மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் போன வருஷம் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும்.
எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.
உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.
பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.
மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.
எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.
சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((
Monday, December 29, 2008
மதுரையும், மார்கழி மாசமும்
Posted by Geetha Sambasivam at 12/29/2008 10:22:00 AM
Labels: கீதா சாம்பசிவம்
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
Me the First????
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சீனா!!!
கொசுவத்தி சுத்தியாச்சா - அருமையான நினைவாற்றல் - சிந்த்தித்து, அசைபோட்டு, மகிழ்ந்து பதவாகப் போடும் மன நிலை - மகிழ்ச்சியான் சூழ்நிலை - நேரம் - இத்தனையும் கிடைத்து - புத்தாண்டு முழுவதும் கிடைக்க நல்வாழ்த்துகள் கீதா
//சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே//
கோவில் பிரசாதம் ருசியே தனிதான்..
வாங்க ரம்யா, எழுதினது சீனா சார்னு நினைச்சீங்க போல! புத்தாண்டு வாழ்த்துகள் தாமதமாய்.
வாங்க சீனா சார், என்ன செய்யறது? அவ்வளவு தூரம் போயிட்டு மீனாட்சியைப் பார்க்க முடியலைங்கற ஆதங்கம் இன்னும் போகலை! :(((( இப்போ போன மாதம் என் தம்பியும், தம்பி மனைவியும் அறங்காவலர் அலுவலகம் மூலம் தெரிஞ்ச அலுவலர் உதவியோட தரிசனம் பண்ணி இருக்காங்க. டிக்கெட் வாங்கியும் பார்க்க முடியலைங்கறதாலே அலுவலர் கிட்டே உதவி கேட்டுட்டுப் பார்த்தோம்னு சொன்னாங்க. எங்களுக்கு அப்படி யாரும் தெரிஞ்சவங்களும் இல்லை, இருந்தாலும் மீனாட்சியை இப்படியாவது பார்க்கணுமான்னு தோணுது. மனசிலே இருக்கா, அது போதும்!
அதிலும் பெருமாள் கோயில் பிரசாதம், கோஷ்டிகளில் கொடுப்பாங்க பாருங்க, அதுக்கு ஈடு, இணையே இல்லை பாசமலர்! திருநெல்வேலி நவ திருப்பதி யாத்திரையின் போது ஸ்ரீவைகுண்டத்தில் கோஷ்டி நடக்கும்போது கூப்பிட்டு நிற்கச் சொல்லிப் பிரசாதம் கொடுத்தாங்க, ஆஹா, அந்தச் சுவையே தனிதான்!
இப்பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி. ஆனா கேள்வி உங்களுக்குதான் :-)
மதுரை மாநகர பெரு மக்களே, மதுரை தமிழ் என்றால் என்ன? எப்படி அதை வரையறுப்பது? மற்ற வட்டார வழக்குகளில் இருந்து எப்படி வேறுபடுகிறது? சொன்னா எனக்கு வசதியா இருக்கும்
சில பேர் நான் மதுரகாரனாட்டம் பேசுறேன் அப்படிங்கிறாங்க, எப்படி சொல்றிங்கன்னு கேட்டா நீங்க பேசறது அப்படிதான் இருக்கு அப்படிங்கறாங்க. ஆனா நான் மதுரை பக்கத்து ஆள் இல்லை. ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்துள்ளேன்.
//குறும்பன் said...
இப்பதிவுக்கு தொடர்பில்லாத கேள்வி. ஆனா கேள்வி உங்களுக்குதான் :-)
மதுரை மாநகர பெரு மக்களே, மதுரை தமிழ் என்றால் என்ன? எப்படி அதை வரையறுப்பது? மற்ற வட்டார வழக்குகளில் இருந்து எப்படி வேறுபடுகிறது? சொன்னா எனக்கு வசதியா இருக்கும்
சில பேர் நான் மதுரகாரனாட்டம் பேசுறேன் அப்படிங்கிறாங்க, எப்படி சொல்றிங்கன்னு கேட்டா நீங்க பேசறது அப்படிதான் இருக்கு அப்படிங்கறாங்க. ஆனா நான் மதுரை பக்கத்து ஆள் இல்லை. ஒரே ஒரு முறை மதுரைக்கு வந்துள்ளேன்.//
குறும்பண்ணே,
கேள்விய கேட்டுப்பிட்டிக... எப்பிடின்னு வெளக்க பதிவொன்னு போட்டுப்பிடுவோம்... கழுத காசாபணமா... :)
இடுகை அப்படிங்கறத்துக்கு பதிலா பதிவுன்னு தப்பா சொல்லிட்டேன். :-(
இராமு தம்பி ரொம்ப நன்றி. சீக்கிரம் நீங்க மனசு வைக்கணும். :-)
Focus Lanka திரட்டியில் இணைக்க...
http://www.focuslanka.com
ஆமாம் கீதாம்மா. நீங்களே உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து சொன்ன பின்னாடி எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்துன்னு நான் சொன்னா அது சரியா இருக்காது - ஆனாலும் சொல்றேன். நானும் சின்ன வயசுல இருந்து 'ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி', 'ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி', 'ஓம் அறம் வளர்த்த அம்மையே போற்றி'ன்னு தான் அம்மன் சன்னிதிக்குப் போகும் போதெல்லாம் அங்கே சன்னிதியின் நுழைவாயிலில் எழுதி வைத்திருக்கும் போற்றித் திருநாமங்களைச் சொல்லியிருக்கிறேன்.
நானும் இராஜம்மாள் சுந்தரராஜன் திருப்பாவை திருவெம்பாவை வகுப்புகளுக்குச் சென்றிருக்கிறேன். நீங்களே போயிருக்கீங்கன்னா நான் போனது அவங்க வகுப்புக்கா இல்லாட்டி அவங்க சிஷ்யைக யாராவது எடுத்த வகுப்பா? தொடர்ந்து போகாததால உறுதியா சொல்லத் தெரியலை. ஆனா மார்கழி முடிஞ்ச பின்னாடி ஏதாவது ஒரு பக்தி படத்திற்கு இலவச அனுமதிச்சீட்டு கொடுப்பாங்க. அதுல வருடாவருடம் தொடர்ந்து நாலைஞ்சு வருடமாவது படம் பாத்தது நினைவிருக்கு. :-)
நான் எத்தனையோ தடவை வடக்கு மாசி வீதிக்குப் போயிருந்தாலும் இன்னும் வடக்கு கிருஷ்ணன் கோவிலுக்குள்ள போனதில்லை. அடுத்த முறை மதுரைக்குப் போகும் போது கோஷ்டி நேரமா பாத்து போகணும்ன்னு குறிச்சுவச்சுக்கிறேன். :)
வாங்க குறும்பன், மதுரத் தமிள் என்னனு கேட்கிறீங்க! என்னத்தைச் சொல்றது? வாளப்பளம் னு சொல்லுங்க, போதுமே! :)))))) குளாய்லே தண்ணே வரலைனு சொல்லுங்க! :)))))
இந்தா, நம்ம ராயல் வேறே சொல்றேனு சொல்றாரே! :P
குமரன், என்ன இது?? பாராட்டா? உ.கு.வா ஒண்ணுமே புரியலையே? " உங்களுக்கே" உங்களுக்கே" னு சொல்றதைப் பார்த்தால், சந்தேகமா இருக்கே! :P:P:P:P
வடக்கு கிருஷ்ணன் கோயில் தூண்களில் செதுக்கி இருக்கும் சிற்பங்கள் எல்லாம் அப்படியே இருக்கானு தெரியலை! முடிஞ்சா போகும்போது படம் எடுங்க. அருமையான கோயில், அதன் படிகளிலே உச்சிப் படியிலே உட்கார்ந்து வடக்கு மாசிவீதியையே விலைக்கு வாங்கிட்டாப்போல் பார்க்கிறது ஒரு சந்தோஷம்!
//வாங்க குறும்பன், மதுரத் தமிள் என்னனு கேட்கிறீங்க! என்னத்தைச் சொல்றது? வாளப்பளம் னு சொல்லுங்க, போதுமே! :)))))) குளாய்லே தண்ணே வரலைனு சொல்லுங்க! :)))))//
ஓ... இப்ப புரியுது... ஏன் சில பேர் நான் மதுரகாரனாட்டம் பேசுறேன் அப்படிங்கிறாங்க அப்படிங்கிறது :-)).
////வாங்க குறும்பன், மதுரத் தமிள் என்னனு கேட்கிறீங்க! என்னத்தைச் சொல்றது? வாளப்பளம் னு சொல்லுங்க, போதுமே! :)))))) குளாய்லே தண்ணே வரலைனு சொல்லுங்க! :)))))//
ஓ... இப்ப புரியுது... ஏன் சில பேர் நான் மதுரகாரனாட்டம் பேசுறேன் அப்படிங்கிறாங்க அப்படிங்கிறது :-)).//
தலைவலி,
கிர்ர்ர்ர்ர்... கேள்விகேட்டு வந்தவரே சுத்தல்'லே விட்டாச்சா... :)
குறும்பன்,
இருங்க.. சீக்கிரமே மதுர தமிழ் பத்தி பதிவு போட்டுறலாம்...
அதெல்லாம் சரி.இப்ப எப்படி இருக்குது மதுரை,அதை சொல்ல வில்லையே நீங்கள்?
எனக்குத் தெரிந்து நியாய அநியாயங்களின் விதிகள் தலைகீழாயிருக்கின்றன.மதுரையை சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
90 களின் மதுரை கூட இப்போது இருப்பதாகத் தோன்றவில்லை.
வாரிசு தலையெடுத்தபின் ரொம்பவும் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது.
அறிவன், உங்களுக்கு பதில் இப்போ இருக்கிறது மதுரையே இல்லை, என்னைப் பொறுத்த வரையில், வேறே ஏதோ ஊர்!, அதுவும் முகம் தெரியாத ஊர்! :((((((((((((((((
Hi good website about madurai.
please refer my site and give your suggestions
http://pnaptamil.blogspot.com
http://pnapenglish.blogspot.com
http://pnappix.blogspot.com
http://pnaplinux.blogspot.com
நானும் ராஜம்மா அத்தை வகுப்புகளுக்கு வந்திருக்கிறேன்.
அதாவது மார்கழி 15 நாட்களுக்கு மட்டும். அவர் எங்க சித்தியின் அத்தை. எங்களுக்கும் அத்தம்மா ஆனர்.
விஷாலின்னு ஒரு பேர் ஞாபகம் இருக்கு. சித்தியின் பெயர் பங்கஜி ராஜகோபால். வானொலியில் பாடுவார்.
கீதா மதுரைக்கு அழைத்ததற்கு நன்றிம்மா.
அன்பின் சீனா அவர்களே.. என் பெயர் மா.கார்த்திகைப் பாண்டியன். நானும் மதுரைதான். கடந்த மூன்று மாதங்களாகத்தான் எழுதி வருகிறேன். கோவி. கண்ணன் அவர்களுடைய பதிவில் தங்களை பற்றி படித்தேன். சந்தோஷமாக இருந்தது. வாழ்த்துக்கள்.:-)
ரொம்ப நன்றி சீனா அவர்களே.. நீங்க கேட்ட லிங்க் இதோ.. ரெண்டு பதிவா எழுதி இருக்காரு..
http://www.sramakrishnan.com/view.asp?id=231&PS=1
http://www.sramakrishnan.com/view.asp?id=232&PS=1
கார்த்திகைப் பாண்டியன்,
மீண்டும் ஒரு மதுரைக்காரரைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur blog.
http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html
divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.
plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.
plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.
http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/
indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.
PLEASE CONSIDER OUR REQUEST
I just came down to see if any post on Madurai festival going on..
Can some Maduraikar post the same?
Post a Comment