்வாங்குவது என்பது அவரவரின் நம்பிக்கை அல்லது புரிதல் சார்ந்த விசயம்.
பழைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு வந்த புராணங்கள்,இலக்கியங்கள் போன்ற புனைவுகள் போல இந்த நூற்றாண்டில் அசைக்கமுடியாத ஒரு இடத்தில் இருப்பது சினிமா. நாம் வாழும் இந்த காலகட்டத்தில் சினிமாவில் என்ன பதிவு செய்யப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.நமக்கு அடுத்து வரும் புதிய தலைமுறை (3000 வருடம் என்று வைத்துக் கொள்ளுங்கள்) பொழுது போகாத போது 2000 -2007 -ல் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களைப் பார்த்து..."நம் முன்னோர்கள் காதலிக்கும் போது பக்கத்தில் பத்து இருவது ஆட்களை கூட்டிவைத்துக் கொண்டு் மரத்தைச் சுற்றியும், ரோட்டிலும் ஆடித்தான் காதல் செய்தார்கள். அப்படித்தான் டைரக்டர் சங்கர் படத்தில் சொல்லியிருக்கார்" என்று மேற்கோள் காட்டக்கூடும். ஆனால் உண்மையைச் சொல்ல நாம் இருக்க மாட்டோம்.
இதை வாசிக்கும் அனைவருக்கும் நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன். இன்று உள்ள விக்கிப்பீடியாவை நம்பாதவர்கள், பக்தி என்ற பெயரில் பழைய புராணங்களை அப்படியே வரிக்குவரி எப்படி நம்புகிறார்களோ , அதே போல் நாளய தலைமுறை ,இன்று சினிமாவில் உள்ள கற்பனைகளை உண்மை என்று நம்ப வாய்ப்பு இருக்கிறது. இது புரிந்தால், நீங்கள் நம்பும் புராணங்களில் இருந்தும் , புனைவுகளில் இருந்தும் உள்ள வளமான வர்ணனைகளையும், கற்பனைகளையும் பிரித்தெடுக்க முடியும்.
சங்ககால வரலாறுகளை, இதுதான் வரலாறு என்று தேதிவாரியாக யாராலும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த காலத்திற்குள் நுழைய, நம்மிடம் இருப்பவை புராணங்களும்,சமயக் கதைகளும் ,செவி வழிக் கதைகளும், எப்போதாவது கண்டெடுக்கப்படும் கல்வெட்டுக்களுமே. இதில் மாற்றுக் கருத்து இல்லை. வரலாறு அப்பட்டமான வரலாறாக பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக , வரலாறே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நான் இன்னும் முட்டாளாகவில்லை என்றே நினைக்கிறேன்.என்னதான புராணங்கள்,கதைகள்,இலக்கியங்கள் வாசித்தாலும் அவற்றை சீர்தூக்கி , ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இல்லையென்றால் கடந்த கால வரலாறுகள் நாம் வாழும் இந்தக் காலத்திலும் சரிபார்க்கப்படாமல் , அப்படியே அடுத்த தலைமுறைக்கும் சென்றுவிடும்.
மதுரை மீனாட்சி கோவிலுக்குள் புதைந்து இருக்கும் சரித்திர உண்மைகள் இன்னும் நமக்கு புராணங்களின் வாயிலாகவே அறியப்பட்டு வருகிறது. புராணங்களை "பக்தி" என்னும் கண்ணாடி வழியாகப் பார்ப்பவர்களுக்கு, மீனாட்சி தெய்வப்பிறவியாக , யாக குண்டத்தில் தோன்றியவளாக ,மூன்று முலைகளுடன் இருந்தவளாக ,இமயம் முதல் குமரி வரை ஆணடவளாகவே தெரிவாள். மேலும் அவர்களுக்கு இதுபோன்ற போன்ற விசயங்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவை.
இதுதான் இறுதி இறைவேதம் என்று சொன்னபின்னால், அதை வளர்த்தெடுக்கும் முயற்சிகளுக்கு சமயத்தடை வந்துவிடும். அதுபோல , சொன்னது எல்லாம் உண்மை என்று நம்பிவிட்டால், வரலாற்றை ஆராய வாய்ப்பே இல்லை.குழப்பமாக அல்லது தெய்வதன்மை வாய்ந்த , நம்பிக்கை சார்ந்த மீனாட்சி புராணக்கதைகளை , ஓரளவிற்காவது அறியப்பட்ட/நிரூபிக்கப்பட்ட சேர,சோழ வரலாறுகளுடன இணைக்காமல் இருப்பது பக்தர்கள் வரலாற்றிற்குச் செய்யும் பெரிய நன்மை.மீனாட்சி சிலையின் காலத்தை ( கார்பன் டேட்டிங்) அறிவியல் பூர்வமாக கணித்தாலே, புராணங்கள் சொல்லும் காலத்திற்கும், மீனாட்சி வடிவமைக்கப்பட்ட காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை அல்லது வேற்றுமைகளை அறிய வாய்ப்பு உள்ளது. தெய்வத்தின் சிலையை சோதிப்பதா? என்று பக்தர்கள் தவறாக என்னைப் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு. அல்லது ஒரு அகழ்வாராய்ச்சி நடத்தலாம்.
மீனாட்சி கோவிலின் தற்போதைய வடிவம் ஒரே நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்டதில்லை. அதன் பழைய வடிவங்கள் நமக்கு புராணங்களில் விவரணையாக ஆங்காங்கே சொல்லப்பட்டு இருக்கலாம். ஆனால் உண்மை இன்னும் அறிவியல்பூர்வமாக ஆராயப்படவில்லை.அல்லது எனக்கு மட்டும் புரியவில்லை. ஒரு பெயிண்டர் எழுதிவைத்த தவறான தகவல் என்று என்னால் இதைக்கடந்து போக முடியவில்லை. இங்கே பினூட்டமிட்ட நண்பர்களும் பக்தி வழியில் அதையே நம்புகிறார்கள்.
மீனாட்சி வாழ்ந்த காலத்தில் இருந்த இந்தியாவின் புவியியல் எல்லைகள் இப்போது இருக்கும் இமயம்-குமரியாக இருந்திருக்கவே முடியாது என்பது எனது திடமான எண்ணம்.சுமைதாங்கிக் கல்லாக இருந்த ஒரு பட்டியக்கல் ஒன்று, சென்ற தலைமுறையில் ஊர் தேவதையாகவும், இன்று பார்வதியுடன் இணைத்து கடவுளின் அம்சமாக பார்க்கப்படுவதையும் அறிவேன். நாளைய தலைமுறை இதை இன்னும் விரிவு படுத்தி புதிய கதைகளைச் சேர்த்தாலும் சேர்க்கும். ஆனால் , உண்மையைச் சொல்ல அந்த இரகசியம் அறிந்த கிழவிகள் இருக்க மாட்டார்கள்.புராணக்கதைகளை ஒரு கடந்த காலத்தை பார்க்க உதவும் ஒரு ஜன்னலாக மட்டுமே கொண்டு, இன்றைய அறிவியல் நுட்பங்களின் உதவியுடன் மீனாட்சியின் காலமும், வரலாறும் கணிக்கப்பட்டு சரியாக எழுதப்படவேண்டும். அதுவே அடுத்து வரும் மதுரைத் தலைமுறையினருக்கு நாம் வழங்கும் பரிசு.
ஒரு அழகிய பெண்ணை இன்னொரு பெண் பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணை அவளின் கணவன் பார்க்கும் பார்வைக்கும், அவளின் தந்தை பார்க்கும் பார்வைக்கும், அவளின் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும், ரோட்டில் போகும் ஒரு ரோமியோ பார்க்கும் பார்வைக்கும், அந்தப் பெண்ணின் மருத்துவர் பார்க்கும் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. பெண் ஒரே ஆள்தான். ஆனால், அவள் ஒவ்வொருவரிடமும் ஒரு புதிய முற்றிலும் வேறான தாக்கத்தை ஏற்படுத்துகிறாள்.
அனைத்துப் பார்வைகளும் ஒன்று அல்ல. அதுபோல் ஒன்று மட்டுமே உண்மையும் அல்ல.நாம் எந்த இடத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொருத்தும், நமது கடந்தகால அனுபவங்களைப் பொறுத்தும் , நாம் பார்க்கும் பார்வைக்கோணம் மாறுபடும்.
- எனது கோணத்தில் மீனாட்சி என்பவள் வரலாற்றின் பக்கங்களில் நம்மைப்போல் ஒரு மனுசியாக இடத்தை நிரப்பியவள்.
- அவளின்பால் ஈர்க்கப்பட பலர் அல்லது நலம் விரும்பிகள் அல்லது சுற்றம் சொந்தம்,அவளுக்கு ஒரு இடத்தை பட்டியக்கல்லாக ஆரம்பித்து வைத்து இருக்கலாம்.
- பிற்காலத்தில் அவள் பல புனைவுகளுடனும், கிளைக்கதைகளுடனும் தெய்வமாக்கப்பட்டு, இன்று கேள்வி கேட்கமுடியாத புனிதத்தை அடைந்து இருக்கலாம்.
- இவள் நிச்சயம் நாம் அறிந்து வைத்துள்ள எந்த சேர, சோழர்களுடனும் போரிடவில்லை. இமயமும் குமரியும் அவளது ஆட்சி எல்லைகளாக இருத்திருக்கவும் இல்லை.
நான் சொல்வதுதான் இறுதி என்று சொன்னால், இது பழையபடி "இதுதான் இறுதி இறைவேதம்" என்ற முற்றை அடைந்து , அதற்குமேல் வளர்த்தெடுக்க முடியாத ஒன்றாக போய்விடும்.நான் சொல்பவைகள், இன்று எனது 36 வயதில் இருக்கும் புரிதல்கள். ஒருகாலத்தில் மீனாட்சியின்பால் அதிக காதல் கொண்டவன் நான். அதிகாலைத் தரிசனத்தில் அவளின் சாய்ந்த கொண்டையிலும், ஒய்யாராமாக சாய்ந்து நிற்கும் பேரழகிலும் என்னை மறந்தவன். ஒரு ஆணாக அவளை கடவுள் என்பதையும் மீறி என் சிறுவயதில் மெய்மறந்து இரசித்து உள்ளேன்.
அவை எல்லாம் ஒரு சிறுவயது பையன் பக்கத்துவீட்டு அக்காதான் உலகின் பேரழகி என்று எண்ணும் காலகட்டங்கள். மீனாட்சியின் மூக்குத்தியழகில் சொக்கிப்போன அனுபவமும் உண்டு. இராதை, ஆண்டாள் போன்ற சாதரணர்கள் ஆண் தெய்வங்களைக் கண்டு மெய்மறந்து புலம்பியது போல , நம் புராணங்களில் எந்தப் பெண் தெய்வத்தையும் சாதாரண மனிதர்கள் இரசித்துப் புலம்பிய வரலாறு இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை. ஆண் தெய்வங்களுக்கு பெண் இரசிகைகளை அனுமதித்து ஆர்ப்பாரிக்கும் நாம் , பெண் தெய்வங்களுக்கு ஆண் இரசிகர்களை அனுமதிப்பது இல்லை. இதையெல்லாம் இங்கே விரிவாகப் பேசினால் பதிவின் நோக்கம் திசைமாறிப் போய்விடும்.
நான் சொல்லவருவது , இந்த மதுர மீனாட்சி என் சிறுவயதுக் காலங்களில் என்னால் இரசிக்கப்பட்ட/போற்றப்பட்ட/துதிக்கப்பட்ட ஒருவளாகவே இருந்தாள்.அந்த காலகட்டத்தில் நான் அப்படி இருந்ததும் உண்மை. இன்று அவளின் வரலாற்றை கேள்விக்கு உட்படுத்துவதும் உண்மை. நாளை, நான் இதே மீனாட்சியை வேறுவிதமாக, முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கலாம்.
யாரும் யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டாலும், மதுரை மீனாட்சியின் வரலாறு குறித்தான மாறுபட்ட கோணங்கள் இருக்கிறது, என்றாவது சிலர் புரிந்துகொள்ள எனது கேள்விகள் உதவி இருக்கலாம். அல்லது ஒன்றுக்கும் உதவாத ஒன்றாகவும் இருந்து இருக்கலாம். மாறுபட்ட விளக்கங்கள் இருப்பதால் இன்னும் உண்மை தேட வேண்டிய நிலையிலேயே உள்ளது அல்லது எனக்கு புரியாமல் உள்ளது.
புராணங்களை நான் வரலாற்றை அறிய உதவும் ஒரு ஜன்னலாகவே பார்க்கிறேன். அதுவே வரலாறு அல்ல. மேலும் அதீத பக்தியால், அதுதான் வரலாறு என்று இந்த blogspot காலத்திலும் நண்பர்களை நம்பவைத்துக் கொண்டு இருப்பது அவர்களின் பக்தியன்றி வேறு எதுவும் இல்லை என்றும் எனக்குப் புரிகிறது.
பொன்னியின் செல்வன் குந்தவை நாளை கடவுளாக்கப்பட்டு அது பற்றிய விவாதங்கள் வந்தாலும் வரலாம். யுகங்கள் மாறினாலும் இவைகள் தொடரும் என்றே நினைக்கிறேன்.
கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி!
ஆரம்பித்து வைத்த கேள்விக்கு முடிவுரையை கொடுத்துவிட்டேன். விரும்புபவர்கள் மேலும் தேடிக் கொள்ளலாம். எனது தேடுதல் தொடரும் ,அது இங்கே பகிரப்படாவிட்டாலும்... !
முந்தைய விரிவான கருத்துப்பரிமாற்றங்களைக் காண...
மதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்வி
http://pathivu.madurainagar.com/2007/11/blog-post_28.html
Picture Courtesy:
digitalmadurai.com
18 Comments:
//புராணங்களை நான் வரலாற்றை அறிய உதவும் ஒரு ஜன்னலாகவே பார்க்கிறேன். அதுவே வரலாறு அல்ல. மேலும் அதீத பக்தியால், அதுதான் வரலாறு என்று இந்த blogspot காலத்திலும் நண்பர்களை நம்பவைத்துக் கொண்டு இருப்பது அவர்களின் பக்தியன்றி வேறு எதுவும் இல்லை என்றும் எனக்குப் புரிகிறது.//
well said....இதைத்தான் நான் வேறு விதமாய்க் கேட்டிருந்தேன். உங்களாது தேடல்கள் தொடரட்டும்.
பலூன் மாமா,
புராணங்களை ஏதோ ஜன்னலாகவாவது (ஜன்னல் இல்லாத எனது வீட்டை நினைத்தும் பார்க்க இயலவில்லை :) ) ஒத்துக்கிறீங்களே...... பலர் அது கூட ஒத்துக்கறது இல்லை.
அதீத பக்தி...இருக்கட்டும், இருக்கட்டும். நீங்களும், நானும் இன்னும் பல அனுபவங்களால் அறிய வேண்டியது அதிகம் உள்ளது.....எது அதீத பக்தி, எது அதிருதுல்ல பக்தி என்பதை அனுபவமாகவே அறிவோம். :)
பலூனாரே,
முந்தைய பதிவினை இப்போது தான் படித்தேன். அதில் நீங்க வரலாறாக சொல்லியிருக்கும் சிலைகள் (சேர-சோழனை வென்றதாக சொல்லும் சிற்பம்) முன்பு கிடையாது. அந்த சிலைகள் 1996 கும்பாபிஷேகத்தின் போது வைக்கப்பட்டது....
"நிகழ்காலத்தில் உள்ள மக்களால் பதியப்பட்டுக் கொண்டு இருக்கும் விக்கிப்பீடியா சொல்லும் தகவலை நம்பாதவர்கள், அவர்கள் பிறக்காத ஒரு காலத்தில் எழுதப்பட்ட புனைவுகளையும்,புராணங்களையும் அப்படியே உண்மை என்றும் அவற்றின் வழியாக சொல்லப்படும் வரலாற்றை நம்பவும் செய்கிறார்கள். புராணங்கள் அல்லது புனைவுகள் எல்லாம் வரலாறு அல்ல. அதுபோல் பெரும்பான்மையினர் பேசுவதும் வரலாறு அல்ல. இது குறித்து நமது வலைப்பதிவுகளிலே பல முறை நிரூபிக்க"
பலூன் மாமா, நிகழ்காலத்தில் யாரோ தெரியாமல் ஆர்வக் கோளாறால் செய்த தவற்றைத் தான் நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். இந்த விஷயமே இப்படி இருக்க விக்கிபீடியாவில் எல்லாமே சரியாக இருக்கும் என எப்படி நம்புவது? தவறுகள் அதிலும் ஏற்படும் அல்லவா? சில செய்திகளை நான் சேகரிக்கும்போது எனக்கு நேர்ந்த அனுபவத்தால் தான் நான் அவ்வாறு சொன்னேன். அதற்காகப் புராணங்களை நம்புபவர்கள் வரலாற்றை நம்ப மாட்டார்கள் என அர்த்தம் இல்லை. முந்தைய பதிவில் நான் சொல்லி இருப்பதை நீங்கள் படிக்கவில்லையா, அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா எனப் புரியவில்லை. மீனாட்சி அரசாட்சி செய்த போது சேர, சோழர்கள் இருந்ததாய் எந்தப் புராணமும் சொல்லவில்லை. கோவிலின் நிர்வாகம் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும், என மீண்டும் சொல்வதைத் தவிர, வேறு பதில் எனக்குத் தெரியவில்லை!!! புராணம் வேறு, வரலாறு வேறு என்ற வித்தியாசம் கொஞ்சமேனும் எனக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.
."குழப்பமாக அல்லது தெய்வதன்மை வாய்ந்த , நம்பிக்கை சார்ந்த மீனாட்சி புராணக்கதைகளை , ஓரளவிற்காவது அறியப்பட்ட/நிரூபிக்கப்பட்ட சேர,சோழ வரலாறுகளுடன இணைக்காமல் இருப்பது பக்தர்கள் வரலாற்றிற்குச் செய்யும் பெரிய நன்மை.மீனாட்சி சிலையின் காலத்தை ( கார்பன் டேட்டிங்) அறிவியல் பூர்வமாக கணித்தாலே, புராணங்கள் சொல்லும் காலத்திற்கும்"
குழப்பமே இல்லை, பலூன் மாமா, கோயில் அந்தக் அந்தக் கால கட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் வடிவமைக்கப் பட்டது என்ற உண்மைகள் எல்லாம் தெரியும், புராணங்களிலேயே அவ்வாறுதான் சொல்லப் பட்டிருக்கிறது. மூலஸ்தானச் சிலைகளும் மாற்றம் செய்யப் பட்டவை தான் என்பதும் தெரியும். மற்றபடி இந்தச் சேர, சோழர்கள் எல்லாம் சமீப காலத்தில் தான் வந்துள்ளது. மதுரையம்பதி சொல்றது போல் 90 களுக்குப் பின்னர் வந்திருக்க வேண்டும். நான் அறிந்த மதுரைக் கோயிலில் இந்த விஷயம் இல்லை!!! :((((((
மதுரையம்பதி,
// (சேர-சோழனை வென்றதாக சொல்லும் சிற்பம்) முன்பு கிடையாது. அந்த சிலைகள் 1996 கும்பாபிஷேகத்தின் போது வைக்கப்பட்டது....//
என்ன சொல்ல வருகிறீர்கள்? 1996 க்கு சமீபமாக எந்தப் போரும் நடந்ததா? புரியவில்லை.
நாளை மீனாட்சி சிங்கபூரையும் வென்று சிங்கப்பூரையும் வென்ற ராணியாய் இருந்தால் என்று 2300 ஆம் ஆண்டில் நடக்கும் குடமுழுக்கில் ஒருவர் ஒரு டிஜிட்டல் சிற்பம் வைக்கலாம்.
கேள்வி யார் கேட்கப்போகிறார்கள்.
உங்கள் கண்முன்னாலேயே வரலாறு சேர்க்கப்படுகிறது என்பதையாவது அறிந்துள்ளீர்கள் நல்லது.
நான் சொன்னது போல் , பக்தி தாண்டி , உண்மையான வரலாற்றை அணுகினால் நல்லது. சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு என்றும் சொல்லலாம்.
*****
கீதா
//நிகழ்காலத்தில் யாரோ தெரியாமல் ஆர்வக் கோளாறால் செய்த தவற்றைத் தான் நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள்//
நிகழ்காலத்தில் ஆர்வக் கோளாறு இருக்கும் என்று நம்பும் பக்தர்கள், கடந்தகாலங்களில் இருந்து அறியப்படும் செய்திகளிலும் ஆர்வக்கோளாறு விசயங்கள் இருக்கும் என்று நம்பினால் சரி.
"மீனாட்சி வேள்வித்தீயிலிருந்து சிறுமியாகத் தோன்றியது" போன்ற விசயங்களையும் ஆர்வக்கோளாறு வர்ணனையாக ஒத்துக் கொள்வீர்களா கீதா?
நிற்க , யார் எது சொன்னாலும் எது ஆர்வக்கோளாறு விசயம் என்பதை ஒருவர் அவர் சார்ந்த நம்பிக்கைகளில் அடிப்படையிலேயே தேர்ந்தெடுப்பார்கள்.
// மீனாட்சி அரசாட்சி செய்த போது சேர, சோழர்கள் இருந்ததாய் எந்தப் புராணமும் சொல்லவில்லை. கோவிலின் நிர்வாகம் தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும், என மீண்டும் சொல்வதைத் தவிர, வேறு பதில் எனக்குத் தெரியவில்லை!!! //
சேரர்,சோழர் விசயத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உங்கள் பதிலுக்கு நன்றி.
//புராணம் வேறு, வரலாறு வேறு என்ற வித்தியாசம் கொஞ்சமேனும் எனக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன். //
:-))
//மதுரையம்பதி சொல்றது போல் 90 களுக்குப் பின்னர் வந்திருக்க வேண்டும். //
ஆம், ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்டி எழுப்பப்படும் கதைகள் அடுத்த தலைமுறைக்கு புராணமாக போய்க்கொண்டே இருக்கும். நீங்கள் பார்த்த மீனாட்சி கோவில் சொன்ன கதைகளுக்கும் உங்கள் தாத்தா, பாட்டி பார்த்த அதே மீனாட்சி கோவில் அப்போது சொல்லியிருந்த கதைகளுக்கும் இடையில் புதிய கதைகள் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம், அல்லவா?
***
நந்தா ,மதுரையம்பதி,கீதா ,
நன்றி!.
கீதா மாமி,
வரலாற்றில் ஆர்வமோ, பயிற்சியோ இல்லாதவர்கள் புனைகதைகளை திரித்து விடுவது காலம் காலமாக தொடரும் ஒரு செயல். பலூன் சொல்லும் பல கருத்துக்களே வரலாற்றின் அடிப்படையில் அல்லது ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லை.
மதுரை ஒரு பழமையான நகரம். அக்கோயில் ஒரு சிவன் கோயில். இப்பொழுதும் நடுநாயகமாக இருப்பது சிவன் கோயிலே. வரலாற்றை புரட்டினீர்கள் என்றால் கடவுளின், மதத்தின் வளர்ச்சி, வழிபாடுகளின் வளர்ச்சி உங்களுக்கு/பலூனுக்கு புரியும். முதல்-இடை சங்கம் பேரதிக கடவுளர்களின் ஆதிக்கமின்றி இயற்கை மற்றும் நிலப்பிரிவு சார்ந்த காவல் தெய்வங்களின் வழிபாடாகவும், நீதி மற்றும் பண்பாடு குறித்து அதிக கவனம் கொண்டதாகவும் இருக்கின்றது. (அனைத்தையும் எழுதுவது மிகவும் நேரமெடுக்கும்)
பிற்காலத்தில் சமணம் மற்றும் பௌத்தம் மறையத்துவங்கிய 7ம் நூற்றாண்டு முதல் தலையெடுக்கத்துவங்கியது சிவன் மற்றும் திருமால் வழிபாடு. அந்த பின்புலத்தில் இது ஒரு சிவன் கோயிலே. திருநாவுக்கரசர் பாடியுள்ளார் இத்தலத்தை பற்றி. சிவன் அதன் பின்பு மீனாட்ச்சி, காலப்போக்கில் அது மீனாட்ச்சி கோயில் என நிலைபெற்றுவிட்டது. கோயிலில் குறிப்பிடப்பெறும் மீனாட்ச்சி சிவனின் மனைவி பார்வதியே அன்றி எந்த ஒரு ராணியும் இல்லை. அரசிகளுக்கு கோயில் கட்டுமளவிற்கு மக்கள்/அரசர்கள் முட்டாள்கள் அல்ல.
மூவேந்தர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் மதுரையை ஆட்சி புரிந்தது நாமறிந்ததே. சிவன் இமயத்தில் அமர்ந்திருப்பதால் இமையம் வரை ஆட்சி புரிந்ததாக புனையலாமே தவிர, அலெக்ஸாண்டர் இந்தியா வந்தது முதல் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாறு, மீனாட்சி இமையம் முதல் குமரி வரை ஆட்சி செய்ததை பதிவு செய்யாமல் விட்டிருக்காது. இளங்கலை முதுகலை வரலாற்று புத்தகங்களை புரட்டுதல் நலம்.
மதம், சாமி, கதை அனைத்தும் நம்பிக்கை சார்ந்த படிமங்கள் என்றாலும், கோயில் என்பது அமைப்பியல் சான்று. அதை சுற்றி வரலாறு நடந்தேரியுள்ளது. எந்த ஒரு போருமே கோயிலை அடிப்படையாக வைத்தே நடைபெரும். கோயிலே அந்நாட்டின் பாதுக்காப்பு அரண். பெரும்பாலான கோயில்கள் சிதைவுற்றதிற்கு அதுவும் ஒரு காரணம்.
சிவனின் மனைவி பார்வதி (அ)மீனாட்சி. மீனாட்சி என நாயக்கர்களில் பல பெண்கள் பெயர் கொண்டிருக்கலாம். ராஜராஜசோழன் என பெயர்கொண்ட எல்லோரும் ராஜராஜன் ஆகிவிட முடியாதல்லவா??
புனைவுகளை அதன் போக்கில் விட்டுவிட்டு சற்று காரணத்துடன் ஆராய்ந்தால் உண்மை விளங்கும். அதற்கு புராணம் என்ற குருட்டு நம்பிக்கைகளை களைய வேண்டும். அக்காலத்தில் மட்டும் தெருவுக்கு தெரு வந்து அடியார்களுக்கு ஆசி வழங்கிய சாமிகள் எல்லாம் இன்று எங்கே சென்று விட்டனர்??
நம்பிக்கை அவரவர் தலைவலி, ஆனால் பொதுமன்றத்தில் முன்வைக்கும் வாதங்களை சற்று ஆராய்ச்சிக்கு பின்வைத்தல் நலம். வவ்வால் சொல்லியது போல அர்ச்சகர்கள் குசு விடுவதிலையா என்பது அறிவியல், அம்பாள் முன்னாடி நின்னா எனக்கு குசுவே வருவதில்லை... நெடுநாள் அங்கு நின்று அர்சிப்பதால் அவளின் அருளால் நான் மலம் கழிப்பதுமில்லை என்பது புனைவு (நம்பிக்கை என்றும் நீங்கள் பெயரிடலாம்)
நல்ல முயற்சியே, மேலோட்டமாக தொட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் தனிப்பதிவாகுமளவிற்க்கு செறிவு மிக்கதே.. எனினும் சற்று ஆராய்ச்சி அவசியம்.
பலூன் மாமா,
திருவிளையாடல் புராணத்தை ஓ! சாரி, சாரி, உங்க ஜென்னலை :)பார்த்தேன்.
ஒரு முக்கியமான விஷயம், மீனாக்ஷி திருமணத்திற்கு வந்தவர்கள் என பின்வரும் லிஸ்ட் தரப்பட்டுள்ளது.
கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர், கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளூவர், மாளவர், காம்போசர், அங்கர், கங்கர், மாகதர், ஆரியர், நேரியர், அவந்தியர், வைதர்ப்பர், கொங்கணர், விராடர்கள், மராடர்கள், கருநாடர், குருநாடர், கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர், காந்தாரர், குளிங்கர், கேகையர், விதேகர், பெளரவர், கொல்லர், கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர், மச்சர், மிலேச்சர், செஞ்சியர் ஆகிய தேசத்து அரசர்களெல்லாம் பரிசுப் பொருட்களுடன் வந்ததாக பரஞ்சோதியடிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதே திருவிளையாடலில், மீனாக்ஷியின் அரசியல் பிரவேசம் பற்றி சொல்லி, அரசவையினை வர்ணிக்கையில், சேர-சோழர்கள் அன்னையின் ஏவல் கேட்டு நடக்க காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முப்பத்திஏழாவது திருவிளையாடல் என்ன தெரியுமா?. சோழனை மடுவில் வீழ்த்திய வரலாறு.
இன்னுமொரு தகவல், தடாதகையின் வளர்ப்பு தந்தை பெயர் மலையத்வஜ பாண்டியன். அக்காலத்தில் பாண்டியன் என்னும் பெயர் இருக்குமானால் ஏன் சேர-சோழர்கள் இருந்திருக்க கூடாது?.
//நம் புராணங்களில் எந்தப் பெண் தெய்வத்தையும் சாதாரண மனிதர்கள் இரசித்துப் புலம்பிய வரலாறு இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை.//
Sorry for the english...
Adi Sankarar's Soundharya Lahari, Jayadevar's Ashtapathi are all hymns recited by Males admiring the beauty of Female Goddess. Of course erotic literature is a path of all our bakthi literature.
Not only that... even 'Nayaki Bhavam' is in practice. Madurai's Nadana Gopala Nayaki Swamikal practiced Nayaki Bhavam which I believes is 'Thiru Nangai' stature.
I appreciate your intention of digging the details, but after a while, you will find everything like 20 years history or 200 years history or 2000 years history everything is a mixture of facts and fictions :-). You cant help it. The history grows on its own and it is completely natural. Even these debates are also part of the evolution only :-)
// (சேர-சோழனை வென்றதாக சொல்லும் சிற்பம்) முன்பு கிடையாது. அந்த சிலைகள் 1996 கும்பாபிஷேகத்தின் போது வைக்கப்பட்டது....//
என்ன சொல்ல வருகிறீர்கள்? 1996 க்கு சமீபமாக எந்தப் போரும் நடந்ததா? புரியவில்லை.//
நீங்க ஏப்படி சேர-சோழர் வந்தார்கள் போரிட்டதற்கு என்ன சாட்சி என்று கேட்டதற்கு நான் பதிலளித்தேன்....சமிபகாலமா போர்ன்னு பேர்ல எதுவும் நடக்கலீங்க....ஆனா, சீங்கபூர் என்ன அமெரிக்காவிலும் மீனாக்ஷி ராஜாங்கம் இருக்குங்க...
பலூன் மாமா,
திருவிளையாடல் புராணத்தை ஓ! சாரி, சாரி, உங்க ஜென்னலை :)பார்த்தேன்.
ஒரு முக்கியமான விஷயம், மீனாக்ஷி திருமணத்திற்கு வந்தவர்கள் என பின்வரும் லிஸ்ட் தரப்பட்டுள்ளது.
கொங்கர், சிங்களர், பல்லவர், வில்லவர், கோசலர், பாஞ்சாலர், வங்கர், சோனகர், சீனர்கள், சாளூவர், மாளவர், காம்போசர், அங்கர், கங்கர், மாகதர், ஆரியர், நேரியர், அவந்தியர், வைதர்ப்பர், கொங்கணர், விராடர்கள், மராடர்கள், கருநாடர், குருநாடர், கலிங்கர், சாவகர், கூவிளர், ஒட்டியர், கடாரர், காந்தாரர், குளிங்கர், கேகையர், விதேகர், பெளரவர், கொல்லர், கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர், மச்சர், மிலேச்சர், செஞ்சியர் ஆகிய தேசத்து அரசர்களெல்லாம் பரிசுப் பொருட்களுடன் வந்ததாக பரஞ்சோதியடிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதே திருவிளையாடலில், மீனாக்ஷியின் அரசியல் பிரவேசம் பற்றி சொல்லி, அரசவையினை வர்ணிக்கையில், சேர-சோழர்கள் அன்னையின் ஏவல் கேட்டு நடக்க காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முப்பத்திஏழாவது திருவிளையாடல் என்ன தெரியுமா?. சோழனை மடுவில் வீழ்த்திய வரலாறு.
இன்னுமொரு தகவல், தடாதகையின் வளர்ப்பு தந்தை பெயர் மலையத்வஜ பாண்டியன். அக்காலத்தில் பாண்டியன் என்னும் பெயர் இருக்குமானால் ஏன் சேர-சோழர்கள் இருந்திருக்க கூடாது?.
வெங்கட்,
செளந்தர்யலகரி மற்றும் மேலும் சில உதாரணங்கள் கொடுத்தமைக்கு நன்றி !
மதுரையம்பதி,
சொல்வதற்கு ஒன்றும் இல்லை. :-))இன்னும் பல கதைகள் வரலாம். வரட்டும் நல்லதே.
இசை
நிச்சயம் எனது தவல்கள் முற்றும் முழுதான ஆராய்ச்சி அல்ல. பார்த்ததை கேள்வியாக்கினேன். தேடல் தொடரும்.
மேலதிக தகவல்களுக்கு நன்றி!
நாளை, நான் இதே மீனாட்சியை வேறுவிதமாக, முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கலாம்.//
ஆளும் வளர அறிவும் வளரணும்; அதுதாண்டா வளர்ச்சி - இது பாட்டு.
தெய்வம் என்றால் அது தெய்வம்..
வெறும் சிலையென்றால் அது சிலைதான்...
பதிவையும் பின்னூட்டங்களையும் படித்த பின்னர் மேற்சொன்ன பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது...ம்ம்ம்ம்ம்
தெய்வம் என்றால் தான் அது தெய்வம். (என்றால் என்பது புனைவு....)
கல் என்றாலும், இல்லையென்றாலும் அது கல்லே. ( இது அமைப்பியல், பௌதீக உண்மை, எல்லாம் மாயை என்ற கதையை எடுக்கவேண்டாம் இ.சொ.. இப்பொவெ எனக்கு கண்ண கட்டுது... :)
//நம் புராணங்களில் எந்தப் பெண் தெய்வத்தையும் சாதாரண மனிதர்கள் இரசித்துப் புலம்பிய வரலாறு இல்லை அல்லது எனக்குத் தெரியவில்லை.//
அபிராமி பட்டர் ஒருத்தர் போதுமே!!!!! பெண்தெய்வத்தைக் குறித்தான பாடல்கள் தான் அபிராமி அந்தாதி என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அது தவிர, செளந்தர்ய லஹரி,லலிதா சகஸ்ரநாமம், ஆனந்த லஹரி, எல்லாமே பெண் தெய்வங்கள் பற்றியது தான். அகத்தியரின் லலிதா நவரத்தின மாலையும், பெண் தெய்வம் பற்றியது தான். இப்படிப் பார்த்தால் நிறையவே உள்ளது. எழுதினவர்களும் அதிகம் ஆண்களாய்த் தான் இருப்பார்கள். கருத்துச் சொல்ல உதவியதற்கு நன்றி பலூன் மாமா!
பெண்தெய்வங்களை டாவடிச்ச கதைகள் சம காலத்திலேயும் எழுதப்பட்டிருக்கு..லா.ச.ரா,ஜெயமோகன்,ரமேஷ் ப்ரேம் போன்றவங்களோட சில பிரதிகள் பெண் தெய்வங்களை காதலிக்கும் கதைகளா சொல்லப்பட்டிருக்கு..கதைல ஒரு மிஸ்டீரியஸ்/மாந்திரீக யதார்த்தவியலுக்கான உணர்வு வரனும்னு இவங்க மெனக்கெட்டிருக்கும் சில நல்ல முயற்சிகளா நான் எடுத்துகிட்டேன்..
...
ஒரு நல்ல உரையாடலுக்கான களத்தை ஏற்படுத்திக் கொடுத்த பலூன் மாமாவிற்கு நன்றிகள்...பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் ஸ்பெசல் டேங்கஸ் :)
Post a Comment