Friday, September 21, 2012

பாப்கார்ன் நிரம்பிய காகிதக் குவளை
 ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப 
கலைசார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்தேறும். யுனெஸ்கோ கூரியர் காலம் துவங்கி ராதுகா பதிப்பகத்தின் மொழி பெயர்ப்புகள் ருஷ்ய இலக்கியத்தின் காலம் எனில் பிரஞ்சு இலக்கிய காலமொன்றும் லத்தீன் அமெரிக்க காலமும் செவ்வியல் நவசெவ்வியல் புரட்சியும்  பின்னவீனத்துவ பாய்ச்சலும் ஜப்பானிய முராகமி காலமும் அறிந்ததே. ஒவ்வொரு காலம் சிறுகதைகள் ,நாவல்கள்,பாடல்கள் மற்றும் திரைப் படங்கள் இம்மாற்றங்களை செரித்தே வளர்ந்திருக்கின்றன.

ஆனால் ....
இன்றைக்கு கவிதைகளின் உள்ளீடு மற்றும் ஆன்மா குறித்துப் பேசுவோமாயின் விழுமியங்கள் பெரும் கேள்விக்குரியன. சொல்கொத்திகளின் அமைப்பியல் எச்சங்களை க-வி-தை என்று எழுத்துக் கூட்டி வாசித்துக் கொள்கிறோம்.யூமாவின் பிரதிகள் மனுஷ்ய புத்திரனின் குரலில் பேச முயற்சிக்கின்றன. ழாக் ப்ரெவரோ ,ப்ரக்டோ  ஜான் க்ளீவ்லேண்டோ, அல்லிகிரட்டியோ மொழிபெயர்ப்புக்கும் தன் சொந்த கவிதைக்கும் அதிக  வேறுபாடுகளில்லாமல் எழுதுவது குறித்து கிஞ்சித்தும் குற்றவுணர்வில்லை என்பது நாம் எதிர்நாயகர்களின் காலத்தில் வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறது .சாயல்களின் சாயல்கள்,பிரதியிலிருந்து பிறக்கும் பிரதிகள்.

தமிழின் சென்ற இரு வருடங்கள் நாவல் பரப்பில் நிகழ்ந்தவை குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகளை ஷகீராவின் குரலில் பாடச் சொல்லி கேட்பது அல்லது யதார்த்தவாதத்தின் மீப்பெரும் கண்ணீர்த்துளியை உறைய வைத்து தேனடை முலாம் பூசி விற்பது அல்லது ஹைதர் அலியின் கோழிக்குஞ்சுகளுக்கு செல்லப் பெயர் வைப்பதுடன் புனைவுச்சம் எய்துவது.மிக முயன்று பத்து ’உலகப் படம்’ பார்த்து ஒரு சிறுகதைத் தொகுப்பு தேற்றுவது  .விதிவிலக்குகள் நிலைக்கின்றன எப்போதும் போல் .

திரைப்படங்கள் ஆம் திரைப்படங்கள் அடைந்திருக்கும் இடம் மிகவும் துயர் படர்ந்தது.தீவிர இலக்கியத்திற்கும் திரைப் படங்களுக்கும் உள்ள தொடர்பு நுட்பமானது. .சிவப்பு மல்லியும் ,சோறும்,வீடும் வந்த மனிதா மனிதா  காலத்தில்தான் வானம்பாடிகள் தங்கள் நெம்புகோல் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள் .இன்னொரு புறம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும் காலவெளிச் சேர்க்கையாய் கவிதைகளில் கடலுக்கு அடியில் சிப்பிகளை நகர்த்திக் கொண்டிருந்தார்கள் அல்லது லோலிதாக்கள் அபிதாக்களாய் ஜேஜே என நாவல்களில் உதைப் பந்தாடிக் கொண்டிருந்தார்கள்.பின்நவீனத்துவம் என்பதை வடிவம் என்று ’தப்பர்த்தம் பண்ணிக்’ கொண்டு எண்களைத் தலைப்பாக்கி நாவல் எழுதிய காலத்தையும் கடந்தோம்தானே .ப்ளாஷ் பேக் போகட்டும் செர்பியன் டோனில் இருந்து உங்கள் திரை 7டி டிஜிட்டலுக்கு மாறட்டும் ,இன்றைக்கு வருவோம் 


 
சமீபமாய் கொண்டாடப்படும்  ஆகாசத்திண்டெ நிறம்,பர்ஃபி போன்ற திரைப்படங்கள்.(நந்தலாலா பாடிய முகமூடியை எல்லாம் பட்டியலில் தயவு செய்து சேர்க்காதீர்கள் ) கிம்கிடுக்கும் டால்ஸ்டாயின் அறமும் திருந்திய குமாரனின் கதையும் கலந்தால் ஆகாசத்திண்டே நிறம் கிடைத்து விடுகிறது . சார்லி சாப்ளினின் அட்வெஞ்சர்-சிட்டி லைட்ஸ் ,நோட்புக் படத்திலிருந்து சில காட்சிகள் ,சிங்கிங் இன் தெ ரெய்ன் ,பஸ்டர் கீட்டன் காப்ஸ்,மெலனா,கோஷிஷ் -ஹிந்தி ,கிகிஜிரோ,மிஸ்டர் பீன் ,ஜாக்கிச் சான்,அமேலி-ல் இருந்து இசை  கொஞ்சம் ..போதும் பர்ஃபி தயார்.இந்த கலவைகள் சுவாரஸ்யமாய் இருக்கத்தான் இருக்கின்றன என்றபோதும் எத்தகைய வறட்சி இது .

சென்ற வருடம் அதிகம் கவனிக்கப்பட்ட கவிதைத் தொகுப்புகள் பெரிதும் மையம் அற்ற கவிதைகளைக் கொண்டவை .தமிழ்ப்படம்,மது பானக் கடை போன்ற திரைப் படங்கள் இத்தகைய வகைமைக்குள் அடங்குவன என வரையறுத்துக் கொண்டு பேசிப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.உலகமயமாக்கலின் காலத்திற்கு முன்பே திணை திரிந்த நிலங்களுடன் வாழப் பழகி விட்டோம்.இன்று வேறோர் பொதுத் திணை காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது  

உதவியவை: தான்க்வீட் ஒளிக் கோர்ப்புகள்

10 Comments:

சித்திரவீதிக்காரன் said...

உலகமயமாக்கலின் காலத்திற்கு முன்பே திணை திரிந்த நிலங்களுடன் வாழப் பழகி விட்டோம்.இன்று வேறோர் பொதுத் திணை காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம் அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது\\

திணைகளை மறந்துவிட்டோம், திண்ணைகளையும் மறந்துவிட்டோம். நல்ல பதிவு.

முரளிகண்ணன் said...

செம

rajasundararajan said...

//குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகளை ஷகீராவின் குரலில் பாடச் சொல்லி கேட்பது// இது சாரு.

//யதார்த்தவாதத்தின் மீப்பெரும் கண்ணீர்த்துளியை உறைய வைத்து தேனடை முலாம் பூசி விற்பது// இது ஜெ.மோ;

//ஹைதர் அலியின் கோழிக்குஞ்சுகளுக்கு செல்லப் பெயர் வைப்பதுடன் புனைவுச்சம் எய்துவது// இது எஸ்.ரா.

எனக்கு விளங்கியது சரிதானா? வில்லங்கமா?

//சாயல்களின் சாயல்கள், பிரதியிலிருந்து பிறக்கும் பிரதிகள்.// ஆனால் இது தமிழ்க் களத்தில்தான். உலக வெளியில்தான், //ஜப்பானிய முராகமி// போன்ற ஒரிஜினல்கள் உண்டே?

‘பர்ஃபி’ படக் கலவையைப் பார்த்தால் நிரம்ப உழைத்திருப்பார்கள் போல் இருக்கிறது. ஒரு வெற்றிப்படத்துக்கு இவ்வளவு பாடுபட வேண்டுமா? நம் திரைக்கதை இலக்கிய வாதிகள் என்ன செய்வார்கள், பாவம்!

//சென்ற வருடம் அதிகம் கவனிக்கப்பட்ட கவிதைத் தொகுப்புகள் பெரிதும் மையம் அற்ற கவிதைகளைக் கொண்டவை. ‘தமிழ்ப்படம்’, ‘மதுபானக் கடை’ போன்ற திரைப் படங்கள் இத்தகைய வகைமைக்குள் அடங்குவன என வரையறுத்துக் கொண்டு பேசிப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.//

இது கட்டுரையின் முதல் வாக்கியமான //ஒவ்வொரு கால கட்டத்திலும், வாழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப கலைசார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்தேறும்.// என்பதோடு பொருந்திப் போவதால், காலத்துக்கு ஏற்ப, தமிழிலும் ஏதோ நடக்கிறது என்று தெரிகிறது.

//விதிவிலக்குகள் நிலைக்கின்றன எப்போதும் போல்// என்கிறார், ஆனால் எது எது விதிவிலக்குகள்? எப்படி? என்று சொல்லப்படவில்லை.

காலத்தின் இன்றைய இயல்பின் விளைவு என, சுயதர்சனப் படைப்பு என, வெளிப்பாடுகள் எதுவும் தமிழ் அரங்கில் தோன்றவில்லை என்று விரக்தி அடைந்திருக்கிறார் நேசன். அவருக்கு ஆறுதல் தரும் வகைக்கு என்ன செய்யலாம் என்று நமக்கும் புரியவில்லை. ஆனால் அவரே //அதன் தடம் மெய்நிகர் உலகத்திலிருந்து துவங்குகிறது// என்று வழிகாட்டுகிறார். இருந்தாலும், அவரது இலக்கியக் கொள்கையை இன்னும் சற்று விரிவாகப் பேசி, அந்த நகர்வுக்கு இந்தத் தடம்தான் சரி என்று சொல்லி இருக்கலாம்.

விமர்சனம் எழுதுவதே சிக்கல். இவ்வளவு முன்வந்தாரே, அவரைப் பாராட்டுகிறேன்.

நேசமித்ரன். said...

நன்றிகள் சித்திரவீதிக்காரன்

நன்றிகள் முரளிகண்ணன்

:)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல விமர்சனம். படம் பார்க்கவில்லை, இன்னும்.பார்க்கலாம் என்று இருந்தேன். இப்போது வேண்டாம் என்று தோன்றுகிறது. சமீபமாக வரும் ஹிந்திப் படங்களைப் பார்ப்பதில்லை. ஏனோ அவர்களுடைய பாத்திரப் படைப்புகள் (எனக்கு) எரிச்சலூட்டும் விதமாகவே இருக்கின்றன. ஒரே மாதிரியான பாத்திரப்படைப்புகள் நிறைய படங்களில் வருகிறது, என்பதால் தவிர்த்தே வருகிறேன். இதைப் பார்க்கலாமா என்று சிறு யோசனை இருந்தது... இப்போது வேண்டாம் என்றே நினைக்கிறேன். :-))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மற்றபடி பதிவில் என்ன கருத்து வேறுபாடு வருமளவிற்கு இருக்கிறது? தொடருங்கள்.

நேசமித்ரன். said...

ராஜசுந்தர ராஜன், அண்ணே நன்றி :)

ஸ்ரீ, நிச்சயம் பாருங்கள் :)

$ஜெயமாறன் நிலாரசிகன் $ said...

நல்லதோர் பதிவு அண்ணா..........
தொடர வாழ்த்துகள்

--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $

$ஜெயமாறன் நிலாரசிகன் $ said...

நல்லதோர் பதிவு அண்ணா..........
தொடர வாழ்த்துகள்

--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $

மதுரை சரவணன் said...

படம் பார்த்து விடுவோம்.. நல்லா இருக்கீங்களா?