Monday, December 31, 2007

ஆறுபடை வீட்டில் திருப்பரங்குன்றம் முதல் படையானது ஏன்?

சென்ற வாரம் மாலையில் திருப்பரங்குன்றத்திற்குப் போக நேரிட்டது. நல்ல கூட்டம், சிறப்புக் கட்டணத் தரிசனத்துக்கே இருந்தது. சிறப்புத் தரிசனத்துக்குத் தான் சென்றோம். அங்கே தரிசனம் செய்யப்போகும் முன்னர் முதலில் அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசித்த பின்னரே முருகன் ஆலயத்திற்குச் செல்வது மரபு. ஆனால் நேரமின்மையால்,
முருகன் ஆலயத்திற்கே முதலில் சென்றோம். சிறப்புத் தரிசனச் சீட்டு வாங்கிச் சென்றோம். செல்லும் வழியிலேயே ஒரு அம்மன் சன்னதி, பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டது உள்ளது, எனினும் கூட்ட மிகுதியால் தரிசனம் செய்ய முடியவில்லை. பின்பு ஐந்து தெய்வங்களும் சேர்ந்து அருள் பாலிக்கும் இடம் வந்து, சிவலிங்கத் திருமேனி தரிசனம் முடிந்து கற்பக
விநாயகர் தரிசனம் செய்தோம். விநாயகருக்கும், சிவனுக்கும் சேர்த்து ஒரு அர்ச்சகர் இருந்தார். இரு சன்னதிகளிலும் தனித் தனியே தீப ஆராதனை செய்து வழிபடச் செய்தார். ,மிகச் சிறிய வயதினர் தான் என்றாலும் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன். ஏன் ஐந்து பேரும் ஒன்றாக வந்திருக்கிறார்கள் என.

முருகனுக்குத் திருமணம் என்றால் அம்மை, அப்பன் இல்லாமலா? ஆகவே ஐயன், தன் மூத்த மகன் விநாயகனுடனும், விஷ்ணுவுடனும், மஹிஷாசுர வதம் முடிந்த நிலையில் இருந்த அன்னையை அவசரம், அவசரமாய் இழுத்துக் கொண்டும் வந்திருக்கிறான்.
விஷ்ணு மாமன் அல்லவா? மேலும் முருகப் பெருமான் சன்னதியில், திருமணம் நடத்தி வைக்கும் பிரம்மா, நாரதர், சூரிய, சந்திரர், இந்திரன் என அனைவரையும் தனித்தனியாகச் சொல்லிக் காட்டி தீப ஆராதனை செய்தார். முருகனுக்கும், விஷ்ணுவுக்கும் ஒரே குருக்கள் , அம்பிகைக்குத் தனியாக ஒரு குருக்கள் என இருந்தனர். எல்லா சன்னதியிலும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப,அத்தனைக் கூட்டத்திலும் அர்ச்சனைகள் செய்து தரப்பட்டது.

"அர்ச்சனைத் தட்டை கொடுத்தால் "எந்த கேரக்டருக்கு அர்ச்சனை?" என்று கேட்பதே இல்லை. எந்தெப் பெயருக்கு என்று கேட்டுவிட்டுநேரே முருகனுக்குப் போய்விடும்.
"முருகனைப் பார்க்க வரவில்லை, துர்க்கவிற்காக வந்தேன்" , என்றால் அர்ச்சகரால் நீங்கள் டேப்பராகப் பார்க்கப்பட வாய்ப்பு உண்டு. மேலும் இங்கே முருகன் என்ற ஒரு கேரக்டருக்காக கொண்டாடப்படும் விழாக்கள் போல சம அந்தஸ்தில் உள்ள மற்ற கேரக்டர்களுக்கு விழாக்கள் கொண்டாடப்படுவது இல்லை."

மேலே உள்ளது பலூன் மாமாவின் திருப்பரங்குன்றம் பற்றிய வர்ணனை! ஆனால் அர்ச்சகர்கள் கேட்டுக் கொண்டே அர்ச்சனைகள் செய்தனர். முருகன் என்ற ஒரு காரக்டருக்கு மட்டுமே விழா எடுப்பதாயும் சொல்லி இருக்கிறார் பலூன் மாமா. உண்மைதான், கல்யாணத்தில் கல்யாணப் பையன் தான் ஹீரோ, மற்றவர் எல்லாம் ஜீரோதானே?
எந்த அர்ச்சகரும் எந்த பக்தரையும் "டேப்பர்" எனப் பார்க்கவில்லை, இன்னும் சொல்லப் போனால் எங்கள் பயணத்திலேயே இந்தச் சன்னதியிலும், பழனியிலும் மட்டுமே தரிசனம் நன்கு செய்ய முடிந்தது. இது தான் உண்மை! மற்றக் கேள்விகளுக்கான பதில் தொடர்கிறது.

"பலூன் மாமாவின்கேள்வி ஒன்று: ஐந்து காரக்டருக்கான ஒரு பொதுக்கோவில் எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?"

முதலில் இது ஐந்து பேருக்கான கோவிலே இல்லை. எனக்குத் தெரிந்தவரை, இதைத் தென்பரங்குன்றம் எனச் சொல்லுவார்கள். பரம் என்பது எல்லையற்ற அந்தப் பரம்பொருளான சிவனைக் குறிக்கும். இங்கே மலையே லிங்க வடிவில் உள்ளது. மேலும் தென்னாட்டில் உள்ளது. ஆகவே இதன் பெயர் தென்பரங்குன்றம் என ஆயிற்று. திரு என்பது அடைமொழி, சிறப்பாகச் சொல்லுவதற்குப் பயன்படுத்தப் பட்டு பின்னாட்களில் திருப்பரங்குன்றம் என்பது நிலைத்திருக்கலாம். சிவனடியார்கள், தென் கைலை மலை எனவும் இதைச் சிறப்பித்து இருப்பதாய்ச் சொல்கின்றனர். மலையின் உச்சியிலும் ஒரு சிவன் கோயில் உள்ளது. லிங்கவடிவில் காட்சி அளிக்கும் இம்மலையில் சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவம் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது.

குருபக்தியின்றி ஞானம் பெற முடியாது. அன்னை மடியில் அமர்ந்து சோமாஸ்கந்தனாய் முருகன் அருள் பாலித்திருந்த வேளையில், பிரணவ மந்திர உபதேசத்தை அன்னைக்கு, இறைவன் உபதேசிப்பதைக் கேட்க நேர்ந்தது. நடந்தது தற்செயலான ஒன்று என்றாலும், ஆறுமுகனே பிரணவ மந்திரத்தை அறியாதவன் அல்ல என்றாலும், சிவனும், தானும் ஒன்றே என்பதை உணர்ந்திருந்தாலும், எதுவும் முறையின்றி நடக்கக் கூடாது எனத் தன் குற்றத்திற்குப் பரிகாரம் தேடி இங்கே வந்து தவம் செய்த முருகனுக்கு, அம்மனும் அப்பனும் காட்சி கொடுக்கின்றனர். ஐயனைப் "பரங்கிநாதர்" எனவும், அம்மையை "ஆவுடை நாயகி" எனவும் அழைக்கின்றனர். அந்த ஆலயம் தான் தற்போது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என அழைக்கப் படுகிறது, என்றும், முதலில் அங்கே போய்த் தரிசனம் முடித்து விட்டே பின்னர் முருகன் ஆலயம் செல்லவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

மற்றக் கேள்விகளுக்குப் பதில் தொடரும். தகவல்கள் கோயிலில் மட்டுமின்றி கூகிள் தேடலிலும் தேடி உறுதி செய்து கொண்டேன்.

6 Comments:

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. டேப்பர் என்றால் என்ன?

Geetha Sambasivam said...

ஏமாளி னு நினைக்கிறேன்.

Unknown said...

கீதா,
உங்களின் எல்லா விளக்கங்களும்/பதில்களும் முடிந்தபிறகு உங்களின் பதில்களுக்கான எனது தரப்பு பார்வையைச் நான் சொல்கிறேன்.

***

குமரன்,
டேப்பரா-பாக்குறது என்பது

இழிந்து நோக்குதல்
கேவலமாகப் பார்த்தல்
இளக்காரமாகப் பார்த்தல்
கிண்டலாகப் பார்த்தல் என்ற அளவில் கல்லூரிக்காலத்தில் பயன்படுத்தி உள்ளோம்.

cheena (சீனா) said...

கீதா மதுரைக்கு வந்தீர்களா - சந்தித்திருக்கலாமே !! ம்ம்ம் - கொடுத்து வைக்கவில்லை.

jeevagv said...

ராஜ யோகத்தில் அறுபடை வீடுகளையும் ஆறு சக்கரங்களுக்கு ஒப்பிடலாம். முதல் சக்கரம் - மூலதாரம் - இந்த சக்ரத்தினை திருப்பரங்குன்றத்தோடு ஒப்பிடலாம்.
ஏனெனில்:
தங்கள் அழுக்குகளை, மூலாதாரத்திற்கு கீழுள்ள சக்கரங்களை மறந்து, இறைவனுடம் இணைவதைக் குறிப்பது, திருப்பரங்குன்றத்தில் தேவசேனை-திருமுருகன் திருமணம் நடந்த திருத்தலமாதலால்.
இந்த வகையிலும் இந்தக் குன்றம் முதல் படைவீடு.
எந்த சைவக் கோவிலுக்குப் போனாலும், முதலில் கணபதியை வணங்கிவிட்டு, பின்னர்தான் மூலவரை வணங்குதல் முறை. இதன் பொருள் - மீண்டும் மூலதாரத்தில்தான் - ஏனெனில் கணபதியே மூலதாரத்திற்கு அதிபதி - வாயில்காப்போன் போல. கர்ம வினைகளை கழுவிட, விக்னேஸ்வரன் அவன் அருள் பெற்ற பின்னரே அடுத்தடுத்த நிலைகளை எட்ட இயலும்.

நானானி said...

முதல் படைவீடு எங்கள் திருச்செந்தூர் அல்லவா? விளக்கம் தேவை.
செந்தில்முருகன் 'நாந்தேன் ஃபஸ்ட்' என்கிறார்.
டேப்பர் என்றால் 'அல்பம்' என்றும் கொள்ளலாமா?
திருப்பரங்குன்றத்தில் நீங்கள் சிரித்தது...இல்லையில்லை சொன்னது அருமை.