Saturday, December 20, 2008

எங்கே என்னோட மதுரை????

என்னத்தைச் சொல்றது? பாசமலர் புகழோ புகழுனு புகழறதைப் பார்த்தால் நாம இப்படி எழுத வேண்டி இருக்கேனு இருக்கு. ஆனால் உள்ளதைத் தானே எழுதி ஆகணும். ம்ம்ம் ஊர் எப்படி எப்படி எல்லாம் முன்னேற்றம் அடையுதுனு அவங்க சொல்றாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியை நல்லாப் பராமரிக்கிறது பத்திச் சொல்றாங்க பாசமலர்.

//மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.//

சரிதான், சிமிண்ட் பாதை மட்டும் போட்டால் சரி, ஆனால் மக்கள் மனசிலும் சிமிண்டாலேயே மூடிக்கிட்டிருக்காங்க போல. கோவிலில் நுழையும் எல்லாவழிகளிலும் பாதுகாப்புச் சோதனை தவிர்க்கமுடியாது தான். ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா?? கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா? அதிகம் ஆகுமா? ஏற்கெனவே நின்ன இடத்தில் இருந்து நகருகிறதே இல்லை யாரும். அதிலும் மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் கூடும் இடத்தில் கோபு ஐயங்கார் கடை வாசலில் ஆரம்பிச்சால் மேலகோபுர வாசலும் தாண்டி தெற்கு கோபுர வாசலையும் தாண்டி, சொக்கப்ப நாயக்கன் தெருவையும் தாண்டி நெரிசல் தாங்கலை. கீழ வாசல் கேட்கவே வேண்டாம். எந்த வழியிலே நுழைஞ்சாலும் இதே தொல்லை தான். போன வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.

நாங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். எங்களோடு பத்து, இருபது பேர் வந்தாங்க. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நுழைவு வாயில் வழியாக நுழைந்தோம் அவ்வளவு தான். பிறகு திருப்பதியை விட மோசம். திருப்பதியிலே ஒரு செகண்டாவது பார்த்துடலாம். இங்கே மீனாட்சி தெரியவே இல்லை. அதுக்குள்ளே அதே வழியாக மொத்தக் கூட்டத்தையும் அவங்க இஷ்டத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் உள்ளே விட நெரிசலில் சிக்கிக் கொண்ட நான் வெளியே வரமுடியாமல் தவிக்க, வெளியே வந்துவிட்ட என் கணவரும், பையரும் அங்கே இருந்த பெண் காவலரிடம் சொல்லி என்னை மீட்கச் சொல்ல, அவங்க பேசாமல் இருக்க,ஊழியர்களின் இந்த வேலையைக் கண்டு பட்டர்கள் சத்தம் போட, ஊழியர்கள் லட்சியமே செய்யவில்லை. அப்புறமாய் ஒருவழியாய் எங்க பையர் என்னை வெளியே கொண்டு வந்தார். மூச்சு முட்டிப் போய்விடும்போல் ஆயிடுச்சு. இதுவும் முன்னேற்றத்தில் ஒரு வகை போல.

வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு. இன்று காலை ஒரு வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஜெர்மனியின் ஒரு புராதன நகரைக் காட்டினாங்க. புராதனச் சின்னங்களை அவங்க எல்லாம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது நாம் கட்டாயமாய் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வகையில் அவங்க திறம்பட திருப்திப் படுத்தறாங்க என்பதும் கவனிக்கணும். ஆனால் நாம அவங்க உடை, உணவு, மொழி, கலாசாரம்னு மாத்திக்கிறோமே தவிர எது வேணுமோ அதை விட்டுடறோம்.

எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம். அவள் கடைக்கண் பார்வையால் அனைவரையும் ரட்சிக்கிறாள்னு சொல்லுவோம். அந்தக் கண்களை சிமெண்ட் போட்டு மூடிக் கொண்டாள் போல. ஓயாமல் சலிக்கும் கண்களால் இப்போ பக்தர்களைப் பார்ப்பதில்லைனு வச்சிருக்கா போல. மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு. இது என்னோட மதுரை இல்லை. ஒரு வேளை 25 வருஷமாய் எந்த வகையிலும் மாறாமல் இருக்கும் அம்பத்தூரைப் பார்த்துட்டே இருக்கிறதாலே இப்படித் தோணுதோ?? :((((((((

எங்கே என்னோட மதுரை????????? :((((((((

12 Comments:

வல்லிசிம்ஹன் said...

நீங்க சொல்கிறதைப் பார்த்தால் பயமா இருக்கேம்மா.

நான் மதுரை என்கிற பழைய சொப்பனத்திலியே இருக்க வேண்டியதுதான்.

பாச மலர் / Paasa Malar said...

//ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா??//

இதற்குக் காரணம் மக்கள்தானே..திருப்பதி 'ஜருகண்டி' பாணியில் போகும்போதே 2 மணிநேரம் வரிசை...பக்திதான் நம் நாட்டில் வியாபாரமாகி ரொம்பக் காலமாகி விட்டதே..

//கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா//

மதுரையில் நெரிசல் குறைய வாய்ப்பு எங்கேயுள்ளது? நம் தெருக்களின் அமைப்பு அப்படி..

உயரமான கட்டடங்கள் என்பது அனைத்து நகரங்களைப் போலவே இங்கும் இருக்க வேண்டிய ஒன்றுதானே..

// வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.//

பக்தி முத்திப்போச்சு எல்லாருக்கும்..அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது..திரையரங்குகளில் கூட்டம் குறைய ஆரம்பித்தவுடன் மக்கள் படையெடுப்பது கோவில்களை நோக்கித்தானே..
கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா?

பாச மலர் / Paasa Malar said...

//வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு//

ஆன்மாவைச் சிதைப்பது இருக்கட்டும்..ஆன்மாவைக் காக்க வேண்டிய முயற்சிகள் இத்தனை காலம் நடைபெறவே இல்லை..பழைய கட்டடங்கள் பாழடைந்த கட்டடங்களாகவே நின்ற்று கொண்டிருப்பதுதான் புராதனமா...

புராதனம் என்பது நம் தமிழ்நாட்டில் எப்போதோ சிதைந்து விட்டது..மதுரையில் இதுவரை..அதாவது கடந்த 10 ஆண்டு காலமாக எந்தப் புராதனம் ஆன்மாவுடன் திகழ்ந்தது?

பாழடைந்து சிதிலமாகிப் போன சின்னங்கள்தான் ஏராளம்..இன்று ஏதோ புதுப்பிக்கவாவது செய்கிறார்கள்..

பாச மலர் / Paasa Malar said...

//மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு//

இதுதான் காலத்தின் கட்டாயம்..கோலம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்..

மீனாட்சி இருக்கிறாள் என்று நம்பித்தானே கீதா இத்தனை கூட்டம் அலைமோதுகிறது..

கோவில்களில் அமைதியான தரிசனம் என்பதில் மக்கள் தாங்களாகவே மண்ணைவாரிக் குழி தோண்டிப் புதைத்து ரொம்ப நாளாகிவிட்டது..

உங்கள் எண்ணத்தின் படி சொன்னாலும் கூட அந்த
மீனாட்சி போய் ரொம்ப காலமாகிவிட்டது...

மதுரையில் பொலிவு என்பது தற்ற்போதுதானே அரும்ப ஆரம்பிக்கிறது..

பாச மலர் / Paasa Malar said...

//எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம்//

நான் இந்த ரகம் இல்லையென்பதால் எனக்கு ஒருவேளை இவ்விஷயத்தில் அவ்வளவு தாக்கமில்லையோ என்னவோ..

Geetha Sambasivam said...

//புராதனம் என்பது நம் தமிழ்நாட்டில் எப்போதோ சிதைந்து விட்டது..மதுரையில் இதுவரை..அதாவது கடந்த 10 ஆண்டு காலமாக எந்தப் புராதனம் ஆன்மாவுடன் திகழ்ந்தது?

பாழடைந்து சிதிலமாகிப் போன சின்னங்கள்தான் ஏராளம்..இன்று ஏதோ புதுப்பிக்கவாவது செய்கிறார்கள்..//

அட, புதுப்பிக்கும் வேலையாவது பழைய அழகோடு இருக்கா என்றால் இல்லை. பொற்றாமரையைச் சுற்றி வரைந்திருக்கும் ஓவியங்கள்!! :((((( சொல்லவே கஷ்டமா இருக்கு. இப்போ வரைஞ்சிருப்பவர் கேரளாவிலே இருந்து வந்து வரைஞ்சிருக்கார், நல்லாத் தான் இருக்கு, ஓவியம் என்ற அளவிலே, ஆனால்??????? உணர்வு?? உணர்வு இல்லையே அதிலே! பார்க்க கண்ணுக்கு அழகாய்ப் பொலிவாய் இருந்தால் போதுமா?? மண்வாசனை எங்கே? எங்கே போச்சு அந்த மதுரையின் மண்வாசனை??? தவிக்குதே பாசமலர் மனசு! :(((((((

@வல்லி, ஆமாம், பழைய சொப்பனமே நல்லது தான். :(((((((( இப்போ மதுரை மாநரகம். நகரம் இல்லை.

Geetha Sambasivam said...

மக்கள் தான் காரணம் அதீதக் கூட்டத்திற்கு இல்லைனு சொல்லலை, ஆனால் அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்து அனைவரையும் உள்ளே விட்டு, அனைவரும் தரிசனம் செய்ய வசதி செய்யவேண்டிய பொறுப்பு யாருக்கு??? பண்டரிபுரம் போய்ப் பாருங்கள் ஒரு முறை! கோயிலின் புராதனமும் கெடாமல் பக்தர்கள் வரிசையில் நின்று பண்டரிநாதனைத் தொட்டுத் தடவிப் பார்த்து வணங்க முடியும் ஒவ்வொருவராய். எத்தனை கூட்டம் வருது தெரியுமா???? தினமும் ஆயிரக் கணக்கில், ஏகாதசி என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் தரிசனம் செய்யாமல் யாரும் வரமுடியாது.

பாச மலர் / Paasa Malar said...

//பொற்றாமரையைச் சுற்றி வரைந்திருக்கும் ஓவியங்கள்!! //

உண்மைதான்..வண்ணம் இருக்கும் அளவு உணர்வுப்பூர்வமாக இருக்கிறதா என்பது சந்தேகந்தான்..பல கோவில் கோபுரங்களிலும் அந்த அழகிய சாமபல் நிறம் போய் வண்ணங்கள் குடியேற ஆரம்பித்ததுமே அழகு காணாமல் போய்விட்டது..

ஒன்று மட்டும் புரிகிறது..உங்களின் இந்த ஆதங்கமும் சரி..என் பெருமிதமும் சரி..மதுரைக்கான நம் உணர்வுகள் ஆழமானவை என்று வெளிப்படுத்துகின்றன..

Geetha Sambasivam said...

@பாசமலர், பெருமிதம்?? என்னத்தைப் பெருமிதம் போங்க, உயிரோடும், உணர்வோடும் ஒன்றிப் போயிருந்த ஒன்றைக் காணோமேனு தவிப்பாய் இருக்கு எனக்கு. மனசிலே ஒட்டலையே இப்போ! :(((((((

சிவமுருகன் said...

இனியாவது நம்ம ஆழ்வார் சொல்ற மாதிரி டிக்கட் வாங்கம தரிசனம் செய்யுங்க! அரை-ஒரு மணிக்குள் 12 அடி நடந்து கொண்டே தரிசனம் செய்து விடலாம். கும்பலாக போனால் மதுரை பற்றியும் குடும்பத்தை பற்றியும் அளவிளாவிக்கலாம், தனியாக சென்றால் அபிராமி அந்தாதி, நமக்கு தெரிந்த ஏனைய பாடல்கள் மனசுக்குள்ளேயே இசைத்துக் கொள்ளலாம், இன்னும் நிறைய + உள்ளது. ரூ15 டிக்கட் எடுத்து உள்ளே போனால் எல்லாம் பனால்! கண்டிப்பா ரூ15 செலவு செஞ்சே ஆகுனும்ன்னு நினைச்சீங்கன, பேசாம கோவில் திருப்பணி உண்டியல்ல அதை போட்றுங்க ஹி ஹி.

பாச மலர் / Paasa Malar said...

சிவமுருகன்,

//இனியாவது நம்ம ஆழ்வார் சொல்ற மாதிரி டிக்கட் வாங்கம தரிசனம் செய்யுங்க!//

நீங்க வேற..காசு கொடுத்தும் சரி..காசு கொடுக்காமயும் சரி..நான் கோவில் சன்னதிகளுக்குப் போறதையே விட்டுட்டேன் மதுரையில்..

கோவில் போவதெல்லாம் தெப்பக்குளத்திலும் வெளிப்பிரகாரத்திலும் உட்கார்ந்து கொள்வதோடு நிறுத்திக் கொண்டாயிற்று...யாராவது மதுரைக்குப் புதியவர்கள் வரும்போது வழிகாட்டியாகக் கூடச் செல்லும் போது இப்படி மாட்டிக் கொள்வதுண்டு..

//பேசாம கோவில் திருப்பணி உண்டியல்ல அதை போட்றுங்க//

டிக்கெட் காசே திருப்பணிக்குப் போகிறது என்று கூறிக் கொண்டே டிக்கெட் விற்ற காட்சியைத்தான் மீனாட்சி கோவிலில் பார்த்தேன்...

Geetha Sambasivam said...

//இனியாவது நம்ம ஆழ்வார் சொல்ற மாதிரி டிக்கட் வாங்கம தரிசனம் செய்யுங்க! அரை-ஒரு மணிக்குள் 12 அடி நடந்து கொண்டே தரிசனம் செய்து விடலாம். //

சிவ முருகன், நீங்க சரியாப் புரிஞ்சுக்கலைனு நம்பறேன். டிக்கெட் வாங்கப் பார்க்கிறதுக்கு வரிசை தெற்கு ஆடி வீதியைத் தாண்டி நின்னுட்டு இருந்தது. அந்தக் கூட்டத்திலே நின்னு, எப்போ ஸ்வாமியைப் பார்க்கிறது? அப்படியும் ஒரு மணி நேரம் நின்னு பார்த்துட்டே, அப்புறமாப் பையர் போய் டிக்கெட் வாங்கிட்டு வந்தார். டிக்கெட் வரிசையும் கிளிக்கூட்டு மண்டபம் வரையிலும், அப்படியும் உள்ளே போனால் நெரிசலோ, நெரிசல், தாங்கலை!

மேலும் தரிசனத்துக்குப் போனால் ஸ்வாமியைப் பார்த்துட்டு வரத் தான் போறோம். ஆனால் கோயில் ஊழியர்கள் தங்கள் வியாபாரங்களை அங்கே தரிசனம் செய்யும் பக்தர்களிடம் ஆரம்பிக்கிறாங்க. பல கோயில்களிலும் இது தான் நடக்கிறது. மீனாட்சியை மனசிலேயே பார்த்துக்க வேண்டியது தான். :((((((((( அவள் இப்போ மதுரையிலே இல்லை!