அன்று பெரிய கார்த்திகை..திருப்பரங்குன்றமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ரயில் நிலையம் அருகில் இருந்த அனுமார் கோவிலிலும் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.கண்ணாடியைக் கழற்றித் துடைத்து மாட்டிய கோபால் கோவிலின் வேலியோரம் இரை தேடிக் கொண்டிருந்த கோழிக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.தாய்க் கோழியும், மஞ்சள் வண்ணம், ரோஸ் வண்ணம் சாயம் பூசிய கோழிக்குஞ்சுகளும் பார்க்க அழகாயிருந்தன.'இவை எத்தனை காலம் இப்படிச் சேர்ந்திருக்கும், ஒரு நாள் பிரியத்தானே வேண்டும்' என்று நினைத்தார் கோபால்..மனிதனைப் போல இவையும் பிரிவுக்கு வருந்துமோ என்று யோசித்தார்..
வழக்கமாக காலை நேர நடைப்பயிற்சிக்கு மலையைச் சுற்றி வருவது அவர் வழக்கம்..கூடவே வரும் நடேசனும், ராசப்பாவும் அன்று வரவில்லை..நடேசனுக்கு உடம்பு சரியில்லை..ராசப்பா பெரிய பையனைப் பார்க்க சென்னைக்குப் போயிருக்கிறார். கோபாலுக்கும் 3 பையன்கள்..
மூத்தவன் அமெரிக்காவிலும், இரண்டாமவன் திருச்சியிலும் இருக்க, மனைவி, மூன்றாவது மகன்,
மருமகள் மற்றும் பேரன், பேத்தியுடன் வசித்துவந்தார். மகன் பேருந்து நிலையத்தருகில் சொந்தமாக ஒரு மருந்துக்கடைவைத்திருந்தான். சொந்த ஊரிலேயே கடைசிக் காலம் கழிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கொடுப்பினை பெற்றவர் கோபால்.
திருப்பரங்குன்றத்தைப் பற்றிய நிறைய விஷயங்கள் குறித்து எப்போதும் மற்றவர்களிடம் பெருமையாகப் பேசி வருவார் அவர். கம்பீரமான மலை, அதன் மேல் ஒருங்கே அமைந்த காசி விஸ்வநாதர் கோவில், சிக்கந்தர் தர்கா,(மதத்துக்காக மனிதன்தான் சண்டை போடுகிறான்..தெய்வங்கள் என்னவோ தோழமையோடுதான் இருக்கின்றன),புதிதாகப் போடப்பட்ட மலைப்பாதையில் கலந்து காணப்படும் இந்து, முஸ்லிம் குடும்பங்கள், எப்போதும் கலகல என இருக்கும் வீதிகள், எல்லா மாதமும் பண்டிகை, தேர்,சந்தனக்கூடு, தெருவெல்லாம் கல்யாண மண்டபம், எல்லா முகூர்த்தத்திலும் திருமணம், ஐயப்ப சீசனில் வெளியூர்க்கூட்டம், சினிமாப் படப்பிடிப்பு, வாரம் ஒரு முறையாவது ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்காக மேடை போட்டு அமர்க்களப்படும் பதினாறு கால் மண்டபம் என்று ஏதாவது ஒரு சாக்கில் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் ஊர்.
அன்றும் அப்படித்தான் திருக்கார்த்திகைக் கூட்டம் - அந்தக் காலை நேரத்திலேயே மலை சுற்றி வருவோரின் கூட்டம் சற்று அதிகமாகஇருந்தது. மலைப்பாதை முழுவதும் திடீரென முளைத்த பல கடைகள்..கார்த்திகை மாதம் வந்ததும் நரிக்குறவர் கூட்டமும் வந்து விடும்.
அனுமார் கோவிலை ஒட்டிக் கூடாரம் போட்டு அங்கேயே தங்கிவிடுவார்கள் ஐயப்ப சீசன் முடியும் வரை. விதவிதமாக ஊசி,பாசிமணிகள், கொம்புகள், மிருக ரோமங்கள், நகங்கள் என்று அவர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் ஏராளம். சின்னஞ்சிறு லாபத்துக்காய் வியாபாரம் செய்து ஊர் ஊராய்ச் சுற்றித் திரியும் அவர்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்தது.
ரயில் நிலையத்துக்கு எதிர்த்தாற்போல் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அதன் அருகே நரிக்குறவர்கள் பலர் தரையில் துணி பரப்பிப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்க, குறத்திகள் இடுப்பில் சுமந்த குழந்தையுடன் கையில் பாசிகளை ஏந்தியவாறு
தெருவில் போவோர் வருவோரிடம் வியாபாரம் செய்வார்கள்.
திடீரென்று அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட எல்லோரும் அங்கே விரைந்தனர். கோபாலும் அங்கே போனார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தரையிலமர்ந்து ஓலமிட்டி அழுது கொண்டிருந்தாள். "அய்யோ ராசா! இப்டிக் கல்லத் தூக்கிப் போடுறியே.
நா என்ன செய்வேன்?" சுற்றிலும் கவலை தோய்ந்த முகத்துடன் குறவர் கூட்டம். குத்துக்காலிட்டு இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்ஒரு நரிக்குறவ இளைஞன். அந்த அம்மா அவனது தாயாம். சின்ன வயதில் நாமக்கல்லில் காணாமற் போனவன் பல வருடம் கழித்துத்
தன் தாயைப்பார்த்திருக்கிறான் மலை சுற்ற வந்த இடத்தில்..அடையாளம் கண்டு கொண்டு பேசியிருக்கிறான். சிறுவயதில் இந்தக் கூட்டத்தில் சேர்ந்தவன் அந்த இனத்திலேயே ஒரு பெண்ணை மணந்து குழந்தை குட்டியென்று அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டான்.
இப்போது அந்த அம்மா தன்னுடன் வரச் சொல்லி அவனையும், அவன் மனைவி, குழந்தைகளையும் கூப்பிடுகிறாள். அவன் மறுத்து விட்டான். அந்த அம்மாவுடன் வந்த ஒரு பெண் - மருமகள் போலும், அவளைச் சமாதானப் படுத்துகிறாள். அந்தக் குடும்பமும்
நாமக்கல்லை விட்டு வந்து தற்போது மதுரையில் வசிக்கிறார்கள்.தொலைபேசிச் செய்தி போய் அப்பா மற்றும் குடும்பத்தினரும் வந்து பேசுகின்றனர். குறவர் இன வழக்கப்படி எந்தக் குடும்பமும் பிரியக் கூடாது என்றாலும் இந்தச் சூழலில் எதுவும் பேசாமல் அந்த
நரிக்குறவர்களும் மெளனம் காத்திருந்தனர். என்றாலும் அந்த இளைஞன் சமாதானமாகவில்லை. கூடியிருந்தோரும் செய்வதறியாது நின்றார்கள்.
நீண்ட நேரம் போயும் அவன் சமாதானமாகவில்லை."புள்ள குட்டின்னு ஆய்ருச்சு சாமியோவ்...இவுகள விட்டுட்டு நா எங்க வாரது? அப்பப்ப வந்து ஒங்களப் பாக்குறேன்"னு சொல்லி முகவரி வாங்கிக் கொண்டு ஒரு வழியாகச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தான்.
அழுது கொண்டே சென்றனர் அவர்கள். "இந்தப் பிரிவும்,சந்திப்பும் வித்தியசமானது. பிரிவில் இதுவும் ஒரு ரகம்" என்றுஎண்ணமிட்டபடி கோபால் கனத்த மனத்துடன் வீடு நோக்கி நடக்கலனார்.
(பி.கு: இந்தச் சம்பவம் என் சிறிய வயதில் என் ஊரான திருப்பரங்குன்றத்தில் உண்மையிலேயே நடந்த சம்பவம்.கவிதை என்ற பெயரில் ஏதாவது எழுதியிருந்தாலும்..சிறுகதை எழுதுவது இதுதான் முதல் முறை..)
Sunday, December 2, 2007
பிரிவும் சந்திப்பும்
Posted by பாச மலர் / Paasa Malar at 12/02/2007 03:58:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
நல்வரவு, பாசமலர், உண்மைக்கதை மனதைத் தொட்டது. கொஞ்சம் வசதியையோ, பணத்தையோ, நல்ல சாப்பாடு, ஆடைகளையோ பார்த்தாலும் மனம் மாறும் காலத்தில் அந்த இளஞன் செய்தது உண்மையிலேயே மனதைத் தொடும் ஒரு விஷயம் தான். மனைவி,குழந்தைகளைப் பிரியக் கூடாது என்று, பெற்றவர்களையும் அடையாளம் வைத்து, அவ்வப்போது வந்து பார்த்துக்கிறேன், எனச் சொல்ல எவ்வளவு பக்குவம் வேண்டும்? வாழ்த்துக்கள், உங்களுக்கும், அந்தப் பையனுக்கும், எங்கிருந்தாலும் வாழ்க, வளர்க!
மலர், நன்று
நல்லதொரு சிறு கதை - மனதைத் தொட்டது. அந்த இளைஞனின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் - சற்றே நினைத்துப் பார்க்கிறேன். ம்ம்ம்ம் - அவன் பெற்றவர்களையும் மறக்க வில்லை. வளர்த்தவர்களையும் மறக்க வில்லை. வாழ்க
கீதா மேடம், சீனா சார்,
நன்றி. இத்தனை வருடங்களாகியும் இதை மறக்க முடியவில்லை..
அவ்வப்போது இந்த சம்பவம் மனதில்
நிழலாடிப் போகும்..
அந்தப் பையனைத் தவறு சொல்ல முடியாது. பிரியக்கூடாது என்றால் எப்படி...ஏற்கனவே பிரிந்தவந்தானே. பாசம் உந்தத்தானே அடையாளம் தெரிஞ்சவுடம் வந்து பார்த்திருக்கிறான். பிள்ளை குட்டியை விட்டு விட்டு எப்படி வருவது? பெற்றவர்களையும் பார்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறானே. பாராட்டப்பட வேண்டியவன் அவனே. அந்த அம்மா அவனோடு போயிருக்கலாமே?
அந்தப் பையனைத் தவறு சொல்ல முடியாது. பிரியக்கூடாது என்றால் எப்படி...ஏற்கனவே பிரிந்தவந்தானே. பாசம் உந்தத்தானே அடையாளம் தெரிஞ்சவுடம் வந்து பார்த்திருக்கிறான். பிள்ளை குட்டியை விட்டு விட்டு எப்படி வருவது? பெற்றவர்களையும் பார்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறானே. பாராட்டப்பட வேண்டியவன் அவனே. அந்த அம்மா அவனோடு போயிருக்கலாமே?
ஊர் பற்றி எழுத வேண்டும் என்ற அதிக ஆர்வக் கோளாறினால் அந்தப் பையனின் உணர்வுகள் சரிவர வெளிப்படுத்தப்படவில்லை...கதையை நரிக்குறவர்கள் பகுதியில் இருந்து ஆரம்பித்திருக்கலாம்..இப்போது தோன்றுகிறது..
கருத்துக்கு நன்றி ராகவன்.
பாச மலர்,
நல்வரவு. நிறைய எழுத வாழ்த்துக்கள்.
மதுரையம்பதிக்கு..
நன்றி..
ரொம்ப நல்லா இருந்ததுங்க இந்த கதை. நீங்க சொல்லிட்டு வர்றப்பவே இது உண்மைக்கதையோன்னு தோணத் தொடங்கிருச்சு.
அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..
Post a Comment