Monday, October 15, 2012

என்ன நாஞ்சொல்றது?!!!
சமீபமாக ஒரு நண்பரைச் சந்தித்தேன், நண்பர் என்னைவிட வயதில் மூத்தவர், கண்புரை வளர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொண்டிருந்தார். நாகரீகம் கருதி அவர் உடல்நிலை பற்றி விசாரிக்க வேண்டியதாயிற்று. “எவ்வளவு ஆச்சு?” என்று நான் கேட்டிருக்கக் கூடாத ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டேன், “தேவையில்லாம ஏகப்பட்ட டெஸ்டுகள எடுத்து பில்லத் தீட்டிட்டானுங்க” என்று புலம்பித் தள்ளி விட்டார்.

அந்த மருத்துவமனை மதுரையில் சமீபமாக வந்து, வளர்ந்து கொண்டிருப்பது. அங்கு ஏற்கெனவே ஒருமுறை என் அம்மாவுக்குப் பரிசோதனை செய்யப் போயிருக்கிறேன். ஆகவே அந்த மருத்துவமனையின் சிறப்பான செயல்பாடுகள் பற்றி எனக்குத் தெரியும். அங்கே சென்றவுடன் எங்களை வரவேற்று அம்மாவுக்குப் பரிசோதனைகள் முடிந்தபின் ஒரு தனியறையில் என்னை மட்டும் அழைத்து அழகான பெண் ஒருவர் பளிச்சென்ற புன்னகையுடன் விதம் விதமான ஸ்கீம்களை விளக்கிக் கூறியபோது “எனக்கு எப்போது வியாதி வரும்?” என்ற ஏக்கம் எனக்கு வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதை அவர்கள் சொல்வது போல் ‘கவுன்சிலிங்’ என்று சொல்லாமல் ’ப்ரைன்வாஷ்’ பண்றாங்க என்று சொல்லும் நண்பரை என்ன சொல்வது?

மேலும் நண்பரின் புலம்பல்கள் சற்று விசித்திரமாகவே எனக்குப் பட்டது. எல்லாத் துறைகளும் மின்னல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கையில் இன்னமும் மருத்துவத் துறை மட்டும் பழமைமாறாது உங்களிடம் 5 ரூபாயை வாங்கிக் கொண்டு ஊசிபோட்டு, பாட்டிலில் மிக்ஸர் கலக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அங்கேயும் நவீனம் தேவைதானே? நீங்கள் கொடுக்கும்  காசை வாங்கிக் கொண்டு சரி…சரி.. நீங்கள் சொல்வதுபோல் உங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு என்றுதான் இருக்கட்டுமே.. உங்களை என்ன தெருவிலா விட்டுவிடுகிறார்கள் விலை மதிப்பே இல்லாத உங்கள் உடலையும் உயிரையும் காப்பாற்றுகிறார்களே?!!.... அது போதாதா?..

எதற்கு இத்தனை டெஸ்டுகள்? என்று கேட்பீர்களேயானால் அதில் உங்கள் அறியாமை வெளிப்படுகிறது. ‘நோய்நாடி நோய்முதல் நாடி’ என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். எனவே பல் வலிக்கு வயிற்றை ஸ்கேன் பண்ணிப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். எந்த நரம்பு எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று தற்குறிகளான நமக்குத் தெரியுமா? இல்லை படித்த அவருக்குத் தெரியுமா? வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது.

நான்கைந்து மாதங்களுக்கு முன் கண் பரிசோதனைக்காக மதுரையின் சிறந்த, வேறு ஒரு கண்  மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போது நாம் கொடுப்பதென்னவோ வெறும் 50 ரூபாய்தான் என்றாலும் ஏகப்பட்ட டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து, எனக்குக் கண்ணில் கிட்டப்பார்வை தவிர வேறு எந்தக் குறையும் இல்லை என்று தீர்மானமாகத் தெரிந்து கொண்டபின்தான், என்னை வெளியே போகவே அனுமதித்தார்கள். இதில் மேற்கொண்டு நான் செலவு செய்த காசைப் பார்க்காமல், எனக்கு வேறு ஏதேனும் கோளாறுகள் வந்து விடுமோ? என்று ‘கண்ணில் வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை’ என நான் சொன்னதைக் கூடக் கேட்காமல், பல பரிசோதனைகள் நடத்திப் பார்த்த மருத்துவக் குழுவினரின் தாயுள்ளத்தை அன்போடு நினைவு கூர்கிறேன். ஏனெனில் ஒரு நோய் வந்தபின்தான் முட்டாள்களான நமக்குத் தெரிகிறது, ஆனால் படித்த அவர்களுக்கு அதை முன்னமே கண்டறியும் திறன் இருக்கிறது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெளியில் வரும்போது கண்ணைக் கிண்டிக் கிழங்கெடுத்ததில் கண்வலியும் தலைவலியும் வந்தாலும், அவர்கள்தான் அதற்கான மருந்தையும் எழுதிக் கொடுத்து விடுகிறார்களே!!!. அம்மருந்துகள்  மருத்துவமனை வளாகத்தில் அமைந்த கடையிலேயே கிடைக்கிறது. நீங்கள் எங்கும் அலையவே வேண்டாம், ஏனெனில் அது வேறு எங்கும் கிடைக்காது. தரமான மருந்துகளாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில் விலை கொஞ்சம் ஜாஸ்தி, மேலும் மருந்தை வாங்கிக் கையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வரும்போது வலி சரியாகி விட்டது. இதிலிருந்தே அம்மருந்தின் சிறப்பினை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் மருத்துவமனையின் சூழலை எடுத்துக் கொள்ளுங்கள், முன்போல பெஞ்சில் வரிசையாக அமர்ந்து மருத்துவருக்காகக் காத்துக் கொண்டு, பக்கத்தில் இருப்பவர் லொக்…லொக்கென்று இருமிக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்காரவும் முடியாமல் எழுந்து செல்லவும் முடியாமல் தடுமாறும் நிலை இப்போது இருக்கிறதா? நவீன மருத்துவமனையைப் பாருங்கள்… ஒரு நட்சத்திர ஹோட்டலின் லாபியில் அமர்ந்து கொண்டிருக்கும் சூழல் இப்போது கிடைக்கிறது. நாம் வாங்கும் சம்பளத்துக்கு அந்த ஹோட்டலுக்கெல்லாம் போக முடியுமா? வியாதி வந்ததற்காகப் பெருமைப்படலாம் நீங்கள். அங்கிருக்கும் தாதிகளைப் பாருங்கள். எவ்வளவு கனிவாக உங்களைக் கவனிக்கிறார்கள். என்னைக் ‘கைபிடித்து’ பத்திரமாக மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்க வந்தவன்போல் எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போனார்கள். இதற்காகவே வியாதி வரவேண்டும்,… அல்லது வந்த வியாதி ரொம்ப நாளைக்கு இருக்க வேண்டும் என்று தோன்றவேண்டும்…. தோன்றவில்லையெனில் நீங்கள் ரசனை இல்லாத மனிதர் என்பதை வருத்தத்தோடு இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

இன்னொரு நண்பர் மதுரையின் ஒரு பெரிய ஹோமியோ மருத்துவமனை பற்றிப் பேசுகையில் பதினைந்தாயிரம், இருபத்தைந்தாயிரம் என்று பேக்கேஜ் வைத்திருக்கிறார்கள், நமக்கு உள்ள வியாதியைப் பற்றிய அல்லது கொடுக்கப்படும் மருந்துகளைப் பற்றிய எந்தத் தகவலையும் அவர்கள் நமக்குத் தருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டார். என்ன சொல்வது? தனக்கு என்ன வியாதி என்று நோயாளி தெரிந்து கொண்டால் அவர் மனம் சங்கடப்படுமே என்று நினைத்திருக்கிறார் மருத்துவர். மேலும் ஹோமியோபதி என்பது மெதுவாக வேலை செய்யக் கூடியது அதனால் வியாதியையும் மெதுவாக முடிவு செய்து கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். பேக்கேஜ் பற்றிச் சொல்கையில் ஒரு வியாதிக்கு இத்தனை வித மருந்துகளைக் கண்டுகொண்டு நோயாளியின் பட்ஜெட்டிற்கு ஏற்ப சிகிச்சை செய்வதைப் பாராட்டாமல் இருக்க என்னால் முடியவில்லை.

மதுரையின் மற்றொரு பிரபல பல்நோக்கு மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால் ‘உள்ளே வரும் யாரும் உயிரோடு வெளியே போனதில்லை’ என்று நக்கலடிக்கிறார்கள். இதை ‘பொதுப்புத்தி’ என்று கடிந்து கொள்ளாமல் வேறு என்ன செய்வது? அங்கிருக்கும் மருத்துவர்கள் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற எவ்வளவு பிரயத்தனம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றுவதில்லை, தோன்றாவிட்டாலும் பரவாயில்லை கையில் இருக்கும் பில்லைப் பார்க்க வேண்டாமா? பிரயத்தனப் படாமலா லட்சக்கணக்கில் பில் வரும்? மேலும் அந்த மருத்துவமனை வளாகத்திலேயே பிணத்தை ஏற்றிச் செல்லும் வண்டியும், குளிர்சாதனப் பெட்டியும் வாடகைக்குக் கிடைக்கிறது. இறந்த பின்னாலும் கூட தன் நோயாளியும், அவர் உறவினரும் சிரமப்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படி வசதி ஏற்படுத்தி வைத்திருப்பவர்களா உயிரைக் காப்பாற்றுவதில் அசிரத்தையாக இருக்கப் போகிறார்கள்? சிந்தியுங்கள். ‘பாடியத் தூக்கிட்டு அரை கிலோமீட்டர் போறதுக்கு ஆயிரம் ரூபாய் பிடுங்கிட்டான்’ என்று புலம்புபவர்களுக்கு ஒரு அறிவுரை, அந்த வண்டி சகல வசதிகளோடு குளிர்சாதனமும் பொருத்தப்பட்டது என்பதை மறக்காதீர்கள் நீங்கள் அதில் பயணம் செய்தது கொஞ்ச தூரம்தான் என்றாலும் வசதியாக உட்கார்ந்து அழமுடிந்தது, இல்லையா? வசதிக்குத்தான் காசு என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் நாளைக்கு தனித்தனியே முப்பது, நாற்பது ட்ரிப் அடிக்கும் பத்துப் பதினைந்து டிரைவர்களை, அவர்களின் குடும்பங்களை நினைத்துப்பாருங்கள், இந்தக் காசு ஒன்றுமே இல்லை.

மற்றொரு சம்பவம், நண்பருக்குத் தெரிந்த ஒருவர் நெஞ்சுவலி என்று ஒரு நவீன மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய சில லட்சங்கள் மட்டுமே செலவாகும் என்று கருணையோடு சொன்னதும் சந்தேகப்பட்டு வெளிக்கிளம்பி, தன் குடும்ப மருத்துவரிடம் போயிருக்கிறார். அவர் வெறுமனே கையால் தடவிப் பார்த்துவிட்டு வாயுக் கோளாறுதான் என்று சொல்லி ரெண்டு வேளை மருந்தில் சரிசெய்துவிட்டாராம். நான் கேட்கிறேன் அந்த நவீன மருத்துவமனையில் நீங்கள் ஏன் முதல்நாள் உருளைக்கிழங்கு சாப்பிட்டதைச் சொல்லவில்லை? மேலும் உங்களுக்கு ரத்தநாளங்களில் அடைப்பேதும் இல்லை என்று இந்த மருத்துவர் எப்படி பரிசோதனையின்றி முடிவு செய்தார்? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், மனிதன் தவறு செய்யலாம், ஆனால் நவீன இயந்திரங்கள் ஒருபோதும் தவறு செய்யாது. மேலும் அவர்களிடத்தில் இல்லாத காசா? ஒரு நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையை நிர்மாணிக்க எத்தனை கோடிகள் வேண்டும் தெரியுமா? அவர்களா நீங்கள் கொடுக்கும் சில லட்சங்களுக்கு ஆசைப்படப்போகிறார்கள்? யோசித்துப் பாருங்கள்.

இன்னமும் எவ்வளவோ சொல்லலாம் என்றாலும், முத்தாய்ப்பாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். நம் மக்களுக்கு மருத்துவத் துறையினரின் சேவை மனது இன்னமும் புரியவில்லை. காசைப் பிடுங்குகிறார்கள் என்று பொதுவாகக் குற்றச்சாட்டு மட்டும் வைக்கிறார்களே ஒழிய, எப்போதாவது நம்மால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அதற்குத் தக்கபடி  வியாதியை வரவழைத்துக் கொள்வோம் என்று பொறுப்போடு எப்பொழுதாவது நடந்து கொண்டதுண்டா? இல்லவே இல்லை. எனவே மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் குறை சொல்வதில்  எந்த அர்த்தமும் இல்லை என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

10 Comments:

மதுரை சரவணன் said...

ஆசைப்படுங்க.. அழகான பெண்ணை பார்த்த வுடன் வியாதிக்கு ஆசைப்படாதீங்க..!

கணணிக்கல்லூரி said...

hotel போறதும் hospital போறதும் ஒன்றா!!

சில்வண்டு said...

இதுக்குபேர்தான் வஞ்சபுகழ்ச்சியா!!!

Dino LA said...

நல்ல பயனுள்ள பதிவு

Unknown said...

மிகவும் அருமையான பதிவு சகோ நன்றி

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

Unknown said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Nanjil Siva said...

நல்ல பயனுள்ள நிதர்சன உண்மை நிறைந்த பதிவு .. வாழ்த்துக்கள்.

Nanjil Siva said...

மிகவும் அருமையான பதிவு!!! நன்றி !!!

Ramesh DGI said...

I would highly appreciate it if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Trending Tamil News | Current News in Tamil | Top Tamil News | Kollywood News