மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் போன வருஷம் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும்.
எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.
உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.
பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.
மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.
எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.
சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((
Monday, December 29, 2008
மதுரையும், மார்கழி மாசமும்
Posted by Geetha Sambasivam at 12/29/2008 10:22:00 AM 26 comments
Labels: கீதா சாம்பசிவம்
Saturday, December 20, 2008
எங்கே என்னோட மதுரை????
என்னத்தைச் சொல்றது? பாசமலர் புகழோ புகழுனு புகழறதைப் பார்த்தால் நாம இப்படி எழுத வேண்டி இருக்கேனு இருக்கு. ஆனால் உள்ளதைத் தானே எழுதி ஆகணும். ம்ம்ம் ஊர் எப்படி எப்படி எல்லாம் முன்னேற்றம் அடையுதுனு அவங்க சொல்றாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியை நல்லாப் பராமரிக்கிறது பத்திச் சொல்றாங்க பாசமலர்.
//மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.//
சரிதான், சிமிண்ட் பாதை மட்டும் போட்டால் சரி, ஆனால் மக்கள் மனசிலும் சிமிண்டாலேயே மூடிக்கிட்டிருக்காங்க போல. கோவிலில் நுழையும் எல்லாவழிகளிலும் பாதுகாப்புச் சோதனை தவிர்க்கமுடியாது தான். ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா?? கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா? அதிகம் ஆகுமா? ஏற்கெனவே நின்ன இடத்தில் இருந்து நகருகிறதே இல்லை யாரும். அதிலும் மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் கூடும் இடத்தில் கோபு ஐயங்கார் கடை வாசலில் ஆரம்பிச்சால் மேலகோபுர வாசலும் தாண்டி தெற்கு கோபுர வாசலையும் தாண்டி, சொக்கப்ப நாயக்கன் தெருவையும் தாண்டி நெரிசல் தாங்கலை. கீழ வாசல் கேட்கவே வேண்டாம். எந்த வழியிலே நுழைஞ்சாலும் இதே தொல்லை தான். போன வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.
நாங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். எங்களோடு பத்து, இருபது பேர் வந்தாங்க. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நுழைவு வாயில் வழியாக நுழைந்தோம் அவ்வளவு தான். பிறகு திருப்பதியை விட மோசம். திருப்பதியிலே ஒரு செகண்டாவது பார்த்துடலாம். இங்கே மீனாட்சி தெரியவே இல்லை. அதுக்குள்ளே அதே வழியாக மொத்தக் கூட்டத்தையும் அவங்க இஷ்டத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் உள்ளே விட நெரிசலில் சிக்கிக் கொண்ட நான் வெளியே வரமுடியாமல் தவிக்க, வெளியே வந்துவிட்ட என் கணவரும், பையரும் அங்கே இருந்த பெண் காவலரிடம் சொல்லி என்னை மீட்கச் சொல்ல, அவங்க பேசாமல் இருக்க,ஊழியர்களின் இந்த வேலையைக் கண்டு பட்டர்கள் சத்தம் போட, ஊழியர்கள் லட்சியமே செய்யவில்லை. அப்புறமாய் ஒருவழியாய் எங்க பையர் என்னை வெளியே கொண்டு வந்தார். மூச்சு முட்டிப் போய்விடும்போல் ஆயிடுச்சு. இதுவும் முன்னேற்றத்தில் ஒரு வகை போல.
வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு. இன்று காலை ஒரு வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஜெர்மனியின் ஒரு புராதன நகரைக் காட்டினாங்க. புராதனச் சின்னங்களை அவங்க எல்லாம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது நாம் கட்டாயமாய் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வகையில் அவங்க திறம்பட திருப்திப் படுத்தறாங்க என்பதும் கவனிக்கணும். ஆனால் நாம அவங்க உடை, உணவு, மொழி, கலாசாரம்னு மாத்திக்கிறோமே தவிர எது வேணுமோ அதை விட்டுடறோம்.
எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம். அவள் கடைக்கண் பார்வையால் அனைவரையும் ரட்சிக்கிறாள்னு சொல்லுவோம். அந்தக் கண்களை சிமெண்ட் போட்டு மூடிக் கொண்டாள் போல. ஓயாமல் சலிக்கும் கண்களால் இப்போ பக்தர்களைப் பார்ப்பதில்லைனு வச்சிருக்கா போல. மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு. இது என்னோட மதுரை இல்லை. ஒரு வேளை 25 வருஷமாய் எந்த வகையிலும் மாறாமல் இருக்கும் அம்பத்தூரைப் பார்த்துட்டே இருக்கிறதாலே இப்படித் தோணுதோ?? :((((((((
எங்கே என்னோட மதுரை????????? :((((((((
Posted by Geetha Sambasivam at 12/20/2008 03:06:00 PM 12 comments
Labels: கீதா சாம்பசிவம்
Friday, December 19, 2008
லகலகலக மதுரை லகலகலக
கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை மதுரைக்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது. மாறுதல்கள் கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது..கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்..இன்னும் சற்றுச் சூடு பிடிக்க வேண்டும் என்றாலும்..சிறு குழந்தை எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தாய்க்கு முக்கியம்தானே..
மதுரை.....
- மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
- கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
- கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.
- பக்தி அதிகரித்துவிட்டதோ, பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரித்துவிட்டதோ...15 ரூபாய் வரிசையில் 2 மணி நேரம் நின்ற பின் தான் மீனாட்சி தரிசனம்..நடுநடுவில் வரிசையில் நமக்குப் பின் நின்றவர்கள் எப்படி நமக்கு முந்திப் போனார்கள் ..எப்போது..எப்படி அங்கே இருந்த காவலர்களையும் பணியாளர்களையும் 'கவனித்தார்கள்' என்பதே புரியாத புதிர்தான்.
- தெரு வீதிகள் சென்னை தி.நகரை மிஞ்சும் வண்ணம் கலகலகல..
- வாகனங்கள் அதிகரித்துவிட்டன..எனவே போக்குவரத்து நெரிசலும் அதிகம்தான்..முக்கியமான சந்திப்புகளில் விளக்குகள் இருந்தபோதும் போக்குவரத்துக் காவலரின் பணியும் தேவைப்படும் அளவுக்கு நெரிசல்தான்..
- டிவிஎஸ் நகர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ரயில் போவதற்காக வண்டிகள் நிறுத்தப் படும்போது...போக்குவரத்து நெரிசலோ நெரிசல்...இவ்விரு இடங்களிலும் பாலங்கள் அவசியத் தேவையென்று உணரும் காலம் எப்போது வரும்? அதிலும் திருப்பரங்குன்றம் இரண்டு ரயில் கேட்டுகளுக்கு நடுவில் இருப்பதால் ஏதேனும் ஓர் அவசர காரியமென்றால் கூட உள்ளூர் வாசிகளுக்குப் படு சிரமம்தான்.
- எஸ் எஸ் காலனி புறவழிச்சாலையில் நாயுடு ஹால் துணிக்கடை
- மேலமாசிவீதியில் பழைய உடுப்பி இருந்த இடத்தில் வளர்ந்து வரும் போத்தீஸின் ஐந்து அடுக்குக் கட்டடம்..
- இன்னும் பல கட்டட வேலைகள் மும்முரமாய் அனைத்துப் பிரதான சாலைகளிலும் நடந்தேறி வருகின்றன.
- முனிச்சாலை தாண்டித் தெப்பக்குளம் போகும் இடத்தில் பழைய தினமணி அலுவலகம் இருந்த இடத்தில் வரப்போகிறது பல்லடுக்கு அங்காடி.
- மதுரை திருமங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு அபரிமிதமான மாற்றங்கள்..மஹிந்திரா, ஃபோர்டு, டொயோட்டா, மிட்ஸுபிஷி வாகன விற்பனை மையங்கள் படு நவீனமாக..
- தோப்பூர் அருகே இறுதிகட்டத்தை நெருங்கும் நான்கு வழிப்பாதை.
- வளர்ந்து வரும் புதிய விமான நிலையக் கட்டடப் பணி..காத்திருப்பு அறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த விமான நிலைய விஸ்தரிப்புக் காட்சிகள் வியப்பூட்டின. வெளிநாட்டு விமான நிலைய அந்தஸ்து கூடிய விரைவில் கிட்டுவதற்கான சாத்தியங்களைப் பறைசாற்றின..அங்கே வைக்கப்பட்டிருந்த புதிய விமான நிலையத்தின் மாதிரி மலைக்க வைத்தது.
- திரையரங்குகளில் பழைய காலம் போல் கூட்ட நெரிசல்கள் இல்லையென்பது..மதுரையில் ஓர் அதிசயம்தான்..
இன்னும் இன்னும் பல மாற்றங்கள் அதிசயிக்க வைத்தன..ஒவ்வொரு முறை மதுரை வரும்போதும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கத்தான் செய்கின்றன..
Posted by பாச மலர் / Paasa Malar at 12/19/2008 11:33:00 AM 7 comments
Labels: வளரும் மதுரை
Tuesday, November 11, 2008
மீண்டும் உயிர்த்தெழுந்த மதுரைப் பதிவுகள்!
நானும் மதுரைப் பதிவிலே மதுரைக்குப் போகாதேடி என்று தலைப்புக் கொடுத்த வேளையோ என்னமோ தெரியலை, அதுக்கப்புறம் பதிவு போடவே திறக்கலை. சரி, நம்ம ராசி தான் இப்படினு தெரியுமேனு நினைச்சுக் கொஞ்ச நாள் ஆனாத் தானாச் சரியாகும்னு இருந்துட்டேன். அதுக்கப்புறம் என்ன என்னமோ நடந்து விட்டதா?? போன டிசம்பரில் போயிட்டு வந்தது மதுரைக்கு. அதை நான் போட ஆரம்பிச்சதே ஜூலையில் தான் அதையும் முடிக்க முடியாமல் சதி மேலே சதி! இதுக்கு நடுவிலே எங்க சிநேகிதர்கள் வீட்டிலே மதுரைக்குப் போயிட்டு வந்து என் கிட்டே கமெண்ட் வேறே. அவங்க கிட்டே நான் ப்ளாகிலே எழுதி இருக்கிறதெல்லாம் சொல்லவும் இல்லை அவங்களுக்கும் தெரியாது இந்த மாதிரி மதுரை ஊரே நாக்கைப் பிடுங்கிக்கிறாப்பல எழுதறேன்னு. ஆனாலும் குற்றப்பத்திரிகை என் கிட்டே தான் வாசிச்சாங்க. "என்ன உங்க ஊரு இப்படி இருக்கு? ஒரே கூட்டம்? வண்டியை நிறுத்த முடியலை, கோயிலுக்குப் போக முடியலை, போனா சாமியைப் பார்க்கவும் முடியலை. இரண்டு நாள் போயிட்டு கடைசியில் மீனாட்சியைப் பார்க்க முடியாமத் திரும்பி வந்தோம். சுந்தரேஸ்வரர் சந்நிதிக்குப் போயிட்டோம். ஆனால் பார்க்கிறதுக்குள்ளே விரட்டிட்டாங்க. கூட்டமும் வந்துட்டது. திருப்பதியை விட மோசமா இருக்கே? கொஞ்சம் கவனிக்கக் கூடாது? ஆனால் நீங்க எல்லாம் ஊர்க்காரங்க, நீங்க போனால் தனியாக் கவனிப்பாங்க!" என்று ஏற்கெனவே மீனாட்சியைப் பார்க்காமல் வந்த என்னோட வயிற்றெரிச்சலை அதிகப் படுத்தினாங்க.
என்னவோ அறநிலையத் துறையே என் கையிலே இருக்குங்கற நினைப்பிலே அவங்க பேசினதும், கொஞ்சம் எனக்கே சந்தேகமாத் தான் இருந்தது. ஒருவேளை அறநிலையத் துறை நாம் சொன்னால் கேட்குமோனு. அப்புறமாத் தான் நம்ம ம.பா. இருக்காரே, நம்ம கனவைக் கலைக்கவென்றே வந்திருக்கும் ஆசாமி, என்ன நாம் போனது மறந்துடுச்சா?? உங்க ஊரின் யோக்கியதை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு!" என்று கெக்கலி கொட்டிச் சிரிக்க, எங்கே கொண்டு போய் மூஞ்சியை வச்சுக்கிறதுனு தெரியாமல், கணினி முன்னாலே உட்கார்ந்து எழுத வந்தேன். அப்போத் தான் சீனா சார், அதிசயமா என்னோட வலைக்கு வந்துட்டு, என்ன ஆச்சு மதுரைப் பதிவுகளுக்குனு ஒரு கேள்வியையும் கேட்டுட்டுப் போனாரா? ஆஹா, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு பார்த்தால் மீண்டும் திறக்கலை. நம்ம ராயலைக் கேட்கலாம்னு நினைச்சால், அவர் என்னமோ சிங்கப்பூர் போகப் போறேனு மெயிலி இருந்தாரா? இப்போ தொந்திரவு செய்ய வேண்டாம்னு பொறுத்து இருந்தேன்.
அதுக்குள்ளே நவராத்திரி வந்து, நானும் கீழே விழுந்து, எழுந்து, பதிவுகள் போட ஆரம்பிச்சு, தீபாவளியும் வந்து, ராயலும் இதைச் சரி பண்ணிக் கொடுத்து, ஒரு வழியா வலைப்பக்கமாத் திறக்கும்படியாக தாற்காலிக ஏற்பாடு பண்ணி வச்சிருக்கார். எத்தனை நாளுக்கோ தெரியலை. அதுக்குள்ளே நவராத்திரி நினைவுகள், தீபாவளி நினைவுகள்னு முட்டி மோத ஆரம்பிச்சுட்டது. எல்லாத்துக்கும் மேலே, காலேஜ் ஹவுஸிலே கத்தினதோடு நிறுத்தி இருக்கேனே. மேற்கொண்டு சாப்பிடவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்தாச்சு. ப்ளீச்சிங்க் பவுடர் என்னைக் கோவிச்சிருக்கார். என்ன இப்படி மதுரையைச் சொல்லலாமானு? அவர் எந்தக் காலத்து மதுரையைச் சொல்றார்னு தெரியலை! மீண்டும் வரேன். கொஞ்சம் சக்தியைத் திரட்டிக் கொண்டு. அதுக்குள்ளே இது ஒரு அவசர மொக்கை. மொக்கைக்குத் தானே ஆதரவு கொடுக்கிறாங்க. அதனால் ஒரு மொக்கை போட்டுட்டு, அப்புறம் ஆரம்பிக்கலாம்னு!
Posted by Geetha Sambasivam at 11/11/2008 03:33:00 PM 10 comments
Labels: கீதா சாம்பசிவம்
Saturday, July 12, 2008
மதுரைக்குப் போகாதேடி! - பகுதி ஒன்று
மதுரைக்குப் போயிட்டு வந்த அனுபவத்தை எழுதணும், எழுதணும்னு ஒரு ஆறு மாசமா நினைச்சும் முடியாமப் போயிட்டே இருக்கு. கல்வெட்டுக்கு திருப்பரங்குன்றம் பத்திய பதிலை இன்னும் சொல்ல முடியலை, அதனாலேயே வரதுக்கு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ பதில் கிடைக்கலைனாலும், சில இடங்களில் கல்லை விட்டு எறிஞ்சு இருக்கேன். வரும்போது வரட்டும்னு இப்போ எழுத வந்தேன். டிசம்பரில் மதுரைக்குப் போனப்போ முதல் அதிர்ச்சி, மத்தியானம் 12-00 மணி அளவுக்கே போயும் தங்க இடம் கிடைக்காதது தான். பைபாஸ் ரோடில் அண்ணா இருக்கின்றார் என்றாலும் திடீர்னு போய் 4,5 பேர் அங்கே இருக்கிறது எப்படினு யோசிச்சு, லாட்ஜில் ரூம் போடலாம்னு போனால், காலேஜ் ஹவுஸில் ஒரே ஒரு ரூம், கீழே இருக்கு, அதுவும், ஏசி ரூம், ஆனால் ஏசி போட மாட்டோம், சார்ஜ் என்னமோ ஏசிக்கு உள்ளதுதான். அதிலேயே எல்லாரும் தங்கிக்கணும்னு கண்டிஷனா சொல்றாங்க. வேறே ரூமே இல்லைனு திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க. பக்கத்தில் எல்லாம் போய்ப் பார்க்கலாம்னா, காலேஜ் ஹவுஸ் அனெக்ஸிலும் ரூம் இருக்குனு சொல்லிட்டு, கடைசியில் மெயின் பில்டிங்கில் பார்த்துட்டுத் தான் வரீங்களா? அங்கே கிடைக்கிறதை வாங்கிக்குங்க, அது இல்லைனால் இங்கே வாங்கனு சொல்றாங்க. இதுக்கு நடுவிலே, எல்லாருக்கும் பசி வேறே வந்தாச்சு. சாப்பிட்டுட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணி, வண்டியைத் தேடினால் வண்டி விட்ட இடத்தில் இல்லை. வண்டிக்குள்ளே பர்ஸ் மாட்டிட்டு இருக்கு. கடைசியில் அங்கே, இங்கே திரட்டி, எல்லார் கிட்டேயும் கையிலே இருக்கிற காசை எண்ணிப் பார்த்துட்டு, சாப்பாட்டுக்குப் போதும்னு முடிவு பண்ணிட்டு சாப்பிடப் போனால், பையர் முறைப்பு! இது என்ன உங்க ஊர்? இப்படி இருக்கு? னு ஏதோ இப்போத் தான் முதல்லே மதுரைக்கு வர மாதிரி என்னைக் கேட்கிறார். கேட்கணுமா? நம்ம ம.பா.வுக்கு. ஏகக் குஷி! ஒரே சந்தோஷத்தோட ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணிச் சாப்பிட ஆரம்பிச்சார். நமக்கு ஏற்கெனவே வெளியே போனால் சாப்பிட முடியாது. இப்போ டென்ஷன் வேறே. ஜூஸ் மட்டும் போதும்னு போனால் பையர் விரட்டறார், போய்ச் சாப்பிடுனு.
தலையில் அடிச்சுட்டு, வந்து ஒரு தயிர் சாதம்னு சொல்லிட்டு உட்கார்ந்தேன். தயிர்சாதத்துக்கு முதலிலேயே பணம் கொடுத்துடணுமாம். அப்புறம் வேண்டாம்னு சொல்லக் கூடாதாம். பொதுவா எல்லா ஓட்டலிலேயும் தயிர் சாதம் பில் தனியாத் தான் வரும். இங்கே என்னனு நினைச்சுட்டு சரினு பணம் எவ்வளவுனு கேட்டால்? ஒரு மூட்டை அரிசிவிலை தயிர்சாதத்துக்குச் சொல்றாங்க. எனக்கு அவ்வளவெல்லாம் வேண்டாம், அன்னதானம் பண்ணலைனு விளக்கறதுக்குள்ளே, அந்த ஊழியர் என் கையிலே இருந்து பணத்தைப் பிடுங்கிட்டுப் போய்ட்டு, ஒரு தட்டைக் கொண்டு வந்து வச்சார். தட்டிலே வெள்ளையாக ஏதோ ஒரு சின்ன ஐஸ்க்ரீம் ஸ்பூன் அளவுக்கு இருந்தது. அதன் உச்சியிலே பொட்டு வச்சாப்பலே சிவப்பா ஏதோ இருக்கு! என்னமோ முதலில் சாப்பிட வச்சிருக்காங்க போலிருக்கு, தயிர்சாதம் எப்போ வரும்னு தெரியலையேனு, மறுபடி அந்த ஊழியரைக் கூப்பிட்டு, ரொம்ப முறைப்பா, "நான் தயிர்சாதம் கேட்டேனே?" என்று கேட்க, அவர் அதைவிட முறைப்பாகவும், அலட்சியமாகவும் என்னைப் பார்த்து, "என்னம்மா, கிண்டலா?" என்று கேட்க, "நான் ஏன் உங்களைக் கிண்டல் பண்ணறேன்? நான் சாதம் தானே கேட்டேன்?" என்று ரொம்பவே அப்பாவியாய் நான் பதில் சொல்ல, அவர் தட்டிலிருந்து வெண்மையான வஸ்துவைச் சுட்டிக் காட்டி, "இது என்ன?" என்று கேட்கவே, நான் ,"என்ன? இதான் தயிர்சாதமா?" என்று கத்திய கத்தலில், மொத்த காலேஜ் ஹவுஸும் அங்கே திரண்டுவிட்டது.
Posted by Geetha Sambasivam at 7/12/2008 04:29:00 PM 22 comments
Labels: கீதா சாம்பசிவம்
Sunday, May 25, 2008
வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர்
நண்பர் குமரன் அரிய புகைப்படங்களைத் தந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக வைகைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பின் போது ஒலித்த பாடல். இசையோடு கேட்டால் இன்பமோ இன்பம். படியுங்கள் - பாடிப்பாருங்கள்.
------------------------------------------------------------------------------------------
ஐயிரண்டு அவதாரம் அவணியில்
எடுத்த அழகரவர் ஆடிவருவார் !
அரிதாரம் பூசிவரும் அன்பர்களின்
கூட்டத்திலே அழகரவர் ஆடிவருவார் !
நான்மாடக் கூடலிலே திருமணமாம் !
நாள்தோறும் வீதியிலே தேர்வருமாம் !
அழகர்மலை அழகனவன் சீர்வருமாம் !
அதைக்காண கோடிசனம் ஊர்வருமாம் !
வாராறு வாராறு மலையை விட்டு
வாராறு வாராறு அழகரவர் வாராறு !
தங்கையவள் திருமணத்தை
தமையனவர் நடத்திவைக்க
தங்கக்குதிரையிலே வாராறு !
அடவாராறு அழகரவர் !
சித்திரையில் வைகறையில்
வைகைநதி பொன்கரையில்
பொற்பாதம் நனைக்க வாராறு !
தீவினைகள் அத்தனையும்
தீர்த்துவைக்க அழகரவர்
தீர்த்தங்கள் கொண்டு வாராறு !
சீனா .... (Cheena)
----------------------
இணைப்பு : http://www.youtube.com/watch?v=F4EW1GOqlqA
07.06.2008
சீனா .... (Cheena)
----------------------
Posted by cheena (சீனா) at 5/25/2008 09:38:00 PM 18 comments
Labels: சித்திரைத் திருவிழா, சீனா
Saturday, May 24, 2008
வைகையில் வந்திறங்கும் வள்ளல்
பச்சை பட்டு உடுத்திக் கொண்டு பவளமால் வந்தான்
பசுமையாக மண்விளங்கிப் பயன் கொடுக்க வந்தான்
இச்சையுடன் எழில் மிகுந்த ஈசன் அவன் வந்தான்
எழிலார்ந்த பரியேறி இன்பமாக வந்தான்
பச்சைப் பட்டு உடுத்திக் கொண்டு கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் எழில் மிகு காட்சியை திரு. ஆர். கணேசன் இங்கே நிழற்படங்களாகத் தந்துள்ளார். அடியவர்கள் ஐயன் மேல் நீர் பீய்ச்சி அடிக்கும் அன்புக்காட்சியையும் காணலாம். படங்களை அனுப்பிய மதுமிதா அக்காவிற்கு நன்றிகள்.
Posted by குமரன் (Kumaran) at 5/24/2008 04:03:00 PM 6 comments
Labels: குமரன், நிழல்படங்கள்
Sunday, May 18, 2008
மதுரையின் முப்பெரும் கோவில்கள்
மதுரை என்றவுடனேயே வடநாட்டாருக்கும் நினைவில் நிற்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் பறவைப்பார்வையில் இருக்கும் இந்த நிழற்படத்தை இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். அண்மையில் மதுமிதா அக்கா இந்தப் படத்தை இந்தப் பதிவில் இடுவதற்காக அனுப்பியிருக்கிறார். இந்தப் படம் அமரர் கிரிஸ்டோபர் அவர்களால் சுரிப்பறனையில் (Helicoptor) இருந்து எடுக்கப்பட்டது. படத்தில் தெரியும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் திருக்கோவில் குடமுழுக்கன்று எடுக்கப்பட்டப் படம் போல் இருக்கிறது.
தமிழில் முதன்முதலில் முழுக்க முழுக்க இறைவனைப் பற்றிப் பாடப்பெற்ற சமயநூலான திருமுருகாற்றுப்படையில் முதலில் போற்றப்படும் படைவீடாகிய திருப்பரங்குன்றத்தின் முகப்புத் தோற்றத்தை இங்கே காணலாம்.
சங்கப்பாடல்களில் (குறிப்பாக பரிபாடல், சிலப்பதிகாரம்) திருமாலவன் குன்றம் என்றும் திருமாலிருஞ்சோலை என்றும் போற்றப்படும் அழகர்கோவிலின் முகப்புத் தோற்றத்தை இந்தப் படத்தில் காணலாம்.
திருப்பரங்குன்றம், அழகர் கோவில் படங்கள் எடுத்தவர் திரு.கணேசன். இந்த மூன்று படங்களையும் அனுப்பிய மதுமிதா அக்காவிற்கு நன்றிகள்.
Posted by குமரன் (Kumaran) at 5/18/2008 06:57:00 PM 12 comments
Labels: குமரன், திருக்கோவில்கள், நிழல்படங்கள்
Sunday, May 11, 2008
பரிபாடல் போற்றும் வைகை
சங்க கால இலக்கியங்களில் பல புலவர்கள் பாடித் தொகுத்த தொகுப்புகளுக்கு தொகைகள் என்று பெயர். அப்படிப்பட்ட தொகைகள் எட்டு இருக்கின்றன - அவற்றிற்கு எட்டுத் தொகை என்று பெயர். அந்த எட்டுத்தொகை நூற்களுள் ஐந்தாவது நூல் பரிபாடல். பதிமூன்று புலவர்களால் பாடப்பெற்றிருக்கும் இந்தப் பாடல்கள் நான்கு பொருட்களைப் பற்றி பாடுகின்றன.
1. செவ்வேளாகிய முருகன் (8 பாடல்கள்)
2. மாயோனாகிய திருமால் (7 பாடல்கள்)
3. கூடல்பதியாம் மதுரை (6 பாடல்கள்)
4. தமிழர்கள் பொற்கொடியாம் வைகை (11 பாடல்கள்)
இவற்றில் வைகையைப் பாடும் பாடல்கள் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பதைப் பார்க்கலாம். இந்தப் பாடல்களின் மூலம் வையையில் நடந்த நீர்விளையாட்டுகளையும் வையையை ஒட்டி நடந்த பண்பாட்டு நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாடல்களைப் படிக்கும் ஆர்வம் இருப்பவர்கள் தயங்காமல் தமிழ் இணையப் பல்கலைகழக நூலகத்தில் இருக்கும் உரையுடன் கூடிய பரிபாடல் நூலைப் படிக்கலாம். அன்றைக்கு வைகை எந்த நிலையில் இருந்திருக்கிறது என்பதையும் உய்த்து அறியலாம்.
இன்றைய வைகையின் நீர்வரத்து வான் கொடுக்கும் கொடையென்பது நமக்குத் தெரியும். அப்படி ஒரு முறை மழையின் கொடையால் வைகையில் நீர் வரத்து இருந்த நேரத்தில் திரு. ஆர். கணேசன் அவர்கள் எடுத்த நான்கு படங்களை இங்கே இடுகிறேன். இந்தப் படங்களை அனுப்பிய மதுமிதா அக்காவிற்கும் ஆர். கணேசனுக்கும் நன்றிகள்.
Posted by குமரன் (Kumaran) at 5/11/2008 06:58:00 PM 7 comments
Labels: குமரன், நிழல்படங்கள், வைகை
Sunday, April 20, 2008
மதுரை சித்திரை திருவிழா - படங்கள்
அருள்மிகு கள்ளழகர் பல லட்சகணக்கான மக்கள் சூழ இன்று காலை மிகசரியாக 7.05 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளினார்.
கிளிக்'ன் போது சுவாமி முகத்தை விசிறி மறைத்து விட்டது...... :(
கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி...
கள்ளழகர் ஆட்டம்....
contd...
Posted by இராம்/Raam at 4/20/2008 10:38:00 AM 10 comments
Labels: செய்திகள், நிழல்படங்கள், ராம்
Wednesday, April 16, 2008
மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்.
வெளிநாட்டவரும் யானையிடம் ஆசி பெருவதை இங்கு காணலாம்.
ஏராளமான பூக்கடை, ஸ்வாமி திருஉருவசிலைகளும், படங்களும் விற்க்கும் அங்காடிகள், குங்குமம், விபூதி,மஞ்சள் விற்க்கும் கடைகளையும் காணலாம்।
இந்த மண்டபத்திற்க்கு ஒரு மாபெரும் சிறப்புள்ளது அறிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
Posted by சிவமுருகன் at 4/16/2008 07:46:00 PM 3 comments
Labels: சிவமுருகன், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்
Wednesday, April 9, 2008
அஷ்ட சக்தி மண்டபம்
இப்போது வர இருப்பது அஷ்ட சக்தி மண்டபம்.
மீனாக்ஷி அம்மன் சன்னதியில் நுழைவுவாயிலில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி, இயங்க்னருபினி, ஷ்யமளா, மஹேஸ்வரி, மனொமோஹினி என்ற 8 பெண் தெய்வங்கள் நின்ற நிலையில் அருள் பாலித்துவருகின்றனர். இவை திருமலை மன்னனின் மனைவி ருத்ரபதி அம்மாவால் நிர்மானிக்கப்பட்டது. இம் மண்டபத்தில் தேங்காய், பழம், கற்பூரம் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன.
இம்மண்டபதின் வாயிலில் மையமாக நின்று அம்மன் சந்நதியை நோக்கினால், உள்ளே நடக்கும் கற்பூர ஜோதியை தரிசிக்கலாம்.
பின்னால் நகரா மண்டபம், வலது பக்கம் மகாத்மா காந்தி பூங்கா, இடதுபுரம் பக்தர்க்ளின் காலனிகளின் பாதுகாக்குமிடம்.
மண்டபத்தில் இடது மூலையில் விநாயகரும், வலது மூலையில் ஆறுமுக கடவுளான முருகனும், ஓரேகல்லில் வடிக்கப் பட்டுள்ளனர். 14மீ நீளமும், 5.5மீ அகலமும் கொண்ட இம் மண்டபம் 1960-63 -ல் கட்டப்பட்டது.
Posted by சிவமுருகன் at 4/09/2008 07:20:00 PM 1 comments
Labels: சிவமுருகன், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்
Tuesday, April 8, 2008
காக்கும் கடவுள்கள்
அம்மன் சன்னதியின் வாயிலில் காக்ஷியளிக்கும் கணேசனும், கார்திகேயனும்
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே
காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
காக்கும் கடவுள் கணேசனை நினை
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீரணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தனேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்து சொந்தம் கொண்டாடிடுவாள்
கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பம் எல்லாம் தெய்வம் துணை தாருமடா
கந்தன் திருநீரணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
Posted by சிவமுருகன் at 4/08/2008 09:10:00 AM 1 comments
Labels: சிவமுருகன், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்
Monday, April 7, 2008
கணபதிக்கு வணக்கம் - 1
மீனாக்ஷி அம்மன் கோவிலில் படங்கள், என் படகோப்பிலிருந்து சில.
முதலில் தும்பிக்கையானை துதித்து.
சிவமுருகன்
Posted by சிவமுருகன் at 4/07/2008 04:15:00 PM 3 comments
Labels: சிவமுருகன், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்
Friday, February 15, 2008
தல புராணம்…6
சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு வழக்கம். அவ்வளவு தூரம் நடக்கச் சோம்பேறித்தனமான நாட்களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்னால் அப்போதிருந்த பாதைகளின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கிராதிகளின்மேல் உட்கார்ந்து கொண்டு…ம்..ம்ம்…என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்?
தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து….
…………..கோயிலின் உட்பக்கம்..
ரொம்பவே ஸ்பெஷலான நாட்களில், காலேஜ் ஹவுஸ் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் கடையில் சில ஸ்பெஷலான ஐட்டங்கள் இருக்கும்; பயந்திராதீங்க. அந்தக் கடையில் எல்லா magazines and newspapers கிடைக்கும். அவ்வப்போது வேறு வேறு பத்திரிக்கைகள், செய்தித்தாட்கள் வாங்குவதுண்டு. அதோடு, எல்லா foreign brand சிகரெட்டுகளும் கிடைக்கும் என்பது இன்னொரு விசேஷம். மறைந்து மறைந்து குடித்த நாட்களில் ஒரு பிராண்டும், அதற்குப் பின் வேறு ஒரு பிராண்டும் நமது ஃபேவரைட். அந்த முதல் ஃபேவரைட்: மார்க்கோபோலே-ன்னு ஒரு சிகரெட். வித்தியாசமா இருக்கும்; ப்ரெளண் கலர்; சப்பையா, ஓவல் வடிவில் இருக்கும்; வாசனை பயங்கர சாக்லெட் வாசனையா இருக்கும். எப்படியும் வருஷத்தில் இரண்டு மூன்று தடவை இந்த ஸ்பெஷல் சிகரெட். இதே மாதிரி - a poor man’s version of Marco Polo - Royal Yacht என்றொரு சிகரெட். அதே கலர்,வாசனை, சுவை…! இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போய் - அப்பல்லாம் பிளாட்பார்ம் டிக்கெட் உண்டா இல்லையா என்றே தெரியாது -ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்து, பயந்து, ரசிச்சி…..ம்..ம்ம்..அது ஒரு காலம்! பயம் போன பிறகு ஃபேவரைட் ப்ராண்ட் மார்ல்போரோ சிகரெட்தான்…ஆடிக்கொண்ணு அம்மாவாசைக் கொண்ணுன்னு…
அந்த சாயுங்கால ஊர்சுற்றல்களில் அந்தக் கோயில் கோபுரங்களைத் தாண்டும்போதெல்லாம் அதன் உச்சிக்குச் செல்ல நினைத்ததுண்டு; ஆனால், அது நிறைவேற ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாயிற்று.காமிரா-கிறுக்கு பிடித்த பிறகு அதன் உச்ச நிலையில் கோயிலின் உள்ளும் புறமும் எடுத்தபிறகு, தெற்குக் கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு உத்தரவு வாங்கி, நண்பன் ரவியோடு கோபுரத்தின் உச்சிக்குப் படம் எடுக்கச் சென்றோம். பொன்னியின் செல்வனை அந்த வயதில் படித்த அனைவருக்குமே இருக்கும் ஒரு சாகச உணர்வு. ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம். மேலே போனா கோபுரத்தின் உச்சியில் தெரியும் அந்த கலசங்களுக்கு நடுவில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரங்கள். கலசங்களுக்கு இரு புறமும் அந்தப் பெரிய பூத கணங்களின் முட்டைக் கண்களும், நீண்டு வளைந்த பற்களும்..அம்மாடியோவ்! அதுவும் dead close-up…!
………..தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து..
………….பறவைப் பார்வையில் மதுரை…
ரவியும், உடன் வந்த இன்னொரு நண்பனும் ரொம்ப சாதாரணமாக அதன் வழியே வெளியே சென்று, கோபுரத்தின் உச்சியின் மேல், வெளியே - open space-ல் - நின்றார்கள்.(top of the world ?) அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது. அட போங்கப்பா, நான் வெளியில் வரமாட்டேன்னு சொல்லிட்டு, இரண்டே இரண்டு படம் எடுத்தேன். ஒன்று அங்கிருந்து கோயிலின் உட்புறம் நோக்கி; இன்னொன்று கீழ் நோக்கி மதுரையை எடுத்தேன். (இங்கே இருக்கும் படங்கள்தான் அவைகள்). ரவி நிறைய எடுத்தான்.
பி.கு:
எங்களின் இந்த எபிசோட் முடிந்த சின்னாட்களில் இதே கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, மேலே ஏறி, வெளியே நின்று, குதித்து, கோயிலின் உட்புறம் கல் வேயப்பட்ட ஆடிவீதியில் விழுந்து ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்தக் கோபுரத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிந்தோம்.
Posted by தருமி at 2/15/2008 03:22:00 PM 28 comments
Labels: தருமி
Tuesday, February 5, 2008
மதுரை - 2012 கனவா? நனவா?
மதுரை இப்படி மாறுகிறது, அப்படி மாறுகிறது என்று மின்னஞ்சல் செய்திகள் அவ்வப்போது வந்து ஆர்வத்தை, ஆசையைக் கிளப்பிய வண்ணம் இருக்கும்.
இன்று இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு வலைப்பூ கண்ணில் பட்டது. அதில் மதுரையில் வரவிருக்கும் மொத்த மாற்றங்களும் அ முதல் ஃ வரை பட்டியலிடப்பட்டுள்ளன..அழகழகான புகைப்படங்களோடு..
http://www.maduraiby2012.blogspot.com/
என்னென்ன திட்டங்கள் இருப்பிலுள்ளன என்று இந்த வலைப்பூ காட்டும் பட்டியல் மதுரைவாசிகளை நிச்சயம் உற்சாகப்படுத்தும். அதே நேரத்தில், இது அத்தனையும் இவ்வளவு சீக்கிரம் சாத்தியமா என்றும் தோன்றுகிறது.
ஒருவேளை இந்த வலைப்பூவை ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இதுவரை பார்த்திராவிட்டால் இப்போது அவசியம் பார்க்கவும். சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன..(யப்பா..கண்ணைக் கட்டுதே...)
கனவோ நனவோ..50 சதவிகிதம் நடந்தால் கூட நம் பாக்கியமே..
Posted by பாச மலர் / Paasa Malar at 2/05/2008 04:59:00 PM 6 comments
Labels: பாச மலர், வளரும் மதுரை
Monday, January 21, 2008
இதற்குப் போய் வெட்கப்படலாமா?
ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. முன் அறிமுகம் இல்லாததால் வழக்கமான குசலம் விசாரிப்பில் பேச ஆரம்பித்தோம். பெயர்,இருக்கும் நாடு, இப்படிப் போனது பேச்சு. சொந்த ஊர் சென்னை என்றார்கள் அந்தப் பெண்.
சற்று நேரம் கழித்துக் கடைக்குப் போயிருந்த என் கணவரும், அந்தப் பெண்ணின் கணவரும் வந்தனர். "இவர்களும் மதுரைப் பக்கந்தான்.." என்றார் கணவர். நான் சரி,அந்தப் பெண் தன் ஊரைத்தான் சென்னை என்று சொன்னார் போல என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் பெண்ணின் கணவர், "எங்க ஊர் சேலம். என் மனைவி ஊர்தான் மதுரைக்குப் பக்கத்தில் மேலூர்..சென்னையில் செட்டிலாகப் போகிறோம்" என்று பேச்சுவாக்கில் சொன்னதும் அந்தப் பெண் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே.
அப்படி ஒரு அவமான உணர்வு அவர் முகத்தில். கணவர் தகவல் மாற்றிச் சொன்னதாலா, அல்லது ஊர் மேலூர் என்பதலா...புரியத்தான் இல்லை.
எனக்குப் பழக்கமான இன்னுமொரு குடும்பம். அவர்களும் சென்னை என்றுதான் கூறினார்கள் முதலில். பின் அவருடைய அப்பா, அம்மாவைச் சந்தித்த போது அவர்கள் சொந்த ஊர் கோவில்பட்டி என்று தெரிய வந்தது. அவர்கள் சென்னையில் வீடு இருத்ததால், எதிர்காலத்தில் சென்னைவாசியாகும் எண்ணமிருந்ததால் இப்படிக் கூறியிருக்கலாம்.
இன்னுமொருவர், தகப்பனார் வேலை நிமித்தம் திருச்சியில் பள்ளியிறுதி வரை படித்து விட்டு, கல்லூரிப் படிப்பைத் தொடரும் நேரத்தில் சென்னைக்கு வந்தவருக்கும் சென்னைதான் சொந்த ஊராகிவிட்டது.
இன்னும் இது போல் சில அனுபவங்கள்... சொந்த ஊரைச் சென்னை அல்லது ஏதாவது ஒரு பெரு நகரம் என்று சொல்லும்போது இருக்கும் மகிழ்ச்சி அசல் சொந்த ஊர் பெயரைப் பொறுத்தவரை அவமானம் ஆகிவிடுகிறது .அதிலும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம்.
இதற்கு விதிவிலக்காய் இருப்பவர்களும் பலருண்டு.
ஏன் இப்படி? கிராமம் என்பதில் என்ன அவமான உணர்வு? சென்னை அல்லது
பெருநகரம் என்பதில் அப்படியென்ன பெருமை? வாழ வைத்த ஊராக இருக்கட்டும், அல்லது குடிபெயரப் போகும் ஊராக இருக்கட்டும்..பெருமைப் படுவதில் தவறில்லை. அதற்காகப் பிறந்த ஊர்ப் பெயரைச் சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?
சென்னையைச் சொந்த ஊராகக் கொண்டாடும் எத்தனை பேர் அங்கே பல தலைமுறைகளாய் வாழ்ந்து வருகிறார்கள்?
அதிலும் வெளிநாட்டு இந்தியர் பலர் வீடு வாங்குவது, வருங்காலத்தில் குடி போகப் போவது எல்லாம் சென்னை போன்ற பெரு நகரங்களில்தான். இது அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்றது. அதற்காகச் சொந்த ஊரை மறக்க வேண்டுமா? இவர்களே இப்படி என்றால் குழந்தைகளை என்ன சொல்வது?
குடியுரிமை பெற்ற வெளிநாட்டு இந்தியர்கள் தம் சொந்த நாடு என்று வசிக்கும் நாட்டைச் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
யாதும் ஊர்தான்...என்னதான் இருந்தாலும் சொந்த ஊர் சொந்த ஊர்தானே!
வேறு எங்கோ செட்டில் ஆனாலும் ஊர் பெயரை மறக்கலாமா? இல்லை அதைச் சொல்லத்தான் வெட்கப்படலாமா?
Posted by பாச மலர் / Paasa Malar at 1/21/2008 06:06:00 PM 39 comments
Friday, January 18, 2008
திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்
முன் குறிப்பு:
யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றுவதோ அல்லது கேள்வி கேட்பதோ எனது நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் என்ற பொது இடத்தின் வரலாற்றைக் கேள்வி கேட்கவே நான் முயற்சி செய்கிறேன். அந்த பொது இடத்தின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் உங்களை எதிர்வினையாற்ற வைக்கலாம். நாம் அனைவரும், ஒரு பொது இடத்தின் வரலாற்றை பேச முனைகிறோம். அதைத்தாண்டி எந்தவிதமான உரையாடலுக்குள்ளேயும் நான் போகப்போவது இல்லை. அப்படியே எங்காவது நான் திசைமாறி வேறுவிசயங்களுக்குள் என்றால் அதை தெரியப்படுத்தவும் நீக்கிவிடுகிறேன்.
நேரடியாக 1,2,3...என்று கேள்விகளையும் ,பதிலையும் மட்டும் எழுதுவோம். இது கேள்விகள் கிளைபரப்பாமல் எடுத்துக் கொண்ட பொருளில் மட்டும் உரையாட வசதியாய் இருக்கும்.
******
கீதா,
நீங்கள் எத்தனை முறை திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய் இருப்பீர்கள் என்று தெரியாது. அதில் எத்தனைமுறைகள் அதன் வரலாற்றை அர்ச்சகரிடம் கேட்டு இருப்பீர்கள் என்றும் தெரியாது. குறைந்தபட்சம் இந்த முறை நீங்கள் கேட்க முயற்சித்து உள்ளீர்கள். இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கும் பல புதிய கோணங்கள் தெரியவரலாம்.
இனி கேள்வி/பதில்/விளக்கங்கள்....
எனது கேள்வி:
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?
உங்கள் பதில்:
1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.
எனது விளக்கம்:
நீங்கள் எடுத்த எடுப்பிலேயே இது ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். இதற்கு மேல் என சொல்வது?
ஒரு கோவில் என்றால் அதில் ஒரு மூலவர் இருப்பார். அவர் இருக்கும் இடம் கருவறை என்று சொல்லப்படும். பார்க்க வந்தவர், கல்யாணத்திற்கு வந்தவர்,கோபுரம் கட்ட காசு கொடுத்தவர் யாராக இருந்தாலும் மூலவர் அந்தஸ்தில் சிலை வைக்க மாட்டார்கள். வந்தவர்கள் போனவர்களுக்கு கருவறைகு வெளியில் சிலைகள் இருக்கலாம். (ஒரு உதாரணம்: மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் : பெயரிலும் இருவரும் அறியப்படுகிறார்கள். இருவருக்கும் தனித்தனி கருவறை உண்டு. கல்யாணத்திற்கு வந்தவர் போனவர் எல்லாம் இங்கும் உண்டு.)
திருப்பரங்குன்றம் 5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் இடம். மாம்பழம்,பலா,வாழை,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் உள்ள ஒரு கடையை பழக்கடை என்றுதான் சொல்ல வேண்டும். அதை 'பலா'க்கடை என்றுதான் சொல்வேன் என்றால். அது உங்கள் விருப்பம்.
எனது கேள்வி:
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?
உங்கள் பதில்:
2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.
எனது விளக்கம்:
5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் ஒரு இடம் முருகனுக்கு மட்டுமான ஒரு கோவிலாக கட்டமைக்கப்பட்டது எப்படி? இந்த தலம் முருகனுக்கானது மட்டும் அல்ல, 5 பேருக்கும் உரியது. கருவறை அமைப்பே அதற்கு சாட்சி.
தற்போது முருகன் கோவிலாக (மத்தவர்கள் எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்) அறியப்படும் இந்த இடத்திற்கு வேறு கோணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பட்சத்திலேயே அதற்கான தேடல் தொடங்கும். மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை என்று நம்பும் போது அர்ச்சகர் என்ன , தேங்காய் விற்கும் கடைக்காரன் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்கள்.
பக்கவாட்டு குறிப்பு:
கேள்விகள் 1 , 2 ற்கான பதில்கள் உங்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துவிட்டது. உங்களிடம் மேற்கொண்டு இந்த 1,2 சம்பந்தமாக உரையாடுவது உங்களின் நம்பிக்கைகளை நான் நேரடியாக கேள்வி கேட்கும் சூழலில் கொண்டுவிடும். நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் மட்டுமே 1,2 ல் தொடர விருப்பம்.
எனது கேள்வி:
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?
உங்கள் பதில்:
3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன்.
எனது விளக்கம்:
நீங்கள் சொல்லிய காரணங்களை பல முறை படித்துப்பார்த்தேன்.கீழே உள்ள காரணங்களால்தான்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சரியா? தவறு என்றால் திருத்தவும்.
1.படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன்
படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும்.
2.மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே.
3.முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும்,குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?
மேலதிகக் கேள்விகள்:
1.போர் சம்பந்தமான காரணத்தினால் இது முதல் படைவீடாடக ( படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின்) அறியப்படுகிறது என்றால், இங்கே நடந்த போர், மற்ற 5 இடங்களில் நடந்த போருக்கு எல்லாம் முந்தைய ஒன்று. சரியா?
ஆறு இடங்களில்லும் நடந்த போர்களில் முருகன் எதிர் கொண்ட எதிரிகளின் பெயர் ,இடம் ,காலம் பட்டியல் உள்ளதா? அப்படி இருந்தால், முதன் முதலில் நடந்த போரின் போது முருகன் தன் படைகளோடு தங்கி இருந்த இடம் ஆதலால் இது முதல் படைவீடு என்று சொல்லலாம்.
2.சூரனை வதம் செய்யும் முன்னரே பிரணவப் பொருள் சமாச்சாரம் திருப்பரங்குன்றத்திற்கு வந்துவிட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் படைவீடு என்ற விளக்கமும், இது முதல் போரில் தங்கியிருந்த இடம் என்ற விளக்கம் ஒத்துவராது. //ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?// கதாகலாட்சேபம் பாணியில் நீங்களே "அல்லவா" என்று கேட்டுக் கொண்டால் "அல்ல" என்றுதான் நான் சொல்ல முடியும்.
3.இடையில் "மூலாதார" கணக்கு வேறு சொல்கிறீர்கள். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம்.
- எந்த வகையில் திருப்பரங்குன்றம் மூலாதாரத்தை குறிக்கிறது?
- மூலாதாரம் என்றால் என்ன?
- மூலாதாரத்திற்கு ஏன் திருப்பரங்குன்றம் பொருத்தமானது?
(அ) திருவிளையாடல் படி வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஆ) போர் புரிந்த காலங்களில் முருகனின் படைகள் தங்கியிருந்த கால வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது
(உ) எப்படி வேண்டுமானாலுமா?
நீங்கள் இப்படித்தான் என்று சொல்லி அந்த வரிசையில் ஆறு படைவீடுகளையும் ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தினால் நல்லது. உ.ம்: நீங்கள் போர் வரிசை என்று சொன்னால், இந்த இடத்தில், இந்த வருடத்தில் இந்த பெயர் கொண்ட அசுரனுடன் முருகன் போர் புரிந்தார்? என்று ஆறு வீடுகளையும் வரிசைப் படுத்தலாம்.
அடிக்குறிப்பு:
நீங்கள் 3 வது கேள்விக்கான பதிலையும் உங்களின் நம்பிக்கைகளில் பேரில் வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் பதில் சொல்லவிரும்பினால் நான் ஜகா வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
சித்திரைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரும் முழிப்பீர்களேயானால் பார்க்க எங்களின் பழைய பதிவுகளை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - கீதா
http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_09.html
திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_10.html
திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html
Posted by Unknown at 1/18/2008 09:42:00 AM 9 comments
Labels: கேள்வி, திருப்பரங்குன்றம், பலூன் மாமா
Monday, January 14, 2008
மாட்டுப் பொங்கல் நினைவுகள்
மார்கழி மாதக் கடைசி வாரத்திலேயே பொங்கல் ஏற்பாடுகள் வீட்டில் களை கட்டத் துவங்கும்.
பொங்கலுக்கு என்னவோ முக்கியத்துவம் குறைவுதான்..மாடுகள் வீட்டில் இருந்ததால். எங்கள் வீட்டிலும் ஒரு காலத்தில் மாடுகள் இருந்தன.மைக்கண்ணி (கண்ணைச் சுற்றிக் கறுப்புப் பட்டைகள்..அதனால் இந்தப் பெயர்), மீனா,மைகண்ணியின் மகள்தான் மீனா..அப்புறம் அதன் வழி வந்த வாரிசுகள்.வீட்டிலிருப்போர் இஷ்டப்படிக் கன்றுக்குட்டிகளுக்குப் பெயர்கள் மாறும்..(காமராஜ்,சிவாஜி).
மாட்டுக் கொட்டாய் சற்றுத் தள்ளியிருக்கும். எனவே புதிதாகக் கன்றுக்குட்டி பிறக்கும் போது பால் குடி நேரம் தவிரப் பாதுகாப்புக்காக வீட்டுத் திண்ணையில் பார்வையில் படும்படிக் கட்டி வைப்பார்கள். பாவம் எங்களிடம் மாட்டிக்கொள்ளும்..மான் குட்டியைப் போல் பிரவுன் நிறத்தில் காணப்படும் ஜூனியர் மீனா..இதற்கு ஸ்ரீதேவி,(நான் வைத்த பெயர்) சரோஜா தேவி(சித்தப்பா) என்று இரண்டு பெயர்கள்.. மண்ணைத் தின்னக் கூடாது என்பதால் வாய்க்கூடு போட்டிருப்பார்கள்.
அவற்றைப் பார்த்துக் கொள்ளும் உதவியாளர்களும் உண்டு. தினசரி வந்து போவார்கள். கோப்பி தான் தாயார் பெயர். அவர்கள் மகன்கள் ஆத்தாங்கரை, அழகர்..மருமக்கள் சீனியம்மா,(சீனி என்று கூப்பிடுவோம்) மற்றும் மருதாயி. நீள நீளமாய் வளர்ந்த புற்கள் சீமைப் புல் என்று பெயர், தினம் காலை கொண்டு வருவார் கூழு மாமா. பால் கறக்கும் வேலை செய்பவரும் அவரே. இது தவிர வைக்கோல், புண்ணாக்கு என்று உணவு வகைகள். தினமும் காலை 10 மணியளவில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 4 மணியளவில் வீடு திரும்பும் மைக்கண்ணி குடும்பம். மேய்ச்சல் பொறுப்பும் கூழு மாமாவுக்குத்தான்.
லிட்டர் லிட்டராய்ப் பால் கறக்கும் மாடுகள். வீட்டுத் தேவை போக விற்பனைக்கு. பால் விற்றுச் சிறுவாடு சேர்த்து வைக்கும் அப்பத்தா. அவர்கள் இடுப்பில் தொங்கும் சுருக்குப் பைக்காய் அவர்களை ஐஸ் வைத்துப் பேசிக் காசு பிடுங்க நாங்கள் ஒரு கூட்டம்.
மாட்டுப் பொங்கல் அன்று கொட்டாய் சுத்தம் செய்து சாணி தெளித்து முடித்த பின் அந்த ஈரம் கூடக் காயும் முன் கோலம் போட அவசரம்..அந்த வயதில் கோல இழைகள் அப்படியும் இப்படியும் கோணிக் கொண்டு இருக்கும் என்பதால் வீட்டு வாசலில் கோலம் போட அனுமதியில்லை. கோலம் போடக் கற்றுக் கொண்டதே மாட்டுக் கொட்டாயில்..மாட்டுப் பொங்கலில்தான்.
சின்னச் சின்னதாய்க் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்கையில் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாய்ப் பொங்கல் பொருட்கள் கொட்டாய்க்குக் கொண்டு வருவார்கள் அப்பத்தா.."எதயாவது ஒழுங்கா எடுத்து வைக்கிறாளுகளா.." என்று அவ்வப்போது வசவு முனகல்கள் மருமகள்களுக்காய். இரும்பு அடுப்பில் அரிசி மாவை வரிசை வரிசையாய் ஒழுக விட்டுப் போடும் மாக்கோலம், பொங்கல் வைக்கும் இடத்தில் கட்டம் கட்டிச் செம்மண் கோலம், கரும்புத் துண்டுகளில் மாலை, கட்சி வண்ணப் பெயிண்ட் பூசிய மாட்டுக் கொம்புகள் (இதற்கென்று ஓவ்வொரு கட்சியும் அவர்கள் கொடி வண்ணப் பெயிண்ட் அடிப்பார்கள்..வீட்டில் தாத்தாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அதற்கொரு சண்டை..பெரும்பாலும் காங்கிரஸ் அல்லது ஜனதா கட்சி வண்ணங்கள் தான் எங்கள் மாட்டுக் கொம்புகளை அலங்கரிக்கும்), கொம்பைச் சுற்றிக் கட்டப்பட்ட புதுத் துண்டு இப்படியாய் ஏற்பாடுகள் களைகட்டும்.
பாவம், மைக்கண்ணி குடும்பம் காலையிலிருந்து பொங்கல் சாப்பிடும் வரை பட்டினிதான். பிற்பகல் மூன்று மணியளவில் நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் பானை அடுப்பில் ஏறும். பால் கலந்த தண்ணீர் பொங்குகையில் அரிசி போடுவார்கள். குலவை கொட்டச் சொல்வார்கள். பொங்கல் தயாராகும் நேரம் கூழு மாமா வருவார். சிறு துண்டுகளாகப் பிரித்து வைத்த வாழை இலைகளில் ஒரு கரண்டிப் பொங்கல் வைத்துப் பூஜை முடிந்த பின் அனைவருக்கும் கொடுப்பார்கள் . பின் எல்லோரும் ஒரு பாத்திரத்தில் கை விட்டுக் கழுவ வேண்டும். அந்தப் பாத்திரத்தில் மாங்குலையைத் தொட்டு எடுத்த நீர்த்துளிகளை எல்லா இடங்களிலும் தெளித்து "பொங்கலோ பொங்கல்" என்று கூழு மாமாவைப் பின் தொடர்ந்து நாங்களும் கூக்குரலிடுவோம்.
பின் மாடுகளை ஒரு 5 நிமிடம் சிறு உலா கூட்டி கொண்டு போவார் கூழு மாமா. அவை திரும்பி வருவதற்குள் சாணியைப் பரப்பி நடுவில் குழியிட்டு அதில் நெருப்புத் துண்டங்களை வைத்துக் குறுக்கே ஓர் உலக்கையை வைப்பார்கள். அதைத் தாண்டித்தான் அவை
வர வேண்டும். திருஷ்டி கழியுமாம்.
இன்று நினைத்தாலும் பசுமையாய் மனதை வருடும் நினைவுகள். பொங்கலை விட அதிகம் ரசித்து அனுபவித்தது மாட்டுப் பொங்கல்தான். அனைவருக்கும் பொங்கல், புத்தாண்டு, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துகள்.
Posted by பாச மலர் / Paasa Malar at 1/14/2008 12:11:00 PM 6 comments
Labels: பாச மலர், மலரும் நினைவுகள்
Thursday, January 10, 2008
கொஞ்சம் இனிமை - கொஞ்சம் பொறாமை
மதுரை திருநகரில் ஆறாவது பேருந்து நிறுத்தத்தில் உள்ள "அமலா பெத்தண்ணல் மாண்டிசோரிப் பள்ளி"யில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பின் ஆறாவது முதல் பள்ளியிறுதி வரை மூன்றாம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள "சீதாலட்சுமி பெண்கள் மேல் நிலைப்பள்ளி"யில் படித்தேன். ஒவ்வொரு முறை ஊர் செல்லும் போதும், இப்பள்ளிகளையும் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் பார்க்க நேரிடும்.
அப்போதெல்லாம் இனம் புரியாத ஓர் இனிமை கலந்த பொறாமை. அவை பலவிதச் சூழல்களில் மாறி நிற்கும் பள்ளிகள் இப்போது.என்றாலும் அந்தப் பகுதிகளைக் கடக்கும் போது இழுத்துப் பிடித்தாலும் பின்னோக்கிச் செல்லும் மனம். பாவாடை, தாவணிக் காலங்கள் போய் சுடிதார் சீருடையாகிய காலம் இப்போது. பள்ளிப் பேருந்திலேயே திருப்பரங்குன்றத்திலிருந்து சென்ற காரணத்தால் அமலா பள்ளிக் காலங்களில் வெளியுலகம் சுற்ற வாய்ப்புகள் அவ்வளவாக இருந்ததில்லை. காலையில் முதல் ட்ரிப்பிலும், மாலையில் இரண்டாம் ட்ரிப்பிலும் சென்ற துரதிர்ஷ்டம் திருப்பரங்குன்றச் சிறுவர் சிறுமியர்க்கு.
இரண்டாவது ட்ரிப் பிள்ளைகள் வரும் வரை மரத்தடியில் இருப்போம். சில சமயம் தரையில் சிதறிக் கிடக்கும் வேப்பங்கோட்டை, வேப்பம்பழம் சேகரிக்கச் சொல்வார்கள். உள்ளங்கையை மடக்கிக் கொண்டு, வேப்பங்கொட்டையை நடுவிரல் மேல் வைத்து, அடித்து
உடைத்துக் கையை மூன்று முறை சுற்றி ஏதோ விளையாட்டு விளையாடிய ஞாபகம். விரல் மேல்சிறு தீற்றலாய்க் கோடிடும் ரத்தம் பார்க்கையில் பயம் கலந்த ஒரு மகிழ்ச்சி.
வேப்பம்பழங்களைச் சுவைத்துத் தின்ற ருசி இன்னும் நினைவில் உள்ளது. அப்பழக்கம்
அதிகமாகி, ஸ்கர்ட்டில் இருக்கும் பாக்கெட்டில் அவற்றைச் சேகரித்து வீட்டிற்கும் கொண்டு வந்து தின்று, அடிக்கடி கண்வலி வந்து, வீட்டார் காரணமறிந்து கொடுத்த உதைகள் மறக்க முடியுமா என்ன?
உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைச் சேகரித்து வைத்து ஜோடி சேர்த்து விளையாடும் ஆட்டம் ஒன்று அடிக்கடி விளையாடுவோம். பூக்களடர்ந்த பிளாஸ்டிக் கூடைகள்தான் புத்தக மூட்டைகள் அப்போது. கண்ணாடி வளையல்களுக்குப் பண்டமாற்றாய்ப் பூக்களை பிளேடால் வெட்டித் தோழியிடம் கொடுத்து, பின் வீட்டார் எனக்குத் தெரியாமலேயே பள்ளியில் அதைப்
புகார் செய்ய, ஒரு இனிய காலை நேரப் ப்ரார்த்தனை நேரத்தில் கூடியிருந்த பள்ளிச் சிறார்கள் அனைவர் முன்னிலையிலும் என் பெயரும், தோழி R.M.சாந்தி பெயரும் விளிக்கப்பட, ஏதோ பரிசு என்று பெருமிதப் பார்வை பார்த்துக் கொண்டு போய்ப் பிரம்படி வாங்கியழுத கதையை மறக்க முடியுமா?
சீதாலட்சுமி பள்ளிக்கு டவுன் பஸ்ஸில் போனதால் வெளியுலகம் கொஞ்சம் அறிமுகம். என் அதிர்ஷ்டம், இந்தப் பள்ளித் தோழிகளின் தொடர்பு இன்று வரை இருப்பதுதான். திருப்பரங்குன்றம் கோவில் வாசலில் என் தாத்தா தேங்காய், பழக்கடை வைத்திருந்தார். எல்லா
வார, மாதப் பத்திரிகைகளும் விற்பனை செய்ததால் அனைத்துத் தொடர்களையும் சீக்கிரமே சுடச்சுடப் படிக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரீதியில் படித்த சுஜாதாவின் தொடர்களின் அந்த வாரத்திய அத்தியாயக் கதையைக் கேட்பதற்கு ஒரு கூட்டமே பள்ளியில் காத்திருக்கும். கமல்-ரஜினி, ஸ்ரீதேவி-ஸ்ரீப்ரியா,ரத்தி, எஸ்.பி.பி.-யேசுதாஸ் என்று கட்சிகளாய்ப் பிரிந்து மாங்கு மாங்கென்று சண்டை போட்ட காலங்கள் அவை.
இன்றும் அப்பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்கும் போது இனிமை கொஞ்சம், பொறாமை கொஞ்சம் எழத்தான் செய்கிறது. ஒரு காலத்தில் ஆண்டு அனுபவித்த இடங்களில் இன்று உரிமையில்லாதது போன்ற ஓர் எண்ணம். அப்பிள்ளைகள் எங்கள் இடங்களை ஆக்கிரமித்துக்
கொண்டது போல் ஒரு மாயை..எங்கள் வகுப்பாசிரியர்களில் சிலர் இறந்து போனதாகக் கேள்வி. சிலர் ஓய்வு பெற, சிலர் பதவி உயர்வு பெற...காலம் வேகமாக ஓடுகிறது. தோழிகளைச் சந்திக்கும் போது,அவர்களின் அம்மாக்களை நினைவுகூறும் முகங்கள், உடலமைப்பு...என் தோழிகளும் என்னைப் பார்த்து இதையே சொல்ல..வயதாகிவிட்டது என்று சொல்லிச் சிரித்து...மலர்கின்றன நினைவுகள்.
Posted by பாச மலர் / Paasa Malar at 1/10/2008 01:23:00 PM 30 comments
Labels: பாச மலர், மலரும் நினைவுகள்
Wednesday, January 9, 2008
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?"
(நானானி said...
முதல் படைவீடு எங்கள் திருச்செந்தூர் அல்லவா? விளக்கம் தேவை.
செந்தில்முருகன் 'நாந்தேன் ஃபஸ்ட்' என்கிறார்.
டேப்பர் என்றால் 'அல்பம்' என்றும் கொள்ளலாமா?
திருப்பரங்குன்றத்தில் நீங்கள் சிரித்தது...இல்லையில்லை சொன்னது அருமை.
முருகனுக்கு உரிய படை வீடுகள் என்பது ஆறு ஆகும். படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும். முருகன் தேவசேனாதிபதி அல்லவா? ஆகவே அவன் தங்கி இருந்து அருள் புரியும் இடங்கள் எல்லாம் படை வீடு என அழைக்கப் படுகிறது. இதில் இன்னொரு தத்துவமும் அடங்கி உள்ளது. மனிதனின் உடலின் உள்ளே இருக்கும் ஆறு ஆதாரங்களும் ஆறு படை வீடுகள் ஆகும். மனிதன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், தன் பஞ்ச இந்திரியங்களோடு ஏதாவது ஒரு வகையில் போராடத் தான் வேண்டி உள்ளது. அவற்றை அடக்க வேண்டி வந்ததே யோக சாஸ்திரம். யோக சாஸ்திரத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பதாகும். இவற்றைத் தன் வசப் படுத்தியே மனிதன் தன் வாழ்நாளின் பூர்ணத்துவத்தைப் பெற முடியும். பொருள் பெற்ற ஒருவன், தன்னை விட வறியவன் ஒருவனைக் கண்டு இன்னாரிடம் சென்றால் பொருள் பெறலாம் என்று "ஆற்று"ப் படுத்துவதை, இங்கே "ஆற்றுப் படுத்துதல்" என்பது வழிகாட்டுதல் என்னும் பொருளில் வருகிறது. ஆற்றுப் படை என்பது இறைவனிடம் இந்த முறையில் சென்றால் அவன் அருள் கிடைக்கும் என்று வழி நடத்தியதையே குறிக்கும்.
இங்கே முருகனின் ஆறுமுகங்களும் ஆறு ஆதாரங்களைக் குறிப்பதாகும். இவற்றைப் பற்றி அதிகம் விவரித்தால் பதிவின் நோக்கமே மாறி விடும். ஆகையால் விவரம் தனியாக என்னுடைய சொந்தப் பதிவில் எழுதுகிறேன் நேரம் வரும்போது. அந்த ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். இங்கே நானானி, திருச்செந்தூர் தான் முதல் படை வீடு என்கிறார். இல்லை, இன்னும் சிலர் முதன் முதல் பழநியில் தான் அமர்ந்தார், அதனால் அதுதான் என்றும் சொல்லலாம், அதுவும் இல்லை. திருப்பரங்குன்றம் என்னும் தென்பரங்குன்றமே முதல் படை வீடு. இங்கே மலை உச்சியில் காசி விஸ்வநாதருக்கு ஒரு கோயில் உள்ளது. நக்கீரரின் உருவச்சிலையையும் பார்க்கலாம், அங்கே நின்ற கோலத்தில். இந்தக் கோயிலும் சரி, அதன் புராதனமும் சரி கிறிஸ்துவுக்கு முன்னர் கடைச்சங்க காலத்திலேயே இருந்ததாய்ச் சொல்லப் படுகின்றது. கீழ்க்கண்ட சங்கப் பாடல் ஆன பரிபாடலின் வரிகள் அதை உறுதி செய்யும் விதமாயும் உள்ளது.
"யாம் இரப்பது பொன்னும், பொருளும், போகமும் அல்ல. நின்பால் அருளும் அன்பும், அறனும் மூன்றும் உருள் இணர்க்கடம்பின் ஒலி தாரோயே" என்று திருப்பரங்குன்றத்து இறைவனை வேண்டுகிறார் புலவர் கடுவன் இளவெயினனார். கோயில் பழமை வாய்ந்தது என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. சாதாரணமாய்க் குடவரைக் கோயில்கள் பல்லவர் காலத்தில் தான் ஆரம்பிக்கப் பட்டது என்பதை மறுக்கும் விதமாய் இந்தக் கோயில் பாண்டியர் காலத்திலேயே எழுப்பப் பட்டுள்ளது.
மற்ற ஐந்த ஆற்றுப்படைகள் ஆவன
திருச்செந்தூர் - சுவாதிட்டானம்
திருஆவினன்குடி - மணி பூரகம்
திரு ஏரகம்(சுவாமி மலை)- அநாகதம்
பழமுதிர்ச்சோலை - விசுத்தி
குன்று தோறாடல் (திருத்தணி) - ஆக்ஞை
இவைதான் திருப்பரங்குன்றம் பற்றிய நான் அறிந்த வரையில் உள்ள தகவல்கள், பல புத்தகங்கள், மற்றும் கூகிளில் இது சம்மந்தமாய் எழுதிய பல தளங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட தகவல்களே கிடைக்கின்றன. ஆகையால் தலபுராணங்கள் ஒரு முறையும் திருத்தப் படவில்லை. திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே. முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும், குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?
1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.
2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.
3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன். ஆனால் பலூன் மாமாவுக்கு இன்னும் சந்தேகம் இருக்கலாம். அவர் பதில் பார்த்து மற்றவை! படங்கள் அப்லோட் ஆகவில்லை! அதனால் போட முடியவில்லை, மறுபடி முயற்சி செய்கிறேன். :(
படம் திரு ஜீவாவின் பதிவில் இருந்து எடுக்கப் பட்டது. நன்றி ஜீவாவுக்கு!
Posted by Geetha Sambasivam at 1/09/2008 01:52:00 PM 6 comments
Labels: கீதா சாம்பசிவம்
மருத # 2. (மதுரை)
மதுரையில் கடந்த 2006ஆம் ஆண்டில் கோர்ட் உத்தரவின் பேரில் பல அனுமதி பெறாத இடங்கள் இடிக்கப்பட்டன, பல கட்சி கொடிகம்பங்களும், மன்றங்களும், வைரம் பாய்ந்த பல மரங்களும், கோவில்களும் தப்பவில்லை. அனுமதி பெறாத இருபது அடி உயர கோபுரங்களை கொண்ட கோவில்களும் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. பல ரோட்டு கோவில்கள் உள்தெருவில் தஞ்சம் புகுந்தது. பல கடைகள் தயவில்லாமல் குப்பகள் ஆகப்பட்டன.
அச்சமயத்தில் மதுரை அரசமரமும் இதில் ஒன்றாகி விடுமோ என்று பயந்த பல பக்தர்கள் அவ்வாலயம் காக்க வேண்டும் என்று அவனையே வணங்கி வந்தனர். தற்போது காமராஜர் சாலையில் அரசமரம் பிள்ளையார் கோவில் தவிர மற்ற சிறிய, பெரிய கோவில்களனைத்தும் நடவடிக்கை மூலம் மறை(ற)ந்து போயின.
பல பள்ளி மாணவர்களின் இஷ்ட தெய்வமான இந்த விநாயகரின் ஆலயத்தில் சிவராத்திரி சமயத்தில் நடக்கும் கொண்டாட்டங்கள் மிகவும் பிரபலமானவை. திருமுருக. கிருபானந்தவாரியர் அவர்களின் சொற்பொழிவுகள் இவ்வாலயத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் டி.எம்.எஸ். போன்ற புகழ் பெற்ற பாடகர்களும், தமிழ், சௌராஷ்டிரா நாடகங்களும், அரங்கேறி வந்துள்ளது. பல கச்சேரிகளும், பட்டிமன்றங்களும், பல இசை வல்லுனர்கள் இங்கே வந்து இசைத்து அரசமரம் கணேச பெருமானின் அருள் பெற்றுள்ளனர், மேலும் திரு. தா.கு.சுப்ரமணியன், திரு. ராஜா போன்ற பேச்சாளர்கள் பலவிதமான தலைப்புகளில் எண்ணற்ற சொற்பொழிகளை ஆற்றியுள்ளனர். ஏ.ஜி.எஸ். ராம்பாபு போன்ற பல அரசியல் பிரபலங்கள் பலரும் இக்கோவிலில் வந்து வணங்கி வழிபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில் இங்கே மண்ணால் செய்து வணங்கப்படும் விநாயகர் இராமேஸ்வரம் கடலில் சென்று கரைக்கப்படுவது மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
அப்பேற்பட்ட மிகவும் வலிமைவாய்ந்த, புகழ்பெற்ற இக்கோவிலின் படம் சில நட்களுக்கு முன் இணையத்தில் கிடைத்தது. ஒரு பொங்கல் பண்டிகையின் போது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிருந்தது.
சாதிமத பேதமில்லாமல் பல சமூக மக்கள் சென்று வழிபடும் மற்றுமொரு கோவில். மதுரை பேச்சியம்மன் கோவில் பல வேற்றுமதத்தவர்களும் இங்கே வந்து அம்மனை வேண்டி தொட்டில் கட்டுகின்றனர்.

இங்கே கட்டப்பட்ட தொட்டில் வீட்டிலும் விரைவில் ஆடுகிறது என்று பலர் சொல்ல கேட்டுள்ளேன். மேலும் ஆண்குழந்தை வரம் வேண்டுவது இக்கோவிலின் முக்கியம்சமாகும். ஆடி மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாட்களிலும் இக்கோவிலில் கூட்டம் கூடுகிறது. நானும் கடந்த 1997-98ல் ஒவ்வொரு வாரமும் தவறாமல் இக்கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளேன்.நாயக மன்னர் காலத்தில் பல கோவில்கள் உருவாகப்பட்டன, இன்று அவர்களது பெயர்களை சொல்லும் சான்றுகளாக நிமிர்ந்து நிற்க்கின்றன. அப்பேற்பட்ட கோவில்களுள் ஒன்று ஹயகிரீவர் கோவில். மதுரை கூடலழகர் கோவிலருகில் இருக்கும் இக்கோவில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் இக்கோவில் சிறிதானாலும் இதன் கீர்த்தி பெரிது. மஹாவிஷ்ணுவின் முதல் வடிவம், முதல் அவதாரமாக கருதப்படும் ஹயகிரீவர் தான் திருபதி ஏழுமலையானுக்கு அங்கே இடமளித்தவர் என்று ஸ்ரீநிவாச ஸ்தல புராணம் சொல்கிறது மேலும் அங்கே முதலில் அவருக்குதான் பூஜை வகைகள் செய்யப்படுகின்றன.
மதுரை தெப்பக்குளம். கடந்த 1990-1995 தெப்பகுளம் பகுதியில் இருக்கும் தியாகராஜ நன்முறை மேல்நிலை பள்ளியில் உயர்-பள்ளி படிப்பை படித்து வந்த போது காலையில் நடைபெறும் தெப்போற்ச்சவம் கண்டாலும் இரவில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளத்தையும், நடைபெறும் தெப்போற்ச்சவத்தையும் காண்பதுண்டு. இப்படத்தை கண்டபோது இது போன்ற பழைய நினைவுகள் கண்கள் முன் நிழலாடின.
பிறகு நானிருப்பது தற்சமயம் இருப்பது தில்லி என்று பலருக்கும் தெரிந்த விஷயம்.
இதோ வெளிவீதீயை எல்லைகளாக உள்ளடக்கிய படம்
இப்படம் கடந்த டிசம்பரில் கிடைத்தது இதில் இருந்து தான் மீனாக்ஷி அம்மன் கோவிலை தனியாக எடுத்து பதித்திருந்தேன். இப்போது முழு படத்தையும் இங்கே பதிக்கிறேன். மதுரையின் சுற்றுலாஇடங்களில் சில முக்கிய இடங்களை இங்கே இப்படத்தில் பார்க்கலாம்.
1. மீனாக்ஷி அம்மன் கோவிலை மையமாக கொண்டு வடிவமக்கப்பட்ட மதுரை மாநகர்.
2. வெளி வீதீயை எல்லையாக கொண்ட படமாக இது உள்ளது. மேலும்,
a) திருமலை நாயகர் மஹால்,
b) மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள
மதுரை சென்ட்ரல் காய்கறி மார்கெட்
ஆவில் பூங்கா
c) தெற்காவணி மூலவீதியில் உள்ள மதுரை ஆதினம்
d) பிற கோவிலகளான ஜடாமுனீஸ்வரர் கோவில்
e) கூடல் அழகர் கோவில்
f) தெற்க்கு கிருஷ்ணன் கோவில்
g) வடக்கு கிருஷ்ணன் கோவில்
h) தென் திருவால சுவாமி கோவில்
i) டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடல் அழகர் கோவிலின் தெப்பக்குளம் (தற்சமயம் இதில் மழைநீர் தேக்கிவருகிறார்கள்)
j) தெற்கு மாசிவீதியில் உள்ள பழமை வாய்ந்த புகழ்பெற்ற மசூதி,
k) வெளிவீதியில் உள்ள (+) சிலுவைவடிவில் அமைய பெற்ற புனித மரியன்னை தேவாலயம் (St. Mary’s Church).
3. படத்தில் இடப்பக்கம் உள்ள ரயில் தண்டவாளங்கள்.
4. ‘டி.வி.எஸ்’ நிறுவனத்தின் தலைமை அலுவலகம். “TVS” என்று பொறித்திருப்பதும் படத்தில் தெளிவாக இருக்கிறது.
5. தெற்க்கு வெளிவீதியில் உள்ள காவலர் வீட்டு வளாகம்.
6. மேலும் உங்களின் விருப்பமான இடங்களும், மற்ற இடங்களும் இப்படத்தில் காண்டு கொள்ளலாம்.
Highlights of the Satellite photo,
1) Shows the Temple as Center
2) Shows the other major temples and places in Madurai within the area of Veli street like
a) Thirumalai Nayakar Mahal,
b) Central Market Avin Park Near to the Meenakshi temple
c) Madurai Adhinam in South Avani Moola street.
d) Other Temples also like Jadamuneeshwara temple
e) Koodal Azhagar Temple
f) South Krishnan Temple(South Masi Street)
g) North Krishnan Temple (North Masi Street)
h) Then Thiruvalavay temple
i) Koodalazhagar temple’s Teepakkulam in Townhall road
j) Masque in South Masi Street
k) Church in South Veli Street (in + “Cross” shaped building in right corner)
3) Rail way line in left
4) TVS work shop in bottom left with ‘TVS’ name in the top of the building.
5) Police quarters in South Veli Street
6) You can also spot your place or any other place in the picture.
மேலும் ஒரு படம் 1794 (1974 அல்ல)ல் தீட்டப்பட்ட ஒரு படம் வடபகுதியில் இருந்து தென் பகுதியை காணும் சமயத்தில் எப்படி தெரிந்தது என்று காட்டும் ஒரு அருமையான படம் மீனாக்ஷி அம்மன் கோவில் ஒரு புரமும், நாயகர் மஹால் மறுபுரமுமாக வைகையில் யானையும் ஒட்டகங்களும் கொண்டு கடக்கும் வியாபாரிகள், என்று இருநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த படம், உங்கள் பார்வைக்கு.

மர நிழலில் இளைப்பாறும் வழிப்போக்கர்கள், மீனாட்சி அம்மன் கோவிலின் நான்கு உயர்ந்த கோபுரங்கள் மேலும் மூன்று சிறிய கோபுரங்கள், திருமலை மன்னரின் அரண்மனை(மஹால்), சாரை சாரையாய் காட்டு வழியில் குதிரைகளுடனும், ஒட்டகங்களுடனும் ந(க)டக்கும் வியாபாரிகள், வீரர்கள். தரையை தொட ஆவலாய் இருக்கும் ஆல விழுதுகள். தூ...ரத்தில் மதுரையை சுற்றி வளைக்க துடிக்கும் மலைகள் என 1858ல் வரையப்பட்ட இந்த படம், மிகவும் அழகாக இருந்தது.
காணகிடைக்காத படங்கள் உங்கள் பார்வைக்கு.
மருத தொடர் இத்துடன் நிறைவடைகிறது.
படத்தை சொடுக்கினால் பெரிதாகும். தங்களது கணினியில் சேமித்து வைத்து அதை மேலும் ‘ஜூம்’ செய்தால் ஓரளவுக்கு தெளிவாக காணாலம்.
Posted by சிவமுருகன் at 1/09/2008 12:19:00 PM 5 comments
Labels: சிவமுருகன்
Tuesday, January 8, 2008
மருத # 1. (மதுரை)














மதுரை சென்ட்ரல் மார்கெட்டில் உள்ள பூ மார்கெட், காய்கறி மார்கெட், தெருவில் ஓடும் மாட்டு வண்டி.
அடுத்த பதிவில் கீழவாசலுக்கு அடுத்திருக்கும் அரசமரம் பிள்ளயார் கோவிலும், கூடலழகர் கோவிலருகில் இருக்கும் ஹயகிரீவர் கோவிலும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பகுளம் மற்றும் வடக்கு வெளிவீதிக்கு அடுத்திருக்கும் பேச்சியம்மன் கோவில் படங்கள்.
Posted by சிவமுருகன் at 1/08/2008 04:22:00 PM 4 comments
Labels: சிவமுருகன்