Friday, January 4, 2008

இது ந‌ல்லதா? கெட்ட‌தா?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

புத்தாண்டு என்பது சில நல்ல தொடக்கங்களுக்கு அடிக்கோலிட வேண்டுமென்பது பொதுவான நோக்கம். வரும் ஆண்டில் நல்ல நிகழ்வுகள் அதிகம் வேண்டி விரும்புவது மக்களின் இயல்பு..இதில் தமிழ்ப்புத்தாண்டு, ஆங்கிலப்புத்தாண்டு இன்னும் பல புத்தாண்டுகள்..உலகம் முழுவதும் பல்வேறு கால கட்டங்களில் அவரவர் சூழலுக்கேற்ப, நம்பிக்கைகளுக்கேற்பக் கொண்டாடப் படுகின்றன.

குடும்பத்துடன் ஒன்றாயிணைந்து கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, பட்டாசு வெடித்துக் கொண்டு, கேளிக்கைகளில் கலந்து கொண்டு, வழிபாட்டில் கலந்து கொண்டு....இப்படிக் கொண்டாட்டங்கள் பலவிதம்...


இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் மதுரைவாசி என்ற முறையில் மனதை நெருடிய சில விஷயங்கள்....


1. மும்பை சம்பவம்...

இது வெளியே வந்த செய்தி..இன்னும் வராத‌ செய்திகள் இது போல் எத்தனையோ..மதுரை விடுதி ஒன்றிலும் இது போல கேளிக்கைகளில் தம்பதியர் கலந்து கொண்டு கலக்கிய(?!) செய்தித்தாள் புகைப்படங்கள் மதுரை எங்கோ போகிறது என்று வயிற்றில் புளியைக் கரைத்தது.

2. மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனத்துக்காக வந்த கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், பக்தர்களுக்கு உதவும் பொருட்டு(?????) பிற்பகலில் நடை சாத்தப்படாமல் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இனிவரும் கால‌ங்களில் பக்த்ர்களின் தேவைகளுக்காக 24 மணி நேரச் சேவைகள் தொட‌ங்குவர்களோ? மரபுகள் மீறும் புதுமைகள் செய்வார்களோ? விசேட நாட்கள் மட்டுமல்லாமல் அன்றாடம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இச்சலுகை தொடருமா? தொடர்ந்தால் அவர்களும் பயன் பெறலாம்..சிறப்புக் காட்சிக்குச் சிறப்புக்கட்டணம் என்று நிர்வாகமும் வசூல் சாதனை செய்யலாம்.


3.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமிருக்கும் என்று தெரிந்திருந்தும் தரிசனத்துக்காக விசேட ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் ச‌ரிவரச் செய்யாததால் பணம் கொடுத்த பக்தர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நிலை..

வசூல் என்பது வருடமெல்லாம் தொடர வேண்டும் ...என்பதற்காகவோ?
இதில் யாரை நொந்து கொள்வது? நிர்வாகத்தையா? சிறப்பு தரிசனம் தேடிக் காசும் காலமும் விரயம் செய்த பக்தர்களையா?

இது ந‌ல்ல‌தா? கெட்ட‌தா?

(பி.கு: மதுரை சென்றதில் குறையும் நிறையும்....

குறை: அனுராதா அவர்க‌ளைச் சந்திக்க‌ முடியாம‌ல்லை போன‌து...உற‌வின‌ர்க‌ள் வ‌ருகையால் அவ‌ர்கள் என‌க்காக‌ ஒதுக்கிய‌ நேர‌த்தில் அவ்ர்க‌ளைச் ச‌ந்திக்க‌ இய‌லாம‌ல்போன‌து. தொலைபேசியில் ம‌ட்டுமே உரையாட‌ முடிந்த‌து.

திட்டமிட்ட‌ப‌டி ம‌துரை ந‌க‌ரின் புகைப்பட‌ங்க‌ள் எடுக்க‌ முடியாம‌ல் போனது.


நிறை: திரு.&திரும‌தி. சீனா அவ‌ர்க‌ள் எங்க‌ள் இல்ல‌த்துக்கு வ‌ந்து சந்தித்த‌து.)

13 Comments:

பாச மலர் / Paasa Malar said...

சோதனை மறுமொழி

Geetha Sambasivam said...

பாசமலர்,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களுமே எனக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் கோவிலுக்குப் போனதை நினைத்தால், இப்போவே குலை நடுங்குகிறது. விரிவாக எழுத வேண்டும். எங்கே போகிறோம்? புரியத் தான் இல்லை! :((((((((((((

sury siva said...

//மரபுகள் மீறும் புதுமைகள் செய்வார்களோ? //
மரபு என எதைச் சொல்லுகிறீர்கள்?
சிவ பக்தன் தன் சன்னதியில் நந்தி மறைக்கிறதே நான் என் செய்வேன் என மனமுருகி நின்ற வேளையில் சிவபெருமானே முன் வந்து,
"சற்றே விலகிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்குதாம்." என நந்திக்கு ஆணையிட்டு பக்தனைப் பரவசபபடுத்திய பாங்கு, விண்ணை எட்டும் கோபுரம் எழுப்பிய ராஜ ராஜன், தான் எனும் அகந்தை விடுத்து, அந்த பெரிய கோவிலின் நந்தி முன்னே, தானும் தன் துணைவியாரும் சாஷ்டாங்கமாக வணங்குவது போன்று சிலை வடித்த காட்சி, சிவனை விட சிவனடியார் சிறந்தவர் என்பதை வலியுறுத்தும் வகையில், திருவாரூர் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன் என ப்‍பாடிய புலவர் ....

இதுவே தமிழர் நெறி. பண்பு. இவை எல்லாமே பக்தனை முன்னிறுத்தச் செய்கின்றன.

இன்று நிலை வேறு.

அன்று சிவ சொத்து அபகரிப்பின் குல நாசம் என்றார்கள். அதில் நம்பிக்கை இருந்தது.
மரபு மாறும் போது அதை புதுமை எனக்கூறி அதில் ஒருவகை அமைதியைப் பெறுங்கள். வேறு வழியில்லை.

ஆனால் ஒன்று.

சிவனை உள்ளக்கோவிலிலே காண்போர் தெள்ளியவர் ஆவர்.

சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம்
தவம் அல்லது இல்லை தலைப்படு வோர்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமயங்கள்
தவம் அல்ல, நந்தி தான் சார்ந்து உய்யும் நீரே. திருமந்திரம்..1534

உண்மைப்பொருளை அறிய முற்பட்டோருக்கு அறு சமயங்களும் வீண்.
அவர் காலத்தின் புதுமை கண்டு மனம் நோவதில்லை.
ஆக, சித்தத்தை சிவன் பால் கொண்டு, நித்தம்
சிவ தர்சனம் தன்னுள் செய்யுங்கள்.
உய்யும் வழி அதுவே.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
You may visit at your leisure
http://vazhvuneri.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com

cheena (சீனா) said...

மலர், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அன்று வீட்டில் இருந்த நேரம் இனிமையான நேரம். வீட்டில் அனைவரையும் சந்தித்தது மகிழ்வைத் தந்தது. மௌளி மதுரையில் இருக்கிறார். சந்திக்க வேண்டும். சிவா மதுரைக்கு வருகிறார். சந்திக்க வேண்டும். தருமியைச் சந்தித்தாகி விட்டது. அனுராதாவைச் சந்தித்தோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்

Mangai said...

சந்தேகம் வேண்டாம். இது கெட்டது தான்.

எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் என்ன என்றால்,

விழா, பண்டிகை, கொண்டாட்டங்கள் அன்று எங்கெல்லாம் கூட்டம் இருக்கக் கூடும் என்று தெரிந்து அங்கெல்லாம் செல்வதை தவிர்த்து விடுவோம்.
அது கோவில் என்றாலும், தள்ளுபடி விற்பனை கடை என்றாலும்.

மக்கள் கொண்டாட்டங்களை ஆர்ப்பாட்டம் இல்லாமல் கொண்டாட பழகிக் கொள்ள வேண்டும்.

கொண்டாட்டங்கள் இப்போது வியாபாரம் ஆகி விட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.

பாச மலர் / Paasa Malar said...

கீதா,

மதுரையில் ஒரே சமயத்தில் இருந்திருக்கிறோம்...சந்திக்க முடியாமல் போய்விட்டது...சரி..பின் ஒரு நாள் சந்திபோம்.

சீனா சார்,

ஒவ்வொரு முறையும் சந்திப்போம்.

பாச மலர் / Paasa Malar said...

//மரபு மாறும் போது அதை புதுமை எனக்கூறி அதில் ஒருவகை அமைதியைப் பெறுங்கள். வேறு வழியில்லை.//

ஆமாம். வேறு வழியே இல்லை.

//நித்தம்
சிவ தர்சனம் தன்னுள் செய்யுங்கள்//

இதுதான் என் கொள்கையும்..முக்கியமாகக் கூட்டம் அதிகமிருக்கும் விசேட நாட்களில் கோவிலுக்குப் போவது இல்லை...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..sury அவர்களே.

பாச மலர் / Paasa Malar said...

மங்கை,

கருத்துக்கு நன்றி.

ஜீவி said...

நிரம்ப மகிழ்ச்சி. பிறந்த ஊர் சென்று திரும்பி விட்டீர்களா?..
நேற்றைய மரபு இன்றைய புதுமையாகவும், இன்றைய புதுமைகள் நாளைய மரபாகவும் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ளுதல் தான் இயல்பு போலும். நாளாவட்டத்தில் வழக்கொழிந்து போன சில மரபுகளை, பண்டைய மரபுகள் என்று அழைப்போம் போலும்.
எந்த மாற்றமும் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான், என்று மனத்தைச் சரிபடுத்திக் கொள்வோம்.

பாச மலர் / Paasa Malar said...

ஜீவி சார்,

வருகைக்கு நன்றி..ஆனால் உங்கள் பதிவில் முன்னொரு முறை கூறியது போல் புகைப்படம் எடுக்க முடியாமல் போய்விட்டது...better luck next time...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சில நாட்களில் தான் கோவில் செல்வது சிறந்த தென்பதில் உடன்பாடில்லை. அதனால் முக்கிய நாட்களில்
கோவில் செல்வதே இல்லை.
அத்துடன் கூட்டம் அதிகம் அலை மோதும் கோவிலுக்கும் போகப் பிரியமில்லை.அதிலும் வீட்டாருடன்

பாச மலர் / Paasa Malar said...

உண்மைதான் யோகன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

ஜீவி said...

//வருகைக்கு நன்றி..ஆனால் உங்கள் பதிவில் முன்னொரு முறை கூறியது போல் புகைப்படம் எடுக்க முடியாமல் போய்விட்டது...better luck next time...//
பாசமலர்,
உங்கள் பதிவைப் படிக்கும் பொழுதே,
அந்த டவுன் ஹால் ரோடு தெப்பக்குளம் நினைவுக்கு வந்து, நீங்கள் குறிப்பிடுவது புரிந்தது.
என்ன அவசரம்!..அடுத்த தடவை நீங்கள் செல்லும் பொழுது, முடிந்தால் எடுத்தால் போயிற்று..
சீனா அவர்கள், தன் மதுரை பற்றிய பழைய பதிவொன்றில், டவுன் ஹால் ரோடை--குறிப்பாக நான் குறிப்பிடும் அந்த இடத்தை--
புகைப்படமாகப் பதிந்திருந்தைப் பார்த்தேன். நீங்கள் பார்த்தீர்களோ?..