Tuesday, December 11, 2007

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்

நான் சென்ற பதிவில் சொன்னது போல் 'திருப்பரங்குன்றம்' என்ற இடத்தில் உள்ள குன்று, பல வரலாற்றுச் சம்பவக்களுக்கு மவுனச் சாட்சியாய் இருக்கும் ஒரு இடம். ஒரு சிறந்த ஆய்வுக் குழுவால் மட்டுமே அதன் இரகசியங்களை வெளிக்கொணரமுடியும்.

வரலாற்றில் இதுதான் உண்மை என்று யாராலும் வரையறுக்க முடியாது. எந்த தகவல் உண்மைக்கு மிக அருகில் இருக்கலாம் என்று வேண்டுமானால் பேசலாமே தவிர, இதுதான் உண்மை என்று சொல்லவே முடியாது. நாளை தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கண்டறியப்படும் ஒரு கல்வெட்டு , இதுவரை நாம் நம்பிவந்த எல்லாத் தகவல்களையும் புரட்டிபோடும் ஒரு புதிய ஆதாரத்தை வைத்து இருக்கலாம், யார் கண்டார்?

வரலாறும் , அறிவியலும் இன்றைக்கு உள்ள நிலையில் சில உண்மைகளைச் சொல்லும். நாளையே வேறு ஒரு ஆராய்ச்சி, முற்றிலும் புதிய ஒரு கருத்தைச் சொன்னால , அதையும் ஏற்றுக்கொண்டுவிடும். "இதுதான் இறுதி" என்று சொல்லாமல், தகவல்களைப் பதிவதே உண்மையான அறிவியல்.

வரலாறும் அப்படியே , இன்று அறியப்படாமல் இருக்கும் சில உண்மைகள்,நாளை கண்டறியப்படலாம். இன்று காணக்கிடைக்காத வரலாறு சம்பந்தமான தகவல்கள், வருங்காலத்தில் சாத்தியமாகலாம்.அப்போது புதிய தவல்கள் கிடைக்கும்.புராணங்களும் புனிதப் புத்தகங்களும் அப்படி அல்ல. அவை கேள்விக்கு அப்பாற்பட்டவைகள். "நம்பிக்கை", "நம்பு" என்ற கட்டளைக்குள் வருபவை. அவற்றின் உண்மைத்தன்மை பற்றி கேள்வி கேட்ப்பவர்களுக்கு அங்கே இடம் இல்லை. முகம்மதின் இருப்பை கேள்வி கேட்பவன் ஒரு முஸ்லிமாக இருக்கமுடியாது. மதம் சார்ந்த புராணங்கள், நம்பிக்கை என்ற ஒரு சாவி இருந்தால் மட்டுமே நம்மை ஏற்றுக் கொள்ளும். கேள்விகள் கேட்கும் பட்சத்தில் கதவுகள் அடைக்கப்படும்.

கேள்வியைக் கேட்டவன் அவன் நினைக்கும் பதில்களைப் பகிரவேண்டும் அல்லது எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிவிக்க வேண்டும். நான் எழுப்பிய கேள்விகளுக்கான விடைகளை எனது பார்வையில் சொல்கிறேன். இங்கே சொல்லப்போகும் பதில்கள் யாவும் எனது சாதாரணப் பார்வையில் தோன்றிய தனிப்பட்ட எனது கருத்துகளே தவிர எந்த ஆராய்ச்சியின் முடிவும் அல்ல. அது போல் ஒட்டுமொதத மதுரைப்பதிவர்களின் சார்பானதும் அல்ல.


(1) 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதே கோவில் கல்கத்தாவில் இருந்திருந்தால் "திருப்பரங்குன்றக் காளி" கோவிலாக அடையாளப்படுத்தப்பட்டு , துர்க்கை முக்கியமான தெய்வமாகக் கொண்டாடப்பட்டு , மற்றவர்கள் இரண்டாம் கட்ட தெய்வங்களாக கட்டமைக்கப்பட்டு இருப்பார்கள்.

இதே கோவில், காசி போன்ற இடங்களில் இருந்திருந்தால் அர்த்த கிரீஸ்வரர் முன்னிலைப்படுத்தப்பட்டு இருப்பார்.

ஆந்திராவில் இருந்திருந்தால் பவளக்கனிவாய் ,அருள் கொடுக்க முதல் வரிசைக்கு வந்து இருப்பார்.

பல தெய்வ உருவங்கள் சமமாக உள்ள கோவில்கள், அது இருக்கும் இடம் பொருத்து நேயர் விருப்பம் போல் எதோ ஒரு தெய்வம் மட்டும் முன்னிலைப்படுத்தப்படும். எது, எங்கு, விலைபோகிறதோ அதுவே முன்னிலைப்படுத்தப்படும். இது சந்தைப்படுத்தலின் உத்தியே தவிர வேறு எந்தச் சிறப்பும் இல்லை.

பல்வேறு காரணங்களால் முருகன் தமிழ்க்கடவுளாக அறியப்படும் தமிழகத்தில், அவனே முதற் பொருளாய் இருப்பதில் வியப்பில்லை.

முருகன் விலை போவான் என்றானவுடன், அவன் சார்ந்த கதைகளும், காவியங்களும் அதிகமாக இடம் பிடித்துவிட்டது. மீனாட்சி- சொக்க்கநாதர் ஆலயத்திலும் இந்த சந்தைப்படுத்தல் உத்தியைக் காணலாம். இந்தியா அளவில் சிவபெருமான் என்னதான் பெரிய கடவுளாக இருந்தாலும், மதுரை மண் வாசம் கதைகளுக்குச் சொந்தக்காரியான மீனாட்சியே முக்கிய இடம் வகிக்கிறாள்.
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

என்னிடம் இதற்கான துல்லியமான விடையில்லை. ஆனால், எனது புரிதல்களின் அடிப்படையில் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.

மதுரையில் சமணம் அழிந்து சைவ,வைணவ சித்தாந்தங்கள் தலையெடுக்கும் போது முருகனின் கதைகள் கட்டமைக்கப்பட்டு இருக்கலாம். சமணத்தை அழிக்கும் நோக்கில் இடைவிடாது கதைகள் புனையப்பட்டு இருக்கலாம்.13ம் நூற்றாண்டுகளின் ஆரம்ப காலத்தில் அல்லது 12 ஆம் நூற்றாண்டுகளின் கடைசிக்காலங்களில் புராணங்கள் திருத்தப்பட்டு இருக்கலாம்.

(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

தமிழக வரலாற்றில் மதுரை என்பது மிகப்பழமையான நகரம். இக்கால அரசியலில், கட்சி ஆரம்பிப்பவர்கூட முதல் மாநாட்டை மதுரையில் தொடங்கவே ஆசைப்படுகிறார்கள். மேலும் தமிழ்ச் சங்கம் என்றால் அது மதுரை என்று ஆகிவிட்டது.

முருகன் தமிழக் கடவுளாக அறியப்படும்போது ,அவனின் முதல்வீடு மதுரையில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதன் பொருட்டே தனியான அறை ஏதும் இல்லாமல், ஒரே குன்றில் மற்ற தெய்வங்களுடன் இருந்தாலும், இந்த இடம் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.

ஆன்மீக அரசியலில் நடந்துள்ள மிக நுண்ணியமான கட்டமைப்பு என்றே நினைக்கிறேன்.

அல்லது இந்த இடம் மற்ற முருகன் தலங்களுடன் ஒப்பிடும்போது பழமையான ஒன்றாக (கால அளவில்) இருக்கும் வேளையில் , முதல் வீடாக அடையாளம் காட்டப்பட்டு இருக்கலாம்.
விரிவான முந்தைய கருத்துப் பரிமாற்றத்தை வாசிக்க...
திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html


Picture Courtesy:
http://www.yogamalika.org/

6 Comments:

பாச மலர் / Paasa Malar said...

பல விஷயங்கள் சிந்திக்க வைத்து திருப்பரங்குன்றம் பற்றிய புதிய செய்திகள் தந்தமைக்கு நன்றி...

பாச மலர் / Paasa Malar said...

பல விஷயங்கள் சிந்திக்க வைத்து திருப்பரங்குன்றம் பற்றிய புதிய செய்திகள் தந்தமைக்கு நன்றி...

Unknown said...

பாச மலர்,
நிறைய ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒன்று இந்த இடம். கேள்விகளை அன்றி நான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. . நன்றி !

Geetha Sambasivam said...

12,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பாடப்பட்டதாய்த் தெரிகின்றது!:)))))))))))))))


"நக்கீரர் பாடியனவாகப் பதினொன்றாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்த திரு முருகாற்றுப்படை, பத்துப்பாட்டில் முதற் பாட்டாக அமைந்து சங்ககால நூலாக விளங்குகிறது.


காலம்


கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.


கல்வெட்டுச் சான்று


நக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவர் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம்.


கதை வழக்கிற்குக் காரணம்


நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்
சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே - அதனால்


கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது


அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்


ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து


வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே


என்பதாகும். இப்பாடலில் வரும் பழிச்சினன் என்ற சொல்லுக்கு போற்றித் துதித்தேன் எனப் பொருள் காணாது பழித்தனன் என்று பொருள் கொண்டதால் ஏற்பட்ட விபரீதமே நக்கீரர் இறைவன் பாடலில் பிழை கண்டு பின் அவர் அருள் வேண்டிப் பல பிரபந்தங் களால் போற்றினார். என்னும் புனைவுக் கதைகட்குக் காரணமாயிற்று எனவும் கூறுவர்.
www.thevaaram.org

சாலிசம்பர் said...

சுட்டிகளுக்கெல்லாம் மிக்க நன்றி கல்வெட்டு.அவற்றையெல்லாம் நேரில் போய் பார்க்க வேண்டும் என்ற பேராவலை ஏற்படுத்தியுள்ளது.

கலாச்சார ஆக்கிரமிப்பு தான் இது.இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல இடங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.அப்படியென்றால் இதை சாதரணமாக எடுத்துக்கொண்டு போய்விட வேண்டியது தானோ?

Unknown said...

கீதா,

நான் கேட்டுள்ள 3 கேள்விகளுக்கும் நச்சுன்னு பதில் கொடுத்தால் நல்லது. உங்களின் விளக்கத்தில் இருந்து எனது 3 கேள்விகளுக்குமான விடைகளை என்னால் பிரித்து அறிய முடியவில்லை.

உங்களின் பினூட்டம் தரும் ஒரே தகவல் , "இந்த இடம் 12,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பாடல் பெற்ற தலம்" என்பது மட்டுமே. அதில் இருந்து நான் அறிவது "12,13-ம் நூற்றாண்டுக்கு முன்னரே இத்தலம் இருந்திருக்கிறது" என்பது மட்டுமே.

எனது கேள்விகளுக்கான நேரடி விடைகள் இல்லை. "இருக்கிறது புரிந்து கொள்ளுங்கள்" என்று நீங்கள் சொன்னால் "சாரி" எனக்குப் புரியவில்லை. 1,2 &3 என்று எனது கேள்விகளுக்கு நேரடி பதில் கொடுத்தால் நல்லது.

******
இதில் மிக மிக முக்கியமானது, நீங்கள் கொடுத்துள்ள http://www.thevaaram.org சுட்டியே நீங்கள் சொல்லியுள்ள கல்வெட்டுத்தகவல்களை "தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல" என்று மறுதலிக்கிறது அல்லது சந்தேககிக்கிறது.

பார்க்க:

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=192

// இத்தலத்துக் கல்வெட்டுக்களாக செவல் பாதிரியார் குறிப்பவை பதினொன்று. ஆனால் அவைகள் தெளிவும், வரலாற்று விளக்கம் உடையனவும் அல்ல.//


******