Tuesday, April 21, 2009

மதுரை அரசாளும் மீனாக்ஷி!

நேற்று இட்ட இடுகையில் முக்கியமான இரு தெருக்களை மறந்திருக்கின்றேன். சிறிய வயதில் கழுதை அக்ரஹாரத்திலும், பின்னர் அங்கிருந்து வடுகக் காவல் கூடத் தெருவிலும் இருந்தோம். அதன் பின்னரே மேல ஆவணி மூல வீதிக்கு வந்தோம். ம்ம்ம்ம்?? இப்படி எல்லாம் பதிவுகள் எழுதி உலகப் புகழ் பெறப் போறேன்னு அப்போ தெரியாது. மெய்க்கீர்த்தி ஒண்ணு பாடி ஒரு கல்வெட்டாவது வச்சுட்டு வந்திருக்கலாம். இப்போ அடுத்துப் பார்க்கலாமா?
**************************************************************************************

மதுரை என்றாலே தமிழ் மொழியும், மதுரைப் பாண்டியர்கள் அமைத்த சங்கமும், சங்கத் தமிழின் இன்பமும் பற்றிப் பேசாமல் போக முடியாது. தமிழை வளர்க்கப் பாண்டிய மன்னர்கள் மூன்று சங்கங்கள் அமைத்திருக்கின்றனர்.வடக்கே சூரியகுல மன்னர்கள் வடமொழியை வளர்த்தனர் என்றால் தெற்கே பாண்டிய மன்னர்களால் தமிழ் வளர்க்கப் பட்டது. வேறெந்தத் தமிழ் மன்னரும் அப்போது செய்யாத ஒன்றைப் பாண்டிய மன்னர்கள் செய்தார்கள் என்றால் அது தமிழ் வளர்க்கச் சங்கம் அமைத்ததே. கடல் கோளால் அழிந்துபட்ட பாண்டிய நாட்டின் பழைய மதுரையும் சரி, இப்போது இருக்கும் மதுரையும் சரி, தமிழ்ச்சங்கம் வளர்த்து வந்ததற்கான இலக்கியச் சான்றுகள் இன்றளவும் இருந்து இவற்றை மெய்ப்பித்து வருகின்றன. பின்னாட்களில் பாண்டித்துரைத் தேவர் என்பவரால் நான்காம் தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. இந்தப் பாண்டித் துரைத் தேவரிடம் வெள்ளையர் ஒருவர் திருக்குறளை திருத்தம் செய்து கொண்டு காட்டியதாகவும், பாண்டித்துரைத் தேவர் அவரை இகழ்ந்து திருவள்ளுவரின் திருக்குறளைத் திருத்த நீர் யார் எனக் கேட்டதாயும் செவிவழிச் செய்திகள் சொல்லுகின்றன. ஐந்தாம் உலகத் தமிழ்மாநாட்டில் அப்போதைய முதல் அமைச்சர் மதுரையிலோ, தஞ்சையிலோ நான்காம் தமிழ்ச்சங்கம் அமைக்கப் படும் என அறிவித்ததாயும், காந்தி ம்யூசியத்துக்கு அருகே இதற்கென நிலம் கையகப் படுத்திப் பெயர்ப்பலகை நட்டு அடிக்கல் நாட்டியதாயும், இப்போது அந்த இடம் பொதுக்கழிப்பறையாகப் பயன்பட்டு வருவதாயும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்து மீனாக்ஷியின் அலங்காரங்கள் பற்றிய குறிப்பு.

யாரானும் ஒரு நாளைக்கு இரு முறைக்கு மேலே புடவையை மாற்றினாலோ, அலங்கரித்துக் கொண்டாலோ, “மதுரை மீனாக்ஷி போல அலங்காரம் செய்துக்கிறாளே” என்று சொல்லுவதுண்டு. இப்போ அப்படிச் சொல்றாங்களானு தெரியலை. ஆனால் மீனாக்ஷிக்கு வேளைக்கு ஒரு அலங்காரம், வேளைக்கு ஒரு நகை. சித்திரைத் திருநாளில் அம்மனுக்குப் பட்டாபிஷேஹத்தின் போது அணிவிக்கப் படும் கிரீடத்தின் அழகைக் காண இரு கண்கள் போதாது. விஜய நகர சாம்ராஜ்யத்தின் அரசரால் வழங்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கிரீடத்தில் 920 மாணிக்கக் கற்களும், 78 பச்சை வைரங்களும், 11 மரகதக் கற்களும், 8 கோமேதகங்களும் 7 நீலங்களும் கண்ணைப்பறிக்கும் வகையில் பதிக்கப் பட்டுள்ளன. செங்கோல் என்றால் சிவப்புக்கற்களாலேயே ஆன செங்கோலை வைத்திருப்பாள் மீனாக்ஷி. 761 சிவப்புக் கற்கள், 261 மரகதக் கற்கள், 74 வைடூரியக் கற்கள், 44 முத்துக்கள், 21 பச்சை வைரங்கள் பதிக்கப் பட்ட இந்தச் செங்கோலை வழங்கியவர் திருமலை நாயக்கர். சுந்தரேஸ்வரரின் கிரீடம் ஆவணி மாதம் அவரின் பட்டாபிஷேஹத்தின் போதும், சித்திரைத் திருவிழாவின் போதும் அணிவிக்கப் பெறும். இந்தக் கிரீடம் மிக மிகப் புராதனமான ஒன்று என்றும், முற்காலப் பாண்டியர்கள் செய்து அளித்த இந்தக் கிரீடம் வழிவழியாக வருகின்றது எனவும், இதன் பெயர் வாசுவாலைக் கிரீடம் என்றும் சொல்லுவார்கள். இந்தக் கிரீடத்தில் மூன்று வரிசையாக பெரிய பெரிய மாணிக்கக் கற்களும், 439 முத்துக்களும், 300 பவளங்களும், 247 கெம்புக்கற்களும், 39 மரகதங்களும், 27 பச்சை வைரங்களும், 6 நீலங்களும், 2 கோமேதகங்களும் உள்ளன.

இதைத் தவிர தினசரி அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷிக்கு அணிவிக்கப் படும் முத்துச் சொறுக்கின் அழகையும், அதை அணிந்த கோலத்தில் மீனாக்ஷியின் அழகையும் எவ்விதம் வர்ணிப்பது? நம் வீட்டுப் பெண்கள் தலையைத் தூக்கிச் சொறுக்குக் கொண்டை போட்டுக் கொண்டு வேலை செய்வதைப் போல அவளும் நம் வீட்டுப் பெண் போலவே காட்சி அளிப்பாள். அம்மா, மீனாக்ஷி, இங்கே வாம்மா, என்று கூப்பிட்டு அழைத்தால் உடனே ஓடி வந்து, “என்னம்மா?” என்று கேட்டுவிடுவாள் போல் ஒரு கோலம் காட்டி நிற்பாள். எனக்குச் சீர்காழியின்
"சின்னஞ்சிறு பெண் போலே,
சித்தாடை இடை உடுத்தி,
பொற்றாமரைக் கரையினிலே
சீர்தூக்கிச் சிரித்து நிற்கும் "இவளைப் பற்றிய இந்தப் பாடலே நினைவில் வரும். சீர்காழி எப்போ மதுரை வந்தாலும் சிவகங்கைக் கரையினிலே என்ற இந்த வரியை பொற்றாமரைக் கரையினிலே என்று மாற்றியே பாடுவார். இந்த முத்துச் சொறுக்கோடு கூட, முத்து உச்சிக்கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கி, முத்துச் சுட்டி, முத்துக்கிளி, முத்துக் கடிவாளம், முத்து மாலை என்று சகலமும் முத்து முத்தாய்க் காட்சி அளிப்பாள். இந்த முத்து ஆபரணங்களைச் செய்து கொடுத்தவர் விஜய நகர சாம்ராஜ்ய அரசர்களில் ஒருவர் எனக் கூறப் படுகின்றது. இன்னும் வேற்று நாட்டவரும் அன்னைக்கு ஆபரணங்கள் அளித்துள்ளனர். ரோமானியர்கள் அளித்த ஆபரணம் தங்கக் காசுமாலை, ரோமானிய எழுத்துக்கள் பொறித்த 48 காசுகளோடு கூடியவை, அவற்றில் 50 தங்க மணிகளும் இடையில் இருக்கும். கிழக்கிந்தியக் கம்பெனியால் அளிக்கப் பட்ட காசுமாலைகள், 73 காசுகளும் ஆங்கில எழுத்துக்கள் பொறித்தவை, ஆங்கிலேயன் ரோஸ் பீட்டரால் அளிக்கப்பட்ட நவரத்தின மிதியடிகள், இன்னும் தெலுங்கு நாயக்கர்களால் அளிக்கப் பட்டவை, ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் அளித்தவை, நகரத்தார் சமூகத்தினர் அளித்தவை எனப் பலவேறு விதமான ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் திருமலை நாயக்க மன்னன் அளித்த நீல நாயக்கன் பதக்கம் என்ற பெயரில் அழைக்கப் படும் 30 பவுன் பெரிய பதக்கம், பெரிய நீலக்கல் பத்து, கெம்பு 2, கோமேதகம் ஒன்று வைத்துக் கட்டியது, இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணி பார்க்கவேண்டும் என ஆசைப் பட்டதால் இங்கிலாந்து சென்று பின் திருப்பி அனுப்பப் பட்டது.

1963-ல் கோயில் நிதியில் இருந்து வைரக் கிரீடமும், 1972-ல் கோயில் நிதியில் இருந்து தங்கப் பாவாடையும்,( இதைத் தங்கக் கவசம் என்றும் சொல்கின்றனர். ) செய்யப் பட்டது. வைரக் கிரீடம் சார்த்து நாள் அன்று இந்தத் தங்கப் பாவாடையும், சார்த்துவார்கள். புடவைக் கொசுவம் வைத்துக் கட்டியது போல் காட்சி அளிக்கும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தினமும் திருவிழாதான் மீனாக்ஷிக்கு. மாத வாரியாக அவள் திருவிழாக் காணும் பட்டியல் இதோ கீழே:

சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா: மீனாக்ஷி பட்டாபிஷேஹமும், மீனாக்ஷி திருக்கல்யாணமும் இப்போது தான். கொடி ஏற்றம் முடிந்து எட்டாம் நாள் திருவிழாவில் மீனாக்ஷி பட்டாபிஷேஹமும், ஒன்பதாம் நாள் காலையும், மாலையும் மீனாக்ஷி திக்விஜயமும், பத்தாம் நாள் காலை மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவம் கண்டருளுதலும் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தன்று இரவு அம்மனும், ஸ்வாமியும் வீதி உலா வருகையில் ஸ்வாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மனுக்குப் புஷ்பப் பல்லக்கும், மறு நாள் சித்ராபெளர்ணமிக்கு முதல் நாள் காலையில் அம்மனும், ஸ்வாமியும் தேரோட்டமும் நடை பெறும். அன்று மாலை வைகைக் கரையில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் சித்ரா பெளர்ணமி அன்று அழகர் வைகையிலே இறங்குவதும் நடை பெறும். இந்தக் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை ஒவ்வொரு வருஷமும் மதுரை மக்கள் திரும்பத் திரும்பக் கண்டு களிப்பார்கள். அலுக்கவே அலுக்காது. இந்த அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பாடலாய்க் குழந்தைகளுக்குப் பாடப் படுவதுண்டு.

“ஆனை, ஆனை,
அழகர் ஆனை,
குட்டி ஆனை,
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பார்க்க ஓடி வாங்கோ!” என்று பாடி ஆனை ஆட்டம் ஆட்டுவார்கள் குழந்தைகளை. மிகச் சிறிய குழந்தைகளுக்குக் கூட அன்று அழகர் மொட்டையும் உண்டு. பங்குனி மாதம் உத்திரத்தில் நடந்த மீனாக்ஷி திருக்கல்யாண உற்சவமும், சித்ரா பெளர்ணமி அன்று தேனூரில் நடந்த மண்டுக மகரிஷிக்கு முக்தி கொடுக்கும் கள்ளழகர் உற்சவமும் இணைந்து ஒரே சித்திரை மாதம் கொண்டாடும்படி ஏற்பாடுகள் செய்தது திருமலை நாயக்க மன்னர் ஆவார்.

2 Comments:

Avathaany said...

நல்ல பதிவு

MaduraiGovindaraj said...

நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் சந்திப்போம்