Saturday, April 18, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

கிளிக்கூட்டு மண்டபம்: கிளிக்கூண்டு பெரியதாய் இருக்கும் இந்த மண்டபத்தில் முன்பெல்லாம் கிளிகள் அடைத்து வைக்கப் பட்டிருக்கும். கிளிகளிடம் போய், “மீனாக்ஷி எங்கே?” என்றாலோ, “மீனாக்ஷியைக் காணோமே!” என்றாலோ, கீகீகீகீ என்று கத்திக் கொண்டு சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு பறக்கும். எப்படியும் கூண்டில் அடைபட்டிருக்கும் கிளிகள் பறக்கவே முயலும் என்றாலும் மீனாக்ஷி பெயரைச் சொன்னால் பறக்கும் என்ற அளவுக்குப் பழக்கப் படுத்தப் பட்டிருக்கும். எதிரே பொற்றாமரைக் காற்று வாங்கிக் கொண்டு, இந்தக் கிளிகளோடு பொழுது போக்குவது ஓர் அற்புத அனுபவம் ஆகும். இப்போ கிளிகள் இல்லை. கூண்டையும் எடுத்துட்டதாய்க் கேள்வி. சரியாப் பார்க்க முடியலை 2007-ல் டிசம்பரில் போயிட்டு மீனாக்ஷியையும் பார்க்கலை, கூண்டையும் பார்க்க முடியலை. கூட்டத்தை மட்டும் பார்த்துட்டு வந்தோம். கோயிலே அந்நியத் தன்மையோடு தனிமைப் பட்டு இருப்பதாய் என்னுடைய உணர்வு. இந்தக் கிளிக்கூண்டு மண்டபத்தில் கல்லால் ஆகிய பந்து ஒன்றை வாயில் வைத்திருக்கும் சிலை, யாளி அல்லது புருஷா மிருகம் இருக்கிறது. இப்போவும் இருக்கும். சரியாய் நினைப்பில்லை.

அடுத்துச் சிற்பங்கள் நிறைந்த கம்பத்தடி மண்டபம். மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணக் காட்சியைக் கூறும் சிற்பமும், காலாந்தக மூர்த்தியான ஈசன், தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்லும் சிற்பமும், நடராஜரும், இராவணன் கைலை மலையைப் பெயர்த்தெடுக்கும் முயற்சியைக் கூறும் சிற்பமும், சக்கரதரராய்க் காட்சி அளிக்கும் மூர்த்தியும் ரிஷபாரூடரும், அரியும், சிவனும் ஒன்றே என்னும் அற்புதத் தத்துவத்தை எடுத்துக் கூறும் ஹரிஹரர்களின் சிற்பமும், சண்டேஸ்வரரும், பிக்ஷாடனர், ருத்ரர், ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனன், ஸோமாஸ்கந்தர் எனக் கலையம்சங்களுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம்.

அடுத்து சுந்தரேஸ்வரருக்கு எதிரே அவரைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் நந்தியின் உருவச் சிலை உள்ள வீர வசந்தராயர் மண்டபம்.

ஆயிரக்கால் மண்டபம். 985 தூண்களே இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. 1509-ம் நூற்றாண்டில் தளவாய் அரியநாத முதலியாரால் கட்டப்பட்ட இம்மண்டபம் சிற்பக் கலைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்து இன்று தொல்பொருள் இலாகாவின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றது. இந்த மண்டபம் ஒரு ரதம் வடிவில் உருவாக்கப் பட்டிருக்கின்றது. இரு யானைகள் இழுக்கும் இந்த ரத மண்டபத்தில் இப்போது ஒரு கண்காட்சியும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. இந்த மண்டபத்தில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிற்பங்களாய், அரிச்சந்திரன், சந்திரமதி சிற்பங்களில் லோகிதாசனைச் சுமந்து நிற்கும் சந்திரமதியும், கண்ணப்பநாயனார் கதையும் அருமையாய் உருவாக்கப் பட்டுள்ளது. இதைத் தவிர கோயிலின் மிகப் புராதனமான பகுதியாக ஸ்வாமி சந்நதி சொல்லப் படுகின்றது. இங்கே உள்ள விமானம் இந்திர விமானம் என்றும் இந்தச் சந்நதியும், மதுரை நகரும் 3,000 வருஷங்களுக்கும் முற்பட்டவை என்றும் சொல்லப் படுகின்றது.

ஆயிரங்கால் மண்டபத்திற்குத் தென்பாகம் பல வருஷங்கள் கழித்து 1960-63-ம் வருஷத் திருப்பணியையும், கும்பாபிஷேகத்தையும் குறிக்கும் வண்ணம் ஏற்படுத்தப் பட்டது மங்கையர்க்கரசி மண்டபம். இந்த மண்டபத்தில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார், கூன் பாண்டியன், திருஞானசம்பந்தர் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றிருக்கின்றன.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று திருக்கல்யாண மண்டபம். வருஷா வருஷம் மீனாக்ஷி இங்கே தான் கல்யாண உற்சவம் காணுகின்றாள். நவராத்திரியில் முன்பெல்லாம் இங்கே பல்வேறு சங்கீத வித்வான்கள், சங்கீத உபன்யாசகர்கள், மடாதிபதிகள் ஆகியோரின் கச்சேரிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். இந்தக் கல்யாண மண்டபத்தின் கூரைப் பகுதியில் ஓவியங்களும், சிற்பங்களும் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

கோயிலுக்கு வெளியே கீழ வாசல் வழியாக வந்தோமெனில் கிழக்கு கோபுரத்துக்கு எதிரே வசந்த மண்டபம் என்று நாயக்கர் காலத்தில் சொல்லப் பட்ட புதுமண்டபம் இருக்கின்றது. இங்கேயும் சிற்பங்களின் அழகும், வேலைப்பாடுகளும் கண்ணையும், கருத்தையும் கவரும். ஆனால் இப்போது மட்டுமல்ல, எப்போதென்று தெரியாத காலத்தில் இருந்தே, புத்தகக்கடைகளும், பாத்திரக் கடைகளும் ஆக்கிரமித்துக் கொண்டு, சிற்பங்களின் அழகைக் காணமுடியாமல் தடுத்து வருகின்றது. ஒரு முறை கடைகளை எல்லாம் எடுக்கவேண்டும் எனக் கடும் முயற்சி எடுத்தும், அது முடியாமல் இப்போது அங்கே கடைகளைத் தவிர, கூட்டத்தைத் தவிர வேறொன்றும் இல்லை என்ற அளவுக்கு ஆகி இருக்கிறது. இந்தப் புதுமண்டபம் திருமலை நாயக்கரால் உருவாக்கப் பட்டது. இங்கே 335 அடி நீளம், 105 அடி கலம் 25 அடி உயரம் உள்ள இந்த மண்டபத்தில் 124 தூண்கள் உள்ளன. நான்கு வரிசையாக உள்ள இந்தத் தூண்களில் அழகிய சிற்பங்கள் இருக்கும். மண்டபத்தின் நடுவில் நாயக்கர் வம்சத்து அரசர்கள் சிலைகள் காணப் படும். புது மண்டபத்திற்கு எதிரே முற்றுப் பெறாத ஒரு கோபுரத்தின் அடித்தளம் இருந்தது. இப்போ இருக்கா இல்லையானு மதுரை மக்கள் வந்து சொல்லுங்கப்பா. அதை ராய கோபுரம் எனச் சொல்லுவார்கள். அந்தப் பக்கம் தான் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க் கடையின் கிளையும் இருக்கிறது. அல்வா கிடைக்கும். மேலச் சித்திரை வீதியில் இதன் தலைமை அலுவலகம் மற்றும் தலைமைக் கடை. மதியம் 12 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக உருளைக் கிழங்கு கார மசாலா சுடச் சுடக் கிடைக்கும். 2-01-க்குப் போனால் கூடக் கிடைக்காது. மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சேரும் முனையில் கோபு ஐயங்கார் கடையில் மதியம் 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக பஜ்ஜி சூடாய்க் கிடைக்கும். (அதியமான், பார்த்துக்குங்க) இதுவும் 4 மணிக்குள்ளாகப் போனாலே கிடைக்கும். எனக்குத் தெரிஞ்சு இவை இரண்டுமே அந்த நாள் முதல் இந்த நாள் வரை எதுவும் மாறவில்லை என்ற பாட்டைப் பாடிக் கொண்டு தலைமுறைகளையும் தாண்டிக்கொண்டு நின்றிருக்கின்றன. இதிலே கோபு ஐயங்கார் கடையிலே முன்பிருந்தவர்கள் இருக்கிறாங்களா தெரியாது, ஆனால் நாகப்பட்டினம் நெய்மிட்டாய்க் கடை தொடர்ந்து ஒரே குடும்பத்தால் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது. அதனால் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றவை மாறி விட்டன.

7 Comments:

யாத்ரீகன் said...

>>> கோபு ஐயங்கார் கடையில்<<<

இங்கு கிடைக்கும் வெள்ளையாப்பம் .. . அடாடாடா... இன்னும் இதுக்கு அத்தனை டிமாண்ட் இருக்கு..

Geetha Sambasivam said...

வாங்க யாத்ரீகரே, ஏற்கெனவே ஒரு /இரு???முறை எண்ணங்களிலே பார்த்திருக்கேனோ? உண்மைதான். கோபு ஐயங்கார் கடை வெள்ளை அப்பம், காராவடையை விட்டுட்டீங்களே, அதுவும் தான் நல்லா இருக்கும். ஆனால் நான் பஜ்ஜி மட்டும் தான் எழுதி இருக்கேன். அதையும் சேர்த்திருக்கலாமோ???

கைப்புள்ள said...

//மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் சேரும் முனையில் கோபு ஐயங்கார் கடையில் மதியம் 2 மணியில் இருந்து 4 மணிக்குள்ளாக பஜ்ஜி சூடாய்க் கிடைக்கும். (அதியமான், பார்த்துக்குங்க) //

பாத்துக்கிட்டேன் தலைவிஜி. நான் கூட என்னமோ நீங்க தான் அங்கிளுக்கு பஜ்ஜி போட்டுக் கொடுத்துட்டீங்களோன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்.

மற்றபடி உங்கள் விவரிப்பு அருமை. மதுரை நகரமும் மீனாட்சியம்மன் திருக்கோயிலும் உங்கள் மனதுக்கு எவ்வளவு நெருக்கமானது என்று உங்கள் எழுத்திலிருந்தே அறிய முடிகிறது.

Geetha Sambasivam said...

வாங்க அதியமான், பஜ்ஜி செய்து கொடுத்தேன்னு மெயிலினேனே, பதில் கூடக் கொடுத்தீங்களே, மறந்து போச்சு??? பாவம் வயசாயிடுச்சு இல்லை? :P :P :P :P

பாச மலர் / Paasa Malar said...

கோபு ஐயங்கார் வெள்ளையப்பம்..அடடா...ஒவ்வொரு முறையும் அங்கே வரும்போது சென்று ருசிக்கத் தவறுவதில்ல..

Karthikeyan Rajendran said...

ப்ளாக் வடிவமைப்பு அருமை

ப்ளாக் வடிவமைப்பை பற்றி எனக்கு தமிழில் மெயில் அனுப்பவும் உங்கள் உதவியை எதிபார்க்கிறேன் எனது ஈமெயில் sonofcoimbatore @gmail .com

இராஜராஜேஸ்வரி said...

Super post.thank you for sharing about great Madurai.