Friday, January 18, 2008

திருப்பரங்குன்றம்- கீதாவின் பதிலுக்கான விளக்கம்

முன் குறிப்பு:
யாருடைய நம்பிக்கைகளையும் மாற்றுவதோ அல்லது கேள்வி கேட்பதோ எனது நோக்கம் அல்ல. திருப்பரங்குன்றம் என்ற பொது இடத்தின் வரலாற்றைக் கேள்வி கேட்கவே நான் முயற்சி செய்கிறேன். அந்த பொது இடத்தின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் உங்களை எதிர்வினையாற்ற வைக்கலாம். நாம் அனைவரும், ஒரு பொது இடத்தின் வரலாற்றை பேச முனைகிறோம். அதைத்தாண்டி எந்தவிதமான உரையாடலுக்குள்ளேயும் நான் போகப்போவது இல்லை. அப்படியே எங்காவது நான் திசைமாறி வேறுவிசயங்களுக்குள் என்றால் அதை தெரியப்படுத்தவும் நீக்கிவிடுகிறேன்.

நேரடியாக 1,2,3...என்று கேள்விகளையும் ,பதிலையும் மட்டும் எழுதுவோம். இது கேள்விகள் கிளைபரப்பாமல் எடுத்துக் கொண்ட பொருளில் மட்டும் உரையாட வசதியாய் இருக்கும்.

******
கீதா,
நீங்கள் எத்தனை முறை திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய் இருப்பீர்கள் என்று தெரியாது. அதில் எத்தனைமுறைகள் அதன் வரலாற்றை அர்ச்சகரிடம் கேட்டு இருப்பீர்கள் என்றும் தெரியாது. குறைந்தபட்சம் இந்த முறை நீங்கள் கேட்க முயற்சித்து உள்ளீர்கள். இன்னும் தொடர்ந்தால் உங்களுக்கும் பல புதிய கோணங்கள் தெரியவரலாம்.

இனி கேள்வி/பதில்/விளக்கங்கள்....


எனது கேள்வி:
(1). 5 கேரக்டர்களுக்கான ஒரு பொதுக் கோவில் ,எப்படி ஒருவருக்கான கோவிலாக உருமாறியது?

உங்கள் பதில்:
1.ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல. திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் முக்கியத்துவம் குறைக்காமலேயே எல்லாவித வழிபாடுகளும் நடைபெறுகிறது. இன்னும் சொல்லப் போனால் மற்றக் கோயில்களின் இறை உருவங்கள் ஃபோகஸ் செய்யப் பட்ட வெளிச்சத்தில் பிரகாசிக்க, இங்கேயோ, தீப ஒளியிலேயே குறைவின்றித் தரிசனம் செய்ய முடிகின்றது.

எனது விளக்கம்:
நீங்கள் எடுத்த எடுப்பிலேயே இது ஐந்து காரக்டர்களுக்கான பொதுக்கோயில் இது அல்ல என்று சொல்லிவிட்டீர்கள். இதற்கு மேல் என சொல்வது?

ஒரு கோவில் என்றால் அதில் ஒரு மூலவர் இருப்பார். அவர் இருக்கும் இடம் கருவறை என்று சொல்லப்படும். பார்க்க வந்தவர், கல்யாணத்திற்கு வந்தவர்,கோபுரம் கட்ட காசு கொடுத்தவர் யாராக இருந்தாலும் மூலவர் அந்தஸ்தில் சிலை வைக்க மாட்டார்கள். வந்தவர்கள் போனவர்களுக்கு கருவறைகு வெளியில் சிலைகள் இருக்கலாம். (ஒரு உதாரணம்: மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் : பெயரிலும் இருவரும் அறியப்படுகிறார்கள். இருவருக்கும் தனித்தனி கருவறை உண்டு. கல்யாணத்திற்கு வந்தவர் போனவர் எல்லாம் இங்கும் உண்டு.)

திருப்பரங்குன்றம் 5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் இடம். மாம்பழம்,பலா,வாழை,ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் உள்ள ஒரு கடையை பழக்கடை என்றுதான் சொல்ல வேண்டும். அதை 'பலா'க்கடை என்றுதான் சொல்வேன் என்றால். அது உங்கள் விருப்பம்.

எனது கேள்வி:
(2.) தல புராணங்கள் எந்தக் காலத்தில் திருத்தப்பட்டது?

உங்கள் பதில்:
2.தல புராணங்கள் அனைத்தும் திருப்பித் திருப்பிக் கூறுவது ஒரே விஷயத்தையே! மாறுதல் ஏதும் செய்யப் படவில்லை. கோயில் அர்ச்சகரும் இதே தான் கூறினார்.

எனது விளக்கம்:
5 கேரக்டர்கள் சம அந்தஸ்தில் இருக்கும் ஒரு இடம் முருகனுக்கு மட்டுமான ஒரு கோவிலாக கட்டமைக்கப்பட்டது எப்படி? இந்த தலம் முருகனுக்கானது மட்டும் அல்ல, 5 பேருக்கும் உரியது. கருவறை அமைப்பே அதற்கு சாட்சி.

தற்போது முருகன் கோவிலாக (மத்தவர்கள் எல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள்) அறியப்படும் இந்த இடத்திற்கு வேறு கோணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பட்சத்திலேயே அதற்கான தேடல் தொடங்கும். மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை என்று நம்பும் போது அர்ச்சகர் என்ன , தேங்காய் விற்கும் கடைக்காரன் சொன்னாலும் ஏற்றுக் கொள்வீர்கள்.

பக்கவாட்டு குறிப்பு:
கேள்விகள் 1 , 2 ற்கான பதில்கள் உங்களின் நம்பிக்கைகள் சார்ந்து அமைந்துவிட்டது. உங்களிடம் மேற்கொண்டு இந்த 1,2 சம்பந்தமாக உரையாடுவது உங்களின் நம்பிக்கைகளை நான் நேரடியாக கேள்வி கேட்கும் சூழலில் கொண்டுவிடும். நான் அதை தவிர்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் மட்டுமே 1,2 ல் தொடர விருப்பம்.

எனது கேள்வி:
(3.) இது முருகனுக்கான ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக ஏன் கட்டமைக்கப்பட்டது ?

உங்கள் பதில்:
3.முதல் படை வீடு ஆனதுக்கு விரிவான காரணம் எழுதி விட்டேன்.

எனது விளக்கம்:
நீங்கள் சொல்லிய காரணங்களை பல முறை படித்துப்பார்த்தேன்.கீழே உள்ள காரணங்களால்தான்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். சரியா? தவறு என்றால் திருத்தவும்.

1.படைவீடு என்பது பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன்
படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் ஆகும்.

2.மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி,ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முதல் படை வீடாக அமைந்த காரணமும் இது தான் மூலாதாரம் என்பதே.

3.முருகன் திரு விளையாடல்களில் முதன்மையானது (சூரனை வதம் செய்யும் முன்னரே) பிரணவப் பொருளை உரைத்ததே என்பதை அனைவரும் அறிவர். அந்தப் பிரணவ மந்திரத்தைத் தான் முறையான வழியில் அறிந்து கொள்ளாமல், இறைவன், இறைவிக்குச் சொல்லும்போது தற்செயலாய்க் கேட்க நேர்ந்தாலும்,குருவின்றி பெறும் உபதேசம், பயனற்றது, என்பதை உணர்த்தவே, இங்கு வந்து இறை வடிவான மலையிலேயே தவம் இயற்றினார். ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?

மேலதிகக் கேள்விகள்:
1.போர் சம்பந்தமான காரணத்தினால் இது முதல் படைவீடாடக ( படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின்) அறியப்படுகிறது என்றால், இங்கே நடந்த போர், மற்ற 5 இடங்களில் நடந்த போருக்கு எல்லாம் முந்தைய ஒன்று. சரியா?

ஆறு இடங்களில்லும் நடந்த போர்களில் முருகன் எதிர் கொண்ட எதிரிகளின் பெயர் ,இடம் ,காலம் பட்டியல் உள்ளதா? அப்படி இருந்தால், முதன் முதலில் நடந்த போரின் போது முருகன் தன் படைகளோடு தங்கி இருந்த இடம் ஆதலால் இது முதல் படைவீடு என்று சொல்லலாம்.

2.சூரனை வதம் செய்யும் முன்னரே பிரணவப் பொருள் சமாச்சாரம் திருப்பரங்குன்றத்திற்கு வந்துவிட்டது என்று நீங்களே சொல்கிறீர்கள். எனவே பகைவரோடு போர் புரியும் ஒருவன் தன் படைகளோடு தங்கி இருக்கும் இடத்தின் பெயர் படைவீடு என்ற விளக்கமும், இது முதல் போரில் தங்கியிருந்த இடம் என்ற விளக்கம் ஒத்துவராது. //ஆகவே அவர் தம் திருவிளையாடல்களில் முதன்மையான ஒன்று, ஆதாரமான ஒன்று, மூலாதாரமான ஒன்று முதல் படை வீடானது பொருத்தமே அல்லவா?// கதாகலாட்சேபம் பாணியில் நீங்களே "அல்லவா" என்று கேட்டுக் கொண்டால் "அல்ல" என்றுதான் நான் சொல்ல முடியும்.

3.இடையில் "மூலாதார" கணக்கு வேறு சொல்கிறீர்கள். மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையான மூலாதாரத்தைக் குறிப்பதே திருப்பரங்குன்றம்.

  • எந்த வகையில் திருப்பரங்குன்றம் மூலாதாரத்தை குறிக்கிறது?
  • மூலாதாரம் என்றால் என்ன?
  • மூலாதாரத்திற்கு ஏன் திருப்பரங்குன்றம் பொருத்தமானது?
ஆறுபடை வீடுகளின் வரிசை ...

(அ) திருவிளையாடல் படி வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஆ) போர் புரிந்த காலங்களில் முருகனின் படைகள் தங்கியிருந்த கால வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது
(உ) எப்படி வேண்டுமானாலுமா?

நீங்கள் இப்படித்தான் என்று சொல்லி அந்த வரிசையில் ஆறு படைவீடுகளையும் ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தினால் நல்லது. உ.ம்: நீங்கள் போர் வரிசை என்று சொன்னால், இந்த இடத்தில், இந்த வருடத்தில் இந்த பெயர் கொண்ட அசுரனுடன் முருகன் போர் புரிந்தார்? என்று ஆறு வீடுகளையும் வரிசைப் படுத்தலாம்.

அடிக்குறிப்பு:
நீங்கள் 3 வது கேள்விக்கான பதிலையும் உங்களின் நம்பிக்கைகளில் பேரில் வரலாற்று ஆதாரங்கள் இல்லாமல் பதில் சொல்லவிரும்பினால் நான் ஜகா வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

சித்திரைத் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல யாரும் முழிப்பீர்களேயானால் பார்க்க எங்களின் பழைய பதிவுகளை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - கீதா
http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_09.html

திருப்பரங்குன்றம் - முருகனும் அவனுக்கு பக்கத்தில் சிலரும் அனைவருக்கும் தெய்வம் என்று பெயர் அல்லது தெற்கே சமணத்தின் நினைவுச்சின்னம்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_10.html

திருப்பரங்குன்றம்- இடமிருந்து வலமாக பவளக்கனிவாய் பெருமாளும் மற்றும் சில தெய்வங்களும்
http://pathivu.madurainagar.com/2007/12/blog-post_06.html

9 Comments:

Geetha Sambasivam said...

//(இ) ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் வரிசைப்படுத்தப்படுகிறதா? அல்லது
(ஈ) மேலே சொன்ன மூன்றுமா ? அல்லது
(உ) எப்படி வேண்டுமானாலுமா?//

நான் வரிசைப் படுத்தியது ஆதாரங்கள் பற்றியதே, ஆனால் அதிலும் கடைசி இரண்டும் தவறு என ஜீவா(வெங்கட்ராமன்) சொல்கிறார். இது பற்றித் தேடல் நடக்கிறது. இணைய இணைப்பு மழை மேகம் போல் போயிட்டுப் போயிட்டு வருவதாலும், மற்ற வேலைகளாலும், உடல் நிலையாலும் சரிவர இணையத்தில் உட்கார முடியவில்லை. விரைவில் உங்களுக்குப் பதில் கொடுக்க முயற்சிக்கிறேன். சற்றே பொறுக்கவும். ஆரோக்கியமான விவாதங்களுக்கு நான் அஞ்சவே மாட்டேன். ஆகவே நீங்கள் கேட்டிருப்பது எதுவும் தவறும் இல்லை! நன்றி.

Unknown said...

கீதா,
நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் மட்டுமே ஆறு படை வீடுகளையும் வரிசைப்படுத்தி அதில் , திருப்பரங்குன்றத்தை முதல்வீடாகச் சொல்கிறீர்கள்.

சரியா?

தயவுசெய்து தெளிவு படுத்தவும். ஏன் என்றால் அடுத்து ஏதாவது புதிய கதைகளைக் (like திருவிளையாடல், போர்வீரர் தங்கிய இடம்.... etc.,) கொண்டுவரக்கூடாது. :-)

**

//இது பற்றித் தேடல் நடக்கிறது. //

"இப்போதுதான்" உண்மைகளைத்தேடத் தொடங்குகிறீர்கள் என்பது ஆச்சர்யமாய் உள்ளது.

Anonymous said...

ஆஹா...

படிக்கவே சந்தோசமா இருக்கய்யா....அத்தனையும் நியாயமான கேள்வி, ஆனா இதுக்கு திருமதி.கீதா உட்பட யாருமே நேர்மையான பதிலை சொல்வார்கள் என தோன்றவில்லை.

என் வரையில், அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த வலிமையான/அறிவாளியான/புகழ்வாய்ந்த மேட்டுக்குடி மனிதர்களை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நினைவிடங்களே நாளாவட்டத்தில் கதைகள் புனையபட்டு,வழிபாடுகள் உருவாக்கப்பட்டு...இன்றைக்கு நமது கீதா அவர்கள் சப்பைகட்டு கட்டுமளவிற்கு வந்து நிற்கிறது.

குலதெய்வ வழிபாடு எனப்படும் மூதாதை வழிபாட்டின் இனையான அதே நேரத்தில் மிகைப்படுத்தப்பட்ட் ரூபங்களில் ஒன்றே திருப்பரங்குன்றம் என்பது என்னுடைய எண்ணம்.

இராம்/Raam said...

கீதா மேடம் பதிலுக்கு ஆர்வமாய் வெயிட்டிங்... :)

cheena (சீனா) said...

mmmmm - விவாதம் சூடு பிடிக்கிறது. பொறுத்திருப்போம் - பொருள் விளங்கும்.

Geetha Sambasivam said...

//"இப்போதுதான்" உண்மைகளைத்தேடத் தொடங்குகிறீர்கள் என்பது ஆச்சர்யமாய் உள்ளது.//

உண்மைகளைத் தேடறேன் என்று சொல்லவே இல்லையே, என்னோட கருத்தில் மாற்றம் இல்லை, அது சம்மந்தமான ஆதாரங்களைத் தான் தேடுகிறேன். அறிவு பூர்வமாய்ச் சிந்திக்கிறதுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கணும் இல்லையா?


//நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் மட்டுமே ஆறு படை வீடுகளையும் வரிசைப்படுத்தி அதில் , திருப்பரங்குன்றத்தை முதல்வீடாகச் சொல்கிறீர்கள்.//

சரியே!

//தயவுசெய்து தெளிவு படுத்தவும். ஏன் என்றால் அடுத்து ஏதாவது புதிய கதைகளைக் (like திருவிளையாடல், போர்வீரர் தங்கிய இடம்.... etc.,) கொண்டுவரக்கூடாது. :-)//

புதிய கதைகள் எதுவும் நான் கொண்டு வரவில்லை. இல்லாத கதை எதையும் சொல்லவும் இல்லை! :((((((




//ஆனா இதுக்கு திருமதி.கீதா உட்பட யாருமே நேர்மையான பதிலை சொல்வார்கள் என தோன்றவில்லை.//

நேர்மையான பதில் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாய் பதில் தேவை என்றால், மன்னிக்கவும், என்னிடம் அந்த நேர்மை இல்லைதான்! :(


//என் வரையில், அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த வலிமையான/அறிவாளியான/புகழ்வாய்ந்த மேட்டுக்குடி மனிதர்களை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நினைவிடங்களே நாளாவட்டத்தில் கதைகள் புனையபட்டு,வழிபாடுகள் உருவாக்கப்பட்டு...இன்றைக்கு நமது கீதா அவர்கள் சப்பைகட்டு கட்டுமளவிற்கு வந்து நிற்கிறது.//

யாருக்கான நினைவிடம் "திருப்பரங்குன்றம்" என்று சற்றுத் தெளிவு செய்தால் நல்லா இருக்கும். எனக்கு அவ்வளவு சரித்திர அறிவு இல்லை! பின்னால் சப்பைக்கட்டு கட்டாமலாவது இருக்கலாமே? :((((((

Sridhar V said...

நல்லதொரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறீர்கள்.

//என் வரையில், அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த பகுதியில் வாழ்ந்த வலிமையான/அறிவாளியான/புகழ்வாய்ந்த மேட்டுக்குடி மனிதர்களை சிறப்பிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட நினைவிடங்களே நாளாவட்டத்தில் கதைகள் புனையபட்டு,வழிபாடுகள் உருவாக்கப்பட்டு...//

இது ஒரு அருமையான கோணம். உங்களின் பார்வையோடு நான் பெருமளவு ஒத்து போகிறேன்.

ஆனால் பெரும்பாலும் நமது தேடல்கள் வழியை அமைத்துக் கொண்டு இலக்கை தேடுவதாக அமைந்து விடுகிறது.

Unknown said...

கல்வெட்டு:
//நீங்கள் ஆதாரங்கள் (மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை) வரிசையில் மட்டுமே ஆறு படை வீடுகளையும் வரிசைப்படுத்தி அதில் , திருப்பரங்குன்றத்தை முதல்வீடாகச் சொல்கிறீர்கள்.//

கீதா:
சரியே!

***
நன்றி கீதா !

நான் கேட்ட 3 கேள்விகளில் உங்களின் இரண்டு பதில்கள் முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. ஆகையால் நான் அவற்றை மேற்கொண்டு தொடரப்போவது இல்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

மூன்றாவது கேள்விக்கான பதிலில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்களை சுட்டிக் காட்டியமையால் (திருவிளையாடல் புராண வரிசை, போர்வீரர் தங்கிய இடம் மூலாதாரம் என்ற ஆதார வகை) அதை தெளிவு படுத்த கேள்வி கேட்டேன்.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!

****

ஆதாரங்களைத் தொகுத்தபின் , மூலாதாரம் குறித்த இலக்கணத்தை தெளிவாக அனைவரும் புரியும் வண்ணம் சொல்லிவிட்டால் இந்த உரையாடல் அனைவருக்கும் பயன் தரும்.

அப்படிச் சொல்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

ஏன் சொல்கிறேன் என்றால், // உண்மைகளைத் தேடறேன் என்று சொல்லவே இல்லையே, என்னோட கருத்தில் மாற்றம் இல்லை, அது சம்மந்தமான ஆதாரங்களைத் தான் தேடுகிறேன். அறிவு பூர்வமாய்ச் சிந்திக்கிறதுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கணும் இல்லையா?// என்று சொல்லி உள்ளீர்கள்.

அதாவது உங்கள் கருத்தில் மாற்றங்கள் வரப்போவது இல்லை அல்லது நீங்கள் உண்மை என்று நம்பும் கருத்தை , நீங்கள் கேள்வி கேட்கப்போவது இல்லை. மாறாக , அது அப்படியே இருக்க என்ன ஆதாரங்கள் தேவையோ அதை மட்டும் தேடுகிறீர்கள். சரியா?

கீதா,
நம்பிக்கைகள் அனைத்தையும் முன்முடிவுகள் இல்லாமல், கேள்விக்கு உட்படுத்தினாலே தவிர , பல கோணங்கள் புரிய வரும். எனது கருத்தில் மாற்றம் ஏற்படப்போவது இல்லை. என்ற முன்முடிவுடன், தனது கோணத்திற்கு மட்டுமே சரியாக வரும் ஆதாரங்களைத் மட்டும் தேடுவது என்பது,நீங்கள் நம்பியதை எனக்கு சரியென்று நிருபிப்பதற்காகவே தவிர அதன் உண்மைத் தன்மையினை நீங்களே சரிபார்க்க அல்ல.

எப்படியோ அது உங்கள் விருப்பம்...

நான் ஆரம்பித்த இழையில் மட்டும் நான் இதனை முடிக்க விரும்புகிறேன்.

அடுத்து நீங்கள் சொல்லப்போகும் பதில்கள், மூலாதாரம் குறித்த கீழ்க்கண்ட விளக்கங்களுடன் வந்தால், நானும் மற்றவர்களும் நிறையக் கற்றுக் கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் இதையும் "தனிப்பட்ட நம்பிக்கை" சார்ந்த விசயமாக நினைத்து நான் விலகிப்போக வேண்டியதுதான்.

நீங்கள் உங்கள் பதில்களை சொல்லும்முன் கீழ்க்கண்ட வினாக்களையும் மனதில் கொண்டு சொல்லவும். ஏன் என்றால் எனது கேள்விகள், வரலாறு /அறிவியல் சம்பந்தமானது. நம்பிக்கை சம்பந்தமானது அல்ல. நம்பிக்கை என்று ஒரு வரியில் சொல்லிவிட்டால், விலகிவிடுவேன்.


1.மூலாதாரம் என்றால் என்ன? (அதன் இலக்கணம்/வரையரை/அளவுகோல். சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி மற்றும் ஆக்ஞை போன்ற பிற ஆதர இலக்கணங்களை நீங்கள் விரும்பினால் சொல்லலாம். எனது கேள்வி மூலாதார வகையில் திருப்பரங்குன்றம் குறித்தானது மட்டுமே)

2.அது முருகன் கோவில்களுக்கு மட்டுமான ஒன்றா அல்லது அனைத்து கோவில்களுக்குமான ஒன்றா?

3.அனைத்துக் கோவில்களுக்குமான ஒன்று என்றால் , அந்த வரிசையில் வகைப்படுத்தப்பட்ட மற்ற கோவில்களில் உண்டா?

4.அதை எப்படி கோவில்களுடன் பொறுத்திப்பார்த்து , இதுதான்(இந்த இடம் தான்) மூலாதாரத்திற்கு (மூலாதார இலக்கணத்திற்கு ) தகுதியான இடம் என்று சொல்வது? (செயல்முறையில் ஒரு இடத்தை எப்படி மூலாதரத்திற்கு சரியானதா என்று பார்ப்பது?)

5.மூலாதரத்திற்கு என்று ஒரு இலக்கணம் இருக்கும் பட்சத்தில் அது உலகம் தழுவியதா? அல்லது இந்தியா/தமிழ் நட்டிற்கு மட்டுமானதா?

6.இலங்கையிலும் பழமையான முருகன் தலங்கள் உண்டு. அவை மூலாதார இலக்கணத்தின்படி அளக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதா?

7.ஆம் எனில் , அது ஏன் மூலாதர இலக்கணத்தில் தோல்வியுற்றது? ஆறுபடை வீட்டிற்கான ஆதார இலக்கணத்தில் எந்த தகுதியைப்பெறுகிறது?

8.நாளை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஒரு புதிய முருகன் ஆலயம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தால், அதை "மூலாதார" இலக்கண வரையரைக்கு உட்படுத்தி பரிசோதிப்பார்களா?

9.அப்படி ஒருக்கால் அந்த புதிய இடம் ,மூலாதார இலக்கணத்தில் திருப்பரங்குன்றத்தைவிட அதிகம் பொருந்தி வருவதாக அறிவித்தால்,திருப்பரங்குன்றம் முதல் படைவீடு என்ற தகுதியை இழக்கும் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

10.அப்படி நடக்கும் பட்சத்தில் ஆறுபடை என்னாகும்? ஏழாகுமா? அல்லது புளூட்டோ கிரகம் போல் ஏதாவது ஒரு படைவீடு கழட்டிவிடப்படுமா?

உங்களின் மூலாதார இலக்கணம்/பதில்கள்/ஆதாரங்கள் மேற் சொன்னவற்றை விளக்கும் என்றே நம்புகிறேன்/விரும்புகிறேன்.

கோவி.கண்ணன் said...

தல புராணங்கள் எல்லாமே சம்பந்தர்காலத்திற்கு பிறகு ஏற்பட்டவை.
:)

மதுரையில் சமணர்களை முற்றிலும் அழிக்க அவசரத் தேவையாக மக்கள் மனதில் சைவம் தோற்றுவிக்க வேண்டு எழுந்தவை தான் மலை கோவில்கள். அதற்காக அதற்கு முன் முருகன் வழிபாடு இல்லை என்று சொல்லவரவில்லை. சைவ சமயத்தில் முருகனை நுழைத்து இந்த காலகட்டத்தில் என்றே நினைக்கிறேன். அப்போது வைணவர்கள் தூங்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இல்லை என்றால் முருகன் மாலுக்கு மகனாக ஆகி இருப்பார்.
:)