Saturday, April 4, 2009

மதுரை அரசாளும் மீனாட்சி! 3


சென்ற அனைத்து இடங்களிலும் வெற்றி அடைந்த மீனாட்சி தன் சேனைகளோடு திருக்கயிலை வரையிலும் சென்றாள். அங்கே நந்தியோடு போர் செய்து சிவகணங்களையும் வென்றாள். அனைவரையும் வென்ற இந்தக் கன்னி யாரோ என அவளோடு பொருத அந்த ஈசனே நேரில் வந்தார். சிவகணங்களையே வென்ற கன்னிகையைக் கண்டு பொருத வேண்டி வந்த ஈசனைக் . கண்ட மாத்திரத்திலேயே தடாதகையின் தனங்கள் இரண்டாக ஆயிற்று. மூன்றாவதாய் இருந்த தனம் மறையவே பிராட்டிக்கும் இவரே தன் கணவர் என்பதாய் உணர்ந்தாள். பின்பு பிராட்டியார் இவரை வெல்ல முடியாது என நாணி நிற்க, ஈசனோ,”நாம் வந்து உம்மை மணமுடிக்கின்றோம்.” எனச் சொல்கின்றார். அவ்வளவில் பிராட்டி மதுரை திரும்புகின்றாள்.
ஈசன் தான் இப்போது இருக்கும் கோலத்திலே போனால் சரியாக இராது என எண்ணி சுந்தரராக, அழகு வாய்ந்தவராயும், ஆடை, ஆபரணங்கள் பூட்டிக் கொண்டும், சோமசுந்தரராய் மாறி மதுரை சென்றடைய, நகரம் விழாக் கோலம் பூண்டது. தேவாதி, தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள மிகச் சிறந்த முறையிலே திருமண ஏற்பாடுகள் செய்யப் பட்டன. திருமணத்திற்குத் திருமால், பிரமன் முதலிய தேவாதி தேவர்கள் அனைவரும், பல்வேறு முனிவர்களும், ரிஷிகளும் வந்திருந்து சிறப்பித்தனர். ஊரே திருவிழாக் கோலம் பூண்டது. மதுரை மாநகரம் செய்த தவம் தான் யாதோ என மகிழ்ந்தனர் மக்கள் அனைவரும். முரசங்கள் ஒலிக்க, பேரிகைகள் ஆர்ப்பரிக்க, சங்குகள் முழங்க, இனிய கீதங்கள் இசைக்க, சுந்தரனாக வந்த ஈசனுக்கும், அன்னைக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பரஞ்சோதி முனிவர் அந்தக் காட்சியை,

“பண்ணுமின்னிசையும், நீரும்
தண்மையும் பாலும் பாலில்
நண்ணு மின் சுவையும் பூவும்
நாற்றமும் மணியும் அங்கேழ்
வண்ணமும் வேறு வேறு
வடிவு கொண்டிருந்தால் ஒத்த(து)
அண்ணலும் உலகம் ஈன்ற
அம்மையும் இருந்த(து) அம்மா” என்று பாடுகின்றார்.


திருமணச் சடங்குகள் நிறைவேறின. ப்ரமனே அவற்றைச் செய்து முடித்தார். மங்கலநாண் சூட்டப்பட்டது அன்னைக்கு. அடுத்து அனைவருக்கும் விருந்து முறைப்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் பதஞ்சலியும், வியாக்ரபாதருமோ தினந்தோறும் அம்பலத்தில் கூத்தாடும் ஈசனின் திருநடனத்தைக் கண்டபின்னரே உணவு உட்கொள்ளும் வழக்கம். ஆகையால் தங்கள் திருநடனத்தைக் கண்டபின்னரே விருந்துக்குச் செல்வோம்.” என விண்ணப்பிக்க, ஈசனும் தன் கருணையால் அவர்களை மன மகிழச் செய்வதோடு, மதுரைக்குத் தனிச் சிறப்பும் கொடுக்க எண்ணினார். ஈசனின் கண்ணசைவின் பேரில் அங்கே வெள்ளியால் ஆன அம்பலம் ஒன்று தோன்ற, தடாதகையாகிய மீனாட்சி அன்பு பொங்கும் தன் திருக்கண்களால், ஆச்சரியத்துடன் நோக்கி இருக்க, ஈசன் திருநடனம் செய்து அருளினார். அன்னையின் முகத்தில் ஆச்சரியத்தோடு தோன்றிய குறுநகையும் விவரிக்க முடியாத செளந்தரியத்தோடு விளங்கியது.

7 Comments:

Ungalranga said...

//அன்னையின் முகத்தில் ஆச்சரியத்தோடு தோன்றிய குறுநகையும் விவரிக்க முடியாத செளந்தரியத்தோடு விளங்கியது.//

அன்னைக்கு அன்னையின் வர்ணனை அருமை..

வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

வாங்க ரங்கன், புது வரவு?? நன்றிப்பா. கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும்.

rmsundaram said...

beautiful explanation.Thanks

BadhriNath said...

paN = paN paduththudhal.
idhuvum isaiyum veru veraa ? yosikkavendiyadhaaga thondrukiradhu.

Geetha Sambasivam said...

நன்றி சுந்தரம் அவர்களே,

பத்ரிநாத், பண் என்னும் சொல் இங்கே இசையின் ராகத்தைக் குறிக்கின்றது. பண்படுத்தல் என்னும்போது செம்மையாக்குதல் என்னும் அர்த்தத்தில் வரும். உ-ம்= மனம் பண்பட்டது= மனம் செம்மையாக மாறியது.

தேவன் மாயம் said...

மதுரை மக்களா நீங்கள்?

நான் காரைக்குடிதான்!

Dr.Deva.

Geetha Sambasivam said...

வாங்க தேவன்மயம், நீங்க காரைக்குடினு தெரியுமே, அதான் மூட்டுக்கு மூட்டு தட்டிட்டு இலலை சொன்னீங்க! :)))))))))))