Sunday, December 9, 2007

தலபுராணம் - 5

ரீகல் தியேட்டர் உறவு பல ஆண்டுகள் நீடித்தது. பின்னால் பரமேஸ்வரி என்று இன்னொரு தியேட்டர் ஆங்கிலப் படங்களுக்கெனவே வந்து, அதுவும் எங்கள் வீட்டுப் பக்கமே இருந்தது வசதியாகப்போனது. அதன் பின் வேறு சில தியேட்டர்களும் ஆங்கிலப் படத்துக்கென்றே வந்தன. ஆனாலும், அந்த ரீகல் தியேட்டரும், தனிப்பட்ட அதன் culture-ம், அதில் படம் பார்க்கும் ரசனை மிகுந்த கூட்டமும் - எல்லாமே காலப் போக்கில் ஓர் இனிய கனவாகிப் போயின. இப்போது வெளிப்பூச்செல்லாம் அழகாகச் செய்யப்பட்டு, ‘பளிச்’சென்று இருந்தாலும், ஐந்தரை மணிவரை வாசகசாலையாக இருந்து, அதன்பின் ஏதோ மாயாஜால வித்தை போல் சடாரென தியேட்டராக மாறும் அந்த இனிய நாட்கள் இனி வரவா போகின்றன?



‘ரீகல் நாட்க’ளின் தொடர்பு இருந்தபோது, அதிலிருந்து 50 காலடி தொலைவுகூட இல்லாத ‘காலேஜ் ஹவுஸ்’ என்ற லாட்ஜிடமும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. இது ரீகல் தியேட்டரிலிருந்து ஆரம்பமாகும் டவுண் ஹால் ரோடு என்ற மதுரையின் மிக முக்கிய ரோட்டில் உள்ள பழம்பெருமை பேசும் மதுரையின் இன்னொரு ‘தலம்’!


(காலேஜ் ஹவுஸ்)




படம் பார்க்காத நாட்களில் எங்கள் நண்பர்கள் கூடும் ‘joint’ இந்த லாட்ஜின் முன்னால்தான். படத்தில் தெரியும் ஜுபிடர் பேக்கரி முன்னால் நம்ம குதிரை -அதாங்க, நம் ‘ஜாவா’ - ஒவ்வொரு மாலையும் நிற்கும். அதற்குப் பக்கத்தில் இருபுறமும் நாலைந்து சைக்கிள்கள். நண்பர்கள் குழாம் கூடிவிடும். ஆறு மணி அளவில் வந்தால் எட்டு ஒன்பது மணி வரை இந்த இடமும், இதைச் சார்ந்த இடமும்தான் நம் அரட்டைக் கச்சேரி மேடையேறும்; எல்லா விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, துவச்சி, காயப்போட்டுட்டு, அதற்கு அடுத்த நாள் வந்து அதை எடுத்து மீண்டும் அலச ஆரம்பிக்கிறது. ஆர அமர்ந்து அரட்டை அடித்த இடம் இது என்று இப்போது யாரிடமேனும் சொன்னால் நம்பாமல் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் இப்போது இங்கு நிற்கக்கூட முடியாது; அவ்வளவு ஜன நெரிசல். கீழே உள்ள படத்தைப் பார்த்தாலே இப்போது எப்படி இருக்கிறதென்பது தெரியும்.

ஆனால் இந்த ‘காலேஜ் ஹவுஸ்’ அதுக்கு முந்தியே நம்ம வாழ்வில் ஒரு இடம் பிடிச்சிரிச்சி. சின்னப் பையனா இருந்த போதே, இந்த காலேஜ் ஹவுஸுக்கு ஒரு தனி ‘மருவாதி’ உண்டு. அப்போவெல்லாம், நயா பைசா காலத்துக்கு முந்தி காபி, டீ எல்லாமே ஓரணாவிற்கு விற்கும்; நயா பைசா காலம் வந்ததும், காபி, டீ விலை சாதாரணமா 6 பைசா; ஸ்பெஷல் காபி’ன்னா 10 பைசா. அந்தக்காலத்திலேயே, அந்த மாதிரி 10 பைசாவுக்கு காபி, டீ விற்கும்போது காலேஜ் ஹவுஸில் காபி நாலரையணா, அதன்பின் 30 பைசா. அதாவது, வெளியே விற்கும் விலையைவிட 3 மடங்கு அதிகம். அப்போ, எங்க வீட்டுக்கு ஒரு உறவினர் வருவார். வந்ததும் முதல் வேலை, ஒண்ணு அப்பா சைக்கிள் இல்ல..வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு, என்னையும் பின்னால உட்கார வச்சுக்கிட்டு - நான் தான் அவருக்கு சந்து பொந்து வழியா வழி சொல்ற வழிகாட்டி - நேரே காலேஜ் ஹவுஸ் போய் காபி குடிக்கிறதுதான். எனக்கு அவர் காபி குடிக்கிறதுக்காகவே ஊர்ல இருந்து வர்ராரோன்னு தோணும். அப்படி ஒரு மகிமை அந்த காபிக்கு. அந்தக் காபியின் மகத்துவம் பற்றி நிறைய வதந்திகள் - யாரோ ஒரு சாமியார் கொடுத்த ஒரு மூலிகை ஒன்றை சேர்ப்பதலாயே அந்த ருசி; அப்படியெல்லாம் இல்லை. காபியில அபின் கலக்குறாங்க; அதனாலதான் அந்த டேஸ்ட். அதனாலேயே இந்த காபி குடிக்கிறவங்க அது இல்லாம இருக்க முடியாம (addiction என்ற வார்த்தையெல்லாம் அப்போ தெரியாது) ஆயிடுறாங்களாம். இப்படிப் பல வதந்திகள். எது எப்படியோ, நிறைய பேர் இந்தக் கடை காபிக்கு அடிமையாய் இருந்தது என்னவோ உண்மைதான்.

சின்ன வயசில ‘வேப்ப மர உச்சியில நின்னு பேயொண்ணு ஆடுது…’அப்டின்றது மாதிரி இது மாதிரி எத்தனை எத்தனை வதந்திகள். அதையே ஒரு பெரிய லிஸ்ட்டாகப் போடலாம். இந்த காலேஜ் ஹவுஸுக்குப் பக்கத்து சந்திலதான் ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர் என்ற பெருமையோடு இருந்தது - தங்கம் தியேட்டர். ஒரு பெரிய கால்பந்து மைதானத்தையே உள்ளே வைத்து விடலாம்போல அவ்வளவு பெரிய தியேட்டர். சுற்றியும் பெரிய இடம். தியேட்டரின் வெளி வராந்தாவே அவ்ளோ அகலமா இருக்கும். இதுதான் நான் சிகரெட் குடிச்சி, போலிசிடம் பிடிபட்டு, ஆங்கிலத்தால தப்பிய ‘தலம்’! இந்த தியேட்டரில் கூட முதல் நாள் படம் பார்க்க டிக்கெட் வாங்கும் இடத்தில் கூட்டத்தில் சிக்கி உயிர் இழந்த சினிமா ரசிகர்கள் உண்டு என்றால் எங்கள் ஊரின் மகிமையை என்னென்று சொல்வது! இந்த தியேட்டர் கட்டும்போது - அப்போது நான் நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவனாயிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். பல கதைகள் காற்றில் வந்த நினைவு இருக்கிறது. நரபலி கொடுத்ததில் பானை நிறைய கிடைத்த தங்க காசுகள் வைத்துக் கட்டப்பட்ட தியேட்டர் என்றார்கள். இதன் முகப்பு மீனாட்சி அம்மன் கோயிலைவிட உயரமாகப் போய்விடும் என்பதால் அந்த முகப்பைக் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது என்று பின்னாளில் கேள்விப் பட்டோம். ஆனால் அந்த சமயத்தில் நரபலிக் கதையின் தொடர்ச்சியாக வேறு சில கதைகள் மிதந்தன.

இப்போது இந்த தியேட்டரின் படத்தைப் போட ஆசைப் பட்டு படம் எடுக்கப் போனால், மிகவும் பரிதாபமாக முள்ளும் செடியும் மரமுமாய் பாழடைந்து பரிதாபக் கோலத்தில் இருக்கிறது. படம் எடுக்கவும் அனுமதியில்லை. என்ன பிரச்சனையோ. ஒரு காலத்தில் சிவாஜி கணேசன் இதை வாங்கப் போறதாகவும் ஒரு வதந்தி. பல வதந்திகளில் முதலிலிருந்தே சிக்கியிருந்த அந்த பிரமாண்டமான தியேட்டரைத்தாண்டி வரும்போதும், பார்க்கும்போதும் அதன் அன்றைய நாளின் சிறப்பு கண்முன்னே வருகிறது. என்ன, இன்னும் சில ஆண்டுகளில் அங்கே ஒரு பெரிய ஹோட்டலை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படி, ரீகல் தியேட்டர் போல் பிரபல்யமான இடங்களும், தங்கம் தியேட்டர் மாதிரியான பிரமாண்டமான இடங்களும் மிகக் குறுகிய காலத்திலேயே இருந்த இடம் தெரியாமலோ, அல்லது தங்களின் உன்னதங்களை இழந்து போவதென்றால் மனுஷ ஜென்மத்தைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அதிலும் ஒன்று ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ என்று சொல்வதுபோல, வெளியே பார்க்க அழகு; உள்ளே சீழும், பேனும் என்பது போலவும், இன்னொன்று முற்றுமாய் எல்லாம் இழந்து பரிதாபமுமாய் நிற்பதைப் பார்க்கும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

QUE CERA CERA…

14 Comments:

பாச மலர் / Paasa Malar said...

மதுரையின் நினவுகள் பற்றிய உங்கள் தொடர்கள் படிக்கிறேன்...(சீக்கிரம் முழுதும் படித்து விடுவேன்..)கூடிய விரைவில் நம் ஊரில் நிகழப்போகும் மாற்றங்களுக்காய் மகிழும் அதே நேரம்..கலங்கவும் வேண்டியிருக்கிறது..

நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்..

துளசி கோபால் said...

கொசுவத்திக்குக் கொசுவத்தியாங்க?

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே முந்தி படிச்ச ஞாபகம் வருதே......

தருமி said...

பாசமலர்,
நன்றி.

பழையன கழிதல்தானே வாழ்வின் முறை.

தருமி said...

ஆமாங்க, துளசி. 'தருமி' வலைப் பதிவில் போட்டதைத்தான் இதுவரை (இதுவே கடைசி) மறுபதிப்புகளாக இங்கு போட்டு வந்துள்ளேன்.

இனி எழுதுபவை புதியவனவாக இருக்கும்.

Geetha Sambasivam said...

கொசுவத்திக்குக் கொசுவத்தியாங்க?

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே முந்தி படிச்ச ஞாபகம் வருதே......

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏ

cheena (சீனா) said...

கொசுவத்திக்குக் கொசுவத்தியாங்க?

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே முந்தி படிச்ச ஞாபகம் வருதே......

ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏஏ

dapuL rippeetteeeeeeeeeee

G.Ragavan said...

என்னது!!! ரீகல் தேட்டர் வாசகசாலையா? அதுல "அந்த மாதிரி" போஸ்டருங்கதானே கண்ணுல படும். பஸ்சுல அந்த வழியாப் போறப்போ தெளிவாத் தெரியுமே.

காலேஜ் ஹவுசுல இப்பவும் டிபனெல்லாம் நல்லாருக்கு. பக்கத்துலயே இருக்குற பிரேம விலாஸ் அல்வாக்கடையைப் பத்திச் சொல்லலையே. அடா அடா அடா. திருநவேலிக்குப் போட்டியா மதுரைலயும் அலுவா கெடைக்குமிடமாச்சே.

தங்கம் தேட்டர்......ஒரு படம் பாத்திருக்கேன். சரியா நெனைவில்லை. ஆசியாவுல பெரிய தேட்டர்னு சொன்னாங்க. திரையப் பாத்தா வெள்ளி மாதிரி இருந்துச்சு. ஏன் அப்படியிருக்குன்னு கேட்டேன். வெல்வெட்டுத் திரையாம் அது. அப்படியான்னு கேட்டுக்கிட்டது மட்டும் நல்லா நினைவிருக்கு. பெரிய தேட்டர்தான்.

அப்ப நாங்க டி.ஆர்.வோ காலனியில இருந்தோம்....விஜயலட்சுமி ஜெயராஜ் தேட்டர்ல போடுற பழைய சிவாஜி படங்களுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. ஜெயராஜ்ல ரொம்ப ரொம்பச் சின்னப் பிள்ளைல ஒரு படம் கூட்டீட்டுப் போனாங்க. சிவாஜி படந்தான். ஆனா அப்ப அது என்ன படம்னோ யாரு நடிச்சாங்கன்னோ நினைவிருக்கலை. ரொம்ப வருசம் கழிச்சி அந்தப் படத்தத் டீவில பாத்ததும் கண்டுபிடிச்சிட்டேன். மிருதங்கச் சக்கரவர்த்தி. அவரு மடியில மிருதங்கத்த வெச்சிக்கிட்டு உக்காந்திருக்குற மாதிரி கட்டவுட்டு வெச்சிருந்தாங்க. அப்ப அதான் சிவாஜின்னு கூடத் தெரியலை.

சினிப்பிரியா, மினிப்பிரியா, சுகப்பிரியா, செண்ட்ரல், சக்தி, சிவம், ஷா ஆகிய தேட்டர்களும் தெரியும்.

மங்களூர் சிவா said...

நன்றாய் எழுதி இருக்கிறீர்கள்..

மங்களூர் சிவா said...

//
துளசி கோபால் said...

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே முந்தி படிச்ச ஞாபகம் வருதே......

//
repeateyyyyyy

குமரன் (Kumaran) said...

எனக்கெல்லாம் ரீகல் தியேட்டர் என்றால் அந்த மாதிரி படங்கள் போடும் தியேட்டர் என்று தான் தெரியும். முதன்முதலில் டாப்லெஸ் படத்தைப் பார்த்தது ரீகலில் தான். ரீகலின் முந்தைய உரிமையாளர்களில் ஒருவராக என் தாய்வழித் தாத்தா இருந்தார் என்று இந்த இடுகையை முன்பு இட்ட போது சொன்னதாக நினைவு. அந்த வகையில் எங்களுக்கு ரீகலில் ஓசி டிக்கட் கிடைக்கும். அந்த டாப்லெஸ் படத்தை நான் எட்டாவது படிக்கும் போது அப்பாவுடன் சென்று தான் பார்த்தேன். டிக்கட் தருபவர் 'மாப்ளே. படம் கொஞ்சம் ஓவரா இருக்கும்'ன்னு தயங்கினாலும் அப்பா 'எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது தான்'னு கூட்டிக்கிட்டுப் போனார். அது ரொம்ப ரொம்ப ஓவரா இருந்ததால அப்பாவோட உக்காந்து அந்தப் படத்தைப் பாக்க முடியாம வெளியே வந்து வராந்தாவுல காத்து வாங்கிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் பத்தாவது படிக்கிறப்ப இருந்து அடிக்கடி தீபா தியேட்டர் போனது வேற கதை.

சின்ன வயசுல தாய் வழித் தாத்தா அடிக்கடி காலேஜ் ஹவுஸுக்குக் கூட்டிக்கிட்டு போவார். சில நேரம் மதியம் மீல்ஸ் சாப்பிடவும் போயிருக்கிறோம். பெரிய ஹாலில் கல்யாண விருந்து போல் நடக்கும்.

ஒரு வேளை நீங்க சொல்ற காபிக்காகத் தான் எங்க தாத்தாவும் அடிக்கடி காலேஜ் ஹவுஸுக்குப் போனாரோ என்னவோ? எனக்குக் காப்பி குடித்துப் பழக்கம் இல்லாததால குடிச்சதில்லை.

அடடா. தங்கம் தியேட்டர் க்ளோஸ்டா? பத்து பதினைஞ்சு படம் பாத்திருக்கேனே. நியூ சினிமாவும் மூடிக்கிடக்குன்னு சொன்னாங்க.

cheena (சீனா) said...

குமரன், பத்தாவது படிக்கும் போதேவா ? ம்ம்ம் - கொடுத்து வைத்தவர். ஆமா அதென்னங்க தீபா தியேட்டர் - அதெங்கே இருக்கு ??

வவ்வால் said...

சீனா,

நீங்க மதுரைக்காரர்னு வேறப்பதிவுல போட்டுக்கிட்டு தீபா தெரியலைனு சொல்றிகளே, சிம்மக்கல்லில் இருக்குங்க தீபா , ரூபா என்று இரட்டை தியேட்டர், அங்கே எல்லாம் "அந்த" படம் தான் ஓடும், என்னைப்போன்றவர்களுக்கு இங்கிலீஷ் படம் , உங்க ஊர் ஆளுங்களுக்கு அது அந்தப்படம்! :-))

வெளியூர்க்காரன் எனக்கே தெரியுது, உங்களுக்கு தெரியலையே! என்னக்கொடுமை சார் இது!

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. பத்தாவது படிக்கிறப்பவா பன்னெண்டாவது படிக்கிறப்பவான்னு சரியா நினைவில்லை. ஆனால் தீபா திரையரங்கம் நல்லா நினைவிருக்கு. அபிலாஷா நடிச்ச படமும் நினைவிருக்கு. தீபா திரையரங்கம் எங்கே இருக்குன்னு வவ்வால் சொல்லியிருக்காரு பாருங்க.

ஏனுங்க வவ்வால் - இப்பத் தான் உங்க பழம் தின்னி, கொய்யாக்கா, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - பின்னூட்ட உரையாடல்களை எல்லாம் படிச்சேன். நீங்க எழுதி ஒரு மாசம் ஆச்சு. அதனால அதுக்குள்ள ஐயன் சொன்னத மறந்துர்றதா? தீபா திரையரங்கம் எங்கே இருக்குன்னு சீனா ஐயாவுக்குச் சொல்ல வர்றவங்க ஏனுங்க உள்ளூர்காரருக்குத் தெரியலையான்னு காயைக் கவர்றீங்க? இராகவன் டி.ஆர்.ஓ காலனியைப் பத்திச் சொன்னப்ப அது எங்கன இருக்குன்னு கேட்டவன் நான். அடுத்த காயை என்கிட்ட தான் கவரணும் நீங்க. :-)

வவ்வால் said...

குமரன்,

//இராகவன் டி.ஆர்.ஓ காலனியைப் பத்திச் சொன்னப்ப அது எங்கன இருக்குன்னு கேட்டவன் நான். அடுத்த காயை என்கிட்ட தான் கவரணும் நீங்க. :-)//

உங்களுக்கே அடுக்குமா இது அபிலாஷாவின் முதல் பாவம் பார்த்தவர் மாதிரியா பேசுரிங்க!(நான் அந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை, போஸ்டரில் மட்டும் தான் பார்த்தேன்) என்னப்போல இளவட்டத்திற்கு தீபா, ரூபா தான் கனிகள், நீங்க சொல்ற டி.ஆர்.வோ நகர் எல்லாம் கசக்கும் கனிகள்!யாருக்கு வேண்டும் அதுலாம்(அங்கே எதுனா "சீன் தியேட்டர்" இருக்கும்னா இத்தனை நேரம் எனக்கு தெரிந்து இருக்குமே)

மதுரைக்கு எப்போதோ வந்து போன எனக்குலாம் காட்டிய புண்ணியத்தலங்கள் இப்படித்தானே இருந்தது நான் என்ன செய்வேன்!(மாப்பிள்ளை வினாயகரில் கூடப்படம் பார்த்தேன் அய்யா, எதாவது ஊருக்கு போனா அந்த ஊர் அடையாளமாக ஒரு படம் பார்ப்பது பாருக்கு போவது என்று செய்வது இதெல்லாம்)

"கவரும்" மேட்டருக்கு தான் முதலில் வருவாங்க, இதுக்கு எல்லாம் அய்யன் வள்ளுவரை டிஸ்டர்ப் பண்ணலாமா சார்!