Saturday, April 25, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!


வைகாசி மாசம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும்.

ஆனி மாசம் மகம் நக்ஷத்திரத்திலே இருந்து ஊஞ்சல் உற்சவம். தினம் சாயங்காலம் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறுகால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் தன் அருமைக் கணவரான சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூசல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

ஆடி மாதத்திலே ஆயில்ய நக்ஷத்திரம் பத்து நாளைக்கும் முளைக்கொட்டு உற்சவம். கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.

ஆவணிமாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது , விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிஷேஹம் நடைபெறும்.

புரட்டாசி மாதத்தில் எல்லா ஊரிலேயும் நடக்கிற மாதிரி நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி ஜொலி ஜொலிப்பாள். கொலு மண்டபத்தின் அழகையும், அலங்காரத்தையும் அந்த நாட்களிலேயே வர்ணிக்க இயலாது.

ஐப்பசி மாசம் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம். புது மண்டபத்திலே அம்மன் அன்று கொலுவிருந்து, மதுரை இளம்பெண்கள் கூடி இருந்து கோலாட்டம் ஆட, உற்சவம் காணுவாள். இப்போ நடக்குதா|?? தெரியலையே!

கார்த்திகை மாசம் பத்துநாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபத்தன்னிக்கு அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்துவார்கள்.

மார்கழி. தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து விடும். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. முன்பெல்லாம் பத்து மணி வரை இருந்தது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருவார்.

தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப் பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளப் பண்ணித் தெப்போற்சவம் நடைபெறும். விளக்குகளாலும், பல்வேறுவிதமான அலங்காரங்களாலும் அலங்கரிக்கப் பட்டு மொத்த மதுரையுமே வண்டியூரில் இருக்கும்.

அடுத்து மாசி, பங்குனி இரண்டு மாசத்துக்கும் சேர்த்து நடக்கும் மண்டல உற்சவம். இது அநேகமாய்க் கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கே தெரிந்த ஒன்று. நாற்பத்தி எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்துப் பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாசக்கார்த்திகை நக்ஷத்திரத்துலே இருந்து உத்திரம் வரைக்கும் அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் செல்வார்கள். மகனின் திருக்கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு இரவுக்கிரவே இருப்பிடம் வந்துவிடுவார்கள் இருவரும்.

எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்று என்னவென்றால், அம்மையின் அர்ச்சனைகளும், ஐயனின் அர்ச்சனைகளும் தூய தமிழிலேயே சொல்லப் படுகின்றன, இவை எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே நான் காண்கின்றேன். என் அப்பாவும் பெருமையாய்ச் சொல்லுவார். அப்பா, பெரியப்பா எல்லாரும் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாய் இருந்தவர்களே. ஆகையால் மதுரையில் தமிழில் அர்ச்சனையும் உண்டு. அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ப திருவெம்பாவை, தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்றவையும் பாடப் பட்டு வருகின்றது. ஆடி வீதிகளில் தமிழ் கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் எடுக்கின்றனர். திருப்புகழ் சங்கமும், திருக்குறள் மண்டபமும் உள்ளன. இவற்றில் திருப்புகழ் பற்றிய வகுப்புகளும், திருக்குறள் பற்றிய வகுப்புகளும் எடுக்கப் பட்டு வந்தன. மாணவ, மாணவிகளுக்கு இவற்றைப் பயிற்றுவித்து சிறப்பாய்ச் சொல்லுவோர்க்குத் திருமுருக கிருபானந்த வாரியார், ஹரிதாஸ் ஸ்வாமிகள் போன்ற பல்வேறு பெரியோர்களின் கையினாலும் ஆன்றோர்களின் கையினாலும் பரிசுகளும் வழங்கப் பட்டு வந்தன.

Thursday, April 23, 2009

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்குTuesday, April 21, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

நேற்று இட்ட இடுகையில் முக்கியமான இரு தெருக்களை மறந்திருக்கின்றேன். சிறிய வயதில் கழுதை அக்ரஹாரத்திலும், பின்னர் அங்கிருந்து வடுகக் காவல் கூடத் தெருவிலும் இருந்தோம். அதன் பின்னரே மேல ஆவணி மூல வீதிக்கு வந்தோம். ம்ம்ம்ம்?? இப்படி எல்லாம் பதிவுகள் எழுதி உலகப் புகழ் பெறப் போறேன்னு அப்போ தெரியாது. மெய்க்கீர்த்தி ஒண்ணு பாடி ஒரு கல்வெட்டாவது வச்சுட்டு வந்திருக்கலாம். இப்போ அடுத்துப் பார்க்கலாமா?
**************************************************************************************

மதுரை என்றாலே தமிழ் மொழியும், மதுரைப் பாண்டியர்கள் அமைத்த சங்கமும், சங்கத் தமிழின் இன்பமும் பற்றிப் பேசாமல் போக முடியாது. தமிழை வளர்க்கப் பாண்டிய மன்னர்கள் மூன்று சங்கங்கள் அமைத்திருக்கின்றனர்.வடக்கே சூரியகுல மன்னர்கள் வடமொழியை வளர்த்தனர் என்றால் தெற்கே பாண்டிய மன்னர்களால் தமிழ் வளர்க்கப் பட்டது. வேறெந்தத் தமிழ் மன்னரும் அப்போது செய்யாத ஒன்றைப் பாண்டிய மன்னர்கள் செய்தார்கள் என்றால் அது தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்ததே. கடல் கோளால் அழிந்துபட்ட பாண்டிய நாட்டின் பழைய மதுரையும் சரி, இப்போது இருக்கும் மதுரையும் சரி, தமிழ்ச்சங்கம் வளர்த்து வந்ததற்கான இலக்கியச் சான்றுகள் இன்றளவும் இருந்து இவற்றை மெய்ப்பித்து வருகின்றன. பின்னாட்களில் பாண்டித்துரைத் தேவர் என்பவரால் நான்காம் தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. இந்தப் பாண்டித் துரைத் தேவரிடம் வெள்ளையர் ஒருவர் திருக்குறளை திருத்தம் செய்து கொண்டு காட்டியதாகவும், பாண்டித்துரைத் தேவர் அவரை இகழ்ந்து திருவள்ளுவரின் திருக்குறளைத் திருத்த நீர் யார் எனக் கேட்டதாயும் செவிவழிச் செய்திகள் சொல்லுகின்றன. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாட்டில் அப்போதைய முதல் அமைச்சர் மதுரையிலோ, தஞ்சையிலோ நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப் படும் என அறிவித்ததாயும், காந்தி ம்யூசியத்துக்கு அருகே இதற்கென நிலம் கையகப் படுத்திப் பெயர்ப்பலகை நட்டு அடிக்கல் நாட்டியதாயும், இப்போது அந்த இடம் பொதுக்கழிப்பறையாகப் பயன்பட்டு வருவதாயும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்து மீனாக்ஷியின் அலங்காரங்கள் பற்றிய குறிப்பு.

யாரானும் ஒரு நாளைக்கு இரு முறைக்கு மேலே புடவையை மாற்றினாலோ, அலங்கரித்துக் கொண்டாலோ, “மதுரை மீனாக்ஷி போல அலங்காரம் செய்துக்கிறாளே” என்று சொல்லுவதுண்டு. இப்போ அப்படிச் சொல்றாங்களானு தெரியலை. ஆனால் மீனாக்ஷிக்கு வேளைக்கு ஒரு அலங்காரம், வேளைக்கு ஒரு நகை. சித்திரைத் திருநாளில் அம்மனுக்குப் பட்டாபிஷேஹத்தின் போது அணிவிக்கப் படும் கிரீடத்தின் அழகைக் காண இரு கண்கள் போதாது. விஜய நகர சாம்ராஜ்யத்தின் அரசரால் வழங்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கிரீடத்தில் 920 மாணிக்கக் கற்களும், 78 பச்சை வைரங்களும், 11 மரகதக் கற்களும், 8 கோமேதகங்களும் 7 நீலங்களும் கண்ணைப்பறிக்கும் வகையில் பதிக்கப் பட்டுள்ளன. செங்கோல் என்றால் சிவப்புக்கற்களாலேயே ஆன செங்கோலை வைத்திருப்பாள் மீனாக்ஷி. 761 சிவப்புக் கற்கள், 261 மரகதக் கற்கள், 74 வைடூரியக் கற்கள், 44 முத்துக்கள், 21 பச்சை வைரங்கள் பதிக்கப் பட்ட இந்தச் செங்கோலை வழங்கியவர் திருமலை நாயக்கர். சுந்தரேஸ்வரரின் கிரீடம் ஆவணி மாதம் அவரின் பட்டாபிஷேஹத்தின் போதும், சித்திரைத் திருவிழாவின் போதும் அணிவிக்கப் பெறும். இந்தக் கிரீடம் மிக மிகப் புராதனமான ஒன்று என்றும், முற்காலப் பாண்டியர்கள் செய்து அளித்த இந்தக் கிரீடம் வழிவழியாக வருகின்றது எனவும், இதன் பெயர் வாசுவாலைக் கிரீடம் என்றும் சொல்லுவார்கள். இந்தக் கிரீடத்தில் மூன்று வரிசையாக பெரிய பெரிய மாணிக்கக் கற்களும், 439 முத்துக்களும், 300 பவளங்களும், 247 கெம்புக்கற்களும், 39 மரகதங்களும், 27 பச்சை வைரங்களும், 6 நீலங்களும், 2 கோமேதகங்களும் உள்ளன.

இதைத் தவிர தினசரி அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு அணிவிக்கப் படும் முத்துச் சொறுக்கின் அழகையும், அதை அணிந்த கோலத்தில் மீனாக்ஷியின் அழகையும் எவ்விதம் வர்ணிப்பது? நம் வீட்டுப் பெண்கள் தலையைத் தூக்கிச் சொறுக்குக் கொண்டை போட்டுக் கொண்டு வேலை செய்வதைப் போல அவளும் நம் வீட்டுப் பெண் போலவே காட்சி அளிப்பாள். அம்மா, மீனாக்ஷி, இங்கே வாம்மா, என்று கூப்பிட்டு அழைத்தால் உடனே ஓடி வந்து, “என்னம்மா?” என்று கேட்டுவிடுவாள் போல் ஒரு கோலம் காட்டி நிற்பாள். எனக்குச் சீர்காழியின்
"சின்னஞ்சிறு பெண் போலே,
சித்தாடை இடை உடுத்தி,
பொற்றாமரைக் கரையினிலே
சீர்தூக்கிச் சிரித்து நிற்கும் "இவளைப் பற்றிய இந்தப் பாடலே நினைவில் வரும். சீர்காழி எப்போ மதுரை வந்தாலும் சிவகங்கைக் கரையினிலே என்ற இந்த வரியை பொற்றாமரைக் கரையினிலே என்று மாற்றியே பாடுவார். இந்த முத்துச் சொறுக்கோடு கூட, முத்து உச்சிக்கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கி, முத்துச் சுட்டி, முத்துக்கிளி, முத்துக் கடிவாளம், முத்து மாலை என்று சகலமும் முத்து முத்தாய்க் காட்சி அளிப்பாள். இந்த முத்து ஆபரணங்களைச் செய்து கொடுத்தவர் விஜய நகர சாம்ராஜ்ய அரசர்களில் ஒருவர் எனக் கூறப் படுகின்றது. இன்னும் வேற்று நாட்டவரும் அன்னைக்கு ஆபரணங்கள் அளித்துள்ளனர். ரோமானியர்கள் அளித்த ஆபரணம் தங்கக் காசுமாலை, ரோமானிய எழுத்துக்கள் பொறித்த 48 காசுகளோடு கூடியவை, அவற்றில் 50 தங்க மணிகளும் இடையில் இருக்கும். கிழக்கிந்தியக் கம்பெனியால் அளிக்கப் பட்ட காசுமாலைகள், 73 காசுகளும் ஆங்கில எழுத்துக்கள் பொறித்தவை, ஆங்கிலேயன் ரோஸ் பீட்டரால் அளிக்கப்பட்ட நவரத்தின மிதியடிகள், இன்னும் தெலுங்கு நாயக்கர்களால் அளிக்கப் பட்டவை, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் அளித்தவை, நகரத்தார் சமூகத்தினர் அளித்தவை எனப் பலவேறு விதமான ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் திருமலை நாயக்க மன்னன் அளித்த நீல நாயக்கன் பதக்கம் என்ற பெயரில் அழைக்கப் படும் 30 பவுன் பெரிய பதக்கம், பெரிய நீலக்கல் பத்து, கெம்பு 2, கோமேதகம் ஒன்று வைத்துக் கட்டியது, இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி பார்க்கவேண்டும் என ஆசைப் பட்டதால் இங்கிலாந்து சென்று பின் திருப்பி அனுப்பப் பட்டது.

1963-ல் கோயில் நிதியில் இருந்து வைரக் கிரீடமும், 1972-ல் கோயில் நிதியில் இருந்து தங்கப் பாவாடையும்,( இதைத் தங்கக் கவசம் என்றும் சொல்கின்றனர். ) செய்யப் பட்டது. வைரக் கிரீடம் சார்த்து நாள் அன்று இந்தத் தங்கப் பாவாடையும், சார்த்துவார்கள். புடவைக் கொசுவம் வைத்துக் கட்டியது போல் காட்சி அளிக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தினமும் திருவிழாதான் மீனாக்ஷிக்கு. மாத வாரியாக அவள் திருவிழாக் காணும் பட்டியல் இதோ கீழே:

சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா: மீனாக்ஷி பட்டாபிஷேஹமும், மீனாக்ஷி திருக்கல்யாணமும் இப்போது தான். கொடி ஏற்றம் முடிந்து எட்டாம் நாள் திருவிழாவில் மீனாக்ஷி பட்டாபிஷேஹமும், ஒன்பதாம் நாள் காலையும், மாலையும் மீனாக்ஷி திக்விஜயமும், பத்தாம் நாள் காலை மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவம் கண்டருளுதலும் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தன்று இரவு அம்மனும், ஸ்வாமியும் வீதி உலா வருகையில் ஸ்வாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மனுக்குப் புஷ்பப் பல்லக்கும், மறு நாள் சித்ராபெளர்ணமிக்கு முதல் நாள் காலையில் அம்மனும், ஸ்வாமியும் தேரோட்டமும் நடை பெறும். அன்று மாலை வைகைக் கரையில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் சித்ரா பெளர்ணமி அன்று அழகர் வைகையிலே இறங்குவதும் நடை பெறும். இந்தக் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை ஒவ்வொரு வருஷமும் மதுரை மக்கள் திரும்பத் திரும்பக் கண்டு களிப்பார்கள். அலுக்கவே அலுக்காது. இந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பாடலாய்க் குழந்தைகளுக்குப் பாடப் படுவதுண்டு.

“ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பார்க்க ஓடி வாங்கோ!” என்று பாடி ஆனை ஆட்டம் ஆட்டுவார்கள் குழந்தைகளை. மிகச் சிறிய குழந்தைகளுக்குக் கூட அன்று அழகர் மொட்டையும் உண்டு. பங்குனி மாதம் உத்திரத்தில் நடந்த மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவமும், சித்ரா பெளர்ணமி அன்று தேனூரில் நடந்த மண்டுக மகரிஷிக்கு முக்தி கொடுக்கும் கள்ளழகர் உற்சவமும் இணைந்து ஒரே சித்திரை மாதம் கொண்டாடும்படி ஏற்பாடுகள் செய்தது திருமலை நாயக்க மன்னர் ஆவார்.

Monday, April 20, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

மதுரை நகருக்குள்ளேயே பஞ்ச பூதத் தலங்களும் உள்ளன. அவை

மதுரை மீனாக்ஷி கோயில் ஆகாயத் தலம்
முக்தீஸ்வரர் கோயில்- வாயுத் தலம்
செல்லூர் திருவாப்புடையார் கோயில்-நீர்த்தலம்
இம்மையில் நன்மை தருவார் கோயில்-பூமித்தலம்
தென் திருவாலவாய் ஸ்வாமி கோயில்- அக்னித் தலம் ஆகியவை ஆகும்.

மதுரையின் தெருக்கள் பெயர்கள். கோபுர வாயில்களைக் கடந்து சென்றோமானால் உள்ளே வெளியில் இருக்கும் பிரஹாரம் ஆடி வீதி என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. கீழ ஆடி வீதி, மேல ஆடி வீதி, தெற்காடி வீதி, வடக்காடி வீதி போன்றவை அவை. கோபுரங்களுக்கு வெளியே அவற்றைச் சுற்றி உள்ள வீதிகள் சித்திரை வீதி என்ற பெயரால் அழைக்கப் படுகின்றன. மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி, தெற்குச் சித்திரை வீதி, கீழச் சித்திரை வீதி போன்றவை. கோயிலில் வழிபாடுகள் செய்யும் அர்ச்சகர்களை மதுரையில் பட்டர்கள் என அழைக்கப் படுவார்கள். பெருமாள் கோயில் பட்டாசாரியார்கள் இல்லை இவர்கள். அதே போல் மற்ற சிவன் கோயில்களின் சிவாசாரியார்களும் இல்லை. இவர்களுக்கெனத் தனியாகக் கோயிலை ஒட்டியே வடக்கு கோபுர வாயிலுக்கு எதிரே இரு வீதிகள் உண்டு. மேலப் பட்டமார் தெரு, கீழப் பட்டமார் தெரு என்பவை அவை. சிலர் வடக்காவணி மூல வீதியிலும் வசித்தனர்.

சித்திரை வீதிகளை அடுத்து ஆவணி வீதி. அவையும் நான்கு திசைகளைக் குறிக்கும். அடுத்துத் தேரோட்டமும், முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருநாளில் ஸ்வாமி வீதி உலா வரும் வீதியுமான மாசி வீதிகள். இதைத் தவிர சில வீதிகளின் பெயர்கள்:
கருகப்பிலைக்காரச் சந்து,
தானப்ப முதலி அக்ரஹாரம்,
கோபால கொத்தன் தெரு,
லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம்
வெங்கடுசாமி முதலியார் அக்ரஹாரம்
பச்சரிசிக்காரத் தெரு,
தென்னவோலக்காரத் தெரு,
சித்திரக்காரத் தெரு,
வளையல்காரத் தெரு
பூக்காரத் தெரு,
சுண்ணாம்புக்காரத் தெரு,
சாந்துக்காரத் தெரு
தலை விரிச்சான் சந்து
மேல கோபுர வாசல்,
கீழ கோபுர வாசல்,
சொக்கப்ப நாயக்கன் தெரு
கான்சாமேட்டுத் தெரு, (மருதநாயகம், கான் சாகிபாக மாறியதைக் குறிக்கும் கான் சாகிப் மேட்டுத் தெரு, தான் இது)
வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு,
தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு
வடம்போக்கித் தெரு
வெள்ளியம்பலம் தெரு
அன்னக்குழி மண்டபத் தெரு
தளவாய் அக்ரஹாரம்
பழைய சொக்கநாதர் கோயில் தெரு,
வக்கீல் புதுத்தெரு
குட்ஷெட் ரோடு
தமிழ்ச்சங்கம் ரோடு
ஆரப்பாளையம் ரோடு,
திருப்பரங்குன்றம் ரோடு
அழகர் கோயில் ரோடு
கோரிப்பாளையம்
நினைவில் வந்த தெருக்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்றத் தெருக்காரங்கல்லாம் கோவிக்காதீங்கப்பா!

அடுத்து தேசபக்தியில் மதுரை மட்டமா என்ன?? இந்தியாவிலேயே முதல்முறையாக ஹரிஜன ஆலயப் பிரவேசம் மதுரையில் தான் நடந்தது. சுதந்திரப் போராட்டங்களும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் மதுரையில் நிறையவே உண்டு. சுதந்திரப் போராட்டத்தின் முக்கியப் பங்காய் இடம் பெற்ற ஆலயப் பிரவேசம் நிகழ்வு மதுரையில் 1939-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் நாள் முதல் முதல் திரு ஏ. வைத்தியநாத ஐயரால் நடைபெற்றது. அப்போதைய நிர்வாக அதிகாரி திரு ஆர்.எஸ். நாயுடு உதவி செய்ய, தன்னுடன் தும்பைப்பட்டி கக்கன்(காமராஜர் அமைச்சரவையில் போலீஸ் மந்திரியாக இருந்தார்), ஆலம்பட்டி முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் அரிஜனர். ஆறாவது நபர் விருதுநகர் சண்முக நாடார் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் நடத்தினார். எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் கோயிலை மூடினார்கள் என்றும், தமிழ்ச்சங்கம் ரோடில் புதிய கோயில் ஒன்றைக் கட்டி அங்கே சில நாட்கள் வழிபாடுகள் நடத்தினார்கள் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் எட்டாம் தேதி இரவு மூடப் பட்ட கோயிலை பத்தாம் தேதி காலையில் மாஜிஸ்ட்ரேட் ஒருவர் முன்னிலையில் கோயிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.நாயுடு திறந்தார். ஏராளமான ஜனங்கள் ஆலயப் பிரவேசம் நிகழ்த்தினர். மகாத்மா காந்தி திரு வைத்தியநாத ஐயரின் இந்தத் துணிச்சலான செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்து 22-7-1939-ம் வருஷத்திய "ஹரிஜன்" இதழில் எழுதினார். என்றாலும் இதை எதிர்த்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எண்ணியதைத் தெரிந்து கொண்ட அப்போதைய முதலமைச்சர் திரு ராஜாஜி, விரைந்து செயல்பட்டு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். பின்னர் அது முறையாகத் தாக்கல் செய்யப் பட்டுச் சட்டமாக நிறைவேறியது. வைத்தியநாத ஐயரின் துணிச்சலான இந்தக் காரியத்தினால் புதிய சட்டம் ஒன்றே போட முடிந்தது அரசினால். இதைத் தவிரவும், கல்கி திரு சதாசிவமும், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாளும் மதுரையைச் சேர்ந்தவர்களே. இவர்களின் தேசப்பற்றைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை. காந்தி அவர்கள் மதுரையில் தான் முதன்முதல் உழவர் ஒருவரின் ஆடையைப் பார்த்துவிட்டு மனம் வருந்தி அன்று முதல் தானும் அரையாடை அணிவதை வழக்கமாய்க் கொண்டார். இந்தியாவிலேயே முதன்முதலாய் காந்தியின் நினைவால் அமைக்கப் பட்ட காந்தி ம்யூசியம் மதுரையில் அமைந்துள்ளது. சபர்மதி ஆசிரமத்தை நினைவூட்டும் குடிலும், காந்தி உபயோகித்த பொருட்களைக் கொண்ட கண்காட்சியும் அரிய புகைப்படங்களும் சமாதியும் இருப்பது இதன் தனிச்சிறப்பு. மதுரையின் பெருமையில் காந்தி ம்யூசியம் இன்றளவும் முதலிடம் வகிக்கிறது.

தெற்கு கோபுரத்திற்கு எதிரே மாநகராட்சிக் கழிப்பிடத்துக்கு அருகே இருக்கும் தெருவில் ரமண மகரிஷி பிறந்த வீடு உள்ளது. அதே போல் மேல அனுமந்தராயன் வீதியில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவின் வீடு உள்ளது. மேலச்சித்திரை வீதியில் மதுரை சோமு அவர்களின் வீடு இருந்தது. மேல ஆவணி மூல வீதியில் இருந்து வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு வழியாகச் சென்றால் வரும் சங்கீத விநாயகர் கோயில் தெருவில் தில்லானா மோகனாம்பாள் புகழ் சேதுராமன் – பொன்னுச்சாமி இருவரின் வீடுகளும் உள்ளன. அருகே உள்ள மற்றொரு தெருவிற்கு இவர்களின் பாட்டனார் வித்வான் பொன்னுசாமிப் பிள்ளை அவர்களின் பெயரால் வித்வான் பொன்னுசாமிப் பிள்ளைத் தெரு என்று வழங்கப் பட்டது. வடக்கு மாசி வீதியில் இருக்கும் வடக்கு கிருஷ்ணன் கோயில் ஒரு மாடக் கோயில். அந்தக் கோயிலின் சிற்பங்கள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அதை விடச் சற்றுத் தள்ளி அமைந்திருந்தது ராமாயணச் சாவடி. (இப்போ இருக்கா) இந்த ராமாயணச் சாவடியில் ராமாயணம் படிப்பதோடு மட்டுமில்லாமல் கிருஷ்ணர் கோயிலின் திருவிழாவின் போதும், மற்ற திருவிழாக்காலங்களிலும் இங்கே சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும். கூட்டம் அலை மோதும் அப்போவே. ராமாயணச்சாவடிக்கு எதிரே இருக்கும் தெருவில் புகுந்து போனால் சிம்மக்கல்லில் கொண்டு விடும்.

Saturday, April 18, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

கிளிக்கூட்டு மண்டபம்: கிளிக்கூண்டு பெரியதாய் இருக்கும் இந்த மண்டபத்தில் முன்பெல்லாம் கிளிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும். கிளிகளிடம் போய், “மீனாக்ஷி எங்கே?” என்றாலோ, “மீனாக்ஷியைக் காணோமே!” என்றாலோ, கீகீகீகீ என்று கத்திக் கொண்டு சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு பறக்கும். எப்படியும் கூண்டில் அடைபட்டிருக்கும் கிளிகள் பறக்கவே முயலும் என்றாலும் மீனாக்ஷி பெயரைச் சொன்னால் பறக்கும் என்ற அளவுக்குப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கும். எதிரே பொற்றாமரைக் காற்று வாங்கிக் கொண்டு, இந்தக் கிளிகளோடு பொழுது போக்குவது ஓர் அற்புத அனுபவம் ஆகும். இப்போ கிளிகள் இல்லை. கூண்டையும் எடுத்துட்டதாய்க் கேள்வி. சரியாப் பார்க்க முடியலை 2007-ல் டிசம்பரில் போயிட்டு மீனாக்ஷியையும் பார்க்கலை, கூண்டையும் பார்க்க முடியலை. கூட்டத்தை மட்டும் பார்த்துட்டு வந்தோம். கோயிலே அந்நியத் தன்மையோடு தனிமைப் பட்டு இருப்பதாய் என்னுடைய உணர்வு. இந்தக் கிளிக்கூண்டு மண்டபத்தில் கல்லால் ஆகிய பந்து ஒன்றை வாயில் வைத்திருக்கும் சிலை, யாளி அல்லது புருஷா மிருகம் இருக்கிறது. இப்போவும் இருக்கும். சரியாய் நினைப்பில்லை.

அடுத்துச் சிற்பங்கள் நிறைந்த கம்பத்தடி மண்டபம். மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைக் கூறும் சிற்பமும், காலாந்தக மூர்த்தியான ஈசன், தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்லும் சிற்பமும், நடராஜரும், இராவணன் கைலை மலையைப் பெயர்த்தெடுக்கும் முயற்சியைக் கூறும் சிற்பமும், சக்கரதரராய்க் காட்சி அளிக்கும் மூர்த்தியும் ரிஷபாரூடரும், அரியும், சிவனும் ஒன்றே என்னும் அற்புதத் தத்துவத்தை எடுத்துக் கூறும் ஹரிஹரர்களின் சிற்பமும், சண்டேஸ்வரரும், பிக்ஷாடனர், ருத்ரர், ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனன், ஸோமாஸ்கந்தர் எனக் கலையம்சங்களுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம்.

அடுத்து சுந்தரேஸ்வரருக்கு எதிரே அவரைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் நந்தியின் உருவச் சிலை உள்ள வீர வசந்தராயர் மண்டபம்.

ஆயிரக்கால் மண்டபம். 985 தூண்களே இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. 1509-ம் நூற்றாண்டில் தளவாய் அரியநாத முதலியாரால் கட்டப்பட்ட இம்மண்டபம் சிற்பக் கலைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து இன்று தொல்பொருள் இலாகாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இந்த மண்டபம் ஒரு ரதம் வடிவில் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இரு யானைகள் இழுக்கும் இந்த ரத மண்டபத்தில் இப்போது ஒரு கண்காட்சியும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. இந்த மண்டபத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிற்பங்களாய், அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் லோகிதாசனைச் சுமந்து நிற்கும் சந்திரமதியும், கண்ணப்பநாயனார் கதையும் அருமையாய் உருவாக்கப் பட்டுள்ளது. இதைத் தவிர கோயிலின் மிகப் புராதனமான பகுதியாக ஸ்வாமி சந்நதி சொல்லப் படுகின்றது. இங்கே உள்ள விமானம் இந்திர விமானம் என்றும் இந்தச் சந்நதியும், மதுரை நகரும் 3,000 வருஷங்களுக்கும் முற்பட்டவை என்றும் சொல்லப் படுகின்றது.

ஆயிரங்கால் மண்டபத்திற்குத் தென்பாகம் பல வருஷங்கள் கழித்து 1960-63-ம் வருஷத் திருப்பணியையும், கும்பாபிஷேகத்தையும் குறிக்கும் வண்ணம் ஏற்படுத்தப் பட்டது மங்கையர்க்கரசி மண்டபம். இந்த மண்டபத்தில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார், கூன் பாண்டியன், திருஞானசம்பந்தர் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று திருக்கல்யாண மண்டபம். வருஷா வருஷம் மீனாக்ஷி இங்கே தான் கல்யாண உற்சவம் காணுகின்றாள். நவராத்திரியில் முன்பெல்லாம் இங்கே பல்வேறு சங்கீத வித்வான்கள், சங்கீத உபன்யாசகர்கள், மடாதிபதிகள் ஆகியோரின் கச்சேரிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். இந்தக் கல்யாண மண்டபத்தின் கூரைப் பகுதியில் ஓவியங்களும், சிற்பங்களும் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

கோயிலுக்கு வெளியே கீழ வாசல் வழியாக வந்தோமெனில் கிழக்கு கோபுரத்துக்கு எதிரே வசந்த மண்டபம் என்று நாயக்கர் காலத்தில் சொல்லப் பட்ட புதுமண்டபம் இருக்கின்றது. இங்கேயும் சிற்பங்களின் அழகும், வேலைப்பாடுகளும் கண்ணையும், கருத்தையும் கவரும். ஆனால் இப்போது மட்டுமல்ல, எப்போதென்று தெரியாத காலத்தில் இருந்தே, புத்தகக்கடைகளும், பாத்திரக் கடைகளும் ஆக்கிரமித்துக் கொண்டு, சிற்பங்களின் அழகைக் காணமுடியாமல் தடுத்து வருகின்றது. ஒரு முறை கடைகளை எல்லாம் எடுக்கவேண்டும் எனக் கடும் முயற்சி எடுத்தும், அது முடியாமல் இப்போது அங்கே கடைகளைத் தவிர, கூட்டத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற அளவுக்கு ஆகி இருக்கிறது. இந்தப் புதுமண்டபம் திருமலை நாயக்கரால் உருவாக்கப் பட்டது. இங்கே 335 அடி நீளம், 105 அடி கலம் 25 அடி உயரம் உள்ள இந்த மண்டபத்தில் 124 தூண்கள் உள்ளன. நான்கு வரிசையாக உள்ள இந்தத் தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கும். மண்டபத்தின் நடுவில் நாயக்கர் வம்சத்து அரசர்கள் சிலைகள் காணப் படும். புது மண்டபத்திற்கு எதிரே முற்றுப் பெறாத ஒரு கோபுரத்தின் அடித்தளம் இருந்தது. இப்போ இருக்கா இல்லையானு மதுரை மக்கள் வந்து சொல்லுங்கப்பா. அதை ராய கோபுரம் எனச் சொல்லுவார்கள். அந்தப் பக்கம் தான் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க் கடையின் கிளையும் இருக்கிறது. அல்வா கிடைக்கும். மேலச் சித்திரை வீதியில் இதன் தலைமை அலுவலகம் மற்றும் தலைமைக் கடை. மதியம் 12 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக உருளைக் கிழங்கு கார மசாலா சுடச் சுடக் கிடைக்கும். 2-01-க்குப் போனால் கூடக் கிடைக்காது. மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சேரும் முனையில் கோபு ஐயங்கார் கடையில் மதியம் 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக பஜ்ஜி சூடாய்க் கிடைக்கும். (அதியமான், பார்த்துக்குங்க) இதுவும் 4 மணிக்குள்ளாகப் போனாலே கிடைக்கும். எனக்குத் தெரிஞ்சு இவை இரண்டுமே அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவும் மாறவில்லை என்ற பாட்டைப் பாடிக் கொண்டு தலைமுறைகளையும் தாண்டிக்கொண்டு நின்றிருக்கின்றன. இதிலே கோபு ஐயங்கார் கடையிலே முன்பிருந்தவர்கள் இருக்கிறாங்களா தெரியாது, ஆனால் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க் கடை தொடர்ந்து ஒரே குடும்பத்தால் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது. அதனால் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றவை மாறி விட்டன.

Friday, April 17, 2009

மதுரை அரசாளும் மீனாட்சி!

பொற்றாமரையின் தோற்றம். படம் உதவி: ஜெயஸ்ரீ! நன்றி.

1330-ம் ஆண்டு அந்நியர் படை எடுப்பின் போது மீனாட்சி கோயில் கருவறை மூடப் பட்டது. அதன் பின்னர் கிட்டத் தட்ட நாற்பத்தி எட்டு ஆண்டுகள் மூடப் பட்டே இருந்தது கருவறை. மீனாக்ஷி அம்மன் சிலையையும், சொக்கநாதர் சிலையையும் உடைக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. கோயில் அறங்காவலர்கள், சிவலிங்கத்தை மூடி, அதன் மேல் கிளிக்கூண்டை நிறுவி மணலையும் பரப்பி விட்டனர். கருவறை வாசல் கல் சுவரால் மூடப் பட்டிருந்தது. அர்த்த மண்டபத்தில் வேறொரு சிலையை வைத்திருக்க அதுதான் சுந்தரேஸ்வரர் சிலை என நினைத்து அந்நியர்கள் அந்தச் சிலையை உடைத்து நொறுக்கினார்கள். அந்தச் சிலை தற்போது ஸ்வாமி சந்நதி வெளிப்பிரஹாரத்தில் வைக்கப் பட்டுள்ளது, மிகச் சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கிட்டத் தட்ட 48 ஆண்டுகளுக்கு மேல் மூடப் பட்டுக் கிடந்த கோயில் அதன் பின்னர் கம்பன்னன் காலத்திலே தான் அந்நியர் விரட்டப் பட்டுத் திறக்கப் பட்டது. அப்போது மூலஸ்தானக் கருவறையில் இருந்து சந்தனத்தின் மணத்தோடு, சிவலிங்கத்தின் இருபக்கமும் ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்குகளும் அணையாமல் எரிந்து கொண்டிருந்தன எனப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.

இப்போது கோயிலின் ஒவ்வொரு மண்டபமாய்ப் பார்க்கலாமா? முதலில் அஷ்ட சக்தி மண்டபம். கிழக்கு கோபுரத்தின் வழியாக வரும்போது முதலில் வரும் இந்த மண்டபம். இது முதலில் அன்னதான மண்டபமாய் இருந்து வந்திருக்கின்றது. பின்னர் கோயிலுக்கு வெளியே தெற்காவணி மூலவீதியில் சோற்றுக்கடைகள் ஏற்படுத்தப் பட்டு அன்னதானம் அங்கே நடந்தது. அந்தப் பக்கம் ஒரு தெருவே சோத்துக்கடைத் தெரு என்ற பெயரில் உண்டு. இப்போத் தெரியலை. இந்த அஷ்ட சக்தி மண்டபத்தில் இடப்பக்கம் உள்ள தூண்களில் கெளமாரி, ரெளமாரி, வைணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரின் சிற்பங்களும், வலப்பக்கம் உள்ள தூண்களில் யக்ஞரூபிணி, சியாமளை, மஹேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் சிற்பங்களும் பல்வேறு அழகான வண்ண ஓவியங்களும், (இப்போ இருக்கா) சிலைகளும் இருந்தன. சிலைகள் கட்டாயம் இருக்கும். ஓவியங்கள் பத்தித் தெரியலை.

அடுத்து நாங்கல்லாம் யாளி மண்டபம்னு சொல்லுவோம். அந்த மண்டபத்தின் பெயர் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்ற பெயராம். அஷ்ட சக்தி மண்டபத்தை அடுத்து உள்ள இந்த மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்தும் 22 அடி நீளம் கொண்டவை, 110 தூண்கள் போல் இருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் யாளியின் உருவமே காணப்படும். மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி சக்கரம் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். பார்க்கவே இல்லையே, போகும்போது பார்க்கணும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன மீனாக்ஷி நாயக்கர் என்பவரால் கட்டப் பட்டதாம் இந்த மண்டபம். இந்த ராசிச்சக்கரம் இருக்கும் இடத்திலே உள்ள திருவாட்சியில் தான் 1008 எண்ணெய் விளக்குகள் அமைந்திருக்கின்றன. திருவாட்சி வளைவு 25 அல்லது 30 அடி உயரம் இருக்கலாம். திருவாட்சியின் முன் மேல்பாகக் கூரையிலே தான் சதுரக் கட்டம் கட்டி ராசிச் சக்கரம் இருக்காமே. பார்க்கணும்.

முதலிப்பிள்ளை மண்டபம்: ஹிஹிஹி, வேறே ஒண்ணும் இல்லை, மதுரை மக்களே, நம்ம இருட்டு மண்டபத்தைத் தான் இப்படிச் சொல்றாங்க. 1963-ல் (அட, நாம பிறந்துட்டோமே???) கடந்தை முதலியார் என்பவரால் கட்டப் பட்டது இந்த இருட்டு மண்டபம். இங்கே பிக்ஷாடனர் சிலையும், மோகினியின் சிலையும் நல்ல அமைப்புடன் வடிவமைக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். பார்க்கலை, பார்க்கணும். அடுத்து

ஊஞ்சல் மண்டபம்: வெள்ளியினால் ஆன சிறு ஊஞ்சலில் அம்மையும், அப்பனும் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள். எதிரே பொற்றாமரைக்குளத்தைப் பார்த்த வண்ணம் ஆடுவாங்க. ராணி மங்கம்மாள் இந்த ஊஞ்சல் மண்டபத்தைக் கட்டியதாய்ச் சொல்லுவார்கள். பொற்றாமரைக் கரையின் மேற்கே அமைந்துள்ளது இது.

Wednesday, April 15, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

இப்போது கோபுர தரிசனம், பாப விமோசனம், என்ற வகையில் கோபுரங்கள் பற்றி ஒரு சிறிய அறிமுகம் பார்ப்போமா? கிழக்கு கோபுரமும், மேற்கு கோபுரமும் சரியாக நேரே அமைந்துள்ளன. கீழக்கோபுரத்தின் நடுவிலே இருந்து, மேலக் கோபுரத்திற்கு ஒரு கோடு கிழித்தால் சொக்கா, உன் தலைவழியாக இல்லை போகும்?? ஆம், சிவலிங்க ஸ்வரூபத்தின் உச்சி வழியாகவே செல்லும். வடக்கு, தெற்குகோபுரங்களோ, ஸ்வாமி சந்நிதியைச் சமமாய்ப் பகிர்ந்து கொண்டு செல்லும். சிற்பக் கலைஞர்கள், ஸ்தபதிகள் அந்தக் காலத்தில் எவ்வளவு திறமையோடும், கணக்கோடும் வேலை செய்திருக்கின்றனர் என்பதை வெளிக்காட்டும் இந்த அமைப்பு. \

 

கோபுரங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போமா? மொத்தம் நான்கு ராஜ கோபுரங்கள் உள்ளன. இவை தவிர உள்ளே உள்ள வெளிப்பிரஹாரத்தில் இவை ஆடி வீதி என அழைக்கப் படும். இந்த ஆடிவீதியிலும் ஆறு கோபுரங்கள் உள்ளன. இவற்றில் கிழக்கே உள்ள ராஜ கோபுரம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கி.பி. 1216-ம் ஆண்டு ஆரம்பித்து 1238-ம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டது. சுதை சிற்பங்கள் 1011 இருப்பதாயும்,  அவற்றில் திருவிளையாடல் புராணக் கதைகளும், பெரியபுராணக் கதைகளும் அமைந்துள்ளதாயும் சொல்லப் படுகின்றது. (நான் பார்க்கலைங்கோ!) கோபுரத்தின் உயரம் 153 அடியாகும். கலசங்களின் உயரம் 8 அடியாகும். ஒவ்வொரு கோபுரத்திலும் ஒன்பது நிலைகளும், ஒன்பது கலசங்களும் உள்ளன.

 

அடுத்து மேலக் கோபுரம். உள்ளே நுழையும்போதே காற்று அருமையாக வீசும். இத்தகையதொரு அற்புதக் காற்றை எங்கேயும் காண முடியாது. இந்தக் கோபுரமும் பாண்டியன் கட்டியதே. ஆனால் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கட்டினான். கி.பி. 1315-ம் ஆண்டு ஆரம்பித்து `1347-ம் ஆண்டு முடிந்திருக்கிறது.  இதில் 1124 சுதைகள் இருப்பதாயும் 154.6 அடி உயரம் எனவும் சொல்லப் படுகின்றது. இதிலும் திருவிளையாடல் பெரியபுராணம் தவிர, தசாவதாரச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது.

வடக்குக் கோபுரம். இதைப் பல வருடங்கள் வரைக்கும் மொட்டைக் கோபுரம் என்றே சொல்லுவார்கள். இந்தக் கோபுரத்தின் நுழை வாயில் அருகே ஒரு காவல் தெய்வம் முறுக்கிய மீசையுடன் இருக்கின்றார். அவரை மொட்டைக் கோபுரத்தான் என்றே அழைப்பதுண்டு. முன்பெல்லாம் இந்தக் கோபுரத்தின் வழியே துணை இல்லாமல் போக விட மாட்டார்கள். இப்போது அனைவரும் செல்கின்றனர். கிருஷ்ண வீரப்ப நாயக்கர் என்பவரால் கி.பி.1564-ல் கட்ட ஆரம்பித்த இது கட்டி முடிக்கப் படாமல் பல வருடங்கள் பாதியிலே நின்றிருக்கின்றது. இதனால் மொட்டைக் கோபுரம் என அழைக்கப் பட்டிருக்கலாம். பின்னர் அபிஷேஹ பண்டாரத்தாரும், நகரத்தார் சமூகத்தினரின் உதவியோடு கட்டி முடிக்கப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. 152 அடி உய்ரம் கொண்ட இந்தக் கோபுரத்தில் 404 சுதைகளே உள்ளனவாம். கலசங்கள் எட்டு அடி உயரம்.

 

அடுத்து கடைசியாகத் தெற்கு கோபுரம். இதுதான் அனைத்து கோபுரங்கலிலும் மிகவும் உயரமானது ஆகும். 160.9 அடி உய்ரம் கொண்ட இந்தக் கோபுர கலசங்களின் உயரமும் அதிகம். 9.9. அடியாகும் கலசங்கள் உயரம். சுதைகளும் அதிகம் கொண்டது. தூரத்தில் இருந்து பார்த்தாலே இது தான் தெற்கு கோபுரம் என அடையாளம் சொல்லிவிடலாம். அவ்வளவு சுதைச் சிற்பங்கள். மொத்தம் 1511 சிற்பங்கள். யாளி சிலை ஒன்றின் கண்களின் குறுக்களவு மட்டும் 2.5 அடி எனச் சொல்கின்றனர். பிரம்மாண்டமான சிலைகள் கொண்ட கோபுரம் இது. கந்த புராணம், தசாவதாரம், விஸ்வரூப சுப்ரமணியர், (எங்கேயும் பார்க்க முடியாது) சபரி, ஏகபாத மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவர், காளி நர்த்தனம் போன்ற சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.

 

அடுத்து ஆடி வீதிக் கோபுரங்கள். பொற்றாமரைக் குளத்தின் பின்புறம் உள்ள சித்திரகோபுரம் என்றழைக்கப் படுவது கிழக்கு ஆடிவீதிக்கும், தெற்கு ஆடிவீதிக்கும் நடுவே உள்லது. கி.பி. 1570-ம் ஆண்டு காளத்திநாத முதலியார் என்பவரால் கட்டப் பட்டது. உய்ரம் 117 அடியாகும். ஏழு நிலை, ஏழு கலசங்கள், கலசங்களின் உயரம் ஆறே முக்கால் அடி. சுதைகள் 730 உள்ளன. இதை அம்மன் கோபுரம் என்றே அழைப்பார்கள். இங்கே 25 முகங்கள் கொண்ட சதாசிவம் சிலை மிகவும் அரிய ஒன்று. 

 

அம்மன் சந்நிதியின் நுழைவு கோபுரம் கிபி 1227-ல் வேம்பத்தூர் ஆனந்த தாண்டவ நம்பி என்பவரால் கட்டப் பட்டது. 3 நிலைகள், 40.6 அடி உயரம் ஐந்து கலசங்கள், கலசங்கள் உயரம் 4 அடி.

 

மேல ஆடிவீதியில் அம்மன் சந்நதிக்கு நேர்பென்னே உள்ள கோபுரம் கடக கோபுரம் என்றழைக்கப் படும். 1570-ம் ஆண்டு வீரதும்மாசி என்பவர் கட்டினார். ஆனால் இந்தக் கோபுரம் திறந்தே பார்க்க முடியாது. உயரம் 64.6 அடி, ஐந்து நிலை, ஐந்து கலசங்கள் 228 சுதைகள், கலசங்கள் உயரம் 5 அடியாகும்.

 

நடு கோபுரம் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் உள்ளது  நடைபாதையில் உள்ளதால் நடுக்கட்டுக் கோபுரம் எனச் சொல்லப் படுகின்றது. கிபி 1559-ல் செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவரால் கட்டப் பட்ட இது 69 அடி உயரமும், ஐந்து நிலை, ஐந்து கலசங்களுடனும் அமைந்துள்லது. 112 சுதைகள் உள்ளன. மேல ஆடி வீதியில் ஸ்வாமி சந்நிதிக்குப் பின்னர் உள்ள கோபுரம் கி.பி.1374-ல் மல்லப்பன் என்பவரால் கட்டப்பட்டது. 72 அடி உயரத்தில் ஐந்து நிலைகளுடனும், 5 அடி உயரம் கொண்ட ஐந்து கலசங்களுடனும் காணப்படும் இந்தக் கோபுரத்தில்  340 சுதைச் சிற்பங்கள் உள்ளன. அடுத்துச் சின்ன மொட்டைக் கோபுரம் என்று சொல்லப்படுவது வடக்கு கோபுரத்தின் பின்னால் வடக்கு ஆடி வீதியில்  கல்யாண சுந்தரர் சந்நிதிக்கு அருகே உள்ளது. 71 அடி உயரமுள்ள இந்தக் கோபுரம் கி.பி. 1560-ம் ஆண்டு செவ்வந்தி வெள்ளையப்பச் செட்டியாரால் கட்டப் பட்டது. ஐந்து நிலைகள், ஐந்து கலசங்கள் கலசங்களின் உயரம் 5 அடியாகும். அடுத்து சுந்தரேஸ்வரரின் கிரீடம் பாண்டிய மன்னன் ஒருவனால் அளிக்கப் பட்டது, என்ற தகவலையும் மீனாட்சியின் ஆபரணங்கள் பற்றியும், பார்க்கலாம். இந்தக் கோயில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் மூடப் பட்டும் இருந்தது. அது பற்றிய விபரங்களும் வரும் நாட்களில்.


இந்தப் பதிவையும் மெயில் மூலமே கொடுக்கிறேன். வருதானு பார்க்கணும். படங்கள் அதனால் சேர்க்கலை. அப்புறமாய்ப் பதிவிலே போய்ச் சேர்க்கணும். இனி வரும் பதிவுகள் படங்களோட மெயில் மூலமாய்க் கொடுத்துப் பார்க்கணும்.

Saturday, April 11, 2009

மலையத்துவஜன் பெற்ற பெருவாழ்வு!-மதுரை அரசாளும் மீனாட்சி!

பஞ்ச சபைகளிலும் உள்ள நடராஜ மூர்த்தங்களில் மதுரை கால்மாறி ஆடிய நடராஜ மூர்த்தமே பெரிய மூர்த்தம் ஆவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி ஆகிய தலங்களில் சிறிய பஞ்சலோக வடிவிலேயே காணலாம். குற்றாலத்தில் ஓவியமாய்க் காட்சி அளிப்பார். அதுவும் இன்று அழியும் நிலையில் காணப் படுகின்றது. இங்கே மட்டுமே சிலா விக்ரஹமாய்ப் பெரிய வடிவில் காண முடியும். பத்துக் கரங்களுடனே ஆயுதங்கள் ஏந்திக் காட்சி தருகின்றார். உற்சவ நடராஜர் தையாக இருப்பார். சபையை சமீபத்திலே தான் வெள்ளியால் அலங்கரித்தனர். தனிவாசல் எப்போதும் உண்டு. சிவகாமி உடன் இருக்கின்றாள். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் வணங்கியபடி இருக்கின்றார்கள். இந்த நடராஜர் சந்நிதிக்கு எதிரே நின்று கொண்டால் ஒரே நேரத்தில் உள்ளே மூலஸ்தானத்தில் உள்ள சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் தரிசிக்க முடியும்.

இதற்கு முன்னர் நடந்த கும்பாபிஷேஹங்கள், ருத்ரோத்காரி ஆண்டு, ஆனிமாதம் 17-ம் தேதி புதன்கிழமை 1-7-1923-ம் ஆண்டிலும், அதன் பின்னர் பல வருஷங்கள் கழித்து, பெரும் முயற்சியின் பேரில் சோபகிருது ஆண்டு, ஆவணி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை 28-8-19663-ம் ஆண்டிலும், (இந்தக் கும்பாபிஷேஹம் மட்டும் தான் நான் பார்த்தது) அதன் பின்னர் ஆனந்த வருஷம், ஆனி மாதம் 12-ம் தேதி புதன்கிழமை 26-6-1974-ம் ஆண்டிலும், யுவ ஆண்டு, ஆனி மாதம் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை, 7-7-1995-ம் ஆண்டிலும் கும்பாபிஷேஹங்கள் நடைபெற்றன.

பதினேழாம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப் பட்டது. திருமலை நாயக்கர் வண்டியூரில் தெப்பம் கட்டும்போது தோண்டக் கிடைத்தவரே இங்கே இப்போது பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் முக்குறுணி விநாயகர். இந்த விநாயகருக்கு ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் மூன்று குறுணி அரிசியால் ஒரே மோதகம் செய்யப் பட்டு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப் படும். கூன்பாண்டியன் என்றழைக்கப் பட்ட சுந்தரபாண்டியன் காலத்தில், திருஞானசம்பந்தர் அருளால் பாண்டியன் சமணத்தில் இருந்து சைவத்துக்கு மாறினான். அப்போது மன்னன் கூனை நீக்கி நின்றசீர் நெடுமாறனாக்கிய திருஞான சம்பந்தர் மடப்பள்ளிச் சாம்பலை வைத்தே மன்னனின் பிணி தீர்த்ததால்,கோயில் மடப்பள்ளி சாம்பல் அம்மன் சந்நிதிக்கு முன்னும், சொக்கநாதர் என்றழைக்கப் படும் சுந்தரேசன் சந்நிதி போகும் வழியிலும் வைக்கப் பட்டு அனைத்து பக்தர்களாலும் அணியப் படும். இது தவிரவும் தன் பக்தன் ஆன பாணபத்திரன் என்பவனுக்காக இசை வாதில் இறைவனே நேரில் வந்து உதவிய திருவிளையாடலும், மேலும் பாணபத்திரனுக்குப் பொருளுதவி செய்யவேண்டி, ஈசனே சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பதிகம் எழுதிக் கொடுத்துப் பொன்னும் பொருளும் பெற உதவினார். ஏழை அந்தணன் ஆன தருமிக்காகப் பாட்டு எழுதிக் கொடுத்ததும், ஈசனே ஆனாலும், பாட்டில் பொருட்குற்றம் கண்டு பிடித்து, "நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம், குற்றமே!" என நக்கீரர் என்னும் புலவரைச் சொல்ல வைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்ததும் இங்கேயே தான்.

சதா என்றால் எப்போது என்ற பொருள் தோன்றும். சதா சிவம் எப்போதும், எங்கேயும் எங்கே பார்த்தாலும் சிவமே. எதைக் கேட்டாலும் சிவமே. அத்தகைய சதாசிவத்தின் சிலை, சிவசிவ என்னும் மந்திர ஒலியின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட சிலை, இங்கே உள்ள அம்மன் கோபுரத்தில் உள்ள சதாசிவம் சிலை. ஏழு நிலைகள் கொண்ட அம்மன் கோபுரத்தின் அம்மன் சந்நிதிக்குச் செல்லும் வழியில் இந்த கோபுரத்தில் இந்தச் சிலை காணக் கிடைக்கும். அம்மை தன் அருளைக் காட்டிய அற்புதங்கள் பல இங்கே நிகழ்ந்திருக்கின்றன. திருச்செந்தூர் ஷண்முகனின் அருளால் பேசும் திறமை பெற்ற குமரகுருபரர், காசிக்குச் செல்லும் வழியில் மதுரை வந்தார். கோயிலுக்கு வந்து மீனாட்சியை வணங்கிய அவர் மீனாட்சியைச் சிறுபெண்ணாய்க் கண்டு, அவள் அழகிலும், கண்ணொளியிலும் மயங்கிப் போய் இத்தனை அழகா இந்தக் குழந்தை என வியந்து, பிள்ளைத் தமிழ் பாடி, அவளைச் சீராட்டிப் பாராட்டினார். அவர் மலயத்துவஜன் பெற்ற பெருவாழ்வாகிய அன்னையைப் பாடி அழைத்ததைக் கேட்ட அன்னை, ஒரு சிறு பெண்ணின் வடிவிலேயே வந்து பாடலைக் கேட்டுவிட்டுத் தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அவருக்கு அணிவித்தாள். ஒரு சிலர் அப்போது அவையில் இருந்த மன்னனின் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி அணிவித்ததாயும் சொல்லுவார்கள். அம்மையைக் குறிப்பிட்டு குமரகுருபரர் பாடிய நிகழ்ச்சிகள் அம்மன் சன்னதியைச் சுற்றி உள்ள ப்ரஹாரச் சுவர்களில் சிற்பங்களாய் உள்ளன. குமரகுருபரருக்கு அன்னை குழந்தையாய் வந்து மாலை அணிவித்தது அம்மன் சந்நதிக்கு முன்னே உள்ள மண்டபத்தில் சித்திரமாய்த் தீட்டப் பட்டிருக்கும்.

கவிநயாவின் பதிவில் அன்னையில் கால் சிலம்பில் மாணிக்கமா, முத்தா என்ற பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது. அவள் கால் சிலம்பில் முத்தோ, மாணிக்கமோ? அவள் சிரித்தால் முத்துக்கள் தோற்கும். அவள் ஒளியில் மாணிக்கம் முன்னே நிற்க முடியாது. அவள் அருளில் இந்திரலோகத்துக் காமதேனுவையும், அமுதசுரபியையும் விட அதிகமாய்க் கிடைக்கும். அவள் கண்ணாட்சியால் கண்களை இமைக்காவண்ணம் இருந்து மீன் எப்படித் தன் குஞ்சுகளைக் காக்கின்றதோ அம்மாதிரி நம்மைக் காத்து வருகின்றாள். அதனாலேயே அவளுக்கு மீனாட்சி என்ற பெயர். ஈசனின் மனோன்மணியாக வாசம் செய்யும் இவள் சியாமளாவாக ஏற்கெனவேயே வாசம் செய்து கொண்டிருந்தாள். ஆகவே இவளுக்கு சியாமளா என்ற பெயரும் உண்டு. மனோன்மணி என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலில் பின்பற்றப் படும் ஆகமங்கள் காரண, காமிக ஆகமங்கள் ஆகும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன நீலகண்ட தீட்சிதர் வகுத்துக் கொடுத்த முறைப்படி வழிபாடுகள் இன்றளவும் நடந்து வருகின்றன. எட்டுக்கால பூஜைகள் நடக்கின்றன. திரு அனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என எட்டுக்காலங்களிலும் வழிபாடுகள் நடக்கின்றன. அரசியான இவளுக்கு முதல் மரியாதைகள் செய்து வழிபாடுகள் முடிந்தபின்னரே மாமனார் வீட்டு மாப்பிள்ளையான ஈசனுக்கு காலபூஜைகள் நடைபெறும். அதுபோல் பொது மக்களும் முதலில் மீனாட்சியைத் தரிசித்துவிட்டே சொக்கரைத் தரிசிப்பார்கள்.

Wednesday, April 8, 2009

அன்னையின் கிளியும், பிரியாவிடையும்! மதுரை அரசாளும் மீனாட்சி!

இது பழைய நாயக்கர் காலச் சித்திரங்களில் ஒன்று. கூகிளாரைக் கேட்டதில் கொஞ்சம் கஷ்டப் பட்டே கிடைத்தது. இப்போ மதுரை மீனாட்சி கோயிலைப் பத்தின சில முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப் போறேன். யாருப்பா அது? புதிரா, புனிதமாவுக்கு பதில் எழுதறது? அவங்களுக்கு இங்கே சில டிப்ஸ் கிடைக்குமே. அந்த சாக்கிலேயாவது வாங்க. :))))))))) அம்மன் கையிலே ஏன் கிளி இருக்குனு கேஆரெஸ் கேட்டிருக்கார் இல்லையா? நாம் நம்மோட குறைகளை அம்மனிடம் சொல்லும்போது, அந்தக் கிளிதான் கேட்டுட்டு அதை அம்மனிடம் சொல்வதாகவும், அம்மன் நம் குறைகளைத் தீர்க்க அது உதவுவதாகவும் ஐதீகம். மேலும் ஐயன் பிரம்மதத்துவத்தைக் கைலை மலைக் குகையில் தனித்திருந்து அம்மைக்கு உபதேசித்தபோது ஒளிந்திருந்து அதைக் கேட்ட கிளிக்குஞ்சு தான் பின்னால் சுகர் ஆகப் பிறந்தார் என்பதும் தெரியும் தானே? அந்தக் கிளியாகவும் இருக்கலாம். அன்னைக்குத் திருமணப்பரிசாய் ஐயன் திருக்கயிலையில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்கலாம். (இது என்னோட கற்பனை மட்டுமே) பொதுவாய்ச் சொல்லப் படுவது கிளி மூலம் நம் குறைகள் தீர்க்கப் படும். கிளி சொன்னதைத்திரும்பச் சொல்லுமல்லவா? ஆகவே அன்னையிடம் நம் முறையீடுகள் கிளி மூலம் கேட்கப் படுகின்றது.

அடுத்து இப்போ ஸ்வாமி சந்நதிக்குப் போனவங்க எல்லாரும் சுந்தரேஸ்வரரை மட்டுமே பார்த்திருப்பீங்க இல்லையா? ஆனால் அங்கே உள்ளேயும் ஒரு அம்மன் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மதுரைக்காரங்க எல்லாம் வாங்கப்பா, வந்து சொல்லுங்க, உங்களுக்குத் தெரியுமானு! ஹிஹிஹி, நானும் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கேன், ஆனால் கருவறையில் இல்லை. 62-63 கும்பாபிஷேஹம் சமயம். அவ்வளவாய் நினைவிலும் இல்லை. ஆனால் அம்மனைப் பார்த்த நினைவும், பிரியாவிடை இவள் என்று சொன்ன நினைவும் இருக்கு. உற்சவரோடும் பிரியாவிடை வருவாள் ஆதலால், அதைப் பற்றிய ஐதீகத்தை அப்போது கேட்டு அறியவில்லை. இப்போது நண்பர் ஒருவர் மூலம் அது கிடைத்தது. உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் ஆனதுமே அம்பிகை தன் ஆட்சியைக் கணவனிடம் கொடுத்துவிடுகின்றாள் அல்லவா? அப்போது அவள் ஐயனுடனேயே ஐக்கியம் ஆகிவிடுகின்றாள் என்றே சொல்கின்றனர். சிவனோடு ஐக்கியமான சக்தி சிவசக்தி சிவத்தை விட்டுப் பிரிவது எங்கனம்? ஆகவே அங்கே சுந்தரேஸ்வரரோடு அவளும் இருக்கின்றாள் கருவறையிலேயே.
ஆனால் அர்ச்சகர்கள் மட்டுமே காணமுடியுமாறு பிரதிஷ்டையின் அமைப்பு உள்ளது. சக்தியானது வெளியே தெரியாது. ஒருத்தரிடம் இருந்த சக்தி வெளிப்படும்போதே நாம் அறிகின்றோம் அல்லவா? ஆஹா, இவர் கிட்டே இத்தனை சக்தியா என்று? அவ்வாறே சிவனிடம் உள்ள சக்தி மறைந்தே இருப்பதால் நம்மால் காணமுடியாதபடிக்குப் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். மனோன்மணி என்னும் பெயருடைய இவள் மறைப்பு சக்தியாக இருப்பதால் நாம் இவளைக் காணமுடியாது. ஆனால் இப்போது கும்பாபிஷேஹத்திற்காக வெளியே வந்திருப்பாள். வந்திருக்கின்றாள் எனவும் நண்பர் தகவல் அனுப்பி இருக்கின்றார். யாகசாலையில் பூஜையில் இவளை வைத்திருக்கின்றனர்.

இவளைக் கும்பாபிஷேஹத்தின்போது நடக்கும் யாகசாலை பூஜைகளிலேயே காணமுடியும். மற்ற நாட்களில் மீண்டும் மறைவிடம் சென்றுவிடுவாள். காணமுடியாது. இப்போது வந்து பூஜைகளில் இடம்பெற்ற இவள் மீண்டும் வெளியே வருவது அடுத்த கும்பாபிஷேஹத்தின்போது மட்டுமே. உற்சவரோடு வருபவள் உற்சவப் பிரியாவிடை. அவளை நாம் சாதாரணமாய் எல்லா உற்சவங்களிலும் காணமுடியும். சிவத்தை விட்டு சக்தி பிரியாதவள் என்பதாலேயே எப்போதுமே சிவனுக்கு அருகிலே சக்தியைப் பிரியாவிடை உருவில் தரிசிக்கின்றோம். மெயிலிலே வந்த இவளை உங்களோட பகிர்ந்துகொள்ளுவதற்குள் கொஞ்சம் கஷ்டமாய்ப் போச்சு. Your brouser may not support அப்படினே செய்தி கொடுத்துட்டு இருந்தது. ஒருவழியாப் போட்டிருக்கேன். பப்ளிஷ் கொடுத்ததும் தான் தெரியும் வண்டவாளம், தண்டவாளத்தில் ஏறாமல் இருக்கானு.


பிரியாவிடை படம் உதவி, மற்றும் யாகசாலைக் குறிப்பு உதவி: நன்றி திரு அனந்தபத்மநாபன் அவர்களுக்கு.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு - படங்கள்

இன்று காலை சரியாக 9.20’க்கு அருள்மிகு மீனாட்சி திருக்கோவில் குடமுழுக்கு மிக சிறப்பாக நடைந்தேறியது. தெற்கு கோபுரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் உங்களின் பார்வைக்கு...

கலசத்தில் நீர் ஊற்றிய பொழுது:-


கூடியிருந்த மக்களை நோக்கி நீர் தெளிக்கப்பட்ட பொழுது:-கூடியிருந்த மக்களை நோக்கி நீர் தெளிக்கப்பட்ட பொழுது:-

கூடியிருந்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி:-