Tuesday, April 7, 2009

மதுரை அரசாளும் மீனாட்சி- 5

பாண்டிய மன்னர்கள் அனைவராலும் பராமரிக்கப் பட்ட மதுரையும், மாநகரின் இதயம் ஆன கோயிலும், கண்ணகியின் சீற்றத்தால் அழிக்கப் பட்டது. அப்போது கோயிலில் இருந்த சீத்தலைச் சாத்தனார் எந்தவிதப் பாதிப்புமின்றிச் சேரநாடு சென்று இளங்கோவடிகளைப் பார்த்துச் செய்திகளைச் சொன்னதாகக் கேள்விப் படுகின்றோம். பின்னர் பிற்கால அரசர்கள் பலரும் இந்தக் கோயிலைப்பாதுகாத்தே வந்திருக்கின்றனர். ஆனால் அந்நியப் படையெடுப்பின் போது மாலிக்காபூர் தமிழ்நாட்டின் மேல் கி.பி. 1310-ல் படை எடுத்து வந்தபோது கோயில் தரைமட்டமாக்கப் பட்டதாய்ச் சிலர் சொல்கின்றனர்.

அப்போது விஜயநகரப் பேரரசு எழும்பி இருந்த கால கட்டம். ஹம்பி என்ற பம்பா நகரில் இருந்து ஆட்சி புரிந்த ஹரிஹர புக்கர்களுக்கு உதவிய வித்யாரண்யர், மதுரை நகரையும், கோயிலையும் மாலிக்காபூரிடம் இருந்து காப்பாற்ற வேண்டி, ஹரிஹரபுக்கர்களின் சேனாபதியான கம்பன்னனை அனுப்பி வைக்கின்றார். அவன் உண்மையான சிவலிங்கத்தை மறைத்துவிட்டுப் பொய்யான லிங்கத்தை வைத்ததாயும், அன்னையின் திருவுருவும் மறைக்கப் பட்டதாயும் சொல்கின்றனர். அவன் மனைவி கங்காதேவி. (பம்பா ரசம் என ராமாயணத்தில் வருவது ஹம்பியைக் குறிக்கும். கன்னடத்தில் “ப” என்ற எழுத்து வரும் இடங்களில் எல்லாம் “ஹ” என்றே சொல்லுவார்கள்.) கம்பன்னன் மனைவியான கங்கா தேவி அவன் பிரயாணம் செய்த இடங்களுக்கெல்லாம் தானும் கூடவே சென்று அனைத்தையும் ஒரு காவிய நயத்தோடு எழுதி இருக்கின்றாள். சம்ஸ்கிருதப் பண்டிதையான அவள் எழுதிய மதுராபுரி விஜயம் நுணுக்கமான விஷயங்களோடு கூடியதாய் இருக்கின்றது. அதை எபிக்ராபிகல் துறையில் பதிப்பித்திருக்கின்றனர். முதன் முதல் பிரயாணக் கட்டுரை ஒரு பெண்ணால் அதுவும் மதுரையைப் பற்றி எழுதப் பட்டது.

(நன்றி= தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி)

தமிழுக்கும் பல்வேறு தொண்டுகள் புரிந்து வந்திருக்கின்றனர் பாண்டிய மன்னர்கள் அனைவரும். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் பொற்றாமரைக் குளம் கோயிலினுள் இருந்திருக்கின்றது. அதிலே சங்கப் பலகையை மிதக்கவிட்டு, அதில் புலவர்களின் ஆக்கங்களை வைக்கப் படும். இலக்கணப் பிழை, சொல் பிழை, கருத்துப் பிழை போன்ற குற்றங்களோடு கூடிய ஆக்கங்களை அந்தப் பலகை ஏற்காது. உலகப் பொதுமறை என்று சொல்லப் படும் திருக்குறளைத் திருவள்ளுவர் ஒளவையின் உதவியோடு பொற்றாமரைச் சங்கப் பலகையில் வைத்தார். மற்ற நூல்களைத் தள்ளிவிட்டுத் திருக்குறளை மட்டும் சங்கப் பலகை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லுவார்கள். இப்போது பொற்றாமரையில் தண்ணீரும் இல்லை. திருநாள் சமயத்தில் தண்ணீரை நிரப்பிப் பொற்றாமரை ஒன்றை மிதக்க விடுகின்றார்கள். தண்ணீர் ஊறும் கிணறுகள் அனைத்தும் தூர்க்கப் பட்டு பொற்றாமரைக்குளத்தின் அடியில் சிமெண்டால் தளம் போட்டு நீர் ஊறி வருவது தடை செய்யப் பட்டுள்ளது.

பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் நாயக்கர் காலத்துச் சித்திரங்கள் இருந்தன. அவை காலத்தால் பழுதுபட அவற்றை முழுதும் நீக்கிவிட்டு இப்போது வேறொரு ஓவியரின் ஓவியங்களைக் காண முடிகின்றது. மற்றும் உள்ள சுற்றுச் சுவர்களில் திருவள்ளுவரின் 1330 திருக்குறளும் பொறித்து வைக்கப் பட்டுள்ளன. மதுரைச் செய்திகள் தொடரும். இப்போ நம்ம தருமி சாரின் நேர்முக வர்ணனை கும்பாபிஷேஹம் பத்தி. அதுவரை விளம்பர இடைவேளை.

விளம்பரத்திற்கு ஸ்பான்ஸர் நானே தான்.

நாளை பொதிகை தொலைக்காட்சியில் கும்பாபிஷேஹச் சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள். உங்கள் கேபிள் ஆபரேட்டர் பொதிகையை ஒளிபரப்பினால். :P:P:P:P

1 Comment:

Geetha Sambasivam said...

நேத்தே போட்டிருக்கணும், அப்லோடே ஆகலை, ஆற்காட்டார் தயவிலே. இன்னிக்குப் போட்டிருக்கேன். தமிழ் மணம் வேறே என்னோட பதிவுகளுக்கு மார்க்கே தரதில்லை! :)))))))