Saturday, July 12, 2008

மதுரைக்குப் போகாதேடி! - பகுதி ஒன்று


மதுரைக்குப் போயிட்டு வந்த அனுபவத்தை எழுதணும், எழுதணும்னு ஒரு ஆறு மாசமா நினைச்சும் முடியாமப் போயிட்டே இருக்கு. கல்வெட்டுக்கு திருப்பரங்குன்றம் பத்திய பதிலை இன்னும் சொல்ல முடியலை, அதனாலேயே வரதுக்கு யோசிச்சுட்டு இருந்தேன். இப்போ பதில் கிடைக்கலைனாலும், சில இடங்களில் கல்லை விட்டு எறிஞ்சு இருக்கேன். வரும்போது வரட்டும்னு இப்போ எழுத வந்தேன். டிசம்பரில் மதுரைக்குப் போனப்போ முதல் அதிர்ச்சி, மத்தியானம் 12-00 மணி அளவுக்கே போயும் தங்க இடம் கிடைக்காதது தான். பைபாஸ் ரோடில் அண்ணா இருக்கின்றார் என்றாலும் திடீர்னு போய் 4,5 பேர் அங்கே இருக்கிறது எப்படினு யோசிச்சு, லாட்ஜில் ரூம் போடலாம்னு போனால், காலேஜ் ஹவுஸில் ஒரே ஒரு ரூம், கீழே இருக்கு, அதுவும், ஏசி ரூம், ஆனால் ஏசி போட மாட்டோம், சார்ஜ் என்னமோ ஏசிக்கு உள்ளதுதான். அதிலேயே எல்லாரும் தங்கிக்கணும்னு கண்டிஷனா சொல்றாங்க. வேறே ரூமே இல்லைனு திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க. பக்கத்தில் எல்லாம் போய்ப் பார்க்கலாம்னா, காலேஜ் ஹவுஸ் அனெக்ஸிலும் ரூம் இருக்குனு சொல்லிட்டு, கடைசியில் மெயின் பில்டிங்கில் பார்த்துட்டுத் தான் வரீங்களா? அங்கே கிடைக்கிறதை வாங்கிக்குங்க, அது இல்லைனால் இங்கே வாங்கனு சொல்றாங்க. இதுக்கு நடுவிலே, எல்லாருக்கும் பசி வேறே வந்தாச்சு. சாப்பிட்டுட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணி, வண்டியைத் தேடினால் வண்டி விட்ட இடத்தில் இல்லை. வண்டிக்குள்ளே பர்ஸ் மாட்டிட்டு இருக்கு. கடைசியில் அங்கே, இங்கே திரட்டி, எல்லார் கிட்டேயும் கையிலே இருக்கிற காசை எண்ணிப் பார்த்துட்டு, சாப்பாட்டுக்குப் போதும்னு முடிவு பண்ணிட்டு சாப்பிடப் போனால், பையர் முறைப்பு! இது என்ன உங்க ஊர்? இப்படி இருக்கு? னு ஏதோ இப்போத் தான் முதல்லே மதுரைக்கு வர மாதிரி என்னைக் கேட்கிறார். கேட்கணுமா? நம்ம ம.பா.வுக்கு. ஏகக் குஷி! ஒரே சந்தோஷத்தோட ஃபுல் மீல்ஸ் ஆர்டர் பண்ணிச் சாப்பிட ஆரம்பிச்சார். நமக்கு ஏற்கெனவே வெளியே போனால் சாப்பிட முடியாது. இப்போ டென்ஷன் வேறே. ஜூஸ் மட்டும் போதும்னு போனால் பையர் விரட்டறார், போய்ச் சாப்பிடுனு.

தலையில் அடிச்சுட்டு, வந்து ஒரு தயிர் சாதம்னு சொல்லிட்டு உட்கார்ந்தேன். தயிர்சாதத்துக்கு முதலிலேயே பணம் கொடுத்துடணுமாம். அப்புறம் வேண்டாம்னு சொல்லக் கூடாதாம். பொதுவா எல்லா ஓட்டலிலேயும் தயிர் சாதம் பில் தனியாத் தான் வரும். இங்கே என்னனு நினைச்சுட்டு சரினு பணம் எவ்வளவுனு கேட்டால்? ஒரு மூட்டை அரிசிவிலை தயிர்சாதத்துக்குச் சொல்றாங்க. எனக்கு அவ்வளவெல்லாம் வேண்டாம், அன்னதானம் பண்ணலைனு விளக்கறதுக்குள்ளே, அந்த ஊழியர் என் கையிலே இருந்து பணத்தைப் பிடுங்கிட்டுப் போய்ட்டு, ஒரு தட்டைக் கொண்டு வந்து வச்சார். தட்டிலே வெள்ளையாக ஏதோ ஒரு சின்ன ஐஸ்க்ரீம் ஸ்பூன் அளவுக்கு இருந்தது. அதன் உச்சியிலே பொட்டு வச்சாப்பலே சிவப்பா ஏதோ இருக்கு! என்னமோ முதலில் சாப்பிட வச்சிருக்காங்க போலிருக்கு, தயிர்சாதம் எப்போ வரும்னு தெரியலையேனு, மறுபடி அந்த ஊழியரைக் கூப்பிட்டு, ரொம்ப முறைப்பா, "நான் தயிர்சாதம் கேட்டேனே?" என்று கேட்க, அவர் அதைவிட முறைப்பாகவும், அலட்சியமாகவும் என்னைப் பார்த்து, "என்னம்மா, கிண்டலா?" என்று கேட்க, "நான் ஏன் உங்களைக் கிண்டல் பண்ணறேன்? நான் சாதம் தானே கேட்டேன்?" என்று ரொம்பவே அப்பாவியாய் நான் பதில் சொல்ல, அவர் தட்டிலிருந்து வெண்மையான வஸ்துவைச் சுட்டிக் காட்டி, "இது என்ன?" என்று கேட்கவே, நான் ,"என்ன? இதான் தயிர்சாதமா?" என்று கத்திய கத்தலில், மொத்த காலேஜ் ஹவுஸும் அங்கே திரண்டுவிட்டது.