Friday, February 15, 2008

தல புராணம்…6

சாயுங்கால வேளைகள் பொதுவாக காலேஜ் ஹவுஸ் முன்னால்தான் என்றாலும், போரடிக்கக்கூடாதென்பதற்காக அவ்வப்போது அப்படியே காலாற நடந்து மேற்குக்கோபுரம், தெற்குக் கோபுரம், கிழக்குக் கோபுரமும் தாண்டி, அந்தப்பக்கம் அந்தக் காலத்தில் இருந்த மெட்ராஸ் ஹோட்டலில் போய் ஒரு சமோசாவும், டீயும் அடிச்சிட்டு மறுபடியும் வந்த வழியே திரும்பவும் நம்ம குதிரை நிக்கிற இடத்துக்கு வர்ரது ஒரு வழக்கம். அவ்வளவு தூரம் நடக்கச் சோம்பேறித்தனமான நாட்களில் மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்னால் அப்போதிருந்த பாதைகளின் பக்கவாட்டில் போடப்பட்டிருக்கும் சிமெண்ட் கிராதிகளின்மேல் உட்கார்ந்து கொண்டு…ம்..ம்ம்…என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்?


தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து….


…………..கோயிலின் உட்பக்கம்..

ரொம்பவே ஸ்பெஷலான நாட்களில், காலேஜ் ஹவுஸ் உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் கடையில் சில ஸ்பெஷலான ஐட்டங்கள் இருக்கும்; பயந்திராதீங்க. அந்தக் கடையில் எல்லா magazines and newspapers கிடைக்கும். அவ்வப்போது வேறு வேறு பத்திரிக்கைகள், செய்தித்தாட்கள் வாங்குவதுண்டு. அதோடு, எல்லா foreign brand சிகரெட்டுகளும் கிடைக்கும் என்பது இன்னொரு விசேஷம். மறைந்து மறைந்து குடித்த நாட்களில் ஒரு பிராண்டும், அதற்குப் பின் வேறு ஒரு பிராண்டும் நமது ஃபேவரைட். அந்த முதல் ஃபேவரைட்: மார்க்கோபோலே-ன்னு ஒரு சிகரெட். வித்தியாசமா இருக்கும்; ப்ரெளண் கலர்; சப்பையா, ஓவல் வடிவில் இருக்கும்; வாசனை பயங்கர சாக்லெட் வாசனையா இருக்கும். எப்படியும் வருஷத்தில் இரண்டு மூன்று தடவை இந்த ஸ்பெஷல் சிகரெட். இதே மாதிரி - a poor man’s version of Marco Polo - Royal Yacht என்றொரு சிகரெட். அதே கலர்,வாசனை, சுவை…! இந்த ஸ்பெஷல் ஐட்டங்களை வாங்கிட்டு, மதுரை ரயில்வே ஸ்டேஷன் உள்ளே போய் - அப்பல்லாம் பிளாட்பார்ம் டிக்கெட் உண்டா இல்லையா என்றே தெரியாது -ஏதோ ஒரு ஒதுக்குப்புறத்தில் உட்கார்ந்து, பயந்து, ரசிச்சி…..ம்..ம்ம்..அது ஒரு காலம்! பயம் போன பிறகு ஃபேவரைட் ப்ராண்ட் மார்ல்போரோ சிகரெட்தான்…ஆடிக்கொண்ணு அம்மாவாசைக் கொண்ணுன்னு…


அந்த சாயுங்கால ஊர்சுற்றல்களில் அந்தக் கோயில் கோபுரங்களைத் தாண்டும்போதெல்லாம் அதன் உச்சிக்குச் செல்ல நினைத்ததுண்டு; ஆனால், அது நிறைவேற ஆண்டுகள் பல காத்திருக்க வேண்டியதாயிற்று.காமிரா-கிறுக்கு பிடித்த பிறகு அதன் உச்ச நிலையில் கோயிலின் உள்ளும் புறமும் எடுத்தபிறகு, தெற்குக் கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு உத்தரவு வாங்கி, நண்பன் ரவியோடு கோபுரத்தின் உச்சிக்குப் படம் எடுக்கச் சென்றோம். பொன்னியின் செல்வனை அந்த வயதில் படித்த அனைவருக்குமே இருக்கும் ஒரு சாகச உணர்வு. ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம். மேலே போனா கோபுரத்தின் உச்சியில் தெரியும் அந்த கலசங்களுக்கு நடுவில் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரங்கள். கலசங்களுக்கு இரு புறமும் அந்தப் பெரிய பூத கணங்களின் முட்டைக் கண்களும், நீண்டு வளைந்த பற்களும்..அம்மாடியோவ்! அதுவும் dead close-up…!

………..தெற்குக் கோபுரத்தின் உச்சியிலிருந்து..


………….பறவைப் பார்வையில் மதுரை…

ரவியும், உடன் வந்த இன்னொரு நண்பனும் ரொம்ப சாதாரணமாக அதன் வழியே வெளியே சென்று, கோபுரத்தின் உச்சியின் மேல், வெளியே - open space-ல் - நின்றார்கள்.(top of the world ?) அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது. அட போங்கப்பா, நான் வெளியில் வரமாட்டேன்னு சொல்லிட்டு, இரண்டே இரண்டு படம் எடுத்தேன். ஒன்று அங்கிருந்து கோயிலின் உட்புறம் நோக்கி; இன்னொன்று கீழ் நோக்கி மதுரையை எடுத்தேன். (இங்கே இருக்கும் படங்கள்தான் அவைகள்). ரவி நிறைய எடுத்தான்.

பி.கு:
எங்களின் இந்த எபிசோட் முடிந்த சின்னாட்களில் இதே கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, மேலே ஏறி, வெளியே நின்று, குதித்து, கோயிலின் உட்புறம் கல் வேயப்பட்ட ஆடிவீதியில் விழுந்து ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொண்ட பிறகு இந்தக் கோபுரத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிந்தோம்.

28 Comments:

Geetha Sambasivam said...

//அதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு இப்போது கூட அடிவயிற்றில் அட்ரீனலின் சுரப்பதை உணர முடிகிறது. அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும். இதுதான் vertigo-வா என்று தெரியாது.//

இல்லை, இதுக்கு "hydrophobia" அப்படினு பேருனு நினைக்கிறேன், எனக்கும் இந்த மாதிரி மேலே இருந்து கீழே பார்க்கும்போது இப்போவும் தலை சுத்தல் வரும். பார்க்காமலேயே மலைகளில் ஏறும்போதும், இறங்கும்போதும் கண்ணை நேரே வைத்துக் கொண்டே போவேன். கொஞ்சம் கஷ்டமாய்த் தானிருக்கும். காலேஜ் ஹவுஸுடன் ஆன என்னுடைய தற்போதைய நினைவுகள், ம்ம்ம்ம் ரொம்ப மோசம்! :((((((((((

சிவமுருகன் said...

கொடுத்து வச்சவங்க தருமி சார், ரொம்ப நல்ல இருக்குது நீங்க எடுத்த படம். இப்போ இதுவரை பார்த்திருக்கும், சில முக்கிய படங்களில் ரொம்ப வித்யாசமான படம் இது.

உண்மைத்தமிழன் said...

தருமி ஐயா அதே காலேஜ் ஹவுஸின் சாயந்தர வேலைகளில் ஏதேனும் புத்தக வெளியிட்டு விழாக்களோ, இலக்கியம் சம்பந்தப்பட்ட விழாக்களோ நடக்கும்..

நான் மதுரையில் வெட்டி ஆபீஸராக பவனி வந்து கொண்டிருந்த நேரங்களில் பெரும்பாலும் சாயந்தர வேலைகளில் அங்குதான் இருப்பேன்.. அதுவும் இரவு 6.40 மணி வரைக்கும்தான்..

அடுத்த ஐந்து நிமிடத்தில் தங்கரீகல் தியேட்டரில் புகுந்து விடுவேன். அத்தியேட்டரில் எனக்கு ரெகுலர் பாஸே கொடுத்திருந்தார்கள். அவ்வளவுக்கு தியேட்டருக்கு ரொம்ப நெருக்கம்..

நீங்கள் மொட்டை கோபுரத்தை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போலவே அதில் மேலே ஏறிப் பார்ப்பதற்கு முதலில் அனுமதி தந்து பின்பு தடைவிதித்தார்கள். தற்கொலைதான் இதற்குக் காரணமா என்று தெரியவில்லை..

என் வயிற்றில் இருப்பதாகச் சொல்லப்படும் அட்ரீனலின் சுரப்பி யாராவது கடன்காரர்களைப் பார்த்தால் மட்டுமே கலங்குகிறது.. மீதி நேரம் தெரிவதில்லை.. என்ன காரணமாக இருக்கும்..?

வவ்வால் said...

தருமி,

கருப்பு வெள்ளைக்காலத்திலேயே , காமிராவில விளையாண்டு இருக்கிங்களே, அவ்வளவு உயரம் போனதே பெரிய விஷயம், அதுல உச்சிக்கு போகலைனு வருத்தம் வேறவா :-))

போதாக்குறைக்கு மைனர் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிங்களே :-))

//இதுதான் vertigo-வா என்று தெரியாது. //

அப்படிக்கூட சொல்லலாம், ஆனால் இதனை பொதுவாக உயரத்தால் வருவது என்று சொல்ல முடியாது, வெர்டிகோ என்றால் பொதுவான தலை சுற்றல் , தடுமாற்றம் தான். இஞ்சி மொரப்பா சாப்பிடனும் :-))

பின்னம் தலைல உருட்டுக்கட்டைல அடிச்சாலும் வெர்டிகோ வரும் :-))

உயரம் குறித்தான பயம் "acrophobia", இதனாலும் தடுமாற்றம், தலை சுற்றல் வரும்.

அதுக்குள்ள ஒருத்தங்க ஹைட்ரோபோபியானு சொல்றாங்க, நாய்க்கடிச்சா தான் அதுலாம் வரும்! :-))

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, தப்பா எழுதிட்டேன், ஹைட்ரோபோபியானு, அ.வ.சி.

Geetha Sambasivam said...

திருத்தத் தான் வந்தேன், அதுக்குள்ளே, ஒரே வவ்வால் கிட்டே மாட்டியாச்சு! :P :P :P

வால்பையன் said...

மதுரையில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதியா?
அல்லது என்னை போல் மதுரையில் பிறந்து வெளிஊரில் வசிப்பவர்களுக்கு இடம் உண்டா?

வால்பையன்

cheena (சீனா) said...

அண்ணே !! அப்பப்ப தலபுராணம் போட்டு எங்களை கொசுவத்தி சுத்த வைச்சிடுறீங்க. ஏன் தொடர்ந்து போடலே ? ம்ம்ம் - கறுப்பு வெள்ளை கறுப்பு வெள்ளை தான் - அருமையான படங்கள். சின்ன வயசிலேயே சிகெரெட்டா ??? ம்ம்ம்ம் ....

பாச மலர் / Paasa Malar said...

//என்ன இனிய நேரங்கள்; என்ன பேசினோம்; எதைப்பற்றிப் பேசினோம் என்றெல்லாம் யாரறிவார்//

சிறு வயதுத் தோழமையின் சிறப்பு அம்சங்கள் இவை..

//ஏதோ பாண்டியர் காலத்திற்கே சென்று விட்டது போன்ற நினைப்பு. அந்தக் காலத்து குடிமக்கள் எல்லாம் நினைவில் வருவதில்லை; ராஜ குமாரர்களும், குமாரத்திகளும்தான் நினைவில். அசப்பில மணியனின் குந்தவி பிராட்டி நம்முடனே நடந்து வர்ர மாதிரி நினைப்புல மேல ஏறினோம்//

மிகவும் ரசித்த வரிகள்

//அதென்னவோ, உயரமான இடங்களின்மேல் ஏறி நின்றாலே இந்த அட்ரீனலின் தன் வேலையைக் காண்பிக்கும்//

மொட்டை மாடிக்கே இந்த பயம்தான் எனக்கும்...

படங்கள் அருமை தருமி சார்..

பாச மலர் / Paasa Malar said...

//மதுரையில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதியா?
அல்லது என்னை போல் மதுரையில் பிறந்து வெளி ஊரில் வசிப்பவர்களுக்கு இடம் உண்டா?//

வாங்க..வாங்க..இன்னுமொரு மதுரைக்காரரே..இங்கே நிறைய பேர் உங்களை மாதிரிதான்..இருந்தது மதுரை..தற்போது இருப்பது வேறு ஊரில்..

தருமி said...

கீதா சாம்பசிவம்,
அதென்ன இரண்டாவது பின்னூட்டத்தில் அ.வ.சி.? அவசரத்தில் வந்த சிறுபிழையோ...?

//காலேஜ் ஹவுஸுடன் ஆன என்னுடைய தற்போதைய நினைவுகள், ம்ம்ம்ம் ரொம்ப மோசம்//

???

தருமி said...

சிவமுருகன்,
படங்களின் தரம் ஒன்றும் பெரிதில்லை என்று தெரியும். ஆனால், அதை எடுத்த அனுபவம்தான் நன்கு இருந்தது.

தருமி said...

உண்மைத் தமிழன்,
அடடே, நீங்க "தங்க" ரீகல் கேசா!!
நாங்கல்லாம் "நல்ல" (வெறும்)ரீகல் கேசுங்க. முந்தின தலபுராணம் அது பற்றியதுதான்.

நிறைய கடன் வாங்கி வாங்கிப் பழகிட்டா அட்ரீனலினால் தொந்தரவு வராதாமே .. அதுக்குப் பிறகு கொடுத்தவங்களுக்குத்தான் பிரச்சனையாமே...

தருமி said...

வவ்வால்,
//போதாக்குறைக்கு மைனர் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிங்களே :-))//

ஸ்மைலி போட்டிருக்கிறதால் ப்பூ...இதுதான் உங்க காலத்து வாழ்க்கையான்னு சொல்றீங்கன்னு எடுத்துக்கிறேன்.


//பின்னம் தலைல உருட்டுக்கட்டைல அடிச்சாலும் வெர்டிகோ வரும் :-))//

எல்லாம் பொதுவான அனுபவம்தானே...!

தருமி said...

வால்பையன்,
//என்னை போல் மதுரையில் பிறந்து வெளிஊரில் வசிப்பவர்களுக்கு இடம் உண்டா?//

நம்ம குழுப் பதிவைப் பற்றிதானே கேட்கிறீங்க... உங்க ஊருன்னு சொல்லிட்டு, இடம் உண்டான்னு கேட்டா எப்படி? உங்களுக்கு இல்லாத இடமா... அதுவும் இப்போ தமிழ்நாட்டுக்கே வந்திட்டீங்க .. அப்புறம் என்ன?

தருமி said...

சீனா,
//சின்ன வயசிலேயே சிகெரெட்டா ??? //

அப்புறம் என்ன ... இளவயதில் கல் அப்டின்னு பெரியவங்கல்லாம் சொல்லியிருகாங்கல்ல...

தருமி said...

பாசமலர்,
//சிறு வயதுத் தோழமையின் சிறப்பு அம்சங்கள் இவை..//

இப்பவும் அதையெல்லாம் நினச்சா...ம்..ம். பெருமூச்சுதான் வருது. சும்மாவா சொன்னாங்க ..Yesterdays are always sweeter அப்டின்னு

Unknown said...

நல்ல கொசுவத்தி ... நமக்கு மதுரப் பக்கம் அவ்வளவு போன அனுபவம் இல்லங்க. இனிமேத்தான்..
அந்த ரெண்டு சிகரெட் பிராண்டும் கேள்விப்பட்டதில்லையே? :)

குமரன் (Kumaran) said...

டி.எம். கோர்ட்டுல தானே மெட்ராஸ் ஹோட்டல் (அசைவம்) இருக்கிறது? நீங்க கிழக்கு கோபுர வாசல் பக்கம்ன்னு சொல்றீங்க? நீங்க சொல்றது வேற மெட்ராஸ் ஹோட்டலோ?

மார்க்கோபோலோ இன்னும் அமெரிக்காவுல கிடைக்குதுன்னு நினைக்கிறேன். பாத்த மாதிரி நினைவு. வேணுமா? வேணும்னா அடுத்த தடவை மதுரைக்கு வர்றப்ப வாங்கியாறேன். :-)

மார்ல்போரோவும் இங்கே இருக்கு. பாத்திருக்கேன்.

கோபுரத்து உச்சியைப் பத்தி நீங்க சொல்றதைப் படிக்கிற எனக்கே வயித்துல கலக்குது. :-)

இலவசக்கொத்தனார் said...

குமரன். சின்னப்பசங்களுக்கு சிகரெட் வாங்கிக் குடுத்து கெடுக்காதீங்கன்னு சொன்ன பெருசுங்களுக்கு வாங்கித் தரலாமுன்னு இல்லை!! :))

தருமி said...

குமரன்,
மொதல்ல பழகினது நீங்க சொல்ற டி.எம். கோர்ட் மெட்ராஸ் ஹோட்டல். பின்னாளில் நான் சொன்ன ஹோட்டல் இம்பீரியல் தியேட்டருக்கு ஏறக்குறைய எதிர்த்தாற்போல் இருந்தது. உசரமா படிஏறி உள்ளே போகணும். ஒரு சமோசா, ஒரு டீ வாங்கிட்டு எவ்வளவு நேரம் ஆனாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார் நம்ம மாமூல் வெய்ட்டர் சுல்தான் பாய்.

நாங்கதான் இப்போ புகை வடிவத்தில் உள்ளதுகளை விட்டுட்டு, திரவ வடிவத்திற்கு மாறிட்டோம்ல... அது வேணும்னா கொண்டாங்க .. ஆனாலும் போனதடவை வந்துட்டு போனதே தெரியாது. இப்ப இப்படி வேற சொல்லியாச்சி; ஆளு வந்து சொல்லாம கொள்ளாம அடையாளம் இல்லாம போயிருவீங்களே...! :(
சும்மா ஒரு போனாவது அடியுங்க.

தருமி said...

கொத்ஸ்,
அதான் நாங்க அதெல்லாம் வேண்டாமுன்னு சொல்லிட்டோம்ல.. நேயர் விருப்பமும் சொல்லிட்டோம்; அதுக்கென்ன சொல்லுதீய...

தருமி said...

இராம்,
எங்கப்பா உங்க பின்னூட்டம்? inbox-ல publish அப்டின்னு க்ளிக்கிட்டேன். இங்கன காணோம்...?

தருமி said...

தஞ்சாவூரான்,
(இப்ப இருக்கிற)உங்க ஊர்ல அதெல்லாம் கிடைக்குதுங்கிறாரே குமரன். எதுக்கும் அவர்ட்ட கேட்டுக்கங்க...

தருமி said...

இராம் சொன்னது:

அப்பிடியென்னாதான் அந்த கதையிலே இருந்துச்சு????? பெருசு'க எல்லாருமே இப்பிடிதான் இருக்கீங்க!!! எங்க காலத்திலே அப்பிடி இப்பிடி'ன்னு அதை என்னான்னு கடைசி வரைக்கும் சொல்லுறதே இல்லே..... :D


எனிவே 250'க்கு வாழ்த்துக்கள்....... :)

தருமி said...

இராம்
நெஜமாவே கதை மறந்து போச்சு...சொன்னதுமாதிரி அருவருப்பு மட்டும்தான் இன்னும் நெஞ்சுக்குள்ள கரிக்குது.

வாழ்த்துக்கு நன்றி.

Unknown said...

தருமி,

//(இப்ப இருக்கிற)உங்க ஊர்ல அதெல்லாம் கிடைக்குதுங்கிறாரே குமரன். எதுக்கும் அவர்ட்ட கேட்டுக்கங்க...//

அது எப்பிடி, அடிச்சுகுட்டுருந்த (ஒரு காலத்தில்!) எனக்கே அது தெரியலே? குமரனுக்கு எப்பிடி?? :)

மார்ல்போரோ வழக்கமான பிராண்டுதான். மார்க்கோ போலோதான் கொழப்புறார் :)

High Power Rocketry said...

: )