Friday, April 3, 2009

மதுரை அரசாளும் மீனாட்சி! 2

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே- தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.

பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப் பட்ட இந்திரன் பல புண்ணியநதிகள், தலங்கள் சென்றும் தீராத தன் பாவத்தை, ஒரு காலத்தில் கடம்பவனமாக இருந்த இந்நகருக்கு வந்து கடம்பவனத்தில் மர நிழலில் ஸ்வயம்புவாக எழுந்தருளியிருந்த லிங்கம் ஒன்றைக் கண்டு அதிசயித்து விஸ்வகர்மாவை அழைத்து அதற்கு விமானங்கள் எழுப்பி கோயில் கட்டி வழிபாடுகள் செய்தான். வழிபாட்டுக்கு மலர்கள் இல்லாமல் தவித்த இந்திரனுக்கு அங்கே இருந்த தீர்த்தத்தில் பொன்னாலாகிய தாமரை மலர்கள் தோன்ற அந்தப் பொற்றாமரையால் வழிபட்டான். அன்று முதல் அந்தத் தீர்த்தமும் பொற்றாமரைத் தீர்த்தம் என வழங்கப் பட்டது. விண்ணில் இருந்து இறங்கிய அந்த மாணிக்க விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும் அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்கியதாய்ச் சொல்லுவார்கள். தொண்டர்களிலும் தொண்டனாக, அடியார்க்கு அடியானாக இன்றும் சித்ரா பெளர்ணமி தினத்தில் இந்திரன் வந்து வழிபட்டுச் செல்வதாய் ஐதீகம்.

அக்காலத்தில் பாண்டிய நாடு மணவூரைத் தலைநகராய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் குலசேகரபாண்டியன் என்பவனது ஆட்சியில் தனஞ்சயன் என்னும் வியாபாரி ஒருவன் தன் வியாபார நிமித்தம் கடம்பவனம் வழியாய்ச் சென்றபோது இரவு அங்கே தங்க நேரிட்டது. அப்போது அவன் கடம்பவனத்தில் இருந்த சிவலிங்கத்தையும், இரவில் பேரொளியோடு கூடிய சிலர் வந்து வழிபாடுகள் நடத்துவதையும் கண்டு மன்னனிடம் சொல்ல, மன்னனும் ஈசன் சித்தம் என்னவோ எனச் சிந்தனையில் ஆழ்ந்தான். இரவு முழுதும் இதையே எண்ணிய மன்னன் சற்றே கண்ணயர அவன் கனவில் சுந்தர ரூபமுடைய ஒரு சித்தர் தோன்றி, கடம்பவனக் காட்டை அழித்து நகராக்கி அற்புதக் கோயில் ஒன்றைக் கட்டுமாறு பணிக்க மன்னனும் தெளிந்து அவ்வாறே செய்தான்.

நகருக்குப் புண்ணிய நதியின் நீரால் தூய்மை செய்ய நினைத்த மன்னனுக்கு ஈசனே உதவினார். சோமசுந்தரர் ஆக எழுந்தருளி இருந்த சுந்தரேஸ்வரர் தம் சடாமுடியின் கங்கையின் நீரோடு, பிறைச் சந்திரனின் அமுதத்தையும் சேர்த்து அமுத நீராக மாற்றி அதைக் கொண்டு நகரைத் தூய்மை செய்யுமாறு சொல்ல நகரும் அழகும், புதுமையும் பெற்றுப் பொலிந்தது. அந்த நீரோ சுவையோ சுவை! தேனினும் இனிய அந்த நீரின் மதுரத் தன்மையை நினைக்கவேண்டும் என மன்னன் நகருக்கு மதுரை எனப் பெயர் சூட்டினான். அக்கால மதுரையின் சிறப்பைப் பரிபாடல் திரட்டு கீழ்க்கண்ட வண்ணம் கூறுகின்றது. பரிபாடலிலேயே மதுரைச் சிறப்பும், வையை நதியின் சிறப்புமே அதிகம் காணலாம். திரட்டிலோ, மூவேந்தரின் தலைநகர்களில் மதுரை எவ்வாறு சிறந்து விளங்கிற்று எனத் தெள்ளத் தெளிவாய்க் கூறுகின்றது.

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பா¢சில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

திருமாலின் கொப்பூழில் உதித்த தாமரைப் பூப் போன்ற ஊரும், பூவின் இதழ்கள் போன்ற அழகிய தெருக்களும், இதழ்களில் இருக்கும் இலக்குமிதேவி போல நகரின் நடுவே அண்ணலாகிய ஈசனின் கோயிலும், பூந்தாது போன்ற தமிழ்க் குடிமக்களும், பூந்தாதுக்களை உண்ணும் பறவைகள் போல நகரின் வாழும் மற்ற மக்கள், பூவினில் பிறந்த பிரமனின் நாவினில் பிறந்த நாலுமறையாகிய வேதகோஷம் கணீரெனக் குரல் எழுப்பி மறையோர் ஓதும் சப்தம் கேட்டுத் துயில் எழும் மதுரை வாழ் மக்கள், சேரனின் வஞ்சி நகரும், சோழனின் உறையூர் நகரையும் போலக் கோழி கூவித் துயில் எழாதாம். அவ்வாறு அனைவரையும் போற்றிப்பாதுகாத்து வந்த நகராம் மதுரை நகர். கண்ணகி மதுரையை எரித்த போது கூட மீனாட்சி கோயிலில் இருந்த சீத்தலைச் சாத்தனார் எவ்விதப் பாதிப்புமின்றிச் சேரநாடு சென்றதாய்க்கூறுவார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரையில் பின்னர் தன் மகனாகிய மலயத்வஜனுக்குப் பட்டம் கட்டிவிட்டு இறைவனடி சேர்ந்தான் குலசேகரன். மலயத்வஜ பாண்டியனுக்குக் குழந்தைப் பேறு இல்லை என அவன் புத்திர காமேஷ்டி யாகம் சப்தரிஷிகளின் துணையோடும் ஷடாரண்யத்தில் (தற்போது ஆற்காடு என வழங்கப் படுகின்றது.) செய்ததாகச் சொல்லப் படுகின்றது. யாக குண்டத்தில் இருந்து தோன்றினாள் மூன்று வயது மதிக்கத் தக்க ஒரு சின்னஞ்சிறு பெண். அந்தப் பெண் நேரே மலயத்வஜ பாண்டியனின் மனைவியான காஞ்சனமாலையின் மடியில் போய் அமர, மன்னனுக்கு அசரீரி மூலம் அந்தப் பெண்ணை வளர்த்து வர உத்தரவு கிட்டுகின்றது. அந்தப் பெண்ணிற்கு மூன்று தனங்கள் இருந்ததைக் கண்டு திடுக்கிடுகின்றனர் அரசனும், அரசியும். ஆனால் குழந்தைக்கு மூன்று தனங்கள் இருப்பதைக் கண்ட மன்னனும், ராணியும் அதிர்ச்சி அடைகின்றனர். மன வருத்தமும் அடைகின்றனர். அப்போது அசரீரி, “மன்னா வருந்தாதே! இந்தப் பெண்ணை வளர்த்து சகல கலைகளையும் பயில்வித்து, ஒரு ராணியாக்குவாய். அவளுக்கு உரிய மணாளனை அவள் காணும்போது அந்த மூன்றாவது தனம் மறையும்.” என்று சொல்கின்றது.

எழில்செய் தென்மதுரை தழைய மும்முலையொ
டெழுமெ னம்மனை வனப்புக்கொர் காவலர்
இருவ ரெண்மர்பதி னொருவர் பன்னிருவ
ரெனும் விண்ணவர்கண் முப்பத்து மூவரே. (11)

பெண்ணை அருமை, பெருமையோடு சீராட்டிப் பாராட்டி வளர்க்கின்றனர் மன்னனும், ராணியும். பல்வேறு விதமான விளையாடல்களையும் புரிந்து வளர்கின்றாள் மீனாட்சி.

மதுரைப் பதிதழை யத்தழை யுங்கொடி
தாலோ தாலேலோ
மலையத் துவசன் வளர்த்த பசுங்கிளி
தாலோ தாலேலோ. (9)


பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற்
பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப்
பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்

விருந்தே வருக மும்முதற்கும்
வித்தே வருக வித்தின்றி
விளைக்கும் பரமா னந்தத்தின்
விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக வருள்பழுத்த
கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்

மருந்தே வருக பசுங்குதலை
மழலைக் கிளியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே. (10)

அதன்படியே மன்னன் வளர்த்து வருகின்றான் பெண்ணை. தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வருகின்றான், குமாரியை. சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கும் இளவரசிக்கு முடிசூட்டிவிட்டுச் சிலநாட்களில் மன்னன் மரணம் அடைய, மீனாட்சியால் நாடு ஆளப் பட்டது. கன்னியான மீனாட்சி ஆண்டதால் கன்னி நாடு எனப் பெயரும் பெற்றது. மணப் பருவத்தை எய்திய மகளைப் பார்த்து காஞ்சனமாலை மகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என ஏங்க, தடாதகையோ, “நேரம் வரும்போது எல்லாம் தானே நடக்கும். ஆகவே நீங்கள் கவலை கொள்ளவேண்டாம். நான் திக்விஜயம் சென்று எட்டுத்திக்குகளிலும் வெற்றியை நிலைநாட்டிவிட்டுத் திரும்புவேன். நீங்கள் இங்கே இருப்பீர்களாக!” எனச் சொல்லிவிட்டுத் தன் படைகளைத் திரட்டிக் கொண்டு, நால்வகைப் படைகளோடும் திக்விஜயம் சென்றாள் மீனாட்சி.

6 Comments:

BadhriNath said...

sivanudayadhai aalayam endrum,
vishnuvinudaiyadhai kovil endrum kuurap peruvadhaaga karudhugiren.

குமரன் (Kumaran) said...

பரிபாடலுக்கு மட்டும் பொருள் சொல்லியிருக்கீங்க. மத்த பாடல்களுக்கும் பொருள் சொல்லுங்க கீதாம்மா.

Geetha Sambasivam said...

வாங்க பத்ரிநாத், இத்தனை வயசாச்சா உங்களுக்கு? அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ! அப்போ நீங்க சொல்றது சரியாத் தான் இருக்கணும். முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க, வாங்க அடிக்கடி, தள்ளாமையிலும் வந்துட்டுப் போறதுக்கு நன்னிங்கோ! :))))))))))))))

Geetha Sambasivam said...

எல்லாத்துக்கும்பொருள் சொன்னால் ரொம்ப நீளமாப் போகுது குமரன், எழுதிட்டு அப்புறமா பப்ளிஷ் பண்ணும்போது டெலீட் செய்தேன். மத்தது அவ்வளவு ஒண்ணும் கஷ்டமா இல்லையே? புரியும்! :)))))))))))

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கல்...பாடல்களுடன் தந்தமைக்கு நன்றி.

Anonymous said...

Genial brief and this enter helped me alot in my college assignement. Thanks you on your information.