Monday, December 29, 2008

மதுரையும், மார்கழி மாசமும்

மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் போன வருஷம் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.

உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.

பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((

Saturday, December 20, 2008

எங்கே என்னோட மதுரை????

என்னத்தைச் சொல்றது? பாசமலர் புகழோ புகழுனு புகழறதைப் பார்த்தால் நாம இப்படி எழுத வேண்டி இருக்கேனு இருக்கு. ஆனால் உள்ளதைத் தானே எழுதி ஆகணும். ம்ம்ம் ஊர் எப்படி எப்படி எல்லாம் முன்னேற்றம் அடையுதுனு அவங்க சொல்றாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியை நல்லாப் பராமரிக்கிறது பத்திச் சொல்றாங்க பாசமலர்.

//மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.//

சரிதான், சிமிண்ட் பாதை மட்டும் போட்டால் சரி, ஆனால் மக்கள் மனசிலும் சிமிண்டாலேயே மூடிக்கிட்டிருக்காங்க போல. கோவிலில் நுழையும் எல்லாவழிகளிலும் பாதுகாப்புச் சோதனை தவிர்க்கமுடியாது தான். ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா?? கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா? அதிகம் ஆகுமா? ஏற்கெனவே நின்ன இடத்தில் இருந்து நகருகிறதே இல்லை யாரும். அதிலும் மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் கூடும் இடத்தில் கோபு ஐயங்கார் கடை வாசலில் ஆரம்பிச்சால் மேலகோபுர வாசலும் தாண்டி தெற்கு கோபுர வாசலையும் தாண்டி, சொக்கப்ப நாயக்கன் தெருவையும் தாண்டி நெரிசல் தாங்கலை. கீழ வாசல் கேட்கவே வேண்டாம். எந்த வழியிலே நுழைஞ்சாலும் இதே தொல்லை தான். போன வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.

நாங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். எங்களோடு பத்து, இருபது பேர் வந்தாங்க. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நுழைவு வாயில் வழியாக நுழைந்தோம் அவ்வளவு தான். பிறகு திருப்பதியை விட மோசம். திருப்பதியிலே ஒரு செகண்டாவது பார்த்துடலாம். இங்கே மீனாட்சி தெரியவே இல்லை. அதுக்குள்ளே அதே வழியாக மொத்தக் கூட்டத்தையும் அவங்க இஷ்டத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் உள்ளே விட நெரிசலில் சிக்கிக் கொண்ட நான் வெளியே வரமுடியாமல் தவிக்க, வெளியே வந்துவிட்ட என் கணவரும், பையரும் அங்கே இருந்த பெண் காவலரிடம் சொல்லி என்னை மீட்கச் சொல்ல, அவங்க பேசாமல் இருக்க,ஊழியர்களின் இந்த வேலையைக் கண்டு பட்டர்கள் சத்தம் போட, ஊழியர்கள் லட்சியமே செய்யவில்லை. அப்புறமாய் ஒருவழியாய் எங்க பையர் என்னை வெளியே கொண்டு வந்தார். மூச்சு முட்டிப் போய்விடும்போல் ஆயிடுச்சு. இதுவும் முன்னேற்றத்தில் ஒரு வகை போல.

வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு. இன்று காலை ஒரு வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஜெர்மனியின் ஒரு புராதன நகரைக் காட்டினாங்க. புராதனச் சின்னங்களை அவங்க எல்லாம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது நாம் கட்டாயமாய் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வகையில் அவங்க திறம்பட திருப்திப் படுத்தறாங்க என்பதும் கவனிக்கணும். ஆனால் நாம அவங்க உடை, உணவு, மொழி, கலாசாரம்னு மாத்திக்கிறோமே தவிர எது வேணுமோ அதை விட்டுடறோம்.

எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம். அவள் கடைக்கண் பார்வையால் அனைவரையும் ரட்சிக்கிறாள்னு சொல்லுவோம். அந்தக் கண்களை சிமெண்ட் போட்டு மூடிக் கொண்டாள் போல. ஓயாமல் சலிக்கும் கண்களால் இப்போ பக்தர்களைப் பார்ப்பதில்லைனு வச்சிருக்கா போல. மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு. இது என்னோட மதுரை இல்லை. ஒரு வேளை 25 வருஷமாய் எந்த வகையிலும் மாறாமல் இருக்கும் அம்பத்தூரைப் பார்த்துட்டே இருக்கிறதாலே இப்படித் தோணுதோ?? :((((((((

எங்கே என்னோட மதுரை????????? :((((((((

Friday, December 19, 2008

லகலகலக மதுரை லகலகலக

கடந்த ஆறு மாதங்களில் இரண்டு முறை மதுரைக்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது. மாறுதல்கள் கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது..கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்..இன்னும் சற்றுச் சூடு பிடிக்க வேண்டும் என்றாலும்..சிறு குழந்தை எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தாய்க்கு முக்கியம்தானே..

மதுரை.....

 • மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
 • கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
 • கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
 • கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.
 • பக்தி அதிகரித்துவிட்டதோ, பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரித்துவிட்டதோ...15 ரூபாய் வரிசையில் 2 மணி நேரம் நின்ற பின் தான் மீனாட்சி தரிசனம்..நடுநடுவில் வரிசையில் நமக்குப் பின் நின்றவர்கள் எப்படி நமக்கு முந்திப் போனார்கள் ..எப்போது..எப்படி அங்கே இருந்த காவலர்களையும் பணியாளர்களையும் 'கவனித்தார்கள்' என்பதே புரியாத புதிர்தான்.
 • தெரு வீதிகள் சென்னை தி.நகரை மிஞ்சும் வண்ணம் கலகலகல..
 • வாகனங்கள் அதிகரித்துவிட்டன..எனவே போக்குவரத்து நெரிசலும் அதிகம்தான்..முக்கியமான சந்திப்புகளில் விளக்குகள் இருந்தபோதும் போக்குவரத்துக் காவலரின் பணியும் தேவைப்படும் அளவுக்கு நெரிசல்தான்..
 • டிவிஎஸ் நகர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ரயில் போவதற்காக வண்டிகள் நிறுத்தப் படும்போது...போக்குவரத்து நெரிசலோ நெரிசல்...இவ்விரு இடங்களிலும் பாலங்கள் அவசியத் தேவையென்று உணரும் காலம் எப்போது வரும்? அதிலும் திருப்பரங்குன்றம் இரண்டு ரயில் கேட்டுகளுக்கு நடுவில் இருப்பதால் ஏதேனும் ஓர் அவசர காரியமென்றால் கூட உள்ளூர் வாசிகளுக்குப் படு சிரமம்தான்.
 • எஸ் எஸ் காலனி புறவழிச்சாலையில் நாயுடு ஹால் துணிக்கடை
 • மேலமாசிவீதியில் பழைய உடுப்பி இருந்த இடத்தில் வளர்ந்து வரும் போத்தீஸின் ஐந்து அடுக்குக் கட்டடம்..
 • இன்னும் பல கட்டட வேலைகள் மும்முரமாய் அனைத்துப் பிரதான சாலைகளிலும் நடந்தேறி வருகின்றன.
 • முனிச்சாலை தாண்டித் தெப்பக்குளம் போகும் இடத்தில் பழைய தினமணி அலுவலகம் இருந்த இடத்தில் வரப்போகிறது பல்லடுக்கு அங்காடி.
 • மதுரை திருமங்கலம் சாலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு அபரிமிதமான மாற்றங்கள்..மஹிந்திரா, ஃபோர்டு, டொயோட்டா, மிட்ஸுபிஷி வாகன விற்பனை மையங்கள் படு நவீனமாக..
 • தோப்பூர் அருகே இறுதிகட்டத்தை நெருங்கும் நான்கு வழிப்பாதை.
 • வளர்ந்து வரும் புதிய விமான நிலையக் கட்டடப் பணி..காத்திருப்பு அறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த விமான நிலைய விஸ்தரிப்புக் காட்சிகள் வியப்பூட்டின. வெளிநாட்டு விமான நிலைய அந்தஸ்து கூடிய விரைவில் கிட்டுவதற்கான சாத்தியங்களைப் பறைசாற்றின..அங்கே வைக்கப்பட்டிருந்த புதிய விமான நிலையத்தின் மாதிரி மலைக்க வைத்தது.
 • திரையரங்குகளில் பழைய காலம் போல் கூட்ட நெரிசல்கள் இல்லையென்பது..மதுரையில் ஓர் அதிசயம்தான்..

இன்னும் இன்னும் பல மாற்றங்கள் அதிசயிக்க வைத்தன..ஒவ்வொரு முறை மதுரை வரும்போதும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கத்தான் செய்கின்றன..